Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 13

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 13

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கவிஞர் திரு. விக்டர் தாஸ் அவர்கள் தன் பாசத்தந்தை மறைந்தபொழுது தாளின்மேல் கோல்கொண்டு எழுதாது தரையின் மேல் விழுந்து வாய்விட்டு அரற்றிய வெண்பாக்களைப் பற்றிய ஒரு கண்ணீர்ப் பார்வை

    ‘தந்தைக்கு அழுத தமிழ்’

    முன்னுரை

    திறனாய்வுகளால் அல்லது உரைகளால் சிறக்கும் மூலங்கள் உண்டு. மூலங்களைத் திறனாய்வு செய்யும் பேறு அல்லது உரையெழுதும் பேறு சில உரைகளுக்கு அமைவதும் உண்டு. முன்னதற்கு வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான்பிள்ளையின் பாசுர உரையால் சிறப்படைந்த நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் பின்னதற்குத் திருக்குறளுக்குப் பரிமேலழகர் செய்த உரையும் எடுத்துக்காட்டுக்களாகும். தம்பி விக்டர் தாஸ் அவர்களின் கண்ணீர் வெண்பாக்களைத் திறனாய்வு செய்ய இயலாத நிலையில் அவை கொட்டப்பட்ட சூழலையும் கொட்டிய முறையையும் கருத்திற்கொண்டு கொட்டப்பட்டவைகளில் கிடக்கும் கண்ணீர் முத்துக்களைக் கைகளில் அள்ளிக் காட்சிப்படுத்தும் எண்ணத்தின் விளைவே இந்தக் கட்டுரை. செத்துப் போன கவிதைகளுக்குப் பரிசுகளையும் விருதுகளையும் அளித்துத் தாமும் தவணை முறையில் செத்துக் கொண்டு மரத்துப்போன சில அமைப்புக்கள் நிறைந்த இந்தத் தமிழகத்தில் உயிரிழந்த தன் பாசத் தந்தைக்கு உயிர்ப்போடு வைத்த ஒப்பாரியின் மூலம் தமிழ்க்கவிதை உலகிற்குப் புதிய தடம் காட்டியிருக்கிறார் விக்டர். அதனை அதன் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் தனிப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். மரபுக்கவிதை பற்றிக் குழப்பத்துக்குள் குடும்பம் நடத்திக் கொண்டு  வேகாத சொற்களையெல்லாம் வெண்பா என்று எழுதி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறவர்கள் பலரும் நின்று நிதானித்து விக்டரை ஆசிரியராகக் கொள்வது நேரிசை வெண்பாவின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் அவசர கால வழியாகலாம்.

    அவலமே அணியாக்கிய விக்டர்

    ‘தனிமனிதச் சோகத்தையே தனியொரு கவிதைப் பொருளாக்க  முடியும்’ என்ற வியப்பான இலக்கிய உள்ளடக்கக் கோட்பாட்டைக் கண்ணதாசனிடமிருந்து நான் கற்றேன். அவலத்தை இலக்கியச் சுவைகளில் ஒன்றாக நான் படித்திருக்கிறேன். ஆனால் அவலத்தையே இலக்கியமாக்கிய வித்தையை நாட்டுப்புறப்பாடல்களில், நல்லதங்காள் கதைப் பகுதிகளில் அண்ணன்மார் கதையில், நான் உணர்ந்தது உண்டு. அவற்றின் தொடர்ச்சியாகச் சோகத்தைச் சுகமாக அருந்தியது கண்ணதாசன் பாடல்களில்தாம். எந்தப் பொருளைப் பற்றிப் பாடியிருக்கிறார் என்ற தெளிவில்லாதவர் கூட அவர் பாடாத பொருளில்லையோ என்னும் மயக்கத்திற்காளாவது இயல்பு. கள்ளம் கபடமற்ற அவருடைய மனம், இழுத்த இழுவைக்கு அவரோடு ஊடாது ஒட்டிக் கொள்ளும் தமிழ் இந்த இரண்டுமே அவருடைய இமாலய வெற்றிக்குக் காரணம். அத்தகைய கண்ணதாசனின் ஒட்டுமொத்த கவிதைச் சோகத்தைப் பாவலர் விக்டர்தாஸ் அவர்கள் கொட்டிய இந்த எழுபத்தாறு முகநூல் வெண்பா முத்துக்களைக் கண்ணுற நேர்ந்தபோது நான் முழுமையாக உணர்ந்து கொண்டேன். அந்த அனுபவத்தை என் மொழியில் நான் இங்கே பதிவு செய்ய முயல்கிறேன்!

    ‘நேர்ந்தது’ ஒரு சொல்லாய்வு

    சென்ற பத்தியில் வெண்பா முத்துக்களைக் கண்ணுற நேர்ந்தது என நான் எழுதியது இலக்கண நெறிப்படி தவறு. அரியவற்றைக் காணும் பேறு பெற்றேன் என்று எழுத வேண்டும். தாஸ் அவர்களின் வெண்பாக்களைப் பற்றிய இலக்கிய மதிப்பீட்டை நான் பதிவுசெய்கிறபோது ‘காணும் வாய்ப்பினைப் பெற்றேன்’ என்றுதான் எழுத வேண்டும். ‘நேர்தல்’ என்பது தவிர்க்கப்பட வேண்டியது. ‘வாய்ப்பு’ என்பது பெறப்பட வேண்டியது. நான் தந்தை பெரியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன் என்று எழுத வேண்டுமே தவிர நான் தந்தை பெரியாரைக் கண்ணுற நேர்ந்தது என்று எழுதக்கூடாது. அது நெறியன்று. ‘காண’ என்னும் எச்சம் கண்ணுக்கானது. கண்ணுற என்னும் எச்சம் பொருளுக்கானது. காணக்கூடாதது கண்ணில் பட்டால் கண்ணுறுதல்! காணக்கிட்டாதது கண்ணில் படுமானால் அது காணும் வாய்ப்பு! இவ்வளவும் தெரிந்த நான் தாஸ் அவர்களின் வெண்பாக்களைக் ‘காண நேர்ந்தது’ என்று எழுதுவானேன்? ஒன்றுமில்லை. அவற்றை நான் படித்த பிறகு சில நாள்கள் தூங்கவில்லை என்பதுதான் சத்தியம். என் உறக்கத்தைக் கெடுத்த வெண்பாக்கள் அவை. என் நிம்மதியைக் கெடுத்த வெண்பாக்கள் அவை! அண்மையில் ஒரு திங்கள் திருச்சிராப்பள்ளி அப்பல்லோ மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்த போது என் மனைவி, பிள்ளைகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் என்னை அருகிருந்து கவனித்துக் கொண்டனர். அந்த மருத்துவமனைச் சூழலில் மனரீதியாக நான் வாழ்ந்திருந்தது இந்த வெண்பாக்களோடுதான்!  எனவேதான் இறக்கக்கூடாதவர் இறந்து போனால் என்ன சோகமோ அதனையே இந்த வெண்பாக்களைப் படித்த போது நான் உணர்ந்தேன்! கவிதையின் காரியம் கண்ணீர் என்பது இலக்கியத்தின் உச்சம்! அந்த உச்சத்தைத் தாள் இல்லாமல், தூவல் இல்லாமல் எழுதியிருக்கிறார் இல்லை கொட்டியிருக்கிறார் விக்டர் தாஸ் அவர்கள்! தந்தையை இழந்த அவருடைய துன்பத்தில் பங்கு கொள்வதுதான் இந்த வெண்பாக்களுக்கு நான் செலுத்தும் நன்றி என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    வெண்பா உரிச்சீர் காய்ச்சீரா? கண்ணீரா?

    இப்படியொரு வெண்பா இலக்கியத்தைத் தமிழிலக்கிய உலகமோ கவிதை உலகமோ கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. தந்தையும் தாயும் கொரானா மரணப்படுக்கையில் அச்சமின்றிப் பெற்றோருக்கான கடனை மகன் செய்கிறான். தந்தையை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்று நம்பிக்கையுடன் மரணத்தோடு மல்லுக்கட்டுகிறான். சாவோடு சண்டையிடுகிறான். வெல்ல முடியாத பகை மரணம் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தும் தந்தைக்காக, அவர் காட்டிய பாசத்துக்காக, ஊட்டிய அறிவுக்காக அவரைக் காக்கப் போராடுகிறான். போராடியவன் வீரன் என்பதால் வெற்றிகரமாகத் தோற்கிறான்.

    இலக்கணம் இல்லாமல் பெண்கள் வைக்கும் ஒப்பாரியில் இலக்கியம் குடியமர்ந்து கொள்ளும். இலக்கணப் புலவர்கள் சொல்லும் கவிதையில் இலக்கியம் வாழாவெட்டியாகிவிடும். தந்தையை இழந்த விக்டர் தாஸ் தன் மனக்குமுறலை மொழியில் இறக்கி வைக்கிறார். இதயத்துக் கண்ணீரை எழுத்தாக்கிவிடும்போது எந்தப் பாரமும் குறைந்துவிடும் என்பது அவர் அறிந்த தத்துவம்! ஆனால் இறக்கி வைத்த சுமைதாங்கிக் கல் வெண்பா! அதுவும் நேரிசை வெண்பா. பதினான்கு இடங்களில் தளைகள் சரியாக அமைதல் வேண்டும். யாப்புச் சர்வாதிகாரிக்குப் பிறந்த பேரழகி வெண்பா! விக்டர் தாஸின் தந்தையைப் போலவே வெண்பாவும் கண்டிப்பானது!. அதனால்தான் தன் கண்ணீரை வெண்பாவில் சேர்த்து வைத்திருக்கிறார்.

    சீர்களை இறவாணத்தில் தேடுகிற எவனும் இலக்கிய ஆக்கத்தில் வெற்றி பெற முடியாது. ஏற்கனவே இதயத்தில் இருந்த சீர்களைக் கண்ணீரில் இறக்கிவைத்தவர் விக்டர் தாஸ். தமிழ்க்கவிதையின் பெருமை கூடியிருக்கிறது. தாளோடு கோலோடு எழுதப்படுகிற வெண்பாக்களில் ஓராயிரம் ஓட்டைகள். கண்ணதாசனைப் போலக் கொட்டிய பாடல்களில் யாப்பு கோலோச்சுகிறது. உருவகங்கள் என்ன? உவமங்கள் என்ன? வழக்குச் சொற்கள் என்ன? வாழ்க்கைத் தத்துவங்கள் என்ன? அவலச் சுவை என்ன? அழுகையின் ஆலாபனை என்ன? உணர்வுகளும் உணர்ச்சிகளும் கைகோத்துக் கொண்டு செல்லும் ஊர்வல நேர்த்தி என்ன? அடடா!

    விக்டர்தாஸின் வெற்றி

    படைப்போடு கலந்து விடுகிற எவனும் படைப்பாளனை மறந்துவிடுகிறான். அது சரியே. ஆனால் விக்டர்தாஸின் இந்தப் புலம்பலைப் படிக்கிறபோது அவரை ஒதுக்கிவைத்துவிட்டுப் படிக்க இயலவில்லை. ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்பது ஒரு கல்வெட்டுச் செய்தியாக மாறிக் காலம் பல ஆகிவிட்டது. புகழேந்தியைப் புறங்கொண்ட வெண்பாக்களும் வெண்பாக்களால் ஆக்கப்பட்ட நுல்களும் தமிழில் எண்ணற்றன. புறப்பொருள் வெண்பாமாலையின் வெண்பாக்களோடு போராடுவதற்கு நளவெண்பாக்கள் தனிப்பயிற்சி எடுக்க வேண்டும். இந்த உண்மை ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்னும் பாடற்குறிப்புப் பேர்வழிகளுக்குத் தெரியாது. காளமேகம் உட்படப் பெரும்புலவர்கள் எழுதிய தனியன்கள் நேரிசை வெண்பாக்களைப் பெண்கள் விளையாடும் கூழாங்கற்களாக்கியிருக்கின்றன. சோமேசர் முதுமொழி வெண்பா திருக்குறள் விளக்கக் கதைகளையும் கருத்துக்களையும் விளங்குகிறது என்றால் பாவேந்தரின் மணிமேகலை வெண்பா இன்னொரு புரட்சி செய்திருக்கிறது. கரூர் புலவர் குழந்தையும் கடவூர் மணிமாறனும் வெண்பா நானூறு என்பதுபோலத் தனி நூல்களையே வெளியிட்டு இருக்கிறார்கள். வலங்கை வேல்முருகனுக்குக் காலைக் குளியலே வெண்பாக் குளத்தில்தான்!. இவற்றை விட இன்னொன்றும் சொல்ல வேண்டும். மாதவரம் பால் பண்ணையில் பால்கோவா தயாரிக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் கவிக்கோவின் பண்ணைவீட்டில் பால்கோவாவைப் ‘பா’கோவாக மாற்றி நாளும் பரிமாறிக் கொண்டிருக்கிறான் தம்பி வசந்தராசன்! இரண்டுமே பண்ணையில் தயாரிப்பதால் இனிப்பில் விஞ்சி நிற்பது எது? என அடிக்கடி பட்டிமன்றம் நடப்பதாகவும் தகவல். ஆனால் இத்தனையும் உட்கார்ந்து எழுதியவை என்பதை மறக்கக்கூடாது. மாமுன் நிரையா? காய்முன் நேரா? விளம் முன் நேரா? என்று ஒவ்வொரு சீராகப் பதம்பார்த்துச் செய்யப்பட்ட கட்டடப் பணியாகத்தான் நடந்திருக்கிறது. காரணம் இவற்றுள் எதுவும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டதில்லை. தம்பி விக்டர்தாஸ் கொட்டியிருக்கிறார், குமுறியிருக்கிறார். அவர் கொட்டியதை அன்பர் ஒருவர் அள்ளியிருக்கிறார். வெண்பாக்களாக அவர் கைகளில் வந்திருக்கின்றன. கண்ணீர் கவிதையாக மாறிய விந்தையான தருணம் அது! புகழேந்தி பூரித்துத் தன் தோல்வியை ஒத்துக் கொண்டு தன் தனையனை உச்சி மோந்தத் தருணமும் அதுதான்!

    நேரிசை வெண்பாவின் நதிமூலம்

    பொதுவாக நான் எழுதும் இலக்கியம் (பெரும்பாலும் கவிதை) பற்றிய திறனாய்வுகளில் கவிதைகளின் வடிவம் பற்றிய தெளிவினை இயன்றவரைச் சுருக்கமாகப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். காரணம் முகநூல் அன்பர்கள் பலரும் தவறாக யாப்பிலக்கணம் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களுக்குத் தரும் புலமை குறைவான பொறுப்பற்ற பதிலுரைகளிலிருந்தும் தெரிந்து கொள்ள முடிந்தது. தம்பி விக்டர் தாஸ் அவர்களின் புலம்பலை அசைபிரித்து ஆராய்வதற்கு முன்னால் நேரிசை வெண்பா பற்றிய ஒரு தெளிவினைத் தருவது எனது கடமையாகிறது. வடிவம் பற்றிய தெளிவு இல்லாவிடின் திறனாய்வு முழுமை பெறாது என்பது என் பணிவான கருத்து.

    என்னுடைய யாப்பறி புலமை, ஆராய்ச்சி எல்லாம் அமிதசாகரர் என்னும் பெருமகனார் எழுதிய யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. அவரே எழுதிய யாப்பருங்கலமோ தொல்காப்பியச் செய்யுளியலோ எனக்குத் தெரியாது. காரிகையில் நேரிசை வெண்பா என்ற சொல்லே இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் யாப்பிலக்கணத்தில் பாக்களைப் பற்றிய கட்டுமானத்தைப் பற்றிய புலமை பெறுவது மிகவும் எளியது. குறள் வெண்பா என்ற ஒரு பாட்டுக்குத்தான் இலக்கணம் இருக்கிறது. மற்றவையெல்லாம் அதனுடைய விரிவே! சாயலே!

    நேரிசை வெண்பா என்பது 24 டயர்கள் கொண்ட டிரெய்லர் வண்டி போன்றதாகவே காரிகை கருதுகிறது. அதற்கு நேரிசை வெண்பா எனப் பெயரிடாது இருகுறள் நேரிசை வெண்பா என்றுதான் பெயரிட்டிருக்கிறது. இரண்டு குறட்பாக்களின் அர்த்தநாரீஸ்வரர் வடிவந்தான் ஒரு நேரிசை வெண்பா என்பது அமிதசாகரர் கருத்து. இரண்டு குறள்வெண்பாக்களை இணைக்கிறபோது முதல் வெண்பாவின் ஈற்றுச்சீரினைத் தொடர்ந்து தனிச்சொல் ஒன்று வரவேண்டும். ஈற்றுச் சீருக்கும் தனிச்சொல்லுக்கும் தளை இசைவு இருக்க வேண்டும். அதுபோலவே தனிச்சொல்லுக்கும் மூன்றாவது அடியின் முதற்சீருக்கும் தளை இசைவு இருக்க வேண்டும்.

    “குறட்பா இரண்டாய், ஆயிடைக்கண்
    சீரியவான் தனிச்சொல் அடி மூய்ச் செப்பலோசை குன்றாது
    ஓரிரண்டாயும் ஒரு விகற்பாயும் வருவதுண்டேல்
    நேரிசையாகும்”

    என்பது காரிகைப் பகுதி. சுருங்கச் சொன்னால் கட்டடத்துக்குக் கான்கிரீட் போடுகிற நாளில் வரும் கலவை இயந்திரமாகவே அந்நாளில் நேரிசை வெண்பா கருதப்பட்டிருக்கிறது. ஆனால் வரலாறு வேறாக இருக்கிறது.

    இரண்டு குறள் வெண்பாக்களை இணைக்கும் வேலை இல்லாமலேயே சங்க இலக்கியங்களின் பிற்பகுதியில் நேரிசை வெண்பாக்கள் அமைந்துள்ளன. இவை தனிச்சொல் என்ற அளவில் இல்லாமல் முழுமையான வெண்பாவின் ஒரு சீராகவே அமைந்திருக்கிறது. இது ஆய்வுக்குரியது. அதாவது இரண்டு குறள் வெண்பாக்களை இணைக்கிறபோதுதான் தனிச்சொல் முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பது. இவ்வாறு ஈரலகாக  அன்றி ஒரே அலகாக அமைகிறபோது ‘தனிச்சொல்’ என்னும் சொற் பயன்பாடு வலுவிழக்கிறது. நேரிசை வெண்பாவின் இரண்டாவது அளவடியாகவே அது கருதப்பட வேண்டும். இன்னும் நுட்பமாக நோக்கினால் வெண்பாவைப் பற்றிய இலக்கணத் தெளிவு இல்லாத காலத்திலேயே முழுமையான நேரிசை வெண்பாக்கள் எழுதப்பட்டுள்ளன.

    திருமுருகாற்றுப்படையில் நேரிசை வெண்பா

    பத்துப்பாட்டின் தலைப்பாட்டான திருமுருகாற்றுப்படையின் இறுதியில் நேரிசை வெண்பாக்களால் அமைக்கப்பட்ட முருகன் துதி பத்துப்பாடல்களால் அமைந்துள்ளன. ஆய்வாளர்களில் பிற்காலத்தில் இது சேர்க்கப்பட்டிருக்கலாம் என்னும் கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். அவற்றுள் ஒரு வெண்பா இப்படி அமைந்திருக்கிறது.

    “உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன்
    பின்னை யொருவரையான் பின்செல்லேன் – பன்னிருகை
    கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
    வேலப்பா செந்தில் வாழ்வே”

    பாட்டை ஒரு முறை நோக்குவார்க்கும் இது ஓரலகாகப் பாடப்பட்டுள்ளது என்பதை உணர்வர். ‘பன்னிருகை’ என்பது ஈரடிகளை ஒட்ட வந்த பசையாகிய தனிச்சொல் அல்ல. அது கோலப்பனின் அழகடை!. நம் விவாதம் இருகுறள் இணைப்பே நேரிசை வெண்பா என்னும் கருத்தியல் ஒழிந்து விட்டது என்பதுதான். அது தொடக்கநிலை யாப்பறிக் கல்வியாக இருந்திருக்கலாம். தற்காலம் உட்பட எந்தக் காலத்திலும் அதாவது வெண்பா கோலோச்சிய தனிப்பாடல் காலம் வரை இணைப்பு என்பதே இல்லை என்பதுதான். இது இப்படியிருக்க ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் ஒவ்வொரு காதையின் இறுதியிலும் ஒரு நேரிசை வெண்பா இடம் பெற்றுள்ளது. அவற்றையும் பின்னால் வந்தவர்கள் சேர்த்திருக்கலாம். ஆனால் அப்படிச் சேர்த்தவர்கள் காரிகைக்கு முன்போ பின்போ இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தனிச்சொல் பயன்பாட்டைப் புறக்கணித்து ஓரலகாகவே எழுதியுள்ளனர் என்பது தெளிவாவது போல அந்த வெண்பாக்கள் அமைந்துள்ளன.

    “மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
    கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக்கோன்
    கண்டளவே தோற்றான் அக்காரிகைதன் சொற்செவியில்
    உண்டளவே தோற்றான் உயிர்”

    என்று அமைந்துள்ள நேரிசை வெண்பா காரிகை இலக்கணத்தின் இணைப்புப் பணிக்கு ஆட்படாது தனித்தன்மையுடைய அரிய நேரிசை வெண்பாவாக அமைந்துள்ளதைக் காணலாம். ‘வையைக்கோன்’ என்பது தனிச்சொல்லா? காண்டலின் வினைமுதலா?

    மேற்கண்ட தரவுகளிலிருந்து ‘இரண்டு குறள் வெண்பாக்களைப் தட்டான் பாணியில் பழுது பார்த்து பற்ற வைத்து இணைத்து ஒரு நேரிசை வெண்பாவை அமைக்கின்ற காலக்கட்டத்திலிருந்து தமிழியல் யாப்புலகம் விலகிப் பல நூற்றாண்டுக் காலம் ஆகிவிட்டது என்பதுதான். இந்த நெறியைத்தான் தம்பி விக்டர்தாஸ் பின்பற்றிக் கண்ணீரோடு கலந்து வெண்பாக்களைக் கொட்டியிருக்கிறார்.  தந்தை மாண்டு சவப்பெட்டியில் துயில்கிறபோது தளை பார்த்து எழுதுகிறவன் மகனும் அல்லன் அவன் கவிஞனும் அல்லன். உணர்ச்சியின் கொந்தளிப்பில் கொட்டப்படுகிற பாட்டில் யாப்பு தானாக வந்து அமையும் என்னும் தமிழியல் யாப்பிலக்கணக் கோட்பாடு தம்பி விகடர்தாஸ் அவர்களின் கண்ணீர் வெண்பாக்களால் மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கண்ணீரில் மிதக்கும் கற்பனை

    தங்குதடையின்றி நுங்கும் நுரையுமாகப் பொங்கிவருவதே கவிதை என்பார்கள். அதற்கு ஓர் இலக்கிய எடுத்துக்காட்டு தேவை என்றால் தம்பி விக்டர்தாஸின் இந்த வெண்பாக்களுக்கு இணையாக வேறு இலக்கியம் இருக்குமென்று என்னால் நம்ப முடியவில்லை. இழந்து அரற்றியவள் கண்ணகி. இருந்தும் அரற்றியவள் சீதை. ஐந்து பேர் இருந்தும் அரற்றியவள் பாஞ்சாலி! அந்த அரற்றல்களையெல்லாம் அமைதியாக்கிச் சுனாமியாய்க் கொந்தளித்துக் கொட்டும் தாஸின் வெண்பாக்களில் கற்பனை தானாக வந்து அமர்ந்து கொள்கிறது.

    உடம்பு தாழ்வாகவும் உயிர் உயர்வாகவும் பேசப்படுவதே தமிழ்க்கவிதை மரபு. உடம்பை ‘ஒன்பது வாய்த்தோல்பை’ என்பார் பட்டினத்தடிகள். ஆனால் விக்டர்தாஸின் புலம்பலில் இது மாபெரும் புரட்சிக்கு ஆளாகிறது. தமிழில் உடம்பின் பெருமையை உணர்ந்து பாடிய முதல் கவிஞர் திருமூலர்.

    “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே”

    என்று பாடுகிறார். உடம்பின்றி ஞானம் பெற இயலாது என்பது அவர் கருத்தாதலின் உடம்பின் இன்றியமையாமையை நுட்பமாகப் பாடிப் பதிவுசெய்திருக்கிறார். உயிருக்கும் உடம்புக்கும் ஒரே அளவான மதிப்பினைத்தான் திருமூலர் தந்திருக்கிறார் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ளலாம். அதாவது தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த உடம்பினைத் திருமூலர் இரண்டாவது வரிசைக்குக் கொண்டு வந்திருக்கிறார். தம்பி விக்டர் தாஸ் தன்னுடைய புலம்பலில் உடம்பு உயிரினும் மேலானது என்ற தர்க்கத்தை முன்னெடுக்கிறார். என்னைப் பொருத்தவரையில் இது தமிழ்க்கவிதை உலகின் சிந்தனைப் புரட்சி என்பதில் ஐயமில்லை.

    “கூடுவிட்டு நன்றியற்று கூண்டோடு கொன்று விட்டு
    கேடுகெட்ட ஆவி போச்சே கீறிவிட்டுப்!– பாடுபட்ட
    மெய்யோ அனாதையாய் வெந்த பராரியாய்!
    அய்யோ உயிரே! வந்(து) ஆற்று”.

    “சட்டை கழற்றுதல் போல் சட்டென்று அவிழ்த்ததேன்
    முட்டாள் உயிர்ப் பறவை? மொத்தமாய்க்–கட்டையை
    விட்டுவிட்(டு) ஏன் போச்சோ? விறகென்(று) உடல் ஆச்சோ?
    கெட்ட உயிர்தான் எங் கே”.

    “பாடாய்ப் படுத்திவிட்டே பாழாய்க் கிடத்திவிட்டே
    ஓடாய் உடைத்துவிட்டே ஓடியதே–கேடான
    நன்றிகெட்ட ஆவியது நச்சுவகைச் சாதியது
    மண் இரையாய் மெய் போச்சே மாய்ந்து!”

    “வம்பாய் வலிபட்டு வாழ்ந்த உடல் கெட்டு
    தெம்பு திறன் அற்று சீவனிற்(று)-அம்பலத்தில்
    மெய் கிடக்க, ஆவி எங்கே? மேய்ந்த உயிர்ப் பாவி எங்கே?
    கைவிட்டுப் போனதே காற்று.!”

    ‘உடலுக்கு உயிர் காவல்’ என்று எழுதினார் கண்ணதாசன். நம்முடைய தாஸ் உயிருக்கு உடல் காவல் என்று கற்பனை செய்கிறார். இந்தக் கற்பனை சுவையானது என்பதைவிடத் தத்துவச் சாரம் கொண்டது. உண்மையில் கவிஞர் உயிரைத் தாழ்வாக எண்ணவில்லை. உயர்வாகத்தான் எண்ணியிருக்கிறார் ‘உடம்பை வாழவிடாமல் உயிர் சென்றது நியாயமா?’ என்பதுதான் அவர் ஆதங்கம். இயக்குவது உயிர் என்பதும் இயங்குவது உடல் என்பதும் தாஸ் அறியாததா? இயக்கிய உயிர் போனதற்கான தமது ஏமாற்றத்தை உடலைக் கைவிட்டு உயிர் போனதாகக் கற்பனை செய்கிறார். காரணம் அழியக் கூடிய தந்தை உடம்பு கிடக்கிறது. அழியாத உயிர் ஓடிவிடுகிறது. கிடக்கிற உடம்புக்கு அழுகை எதற்காக? இங்கேதான் மணிமேகலை சொன்ன தத்துவம் நினைவுக்கு வருகிறது. எதற்கு மானுடம் அழுகிறது? உடலுக்கா? உயிருக்கா? இந்த வினாவுக்கு மணிமேகலை சொன்னதைத்தான் தனக்கே உரிய உத்திச்சிறப்பினால் கற்பனையாக்குகிறார் தாஸ்.

    “உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ
    உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை
    எடுத்துப் புறங்காட்டில் இட்டனர் யாரே?
    உயிர்க்கு அழுதனையேல் உயிர்புகும் புக்கில்
    செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வு அரியது
    அவ்வுயிர்க்கு அன்பினை யாயின்”

    நாவலர் நாட்டார் அவர்களின் உரைகண்டு இப்பகுதிக்கு உரை தெளியலாம். எங்கிருந்தாலும் தனக்கு அழிவில்லை என்று தெரிந்தும், தான் பிரிந்துவிட்டால் உடல் நாற்றமெடுத்து அழியும் என்பது அறிந்தும் இந்நாள் வரை இருந்த பழக்கத்தை மறந்து உடம்பை அனாதையாய் விட்டுப் போன உயிர்கண்டு புலம்பிய கற்பனை புதியது! சிறந்தது!

    உறவாடி கெடுத்த உயிர்

    தாஸின் புலம்பல் பாக்கள் அனைத்தும் கண்ணீர் மூலம். உயிரைக் கட்டிவைக்க முடியாமற் போனதே! கைதிபோலக் கால்விலங்கு பூட்ட முடியாமல் போயிற்றே! சில நொடிவரை இந்த உடம்போடு அது ஆடிய ஆட்டத்தை அப்படியே மறந்ததே! பறந்ததே!

    “கட்டிவைக்க மாட்டாமல் கால் விலங்கு பூட்டாமல்
    கொட்டமிட்ட ஆவி போச்சே கூறாமல் – திட்டமிட்டே
    மெய்க்கூட்டைக் கேளாமல்மேல் பறந்தாய் வாழாமல்
    பொய் உயிர்மெய் என்றுணர்ந்தேன் போ”.

    மிக இலாவகமாகச் சொற்கள் விழுந்திருக்கின்றன. உடம்பு ‘மெய்க்கூடாம்’ நாம் இதுவரை உடம்பைப் ‘பொய்க்கூடு’ என்றும் ‘ஒன்பது வாய் மலக்கூடு’ என்றுமே அறிந்திருக்கிறோம். ‘மெய்க்கூடு’ என்றால் இரட்டுற மொழிதலால் மெய்யாகிய கூடு என்பதுமாம். உயிரும் உடம்பும் சம மதிப்புடையன எனினும் உடல் அழியும் தன்மையது. உயிர் அழியாதது. உடம்பின்றி உயிர் இயங்க முடியுமா என்றால் அது உறுதியாக முடியாது. நன்றி கொன்ற பாவத்தைச் செய்த உயிரைப் பொய் என்று உணர்ந்தாராம். கிடக்கின்ற உடம்பை மெய் என்று அறிந்தாராம். ‘படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா’ என்று கண்ணதாசன் சொல்லியது இதுதான்! சொல் புதிது சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்பதும் இதுதான்! எப்படி? அழியாத உயிரை மெய் என்றும் அழிகின்ற உடம்பை மெய்யென்றும் உணர்வதுதான் ஞானம். ‘காயமே இது பொய்யடா’ என்பது மரபு. அந்த மரபு தானாகத் தன் சட்டையைக் கழற்றிக் கொள்கிறது. உயிரைப் பொய் என்று உணர்வதும் உடம்பை மெய் என்று உணர்வதும் தாஸின் அரிய ஞானம். இது என்னுடைய பார்வை!

    சாவு செய்த தவம்

    ‘விடியும் விடியும் என்றிருந்தேன் அது முடியும் பொழுதாய் விடிந்ததடா’ என்பார் கண்ணதாசன். தந்தை எப்படியும் பிழைத்துக் கொள்வார் என்று தனையன் எதிர்பார்க்க அவனை ஏமாற்றித் தான் செய்த தவத்திற்கான வரமாய் அந்தத் தந்தையைச் சாவு காவு கொண்டதோ என்பதே தாஸின் வேதனை.

    “விடியும் என்றேதான் விழிபார்த் திருந்தேன்
    முடியும் என்றா நான் முயன்றேன் – ஒடிந்ததேன்
    வானளந்த காலமரம்? வாழ்வுதந்த ஞானவரம்?
    தானமாய் வாங்கியதேன் சாவு?”

    “வானளந்த காலமரம் ஒடிந்ததாம்” எவ்வளவு ஆழமான கற்பனை? சாவு தவம் செய்ததாம்! எந்த வரத்தைப் பெறுவதற்காக? தாஸ் அவர்களுக்கு ஞானவரமாக இருந்த அவருடைய தந்தையைத் தானமாகப் பெறுவதற்காக!. சாவு தவம் செய்த கதை தாஸ் சொல்லித்தான் நமக்குத் தெரிய வருகிறது. சாவுக்குச் சாபம் கொடுத்த கண்ணதாசனைத்தான் தமிழ்க்கவிதை உலகம் இதுவரை அறிந்திருக்கிறது. தேர்ந்தெடுத்த மரணங்களுக்காகச் சாவு தவம் செய்வதை இப்போதுதான் பார்க்கிறது. சாவும் தவம் செய்யும் என்னும் கற்பனை கற்பனையின் உச்சம்!

    உணர்ச்சிக் கொந்தளிப்பு

    ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன்’ என்பது தமிழிலக்கியக் கொள்கையாதலின் கவிதைக்கும் அதுவே கொள்கையாயிற்று.  இக்கொள்கை வெற்றிபெற வேண்டுமாயின் படைப்பின் உள்ளடக்கம் கருத்துக்களோடு பரிணமிக்க வேண்டும். கவிதை உட்பட அனைத்துப் படைப்புக்களுக்கும் கருத்துக்களாகிய உள்ளடக்கமே தலை. இது தமிழ்க்கவிதைக் கொள்கை. ஆனால் இலக்கியத் திறனாய்வு என்னவோ கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தமிழுக்கு அறிமுகமானதுபோல்  எண்ணிக் கொள்ளும் அறிஞர் சிலர் உணர்ச்சியே கவிதைக்குப் தலைமை எனச் சொன்னர்கள். POETRY IS THE SPANTNEOUS OVERFLOW OF POWER FEELINGS’ என்பதை எடுத்துக்காட்டாக்கிக் கொண்டார்கள். தம்பி விக்டர் கொட்டியிருக்கும் இந்த முத்துக்களில் அருவப் பொருளாகிய சோகம் பாடுபொருளாகியிருக்கிறது. இழப்பின் உச்சம் உணர்ச்சியாகியிருக்கிறது.

    “ஏன்யா அழுற? இடிஞ்சு விழுற?நீ
    தான்யாநம் பிக்கைத்தருற! ஆங் – வீணா
    கவலைப் படாத! ஓங்கண்ணீர் விடாத!
    செவியிலின்னும் அப்பா குரல்!”

    எல்லாவற்றையும் விட இந்தப் பாட்டில் இறைந்துகிடக்கும் வழக்குச் சொற்கள் உணர்ச்சிக்குத் திரைபோடாமல் அப்படியே காட்டுகின்றன. ‘ஏன்யா அழுற? இடிஞ்சு விழுற? கவலைப்படாத! கண்ணீர் விடாத! என்ன அருமையான சொல்லடக்கம்!. இந்தச் சொல்லடக்கத்துக்குள்ளேயல்லவா அவர் தந்தை நல்லடக்கமாகியிருக்கிறார்!

    “ஏதோ உளறுகின்றேன்! என்னை உதறுகிறேன்!
    சேதாரம் ஆகிச் சிதறுகிறேன் – ஆதாரம்
    வீழ்ந்ததால் விம்முகிறேன்! வேதனையைச் சிந்துகிறேன்!
    வாழ்வோம் மறுபடிவாப் பா!”

    ‘என்னை உதறுகிறேன்’ அடடா! என்ன அருமையான தொடர்? தன்னை உதறிக் கொள்வதால் உதிர்ந்து போகிறானாம் தனையன். அதனால் அவனே அவனுக்குச் சேதாரமாகிறானாம். “சேதாரம் ஆகிச் சிதறுகின்றேன்” இன்னொரு பாட்டில் உணர்ச்சி இப்படிச் சிதறியிருக்கிறது.

    “ஆறாப் பெருஞ்சோகம் ஆறான தென் ஓலம்
    தேறா நிலை நான் தெருக்கோலம் – மாறாதா
    இந்தக்கொடுங்காலம் ஈனத் துயர்க்கோலம்?”

    உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லிவிட்டார் என்ற அமைதியை நாம் கேட்டிருக்கிறோம் அது எதிர்மறை. தம்பி விக்டர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கொட்டிய சொற்கள் சீராய் மாறியிருக்கின்றன. அவருடைய உணர்ச்சி அவருடைய படைப்பைச் சிகரத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றன.

    தோரணமான தொடை விகற்பங்கள்

    எதுகை, மோனை என்பதைக் கூடச் சகித்துக்கொள்ள முடியாத இசைத்தமிழன் எகனை, மொகனை என்றான். மக்கள் வழக்கின் வீரியம் அது. உண்மையான தொடைவிகற்பங்களுக்கும் இது பொருந்தும். தம்பி விக்டரின் அழுகையில் ஆங்காங்கே கிடக்கும் இந்த விகற்பங்கள் இட்டுக் கட்டியவை அல்ல. எடுத்துக் கோத்தவை அல்ல. குமுறிக் கொட்டியவை. கொட்டி அழுதவை!

    முழுப்பானை சோற்றுக்கு ஒரு மோனை போதாதா?

    “தாழ்வுகள் தாங்கியெமை தக்க வைத்தாய்!” மோனை இணையாகும். “கண்ணில் மிரட்சியில்லை கைகால் பதட்டமில்லை”, “என்றிருந்தார் அந்தமலை இன்றவரோ எங்குமிலை” பொழிப்பில் புன்னகை செய்யும். “கட்டலாகாக் காற்றவரை கட்டிலே பார்த்ததில்லை” என்ற வரியில் ஏழையாகாத மோனை கூழையாகும். “சாவின் அலையடித்து சாய்ந்துவிட்டேன் பாவிமகன்” என்று ஒரூஉவில் ஒப்பாரி வைக்கும். “நாவின் நதி வறண்டேன் நாடி நரம்புருண்டேன் அப்பா அரூபமாய் அங்கிருந்தார்  அப்பாவின்” புன்னகைக்கும் பூவனம் நீ! பொய்யறியா புத்தகம் நீ! என்றெல்லாம் முற்றாகும்.

    ‘வருவார்’, ‘தருவார்’, ‘விடியும்’, ‘முடியும்’, ‘புகழ் பூத்த’, ‘நிகழ் பூத்து’ என்றெல்லாம் அமைந்தன முற்றெதுகைகள். ‘என்றிருந்தார் அந்த மலை இன்றவரே எங்குமிலை’, ‘சிந்திவிடும் என்றெவர்க்கும் சிந்தை வரா மயக்கம்’ என்றெல்லாம் இறைந்துகிடக்கும் பொழிப்பெதுகைகள், ‘தந்தைமேல் நம்பிக்கை தான் எனக்கும் அந்த உயிர் என்றவாறு அமையும் ஒரூஉ எதுகை என அங்கிங்கெனாதபடி எங்கும் சிதறிக்கிடக்கும் தொடைவிகற்பங்களைக் கோப்பதே ஓர் ஆய்வுப் பணி.

    வினா உத்தி

    கருத்துக்களை வினா வடிவில் வெளிப்படுத்துவது தமிழ்க்கவிதைகளின் வெளிப்பாட்டுக் கொள்கைகளில் ஒன்று. இந்நெறி சங்கக்காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாம் தொல்காப்பியத்தை ஒரு கவிதையியல் நூல் என்று தொடர்ந்து சொல்லி வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.  அதாவது பண்பாடு சிறந்து பக்குவப்பட்ட ஒரு சமுதாயத்தில் இலக்கியப் படைப்பும் ஆராய்ச்சியும் ஒரே காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. இதனைச் சரியான புள்ளியில் நிறுத்தி ஆராய்ந்தால் இன்றைய மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கைகளை வைத்துக் கொண்டு அடிக்கும் பெருங்கூத்தும் வெற்று ஆரவாரமும் குறையக் கூடும்.

    1. ‘குளித்து மணல் கொண்ட கல்லா இளமை அளிதோ தானோ யாண்டுண்டு கொல்லோ?’ என்று வினவியவர் தொடித்ததலை விழுத்தண்டினார்.
    1. ‘சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டுகொல்?’ என்று வினவியவள் கண்ணகி.
    1. ‘கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?’ என்று கேட்டவன் கம்பன்.
    1. ‘கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?’ என்று வினவியவன் மகாகவி.
    1. ‘காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டா? கறைச் சேற்றால் தாமரையின் வாசம் போமா?’ என்று வினவியவர் பாவேந்தர்.
    1. ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’ என்னும் கண்ணதாசன் கேட்ட வினாவிற்கு இன்னும் பதில் இல்லை.
    2. ‘மீனில்லாமலே நீரிருக்கலாம்! நீரில்லாமலே மீனிருக்குமோ?’ என்னும் வாலியின் வினா அப்படியே இருக்கிறது.
    1. ‘நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழியுமுண்டோ?’ என்னும் ஆலங்குடியாரின் வினாவுக்கு யார் பதில் சொல்வது?
    1. ‘தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்?’ இராஜேந்தரின் கண்ணீரை அறிந்தார் இலர்.
    1. ‘எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?’ என்று வைரமுத்து கேட்ட வினா பலருக்கும் சென்று சேர்ந்ததாகத் தகவல் இல்லை.

    தமிழ்க்கவிதைகளைத் திறனாய்வு செய்யும் ஆய்வாளர்கள் இவற்றை  அதாவது இந்த வினாவுத்தி போன்றவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும். இத்தகைய வகைமாதிரிகள் தமிழ்க்கவிதைகளிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுத் தொகுக்கப்படல் வேண்டும். தம்பி விக்டர் தாஸ் கொட்டிய பாக்களில் இத்தகைய வினாக்கள் சரளமாக மிகச் சரளமாக வந்து விழுந்திருக்கின்றன. மரபை விழாமல் தாங்கியிருக்கின்றன.

    “பார்க்கஇனி ஏலாதா? பால் குரல் கேளாதா?
    நீர் பொழியும் பாசமழை நீளாதா? – வேர்வனம் நீ
    எங்கும் கிடையாதா?”யெப்போ” இனி இராதா?
    சங்கறுத்து விட்டதே சாவு!”

    “இந்த வலி தீராதா? எந்தை மொழி வாராதா?
    சிந்தையெல்லாம் நிம்மதியும் சேராதா? தந்தை முகம்
    காண முடியாதா? கண்ணீர் ஒடியாதா?
    போனதினி மீளாதா? போ!”

    “நோயென்ன கள்வனா? நூதனமாய்க் கொல்வானா?
    தீயென உள்நுழைந்து தின்பானா? – மாயமாய்த்
    தந்தையைக் கொய்தானா? தள்ளாடச் செய்தானா?
    வெந்து போய்விட்டதே வேர்!”

    “ஈவிரக்கம் இல்லையா? இந்த உடல் தொல்லையா?
    காவு கொண்ட சீவனே! நீகல்லாய்யா?—  நோவு வழி
    போனசெயல் தப்பைய்யா புத்திகெட்டக் குப்பைய்யா
    கேணை நடத்தை இது கேள்.”

    ‘காவு கொண்ட சீவனே நீ கல்லாய்யா?’ என்ற ஒற்றை வரியில் வழக்குக்கு வாழ்வு கொடுக்கிறார். சீவனோடு சேர்த்து வெண்பாவையும் தெறிக்கவிடுகிறார். சிவனோடு போர் தொடுத்தவர் உண்டு. சீவனோடு போர்தொடுத்து இலக்கிய நயத்தின் உச்சம் தொடுகிறார் விக்டர் தாஸ். ‘நோவு வழி சீவன் போன செயல் தப்பையா?’ என்று கற்பனையின் கொடிமுடிக்குச் செல்கிறார். உயிரைக் கேணையன் என்று எள்ளி நகையாடி அவனுக்கான நடத்தைச் சான்றிதழில் கை வைக்கிறார். மை வைக்கிறார். இத்தனை நுண்ணியங்களையும் வினா உத்தியில் வைத்துக் கொட்டியிருக்கிறார் தம்பி விக்டர்!

    காலத்தால் அழியாக் கவிதைத் தொடர்கள்

    கவிதைகள் உத்திகளால் சிறக்கின்றன. நூல்கள் தொடர்களால் சிறக்கின்றன. தொகையாகவும் பாட்டாகவும் பரிணமிக்கும் சங்க இலக்கியக் களத்திற்கே ஓர் அடையாளமாக நிற்கும் தொடர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதை மறுப்பாரும் உளரா? ஒரு கால இலக்கியத்தையே தன்னுள் செறித்துக் கொள்ளும் ஆற்றல் அந்த ஒரு தொடருக்கு இருந்திருக்கிறதென்றால், ஒரு நூலைத் தனதாக்கிக் கொள்வது ஒன்றும் அவ்வளவு இடர்ப்பாடானதன்று.

    1. ‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்றால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வரும்.
    2. ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்றால் மணிமேகலை நினைவுக்கு வராதா?
    3. ‘பார் பெருத்ததோ படை சிறுத்ததோ’ என்றால் கலிங்கத்துப் பரணி.
    4. ‘தொடுக்கும் கடவுட் பழம்பாடல்’ என்றவுடன் மீனாட்சி வந்து நிற்கமாட்டாளா?
    5. ‘வாராதிருக்க வழக்குண்டோ’ என்றால் பகழிக்கூத்தர் பக்கத்தில் நிற்பாரே!
    6. ‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்’ கேட்டவுடன் பெரியபுராணம் அல்லவா விரியும்?
    7. ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்று செவியில் விழுந்தவுடன் சிவதனுசல்லவா முரியும்?
    8. ‘கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?’ பாசுர வாசனை நம் வீட்டுப் படிக்கட்டில் வீசாதா?
    9. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்றவுடன் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துத் திருநாவுக்கரசராய் முன் நிற்காதா?
    10. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றால் வள்ளலார் திருவருட்பாவோடு திருக்காட்சி தருவாரே!
    11. ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு’ என்ற அடைகொடுத்து இனம் பாடிய பாரதியின் தொடர் அவன் கவிதைக் கொள்கை அல்லவா?
    12. ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற ஒற்றைத் தொடர் பாவேந்தரின் ஒரு நூறு நூல்களுக்கும் ஒற்றைத் தலைப்பல்லவா?
    13. ‘வாழைத்தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு?’ என்ற உவமம் போதாதா சுரதாவை உவமைக் கவிஞர் என்று அடையாளப்படுத்துவதற்கு?
    14. ‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்! மணல் கூடச் சில நாளில் பொன்னாகலாம்’ என்ற ஒரே பல்லவி சாதாரண முத்தையாவைக் கவியரசு ஆக்கிய விந்தையை நாம் அறிவோமே!
    1. ‘உனைநிரப்ப என்பசியை நானே உண்டேன்’ என்றால் மனவாசலில் வந்து நிற்பவர் வசந்தராசன் அல்லவா?

    கவிதை பற்றிய பன்முக ஆராய்ச்சிகளில் சொல்லாக்க உத்திகள் அவ்வளவாகக் கவனிக்கப்படுவதில்லை. கற்பனை, உணர்ச்சி, வடிவம், கருத்து என்ற அளவிலேயே ஆய்வுகள் நின்றுபோவதால் அவற்றுக்கு மேலான கவிதைக் கூறுகள் திறனாய்வுலகில் போதிய இடம் பெறுவதில்லை. மேற்கண்ட நான்கும் கவிதைக்கு அதன் கட்டுமானப் பொலிவிற்கு அடிப்படையேயாயினும் படைப்பாளனாகிய கவிஞனின் உள்ளம் கடலினும் ஆழமுடையது என்பதையும் ‘விரிவானப்’ பரப்பையுடையது என்பதையும் மறந்துவிடலாகாது. குறிப்பிட்ட திறனாய்வுக் கொள்கைகளை ஆய்வு நெறியாக வைத்துக் கொண்டு பல்வகை உள்ளத்து வண்ணங்களைத் தரமதிப்பீடு செய்வது ஏற்புடையதாகாது. எனவே ஒவ்வொரு படைப்பும் தனக்கான தரமதிப்பீட்டுக் கருவியைத் தானே படைத்துக் கொள்கிறது. படைத்துக் கொள்ள வேண்டும். தம்பி விக்டர் தாஸின் புலம்பலில் காணப்படும்,

    1. கந்தலாகிப் போச்சே கடல்
    2. கண்ணீர் ஒடியாதா?
    3. சத்தமின்றிக் கொத்தியதே சாவு
    4. மல்லிகைச் செண்டுக்குள் குண்டுமழை
    5. பூச்சரமேல் சாவின் புயல்
    6. அவஸ்தை நெடி
    7. அவிழ்க்காத பாசம்
    8. அந்த உயிர் சிந்திவிடும்
    9. ஆன்மா பிளவு கொண்டேன்
    10. உயிரு சேறாச்சே
    11. என்னை உதறுகின்றேன்
    12. தண்டுவடம் எங்கும் தகராறு
    13. நீர்வழிந்து கீறலாச்சு! நெஞ்சில் தீத் தூறலாச்சு!
    14. உன் வாசத்தை நீட்டினாய்
    15. வருத்தங்கள் யாவும் வழிமறிக்கும்

    என்பன போன்ற சொல்லாட்சிகளெல்லாம் எந்தத் திறனாய்வுக் கொள்கைக்கும் பிடிகொடுக்காமல் தனித்தியங்கும் ஆற்றல் கொண்டவை என்பதைத் தெளிவாகச் சுட்டுகிறேன். கவிதை ஆராய்ச்சி என்பது வடிவ ஆராய்ச்சி அல்ல. கருத்துக்களின் ஆராய்ச்சி அல்ல. கற்பனை ஆராய்ச்சி அல்ல. கவிஞனின் உள்ளத்தை ஆராய முயல்வது. இத்தகைய சொல்லாக்கங்கள் எல்லாம் கவிதைக்கு நிலைப்பேற்றைக் கொடுப்பதில் ஏனைய கூறுகளைவிட முதன்மை பெறுகின்றன என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும். ஒட்டுமாங்கனியைப் போன்ற சொல்லாக்கங்கள் தற்காலக் கவிஞர்களில் தம்பி வசந்தராசனின் படைப்புக்களில் இயல்பாக அமைந்து கிடக்கின்றன என்பது ஒப்பீட்டுக்காக இங்கே சுட்டப்படுகிறது.

    அகத்திலும் இனிக்கும் ‘ஐயோ’

    கவிதை வல்லாளர்களுக்குச் சொற்கள் அடிமைகள். தமிழின் நால்வகை இலக்கணச் சொற்களில் பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலுடையார் இருக்கலாம். ஆனால் இடைச்சொல்லைச் சீராகப் பயன்படுத்திக் கவிதைத் தொழில் செய்வார் அரியர். திருவள்ளுவர் இதில் தலைமையிடம் பெறுகிறார்.

    “ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும் உட்கும் என் பீடு” (1088)

    என்பது தலைவியிடம் மனம் பறிகொடுத்த தலைவனின் கூற்று. தன்னை எதிர்த்துக் களத்திற்கு வராதவர் கூட எண்ணி அச்சப்படும் தன் பீடு ஒளி நெற்றி உள்ளவளுக்கு உடைந்ததே என்று அவன் கைபிசைகிறான். களத்திலே காட்டிய வீரம் காரிகையின் முன் தோற்றது என்பது கருத்து. இந்தப் பாட்டில் இரண்டாவது சீரில் நெடில் குறிலாக அமைந்திருக்கும் ஓகார ஒகரங்கள் விட்டிசைத்துத் தனித்தனி நேரசையாக நின்று தேமா என்னும் வாய்பாட்டில் கவிதைப் பணி செய்வதைக் காணலாம். ‘ஓ’ என்பது ஒண்ணுதற்கோ என்னும் தலைவனின் வியப்பு கலந்த சொல்லோடு இணைந்து வியப்பை மிகுவிக்கிறது. அடுத்து நின்ற மற்றொரு ஒகரம் வியப்பினை இன்னும் கூடுதலாக்குகிறது. ஓகாரம் ஒரு இடைச்சொல். அந்த ஓகாரத்திற்கு ஒலித்துணையாக இருப்பது ஒகரம். பொருள் தராத அந்த இடைச்சொற்களைப் பிணைத்து வியப்பு என்னும் உணர்ச்சிக்குக் குறியீடாக்கித் தலைவனின் காதல் உணர்வை மிகுவிக்கிறது. இடைச்சொல் சீராகிறது. அளபெடைக்குத் துணையாகிறது. தளை காக்கிறது. தலைவனின் தவிப்பையும் உணர்த்துகிறது.

    “ஏவவும் செய்கலாம் தான் தேரான் அவ்வுயிர்
    போஒ மளவுமோர் நோய்” (848)

    என்னும் பாட்டில் சொல் புத்தியும் இல்லாது சுயபுத்தியும் இல்லாதவன் இவ்வுலகைவிட்டுப் போகிற காலம் வரைச் சமுதாயத்திற்கு ஒரு நோயாகவே இருப்பான் என்று பொருள் தரும் குறட்பாவில் ‘அவன் விரைவில் போகமாட்டான், இருந்து உயிரை வாங்குவான்’ என்னும் கருத்தினை இடைச்சொற்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அளபெடையால் குறிப்பாக உணர்த்துவது காண்க. இத்தகைய வல்லாண்மையைக் கம்பன் பல இடங்களில் பயன்படுத்துகிறான். அதில் ஒரு இடம். இராமன் வனவாசம் புறப்படுகிறான்.

    “வெய்யோன் ஒளி தன் மேனியின்
    விரி சோதியின் மறைய,
    பொய்யோ எனும் இடையாளொடும்,
    இளையானொடும் போனான் –
    ‘
    மையோ?, மரகதமோ, மறி
    கடலோ? மழை முகிலோ?
    ஐயோ!, இவன் வடிவென்பதோர்
    அழியா அழகுடையான்”

    படைப்பாளன் தோற்கிற இடமும் இதுதான் வெல்கிற இடமும் இதுதான். இராமனின் தோற்றப் பொலிவுக்குக் கருப்பு, மரகதம், கடல், மேகம் என்றெல்லாம் சொல்லியும் மாளாத கம்பன் சொல்லில்லாமல் திண்டாடுகிறான் என்பது படைப்புத் தோல்வி. பாடுபொருள் பரம்பொருள் ஆதலின் சொல்லுக்குள் அடங்காதவனைக் கண்டு வியப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் ‘ஐயோ’ என்னும் இடைச்சொல்லால் வியந்து நோக்குவது படைப்பின் மாபெரும் வெற்றி. ஏனைய பொருளுடைய சொற்களை விட இந்த ஐயோ என்னும் இடைச்சொல் உணர்ச்சியின் உச்சத்தைத் தொடுவதைச் சொல்வார் உணரலாம். இந்த ‘ஐயோ’ என்னும் இடைச்சொல்லை,

    “வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல்
    ஆகுதே பாவியேன் ஐயகோ! – மாகக்
    குருவி பறவாமல் கோதாட்டி என்னை
    கருதி வளர்த்தெடுத்த கை”

    என்னும் நேரிசை வெண்பாவில் பட்டினத்தடிகள் பதிவு செய்திருக்கிறார்.  இந்தப் பாடலை அவர் உட்கார்ந்து சீர், தளை பார்த்து எழுதியிருக்க இயலாது. காரணம் அவருடய தாயாரின் உடல் தீயில் எரிகிற போது செய்யப்பட்ட களக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு!  இந்த ஐயோ என்ற சொல்லைக் கவிஞர் கண்ணதாசன் அவலத்தின் உச்சத்தில் வைத்துப் பாடுவதையும் பார்க்க முடிகிறது. பண்டித சவகர்லால் நேரு அவர்கள் மறைந்தபோது,

    “நீரோடும் கண்களுக்கு நிம்மதியை யார்தருவார்?
    நேரில்லாத பாரதத்தை நினைவினில்யார் வைத்திருப்பார்?
    ஐயையோ! காலமே! ஆண்டவனே! எங்கள் துயர்
    ஆறாதே! ஆறாதே! அழுதாலும் தீராதே!”

    என்று முந்தைய வரிகளுக்கும் பிந்தைய வரிகளுக்கும் எந்தப் பொருள்  தொடர்பும் இல்லாத நிலையில் சொற்களால் எழுத முடியவில்லை என்பதை ‘ஐயையோ’ என்னும் இடைச்சொல்லால் குமுறியிருப்பதைக் காண்க. இந்த நெறியைத்தான் அதாவது இந்த மரபைத்தான் விக்டர்தாஸ் தம்மையும் அறியாமல் தன் தந்தை இழந்த தருணத்திலும் அழுது கொட்டியிருக்கிறார்! எதனையோ எழுதி வைத்துக் கொண்டு மரபுக் கவிதை என்பார் கவனத்திற்கு நான் பல எடுத்துக்காட்டுக்களை என் கட்டுரைகளில் பதிவிட்டு வருகிறேன். கொள்வாரில்லை. அவர்கள் தேமாங்காய், புளிமாங்காய் தவிர வேறு மரபு எதனையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதில் எச்சரிக்கையுணர்வுடன் செயல்படுகிறார்கள். இப்படிப் பயன்பட்ட அந்த ஐயோவை மிக அருமையான இடங்களில் அவலத்தின் உச்சந்தொடும் நோக்கில் விக்டர் அவர்கள் பாட்டில் விழுந்திருக்கிறது.

    “கூடுவிட்டு நன்றியற்று கூண்டோடு கொன்று விட்டு
    கேடுகெட்ட ஆவி போச்சே கீறிவிட்டுப்!– பாடுபட்ட
    மெய்யோ அனாதையாய் வெந்த பராரியாய்!
    அய்யோ உயிரே! வந்(து) ஆற்று.”

    “வானம் உதிரவிட்டேன் மண்ணில் சிதறவிட்டேன்
    காணும்போ தாவி காடுவிட்டேன் – மோனவுடல்
    ஐயோ புதைத்துவிட்டேன் அப்பா தொலைத்துவிட்டேன்!
    பொய்யாச்சே தந்தையெனும் பொன்”

    “இருப்பாய்நீ நூறாண்டென்றிருந்தேன்! நோயின்
    நெருப்பெரிக்க அய்யையோ! நீர்த்தேன் – அருந்தவமே
    மூச்சுடைய பார்த்திருந்தேன்! மொத்தமாய் வேருடைத்தேன்!
    பூச்சரம் மேல் சாவின் புயல்”

    மேற்கண்ட புலம்பலில் ‘அய்யோ’ அல்லது ‘அய்யையோ’ என்னும் சொல் இருவினைகளுக்கு இடையில் செயல்பட முடியாத இயலாமையைச் சுட்டுகிறபோது பயன்பட்டிருப்பது காண்க. ‘நெருப்பெரிக்க’ என்னும் வினையெச்சத்திற்கும் நீர்த்தேன் என்னும் வினைமுற்றுக்கும் இடையில் விக்டரின் தவிப்பைத், துடிப்பை இந்த அய்யோ என்னும் இடைச்சொல் வெளிப்படுத்துவது உணர்க. ‘இடிகளை அனுப்பியா பூக்களை நலம் விசாரிப்பது?’ என்று எழுதுவார் வைரமுத்து. ‘வீணை தடவக் கோடரி கொண்டு வந்தவர்களை’ வைரமுத்து காட்டியிருக்கிறார். ‘பூவுக்குள் பூகம்பம்’ என்ற சொல்லை யாவரும் கேட்டிருக்கக்கூடும். விக்டர் தாஸ் ‘பூச்சரம் மேல் சாவின் புயல்’ என்று சொல்கிறார். இதற்கு எப்படி நயம் சொல்வது? எப்படி உள் வாங்குவது? திறனாய்வு நாணுகின்ற இடங்களில் இதுவும் ஒன்று. திறனாய்வு தொடமுடியாத உச்சிக்குப் படைப்புச் சென்றுவிடுமானால் இதுதான் நிலை. ‘சாவின் புயல்’ என்பது உருவகம் என்று உரையெழுதலாம். அது 16 வயது குமரிக்குப் பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் மூதாட்டி வேடம் போட்ட கதையாகிவிடும்.

    நிறைவுரை

    காய்ச்சீர்களால் அமைந்த ‘வெண்பா’ உலகில் கண்ணீரால் கொட்டப்பட்ட கவிதைகள் இவை. எதுகைக்கும் மோனைக்கும் இலக்கியச் சொற்களை இற்றுப்போன இறவாணத்தில் தேடுகின்ற படைப்புலகில், வாயிலிருந்து விழுந்த வழக்குச் சொற்களால் வழுவாமல் அமைந்தவை. காது மடல்களைக் கூடத் தொட முடியாத வரிகளை எழுதிவைத்துக் கொண்டு ஐந்தாறுபேர் கூடித் தங்களுக்குத் தாங்களே பாராட்டித் தட்டிக் கொடுத்துவரும் போலி உலகில் விழியில் வழிந்து உயிரில் நனைந்து ஆன்மாவின் அந்தரங்கத்தை அசைத்துப் பார்க்கும் உண்மையான பாசத்தின் வெளிப்பாடு! வாழ்வியலில் இலக்கியத்திற்குத் தலையாய இடம் உண்டு. ஆனால் வாழ்வியலே இலக்கியமாகும் என்னும் மாபெரும் புதிய உண்மையை உணர்த்தியிருக்கிறார் விக்டர்தாஸ்!  எழுதிவைத்துக் கொள்ளப்பட்ட ஒரே மாதிரியான திறனாய்வுக் கொள்கைகளைக் கொண்டு பன்முகத் திறன்களின் வெளிப்பாடான படைப்புக்களை ஆராய்வது நெறியன்று. படைப்பின் சூழலும் காரணிகளும் மாறுபடுகிறபோது திறனாய்வுக் கொள்கைகளும் மாற்றப்பட வேண்டும். வெண்பாக்களை விளையாட்டுப் பொம்மைகளாக்கிக் கொண்ட விக்டர்தாஸ் தமிழ்க்கவிதை உருவாக்கத்திற்கான புதிய மூலத்தைக் கண்டறிந்த கவிதை கொலம்பஸ் என்பதில் எனக்கு எத்தகைய ஐயமும் இல்லை! திறனாய்வுக் கொள்கைகளால் அளக்கமுடியாத அரிய வெளிப்பாட்டினைப் ‘படித்தேன் சுவைத்தேன் பகிர்ந்தேன்’ என்பது பொருந்துமா? படித்தேன்! பதறினேன்! கலங்கினேன்! கண்ணீர் விட்டேன்! காய்ந்து போன ஈரத்தைக் கட்டுரையாக்கியிருக்கிறேன். தந்தையை இழந்து வாடும் அவர் மனம் அமைதி பெறட்டும்!. இந்தத் திறனாய்வை அவருடைய தந்தையாகிய நம் தந்தைக்கான அஞ்சலியாகவே அர்ப்பணிக்கிறேன்!

    (தொடரும்…)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 46

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 46

    -மேகலா இராமமூர்த்தி

    மைந்தன் பிரகலாதனைக் கொல்ல இரணியன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியவே, தானே தன் மைந்தனைக் கொல்வது என்ற முடிவோடு பிரகலாதனைத் தேடிவந்தான் இரணியன்.

    தந்தையைக் கண்ட பிரகலாதன், ”உன்னால் என்னைக் கொல்ல முடியாது! என்னுயிர் இவ்வுலகைப் படைத்த பரமன் வசப்பட்டது. அவன் சாணிலுமுள்ளான்; தூணிலுமுள்ளான்” என்று புகலவே, அதுகேட்டு நகைத்த இரணியன், ”அப்படியானால் உன் இறைவனை இங்குள்ள தூணில் காட்டு! இல்லையேல் உன்னை நானே கொன்று தின்பேன்!” என்றான் சீற்றத்தோடு.

    ”நான் ஏற்கனவே சொன்னதுபோல் நின்னால் கொல்லப்படுவதற்கு என்னுயிர் எளியதன்று! அந்தப் பெருமான் நீ தொட்டுக் காட்டும் இடந்தோறும் தோன்றானாயின் எனது உயிரை நானே மாய்த்துக்கொள்வேன்! அதற்குப் பிறகும் நான் உயிர்வாழ விரும்பினால் அந்தத் திருமாலுக்குரிய நல்ல தொண்டனாக மாட்டேன்” என்று சூளுரைத்தான் பிரகலாதன்.

    ”அப்படியா? நல்லது நல்லது” என்று ஏளனமாய்ச் சிரித்த இரணியன், தூணில் இறைவனைப் பார்க்கலாமே எனும் விருப்பத்தோடு இடிவிழுந்தது போன்ற வேகத்தோடு அருகிலிருந்த ஒரு தூணைத் தன் கையால் ஓங்கி அறைந்தான். அவ்வாறு அவன் அறைந்தவுடனே திசைகளைப் பிளந்துகொண்டு, அண்டமும் கிழியுமாறு, செந்நிறக் கண்களைக் கொண்ட, திருமாலாகிய நரசிங்கம் பெருஞ்சிரிப்புச் சிரித்தது.

    நசைதிறந்து இலங்கப் பொங்கி நன்று நன்று என்ன நக்கு
    விசைதிறந்து உருமு வீழ்ந்ததென்ன ஓர் தூணின் வென்றி
    இசைதிறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும்
    திசைதிறந்து அண்டம் கீறச் சிரித்ததுஅச் செங்கட் சீயம்.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6315)

    பெருமானின் சிரிப்பொலியைக் கேட்ட பிரகலாதன் மகிழ்ச்சி மீதூர ஆடினான்; பாடினான்; சென்னியில் கைகள் கொண்டு தொழுதான்; அழுதான்.

    சிரிப்பொலி செவியில் விழுந்ததும் இரணியன் தான் நின்ற இடத்திலிருந்து நகர்ந்து, ”தூணிலிருந்து சிரித்தவன் யாரடா? இச்சிறுவன் சொன்ன அரியோ? எனக்கு அஞ்சிப் புகுந்துகொண்டிருந்த கடல் போதாதென்று இந்தத் தூணையும் ஒளிந்துகொள்ளத் தேடினாயோ? என்னோடு போர்செய்ய விரும்புவாய் எனின் உடனே புறப்பட்டு வா!” என்றான்.

    இரணியன் போருக்கு அறைகூவல் விடுத்தவுடன் அந்தத் தூண் இரண்டாய்ப் பிளந்தது; அங்கே நரசிங்கம் தோன்றியது; தோன்றியவுடனே வளர்ந்து பேருருவம் கொண்டது; அதனால் உலக உருண்டையாகிய அண்டமும் விண்டது (பிளந்தது).

    நரசிங்கத்தின் வருகையைக் கண்ட இரணியன், உறையிலிருந்து வாளினை உருவித் தன் ஒரு கையில் ஏந்தி, மறு கையில் கேடயத்தைப் பிடித்தவண்ணம் சினத்தோடு வாய்மடித்து மேருமலைபோல் அதன் எதிர்நின்றான்.

    தந்தையின் போர்க்கோலம் கண்ட பிரகலாதன், “பெருமானை இத்தோற்றத்தில் கண்டபின்பும் அவன் ஆற்றலை நீ உள்ளத்தில் உணர்ந்திலை போலும்! சக்கரப் படையானை வணங்கு! உன் புன்மைகளைப் பொறுப்பான் அவன்!” என்று அறிவுறுத்தினான்.

    அதுகேட்ட இரணியன், ”நான் சொல்லும் இதனைக் கேள்! நீயும் மற்றவர்களுடன் பார்த்துக்கொண்டிருக்க, சினம் கொண்டெழுந்த கொலைத்தொழில் வல்ல இந்தச் சிங்கத்தின் ஒப்பற்ற தோள்களையும் தாள்களையும் வெட்டி வீழ்த்தி, உன்னையும் வாளால் துண்டித்துப் பின் என் வாளினைத் தொழுவதல்லாது பணிந்து வணங்குவதென்பது பெண்கள் ஊடல் புரியும் காலத்தும் என்னிடம் உள்ளதோ?” என்று வினவி அண்டங்கள் நடுங்கச் சிரித்தான்.

    கேள்இது நீயும்காணக் கிளர்ந்தகோள் அரியின் கேழில்
    தோளொடு தாளும்நீக்கி நின்னையும் துணித்துப் பின்என்
    வாளினைத் தொழுவதல்லால் வணங்குதல் மகளிர் ஊடல்
    நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான்.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6334)

    அதனைத் தொடர்ந்து நரசிங்கத்துக்கும் இரணியனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் இரணியனைச் சுற்றிவளைத்த மாயவனாகிய நரசிங்கப் பெருமான், அவன் மார்பைத் தன் நகங்களால் கீற உதிரவெள்ளம் உலகெங்கும் பரவியது. மாலைப் பொழுதினிலே இரணியனின் அரண்மனை வாயிலிலே தன் அழகிய மடிமீது அவனைக் கிடத்தி, நகங்களால் கீறியதால் ஏற்பட்ட குருதிப் பீறிட, அவன் வைரம் பாய்ந்த மார்பிலிருந்து தீயெழ, மார்பை இரு பிளவாகப் பிளந்து அவனைக் கொன்று வானவரின் இடுக்கண் தீர்த்தான்.

    ஆயவன் தன்னை மாயன் அந்தியின் அவன் பொன்
    வாயிலில் மணிக் கவான்மேல் வயிரவாள் உகிரின் வாயின்
    மீஎழு குருதி பொங்க வெயில்விரி வயிர மார்பு
    தீஎழப் பிளந்து நீக்கித் தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6341)

    ”இரவிலும் பகலிலும் சாகக் கூடாது; வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் சாகக் கூடாது; மண்ணிலும் விண்ணிலும் சாகக் கூடாது; பறவை விலங்கு மனிதர் தேவர் அரக்கர்களால் சாகக் கூடாது; எந்தப் படைக்கலத்தாலும் சாகக் கூடாது” என்று பிரமனிடம் மிகச் சாதுரியமாக வரம்பெற்றவன் இரணியன். ஆகையால், இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத வகையில் மாலை நேரத்தில் வாயிற்படியில் மனிதனுமல்லாத விலங்குமல்லாத நரசிங்கத் தோற்றத்தில் படைக்கலத்தைப் பயன்படுத்தாது தன் நகங்களையே ஆயுதங்களாய்க் கொண்டு இரணியனைக் கிழித்துக் கொன்றான் நரசிங்கமாய் வந்த திருமால்.

    பின்பு பிரகலாதனை அருளோடு நோக்கிய நரசிங்கப் பிரான், ”என்றும் நீ சிரஞ்சீவியாய் வாழ்வாய்” என்று வாழ்த்தி, தேவர்களைக் கொண்டு அவனுக்கு முடிசூட்டுவிழா நடாத்தித் தன் கையாலேயே மணிமுடிசூட்டி மூவுலகுக்கும் அவனை அரசனாக்கினான்.

    இவ்வாறு இரணியன் வரலாற்றை, இரணியன் வதைப் படலத்தில், விரிவாக இராவணனுக்கு எடுத்துரைத்த அறிவிற் சிறந்த வீடணன், “எம் தலைவ! என் பேச்சினை உனக்கு நன்மை தருவது என்று கருதாது இகழ்ந்து ஒதுக்குவாயெனின் தீமை விளைதல் திண்ணம்” என்றான் உறுதிபட.

    வீடணன் கூறிய அறிவுரைகள் இராவணனின் செவிகளில் விழுந்தபோதிலும், அறநெறியினின்று திரிந்த சிந்தையனாகிவிட்ட அவன், அவற்றைத் தனக்கு உறுதிபயப்பவை எனக் கொள்ளவில்லை. மாறாக, வீடணனையே மீண்டும் சினந்துரைக்கலானான்.

    ”தன்னைப் பெற்றுவளர்த்த தந்தையின் உடலைத் தன் கண்ணெதிரிலேயே மாயவனாகிய திருமால் பிளந்திட, அதுகண்டு மகிழ்ந்த பிரகலாதனும் நம் பகைவனான இராமனுக்கு நட்புள்ளவனாகிய நீயும் சமமானவர்களே!

    சூழ்ச்சியால் தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய பிரகலாதனைப் போல நீயும் நான் இராமனிடம் தோற்றபின் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எண்ணிக்கொண்டிருக்கின்றாய்; அது நடக்கின்ற காரியமா? இல்லை!

    என் பகைவர்களுக்கு நண்பனாகிவிட்ட நீயிருக்க எனக்கு வேறு பகை வேண்டுமோ?

    எனக்குப் பழிநேரும் என்பதால் உன்னைக் கொல்லமாட்டேன்; இதுபோன்ற அறிவுரைகளை எனக்குச் சொல்வதை நீ முதலில் நிறுத்து! இங்கிருந்து சீக்கிரமாய்ப் போய்விடு; என் கண்ணெதிரே நின்றால் நீ சாவாய்!” என்றான் நல்லறிவு நீங்கியவனும் அழிவினை அடையப் போகின்றவனுமான இராவணன்.

    பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை
    ஒழிசில புகலுதல் ஒல்லை நீங்குதி
    விழிஎதிர் நிற்றியேல் விளிதி என்றனன்
    அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6372)

    நமக்கு நல்லூழ் வரும் காலத்தில் நல்லறிவு தோன்றும்; தீயூழ் ஏற்படவிருக்கும் தருணத்திலோ உள்ள அறிவும் போய் நம்மைப் பேதையாக்கும். அதுவே இராவணன் விசயத்தில் நடந்தது. இதையே, ’பேதைப் படுக்கும் இழவூழ்’ என்பார் வள்ளுவப் பேராசான்.

    அதன்பின்னரும் அங்கிருக்க விரும்பாத வீடணன், அங்கிருந்து கிளம்பி விண்ணில் எழுந்துநின்று, ”அண்ணலே! உன் வாழ்வுக்கு ஏன் கேடு சூழ்கின்றாய்? அறநெறி தவறியவர்க்கு நல்ல வாழ்க்கை அமையுமோ? வீணாக உன் புத்திரர்கள், மித்திரர்கள், சுற்றத்தினர் என அனைவரையும் அழிக்க முற்படுகின்றாய். நான் எவ்வளவோ நல்லுரைகளை நவின்றும் அவற்றை நீ கேட்கவில்லை. ஆகவே, நான் உன்னைவிட்டு நீங்குகின்றேன்; என்னை மன்னித்துவிடு!” என்று இராவணனிடம் உரைத்துவிட்டு இலங்கையைவிட்டு நீங்க முற்படுகையில் நற்பண்பாளர்களும் வீடணனின் அமைச்சர்களுமான அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகியோர் அவனோடு இணைந்துகொண்டனர்.

    இலங்கையை நீங்கி எங்குச் செல்வது என்று புரியாமல் சிந்தித்திருந்த வீடணனிடம், ”வானரர்களோடு மனிதர்களான இராம இலக்குவரும் கடலின் அப்புறத்தில் தங்கியிருக்கின்றனர்; நாம் அவர்களிடம் போவோம்” என்று அவ் அமைச்சர்கள் கூறவே, அவர்களோடு புறப்பட்டு அக்கரையை அடைந்தான் வீடணன்.

    அங்கே கடற்கரையில் விளக்கொளி பரந்திருப்பதையும் அதில் வானரப் படைகள் நிறைந்திருப்பதையும் கண்டான்.

    ஒரு முடிவுக்கும் வர இயலாதவனாய்த் தவித்த வீடணன், “அறவழியில் நடப்பவர்களான இராம இலக்குவரிடத்து அன்பு பூண்டேன்; நற்புகழைப் பெறுதல் அல்லாமல் உயிர்வாழவும் நான் விரும்பமாட்டேன்; எனக்கு நன்மையானவற்றை நீ செய்யவில்லை என்று அண்ணன் இராவணன் சொன்னதால் அவனை நீங்கிவிட்டேன். இனி நான் செய்யவேண்டியது என்னவென்று கூறுங்கள்!” என்று தன் துணைவர்களிடம் கேட்டான்.

    “புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
    உலகுடன் பெறினும்  கொள்ளலர்”  (புறநா.182)” எனும் புறநானூற்று அடிகளை ”நற்புகழைப் பெறுதல் அல்லாமல் உயிர்வாழவும் விரும்ப மாட்டேன்” எனும் வீடணனின் கருத்தோடு நாம் பொருத்திப் பார்க்கலாம்.

    கல்வியிலும் ஆலோசனை சொல்வதிலும் வல்லவர்களான அவ் அமைச்சர்கள் வீடணனிடம், ”தாழ்ச்சியில்லாத ஞானத்தைத் தரும் அறமே வடிவான இராமபிரானைக் கண்டு தரிசிப்பதே இனி நம் கடன். அதனினும் மாண்பு பொருந்தியது வேறெதுவுமில்லை” என்றனர்.

    மாட்சியின் அமைந்தது வேறு மற்றுஇலை
    தாட்சிஇல் பொருள்தரும் தரும மூர்த்தியைக்
    காட்சியே இனிக்கடன் என்று கல்விசால்
    சூட்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார்.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6382)

    அமைச்சர்கள் சொன்னதைக் கேட்ட வீடணன், ”நமக்கு நன்மையானதையே நீர் சொல்லினீர்; இராமபிரானைச் சேர்வதல்லாது வேறு செய்வோமாயின் நாமும் அரக்கத் தன்மையினர் ஆவோம். ஆதலால், எல்லையில்லாப் பெருங்குணங்களைக் கொண்ட இராமனைச் சேர்வோம்” என்று அக்கருத்தை ஆமோதித்து ஏற்றுக்கொண்டான். 

    ஆக, தம் அமைச்சர்களின் ஆலோசனைப்படியே இராமனோடு சேரும் முடிவை, தமையன் இராவணன் தன்னை நிந்தித்து விரட்டிய நிலையில், எடுக்கின்றான் வீடணன். எனவே, இராமன் அக்கரைக்கு வந்ததிலிருந்தே எப்படியாவது இராவணனைப் பிரிந்து இராமனோடு சேர்ந்துவிட வேண்டும் என்று வீடணன் சூழ்ச்சியாய்த் திட்டமிட்டான் என்று அவன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்பதற்கு இப்பாடல் தெளிவான சான்று பகர்கின்றது.

    வீடணனும் அவன் அமைச்சர்களும் இராமனோடு சேர்வது என்ற முடிவுக்கு வந்தபோது இரவாகிவிட்டிருந்தது. எனவே, அந்த நேரம் இராமனைச் சந்திப்பதற்கு ஏற்றதன்று; மறுநாள் காலை சந்திக்கலாம் எனும் எண்ணத்தோடு அருகிலிருந்த ஒரு சோலையில் அன்றைய இரவுப் பொழுதைக் கழித்தார்கள் அவர்கள். மறுநாள் காலை வானர சேனை குழுமியிருந்த இடத்தருகே வீடணன் தன் துணைவர்களோடு வந்துநின்றான். அரக்கர்களை அருகில் கண்ட வானரர்கள், ”இவர்களை அடியுங்கள்; பிடியுங்கள்; ஆயுதங்களால் தாக்குங்கள்” என்று கூச்சலிட்ட வண்ணம் வீடணனையும் அவன் துணைவர்களையும் சூழ்ந்துகொண்டனர்.

    ”இவன் இராவணனோ?” என்று சிலர் ஐயத்தைக் கிளப்ப, ”அவனுக்குப் பத்துத் தலைகளும் இருபது கைகளும் உண்டென்பார்களே; அவையெல்லாம் சிதைந்து போயினவோ?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.

    இவ்வாறு வானரர்கள் தோன்றியபடியெல்லாம் பேசிக்கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருப்பதைச் சற்றுத் தூரத்திலிருந்த அனுமன் கவனித்தான். மயிந்தன், துமிந்தன் எனும் இரு வானரர்களை கூச்சலிட்டுக்கொண்டிருந்த வானரர்கள் இருந்தவிடத்துக்கு அனுப்பி அங்கு நடப்பதனை அறிந்துவரச் சொன்னான்.

    வீடணனும் அவன் துணைவர்களும் நின்றிருந்த இடத்துக்கு வந்த மயிந்தனும் துமிந்தனும் ”நீங்கள் யார்? இங்கு வந்த நோக்கமென்ன?” என்று கேட்க, வீடணனின் துணைவனான அனலன் வீடணனைப் பற்றியும் அவன் தன் தமையனான இராவணன் சீதையைச் சிறைவைத்திருப்பதைக் கண்டித்து நல்லுரைகள் சொன்னபோது அதனை ஏற்க மறுத்த இராவணன் வீடணனைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி விரட்டவே அவனை விட்டுநீங்கி இங்கு வந்துள்ளான் என்றும் நிகழ்ந்தவற்றை விளக்கியுரைத்தான்.

    அதனைச் செவிமடுத்த மயிந்தன், ”நீவிர் கூறியவற்றை இராமபிரானிடம் சொல்லி அவர் முடிவினை அறிந்துவருவேன்” எனச் சொல்லிவிட்டு, ”அதுவரை இவர்களைக் காவல் காத்துக்கொண்டிருங்கள்” என்று துமிந்தனையும் ஏனைய வானரர்களையும் பணித்துவிட்டு இராமனை அணுகினான்.

    வீடணனுக்கும் இராவணனுக்கும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டையும் இராவணனால் விரட்டப்பட்ட வீடணன் தற்போது இராமனிடம் அடைக்கலம் நாடிவந்திருப்பதையும் எடுத்துரைத்தான் மயிந்தன்.

    அதனைக் கேட்ட இராமன், ”வீடணனை நாம் நம்மோடு சேர்த்துக்கொள்வதா? விலக்கி வைப்பதா? உம் கருத்து என்ன?” என்று தன்னருகிலிருந்த நண்பர்களைக் கேட்கவே, சுக்கிரீவன் முதலில் ஆரம்பித்தான்…

    ”அனைத்து அறநூல்களையும் பழுதறக் கற்ற நீ எம்மைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது எதுவுமில்லை. எனினும், எம் கருத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில் கேட்கின்றாய்; ஆதலால் என் கருத்தைச் சொல்கின்றேன் எனும் பீடிகையோடு தொடங்கி,

    ”தகைமை உடைய தன் முன்னோனையும் (தமையன்), தாய் தந்தையையும், சிறப்புடைய சான்றோரையும், உலகாளும் மன்னனையும் பகைத்துக்கொண்டு வருவதும், பிரிந்து நீங்குவதும் நகைப்புக்கு இடமாவதே அன்றி விரும்பத்தக்க செயலோ?” என்று கேட்டான்.

    தகைஉறு தம்முனை தாயை தந்தையை
    மிகைஉறு குரவரை உலகின் வேந்தனை
    பகைஉற வருதலும் துறந்த பண்புஇது
    நகையுறல் அன்றியும் நயக்கற்பாலதோ.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6424)

    தொடர்ந்தவன், ”அண்ணனோடு வாழ்ந்த நாளெல்லாம் அவன் செல்வத்தை அனுபவித்துவிட்டு இடையில் பகைவர் சினந்து எழுந்தபோது அந்த அண்ணனுக்கு உறவாக இல்லாமல் அண்ணனின் பகைவர்களோடு சேரவருகின்ற இவன் யார்க்கு உறவாவான்?” என்றும் வினாவெழுப்பி வீடணனுக்கு அடைக்கலம் தருதல் தீங்காய் முடியும் எனும் தன் கருத்தை வெளிப்படுத்தினான்.

    இதில் நகைமுரண் யாதெனின், அரசாட்சியைத் தான் பெறுவதற்காகச் சொந்த அண்ணனான வாலியையே இராமனின் துணையோடு கொன்றவன் இந்தச் சுக்கிரீவன். இவன், வீடணன் அண்ணனைப் பகைத்துக் கொண்டு மாற்றானோடு கூட்டுச் சேர்வது முறையற்றது; நகைப்புக்கு இடமாவது என்று அறமுரைக்கின்றான்.

    ”தனக்கொரு நீதி; அடுத்தவனுக்கொரு நீதி” என்றிருப்பதுதான் இராமாயணக் காலத்திலிருந்தே உலக வழக்கம் போலிருக்கின்றது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • ஆண்டவனால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவர்!

    ஆண்டவனால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பக்திப் பெருவெளியில் அடியார்கள் பலர் வருகிறார்கள். அடியார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உண்மைப் பொருளாம். அந்தப் பரம்பொருளை நாடியும், தேடியுமே நிற்கிறார்கள். தேடும் விதமும், நாடும் விதமும் வேறுபாட்டினைக் காட்டி நின்றாலும் அவர்களின் சிந்தையெலாம் இறைவன் மட்டுமே என்பதுதான் மனங்கொள்ளல் வேண்டும். வருகின்ற அடியார்களில் கற்றவரும் இருப்பர். கல்லாதவரும் இருப்பர். அந்தஸ்த்தில் உயர்ந்தவரும் இருப்பர். அதில் குறைந்தவர்களும் இருப்பர். ஆனாலும் அவர்கள் அனைவரையும் இணைப்பது ஆண்டவனது அடியார்கள் என்னும் பிணைப்பேயாகும். ஆண்களும் இருப்பார்கள். பெண்களும் இருப்பார்கள். ஆண்டியும் இருப்பர். அரசரும் இருப்பர். அனைவரும் பக்தி என்னும் பாதையில் பயணிக்கும் பக்குவமான பரமனின் பயணிகளேயாவர். அந்தப் பயணிகள் வரிசையில் ஒருவர் சற்று வித்தியாசமானவராக அமைகின்றார். அவர் யாரென்று அறிந்திட ஆவல் மேலிடுகிறதல்லவா? வாருங்கள் அவரைக் காணுவோம்.

    “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே”, என்று ஆண்டவனையே அடியார்கள் விளித்துப் பாடுவார்கள். ஆண்டவனை அடியார்கள் யாவருமே “அப்பன் நீ அம்மை நீ” என்றுதான் அல்லும்பகலுமே ஆராக்காதலுடன் ஏற்றிப் போற்றியும் நிற்பார்கள். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. அம்மையே அப்பா என்று அடியவர்களால் ஏற்றிப் போற்றி நிற்கும் எம்பிரானே அடியவர் ஒருவரை “எம்மைப் பேணும் அம்மை இவள்” என்று;  “அம்மையே” என அருள் சுரந்து அழைத்தாராம். ஆண்டவனால் “அம்மையே” என்று அழைக்கப்படும் அளவுக்கு உரித்தாய் நின்றவர்தான் “தமிழீன்ற தவப்புதல்வி காரைக்கால் அம்மையார்” அவர்கள்.

    பக்தி உலகிலே நால்வருக்கும் மூத்தவர். நால்வரும் பக்திப் பெருவெளியில் உத்வேகமாய் காலூன்றிப் பயணப்பட முன்னோடியானவர். அவர்களால் பாடப்பட்ட பக்திப் பனுவல்களுக்கெல்லாம் ஆசானாகவும் விளங்கியவர். அவர்கள் எப்படியெல்லாம் தமிழில் இறைவனது திருவருளினைப் பாடலாம் என்பதற்கெல்லாம் பாவடிவுகளை, பா இனங்களை யெல்லாம் காட்டி நின்ற பேராளுமை என்று அவரைப் பல நிலைகளில் நோக்கக் கூடியதாகவே இருக்கிறது.

    சைவபக்தி வரலாற்றில் அம்மையாரின் வருகை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். இவர் இறைவனை உருவகிக்கும் பாங்கு, இறைவனை விழிக்கும் பாங்கு யாவுமே இவருக்கே தனித்துவமான ஒன்றாகவே விளங்குகிறது என்பதுதான் உண்மையாகும். அன்பினுருவமாய் ஆண்டவனை இவர் காணுகின்றார். இந்த உலகத்தைத் தோற்றுவித்த முதல்வனாய் விளங்குகிறான் என்று போற்றிப்பாடுகின்றார். அத்வைதத்தை ஆதிசங்கரரே பரப்பினார் என்று அறிகின்றோம். ஆனால் காரைக்கால் தந்த எங்கள் தமிழ்ச்செல்விதான் அத்வைதத்தின் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பதை அவரின் பாடல்களின் கருப்பொருட்களால் அறியக்கூடியதாக இருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். ஈசனே சகலமும் என்னும் கருத்தினை அம்மையார் சுட்டுவதன் மூலம் அரன், அரி, அயன் என்னும் அத்தனை நிலையும் ஒன்றாய் அடங்குவதையே வெளிப்படுத்தி நிற்கிறார் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

    அறிவானும் தானே அறிவிப்பான் தானே
    அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற
    மெய்ப்பொருளும் தானே விரிசுடர் ஆகாயம்
    அப்பொருளும் தானே அவன்

    என்று அற்புதத் திருவந்தாதியில் குறிப்பிடுகிறார். அறிபவன், அறிவிப்பவன், அறிவாய் இருந்து அறிகின்றவனும்  அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே. ஐம்பூதங்களாக விளங்குபவனும் அவனே, என்று அம்மையார் குறிப்பிட்டுக் காட்டும் நிலையினை அத்வைதம் என்று தானே பொருள்கொள்ளல் வேண்டும்.

    காரைக்கால் தந்த எங்கள் தமிழ்ச் செல்வியின் பக்திப் பெருஞ் சொத்தாய் சைவத்துக்கு வாய்த்திருப்பவை தான்; மூத்த திருப்ப திகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, என்பனவாகும். எம்பெருமான் சிவனது நடனம் பற்றியதாகவே இவரின் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும். அம்மையார் அவர்களுக்கு முன்பிருந்த தமிழர்கள் சிவனைப் பற்றியோ, அவரது உருவத்தைப் பற்றியோ, அவரொரு வடிவுகடந்த பொருள் என்பதனையோ, அதுமட்டுமல்ல அவர் ஒரு முழுமுதற் பொருள் என்பதனையோ நன்கு உணர்ந்தவாரக இருந்தாலும்; அந்தப் பரம்பொருளுக்கு உரித்தான வடிவம்தான் என்ன என்று தெரியாமல் இருந்தார்கள் என்றும், அவர்களுக்கு உன்னை நான் எப்படித்தான் காட்டுவேனோ என மனமெண்ணி அம்மையார் நிற்பதையும் இங்கு அவரின் பாடல் வாயிலாகவே காணமுடிகிறது.

    அன்றும் திருவுருவம் காணாது ஆட்பட்டேன்
    இன்றும் திருவுருவம் கண்டிலேன் – என்றுந்தான்
    எவ்வுருவோ நும்பிரான் என்பார்க்கு என் உரைக்கேன்
    எவ்வுருவோ நின் உருவம் ஏது

    அம்மையார் இறைவனைப் பார்த்தவிதம் வேறு. ஆனால் மற்றவர்களுக்கும் காட்ட அவர் எம்பெருமானிடமே வழியினைக் கேட்டு நிற்கும் பாங்கு சற்று வித்தியாசமானதாக இருக்கிறதல்லவா! என்றாலும் அவர் அந்தப்பரம் பொருளை – வேதியனாக,  வேதப்பொருளாக என்றெல்லாம் அடையாளப்படுத்துகிறார். உணருவார் உணருங்கள் என்பதும் தொக்கு நிற்பதாய்க் கொள்ளலாம் அல்லவா!

    வேதியனை வேதப் பொருளான வேதத்துக்கு
    ஆதியனை ஆதிரையாநன் னாளானைச் – சோதிப்பான்
    வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
    கில்லேன அமா என்றான் கீழ்

    பக்தியைப் பாடவந்த அம்மையார் தேமதுரத் தமிழினையும் தன்னுடைய அகத்தில் ஆழமாய் வைத்திருந்தார் என்பதும் மிகவும் முக்கியமாகும். அறத்தைப் பாடும் வடிவமான வெண்பாவைக் கையாளுகின்றார். அந்தப் பாவகை உணர்ச்சியைப் புலப்படுத்த உகந்தன்று எனவெண்ணி விருத்தப்பாவைக் கையிலெடுக்கிறார். தமிழின் பாவகைகள் எவற்றுக்கெல்லாம் உகந்தன எனச் சிந்தித்த அம்மையாரின் வழி தமிழ் வழியாக அமைகிறதல்லவா?தமிழால் பக்தியினைக் காட்ட முயலும் அம்மையார் பின்வந்த அடியார்க்கெல்லாம் தலை மகளாய், தமிழ்மகளாய், விளங்குகிறார் அல்லவா! அம்மாயாரின் பதிகங்களை “மூத்த நல் திருப்பதிகங்கள்” என்று தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமைப்படுத்துகின்றார். அம்மையாரின் பின்வந்த சம்பந்தப் பெருமான் பாடிய பக்திப்பனுவல்கள் பதிகங்கள் என்று தான் பெயர் பெறுகின்றன. இதனால் அம்மையின் பாடலையும் பதிகம் என்னாது  “மூத்த நல்” என்னும் அடைமொழி கொடுத்தமை அம்மையின் மீது சேக்கிழார் கொண்டிருந்த பெருமதிப்பினையே காட்டுகிறது எனலாம். பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடியவராக சேக்கிழார் இருந்தாலும் அவரும் தேமதுரத் தமிழைத் தமது இதயத்தில் இருத்தி வைத்திருந்தார் என்பதும் நோக்கத்தக்கது. முழுக்க முழுக்க தமிழ்மரபு சார்ந்த சூழலையும், கதையினையினையுமே அவர் பெரியபுராணத்துக்காக எடுத்திருக்கிறார். அப்படியானவர் அம்மையாருக்காகவே காரைக்கால் அம்மையார் புராணம் அமைத்தாரோ தெரியவில்லை. தமிழை விரும்பியவர் தமிழை விரும்பிய அம்மையை; இறைவனே அவரைத் தன் தாய் என்று கூறுமாறு அமைத்தமை மனங்கொள்ளத்தக்கது. தாய் வயிற்றில் தான் எதுவுமே பிறக்க வேண்டும். அந்தத் தாயாக காரைக்கால் அம்மையாரைச் சேக்கிழார் பார்க்கிறார். முழுமையான சைவமும், சிவனின் வழிபாடு என்பதும் காரைக் கால் தாயின் வயிற்றில் தான் பிறந்திருக்கிறது என்னும் கருத்தை யாவரும் மனமிருத்தல் அவசியமானதேயாகும். பிற்காலத்தில் தமிழில் சுவையான இலக்கியங்கள் அமை வதற்கு உரிய பாவினமாக விருத்தமே பொருத்தமாய் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அந்தப் பாவினத்தைத் தேர்ந்தெடுத்துக் கைகாண்டு காட்டிய தமித் தாயாகவே அம்மையார் விளங்குகிறார் என்பதும் தமிழுக்குப் பெருமையல்லவா! அம்மையாரையும் அடியார்களையும் பாட வந்த சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தை விருத்தப்பாவினால் பாடுவதற்கு வழிசமைத்தவரும் காரைக்கால் தந்த தமிழ்ச் செல்லி அம்மையாரே என்பதும் மனங்கொள்ளல் வேண்டும்.

    பின்வந்த அடியார்கள் பக்தியொடு தமிழையும் இணைத்திட அம்மையாரே முதலாசான். திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகத்தின் இறுதிப்பாடலில்

    “காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே “

    என்று தமிழினை முன்னிலைப்படுத்துகின்றார். இதனைப் பின்பற்றியே சம்பந்தப்பெரு மானும் “நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்கிறார். மற்றைய அடியார்களும் தமிழைச் சேர்த்துச் சொல்லுவதும் நோக்கத்தகது.

    அத்துடன் அமையாது தமிழின் சுரங்களையும், வாத்தியங்களையும் கூட காட்டி நிற்கிறார் அம்மையார்,

    துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
    உழை இளி ஓசை பண் கெழுமப்பாடிச்
    சச்சரி கொக்கரி தக்கை யோடு
    தகுணி தந்துந்தபி தாளம் வீணை
    மத்தளம் கரடிகை வன்க மென்தோல்
    தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
    அத்தனை விரவினொடு ஆடும் எங்கள்
    அப்பன் இடம் திருவாலங் காடே

    அழலாட அங்கை சிவந்ததோ! அங்கை
    அழகால் அழல் சிவந்தவாறோ! – கழலாட
    பேயோடு கானில் பிறங்க அனலேந்தித்
    தீயாடுவாய் இதனைச் செப்பு

    சுரங்களை, வாத்தியங்களைக் காட்டிய அம்மையார் இறைவனின் திருநடனத்தையும் அவனின் ஒவ்வொரு அம்சத்தையுமே பக்தியினைக் கலைநயத்துடன் இணைத்து காணுவது நோக்கத்தக்தக்கது. “அம்மையே” என்று அழைத்தவுடன் அவரிடம் அம்மையார் வேண்டும் பாங்கிலும் ஆடற்கலையினை வலியுறுத்தி தன்னுடைய வேண்டு கோளினை முன்வைப்பதும் நோக்கத்தக்கது.

    இறவாத இன்ப அன்பு
    வேண்டிப்பின் வேண்டு கின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும்
    வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
    அறவாநீ ஆடும் போதுன்
    அடியின்கீழ் இருக்க என்றார்

    பிறவாமையினை வேண்டும் நிலையிலும் – அப்படி ஒரு பிறவியானது வாய்க்குமானால் ஆண்டவனே உன்னயென்றுமே மறவாமலும் இருக்க வேண்டும் அது மாத்திரமல்ல – நீ ஆட வேண்டும்! நீ ஆடுவதை உன் அடியின் கீழ் இருந்து பார்க்க வேண்டும். தமிழிலே மகிழ்ந்து நான் பாடவும் வேண்டும். என்று வேண்டி நிற்கும் காரைக்கால் தந்த தமிழ்ச் செல்வியை ஆண்டவன்  “அம்மையே” என்று அழைத்தமை மிகவும் பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

    Share
  • அகவை நூறு கண்ட சஞ்சிகை

    அகவை நூறு கண்ட சஞ்சிகை

    சக்தி சக்திதாசன்

    “ரீடர்ஸ் டைஐஸ்ட்” எனும் பெயர் அடிபடாத நாடுகள் இல்லை என்றே கூறலாம். தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு வாசகர்கள் மத்தியில் ஒரு பிரபலமான இடத்தை வகித்து வரும் ஒரு ஊடக சஞ்சிகையாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” ஐ நாம் காணக்கூடியதாக உள்ளது.

    நான் ஒரு பள்ளி மாணவனாக ஈழத்தில் வலம் வந்த போது என் தந்தையின் வழக்கமான வாசிப்புச் சஞ்சிகைகளில் ஒன்றாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” இருந்தது என்பதை நான் நினைவு கூர்கிறேன். அவரது பரிந்துரைப்பிலும், ஊக்குவிப்பிலும் நானும் ” ரீடர்ஸ் டைஐஸ்ட்” சஞ்சிகையை அவ்வப்போது அப்போதே படித்து வந்தும் இருக்கிறேன். அதிலுள்ள துணுக்குகள் என்னை மிகவும் அதிகமாகக் கவர்வதுண்டு. அது தவிர பலர் எழுதும் தமது வாழ்வியல் அனுபவங்களும் கூட மிகவும் ஆச்சர்யமூட்டுபவையாக இருக்கும்.

    அந்தச் சஞ்சிகையின் ஆக்கங்களின் ஆழத்தை நான் எனது 19 வயதில் லண்டன் வந்தபோது என்னால் முழுமையாக உணரக்கூடியதாக இருந்தது. எப்படி என்கிறீர்களா ?

    நான் இலண்டன் வருவதற்கு முன்னால் ஈழத்தை விட்டு வெளிநாடு ஒன்றுக்குமே சென்றிராத என் தந்தை இலண்டன் வாழ்வு முறைகளைப் பற்றியும். இலண்டன் வாழ்வின் சில நடைமுறை வழக்கங்களையும் எனக்கு அறிவுரையாகக் கூறினார். அப்போது அவரின் அறிவுரைகளை அப்போதைய வாலிபத் துடுக்கின் நிமித்தம் அக்கறையுடன் நான் எடுத்துக் கொள்ளவில்லை.

    என்னே அதிசயம் ?

    இலண்டனில் நான் பார்த்த நடைமுறைகளை அப்படியே என் தந்தை விபரித்திருந்தது என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. பின்பு நான் ஈழத்திற்கு விடுமுறையில் சென்றிருந்தபோது இது பற்றி நான் வினவியபோது தனக்கேயுரித்தான புன்னகையுடன் அனைத்தும் தான் ” ரீடர்ஸ் டைஐஸ்ட் ” பல வருடங்களாக வாசித்து வருவதனால் அறிந்து கொண்டது என்று விளக்கமளித்தார்.

    1922 ம் ஆண்டு முதலாம் உலக மகாயுத்தத்தில் காயமடைந்திருந்த அமேரிக்கர் ௶” ட்வீட் வாலேஸ் (DeWitt Wallace ) ரென்பவரின் சிந்தையில் உதித்ததே இந்த “ரீடர்ஸ் டைஐஸ்ட் ” எனும் சஞ்சிகையாகும்.

    பல சஞ்சிகைகளில், கட்டுரைகளில் வந்த சுவையானவற்றைத் தொகுத்துக், சிலவற்றை மீண்டும் தனது பாணியில் எழுதியும் ஒரே சஞ்சிகையில் கொண்டுவர அவர் எண்ணியதன் விளைவாகவே அகவைகள் நூறுக்கு முன்பு ” ரீடர்ஸ் டைஐஸ்ட் ” எனும் இந்த சுவையான சஞ்சிகை உதயமாயிற்று.

    தனது அரசியல் நிலைப்பாடாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” பழமைவாத (Concervative) க்கு ஆதரவாகவும், மற்றும் கம்யூனிசத்துக்கு எதிரான நிலைப்பாட்டையுமே கொண்டிருந்தது. இந்தச் சஞ்சிகையின் மூலம் வருடமொன்றுக்கு 5000 டொலர்கள் ஈட்ட முடியும் என்றே டாவீட் வாலெஸ் அவர்கள் எண்ணினார் எனினும் 1929ம் ஆண்டில் ஆச்சரியமளிக்கும் வகையில் 900000 டொலர்கள் ஈட்டினார் என்பதும் சுமார் 290000 சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது என்பதும் வரலாற்றுப் பதிவாகும்.

    இச்சஞ்சிகையின் முதலாவது சர்வதேச பதிப்பு ஐக்கிய இராச்சியத்தில் 1928ம் ஆண்டு பதிவிடப்பட்டது.

    இச்சஞ்சிகையின் 40வது வருட பூர்த்தியின்போது சுமார் 40 நாடுகளில் சர்வதேச பதிப்புகளும், 13 மொழிகளில் 29 மில்லியன் விநியோகத்தை எட்டியது.

    பல தசாப்தங்களாக இச்சஞ்சிகையின் ஒவ்வொரு பதிப்பிலும் 30 பதிவுகள் இடம்பெறுவது வழக்கம்.

    இவற்றுள்

    • அதிசயமான துணுக்குகள் ( Amusing Anecdotes )

    • சொந்த அனுபவங்கள் ( Personal Glimpses )

    • சீருடையில் நகைச்சுவை ( Humor in Uniform )

    • ஐக்கிய அமெரிக்காவில் வாழ்க்கை ( Life in these United States )

    • நிஜ வாழ்க்கை நாடகங்கள் (Drama in Real Life )

    என்பன போன்றவை மிகவும் குறிப்பிடத் தக்க பதிவுகளாகும்.

    “ரீடர்ஸ் டைஐஸ்ட்” படிக்காதவர்கள் அல்லது அதைப் பற்றி அறியாதவர்கள் மிகவும் சொற்பம் என்றே சொல்ல வேண்டும். ஒரு நாட்டுக்கு போகாமல் அந்நாட்டைப் பற்ரிய வாழ்வு முறையை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இச்சஞ்சிகையில் கட்டுரைகளும், துணுக்குகளும் இடம் பெறுவதே இச்சஞ்சிகையின் வெற்றிக்குக் காரணமாகிறது.

    இன்றைய இலத்திரனியல் ஊடக காலத்தில் கூட இணையத்தளம் வாயிலாக தனது செல்வாக்கை இச்சஞ்சிகை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது என்பது இதன் வாசகர்களின் ரசிப்புத் தன்மையின் ஆழத்தைச் சுட்டிக் காட்டி நிற்கிறது.

    நூறாவது அகவையில் கால் பதித்து தனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இச்சஞ்சிகை இது பொன்று இன்னும் பல நூறாண்டுகள் தனது தனித்தன்மையை இழந்து விடாமல் நிலைத்திருக்கும் என்பது என் போன்ற எழுத்துப் பித்தர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 45

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 45

    -மேகலா இராமமூர்த்தி

    ”சீதையை விடுதலே நமக்கு வெற்றி” என்றுரைத்த வீடணன் சொற்களைக் கேட்ட இராவணன், தன் கரங்களைக் கோத்துக்கொண்டு, தோளும் மார்பும் குலுங்க நகைத்தவாறே,

    ”ஏற்கனவே ஊனமான வில்லை முறித்து, ஓட்டை மரத்திலே அம்புசெலுத்தி, கூனிசெய்த சூழ்ச்சியால் அரசை இழந்து, உயர்ந்த மரங்கள் நிறைந்த வனமடைந்து, நான் செய்த செயலால் மனைவியை இழந்து இன்னுயிரைச் சுமந்து திரியும் ஒரு மானுடனின் வலிமையை உன்னையல்லாது மதித்தவர் வேறு யாருளர்?” என்றான் பரிகாசத்தோடு.

    ஊனவில் இறுத்து ஓட்டை மாமரத்துள் அம்புஓட்டி
    கூனி சூழ்ச்சியால் அரசுஇழந்து உயர்வனம் குறுகி
    யான் இழைத்திட இல்இழந்து இன்உயிர் சுமக்கும்
    மானுடன்வலி நீஅலாது யார்உளர் மதித்தார்.
    (கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6179)

    இராமன் வில்லை முறித்ததும், மராமரங்களைத் துளைத்ததும் அரிய செயல்கள் என்று பலரும் புகழ, அவற்றை இங்கே கேலிசெய்து பேசுகின்றான் இராவணன். இச்செயல் இராமன்பால் அவனுக்குள்ள வெறுப்பைப் புலப்படுத்துகின்றது.

    இராவணனின் இகழ்ச்சியான பேச்சுக்களைத் தொடர்ந்து வீடணன் மீண்டும் அவன் அடிதொழுது நல்லுரைகளை எடுத்துக்கூறத் தொடங்க அவற்றைப் பொருட்படுத்தாது,

    ”கொடுஞ்சினத்தை உண்டாக்கும் போரில் பங்குகொள்வதற்கு நீ எங்களுடன் புறப்பட வேண்டாம்! மதில்சூழ்ந்த மாநகரான இலங்கையில் நிறைய இடமிருக்கின்றது. நீ இங்கேயே தங்கியிரு! அஞ்சாதே! அஞ்சாதே!” என்று சொன்ன, விடத்தினும் கொடியோனான, இராவணன் தன்னருகிலிருந்த அமைச்சர் முதலியோரின் முகத்தைப் பார்த்துக் கைகொட்டி இடி இடித்ததுபோல் நகைத்தான்.

    வெஞ்சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா
    இஞ்சி மாநகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி
    அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி
    நஞ்சின் வெய்யவன் கைஎறிந்து உரும் என நக்கான். 
    (கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6187)

    அண்ணன் இராவணனின் எள்ளலைக் கண்டு மனங்கலங்காத இளவல் வீடணன், இராவணனுக்கு அறிவுகொளுத்தும் பொருட்டுத் திருமாலை எதிர்த்தழிந்த இரணியன் கதையைச் சொல்லத் தொடங்குகின்றான். அதுவே கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ள ’இரணியன் வதைப் படலம்.’

    யுத்த காண்டத்திலுள்ள படலங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வகையிலேயே அமைக்கப்பட்டிருக்க, இரணியன் வரலாற்றைச் சொல்லும் இரணியன் வதைப் படலம் மட்டும் யுத்த காண்டத்தோடும் இராமன் கதையோடும் தொடர்பின்றி அமைந்திருக்கக் காண்கிறோம்.

    தமிழகத்தின் முதல் திறனாய்வாளராக அறியப்படும் வ.வே.சு. ஐயரும், பல்கலைச்செல்வர் முனைவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரும் இப்படலம் காப்பியத்தோடு தொடர்பின்றித் தனித்து நிற்பதையும், 176 பாடல்களில் விரிவாகப் பாடப்பட்டுள்ள இது காப்பியத்துள் மற்றொரு குறுங்காப்பியமாகப் பொலிவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    அறிஞர்கள் பலரும் பொருத்தமற்றதாகச் சுட்டுகின்ற இந்தப் படல அமைப்பு காப்பியம் படைத்த கவிச்சக்கரவர்த்திக்குத் தெரியாமல் இருக்குமா? தெரிந்தேதான் அவர் இதனைப் படைத்து இடையில் இணைத்திருக்கவேண்டும்.

    அதற்கான காரணங்களாகக் கம்பனில் தோய்ந்த பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் முன்வைப்பவை:

    ”பக்தி இயக்கத்தின் எழுச்சிக்குப் பின்பு கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஆதிசங்கரர், அத்வைதம் என்ற கொள்கையையும் உபநிடதக் கருத்துக்களையும் தமிழகத்தில் பரப்பினார். அறிவுவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அவ்வியக்கம் சண்டமாருதம்போல் தமிழகத்தில் தன் வேகத்தைக் காட்டியதால் பக்தி இயக்கத்தின் பலம் குறையலாயிற்று.

    பக்திநெறியில் திளைத்தவரான கம்பருக்கு அவ் அத்வைதக் கோட்பாடுகளில் உடன்பாடில்லை. அதனாலேயே பக்தியின் மகிமையை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும் சங்கரர் உயர்த்திப் பிடித்த உபநிடதங்களிலும் பக்தியைப் போற்றும் அம்சங்கள் இருப்பதைப் பறைசாற்றும் வகையிலும் இரணியன் வதைப் படலத்தை உள்நுழைத்திருக்க வேண்டும்” என்கிறார்.

    இரணியன் வதைப் படலம் மூலநூலான வான்மீகத்தில் இல்லை.

    இனிக் கம்பகாதையில் மற்றொரு குறுங்காப்பியமெனக் காட்சிதரும் இரணியன் வதைப் படலத்தின் கருத்துக்களை நாமும் சுருக்கமாக அறிந்துகொள்வோம்.

    மாவீரனான இரணியனின் இயல்பையும் ஆற்றலையும் விளக்கி இப்படலம் தொடங்குகின்றது.

    மும்மூர்த்திகளும் தம் தொழில்களை முடிக்க இயலாதவர்களாய் ஆயினர்; யோகியர் தமக்குரிய பதவிகளை இழந்தனர். தேவரும் இரணியனின் பாதங்களை அல்லால் வேறொன்றையும் பூசிக்கமாட்டார் எனும்படி வாழ்ந்தான் இரணியன்.

    பெரும் புறக்கடலில் விதிப்படி நீராடிமுடித்துப் பின் நாகலோகத்து மகளிருடனே இனிய (காலை) உணவினை உண்டு, எல்லோராலும் போற்றப்படும் இந்திரலோகத்தில் பகல்பொழுதைக் கழித்து, இரவுநேரத்தில் பிரமனின் உலகமான சத்தியலோகத்தில் கொலுவீற்றிருப்பான் இரணியன் என்று அவனுடைய அன்றாட நிகழ்வுகளை விளக்கி நம்மை வியக்கவைக்கின்றார் கம்பர்.

    மரபின்மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி
    அரவின் நாட்டிடை மகளிரோடு இன்அமுது அருந்தி
    பரவும் இந்திரன் பதியிடைப் பகற்பொழுது அகற்றி
    இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6193)  

    தான் பெற்ற வரத்தால், பெண்ணாலோ ஆணாலோ அலியாலோ உயிருள்ளவற்றாலோ உயிரற்றவற்றாலோ மண்ணிலோ விண்ணிலோ மரிக்கமாட்டான் இரணியன்; தேவராலோ இயக்கராலோ அரக்கராலோ மும்மூர்த்திகளாலோ அவனுக்கு மரணமில்லை; ஐம்பூதங்களாலும் அவன் ஆயுளுக்கு பாதிப்பில்லை; யாரிடும் சாபமும் அவனை ஒன்றும் செய்யாது.

    வீட்டுக்கு உள்ளேயோ வெளியேயோ சாகமாட்டான்; தெய்வப் படைக்கலங்கள் எவையும் அவனைக் கொல்லும் ஆற்றலற்றவை; அவனுக்கு இரவிலும் மரணமில்லை; பகலிலும் மரணமில்லை; கூற்றுவனாலும் அவனுயிரைக் கவரமுடியாது. மந்திரங்களால் அவனைக் கொல்லவியலாது; அவனைப் பெற்ற தந்தையே அவனைக் கொல்ல நினைத்தாலும் அது நடவாது!

    இத்துணை விவரமாக வரம் பெற்றவனை வெல்லவும் கொல்லவும் ஆற்றல் பெற்றவர் யார்? ஒருவருமில்லை!

    எனவே, அனைத்து உலகங்களுக்கும் தானே இறைவன் எனும் அகந்தையோடு ஆட்சி செலுத்திவந்தான் இரணியன்.

    அந்த இரணியனுக்கு அரியதோர் மைந்தன் இருந்தான். அவன் பெயர் பிரகலாதன். அறிவிற் சிறந்தவனாக விளங்கிய அவனுக்கு வேதங்களைக் கற்பிக்க அந்தண ஆசிரியன் ஒருவன் இரணியனால் நியமிக்கப்பட்டான்.

    வேதங் கற்பிக்க வந்த அந்த ஆசிரியன் மாணவன் பிரகலாதனை “இரணியாய நம” என்று ஓதுமாறு பணிக்க, காதுகளைப் பொத்திக்கொண்ட பிரகலாதன், ”அறிவில் மூத்தவரே! இப்பெயரை உச்சரிப்பது நன்னெறியன்று! வேதத்தின் முடிவான உபநிடதங்கள் உரைக்கும் மெய்ப்பொருளின் பெயரான “ஓம் நமோ நாராயணாய!” எனும் பெயரே நாம் உச்சரிக்க வேண்டியது” என்றுரைத்து அப்பெயரை ஓதினான்.

    இதனால் அச்சமுற்ற அவ் அந்தண ஆசிரியன், ”கெடுமதியோனே! இரணியனின் பெயரைக் கூறாமல் வேறு பெயரைக் கூறினால் என்னையும்… ஏன்…உன்னையும் இரணியன் தண்டிப்பானே! இருவருக்கும் நீ கெடு சூழ்ந்தாயே” என்று பிரகலாதனை ஏசினான்.

    அதனை மறுத்த பிரகலாதன், ”என்னையும் உம்மையும் என் தந்தையையும் உய்யச் செய்யும் மந்திரத்தையே நான் மொழிந்தேன். இதில் என்ன குற்றம் உள்ளது?” என்று மறுமொழி பகர்ந்தான்.

    கோபங்கொண்ட ஆசிரியன், ”தேவர்களுக்கும் அவர்களுக்கு முதல்வர்களான அயன் அரி அரன் ஆகியோருக்கும் முதன்மை பெற்றவனாக விளங்குகின்றான் உன் தந்தை. ஆகவே, அவன் திருநாமத்தை உச்சரிப்பவனாக அந்தணனாகிய நான் உள்ளேன்; என்னிலும் அதிகம் அறிந்தவனோ நீ?” என்று முனிந்து மொழிய, மீண்டும் ஆசிரியனின் சொற்களை மறுத்த பிரகலாதன்,

    ”அந்தணர் ஓதும் வேதங்களெல்லாம் யாரைச் சிறப்பித்துப் பேசுகின்றனவோ, கற்றுணர்ந்த சான்றோர்கள் நினைந்துரைப்பது எப்பொருளையோ, அதுவே உபநிடதங்களும் முடிந்த முடிபாகக் கூறும் பொருளாகும். அதனை உணர்ந்த தேவரும் முனிவரும் செப்பும் அப்பேரைச் சொல்லாது தவிர்த்துச் சொல்லுவதற்கு வேறொன்றும் உளதோ?” என்று கேட்டான்.

    ஆரைச் சொல்லுவது அந்தணர் அருமறை அறிந்தோர்
    ஓரச் சொல்லுவது எப்பொருள் உபநிடதங்கள்
    தீரச் சொல்பொருள் தேவரும் முனிவரும் செப்பும்
    பேரைச் சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6217)

    ’உபநிடதம்’ என்ற சொல்லை முதன்முதலில் தமிழில் பயன்படுத்தியவர் கம்பரே என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது. உபநிடதம் என்ற சொல்லை மட்டுமல்லாது அவற்றின் சாரத்தையும் இப்படலத்தில் வடித்துத் தந்துள்ளார் கம்பர் என்பதனைச் சான்றுகளோடு விளக்கியுள்ளனர் கம்பனில் ஆழங்காற்பட்டவர்களான பேராசிரியர் அ. பாண்டுரங்கனும், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனும்.

    இரணியன் கதைக்கு வருவோம்!

    பிரகலாதனின் உறுதியான மறுமொழியைக் கேட்ட ஆசிரியன், இனி இவனிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்து இரணியனிடம் சென்றான். ”நான் கற்றுத்தர விரும்பிய வேதங்களை உன் மகன் கற்றுக்கொள்ளவில்லை; அவன் வேறொரு நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறவே, ”அது என்ன?” என்று கேட்டான் இரணியன். ”அதனை நான் என் நாவால் சொல்லமாட்டேன்” என்று ஆசிரியன் மறுத்துவிடவே, பிரகலாதனை அழைத்துவரச் செய்தான் இரணியன்.

    பிரகலாதன், ”ஓம் நமோ நாராயணாய” எனும் அத்திருவெட்டெழுத்தின் சிறப்பினை இரணியனுக்கு விரித்துரைத்து, ”என்னுயிர்க்கும் உன்னுயிர்க்கும் இம்மன்னுயிர்க்கும் உறுதிபயப்பது இம் மந்திரமே”  என்று சொல்ல கடுங்கோபம் கொண்டு விழிகளில் தழலெழ நோக்கிய இரணியன்,

    ”மண்ணுளோரும் விண்ணுளோரும் தொழுவது என்னிரு கழலை; துதிப்பது என் பெயரை; இவ்வாறிருக்க நீ இந்தப் பெயரை அறிந்தது யாரிடம்?

    உலகு ஏழையும் தன் வயிற்றினுள் அடக்கும் ஆற்றலாளனான என் இளவல் இரணியாட்சனைப் பன்றி வடிவெடுத்து வந்து தந்தங்களால் குத்திக் கொன்றவன் பெயரைச் செப்பவோ உன்னை நான் மகனாய்ப் பெற்றேன்?

    போகட்டும்! அறிவு நிரம்பப் பெறாத சிறுவனான உன் பிழை பொறுத்தேன்! நம் பகைவரின் புகழ்பேசும் மொழிகளை இனிப் புகலாதே! உன் ஆசிரியன் சொல்லித்தருவனவற்றைக் கற்றுக்கொள்!” என்று ஆணையிட்டான் இரணியன்.

    அப்போது திருமாலின் பெருமைகளைத் தன் தந்தையிடம் உரைக்கத் தொடங்குகின்றான் பிரகலாதன்.

    ”அரிய வேதங்களின் உச்சியில் அமைந்த மெய்ப்பொருள் எனத் தெளிந்துரைத்த பரதத்துவமாக விளங்குபவன் அவன்; தம்மை உணர்ந்த ஞானியர் அதனை அறிவார்கள்; வேறுவேறாகப் பிறழ உணரும் பித்தர்கள் சிலர் உளர்; ஞானியரும் யோகியரும் அடையத்தக்க வீடுபேற்றைப் பெறாதவர்கள் அவர்கள்.

    அந்தப் பரம்பொருளின் சிறப்பை எந்தப் பிரமாணங்களாலும் அளந்தறிய இயலாது; சொல் பொருள் இவற்றின் துணைகொண்டு இத்தகையவன் என்று கூறற்கியலாதவன் அவன்; அவனது மெய்ந்நிலையைக் கண்டவரில்லை; எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமுமாக உள்ளான் அவன்; எங்கும் நிறைந்து விளங்குபவன் அவன்.

    இத்தகு பேரியல்பு வாய்ந்த இறைவனை இகழ்ந்துரைத்துத் தவபலத்தால் எய்திய செல்வங்களையும் நற்பெயரையும் வாணாளையும் தொலைத்து உயிரையும் இழக்கப் போகின்றாயே என்று அஞ்சியே அப்பரமனின் திருநாமத்தை நான் வாழ்த்தினேன்” என்றான் பிரகலாதன்.

    பிரகலாதனின் மொழிகளைக் கேட்டுச் சினத்தின் உச்சிக்கே சென்ற இரணியன், அவனைக் கொன்றுவிடுமாறு தன் ஏவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

    அரசன் ஆணையை ஏற்ற ஏவலர்கள் பிரகலாதனை வாளாலும் மழுவாலும் தாக்கினர். திருமாலைத் தியானித்தபடியே இருந்த அவனை அவ் ஆயுதங்கள் வீழ்த்தவில்லை; அடுத்துப் பிரகலாதனைத் தீக்குழிக்குள் தள்ளினர்; ”அரி” என்று உச்சரித்த அவனை எரி தீண்டவில்லை; விடப் பாம்புகளால் கடிக்க வைத்தபோது அவற்றின் விடம் அவனைத் தாக்கவில்லை; யானையின் காலால் அச்சிறுவனை இடறவைக்க முயன்றபோது யானை அவனை வணங்கிவிட்டுச் சென்றுவிட்டது.

    தன் முயற்சிகள் ஏதும் பலிக்காதது கண்ட இரணியன், பிரகலாதனை மலையோடு சேர்த்துக்கட்டிக் கடலில் வீசச் செய்தான். அந்த மலை பிரகலாதனுக்குப் புணைபோல் ஆகி அவனைக் கரைசேர்த்ததே ஒழியக் கடலில் மூழ்கடிக்கவில்லை. கடுமையான நஞ்சை அந்தப் பிஞ்சுப் பிள்ளையின் வாயில் ஊட்டியும் அவன் சாகவில்லை.

    இந்தக் கொலை முயற்சிகள் அப்பர் பெருமானைக் கொல்ல மகேந்திரவர்ம பல்லவன் மேற்கொண்ட முயற்சிகளை ஒத்திருக்கக் காண்கின்றேன். ”நமச்சிவாய” மந்திரத்தின் துணையோடு அவர் அம்முயற்சிகளை வென்றதுபோல், ”நாராயண” மந்திரத்தின் துணையால் பிரகலாதன் வெல்கிறான்.  

    எதிலும் பிரகலாதன் சாகாதது கண்ட இரணியன், ”நானே என் மகனைக் கொல்வேன்” என்றெழுந்தான்.

    தன்னைக் கொல்லவந்த தந்தையை வணங்கிய பிரகலாதன், ”எந்தாய்! என்னுயிரைக் கவர நினைப்பாயானால் அஃது உன் வசப்பட்டதன்று! உலகைப் படைத்த அந்தப் பரமன் வசப்பட்டது” என்றான்.

    ”உலகைப் படைத்தவர் யார்? என்னைத் தொழுது நிற்கும் மும்மூர்த்திகளா? அந்த மூவரும் அல்லரென்றால் முனிவர்களா? என்னிடம் தோற்றோடிய தேவர்களா?” என்று சீற்றத்தோடு கேட்டான் இரணியன்.

    ”அத்தா! உலகினையும் உலகுவாழ் உயிர்களையும் படைத்தவன் அந்தத் திருமால்; உன் இளவல் பொற்கண்ணனின் (இரணியாட்சன்) உயிரை மாய்த்த அந்தத் தாமரைக் கண்ணான், நீ காணுதற்கு அரியவன்; ஆனால், என் கண்களுக்கு அவன் எங்குமுள்ளவன்” என்றான் பிரகலாதன்.

    அதுகேட்டு ஏளனமாய்ச் சிரித்த இரணியன், ”உன் இறைவன் எங்குமுள்ளான் என்கிறாய்; அந்த வஞ்சகன் இந்தத் தூணிலுள்ளானா? அப்படியானால் அவனை எனக்குப் புலப்படும்படிக் காட்டு” என்றான்.

    ”ஆம், ஒரு சாண் அளவுடைய பொருளிலும் அவன் இருப்பான்; பிரிக்கவியலாதபடி ஒன்றுபட்ட ஓர் அணுவை நூறு பகுதிகளாகப் பிரித்த நுண்பகுதியிலும் இருப்பான்; மிகப் பெரிய மலையிலும் இருப்பான்; இங்கு நின்ற இந்தத் தூணிலும் இருப்பான்; நீ சொன்ன சொல்லிலும் இருப்பான்; எங்குமவன் நிறைந்திருக்கும் தன்மையை நீ விரைவில் காண்பாய்” என்றான் பிரகலாதன். ”நல்லது” என்றுகூறிவிட்டு மீண்டும் ஏளனமாய்ச் சிரித்தான் இரணியன்.

    சாணினும் உளன் ஓர்தன்மை அணுவினைச் சதகூறு இட்ட
    கோணினும் உளன் மாமேருக் குன்றினும் உளன் இந்நின்ற
    தூணினும் உளன் நீசொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை
    காணுதி விரைவின் என்றான் நன்றுஎனக் கனகன் நக்கான்.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6312)

    தன் ஏளனச் சிரிப்பை உடனடியாய் நிறுத்திவிட்டு, ”நீ சொன்னபடி இந்தத் தூணில் உன் இறைவனைக் காட்டாவிட்டால் யானையை வலியசிங்கம் பற்றிக் கொல்வதுபோல் இப்போதே உன்னைக் கொன்று உன் குருதியைக் குடித்து உடலையும் தின்பேன்” என்று பிரகலாதனிடம் சினந்துரைத்தான் இரணியன்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • மண்மகிழ, பெண்மகிழ வேண்டும்!

    மண்மகிழ, பெண்மகிழ வேண்டும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்.” மண்மகிழப் பெண்மகிழ வேண்டும். பெண்ணைத் தெய்வம் என்கிறோம். மண்ணை   பூமித் தாய் என்கிறோம். ஓடிவரும் நதிகளுக் கெல்லாம் பெண்ணின் பெயரையே சூட்டி நிற்கிறோம். பிறந்த நாட்டைத் தாய் நாடு என்கிறோம்.  பேசும் மொழியைத் தாய் மொழி என்கிறோம். பெண்ணின் பெயரைப் பெரிதும் மதித்து இவற்றை யெல்லாம்  செய்கின்ற  சமூகமானது பெண்மையை எப்படிப் பார்க்கிறது? அந்தப் பெண்மைக்கு எந்தளவு உயர்வினைக் கொடுக்கிறது? அந்தப் பெண்மையின் நிலைதான் என்ன?   இவை யெல்லாம் கேள்விகளாய் எழுந்து நிற்கின்றன!

    உடல் அளவில் உறுதி மிக்கவனாக ஆண் விளங்கினாலும் மன வளவில் உறுதி மிக்கவளாகப் பெண்ணே விளங்குகிறாள். இதனால்த்தான் ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் னாலும் ஒரு பெண் இருப்பாள்‘ என்று சொல்லப்படுகிறது. அவள் – தாயாக,   தாரமாக,   சகோதரமாக, மகளாக, தோழியாகக் கூட அமைந்து விடலாம். வீட்டின் அமைதியும், ஆனந்தமும் வெளியில் வியாபித்து சமூகத்தையே சாந்திக்கு ஆட்படுத்தும் ஆற்றல் நிச்சயம் பெண்மையின் கைகளிலேதான் தங்கியிருக்கிறது. அந்த அளவுக்கு பெண்மை என்பது வாழ்க்கையின் பெரு வெளிச்சம் எனலாம். அந்தப் பெரு வெளிச்சத்தை அளித்து நிற்கும் பெண்ணை பெண்மையைப் போற்றும் தினமாகத்தான் “சர்வதேச மகளிர் தினம்” முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது எனலாம்.

    பெண்களைப் பற்றிப் பெருமையாய் பேசும் சமூகத்தில் பெண்களின் ஆரம்ப கால நிலைமைகள் எப்படி அமைந்திருந்தன? பெண்களுக்கு இந்தச் சமூகம் குறிப்பாக ஆணி னம் எந்த ளவுக்கு சுதந்திரத்தை வழங்கி வந்திருக்கிறது? இவையெல்லாம் வரலாறாகி நீண்டு நிற்கிறது என்பதுதான் இதற்குப் பொருத்தமான விடை எனலாம்.

    தடைகள் பலவற்றைத் தகர்த்தெறிந்து, தனித்துணிவுடன் களத்தில் இறங்கி, ஆணுக்குச் சமமான நிலை பெண்களுக்கும் உண்டு – பெண் களுக்கும் இருக்க வேண்டும் என்று போராடிய பெண்களின் போராட்டம் வெற்றியைத் தொட்ட நாளே “பெண்கள் தினமாக” இன்று உலகம் முழுவதும் பரவி நிற்கிறது எனலாம். இவ்வாறான தினம் கொண்டாட் டம் அல்ல ! போராடிப் பெற்ற தினம் என்பதே மிகவும் பொருத்தம் உடையதெனலாம்.!

    “பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலைமையைப் பொறுத்தே நிற்கும்” என்னும் திரு. வி. கவின் கூற்று யாவரும் மனமிருத்த வேண்டியதே.

    இன்று “சர்வதேச மகளிர் தினம்” உலகெங்கும் வரவேற்புப் பெற்று பெண்களின் பெருமை விதந்து பேசப்படுகின்ற தென்றால் அதற்கு வித்தாக விளங்கியவர் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு கிராமத்தில் பிறந்த ‘கிளாரா ஜெட்கின்‘ என்னும் பெண்மணியாவார். இவர் இளம் வயது முதலே பெண்களின் உரிமை, பெண்களின் நலன், யாவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தார் எனலாம். பெண் தொழிலா ளர்களின் உரிமையை, பிரச்சினைகளை, மனமிருத்தி – உலகெலாம் ஒலிக் கும்படி செய்தமையால் – பெண்களின் இயக்கங்களுக்கும் , அவர்களின் செயற்பாடுக ளுக்கும் பெரும் உந்ந்துதலை அளித்தது எனலாம்.

    பெண்கள் பற்றிய உரிமைப் போராட்டங்கள் என்னும் வகையில் 1789 இல் பாரீஸில் சமத்துவத்துவத்துக்காக பெண்கள் எழுந்தனர். பெண்கள் தொடர்பான வேலை நேரங்கள், பெண்களின் வாக்குரிமை, பெண் அடிமை, விடுதலை, என்னும் கோஷங்களுடன் பேரெழுச்சி யாய் அப்போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் முடிவில் பெண்களின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அரசு ஒப்புதல் வழங்கியது. வழங்கிய அந்த நாள் மார்ச் 8 – 1848 ஆகும்.இந்தத் திகதியும் மாதமும் “மகளிர்க்கு உரிய தினம்” என்னும் நிலைக்கு இட்டுச் செல்ல ஏதுவாக அமைந்தது எனலாம்.

    பிரான்சில் பெண்களின் எழுச்சிபோல் 1857 இல் அமெரிக்காவில் நியூயோர்க்கிலும் பெண் களின் உரிமைக்குரல் எழுப்பப்பட்டது. பெண்கள் ஒருமித்துப் போராடினால்த் தான் அவர்க ளுக்கான உரிமைகள் கிடைக்கும் என்னும் எண்ணம் பரந்து விரிந்தது.

    “சர்வதேச மகளிர் தினத்துக்கு” வித்திட்ட – கிளாரா ஜெட்கின் தலைமையில் 1919 இல் ஹேகனில் அனைத்துலாகப் பெண்களுக்கான மாநாடு கூடியது. இம்மாநாட்டின் தொடர்பாக ‘சர்வதேச மகளிர் அமைப்பு‘ என்பது உருவாக்கப்பட்டது.   ஜேர்மனி ,   ஆஸ்திரியா,    டென்மார்க்குடன் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் இந்த அமைப் பின் சார்பில் 1911 இல் மார்ச்சு மாதம் 19 ஆந் திகதி முதல் ‘சர்வதேச மகளிர் தினத்தைக்” கொண்டாடினார்கள். பெண்கள் பல நாடுகளிலிருந்து கலந்து கொண்ட இவ்வரலாற்று வேளையில்தான் – பெண்களுக்கான வாக்குரிமையினை அளிப்பதற்கு மன்னன் லூயி ஸின் இணக்கம் தெரிவிக்கப் பட்டது. இது இடம் பெற்றது மார்ச் மாதம் 8 ஆந் திகதியே யாகும். பெண்களின் ஒத்துழைப்பால் இவையனைத்தும் நிகழ்ந்த அந்த நாளை “சர்வதேச மகளிர் தினமாக” ஆண்டு தோறும் கொண்டாடும் தினமாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    1917 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி ரஷ்சியாவில் சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட் டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை அடுத்து 1921 மார்ச் 8 ஆம் திகதி “சர்வதேச மகளிர் தினமாக” பிரகட னப்படுத்தப்பட்டது.

    ஐக்கிய நாடுகள் சபை 1975 ஆம் ஆண்டினை “சர்வதேச மகளிர் ஆண்டாக” அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 1977 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் “சர்வதேச மகளிர் தினத்தை”  மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் துணிந்த பெண்கள் முழு வீச்சுடன் முனவந்து போராடிப் பெண்களுக்கான பல உரிமைகளை பெற்றெடுத்தார்கள். ஆனாலும் இன்னும்தான் பெண்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்த படியே தான் தொடர்கதையாய் தொடர்கிறது எனலாம்.

    மனித வாழ்விலே பெண்ணின் பங்கு மிக மிக இன்றியமையாதது எனலாம். இதனை எவருமே மறுத்துவிட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட பெண்களை  “பெண்கள்” என்னும் தோற்றத்தையும் அவர்களது உடலையும் வைத்துக் கொண்டு அரங்கேறும் அவலங்கள் சொல்லமுடியாதன.

    பெண்களுக்கு வாக்குரிமை எதற்கு? பெண்களுக்கு பேசும் உரிமை எதற்கு? பெண்களுக்கு வேலைபார்க்கும் உரிமை எதற்கு? பெண் களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல் லும் உரிமை எதற்கு ? பெண்கள் என்றால் திருமணம் செய்ய உதவும் ஒரு மனித உருவம். பிள்ளைகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு இயந்திரம். ஆணுக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு நுகர்வுப் பொருள். இப்படியெல்லாம் எண்ணி பெண்ணினத்தை வதைத்த வரலாறு மறைக்க முடியாத வரலாறாகும். அவற்றை யெல்லாம் உடைத்தெறிந்து போராடி பெண் கள் வந்து நிற்கும் நிலையினை இன்று உலகெங்கும் காணு கிறோம்.ஆனாலும் பெண்க ளுக் கான அச்சம் என்னும் நிலைமட்டும் அகலவே இல்லை எனலாம்.

    பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் பெற்று நிற்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. நாட்டின் ஜனாதி பதியாக, பிரதம மந்திரியாக, உயர்நீதித்துறையின் தலைவராக, அரச பதவிகளில் உயர் நிலையில் இருப்பவர்களாக, தொழில் முனை பவர்களாக, பல்கலைக்கழக துணை வேந்தர்களாக, கல்லூரி முதல்வர்களாக,   பத்திரிகைகளின் பிரதம ஆசியர்களாக இன்று உலகம் முழுவதும் பெண்கள்  மிளிர்ந்து நிற்கிறார்கள் எனலாம். மருத்துவம் , தொழில் நுட்பம், கலைகள் , என்று பெண்களின் ஆளுமை பல்கிப் பெருகி நிற்பதையும் காணுகிறோம்.

    ஆனாலும் பெண்கள் என்னும் படைப்பால் அவர்களை நோக்கும் விதமும், அவர்களை வதைக்கும் விதமும் , சமூகத்தை விட்டு அகலவே இல்லை என்றே எண்ண முடிகிறது.

    பெண்களைப் பொறுத்தவரை சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் எல்லோரையும் போல சமூகநீதி வழங்கப்படவேண்டும். ஆணும், பெண்ணும் சமமென்று பேசப்படுகிறதே தவிர அவர்களது நடை முறை வாழ்வில் கிடைக்காது இருபதால் கிடைத்திடச் செய்திடல் அவசியமாகும். பெண்கள் பொருளாதார ரீதியாகவும், இன சமூகரீதி யாகவும் பாதிக்கப்படும் நிலையினை மாற்றிட முயலுதல் அனை வரதும் தார்மீகக் கடமை யாகும்.பெண்களின் பிரச்சினைகளை அணுகவும், அவற்றை அகற்றிடவும் ஆற்றல் மிக்க அதிகாரிகள் நியமி க்கப்படுதல் அவசியமாகும். காவல்துறையில் கூட பெண்க ளின் நிலை பரிதாபமாகவே காணப்படுகிறது.

    காவல் துறையில் உயர்பதவியில் இருக்கும் பெண்களுக்கே தக்க பாதுகாப்பு இல்லாதிருக்கிறது. மேலதிகாரிகளால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் நிலை இன்றும் காணப்படுகிறது. அதுபோன்று ஏனைய உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கும் – அவர்கள் பெண்கள் என்ற காரணத்தாலேயே அவர்களும் பல மன உழச்சல் களுக்கு ஆளாவதும் – சிலர் மனமுடைந்து தற்கொலை முயற்சிக்கே சென்று விடுவதும் – ஏன்.. தற்கொலையே செய்துவிடுவதையும் காணமுடிகிறது. இவை அனைத்துமே சமூகத்தைவிட்டுக் களையப் பட வேண்டியனவாகும்.

    ” மாதர் தம்மை இழிவு செய்யும்
    மடமையைக் கொளுத்து வோம்
    வைய வாழ்வு தன்னில் எந்த
    வகையினும் நமக்குள்ளே
    ஆண்களோடு பெண்களும்
    சரிநிகர் சமானமாக
    வாழ்வம் இந்த நாட்டிலே “

    “அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம் , கற்பு நிலை யென்றால் இரு சாரா ருக்கும் பொதுவாக்குவோம்” என்று முழக்கமிட்டுப் பெண்ணுரிமை பேசி நின்றான் புரட்சிக்கவி பாரதி. பாரதி வீர முழக் கத்தைப் படிப்பதோடு நின்று விடக் கூடாது. அதனைக் கருத்தில் இருத்தி யாவரும் செய லாக்குதலே மிகவும்  அவசியமானதாகும். தாயாய், தமைக்கையாய், தங்கையாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், பேத்தியாய், வாழ்வில் இணைந்திருக்கும் பெண்ணை – பெண்மையினைக் காப்பது அனைவரதும் தலையாய பொறுப்பு அல் லவா ?

    பெண்ணால் நலன் அடையும் நாங்கள் பெண்களைக் காத்திடுதல் கட்டயமான கடன் அன்றோ! பெண்ணைத் தூற்றுவதும், பெண்ணை இழிவு செய்வதும், பெண்ணை மனமுடையச் செய்வதும், பெண்ணை அடிமை என்று நினைப்பதும், பெண்ணைப் போகப்பொருள் என்றே எண்ணுவதும் பொருத்தமுடையதா! அனைவரும் சிந்திப்போம்! மகளிர் தினம் என்பது ஒரு நாளில் மேடை போட்டு  சொற்பொழி வுகள் பொழிந்து நிற்பதல்ல! வாழ்வின் துணையாக, இணையாக இலங்கிடும் பெண்ணை, பெண் மையைக் காப்பதுதான் நம் அனைவரதும் தலையாய கடமையாகும்.

    அவர்களுடைய உரிமைகள் பேணப்பட வேண்டும். ஏனெனில் உலகெங்கும் சிறந்த பெண்களே உள்ளனர். ஆனால் அவர்களு க்கான அழகான வாழ்க்கை கிடைத்திரு க்கிறதா என்பதே கேள்வியாகி நிற்கிறது எனலாம்! .

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 12

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 12

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    ஏகாபுரம் வெங்கடேசன் அரற்றிய ‘பொல்லா வினையேம்!’- ஒரு பன்முக மதிப்பீடு!

    முன்னுரை

    “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் ‘செய்யுமாறே’” என்றார் திருமூலர். படைப்பிலோ பாட்டிலோ நன்றாகப் படைப்பது, அதற்கு மாறாகப் படைப்பது என்பதெல்லாம் நமக்குப் புரியாத ஒன்று. பாட்டின் தொனி புரிந்தால் போதும். தொடங்கியதில் ஐக்கியமாவதே வாழ்வு. படைப்பின் நோக்கம் உலகம் உருண்டை என்றால் புறப்பட்டவன் புறப்பட்ட இடத்திற்கே சென்றடைவதுதான் நியதி. படைப்பவனைப் புரிந்து கொள்ளுதல். படைப்பவனைப் புரிந்து கொள்ளுங்கால் அவனின் சிறந்த வேறின்மை தானாகப் புரியும். புரிந்ததைப் புகழ்வது புரிந்தவர் கடன். அந்தக் கடனைத்தான் திருமூலர் கூறுகிறார். “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்! அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்’ என்று பாரதி பாடியதில் சமுதாயம் சார்ந்ததொரு நல்வினைக்கு அவரவர் தன்னால் ஆன தனக்கு இயன்ற  தனக்குத் தெரிந்த வகையில் உதவ முன்வர வேண்டும். ‘வாய்ச்சொல்லில் வீரர்’ என்ற ஒரு தொடரை வாழவைப்பதற்காகவே தமிழினம் என்ற நிலை தொடர்ந்து நிலைத்து விடக்கூடாது. ஓய்வு பெற்ற பேராசிரியர் என்ற முறையில் எனக்குத் தெரிந்த வகையில் என்னால் இயன்ற சிறு தொண்டினை என் தமிழினத்திற்காகவும் மொழிக்காகவும் செய்து வருகிறேன். அல்லது செய்து வருவதாகக் கருதிக் கொள்கிறேன். அருமைத் தம்பி அண்ணா கண்ணன் பதிப்பிக்கும் ‘வல்லமை’ மின்னிதழில் ‘படித்தேன் சுவைத்தேன் பகிர்ந்தேன்’ என்ற தொடர் என் கண்ணுக்குத் தெரிந்த சில அகல்விளக்குகளை ஆகாயச் சூரியனாக்க எத்தனிக்கிறேன். அவ்வொளியைப் பிழம்பு என அறிந்ததால். ஊரிருட்டை நீக்கும் கவிதையொளிப் பிழம்புகள்  உள்ளிருட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதில் எனக்குச் சம்மதமில்லை. அந்த வகையில் ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்து பள்ளியிறுதி வகுப்புக்குப் பிறகு கல்வியைத் தொடர முடியாத சூழலில் தமிழைப் படிப்பதிலும் தமிழ்க் கவிதைகளைப் படிப்பதிலும் சுவைத்தனவற்றை உரைப்பகுதிகளுடன் பதிவிடுவதிலும் கவிதை படைப்பதிலும் தணியா ஆர்வம் காட்டிவரும் அன்புத் தம்பி ஏகாபுரம் வெங்கடேசன் முகநூல் பக்கங்களில் எழுதிய சில அறுசீர் விருத்தங்களில் அமைந்துள்ள பன்முகச் சிறப்பினை இந்தக் கட்டுரை பந்தி வைக்க முயலுகிறது.

    முகஸ்துதியில் மயங்கிக் கிடக்கும் முகநூல்

    ‘முகஸ்துதி’ என்ற சொல் வடமொழியாக இருக்கலாம். இதற்கிணையான தமிழ்ச்சொல்லை என்னால் அறியக்கூடவில்லையாதலின் அதனை அப்படியே பயன்படுத்துகிறேன். அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இரண்டு வகையில் திசை மாறுகின்றன அல்லது தடம் கவிழ்கின்றன. ஒன்று கண்டுபிடிப்பின் நோக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்துவது. இரண்டு அதனைப் பயனற்ற முறையில் பயன்படுத்துவது. முன்னதற்குத் துப்பாக்கியும்  பின்னதற்குச் செல்போனும் எடுத்துக்காட்டுக்களாகலாம். பின்னதோடு இன்றைக்குக் கூடுதலாக உடனடியாகச் சேர்க்க வேண்டியது முகநூல். பயனற்ற பதிவுகள், போலிப் பராட்டுக்கள், வீணான வாதங்கள் அதனால் ஏற்படும் வருத்தங்கள். இன்னும் பல. முகநூல் இயங்கும் இலக்கியக் குழுமத் துல்லியம், ஆழம், நுண்ணியம் என்பன அருமையினும் அருமை. வெற்றுச் சடங்குகளால் ஒரு அருமையான ஊடகப்பயன் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. தனிமனித வழிபாடு, தன்னை முன்னிலைப்படுத்துதல், தனக்காகவே கவிதை என்ற பெயரில் தான் எழுதியவையெல்லாம் கவிதை என எண்ணிக் கொள்ளுதல் என இதன் பரப்பு தொடுவானம்போல் விரிந்து கொண்டே செல்கிறது. நாற்புறமும் எரிந்து கொண்டிருக்கும் இந்த மின்மினி ஒளியில்,

    “அகன்ற உலகம் நான் என்றது அகல்!
    அழகிய உடல் நான் என்றது திரி!
    அசையும் உயிர் நான் என்றது சுடர்
    உழைப்பு வடித்த உதிரத் துளிகளாய்த்
    தேங்கிய எண்ணெய் வாய்திறக்கவே இல்லை!”

    என்னுமாறு நாளும் தமிழ்வளர்க்கும் சில அகல்விளக்குகளில் தம்பி ஏகாபுரம் வெங்கடேசனும் ஒருவர்.

    முகநூலில் வெளிறும் கவிதை முகம்

    ‘இரத்த சோகை’ என்றதொரு சொல்லைச் செவிமடுத்திருக்கலாம். அந்தச் சொல் இன்றைய தமிழ்க் கவிதைகளுக்குப் பொதுவாகவும் முகநூல் கவிதைகளுக்குச் சிறப்பாகவும் பொருந்தும் என்பது என் கருத்து. அதனை உறுதி செய்வதற்கான வலிமையான தரவுகள் என்னிடம் ஏராளம்! கவிதையால் மட்டுமே சொல்ல முடியும் என்பவற்றைத்தான் கவிதையாக்க முடியும் என்னும் சாதாரண அடிப்படை உண்மை கூடத் தெரியாத பலரும் பாட்டெழுத வந்த பாவத்தை நான் அல்லவா அனுபவிக்க வேண்டியதிருக்கிறது? எழுதுகிற காதல் கவிதைகளில் காதல் இல்லை! சமுதாயச் சிக்கல்களைப் பற்றிய கவிதைகளில் சமுதாயப் பார்வை இல்லை. குழந்தைகளைப் பற்றிய பாடல்களில் மழலை இல்லை.

    ஏகாபுரத்தாரின் இளகிய நெஞ்சம்

    ‘நெஞ்சக் கனகல்லும் நெகழ்ந்துருக’ என்பார் அருணகிரிநாதர். தம்பி வெங்கடேசன் மனமுருக மதுரை மீனாட்சியைச் சேலத்திலிருந்தே வணங்குகிறார். வாழ்த்துகிறார். பக்தியை விட்டு விலகினால் தமிழே இல்லை என்பது சுண்ணாம்பு சேராமல் வெற்றிலை மணக்காது வெளிநாக்கு சிவக்காது என்பது போலச் சத்தியம். பக்தி என்பது மூடநம்பிக்கை என்பது அறியாமையின் ஆளுமை. பக்தியுணர்வைப் பகுத்தறிவால் அளக்கலாம் என்றால் பகுத்தறிவைப் பக்தி வெல்ல முடியாதா என்ன? வல்லாண்மை மிக்கதொரு மாபெரும் தமிழ்ச்சமுதாயத்தைக் கட்டமைத்துக் காத்த பெருமை பக்தி இயக்கங்களுக்கு உண்டு. அதற்குக் கருவியாக இருந்தது செந்தமிழ். ‘எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்  பொதுமக்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகின்றான்’ என்று எழுதினார் பாரதியார். பாரதி கையாளும் புதிய உயிர் என்னும் சொல்நேர்த்தி காண்க. அது அழகானது. ஆழமானது. செத்துப் பிணமான தமிழுக்கு இத்தகைய காவியங்கள் புதிய உயிராம். எனக்குத் தெரிந்தவரை உயிரில் பழையது, புதியது என்ற பார்வையைப் பாரதியைத் தவிர வேறு யாரிடமும் கண்டதாக நினைவில்லை. நையாண்டியும் நக்கலும் கிண்டலும் கேலியும் ஆரவாரமும் போலித்தனமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் முகநூல் பக்கத்தைத் தம்பி வெங்கடேசனின் இந்த மீனாட்சிப் பரவல் தூய்மை செய்கிறது. எல்லாரும் மேற்கே செல்கிறபோது கிழக்கே செல்லுகிறார் வெங்கடேசன். தான் உதிக்க வேண்டிய திசையைத் தானே தீர்மானித்துக் கொள்கிறார்.

    கடலை நோக்கிய நதிகளின் திசைகள்       

    இறைவனைப் போற்றிப் பரவும் பாடல்களில் பல நெறிகளைக் காணலாம். இவற்றை வெளிப்பாட்டு உத்திகள் என்பதைவிட இறைவன் அருள் வேண்டிய நிலையிலும் அதனைப் பெற்ற நிலையிலும் உணர்ந்த நிலையிலுமாக வெளிப்படும் உணர்ச்சிக் கோலங்கள் என்பது இன்னும் பொருத்தமாகலாம். வேண்டுதல் விண்ணப்பங்களாகும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட நிலையில் அடியவனுக்கு ஏற்படும் ஆனந்தக்களிப்பு, பெற்ற களிப்பினைப் பெறாஅர்க்குச் சொல்லி மகிழ்தல், அஃறிணையை நோக்கியும் அவன்புகழ் பாடச் சொல்லுதல் என எல்லா நிலையிலும் வெளிப்படுவது அவன் திருப்புகழே!. இறைவன் அருள் வேண்டிய நிலையில் பாடப்படும் விண்ணப்பங்கள் தமிழில் எராளம். இதனை மடலின் வளர்ச்சிநிலை என்றும் கூறலாம். சீட்டுக்கவி என்பதும் அது. சிறிய திருமடல், பெரிய திருமடல், பிள்ளைச் சிறுவிண்ணப்பம், பிள்ளைப் பெறுவிண்ணப்பம் என்றெல்லாம் தமிழில் உண்டு. மணிவாசகப்பெருமான் நீத்தல் விண்ணப்பம் என்றே ஒரு பதிகத்தைப் பாடியிருக்கிறார். இந்த இலக்கிய உத்தி கச்சை நெய்கின்ற ஒரு சாதாரண நெசவாளி இளைஞன் பாடுகிற பாடலில் இயல்பாக அமைகிறபோதுதான் அது மரபாகிறது. ‘பாடுகிறவன் நான் ‘மரபுப்பாடல் பாடுகிறேன்’ என யாப்பு முரசறைந்து கொண்டு இதனைப் பாடவில்லை. மதுரை மீனாட்சியை மனத்துள் எண்ணுகிற அவன் உதடுகள் முணுமுணுப்பில் மரபு தனியாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. ‘விருத்தப்பொதி’ சுமப்பதனாலேயே தம்மை மரபுக் கவிஞர்கள் எனக் கருதிக் கொள்வார் கவனிக்க வேண்டும். கருவிளம், புளிமா என்பதால் இது மரபுப்பாடல் அன்று. இறைவியின் பெரும்புகழை மரபுவழி விதந்தோதி வேண்டுதலாதலின் இது மரபுப் பாடல்!

    தொன்ம இழைகள்

    வழக்காடி நீதி பெற பாண்டியன் அவைக்குச் சென்ற கண்ணகி வாயிற்காவலனிடத்தில் தன் வருகையைத் தெரியப்படுத்துகிறாள். எப்படி? இப்படி!

    “வாயி லோயே! வாயி லோயே!
    அறிவரை போகிய பொறியறு நெஞ்சத்து
    இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
    இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
    கணவனை இழந்தாள் கடையகத்தாள்’ என்று
    அறிவிப்பாயே! அறிவிப்பாயே! என”

    என்ற அளவில்தான் கண்ணகி பேசுகிறாள். அவள் கொந்தளிப்பு அடங்குதற்கு முன்பே காவலன் மன்னனிடம் பேசுவதாக அமைக்கிறார் அடிகள். கண்ணகியைக் கண்ட காவலனின் நடுக்கத்தையோ நடைவேகத்தையோ அவர் வண்ணனை செய்யவில்லை. ‘நாடுகாண் காதை’, ‘காடுகாண் காதை’,  ‘அந்தி மாலை சிறப்புச் செய்த காதை’ என்றெல்லாம் பாடி நெடுங்கதையாக வண்ணனைச் செய்த அடிகள் ‘என’ என்னும் இடைச்சொல்லை வினைமாற்றாகப் பயன்படுத்தி மதுரையின் அழிவையும் பாண்டியனின் அழிவையும் விரைவுப்படுத்துகிறார். அந்த விரைவிலும் கண்ணகியின் தோற்றத்தை வாயிற் காவலன் வழியாகச் சித்திரித்துக் காட்டும் அடிகளின் படைப்பாளுமை வியக்கத்தக்கது.

    வாயிற்காவலன் பாண்டியனிடத்தில் சொன்னவை

    மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீருமாக ஒருத்தி நின்றாள் என அடிகளே சொல்லியிருக்கிறார். அதனையே சொல்லியிருக்க வேண்டிய காவலனைத் தொன்மப் பின்புலத்தைச் சித்திரிக்க வைத்துக் கண்ணகியின் தோற்றத்தைக் காட்சிப்படுத்துகிறார். படைப்பாளர் நெசவுத் தொழில் வல்லாராதலின் தமது அரற்றல் கவிதையில் தொன்ம மரபுக் கூறுகளை இழைகளாக்கி நெய்துள்ளார். பாண்டியன் கோவில் வாசலில் தான் ‘நின்ற கோலத்தைக் கண்ணகி சொல்லவில்லை. தன்னைப் பற்றிய செய்திகளைத்தான் சொன்னாள். அவள் சொல்லை செவிமடுத்த வாயிற் காவலன் அவள் சொன்னதையும் சொன்னான். தான் கண்டதையும் சொன்னான். எப்படி?

    “அடர்த்தொழு குருதி அடங்காப் பசுந்துணிப்
    பிடர்த்தலை பீடம் ஏறிய மடக்கொடி
    வெற்றிவேற் தடக்கை கொற்றவை அல்லள்!
    அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை
    ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக்
    கானகம் உகந்த காளி தாருகன்
    தாரகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்”

    பதச்சோறாகக் காட்டப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டு இது. மரபிழை அறுந்துவிடாமல் இருக்கப் பழந்தமிழ்ச் சான்றோர்கள் செய்திருக்கிற கவிதை உத்தி இது. சங்க இலக்கியங்களில் தொன்மக் குறிப்புக்கள் இடம்பெற்றதற்கு இதுதான் காரணம். மரபு மண்ணொடு கலந்தது, மக்கள் மனத்தோடு கலந்தது! இனித் தொன்மம் என்பதே நாட்டார் வழக்கு என்பதை உணர்தல் வேண்டும். மக்கள் வழிவழியாகப் பேசிக் கொள்ளும் கதைகளே பின்னர் தொன்மச் சாயம் பூசப்பட்டிருக்கலாம் என்பது ஒதுக்கிவிட முடியாத அனுமானம். சிறுதெய்வ வணக்கங்களுக்கு வரலாறு இருப்பது போலப் பெருந்தெய்வம் தோன்றிய காலத்திலும் இருந்திருக்க வேண்டும். அவற்றைப் பற்றிய மிகைக் கற்பனையே தொன்மமாகலாம் என்பதும் ஒன்று.

    “மங்கையர்க்கரசியாக மதுரைமா நகரினுள்ளே
    அங்கயற்கண்ணியாகி அருந்தமிழாட்சி செய்யும்
    செங்கண்மால் தங்கை”

    என்னும் வரிகளில் திருவிளையாடற் புராணத்தின் உமையே மலையத்துவசன் செய்த வேள்வியில் தடாதகைப் பிராட்டியாராகத் தோன்றி ஆட்சிக்கு உரிமை பெற்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மீனாட்சி மதுரையை ஆண்ட கதை

    கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவசு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி எனப் பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அளவற்ற பக்தி கொண்டாள். ஒரு சமயம் அவளுக்கு மண்ணகத்துள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தைத் தந்தையிடம் தெரிவித்தாள். தந்தையோ கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி அங்கு அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படிக் கூறினான். அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்தத் தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கிச் சேவை செய்தாள். அவளுக்கு மூன்று வயது சிறுமியாகக் காட்சி தந்த அம்பிகை, “என்ன வரம் வேண்டும் கேள்!’ என்றாள். அம்பாளைக் குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாகக் காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தைத் தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள்.

    அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள்.

    மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்குப் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் 3 வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், “மீனாட்சி’ என்று பெயர் பெற்றாள். இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள்.

    “வெள்ளியம்பலத்துறையும்
    விரிசடைக்கடவுள் தன்னை
    உள்ளியம் மணம்புரிந்த
    உமையவள்”

    என்னும் பதிவினால் ‘கொன்றையம் சடை குழகனாகிய சிவபெருமானே பிராட்டியின் மன்றலுக்கு உரியவன்’ என்னும் பரஞ்சோதியின் திருவாக்கை நினைவுபடுத்துகிறார்.

    கால் மாறி ஆடியவனின் கருணை

    மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் எனப் பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர்.

    தாங்கள் சிவதாண்டவம் கண்ட பின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதனைக் கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்தத் தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், அறுபத்து மூன்றினைக் (63) கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்குக், காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு ஓர் உண்மை உரைத்தது.

    “ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?” என நினைத்தவன், நடராசர் சன்னதிக்குச் சென்றான். சென்று தனக்காக இடக்காலை ஊன்றி, வலக்காலைத் தூக்கி ஆடுமாறு வேண்டினார். சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார் நடராசர்.

    சிவன் பாதம் பார்க்க வேண்டுமா? சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடக் காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலக்காலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தைச் சிவனின் பாதமாகக் கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தைத் தரிசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

    “நின்றகால் மாற்றியாடி
    நேயத்தார் விருப்பந்தீர்த்த
    கொன்றையஞ்சடையன்”

    என்னும் வரிகள் உணர்த்துகின்ற கதையை இப்படி வழிமொழிகிறார் ஏகாபுரத்தார்.

    மீனாட்சி பெயர்க்காரணம்

    கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்ற கண்ணோடு சம்பந்தப்பட்ட பெயர் உண்டு. இதற்கு மீன் போன்ற கண்களை உடையவள், மீன் தன் குட்டிகளைக் கண்களாலேயே பாதுகாப்பது போலக் காப்பவள் என்றெல்லாம் பொருள் சொல்வார்கள். ஆனால், தீயில் தன் கண்களை இழந்த ஒரு பக்தருக்கு அவள் கண்ணொளி வழங்கிய கதை பலரும் அறியாதது!

    மெய் ஞானியான நீலகண்ட தீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராகத் திகழ்ந்தார். இவரது ஞானத்தைக் கண்ட திருமலை நாயக்கர், இவரைத் தனது முதலமைச்சராக நியமித்தார். அரச பதவி ஏற்றாலும் ஆன்மீக வாழ்க்கையைக் கைவிடாது தத்துவ மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கினார் தீட்சிதர். நீலகண்டருக்கு ஒரு பெருஞ்சோதனை காத்திருந்தது. திருமலை மன்னரின் மனைவியின் சிலையைத் தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலத்தொடையில் மெல்லிய சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாகத் தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக்கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றித் தெரிவித்தார். ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது. ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும்படிக் கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனத்தில் ஐயம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் நடந்ததைத் தெரிவித்துக் கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர். அப்போது, மீனாட்சியம்மைக்குக் கற்பூர ஆராதனை செய்து கொண்டிருந்த தீட்சிதர் தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன் மீது ஐயமுற்றதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய்க், கற்பூர ஜோதியைத் தம் கண்ணில் வைத்துக் கண்களைப் பொசுக்கிக் கொண்டார். மன்னருக்குச் செய்தி பறந்தது. அவர் தம் தவற்றை உணர்ந்துத் தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது “ஆனந்த சாகர ஸ்தவம்” என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர் திருமலை மன்னர், நீலகண்டருக்குத் திருநெல்வேலி அருகிலுள்ள ‘பாலாமடை’ என்ற இடத்தைத் தானமாக அளித்தார். அங்கே ஒரு சிவாலயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார்.

    காலனை உதைத்த கதை

    மார்க்கண்டேயன் வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால் அவனுயிரை எடுக்கின்ற அவசரத்தில் எமதருமன் செய்த தவற்றைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ‘என்றும் பதினாறு மார்க்கண்டேயன்’ வரலாற்றில் எம்பெருமான் சிவனையும் தம் பாசக்கயிற்றால் கட்டி இழுத்துப் பாவம் செய்தவன் காலதேவன். அந்தக் காலதேவனைத் தம் காலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயனைக் கரைசேர்த்தவர் சிவபெருமான்.

    காலனையுதைத்த நீலக்
    கழுத்தனோடுடனமர்ந்த
    கோலமே அழகுக்கெல்லாம்
    உயர்ந்தவோர் கோலமே!

    மிருகண்டு முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் நீண்ட நாட்களாக பிள்ளைப்பேறு இல்லாததால் முனிவர் சிவனை நினைத்து செய்த கடும் தவத்தின் மூலம் வரமொன்றினைப் பெற்றார். அவ்வரத்தினால் முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் பிறந்த குழந்தைதான் மார்க்கண்டேயன். மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனவுடன் ஆயுள் முடிந்துவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாறு. தனது பிறப்பைப் பற்றிய மந்தணைத்தை அறிந்து கொண்ட மார்க்கண்டேயன் 107 சிவத்தலங்களைத் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தான். 108 ஆவதாகத் திருக்கடையூரில் உள்ள சிவ தளத்திற்கு வந்து தரிசனம் செய்தான். அன்றுதான் மார்க்கண்டேயனுக்கு இறுதி நாளாக இருந்தது. எமதர்மன் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிப்பதற்காகப் பாசக்கயிற்றை வீச நேராகவே வந்து விட்டார். எமனைக்கண்டு நடுங்கிய மார்க்கண்டேயர் ஓடிச்சென்று அமிர்தகடேஸ்வரரை இறுகக் கட்டிக் கொண்டார். எமன் பாசக்கயிற்றை வீச, அது மார்க்கண்டேயரோடு இலிங்க உருவில் இருந்த அமிர்தகடேஸ்வரரையும் சேர்த்து சுருக்குப் போட்டு இழுத்து விட்டது. சிவபெருமானையே பாசக் கயிற்றால் கட்டி இழுத்த எமதர்மரைச், சினந்தெழுந்த சிவபெருமான் கீழே தள்ளிச் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்து, மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறாக இருக்கவும், சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தையும் சிவபெருமான் அளித்துவிட்டார்.

    கழுத்தனோடு அமர்ந்த கோலம் என்றது நுண்ணியம் மிக்கது. பக்கம் பக்கமாக அமர்வது வேறு மணமக்களைப் போல. மெய்யில் பாதியாக இடம் பெறுவது என்பது அதனினும் வேறு. மணமக்கள் என்னதான் ‘நீயின்றி நானில்லை நிலவன்றி வானில்லை’ எனத் திரைப்பட உரையாடலைப் பேசினாலும் அவ்வாறு இரண்டறக் கலப்பது இன்றைக்கு மட்டுமன்று என்றைக்கும் இயலாது. இங்கே கவிஞர் ‘கழுத்தனோடு உடன் அமர்ந்த’ என ஒரே உருபினை இரண்டுமுறை பயன்படுத்தியதற்கு அதுதான் காரணம். கழுத்தனோடு அமர்ந்த என்பது வேறு. கழுத்தனோடு உடன் அமர்ந்த என்பதன் பொருள் வேறு. பின்னது மாதொரு பாகனைக் குறிப்பது. ஒடு என்பதனை அசைநிலையாகக் கொள்வதும் ஒன்று.

    மஞ்சு செய்த இன்னல்

    சித்திரைத் திருநாளில் அபிடேகப் பாண்டியன் சோமசுந்தரப் பெருமானுக்கு நித்திய அநித்தியங்களைச் செம்மையாகச் செய்தான். அவனுடைய வழிபாட்டினாலே பெருமானுக்குக் கற்பூரச் சுந்தரர் என்னும் திருநாமம் வழங்கலாயிற்று. அது நாளில் பெருமானை வழிபட வேண்டிய இந்திரன் பாண்டியனுக்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. நாணிய இந்திரனுக்கு வருணன் அறிவுரை கூறுவதாக எண்ணித் தன் ஆணவத்தை வெளிப்படுத்தினான். கடல் நீரை ஆவியாக்கிப் பாண்டிய நாடு முழுமையும் பெருமழையால் பெருவெள்ளத்தை வரச்செய்தான். இதனை அறிந்த அபிடேகப் பாண்டியன் இறைவனிடம் முறையிட, இறைவன் எழுமேகங்களையும் கடல் அலைகளைக் குடிக்க ஆணையிட்டார். மேகங்களைத் தடுத்துப் பாண்டியனின் இன்னல் நீக்கிய கதையை,

    “மஞ்சுவந் தின்னல் செய்த
    மாடமா நகரத் தார்தம்”

    என்ற வரிகளில் பதிவு செய்திருக்கிறார். வருணன் விட்ட மேகங்களைத் தடுத்ததையும் நான்மாடக் கூடல் ஆன வரலாற்றுப் புனைவுகளையும் கலந்து தருகிறார் வெங்கடேசன்.

    கற்பனையும் நுண்ணியமும்

    புலமை இருந்தால் பா புனையலாம். கற்பனைக்குப் புலமை பயன்படாது. புனைதல் அறிவின் தொழில். கற்பனை இதயத்தின் நிழல். இயற்கைப் பொருளோடு இரண்டறக் கலக்கும் உள்ளம் இருந்தாலேயொழிய. கற்பனை சிறக்காது. இறைவன் இயற்கை. கணவன் அழகாக அமைய வேண்டும் என்று நினையாத மனைவியோ மனைவி அசிங்கமாக அமையவேண்டும் என்று நினைக்கின்ற கணவனோ உலகில் இல்லை. ஆனால் உமாதேவி யாருக்குப் பாதியானாள் என்றால்,

    ‘வெந்தநீறணிந்த பெம்மான்
    மேனியில் பகுதியாகி’

    என்று எழுதுகிறார் கவிஞர். காடுடைய சுடலைப் பொடி பூசிய கணவனுக்குப் பாதியானாளாம் அன்னை. ‘சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி’ என்பார் பட்டர்.

    “எந்தமிழ்ப் புலவர் யாத்த
    எழுத்துக்குப் பிள்ளையாகி
    அந்தமில்லாட்சி செய்யும்
    அன்னை”

    என்ற வரிகளில் புதுமணம் வீசும் கற்பனையைப் பதிவு செய்திருக்கிறார் வெங்கடேசன். உலகிற்கு அன்னையாக இருப்பவள் அவள். ஆனால் இந்த மொழிக்குப் பிள்ளையாகி இருக்கிறாளாம். மன்னராட்சிக்குக் காலவரையறை உண்டாதலின் அன்னை மீனாட்சியின் அருளாட்சிக்கு எல்லையில்லை என்பார் ‘அந்தமில் ஆட்சி செய்யும் அன்னை’ என்றார். எல்லா உலகங்களையும் ஆளுகிற மாட்சியைக் குறிப்பால் உணர்த்தினார் என்பதாம். இனி எழுத்துக்குப் பிள்ளை என்பதைக் குமரகுருபரர் முதலியோர் பாடிப் பரவிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய இலக்கியங்களைக் குறித்ததாகவும் கொள்ளலாம்.

    “கொன்றையஞ் சடையன் நெஞ்சைக்
    கொய் பசுங்கிளியினாளின் மன்றம்”

    என்று பாடுகிறார் கவிஞர். கிளி மேனியில் பல வண்ணம் உண்டேயன்றிப் பல வண்ணக் கிளிகள் யாண்டும் இல. ‘பச்சைக் கிளி’ என்பது ‘இயல்பு வழக்கு’. ஈண்டு பசுங்கிளி என அம்மையை உருவகப்படுத்தியது அடியவர் தன்னிடம் சொல்வதைக் கேட்டு அப்படியே நாயகன் சோமசுந்தரப் பெருமானிடம் மடை மாற்றம் செய்யும் செயலை நோக்கி. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பது உலக வழக்கு. பசுங்கிளியினாள் என்னும் தலைவியின் உருவகத்திற்கு நிகராகத் தலைவனும் திகழ்கிறான் என்பார் ‘கொன்றை அம் சடையான்’ என்றார். பொதுவாகக் கிளியை ஆண்பாலுக்கும் கோவைப்பழத்தைப் பெண்பாலுக்கும் உவமிப்பது மரபு. அதனை மாற்றுகிறார். பெண்ணுக்குரிய கூந்தலை வண்ணனை செய்யும் மரபை மாற்றிக் கொன்றை அம் சடையன் என்று தலைவனுக்கு ஏற்றுகிறார்.

    அவனுக்கு அந்தக் குறை தீர்த்தவள் நீ! இவளுக்கு இந்தக் குறை தீர்த்தவள் நீ! எனக்கு வந்த குறை தீர்க்கக் கூடாதா என்று வேண்டுவதுதான் அடியவர்களின் இயல்பு. அந்த இயல்பை வெங்கடேசன் தானும் பெற்றிருப்பதைக்,

    “கூடல்மா நகரந் தன்னைக்
    கொடுஞ்சினத் தாலெ ரித்த
    மாடமா தவளி னின்னல்
    மறுத்துரைத் தருளி னாளை
    நாடியெங்கவலையெல்லாம்
    நலங்கெடவருளக் கேட்டேம்”

    என்னும் வரிகளில் பதிவு செய்திருக்கிறார். இந்தப் பதிவில் மதுரையைக் கண்ணகி எரித்ததும் மதுராபதி தெய்வம் கண்ணகியின் ஏவல் கேட்ட தொன்மத்தையும் கவிஞர் எளிமையாக அழகாகப் பதிவு செய்திருக்கிறார். அவள் துன்பத்தை நீக்கியது போலத் தம் துன்பத்தையும் நீக்க வேண்டும் என்பது மரபியல் சிந்தனை. எலும்பைப் பெண்ணாக்கியருளியதைப் போல, முதலையுண்ட பிள்ளையை மீண்டும் தந்தது போலத் தங்களுடைய துன்பத்தையும் போக்கியருள் என்னும் அடியவர்களின் வேண்டுதலையொத்தது இது!.

    விருத்தக் கட்டுமானமும் தொடை விகற்பங்களும்

    மரபுப் பாடல்கள் என்னுந் தொடர் பொதுவாக யாப்பமைப் பாடல்களையே குறிப்பதால் அத்தகைய பாடல்களில் தொடைவிகற்ப ஆராய்ச்சியும் கட்டுமானச் சிறப்பும் ஆய்வும் தவிர்க்க இயலாதனவே. யாப்பமைப் பாடல்களை எழுதிய பிறகு அதில் கவிதையைக் காணவேண்டுமே தவிர யாப்பினைக் காணக் கூடாது என்பது ஏற்புடைத்தன்று. அறுசீர் விருத்தமாதலின் தொடைவிகற்பங்கள் பற்றிய ஆய்வு பொருந்தாது. அவை அளவடிக்கே உரியதாதலின் என்பாரும் உளர்.

    தொடைவிகற்பங்கள் அளவடியைப் பொருத்ததன்று!

    அளவடியாகிய நேரடிக்குள் இடமாற்றி அமையும் எதுகை முதலாகிய தொடைகள் இணையெதுகை முதலான பெயர்களால் வழங்கப்படுகின்றன. இலக்கண நூல்களும் அதனையே எடுத்தியம்புகின்றன. ஆனால் அளவடியில் அமையாத பாடல்களின் தொடையின்பத்தைச் சுவைப்பதற்கு இந்த அளவடி வரையறை தடைசெய்வதாகக் கருத முடியாது. இலக்கண அடிப்படையில் சொல்லப்போனால் ஐந்தும் அதற்கு மேற்பட்டும் அமையும் சீர்களில் அமையும் தொடைவிகற்பங்களுக்குக் குறியீடு இல்லாத காரணத்தினாலேயே அதனைச் சுவைக்கக் கூடாது அல்லது சுவைக்க முடியாது என்பது பொருளன்று. தொடக்கப்பள்ளி மாணவர்களின் கணித வாய்ப்பாடு இருபது என்னும் எண்ணிக்கையில் நின்று விடுவதால் அதற்கு மேல் பெருக்கலே கூடாது என்பது பொருளன்று.

    நெடிலடி என்பதே ஒரு சிந்தனை வளர்ச்சி. தொடைவிகற்பங்கள் நெடிலடிக்குப் பொருந்தாது என்றால் தொடைச்சுவை கிட்டுமா? கழிநெடிலடியில் அமைந்த பல்லாயிரம் பாடல்களின் நிலை என்னவாகும்? எனவே இலக்கண நூல்களின் தொடைவிகற்பக் குறிப்புக்களை வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டுமேயன்றி வரையறையாகக் கொள்ளுதல் தேவையில்லை. தொடை விகற்பம் என்பதே செய்யுட் சுவையைப் பெருக்கும் உத்தி என்பதைப் புரிந்து கொண்டால் இக்கருத்தின் வன்மை மென்மைகள் ஓரளவு புரியக்கூடும்.

    எனினும் ஒவ்வொரு அடியிலும் மற்றும் ஒவ்வொரு அரையடித் தொடக்கத்திலும் படைப்பாளர் செய்திருக்கும் செய்நேர்த்தியால் கவிதையின் ஒலியின்பம் கூடுவதை உணர முடியும்.

    1. “எங்குறை தீரக் கேட்டேம் எங்கணீர் சோரு மாறே”
    2. “மங்கைமா தெய்வந் தன்னை மனமொழி மெய்யால் வாழ்த்தி”
    3. “சேலம்வாழ் அடியேம் பட்ட சிறுமைகள் நீங்குமாறே.”
    4. “வெள்ளியம்பலத்துறையும் விரிசடைக்கடவுள் தன்னை”
    5. “உள்ளியம் மணம்புரிந்த உமையவள் திருத்தாள் நண்ணி”
    6. “மஞ்சுவந்தின்னல் செய்த மாடமா நகரத் தார்தம்”
    7. “நெஞ்சிலே குடியிருக்கும் நேரிழை திருத்தாள் நண்ணி”
    8. “நின்றகால் மாற்றியாடி நேயத்தார் விருப்பந்தீர்த்த”

    என்னுமாறு அமைந்த அரையடி மோனைகள் ஓர் இலக்கணப் பதிவாக அன்றி இன்னிசைக் கச்சேரியாக இனிக்கிறது என்பதை ஓதுவார் உணரக்கூடும்.  இன எழுத்து, வர்க்க எழுத்து என்றெல்லாம் மோனைக்காகச் சொற்களைத் தேடித் தொகுப்பார் கவிதைகளில் இவ்வாறு அமைவது அரிது. பொருளோடு கூடிய உணர்ச்சி உண்மையாகவும் எளிதாகக் கைவரப்பெறப் பெற்ற யாப்பு வன்மையும் உடையார்க்கு இது எளிதிலும் எளிது. தம்பி வெங்கடேசன் பெற்ற பெருவரம் இது. இது இட்டுக் கட்டியதன்று என்பது எடுத்துக்காட்டிலிருந்து புரியக் கூடும்.

    எதுகையிலும் வல்லார் ஏகாபுரத்தார்

    சீர்களைச் சிலிர்க்க வைப்பது மோனை என்றால் அடிகளை அணுகுண்டாக்குவது எதுகை. ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டுச் சென்றானடி’ என்ற இடி எதுகையால் அடி அதிர்வது காண்க. ‘பட்டேனே பல துயரம் கெட்டேனா?’ என்ற உரையாடலில் அது வெடித்தே விடுவதையும் காணலாம். அதாவது மோனைகள் சீர்களைச் சிறக்கச் செய்யும். எதுகை அடிகளைச் சிறக்கச் செய்யும். இன்னுந் தெளிவாகச் சொன்னால் மோனைகள் அடிகளைச் சிறக்கச் செய்வதை விடச் சீர்களைச் சிறக்கச் செய்யும். எதுகைகள் சீர்களைச் சிறக்கச் செய்வதினும் அடிகளைச் சிறக்கச் செய்யும். எனவே தொடைவிகற்பங்களில் எதுகையால் சிறப்பன அடிகள். மோனையால் சிறப்பன சீர்கள். அத்தகைய அடிகளை எதுகையால் சிறக்கச் செய்திருக்கிறார் பாவலர்.

    “மங்கையர்க்கரசியாக
    மதுரைமா நகரினுள்ளே
    அங்கயற்கண்ணியாகி
    அருந்தமிழாட்சி செய்யும்
    செங்கண்மால் தங்கை”

    ‘மங்கையர்க்கரசி அங்கயர்க்கண்ணி செங்கண்மால் தங்கை’ என்னும் ‘ங’கர எதுகைகள் எதுகைகளாக மட்டுமன்றி அம்மூவருக்கும் உள்ள உறவுநிலையை மனத்துள் பதிய வைக்கும் ஓர் உத்தியாகவும் செயல்படுகிறது என்பதை உச்சரிப்பார் உணர்வர். இவர் எதுகைக்காக எதுகையைக் கையாளவில்லை என்பதை இப்பாட்டிலும் தொடர்ந்து வரும் பாட்டிலும் பல அடிகளில் சரளமாக ‘ங’கரம் பயின்று வருதல் கொண்டு துணியலாம்.

    “மங்கையர்க்கரசியாக
    மதுரைமா நகரினுள்ளே
    அங்கயற்கண்ணியாகி
    அருந்தமிழாட்சி செய்யும்
    செங்கண்மால் தங்கை தன்னைத்
    திருவடி வீழ்ந்து பாடி
    எங்குறை தீரக்கேட்டேம்
    எங்கணீர் சோருமாறே”

    “பொங்குதாமரைக்குளத்தில்
    பொலிந்திருந்தாட்சி செய்யும்
    மங்கைமா தெய்வந்தன்னை
    மனமொழி மெய்யால் வாழ்த்தி
    அங்கண்மா ஞாலத்தெல்லாம்
    அகவிருள் நீக்கக்கேட்டேம்
    எங்கண்கள் உகுத்தவெள்ளம்
    யாறாகப் பாயுமாறே.”

    ‘ங’கர எதுகைப் பயன்பாடு அவ்வளவு எளிமையானது அல்ல என்பதைப் பயன்படுத்த முயன்று எதுகைகளை மாற்றிக் கொண்டோர் அறியக்கூடும்.

    கண்ணதாசனும் வெங்கடேசனும்

    இட்டு நிரப்புவது எதுகையன்று. இயல்பாக அமைவதே எதுகை. அழுகையைப் பற்றிப் பாடுகிற கண்ணதாசன் அழுவதற்காகவே தான் பிறப்பெடுத்ததாகக் கூறி இப்படி எழுதுகிறார்.

    “சீசரைப் பெற்ற தாயும்
    சிறப்புறப் பெற்றாள்! எகிப்து
    நாசரைப் பெற்ற தாயும்
    நாட்டிற்கே பெற்றாள்! காம
    ராசரைப் பெற்ற தாயும்
    நலம்பெறப் பெற்றாள்! என்னை
    ஆசையாய்ப் பெற்ற தாயோ
    அழுவதற்கென்றே பெற்றாள்!”

    இந்தப் பாட்டில் கண்ணதாசன் சொல்ல வந்த சேதி தனது வாழ்க்கைத் துயரம். அதனால் வடிக்கும் கண்ணீர்! ஆனால் பாடுபொருள் முற்றிலும் மாறி முப்பெரும் உலகத்தலைவர்களின் தாயரைப் பெருமைப்படுத்தித் தன்னைப் பெற்றதற்காய்த் தன்னுடைய தாயைச் சலித்துக் கொள்வதுபோலப் பாடியிருக்கிறார். பெற்றார்கள் என்னும் ஒப்புமை நோக்கி ஒற்றுமையும் பிறப்பின் நோக்கமும் சிறப்பும் மாறுபட்டிருக்கிறது என்னும் வேற்றுமையும் நிலவுவதால் இது வேற்றுமையணி என்பர் தமிழாசிரியப் பெருமக்கள். நாம் சொல்ல வருவது என்னவென்றால் பாட்டிற்குத் தொடர்பில்லாத செய்திகளைக் கூட எதுகைத் தொடை இனிக்க வைக்கிறது என்பதாம். கண்ணதாசனின் ஒரு பாடல் இருபாடல்களில் அல்ல தொட்டவிடமெல்லாம் இந்தச் ‘செப்படி’ வித்தையைச் செய்துகாட்டியிருப்பார். “பாடுவது கவியா? இல்லை பாரிவள்ளல் மகனா?” என்று மோனையழகிற்காக மகனில்லாத பாரிக்கும் மகனிருந்ததாகப் பாடுவார் அவர். ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ என்று உறவு நிலையின் போலித்தனத்தைப் பாட எத்தனிப்பவர் அவசரமான உலகம் என்ற சொல்லைப் போட்டு மோனையில் முத்தெடுப்பார். இத்தகைய முதிர்ச்சியான பதிவுகளைத் தம்பி வெங்கடேசன் பாட்டில் காணமுடிகிறது. இப்படி ஒரு பாடல் அரற்றல் அமைந்திருக்கிறது.

    “காலனை யுதைத்த நீலக்
    கழுத்தனோடுடனமர்ந்த
    கோலமே அழகுக்கெல்லாம்
    உயர்ந்தவோர் கோலமென்று
    ஞாலமே போற்றாநிற்கும்
    நங்கையை யருளக்கேட்டேம்
    சேலம்வாழ் அடியேம் பட்ட
    சிறுமைகள் நீங்குமாறே.”

    பொதுநிலையில் வைத்துக் குறைதீர்க்கப் பாடியவர், தன் ஊர் அமைந்த மாவட்டத்தை எதுகையாக்கிக் கொள்கிறார். உண்மையில் இது காலன், கோலம், ஞாலம் என்பதற்கான எதுகையன்று. ஆனால் அவற்றின் அடிப்படையில் தோன்றிய வெகு இயல்பான எதுகை. கண்ணதாசனுக்குச் சீசரும் எதுகை. நாசரும் எதுகை. காமராசரும் எதுகை. வெங்கடேசனுக்குச் சேலமே எதுகை. அகன்ற படிப்பு என்பதனினும் ஆழ்ந்த புலமை என்பது சற்றுக் கடினமானதாக இருந்தாலும் அதனை நோக்கியே இவரது பயணம் நடக்கிறது என்பதற்கு இத்தகைய தொடைவிகற்பச் சொல்லாடல்கள் சான்றாகத் திகழ்கின்றன. ‘பச்சைப்பட்டுடுத்தி’ என்று எடுத்த எதுகைக்கு முரணாக ‘கச்சை நெய் அடியேம்’ என்று பதிவு செய்யும் பேரழகு எண்ணி மகிழத்தக்கது. வணங்கப்படுகிற அன்னைக்குப் பச்சைப்பட்டு! விழுந்து வணங்கும் அடியவன் நெய்வதோ கச்சைத் துணி! தொடை விகற்பங்களில் முரண் தனித்து நிற்பதில் வியப்பில்லை. கவிதைக் கட்டழகிக்கு முரண் ‘தொடை’தானே அழகு!

    சில கருத்துரைகள்

    பாடல்களின் சொல்லாட்சி உணர்வுப் பூர்வமாகவும் எளிமையாகவும் அமைந்திருக்கிறபோது செயற்கையானதொரு சொல்லாட்சி கவிதையின் ஓட்டத்தைத் தடுத்துவிடும். கேட்டோம் என்பது வழக்கு. கேட்டேம் என்பது செய்யுள். பாடல் வழக்கினைச் சார்ந்து அமையும் போது செய்யுள் தன்மைக்கு அங்கே இடமில்லை. ஒவ்வொரு பாட்டிலும் ‘கேட்டேம்’ என்னும் புலமைச் சொல் பாட்டின் ஏனைய எளிய தமிழ்ச் சொற்களோடு கலந்து நிற்காமல் கல்யாணராமன் பல்லைப்போல் தனித்து நிற்பதை உணரவேண்டும்.!

    கண்ணீரை வெள்ளமாக உருவகம் செய்கிறபோது பாயும் என்ற வினை பாட்டைக் கிழடுதட்டச் செய்து விடுகிறது. வெள்ளம் பாய்கிறது என்பது கவிதையாகாது. கண்ணீர் வெள்ளம் என்பதுதான் உருவகம். ‘கொள்ளி வைக்கும் பிள்ளைகளே கொள்ளியிலே வேகுதடா! அள்ளி வச்ச தாய்விழியோ ஆறு குளம் ஆனதடா’ என்பதுதான் கவிதை. முன்னது உருவகமாகவும் அதன் வினை இயல்பாகவும் அமைவது முன்னதன் பெருமையை நிலைக்கச் செய்யாது. கண்ணீர் வெள்ளமானால் கண்கள் என்னவாகும்? என்பதைப் படைப்பாளர் சிந்தித்திருக்க வேண்டும்!.

    பாட்டை எழுதி முடித்தபின் மீள் பார்வை செய்திருந்தால் இத்தகைய தடுமாற்றங்கள் களையப்பட்டிருக்கலாம். இவற்றை ஒத்துக் கொள்வதும் மறுதலிப்பதும் படைப்பாளர் உரிமை. ஆனால் அந்த உரிமை என் பார்வையைப் பங்கப்படுத்த முடியாது.

    “மதுரை மாநகரினுள்ளே மங்கையர்க்கரசியாக
    அங்கையற்கண்ணியாக அருந்தமிழ் ஆட்சி செய்யும்
    செங்கண் மால் தங்கை தன்னைத் திருவடி வீழ்ந்து பாடி
    எங்குறை தீரக்கேட்டேம் எங்கணீர் சோருமாறே”  (1)

    பொங்குதா மரைக்குளத்தில் பொலிந்திருந் தாட்சி செய்யும்
    மங்கை மா தெய்வந்தன்னை மனமொழி மெய்யால் வாழ்த்தி
    அங்கண்மா ஞாலத் தெல்லாம் அகஇருள் நீக்கக் கேட்டேம்!
    எங்கண்கள் உகுத்த வெள்ளம் ஆறாகப் பாயுமாறே!” (2)

    “காலனை யுதைத்த நீலக் கழுத்தனோ டுடன மர்ந்த
    கோலமே அழகுக்கெல்லாம் உயர்ந்தவோர் கோலமென்று
    ஞாலமே போற்றாநிற்கும் நங்கையை யருளக்கேட்டேம்
    சேலம்வாழ் அடியேம் பட்ட சிறுமைகள் நீங்குமாறே”. (3)

    “பச்சைப்பட் டுடுத்திக் கையில் பசுங்கிளியேந்தி வையம்
    மெச்சவே இலங்கா நிற்கும் மென்றொடி தாளில் வீழ்ந்தாங்
    கெச்சமென் வினைகளெல்லாம் எமைச்சேரா திருக்கக் கேட்டேம்
    கச்சைநெய்யடியேம் பட்ட கவலைகள் நீங்குமாறே”. (4)

    “வெள்ளியம் பலத்து றையும் விரிசடைக் கடவுள் தன்னை
    உள்ளியம் மணம்புரிந்த உமையவள் திருத்தாள் நண்ணிக்
    கொள்ளியாய்ச் சுடுமெம் மின்னல் குறைபட வருளக்கேட்டேம்
    வெள்ளிமீன் தோன்றுமட்டும் விம்மிநெஞ் சழுத வாறே”. (5)

    பாண்டியர் குலவிளக்காய்ப் பைந்தமி ழொளிவி ளக்காய்
    ஆண்டருள் செய்யுந் தாயின் அருங்கழல் போற்றிப் பாடி
    ஈண்டெமை வருத்து கின்ற இன்னல்கள் நீக்கக் கேட்டேம்
    நீண்டகோ புரத்தின் முன்னம் நெடுங்கிடை விழுந்தவாறே”. (6)

    “மஞ்சுவந் தின்னல் செய்த மாடமா நகரத் தார்தம்
    நெஞ்சிலே குடியிருக்கும் நேரிழை திருத்தாள் நண்ணி
    விஞ்சவே வருத்துகின்ற வினைகளை நீக்கக்கேட்டேம்
    பஞ்சுநெய்யடியேம் பட்டபழவினை நீங்குமாறே”. (7)

    “வெந்தநீறணிந்த பெம்மான் மேனியில் பகுதியாகி
    எந்தமிழ்ப் புலவர் யாத்த எழுத்துக்குப் பிள்ளையாகி
    அந்தமில் லாட்சி செய்யும் அன்னையை யருளக்கேட்டேம்
    நொந்த வெம்முடலம் பட்ட நோய்நொடி நீங்குமாறே”. (8)

    “நின்றகால் மாற்றி யாடி நேயத்தார் விருப்பந் தீர்த்த
    கொன்றையஞ் சடையன் நெஞ்சைக் கொய்பசுங் கிளியி னாளின்
    மன்றஞ் சேர்ந்தழுது பாடி மனக்குறை போக்கக்கேட்டேம்
    இன்றியாம் பட்டவின்னல் இப்போதே தீருமாறே”. (9)

    “கூடல்மா நகரந் தன்னைக் கொடுஞ்சினத் தாலெ ரித்த
    மாடமா தவளி னின்னல் மறுத்துரைத் தருளி னாளை
    நாடியெங் கவலை யெல்லாம் நலங்கெட வருளக்கேட்டேம்
    ஓடிச்செந் நெல்வி ளைத்த வையைபோ லோய்ந்த வாறே”. (10)

    நிறைவுரை

    பலருக்கும் இயலாத பாடுபொருள்! பலருக்கும் கைவராத இயல்பான நடை! பலருக்கும் வசப்படாத பக்குவச் சீர்கள்! பலருக்கும் துணைசெய்யாச் சீர் பிரிப்புக்கள். எளிய அறுசீர் விருத்தங்கள்! நிரலான பதிவு! தொன்மக் கதைகளின் சாரத்தைச் சொல்லியிருக்கும் உயர்தர பாங்கு! வினையெச்சத்தை இறுதியாக்கிக் காட்டும் வியத்தகு யாப்பறி புலமை!. மணிவாசகத்தைத் தான் பின்பற்றியே எழுதுவதைப் ‘பொல்லா வினையேன்’ என்னும் தொடரால் குறிப்பாக உணரத்தும் சதுரப்பாடு! வள்ளற் பெருமானுக்குப் பிறகு எளிவந்த பிரானாக இறைவனை வேண்டும் இதயம்! இத்தனையும் நிறைந்த காவியமாய் அமைந்த பதிகமே “பொல்லா வினையேம்” என்னும் இப்பதிகமாகும்! அறிவியல் வளர்ச்சிக்கு அஞ்சி ஓடும் பரபரப்பான வாழ்தடத்தில் இளைப்பாறும் தருவாக அமைந்த இந்தப் பத்தினால் முகநூல் தன் முகத்தைப் புதுப்பித்துக் கொள்கிறது! நானும் புதுப்பித்துக் கொண்டேன். நீங்களும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற பணிவான விண்ணப்பத்தோடு என்னின் ஐம்பது வயது இளைய தம்பி ஏகாபுரம் வெங்கடேசனை வாழ்த்தி நிறைவு செய்கிறேன்!

    (தொடரும்…)

    Share
  • மகாசிவராத்திரி மகத்துவம்!

    மகாசிவராத்திரி மகத்துவம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    “மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்” என்று நம்பிக்கை ஊட்டினார் ஞானசம்பந்தப் பெருமான். அவரால் அப்பரே என்று அழைக்கப்பட்டவர், “நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா” என்று அழைத்து “கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் – நற்றுணையாவது நமச் சிவாயவே” என்று உபதேசம் செய்தார். அவர்களின் பின்னர் வந்தவர் “மீளா அடிமை உமக்கே ஆளாய்” என்று இறைவனிடம் இயம்பி நிற்கின்றார். “ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி – உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரியும் செல்வமாகிய சிவனை”, “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று பணிந்து நின்று அதன் வழியில் எம்மையும் ஆற்றுப்படுத்துவராக மணிவா சகப் பெருமான் வந்து நிற்கிறார். இவர்கள் யாவருமே இறை நினைப்பினை மனமிருத்தி வாழ்நா ளெல்லாம் வாழ்ந்தவர்கள். இவர் கள் சமயநெறியின் வழியில் கால்பதித்து நின்றவர்கள் எனலாம். இவர்களை முன்னிறுத்தியே “நால்வர் வழியில் நடப்பது நன்று” என்றும், “நாலு பேர் சொல்லுவதைக் கேள்” என்றும் மரபாக வந்திருக்குமோ என்பதும் கருத்திருத்த வேண்டியதே. இவர்களின் சிந்தனை, செயற்பாடு, வாழ்வியல் முறைகள் அத்தனையுமே கோவிலாகவே இருந்திருக்கிறது என்பதுதான் முக்கியமாகும். கோவிலை மையமாகக் கொண்ட இவர்களின் செயற்பாடுகளிற் கிடைத்த அனுபவங்கள் எங்கள் சமய நெறியில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. முழுமுதற் கடவுளாய் எம்பிரான் சிவனையே இவர்கள் யாவரும் பணிந்து போற்றி, தங்களின் மனத்தைப் பக்தியால் பிணைத்து, உருக்கமாய் பல தெய்வத் திருமுறைகளாக ஆக்கி எமக்கெல்லாம் அளித்திருக்கிறார்கள். அவர்களின் அகத்தில் அமர்ந்திட்ட அந்த ஆதியும் அந்தமு மில்லா அரும்பெருஞ் சோதியான சிவனைக் குறித்து பல விரதங்கள் அனுடிக்கப்பட்டு வருவதை யாவரும் அறிவோம். அப்படி அமையும் அந்த அருட் சோதியான சிவனின் விரதங்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரிய தாகவும், ஆன்மீக. அறிவியல் கருத்துகள் நிறைந்ததாகவும் அமைகின்ற விரதம்தான் வருடந் தோறும் வரு கின்ற “மகா சிவராத்திரி” விரதமாகும்.

    மகிமை வாய்ந்த சிவராத்திரி என்பது  ஐந்துவகையினதாக இருக்கிறது  என்பது நோக்கத்தக்கத்தாகும். திங்கட்கிழமையோடு இணைந்து வருவது “யோக சிவராத்திரி”. வருடத்தின் பனிரெண்டு மாதங்களில் வருகின்ற தேய்பிறை, வளர் பிறைகளில் வரும் சதிர்த்தசி திதியில் வருகின்ற இருபத்து நான்கு நாட்களையும் “யோக சிவராத்திரி” என்னும் பெயரினால் அழைக்கின்றனர். தை மாதம் தேய்பிறை பிரதமை தொடங்கி பதிமூன்று நாட்கள் தினமும் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு, பதினான்காம் நாள் வருகின்ற சதிர்த்தசி திதியன்று முறையாக விரதம் இருப்பதுதான் “பட்ச சிவராத்திரி” என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரி என்பது பெரும்பாலும் அமாவாசை அல்லது சதிர்த்தசி திதியை அண்டியே வரும். ஆனால் “மாத சிவராத்திரி” மாதத்தின் மற்றைய திதிகளிலும் வருகிறது என்பது நோக்கத்தக்கதாகும். இப்படிச் சிவராத்திரிகள் இடம் பெற்றாலும் மாசி மாதத்து தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வருகின்ற சிவராத்திரியே “மகா சிவராத்திரி” என்று ஏற்றிப் போற்றி அனுட்டிக்கப்படுகிறது. ஐந்து சிவராத்திரிகள் என்னும் நிலையில் அவற்றுள் ஒன்றான சிவராத்திரிக்கு மட்டும் “மகா” என்று அடைமொழி கொடுத்து அதனை உயர்வாக எண்ணுவது ஏன் என்னும் எண்ணம் எம்முள் எழுகிறதல்லவா? அப்படி அந்த நாளில் சிவராத்திரி அமைவதற்கு ஆன்மீகம் முக்கியமா அல்லது அதனுடன் அறிவியல் முக்கியத்துவப்படுத்தப்படுகிறதா என் னும் சிந்தனைகள் எழுகின்றன அல்லவா!

    எங்களின் சமயம் வாழ்வியல் நெறிகளை முழுவதுமாய் உள்ளடக்கிய சமயமாகும். உணவு சம்பத்தப்படுகிறது. உடை சம்பத்தப்படுகிறது. உடற் சுத்தம் சம்பத்தப்படுகிறது. பரம்பொருளைப் பாடிப்பரவுதற்கு நல்லு டலும், நல்லாரோக்கியமும் அடிப்படையாகும். உடலின் ஆரோக்கியத்துக்கு உணவு என்றுமே இன்றியமை யாததாகும். இவை அனைத்தையும் தாங்கி நிற்பதாகவே எங்கள் சமயம் “விரதம்” என்னும் நிலையினை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம். அது கூடத் திட்டமிடப்பட்டே இருக்கிறது என்பது நோக்க த்தக்கதாகும். விரதம் என்று சொல்லும் வேளை அங்கே கோள்கள் சம்பந்தப்படுகின்றன. திதிகள் சம்பந்தப்படுகின்றன. கோள்களினால் நாள்கள் அமைகின்றன. நாட்களும், திதிகளும் ஆன்மீக மார்க்கத்தில் தத்துவத்தை, அறிவியலைக் குறித்திடும் நுட்பமான  சொற்கள் என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமேயாகும். இதன் அடிப் படையில்த்தான் நாம் “மகா சிவராத்திரியை ” பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

    சமயத்தின் நுட்பமான கருத்துக்களை யாவரும் விளங்க வேண்டும் என்ப தற்காகவேதான் கதைகள் வந்தன. கதைகளின் இன்னுமொரு நிலைதான் புராணங்கள் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் சிவராத்திரி எப்படி ஏற்பட்டது என்பதற்கு பல கதைகள் வழக்கில் வழங்கி வருவது  அனைவரும் அறிந்ததேயாகும். கதைகளை வைத்துக் கொண்டு சமயத்தையோ அல்லது அதன் தத்துவத்தையோ விமர் சிப்பதோ அல்லது கேலியாகப் பேசுவதோ ஏற்புடையதல்ல. இனிப்புத் தடவி அதனுள் மருந்தினை வைத்துக் கொடுப்பது போலத்தான், புராணக் கதைகள் சமய உண்மைகளை எடுத்து உரைக்கின்றன என்பதுதான் உண்மை நிலையாகும்.

    திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகால விஷத்தை எம்பெருமான் ஏற்று – தானே உண்டாரென்பதும், பிரம்மாவும், விஷ்ணுவும் ஆணவத்தால் முரண்பட்டு யார் பெரியவர் என்று நின்ற நிலையில் எம் பெருமான் ஜோதிப் பிளம்பாகத் தோன்றினார் என்றும் அவர்கள் அந்த ஜோதியின் அடியையும் முடியையும் தேடியும் காணொணா நிலையில் எம் பெருமான் அவர்களுக்கு உண்மையினை உணர்த்தினார் என்பதும், கண்ணப்பருக்கு எம்பெருமான் காட்சி கொடுத்தரென்றும், பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனுக்கு பாசுபாஸ்திரம் கிடைக்கச் செய்தாரென்றும், யமனிடமிருந்து மார்க்கண்டேயரை எம்பெருமான் காத்த தினமென்றும், பல கதைகள் வழக்கில் இருந்து வருகின்றன என்பது நோக்கத்த த்தக்கது. இவைதான் சிவராத்திரி என்றால் இதற்கு அப்பாலும் சிவராத்திரியின் சிறப்பு இருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியமாகும். அதுதான் – மகாசிவராத்திரி என்று மாசியில் ஏன் சிறப்பாக்கினார்கள் எங்கள் முன்னோர்கள் என்னும் அறிவியல் அணுகு முறையாகும்.

    நாங்கள் அனைவருமே பூமியிலேயே இருக்கிறோம். பிறப்பும், இறப்பும் யாவருக்கும் இந்தப் புவியிலே தான். உலகம் என்பது நாம் வாழுகின்ற இடம். இந்த உலகம் இயங்குவதற்கு ஒரு சக்தி கட்டாயம் தேவையானதுதானே. அந்தச் சக்தியைத்தான் “ஈத்தர்” என்று அறிவியல் சொல்லுகிறது.ஈத்தர் என்னும் சக்தியானது அண்டம் முழுவதுமே நிறைந்தே இருக்கிறது என்று அறிவியல் பகர்கிறது,

    பூமியானது சூரியனை சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதையில் சுற்றி வருகிறது என்பது வானியல் அறிவாகும். இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக் கு மாறுகின்ற நேரமாகத்தான் எங்களின்   “மகாசிவராத்திரி” வரும் நேரம் அமைகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே ஈத்தர் சக்தியின் அளவு அபரிதமாக இருக்கும். இப்படி அபரிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒரு முறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியை “மகாசிவராத்திரி”  என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும் .  

    மாசிமாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச்சக்தியும் கிடைக்கும் நிலை இந்த மகா சிவராத்திரிக்கே வாய்க்கிறது.

    மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்த சுரப்பி   மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே ஆசீர்வாதம் (Self Blessing) செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) ல் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

    ஈத்தர் சக்தி என்பது பகலிலும் உண்டு. இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்று க்குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத் திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமயரீதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

    ஆன்மீகத்துடன் அறிவியலைச் சித்தர்கள் இணைத்தே விட்டார்கள். சித்தர்களின் நோக்கில் சிவராத்திரி என்பது மிகவும் முக்கிய தினமேயாகும். அதுவும் மகாசிவராத்திரி உடலையும், உள்ளத்தையும், நல்ல நிலையில் வைப்பதற்கு மிகவும் உகந்த தினம் என்பதே அவர்களின் தீர்க்கமான முடிவாகும். சித்தர்களின் சிந்தனை பலருக்கும் விளங்க மாட்டாது. ஆனால் அவர்கள் உண்மைநிலையினையே உரைத்து நிற்பார்கள்.

    பசித்திருத்தல் என்பதும் தத்துவார்த்தமானது. அதாவது இறையுணர்வினைப் பெறுவதற்கு பசித்திருக்க வேண்டும். தனித்திருத்தல் என்பது தனிமையாக இருப்பதன்று. மனத்தினை அலையவிடாமல்ஒரு நிலையில் வைத்திருப்பதாகும். விழித்திருத்தல் என்றால் நித்திரை செய்யாது இருப்பதல்ல. மனத்தை எங்குமே செல்ல விடாது இறை நினைப்பை நாடி விழித்திருக்கும் நிலையினையே குறிப்பதாகும். இம்மூன்றையும் மகாசிவராத்திரியின் முக்கிய நிலையாக நாம் அனைவரும் கொள்ளுதல் வேண்டும்.

    விரதம் என்றாலே கட்டுப்பாடு என்றுதானே அர்த்தப்படும். கட்டுப்பாடு என்பது உடலுக்கு மட்டுமல்ல. உள்ளத்துக்குந்தான் என்பதை உணர்த்துவதே விரதத்தின் உயர் நிலையாகும். மகாசிவராத்திரியில் உடல் கட்டுப்படுகிறது. உள்ளமும் கட்டுப்படுகிறது. எம்முள்ளே அபரிதமான ஒரு சக்தியும் உள்நுழைகிறது. அந்தச் சக்தியினை உள்வாங்கும் பக்குவத்தை நாம்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    “தேடிக் கண்டு கொண்டேன் – திரு மாலொடு நான் முகனும்
    தேடிக் தேடொணத் தேவனை யென்னுளே தேடிக்
    கண்டு கொண்டேன் “

    இதுதான் உண்மையான நிலையாகும். அந்தத் தேவனை நாங்கள் அனைவருமே காணலாம். அதற்காகத் தான் யாவரும் – பசித்து, தனித்து, விழித்து, இருத்தல் அவசியமாகிறது.

    சிவனே முழுமுதற் கடவுள். சிவனே அனைத்துக்கும் காரணமாய் இருக்கிறார். அவரின்றி ஓர் அணுவுமே அசையாது. ஆதியும் அவரே. அந்தமும் அவரே. இருளும் அவரே. அதையகற்றும் பேரொளியும் அவரே. அவரை முன்னிலைப்படுத்தும் பெருவிரதமாக எங்கள் சமய நெறி கைகாட்டி நிற்பதுதான் “மகாசிவராத்திரி” ஆகும். அந்தப் புனிதமான தினத்திலே “தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி – அல்லல் அறுத்து ஆனந்தம்” தரும் வண்ணம், எல்லையில்லா அன்புடன் யாவரும் அந்தச் சிவப்பரம்பொருளை இறைஞ்சி நிற்போம்.

    இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலரும் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 44

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 44

    -மேகலா இராமமூர்த்தி

    கம்பராமாயணத்தில் தொண்டு என்ற சொல்லுக்கொரு முழுவடிவமாய்க் கம்பன் படைத்திருப்பது அனுமனை. உயர்ந்த பண்புநலன்களும் அறிவாற்றலும் வீரமும் விவேகமும் நிரம்பியவனாகவும், காப்பியத் தலைவனுக்குத் தேவைப்படும்போதெல்லாம் உதவும் சமய சஞ்சீவியாகவும் திகழும் இப்படிப்பட்டதோர் ஒப்பற்ற கதாபாத்திரத்தை வேறெந்த உலகக் கவிஞர்களும் படைக்கவில்லை என்றே சொல்லலாம்.

    கம்பராமாயணத்தில் ஐந்தாவதாயிருக்கும் சுந்தர காண்டத்தை அடுத்து ஆறாவதாக இடம்பெற்றிருப்பது யுத்த காண்டம். வான்மீகத்தை அடியொற்றியே காண்டத் தலைப்புகளைத் தன் காப்பியத்திற்குச் சூட்டியிருக்கின்றார் கம்பர் என்பது கருதத்தக்கது. இவற்றில் யுத்த காண்டம் ஏனைய காண்டங்களைவிடப் பாடல்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிது.

    கடல்காண் படலம் தொடங்கி விடைகொடுத்த படலம் ஈறாக 39 படலங்களைக் கொண்டிருக்கின்றது இக்காண்டம்.

    இராமகாதையின் தொடக்கத்தில், முடிசூடி மன்னனாகவிருந்த இராமனுக்கு அரசாட்சி செய்யும் முறைமை பற்றி அறிவுறுத்தும் வசிட்டர்,

    ”யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்
    போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது…”
    என்றுரைத்திருப்பார்.

    போரின் தீமைகளை வசிட்டரின் வாயால் பேசவைத்து அதனைத் தவிர்த்தலே நல்லரசனுக்கு அழகு என்று முழங்கிய அதே கம்பர்தான் யுத்த காண்டத்தையும் விரிவாய்ப் படைத்துள்ளார் என்பது நமக்கு முரணாய்த் தோன்றலாம்.

    எனினும், யுத்தம் இங்கே எதன் பொருட்டு நிகழ்ந்துள்ளது என்பதனையும் நாம் சிந்திக்கவேண்டும். நாடு பிடிக்கும் நோக்கத்திலோ, தானே பூமண்டலத்திற்கெல்லாம் இணையற்ற ஒரே பேரரசனாய்த் திகழவேண்டும் எனும் பேராசையின் பாற்பட்டோ இராமன் ஈண்டு இராவணனோடு போர் புரியவில்லை. மாறாகத் தன் மனையாளைத் திருட்டுத்தனமாய்க் கவர்ந்துசென்று அவளைத் தாங்கவொண்ணா வேதனைக்குள்ளாக்கிய ஓர் அரக்கனிடமிருந்து அவளையும் அவ் அரக்கனால் அடிக்கடி அல்லலுக்குள்ளாகும் ஏனைய நல்லோரையும் காத்தற்பொருட்டே யுத்தம் செய்கின்றான்.

    கத்தியால் ஒருவனைக் குத்திக் கிழித்தல் வன்முறை என்று கருதப்படுகின்றது. ஆனால், அதே கத்தியைப் பயன்படுத்தி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்யும்போது அச்செயல் நோயாளனின் உயிர்காக்கும் நற்செயலாய் மாறிவிடுகின்றது. கத்தியால் கிழிக்கும் அந்த மருத்துவரை நோயாளன் வெறுப்பதில்லை; விரும்பவே செய்கின்றான்.

    இதனையே,

    ”வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
    மாளாத காதல் நோயாளன்…”
    என்பார் குலசேகராழ்வார்.

    பயிர்களுக்கு இடையில் களை மண்டும்போது அதனைக் களைந்து பயிர்களைக் காத்தல்போல், உயிர்களுக்கிடையில் களைபோல் விளைந்து ஊறுசெய்ய விழைவோரை அழித்தல் பேராண்மையாளனின் கடன்தானே?

    அரசியல் அறிஞரான வள்ளுவர்,
    ”கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்.”
    என்று இதனை வலியுறுத்தவில்லையா?

    ஆதலால், இராமகாதையில் எழுந்த இராம இராவண யுத்தம் தவிர்க்க இயலாதது; போரின்றி வேறு எவ்வகையிலும் சீர்செய்யவியலாதது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    இனி காப்பியத்தைத் தொடர்வோம்!

    இராவணனோடு போரிட்டுச் சீதையை மீட்பதற்காகக் கிட்கிந்தையிலிருந்து புறப்பட்ட எழுபது வெள்ள வானரசேனை தென்திசை நோக்கிப் பயணித்துக் கடலை அடைந்தது.

    அப்போது மடிந்துவிழும் அலைகளுடன் காட்சியளித்த கடலின் தோற்றமானது, ”பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியை உடையவளும், கொடியேனாகிய நான் பெற்ற பாவையும், தவத்தின் பயனால் பிறந்த பாவை போன்றவளுமான சீதை அங்கே அரக்கருக்கிடையே தனியே இருந்து வருந்துதல் தகுமோ என மனம் தளர்ந்து, நன்முத்துக்களாகிய கண்ணீர்பொங்கி, அலைகளாகிய கைகளை விரித்துக்கொண்டு எழுந்துவந்து வள்ளல் இராமனின் மலர்போன்ற திருவடிகளில் வீழ்ந்து முறையிடுவதைப் போலிருந்தது” என்கிறார் கம்பர்.  

    இந்து அன்ன நுதல்பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்
    தந்த பாவை தவப் பாவை தனிமை தகவோ எனத் தளர்ந்து
    சிந்துகின்ற நறுந்தரளக் கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து
    வந்து வள்ளல் மலர்த் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறிகடலே.
    (கம்ப: கடல்காண் படலம் – 6067)

    சீதை பாற்கடலில் பிறந்த திருமகளாய்க் கருதப்படுதலால், ’கொடியேன் தந்த பாவை’ என்று கடல் தன் மகளின் அவல நிலைக்குத் தன்னை நொந்துகொண்டதாய்க் காட்சியமைத்துள்ளார் கவிவேந்தர்.

    கடலில் அலைகள் எழுந்ததுபோலவே இராமனின் மனத்திலும் தென் கடலைக் கடந்து இலங்கையை அடைதல் எங்ஙனம் எனும் சிந்தனை அலைகள் எழுந்துகொண்டிருந்தன. சிந்தனை வயப்பட்டிருக்கும் அண்ணலைத் தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு நாம் இலங்கைக்குச் செல்வோம் ஆங்கு நிகழ்பவற்றை அறிந்துகொள்ள!

    அனுமனால் எரியூட்டப்பெற்ற இலங்கை நகரம் தேவதச்சன் மயனால், பிரமதேவனின் வழிகாட்டுதலின்படி, மீண்டும் அழகுறப் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலே நடக்கவேண்டியவை குறித்து ஆலோசிப்பதற்காகத் தன் அரியணையில் அமர்ந்த இராவணன், முனிவர், தேவர், வித்தியாதரர், இயக்கர், பெண்கள், இளைஞர்கள் என அனைவரையும் தன் அவையிலிருந்து விலகிப்போகச் செய்தான்.

    கல்வியில் மேம்பட்ட அறிஞர்கள், நெடுநாள் பழகிய நண்பர்கள், நற்பண்புடையோர், தன்னைவிட்டு நீங்காத அமைச்சர்கள் முதலியோரையும் நெருங்கிய சுற்றத்தினருள் பிள்ளைகள், தம்பிமார்கள் ஆகியோரையும் மந்திராலோசனைக்குத் தன்னருகில் வைத்துக்கொண்டான்.

    மந்திராலோசனைக் கூட்டம் தொடங்கியது. இலங்கையை ஒரு குரங்கு எரித்தழித்தது என்பதனை எண்ணி வருந்திய இராவணன்,

    ”ஒரு குரங்கு சுட்டது; அதன் விளைவாய் நெருப்பு சூறையாட, கொடிகள் கட்டப்பட்ட இலங்கை மாநகரமே அழிந்து கெட்டது. உறவினர்களும் நண்பர்களும் இறந்துபட்டனர்; அவமானம் எங்கும் பரவியது. நேர்ந்த தீமையைத் தடுக்கவியலாத எனது உடலோ பலனின்றி இந்த அரியணையில் இருந்தது” என்று கழிவிரக்கத்தோடு பேசினான்.

    சுட்டது குரங்கு எரி சூறையாடிடக்
    கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும்
    பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும்
    இட்டது இவ்அரியணை இருந்தது என்உடல்.
    (கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6082)

    இராவணனின் கருத்தைக் கேட்ட அவனுடைய படைத்தலைவர்கள் ஒவ்வொருவராய் எழுந்து, நம் ஆற்றலுக்கு ஏற்றதாய் இல்லாவிடினும், அந்தக் குரங்கையும் அதனை ஏவிய மானிடரையும் அழிப்பதே நம் முதல் வேலை என்று வீராவேசத்துடன் முழங்கினர்.

    அரக்கர்களின் வீராவேச மொழிகளைச் செவிமடுத்துக்கொண்டிருந்த இராவணன் தம்பியாகிய கும்பகருணன், அவர்களின் வெற்றுரைகளை நிறுத்திவிட்டு,

    “தம்பியாகிய இவன் நமக்கு நன்மையே உரைப்பான் என்று நீ நம்புவாயாகில் உனக்கு நன்மையானவற்றை நான் எடுத்துரைப்பேன்” என்று சொல்லிவிட்டுத் தன் கருத்துக்களைக் கூறலானான்…

    ”அழகிய இலங்கை மாநகரைத் தீ உண்டமைக்கு வருந்தி, நமது ஆட்சியின் சிறப்பு அழிந்துவிட்டது என்று மனம் உளைந்தாய். அரக்கரினத்தைச் சாராத வேறோர் குலத்தவனான இராமனின் தேவியை விரும்பி நீ சிறைவைத்த செயல் மட்டும் நன்றோ? பாவம் செய்தவர் அடையும் பழிகளில் இதனினும் கொடிய பழி வேறுண்டோ?” என்று இராவணனை நோக்கிக் கேள்விக்கணை தொடுத்தான்.

    ”குற்றமில்லாத வேறொருவன் மனைவியை அழகிய சிறையிலே அடைப்போம்; குற்றமற்ற புகழை அடையவும் விரும்புவோம்; பெருமையோடு பேசுவதோ மானமிகு வீர உரைகள்! அதற்கிடையில் விரும்புவதோ காமம்; அஞ்சுவதோ மானுடரைப் பார்த்து; நம் வெற்றி நன்றாய் இருக்கின்றது!” என்றான் எகத்தாளமாக!

    ஆசில் பரதாரம் அவை அஞ்சிறை அடைப்பேம்
    மாசில் புகழ் காதலுறுவேம் வளமைகூரப்
    பேசுவது மானம் இடை பேணுவது காமம்
    கூசுவது மானுடரை நன்று நம கொற்றம்
    (கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6122)

    ”பரதாரம் அவை” என்ற கும்பன் பன்மையில் சுட்டியிருப்பதைக் காண்கையில் இராவணன் ”பரதாரங்கள்” (பிறர் மனைவியர்) பலரை நயந்திருப்பானோ எனும் ஐயம் எழுகின்றது.

    இவ்வாறு இராவணனின் இழிசெயல்களைக் கும்பகருணன் பட்டியலிட்டு உரைத்து வருகையில் இராவணன் முகத்தில் தெரிந்த மாற்றத்தைக் கவனித்தான். தான் கூறிய கருத்துக்களை அவன் விரும்பவில்லை என்பதை அது உணர்த்தவே தன் பேச்சின் போக்கினை மாற்றிய கும்பகருணன்,

    ”மன்னா! நீ பெரியவர்கள் செய்யும் நல்ல செயலைச் செய்யவில்லை; நம் குலமாகிய புலத்திய மரபுக்கே சிறுமைதரும் செயலைச் செய்துவிட்டாய். எனினும், மலர்க்குழலாள் சீதையை இனி இராமனிடம் செல்லவிடுவோமானால் நாம் வலிமையற்ற எளியவர்கள் என்றாகிவிடும். அதற்கு பதிலாய் அந்த மானிடர்கள் நம்மைப் போரில் வெல்ல நாம் இறந்துபடுவோமாயின் அதுவும் நல்லதே; நமக்குப் பழியுண்டாகாது!” என்றான்.   

    தொடர்ந்தவன், ”பகைவர் படை நம்மைத் தாக்க வருமுன் நாம் கடல்கடந்து சென்று அவர்களைத் தாக்கி அழித்துவிடுதல் வேண்டும்” என்று இராவணனின் மனத்துக்கு உகந்த வகையில் தன் கருத்தை வெளியிட்டான்.

    கும்பகருணன் கருத்தால் மகிழ்ந்த இராவணன், ”இப்போதே போருக்குப் புறப்படுவோம்” என்றுகூற, ஆலோசனைக் கூட்டத்திலிருந்த இந்திரசித்து சினத்தோடு எழுந்து, ”எந்தையே! நான் சென்று அந்த மானுடர்களையும் அவர்க்குத் துணைநிற்கும் குரங்குகளையும் வென்று வருவேன்; இல்லையேல் நான் உன்றன் மகனில்லை!” என்று வஞ்சினமுரைத்தான் வெஞ்சினத்தோடு.

    இந்திரசித்தின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த, நன்மைகளை நன்குணர்ந்தவனான, இராவணனின் இளவல் வீடணன், கோபத்தோடு பற்களால் உதட்டைக் கடித்தவனாய் எழுந்தான்.

    “இளமையால் அரசியல் முறையை எண்ணிப் பாராதவனே!  ஓவிய ஞானமில்லாதவனும், கண்பார்வை அற்றவனுமான ஒருவன் ஓவியம் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு இதனை நன்கு திருத்தியமைப்பேன் என்பதுபோல் நீ பேசுகின்றாய். அகவைமூத்த அறிஞர்களும், சிறந்த வினையம் உடையவர்களும் இருக்கத்தக்க மந்திராலோசனை சபையில் நீ இருத்தல் தகுமோ?” என்று இந்திரசித்தைச் சினந்துரைத்தான்.

    கருத்துஇலான் கண்இலான் ஒருத்தன் கைக்கொடு
    திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய்
    விருத்த மேதகையவர் வினைஞர் மந்திரத்து
    இருத்தியோ இளமையால் முறைமை எண்ணலாய்.
    (கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6137)

    இந்திரசித்தைக் கண்டித்த வீடணன் அடுத்து இராவணனுக்கு நன்மை பயக்கும் நல்லுரைகளை நவிலத் தொடங்கினான்.

    ”நமது தலைநகராகிய இலங்கையும், உன்னுடைய வெற்றியும் உலகின் தாயாகிய சானகி எனும் அந்தத் தேவியின் கற்பினால் வெந்ததே அல்லாது ஓர் வானரம் சுட்டது என்று நினைத்தல் அறிவுடைமையோ?”

    கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
    சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
    ஆனவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
    வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ. (
    கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6145)

    ”நீ ஒப்பற்ற தலைவனாய் ஏழுலகையும் வென்றவன்தான்; எனினும், ஆயிரம் தோளுடைய கார்த்தவீர்யன் எனும் மானுட மன்னனுக்குத் தோற்றாய். எனவே, மானுடர்க்குத் தோற்பதில் புதிது ஒன்றும் இல்லையே!

    பெரும! சம்பராசுரனை வென்ற பெருவீரனும் சூரிய குலத்தில் உதித்தவனுமான தயரதனுடைய புதல்வர்கள் இராமனும் இலக்குவனும். அவர்கள் முனிவர்களுக்கெல்லாம் தலைவரான அகத்தியரிடம் படைக்கலங்கள் பெற்ற சிறப்புக்குரியவர்கள்.

    புகழும் செல்வமும் உயர்ந்த நம் குலத்து இயல்பும் கெட, பழியும் தாழ்வும் மேலோங்க, உற்றார் உறவினரோடு நாம் அழியாதிருக்கத் தளர்ச்சியில்லாக் கற்புடை தெய்வமகளாகிய சீதையை இராமனிடம் விட்டருள்வாயாக. இதைவிடச் சிறந்த வெற்றி வேறில்லை!” என்று நயமாய் உரைத்தான் அறிஞரில் சிறந்தவனான வீடணன்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • வள்ளுவம் வழங்கும் வாழ்வியல் முறைகள்!

    வள்ளுவம் வழங்கும் வாழ்வியல் முறைகள்!

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    வள்ளுவத்தின் சிறப்பு

    தமிழிலே தோன்றிய பலநூல்கள் வாழ்வியலைப் பற்றிய கருத்துக்களை பலவாறு எடுத்துக்காட்டி இருக்கின்றன. அவைகள் கூறும் கருத்துக்கள் முழுமையானதாகவே எக்காலத்துக்கும் ஏற்றனவாகவோ இருகின்றனவா என்று பார்க்கின்ற பொழுதான் திருக்குறளை நாம் கூர்ந்துபார்க்க வேண்டியுள்ளது. வாழ்வியல் சம்பந்தமான கருத்துக்களைப் பகர்ந்து நின்ற நூல்களுக்கு மத்தியில் திருக்குறள் ஒன்றோ முன்னுக்கு நிற்கிறது என்பதே பலரதும் கருத்தாக இருக்கிறது.

    நூல்களை இரண்டுவகையாகப் பார்க்கலாம். அந்தக்காலத்துக்கு ஏற்றவை. எக்காலத்துக்கும் ஏற்றவை என்று வகைப்படுத்தலாம். இதேவேளை நூல்களைக் கற்கும் வகையிலும் இருவகைப் படுத்தலாம். முதலாவது எழுதிய காலத்துக்கே சென்று கற்பது. மற்றையது வாழும் காலத்திற்கு வந்து கற்பதாகும். இந்த வகையில் வள்ளுவமானது வாழும் காலத்திலேயே கற்கும் நூலாக விளங்கின்றது. ஆகையால்த்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாழ்வியல் நூலாக விளங்கும் பெருமையைப் பெற்றிருக்கிறது.

    திருக்குறள் தான் தோன்றிய காலம் முதல் இன்றளவும் தனித்துவம் மிக்கதாகவே விளங்குகிறது என்பதை எவருமே ஒத்துக் கொள்ளுவார்கள் அந்த அளவுக்கு அதன் அமைப்பும், அதில் சொல்லப்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன.  பகவத்கீதை வாழ்வுக்கு வழிகாட்டிதான். திருக்குரான் வாழ்வியலைக் காட்டும்  கருத்துக்கள் கொண்டதுதான். பைபைளில் கூட வாழ்வியல் கருத்துகள் காணப்படுகிறது. ஆனால் இவையாவும் சமயம் சார்ந்தனவாக இருக்கின்றன.

    கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னதுதான் வள்ளுவம். ஆகவேதான் திருக்குறள் எந்தவிதச் சமயச்சார்பும் கலவாத சமுதாயச் சிந்தனை மிகுந்த நூலாக இருக்கிறது. கூறப்படும் சிந்தனைகளும் யாராலும் கூறப்படாதன வாகவும், புரட்சிகரமானதாகவும், புதுமையானதாகவும் இருக்கின்றன.

    ஒருநூல் எழுதப்பட்ட காலத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் சிலகாலத்துக்கு மட்டுமே பொருந்துவதாகவே பெரும்பாலும் இருக்கும்.சிலவேளை எழுதப்பட்ட காலத்தோடே அக்கருத்துக்களும் வலுவிழந்தும் கூடப் போய்விடலாம் அப்படியான நூல்கள் நிலைத்து நிற்பது என்பது கடினமானதாகவே இருக்கும். ஆனால் எழுந்த காலம் தொடக்கம் இன்றுவரை ஏன் இன்னும் பலகாலங்களுக்கும் நிலைத்து நிற்கும் அளவுக்குச் சிந்தனைக் கருவூலங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பெருமை திருக்குறள் நூல் பெற்றிருப்பதால்த்தான் அது வாழும் நூலாக வாழ்வியலைக் காட்டும் நூலாக இருக்கிறது என்பதை யாவருமே ஏற்றுக் கொள்வார்கள்.

    உண்டோம், உடுத்தோம், உறங்கினோம், என்பது வாழ்க்கையல்ல.வாழ்க்கை என்பது இவற்றுடன் அடங்கிவிடுகிறது என்னும் அபிப்பிராயம் பெரும்பாலும் எம்மிடையே காணப்படுகிறது. விலங்களும் சாப்பிடுகின்றன. உறங்கிவிடுகின்றன. நாமும் அப்படியிருந்தால் அதன் அர்த்தம்தான் என்ன? மனிதன் என்றால் அவன் சிந்திக்கத் தெரிந்தவன். பகுத்தறியும் தன்மை பெற்றவன். அவன் வாழ்வும் விலங்கு வாழ்வும் ஒன்றாகுமா?

    எனவே மனிதனது வாழ்வு இப்படித்தான் வாழவேண்டும்  என்னும் நிலைக்குள் இருந்துவிட்டால்த் தான்  அங்கு வாழ்வியலைப் பார்க்கமுடியும். இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்குப் பலவழிக ளைத் தேர்ந்து அவற்றை வழங்கி நிற்பதால்த்தான் வள்ளுவம் மிகச்சிறந்த வாழ்வியல் நெறியாகி நிற்கிறது எனலாம்.

    வள்ளுவம் காட்டும் வழிகளை உலகிலுள்ள அனைவரும் கடைப்பிடித்தால் மிகவும் உன்னதமான வாழ்வு அவர்களுக்குக் கிடைத்துவிடும். யாவரும் அறத்தின் வழியில் வாழுதல்  வேண்டும். அறத்தின் வழியில் பொருள் தேடுதல்வேண்டும். அறத்துடன் அன்பினையும் இணைக்கவேண்டும். அறமும் அன்பும் இணையும்வேளை அத்துடன் ஒழுக்கத்தையும் சேர்த்துவிடல் மிகவும் முக்கியம் என்பதுதான் வள்ளுவத்தின் தத்துவம்.

    வாழ்வியல் முறைகள்   

    எப்படியும் வாழலாம் என்று மனம்போன போக்கிலே வாழ்ந்தால் வாழ்க்கை வாழ்க்கையாக இருந்து விடாது. வாழ்வென்றால் அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். குறிக்கோள் அற்ற வாழ்க்கை குருட்டு வாழ்க்கையாகும். சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்குக் கிடைத்திருக்கும் பெரும் வரப்பிரசாதமாகும். பகுத்தறியும் பாங்கு என்பது மனிதனை மாநிலத்தில் உயர்த்திவைப்பதற்குக் காரணமாய் இருக்கின்றது.

    விலங்காக  மனிதன் விலங்குகளுடன் காட்டில் இருந்த நிலையைக் கடந்து நாட்டில் நாகரிகமாக வாழும் நிலைக்கு வந்ததுவிட்ட பின்னரும்கூட மனிதனாக வாழ எண்ணாவிட்டால் மனிதவாழ்வுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் அல்லவா? எனவே கல்வியியும், கற்றலும், வாழ்வியலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதுதான் வள்ளுவத்தின் நிலைப்பாடாகும். கல்வி என்றால் என்ன என் பதை முதலில் தெரிந்துகொள்ளுதல் அவசியமானதாகும். கல்விபற்றி நோக்கங்கள் பல சொல்லப்பட்டாலும் – அதன் பிரதான நோக்கம் -“சுயசிந்தனையும் மனித நேயமிக்க மனிதனை உருவாக்குவதுமேயாகும்”  அதனூடாக தெள்ளிய அறிவு, நன்னடத்தை, மனிதத்துவம், இறைபற்றிய உணர்வு, ஏற்படுகிறது என்பதுதான் முக்கிய அம்சமாகும்.

    இவற்றை எல்லாம் உள்வாங்கிய வள்ளுவம் முதலில் என்ன சொல்லுகிறது என்றால் “கற்க” என்று தொடங்குகிறது. கற்க என்ற பொழுதே எம்மிடம் ஒரு விழிப்பு ஏற்படுமல்லவா? அது எப்படியிருக்கும் என்று ஆராயும் எண்ணம்கூட ஏற்படலாம் அல்லவா? அதன்பின்னர்தான் அடுத்து என்னதான் இருக்கிறது என்ற ஆவலை எம்மிடத்தில் உருவாக்கி.. “கசடறக்” என அடுத்த நிலையினை வள்ளுவம் காட்டிய பின்னர் எவற்றைக் கற்கவேண்டும் என்பதை .. “கற்பவை” என்று வரையறுத்துச் சொல்லியபின்னர்.. மிகவும் முக்கியமான இடத்துக்கு வள்ளுவம் வந்து நிற்கிறது. அதாவது  .. ” கற்றபின் நிற்க அதற்குத் தக” கற்று முடித்து விட்டால் மட்டும் போதாது கற்கும் பொழுது எவற்றையெல்லாம் கற்றோமோ அதன்படி வாழ் வினை அமைத்து வாழுவதுதான் கற்றதன் பயன்பாடு என்று நிறைவாக இந்த வரிகளால் வள்ளுவம் காட்டி நிற்கிறது.

    இங்கே சுட்டப்பட்ட வழிகள் கல்வி உளவியல் சார்ந்ததாகும்.தூண்டலும் அதைத் தொடர்ந்து நல்ல துலங்குதலும் கல்வியால் அதுவும் நல்ல கல்வியாலும். கற்றலாலும் எற்படும் என்பது கல்வியியலாளர்களின் எண்ணமாகும். அந்தக் கல்விச்சிந்தனை வாழ்வியல் வழியுமாகும் என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்து எங்களுக்குத் தந்த வள்ளுவத்தின் சிறப்பினை என்ணெயெண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்ளுதல்  வேண்டுமல்லவா!

    கல்விபற்றிய வள்ளுவத்தின் பார்வை குறுகிய பார்வையல்ல. அது உலகம் தழுவியதாகும். இது ஒரு பொதுப்பார்வை எனலாம். கற்பது.. தேர்ந்து கற்பதும், அதன் வழி வாழ்வில் நடப்பதும் என்பது யாவருக்கும் ஏற்றதே! இதில் மொழியில்லை. மதம் இல்லை.இனம் இல்லை .நாடுகூட சுட்டப்படவில்லை. இந் தவகையான வாழ்வியல் முறையக்கூறிய வகையால் உலகநூல்களில் வள்ளுவம் உயர்ந்தே நிற்கிறது எனலாம்.

    பல நூல்கள்-  இயற்கை, வீரம், காதல், வெற்றிச் செய்திகள், சமயக்கோட் பாடுகள் என்னும் ரீதியில் பொதுமைக் கருத்துகளை வெளிப்படுத்தி நின்றதைப் பார்க்கின்றோம். அப்படியான நூல்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்து  மாறு பொதுவியல்புகளை பெரும்பாலும் வெளிப்படுத்தும் நிலையில் அமைந்திருக்கவில்லை. ஆனால் வள்ளுவமோ – அறவியல், அரசியல், பொருளியல், இல்லறவியல், இன்பவியல், எனவகுத்து யாவற்றையும் வாழ்வியல் ஆக்கியிருக்கிறது. இதனால் வள்ளுவத்தின் வாழ்வியலானது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தமிழினத்துக்கு மட்டுமல்ல உலக மாந்தர் அனைவருக்குமே பொருந்துவதாக இருக்கின்றது என்பது மனங் கொள்ளத் தக்கதாகும்.  அறத்துக்கு முதல்வனாகிய இறை வனை முதலாகக் கொண்டுதான் இந்த உலகம் இயங்குகின்றது என்பதுதான் “வள்ளுவத்தின் தொடக்க மேயாகும்.

    அகர முதல எழுதெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    இறைமை என்பது இயற்கை.அதனுடைய பொதுமை இயக்கமே அறத்துக்கு முதல் வடிவமாகும். ஆகவே இறைமையே இயற்கை. இயற்கையே அறம். அறமே பொதுமை. பொதுமையே வாழ்க்கை. இவற்றில்  வேறுபாடுகள் மாறுபாடுகள் இருக்கும். ஆனால் உணர்வு எனப்பார்க்கும் பொழுது அது ஒன்றுதான் அதைத்தான்  பொதுமை என்கின்றோம். இப்பொதுமை உணர்வு நோக்கியே அனைத்து மக்களது வாழ்க்கையும் இயங்குதல் வேண்டும் என்பதே பொதுமைக் கொள்கைக்கு மூலமும் வேரும் ஆகும் என்பதையே முதற்குறளில் வள்ளுவம் தெளிவாக்கி நிற்கிறது.

    கல்விகற்று அதன்படி நிற்கவேண்டும் என்று சொல்லிய வள்ளுவம் கல்வியின் பயனைக் காட்டும் பொழுது இறைவனை உணர்தலும் பணிவதும்  என்று வாழ்வாகக் காட்டி நிற்பதும் நோக்கத்தக்கதே. இந்த இடத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்தமுறையை எப்படி தமக்கு வாழ்வியலாக்க முடியும் என்றொரு வினாவும் எழுமல்லவா ? அதற்காகவேதான் “வாலறிவன்” என வள்ளுவம் சொல்லி நிற்கிறது.இங்கு எந்தக் கடவுளும் குறிக்கப் படவில்லை. வாலறிவு என்றால் – தூய்மை ஆன அறிவு என்றும் கொள்ளலாம். அதாவது கற்றபின் ஏற்படும் அறிவில் தூய்மை என்பது – அறியாமயை நீக்கி எல்லாவற்றையும் அறியும் நிலையைப் பெறுகின்ற நிலையாகும்.மக்கள்; முழுவதையும் உணரும் நிலையை அடைவதையே வாலறிவன் (இறைவன்) எனக் குறிப்பிடுவதால் நாத்திகம்பேசுகின்ற வர்களுக்கும் வள்ளுவத்தின் இந்த வாழ்வியல் முறை பொருந்தியதாகவே இருக்கிறது.

    வள்ளுவம் கடவுளை நம்புகிறது.அது ஆணுமல்ல பெண்ணுமல்ல. வள்ளுவத்தின் கடவுளுக்குக் கோபுரங்களும் இல்லை. கோட்டைகளும் இல்லை.. வள்ளுவத்தின் கடவுளுக்குக் கணக்குமில்லை. வழக்குமில்லை. அதற்குப் பெயர் பேரறிவு! தூய்மையான அறிவு! குணங்களின் திரு உரு! இன்பத்தின் திரு உரு! அன்பின் திரு உரு! அறத்தின் திரு உரு! இதனை ஆத்திகரும் ஏற்றுக் கொள்வார்கள். நாத்திகரும் ஏற் றுக்கொள்வார்கள். இதுதான் பொதுமையான வாழ்வியல் நெறியாகும். இதனை இன்றைய நிலையில் யாவரும் ஏற்றுக்கொள்வார்கள் அல்லவா!

    தூய்மையான அறிவு வந்தால் அங்கே நல்லறமும் இணையவேண்டும். அறம்தான் யாவற்றுக்கும் அத்திவாரமாகும். அறத்துடன் இணைந்து வாழ்வு அமைந்துவிட்டால் ஆனந்தம் அங்கே அமர்ந்தே இருந்துவிடும். செயல்கள் அனைத்துக்கும் சிந்தனையே அடிப்படையாகும். சிந்தனையின் நிலைக்களனாக இருப்பது மனமாகும். நாம் செய்யும் செயல்கள் பலவற்றில் தூய்மைகாண வேண்டும் என்று தனித்த னியாக முயல்வதைவிட செயல்கள் அனைத்திற்கும் பொறுப்பாக உள்ள சிந்தனையைத் திருத்தி மனத்தை மாசின்றிவைத்துக் கொள்ளுவதுதான் நல்லதும் சிறந்ததுமாகும்.

    “இதைத்தான் மனதுக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்று வள்ளுவம் தொட்டுக் காட்டுகிறது. மனத்திலே மாசு இல்லாவிட்டால் அதுவே மிகச்சிறந்த  அறம் என்னும் வாழ்வியல் முறையை வள்ளுவம் காட்டுவது உலகத்துக்கே உகந்ததாகும்.      இன்றைய  நிலையில் மனத்திலே ஏற்படும் அழுக்கினால்த்தான் எங்குபார்த்தாலும் சண்டையும் சச்சரவுகளும் மலிந்து காணப்படுகின்றன. சாந்தியும் சமாதானமும் காண்பதென்பது  முயற்கொம்பாக இருக்கிறது.

    அரசியல் செய்வார்கள, படித்துப் பட்டம்பெற்று பலபதவிவகிப்பார்கள். வைத்தியத்துறை சார்ந்தவர்கள், நீதித்துறை உள்ளோர்கள், யாவருமே மனத்தில் மாசுள்ளவராக விளங்குவதால் மனிதவாழ்வே அர்த்தமற்றதாகிவிடுமோ என்னும் பயமே தோன்றி இருக்கிறது. இந்த அவலம் மாறவேண்டுமானால் அனைவருமே வள்ளுவத்தின்படி “மனத்துக்கண்  மாசில்லாமல் வாழுதல்” அவசியமானதாகும்.

    மாசற்ற மனம் யாவருக்கும் அமையும் பொழுது நல்ல ஒழுக்கமும் வந்தமையும் நிலையும் எழலாம் அல்லவா? ஒழுக்கும் என்பது உயிரிலும் மேலானது என்பது வள்ளுவத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இதனால் ஒழுக்கத்தை வாழ்வியல் ஆக்கியிருக்கின்றது வள்ளுவம். இந்த ஒழுக்கமானது தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம், உலகுதழுவிய ஒழுக்கமாகாவும் விரிவடைய வல்லது. ஒழுக்கத்தால் என்ன வரும்? ஒழுக்கத்தால் சிறப்பு வரும்! உயர்வு வரும்! அதனால் ஒழுக்கமானது உயிரிலும் மேலானதாகும் என்று வள்ளுவம் சொல்லுகிறது.

    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.

    ஆடை அணிகலனோ, பட்டம்பதவிகளோ, வைர வைடூரியங்களோ, பற்பல வாகனங்களோ, மாடிமனை களோ, பட்டுப்பீதாம்பரங்களோ, மந்திரிப்பதவிகளோ, சிறப்புத்தர மாட்டாது. சிறப்பைத் தரவேண்டுமென்றால் அதனைஒழுக்கம்தான் தரும் என்பதுதான் வள்ளுவத்தின் நிலையாகும். அப்படியான ஒழுக்கத்தைக் காப்பாற்றுவது எப்படி என்பதையும் அறியவேண்டும் அல்லவா?

    வீடிழந்தால் மீண்டுமொன்றைவாங்கலாம் அல்லது கட்டிக்கொள்ளலாம். மனைவி இறந்தால் மறு தாரம் மணம்செய்து கொள்ளலாம். பொருளை இழந்தால் பின்பு உழைத்துக்கொள்ளலாம். ஆனால் போனால் வராத பொருள் இரண்டு. ஒன்று ஒழுக்கம். அதாவது மானம். மற்றொன்று உயிராகும். இரண்டுமே போனால் போனதுதான். சிலவேளை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் போன உயிரை ஒரு வேளை மீட்டாலும்.. போனமானத்தை எந்தக்கண்டு பிடிப்பாலுமே திரும்பக் கொண்டுவர முடியவே முடியாது. எனவேதான் “உயிரினும் ஓம்பப்படும்” என்று வள்ளுவம் வலியுறுத்திக் காட்டி இருக்கிறது. அதாவது உயிரைக் காப்பாற்ற எப்படியெல்லாம் வாழ்வில் போராடுகின்றோமோ அப்படி..  ஒழுக்கத்தையும் காப்பாற்றி நிற்கவேண்டும் என்பதுதான் வள்ளுவத்தின் வாழ்வியல் முறையாகும்.

    இன்றைய இளந்தலை முறையினருக்குக் கட்டாயம் ஒழுக்கத்தைப் பற்றி வள்ளுவம் சொன்னதை மனதில் படியப்பண்ணுதல் வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே  கோலம் என்றலைகின்ற மனப்பாங்கை மாற்ற வேண்டும். இளந்தலைமுறையினருக்கு அறிவுறுத்துவதற்கு வளர்ந்தவர்களும் ஒழுக்கமுடன் வாழ்ந்துகாட்ட வேண்டியது மிக மிக அவசியமானதாகும். ஒழுக்கம் என்று பார்க்கின்ற – பொழுது போதைப் பொருள்ப்பாவனை, சூதாடுதல், கொலைசெய்தல், விபசாரம், யாவும் இவற்றுள் அடங்குகின்றன. போதைப் பொருள்ப் பாவனையால் படிக்கும் மாணவ சமுகமே தறிகெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. கல்விக் கூடங்களிளெல்லாம் போதைப் பொருட்கள் பயன்படுத்தல் மலிந்து காணப்படுகின்றதென நாளும் வருகின்ற செய்திகளால் அறிந்து – வேதனைப்படுகின்றோம். இந்த நிலையில் வள்ளுவத்தின் “கள்ளுண்ணாமை” என்னும் வாழ்வியல் தத்துவம் மிகவும்இன்றியமையாததாகவே இருக்கும்.

    அறிவைக் கெடுப்பதுகள்ளாகும். அதாவது போதைப் பொருட்களாகும். அறிவு இழந்தால் அனைத்துமே இழந்தமாதிரித்தானே! எந்தப்பிழைகள் செய்தாலும் தாங்கும் தாய்கூட கள்ளுண்ணும் பிள்ளையைக் காறி உமிழ்ந்து வெறுத்து நிற்பாளாம் பெரியவர்கள் கூட இவர்களை வெறுத்து ஒதுக்கி விடுவார்களாம்.

    ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்று
    சான்றோர் முகத்துக் களி.

    அன்புசெலுத்தும் அம்மாவும் , அருள் செலுத்தும் பெரியோர்களும் கள்ளுக்குடியனை கண்டாலே வெறுத் தொதுக்கி விடுவார்கள் எனும் நிலை வாழ்வில் தேவைதானா?

    இளம் தலைமுறையினரே எண்ணிப்பாருங்கள்! கள்ளினால் அறிவு மழுங்க என்ன செய்கிறோம் என்று தெரியாத மயக்க நிலையில் கொலையும் செய்து, கொள்ளையிலும் ஈடுபட்டு வாழ்வினையே நரகமாக்கும் வழியில் செல்லுதல் தகுமா! வெறி ஏறினால் நெறியங்கே இறங்கிவிடும். நெறி பிறழ்ந்தால் நீசத்தனம்தான் தலைவிரித்து ஆடும் !

    இதனை இன்று கல்விக்கூடங்களிலும்,  வேலைத்தலங்களிலும், பார்க்கின்றோம். குடியால் வீதியில் கொலை! பல்கலைக்கழக விடுதிகளிலே கொலை! இவை தேவையா எனச் சிந்திக்கும் பொழுதுதான் வள்ளுவத்தின் அவசியம் யாவருக்கும் தேவைப்படுகின்றது. கள்ளுண்பது நஞ்சுண்பதற்குச் சமமாகும்.  நஞ்சை விரும்பாதீர் நல்லதை விரும்புங்கள் என்கிறது வள்ளுவம்.  குடி குடியைக் கெடுக்கிறது.காமமும் வாழ்வையே அழிக்கிறது. காமத்தை அளவோடு, பக்குவமாகக் கையாண்டால் அது இல்லற இன்பமாக மலரும். ஆனால் அதேகாமத்தை துஷ்பிரயோகம் செய்தால் எல்லாமே அழிந்துவிடும்.

    இன்று உலகையே உலுக்கி எடுத்துக் கொண்டிருப்பது எது தெரியுமா? அதுதான்  எயிட்ஸ் என்னும் பிசாசாகும். இது பிடித்துவிட்டால் விடவே விடாது. இதனால் இதன் பெயரைக் கேட்டாலே மரணபயமே முன்னிற்கிறது .இதற்குக் காரணம்தான் என்ன? வரம்பற்ற காமமேயாகும். “அளவுக்கு மிஞ்சினால் அமுத மும் நஞ்சு” என்பதை மறந்த காரணமே இந்தப்பயங்கரமாகும்.

    பெண்கள் வரம்புமீறுவதோ ஆண்கள் வரம்புமீறுவதோ கூடாது. வரம்பை மீறியதன் விளைவுதான் எயிட்ஸின் வருகை எனலாம். உள்நாட்டிலும்சரி, வேலைக்காகப், படிப்புக்காககப் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலும்சரி, வரம்புமீறினால் விபரீதம் வரும் என்பதை “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்னும் மந்திரமொழியால் வள்ளுவம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் சொல்லிய வாழ்வியல் நெறி இப்போதும் ஏற்றத்தக்கதாக இருக்கிறதல்லவா!

    காமம் எப்படியெல்லாம் மனிதவாழ்வைப் படாதபாடு படுத்துகிறதோ அப்படிதான் கோபமும் அமை ந்துவிடுகிறது. சினத்தின் உச்சத்தால் வெடித்ததுதான் உலகத்தின் போர்கள் எல்லாமே! தனிப்பட்ட சினம் தன்னையழிப்பதோடு தன்னைச் சேர்ந்தவர் களையும்கூட அழித்துவிடும்  கொடூரமானதாகும். ஹிட்லர் என்பவனின் கோபம், முசோலினி என்பவனின் கோபம்,ஜார்மன்னர்களின் கோபம், பிரிட்டிஷாரின் கோபம், உலகின் அழிவுகளுக்கு வித்திட்டன. இன்றுவரை உலகின் பல பாகங்களிலும் அரசியல் தலை மைகளின் அடங்காத கோபத்தால் சண்டைகள் ஓயாமல் நடந்தபடியே இருக்கிறது. அழிவுகளும் தொடர்கின்றன. அழிவுகள் அகலவேண்டுமானால் சினம் அடங்குதலே சிறந்த மார்க்கமாகும். இந்த இடத்தில் வள்ளுவம் காட்டும் –

    சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
    ஏமப் புணையைச் சுடும் .

    என்னும் வாழ்வியல் தத்துவம் மிகவும் மிகவும் பயனுடையதாகவே இருக்கிறது அல்லவா! இதனால்த் தான் சினத்தை நெருப்புடன் இணைக்கின்றது வள்ளுவம். “சேர்ந்தாரைக் கொல்லி” என்று மிகவும் நுட்பமான கருத்தை நெருப்புக்கு வைத்தமை வள்ளுவத்தின் திறனல்லவா? யார் சேர்ந்தாலும் நெருப்பு – வைத்துப் பார்க்கமாட்டாது. பொசுக்கியே விடும்.அதே அளவு சக்தி சினத்துக்கும் இருக்கிறது என்று காட்டியிருப்பதில் இருந்து சினம் என்பது  – எவ்வளவு பயங்கரமானது என்பதை மக்களனைவரும் ஏன் உலகமே உணரவேண்டும் என விரும்பிய வள்ளுவத்தைப் போற்றாமல் இருக்க முடியுமா? இஸ்ரேலி யர்களுக்கும், பாலஸ்தீனயர்களுக்கும், உலகின் தீவிரவாதக் கூட்டங்களுக்கும் வள்ளுவத்தின் இந்தப் போதனையை உணர்த்தினோமேயானால் சாந்தியும் சமாதானமும் அங்கு உதயமாகும்!

    சினம் மக்கள் வாழ்வியலைச் சீரழித்துவிடும் என்பதால் அதனை புறந்தள்ளி விட்டு விட்டு – யாவரும் அன்பை வளர்த்தல்அவசியமானதாகும். அன்பு என்பது யாவரையும் உயர்தும். அன்பு என்பது யாவரையும் மகிழ்ச்சிப்படுத்தும். அன்புடன் இருப்பதுதான் வாழ்வினுக்கு அர்த்தத்தையே ஏற்படுத்தும்.

    அன்பு இல்லாதவர்கள் உலகத்தில் இருக்கின்ற அனைத்து இன்பங்களும் தமக்கு மட்டும்தான் என்றே எண்ணுகிறார்கள். அவர்களது நினைப்பு தவறானதாகும். ஆனால் அன்புகொண்ட நெஞ்சத்தாரோ – தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தினாலும் உதவியே நிற்கின்றார்கள்.

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.

    உயிர்வளர்ச்சி என்பது – உடலாலும் அறிவாலும் அன்பாலும் வளர்வதாகும். அறிவும் அன்பும் வளராத உடல்வளர்சி உண்மையான வளர்ச்சியாகாது. ஆகையால் அன்பு இல்லாதவர்கள் எல்லா நன்மைகளும் தமக்கே வந்து அமையவேண்டும் என்று எண்ணுவது – அவர்களிடம் அன்பு வளர்ச்சி, அறிவு வளர்ச்சி இல்லை என்பது மட்டுமல்ல – வெறும் உடல் வளர்ச்சி மட்டுமே பெற்றிருக்கின்றார்கள் என்பதும், அந்த உடல் வளர்ச்சியுடனேயே அழிந்து ஒழிந்து விடுவார்கள் என்ற உண்மையயும் வள்ளும் காட்டும் பாங்கு வாழ்வியலில் முக்கிய எச்சரிக்கை அல்லவா !

    வள்ளுவம் காட்டிய “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பதை வாழ்வியல் ஆக்கி வாழ்ந்து காட்டியவர்தான் அல்பேணியா ஈன்றெடுத்த அன்னை திரேசா என்னும் அன்பின் திருவுரு என்பதை யாவரும் நினைத்துப் பார்ப்பது அவசியமே! எங்கிருந்தோ வந்து இன்னார் இனியார் என்று எண்ணாது அன்னையவர்கள் ஆற்றிய பணி வள்ளுவத்தின் வழியல்லவா? வள்ளுவம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் நாம்தான் அதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறோம்.!

    உள்ளத்து உயர்வுக்கு வாய்மையும் முக்கிய காரணம் ஆகிறது. வாய்மைவழி உலகம் நிற்கவேண்டும், உலகமக்கள் உள்ளத்தால் பொய்யாது இருக்கவேண்டும் என்பதே  வள்ளுவத்தின் இலட்சியமே ஆகும். ஒவ்வொருவரும் உள்ளத்தால் பொய்யாது  ஒழிகினால் உலகத்துக்கே உவந்தவனாக எல்லோரும் கொண்டாடும் ஒருவனாக வருவான் என்று நம்பிக்கையை சொல்லி நிற்பதுதான் வள்ளுவத்தின் வாழ்வியலாகும்.

    உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
    உள்ளத்துள் எல்லாம் உளன்.

    இதன்படி வாழ முடியுமா என்று கேட்காதீர்கள்! வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஒருவர். அவர்தான் அண்ணல் தேசபிதா மகாத்மா காந்தி அவர்கள்.காந்தி அவர்களின் பிரிவுச்செய்தி பரவியவுடன் “புத்தருக்குப் பின் இந்தியாவில் தோன்றிய மாமனிதர் மறைந்துவிட்டார்”  என்று உலகத்தலைவர்கள் தமது மனக் கிடைக்கையை வெளிப்படுத்தினார்கள். அதுமட்டுமல்ல நடந்துகொண்டு இருந்த ஐக்கிய நாடுகளின்சபையின் கூட்டமே ஒத்திவைக்கப்பட்டது.உலக நாடுகள் அனைத்திலும் அந்நாட்டுக் கொடிகள் அரைக்கம்பத்தில்பறக்க விடப்பட்டன.இங்குதான் வள்ளுவத்தின் வாழ்வுநெறியை மகாத்மா காந்தி அவர்கள் உலகுக்கே உணர்த்திய உத்தமராகி நிற்கின்றார்!  

    வள்ளுவத்தின் உன்னதம்

    “வள்ளுவரைப் போல் மிகப்பெரிய ஞானக்களஞ்சியத்தை வழங்கியவர்கள் இந்தவுலகில் எவரும் இல்லை” என்னும் சிந்தனை மகாத்மா காந்தியின் சிந்தனையாகும். அதனைத் தனது வாழ்வியல் ஆக்கிய படியால்த்தான் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் அமரும் நிலையினைப் பெற்றார் என்பது யாவருக்கும் நல்லதொரு எடுத்துக் காட்டு அல்லவா!

    இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்  என்னும் நூலில் –  “திருக்குறள் இல்லாமல் இந்தியச் சிந்தனை என்பது முடிவில்லாததாகும்” என்று ஆல்பிரட் ஸ்வைட்சர் என்னும் அறிஞர் போற்றி நிற்கின்றார்.

    “ஒழுக்கமே மனிதனுடைய உயர்ந்த குறிக்கோளாக இருக்கவேண்டும் என்பதை மிகுந்த உறுதியோடு வள்ளுவர் கூறியிருக்கிறார். ஒவ்வொருவரும் தனக்குள் தானே செய்ய வேண்டிய கடமை என்ன? மற்றவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்ன? என்பனவற்றையெல்லாம் சிறந்த பண்பாட்டோடும், மதிநுட்பத்தோடும், வள்ளுவர் பேசுகிறார். உலக இலக்கியங்களுள் இத்தகைய மாண்புமிக்க மெய்யறிவு வேறு எந்த நூலிலும் இத்தனை சிறப்பாகப் பொலிவுறவில்லை என்று சொல்லலாம் “என உலக அறிஞரான ஆல்பர்ட்  ஸ்வைட்சர் போற்றி உள்ளார். அதுமட்டுமல்ல” பிற இந்திய மொழி நூல்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்துகின்றன. ஆனால் திருக்குறளோ வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உடன்பாட்டினை உணர்தும் நூல் என்றும் விதந்து கூறுகின்றார். இதிலிருந்து வள்ளுவம் என்பது மிகச்சிறந்த வாழ்வியல் என்பது புலனாகிறதல்லவா!

    பல உலக மொழிகளில் வள்ளுவம் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எதற்காக இப்படிச் செய்யப்பட்டது என்பதை உற்றுநோக்கினால் வள்ளுவம் காட்டும் வாழ்வியலை யாவருமே விரும்புவதுதான் முக்கிய காரணமெனலாம்.

    வள்ளுவத்தில் சொல்லப்பட்ட வற்றைத் தவறாது வாழ்வில் கடைப்பிடிக்கத் தவறுதல் கூடாது. வாழ்க்கையுடன் பொருத்திப்பார்த்து எவற்றைச் செய்தல்  வேண்டுமோ அவற்றைச் செய்து எவற்றைத் தவிர்க்க வேண்டுமோ அவற்றைத்   தவிர்க்க வேண்டும். எப்படியும் வாழலாம் என்று வாழும் உலகமக்களுக்கு இப்படி வாழ்ந்து பாருங்கள்  உங்கள் வாழ்வு  – இன்பமாக,  இன்னலின்றி, அமைதியாக, அறம் செறிந்து, அகமும்புறமும் தூய்மையாக, இதுதான் வாழ்க்கை என்று இருக்கும் என்னும் வழியைக் காட்டி நிற்பதுதான் வள்ளுவத்தின் வாழ்வியலாகும். ஆகவே வைகத்திலுள்ளோர் வாழ்வாங்கு வாழ வேண்டுமாயின் வள்ளுவம் சொல்லும்  வாழ்வியலைப் போற்றுங்கள். அதன்படி வாழ்ந்து வளம்பெற்றிடுங்கள்!

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும் 

    Share
  • அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார்.

    எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் மேடையேறும் காட்சிகளுக்கும் இவ்வாசகத்துக்கும் பொருத்தமிருக்கும் எனும் எனது பிரதிபலிப்பே அதற்குக் காரணமாகும்.

    ப்ரெக்ஸிட் எனும் படகில் ஏறி தனது அரசியல் பயணத்தின் இலட்சியமான பிரதமர் எனும் பதவியைத் தனதாக்கிக் கொண்டார் எமது பிரதமர் பொரிஸ் ஜோன்சன்.

    மிகவும் உற்சாகத்துடன் ப்ரெக்ஸிட் எனும் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விட்டேன் என்ற கோஷத்துடன் ஓரளவு மக்கள் ஆதரவுடன் இடைத்தேர்தலைச் சந்தித்த அவர் 80 பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்துக் கொண்டார்.

    ப்ரெக்ஸிட் எனும் தீர்வு ஏதோ இலகுவாக செயற்படுத்தப்படக்கூடியதொன்றல்ல என்பது அரசியல் அறிவில் தெளிவுடைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.

    அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவுகள் பற்றி அனுபவமிக்க அரசியல், மற்றும் பொருளாதார நிபுணர்கள் பல அறிக்கைகள் மூலம் அறிவுறுத்தியிருந்தனர்.

    ப்ரெக்ஸிட் பிரச்சனையைத் தீர்த்து வைத்தவர் எனும் பெயரெடுப்பதற்காக அவசரம் அவசரமாக பல சிக்கலான தீர்வுகளை ஏற்றுக்கொண்டு விட்ட பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அதன் விளைவுகளைச் சமாளிக்கத் திணறிக் கொண்டிருக்கும் போதுதான் முன்னறிவிப்பின்றி உலகினுள் பிரவேசித்தது கொரோனா.

    கொரோனா எனும் நுண்கிருமியின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பதுதான் தலையாய கடமை எனும் கோஷத்துடன் ப்ரெக்ஸிட் பிரச்சனைகளை ஓரம் கட்டி வைத்தார் எமது பிரதமர்.

    2020 மார்ச்/ஏப்பிரல் தொடங்கி 2022 ஜனவரி முடிவுவரை பல்வேறு காலப்பகுதிகளில் லாக்டவுண் பல்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு பரிமாணங்களிலும் நிறுவப்பட்டது..

    அதிகபட்ச லாக்டவுண் விதிகளாக ஹாஸ்பிட்டல்களில் இறுதிக் கட்டத்தில் இருக்கும் உறவினர்களைக் கூட கடைசிமுறையாகப் பார்க்க முடியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டன.

    வயோதிப இல்லங்களில் வசிக்கும் தமது வயதான உறவினர்களைச் சந்திக்க முடியாதவாறு லாக்டவுண் விதிகள் அமைந்திருந்தன. மிகவும் கடினமான விதிகளை மிகவும் சிரத்தையுடன் ஐக்கிய இராச்சிய மக்கள் பின்பற்றினர் , இவ்விதிகளை இயற்றி நடைமுறைப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர் பிரதமரே.

    இவ்விதிகளை மீறியோர் மீது போலிஸார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர்.

    ப்ரெக்ஸிட் வெற்றியின் பின்னனியில் உழைத்தவரான டொமினிக் கமிங் ஸ் என்பவரைத் தனது அரசியல் அலோசகராக தான் பிரதமரானவுடன் பொரிஸ் ஜோன்சன் அவர்கள் நியமித்திருந்தார். இவ்வாலோசகரின் அதீத நடவடிக்கைகள் பிரதமரின் கட்சி உறுப்பினர்கள் பலரை மனக்கசப்புள்ளாக்கியது.

    சுமார் ஒருவருடத்தின் முன்னால் தீவிரமான லாக்டவுண் நேரத்தில் பிரதமரின் அரசியல் ஆலோசகர் தனது ஜோடியுடன் ஒரு உல்லாச இடத்திற்கு விஜயம் செய்தார் என்பது சிறிது காலத்தின் பின்னால் அம்பலத்துக்கு வந்தது.

    வெகுஜனத்தின் அதிருப்தியையும் பொருட்படுத்தாது விதிகளை மீறிய அவ்வாலோசகருக்கு தனது ஆதரவை அளித்துப் பாதுகாத்தார் பிரதமர்.

    ஆனால் சில காலத்தின் பின்னால் பிரதமருக்கும், அவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலினால் அவ்வரசியல் ஆலோசகர் பதவி நீக்கப்பட்டார். ஆனால் பிரதமருடன் நெருக்கமாகவிருந்த அவரினால் பிரதமருக்கு பல இடையூறுகள் நேரிடலாம் எனும் அச்சம் பிரதமரின் ஆதரவாளர்களிடம் அப்போதே நிலவியது.

    இந்தப் பின்னனியில் தான் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது பதவியையே பறிகொடுக்கக் கூடிய ஒரு நிலைக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கிறார்.

    எப்படி என்கிறீர்களா ?

    ஐக்கிய இராச்சிய மக்களின் மீது அதிகூடிய லாக்டவுண் விதிகள் போடப்பட்டு அவர்கள் அதனை கடைப்பிடித்து வந்த அதே நேரம் பல்வேறு காலகட்டங்களில் பிரதமரின் கீழியங்கும் அவரது கட்டிட அரச உத்தியோகத்தர்கள் சுமார் 16 தடவைகள் விருந்துகளை ஐக்கிய இராச்சிய அரசுக் கட்டிடமான பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே நடத்தியிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியான தகவல்கள் ஓன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன.

    நாடே ஓரளவு கொதித்தெழுந்தது. தமது நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கூட கலந்து கொள்ளாமல் விதிகளை பொதுமக்கள் கடைப்பிடித்துக் கொண்டிருக்கையில் பிரதமரின் உத்தியோகபூர்வமான கட்டிடத்தில் விருந்துகளை நடத்தியிருக்கிறார்கள் அதிலும் ஓரிரு விருந்துகளில் பிரதமரே நேரடியாகக் கலந்து கொண்டுள்ளார் எனும் தகவல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

    இத்தகவல் முதலில் வெளிவந்தபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் விருந்துகள் எதுவுமே நடக்கவில்லையென்றும் லாக்டவுண் விதிகள் எவையுமே மீறப்படவில்லையென்றும் உறுதியளித்தார். தொடர்ந்து வெளிவந்த புகைப்படங்கள் செய்திகள் அனைத்தும் பிரதமரின் கூற்றுக்கு எதிராகக் காணப்பட்டது.

    பிரதமர் ராஜினாமாச் செய்ய வேண்டும் எனும் கோஷம் நாட்டின் நாலாபக்கங்களில் இருந்து எழுந்தாலும் பிரதமரின் அமைச்சரவை அவருக்கு ஆதரவாக நின்றது.

    பாராளுமன்றத்தில் பட்டும் படாமலும் மன்னிப்புக் கோரிய பிரதமர் மிகவும் உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரியாகிய சூ கிறே என்பவரை நடைபெற்ற விருந்துகளின் பின்னனியை விசாரிப்பதற்காக நியமித்தார்.

    பிரதமரின் நிலை இன்னும் மோசமாகியது. அவரால் நியமிக்கப்பட்ட அரச உயரதிகாரியால் தனது அறிக்கையை முழுமையாகச் சமர்ப்பிக்க முடியவில்லை. காரணம் பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விருந்துகளில் 12 சட்டத்தை மீறியிருக்கலாம் எனும் காரணத்தினால் அவை போலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.. பொலிஸாரின் விசாரணைகள் முடிவுறும் வரை அறிக்கை முழுமையாக சமர்ப்பிக்கப்படக் கூடாது என்று பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பிரதமர் பாராளுமன்றத்தில் தவறான செய்திகளைக் கூறியிருக்கிறார் என்பதால் அவர் உடனடியாக ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை விட்டு வருகின்றனர். நாட்டு மக்கள் மத்தியிலும் பிரதமரின் செல்வாக்கோடு அவரது கட்சியின் செல்வாக்கும் சரிந்து வருகிறது.

    பிதமரும், அவர்து அமைச்சர்களும் நடந்த தவறுக்கு வருந்துகிறோம் ஆனால் ப்றெக்ஸிட், கொரோனா தடுப்பூசி, கொரோனா நோயின் கட்டுப்பாடு என்பனவற்றை பிரதமர் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் அவரின் பதவி ராஜினாமா என்பது அவசியமற்றது என வாதிடுகிறார்கள்.

    அதேசமயம் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தமது கட்சியின் தலைமைப் பதவிக்கு ஏற்றவரில்லை எனப்தால் அவர்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என அவரது கட்சியைச் சேர்ந்த சுமார் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதங்கள் சமர்ப்பித்திருக்கிறார்கள் என்பது செய்தி. இவர்களது எண்ணிக்கை 54 ஐ எட்டுமானால் பிரதமர் மீது அவரது கட்சியே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்னெடுக்கும்..

    பிரதமரின் உத்தியோக வாசஸ்தலத்தில் நிகழ்ந்த விருந்துகளைப் பற்றிய பொலிஸாரின் விசாரணை முடிவுகள் இன்னும் என்ன அதிர்ச்சிகளை வைத்திருக்கிறது என்பதும் பிரதமரின் பதவிக்கு ஒரு அச்சுறுத்தலே .

    பிரதமருக்கு உடனடியான ஆபத்து இல்லையெனினும் மேமாதம் நடைபெறப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அவரது பதவிக்குச் சாவுமணி அடிக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது.

    ஐக்கிய இராச்சிய அரசியல் மேடையில் இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேறப் போகின்றன என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டுமாயினும் இந்நாடகம் களைகட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை.

    அது என்ன தொலைவில் ஒரு சத்தம்?

    ஓ ! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா எனும் வாசகமோ?

    Share
  • கண்ணையே கொடுத்த கண்ணப்பர்!

    கண்ணையே கொடுத்த கண்ணப்பர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. அந்த மொழிகளில் எங்கள் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஏனைய மொழிகளுக்கெல்லாம் இல்லாத ஒரு பெருமையை எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. எல்லா மொழிகழுமே இலக்கியத்தைக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த இலக்கியத்தால் அந்த மொழிகளும் பெருமையினையும் பெற்றிருக்கின்றது. அப்படிப் பெருமையி னைப் பெற்றாலும், தமிழ் பெறும் பெரு மைக்கு ஈடாக முடியாது என்பதுதான் கவனத்துக்குரியதாகும். ஏனைய மொழிகளைவிட தமிழ் மொழி அப்படி என் னதான் முக்கியத்துவத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்று அறிந் தி டும் ஆவல் ஏற்படுகிறதல்லவா? அதுதான் “பக்தி இலக்கியம்” ஆகும். பக்தி க்கு என்று இலக்கியங்கண்ட உலகின் ஒரே மொழி எங்கள் தமிழ்மொழி மட்டுமேயாகும்.

    இலக்கியம் என்றால் ஒரு இலக்கை நோக்கி அழைத்துச் செல்லுவது என்று தான் அறிஞர்கள் சொல்லுவார்கள். இலக்கியம் என்னும் பொழுது அதில் பக்தி யினைப் புகுத்த வேண்டும் என்னும் சிந்தனை புதியதோர் சிந்தனை என்றுதான் கொள்ளல் வேண்டும். அதனைத் தமிழ் சமூகத்தார் செய்திருக்கிறா ர்கள் என்பதிலிருந்து அவர்களின் மனப்போக்குப் புலப்பட்டு நிற்கிறதல்லவா. சுவைத்துப் படிக்கும் இலக்கியத்திலும் பக்தியானது இருக்க வேண்டும் என்னும் கருவா னது மிகவும் உன்னதமான ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியதேயாகும். எப்ப டியும் வாழலாம் என்று வாழும் வாழ்க்கையைவிட இப்படித்தான் வாழ வேண் டும் என்று வாழுதல்தான் சிறந்த வாழ்வாகும். அப்படி வாழும் வாழ்வினைத் தான் “வையத் துள் வாழ்வாங்கு வாழுதல்” என்கின்றோம். அப்படி வாழ்வதற்கு உரிய வழியினைக் காட்டிடக் கைகொ டுத்து நிற்கும் நிலையில் முகிழ்த்ததுதான் பக்தி இலக்கியம் என்னும் புதுக்கரு என்று கூட எடுத்துக் கொள் ளலாம் அல்லவா!

    பக்தியினால் பக்குவம் வருகிறது. பக்தியினால் பண்பு வளர்கிறது. பக்தியினால் அன்பு துளிர்க்கிறது. பக்தியினால் உயர்வு தாழ்வு அகல்கிறது. பக்தியினால் தர்மம் செழிக்கிறது. அறம் மலர்கிறது. பக்தி யினால் விருந்தோம்பல் சிறக்கிறது. பக்தியினால் ஒழுக்கம் உயர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நல் லதோர் சமூகமே உருவாகிறது என்பதுதான் கருத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இவை எல்லாவற்றையும் மனமிருத்தி பக்தி இலக்கியப் பாதையிலே ஒருவர் ஆசையுடன் பயணிக்கிறார். அந்தப்பயண த்தை அவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் யாவருக்கும் பயன்படும் வண்ணம் ஆக்கியும் விட்டிருக்கிறார் என்பது இங்கு நோக்கத்தக்கதாகும். அப்படி பயணிணித்த அவர் பக்தியினால் ஒரு பரிசினையும் எமக்கெல்லாம் வழங்கியும் நிற்கிறார். அந்தப் பரிசு என்ன என்று அறிந்திடும் ஆவல் எழுகிறதல்லவா? அந்தப்பரிசுதான் “பெரிய புராணம்”. பக்தியின் பரிசாக எமக்கெல்லாம் பயனுற வழங்கியர் தான் “சேக்கிழார் பெருமான்”.. இவரின் பரிசின் பெருமை காரணமாக  “பக்திச்சுவை நனி  சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என்று தமிழுலகமே இவரை வியந்து போற்றி நின்றது.

    நாயன்மார்களும் பக்தியினைப் பாடினார்கள். ஆழ்வார்களும் பக்தியினைப் பாடினார்கள். அவர்களின் பக்தியின் அனுபவம் வேறாக இருந்தது. அந்த அனுப வங்கள் அத்தனையும் அவர்களுக்கு வாய்த்த அனுபவங்களின் வெளிப்பாடாக வேதான் இருந்திருக்கிறது. ஆனால் சேக்கிழார் காட்டும் பக்தி அனுபவமும் அதற்காக எடுத்துக் கொண்ட முறையும் முற்றிலும் வேறு பட்டதாகவே காணப்படுகிறது. ஆண்ட வனின் அருளினை அடியார்கள் தங்களின் திருப்பாடல்கள் வாயிலாக எமக்கெல்லாம் காட்டி நின்றார்கள். அந்த அடியார்களையும் அவர்களின் பக்தியின் நிலையினையும், பக்குவத்தையும் யாவருக்கும் காட்டும் புதிய உத்தியினையே வெளிப்படுத்தும் நிலையில் சேக்கிழாரின் செயலமைந்தது என்பதுதான் இங்கு முக்கிய திருப்பமாய் அமைகிறது எனலாம்.

    சேக்கிழார் காட்டும் அடியார்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதமானவர்கள். அவர்களின் சிந் தனை, செயல்கள் அனைத்துமே மாறுபாடானவை. அது மட்டுமட்டுமல்ல வேறு பாடானவையாயும் அமைந்திருந்தன. ஆனால் அவர்கள் அனைவரையும் பக்தி என்னும் ஒரு குடைக்கீழ் வந்து நிற்கச் செய்கிறார் சேக்கிழார் என்பதுதான் மிகவும் சிறப்பாகும். அப்படி அவரின் குடைக்குள் வந்து நிற்கும் வித்தி யாசமான ஒரு அடியார்தான் , “தன்னையே மறந்து கண்ணையே கொடுத்த கண்ணப்பர்.”

    பெரியபுராணத்தில் பல அடியார்களின் பக்தியின் நிலையினைப் பார்க்கலாம். ஆனால் கண்ணப்பரின் நிலையினை இக்காலச் சமூகத்தார் ஏற்றுக் கொள்ளுவார்களா என்னும் கோணத்தில், சேக்கிழாரின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து, சேக்கிழாரின் சிந்தனை எப்படி அமைகிறது என்பதைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் அல்லவா !

    சரியை, கிரிகை, யோகம், ஞானம், என்னும் படிமுறைகளில் அடியார்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பக்தி செய்யும் பாங்கும் இருந்திருக்கிறது என்பதுதான் பொதுமையான கருத்து நிலையாகும். இந்த படி முறைக்குள்தான் ஏதாவது ஒன்றில்த்தான் எங்களின் பக்தியின் பாதையும் அமைந்து இருக்கிறது. இந்தப் படிமுறைகள் பற்றிக் கற்றுணர்ந்தவர்களே பெரும்பாலும் அறிந்தவர்களாக இருப்பார்கள். சாதாரணமானவர்களோ தங்களுக்குப் பொருந்தும் வண்ணம் பக்தியினை வெளிப்படுத்தி நிற்பார்கள். பக்தியெனும் பொழுது அங்கே அறிவு முக்கியமாக அமையாது உணர்வுதான் மேலோங்கி முக்கியமாகி முன் வந்து நிற்கிறது என்பதுதான் யதார்த்தமாகும். இவ்வாறு உணர்வு எழும் நிலையி லும் எழுகின்றவர்களின் தன்மைக்கு ஏற்பவே அது அமையும் என்பதுதான் முக்கியமாகும். ஒருவர் உணர்வு மேலீட்டால் செய்வது போன்று இன்னொருவரும் செய்வார் என்று எதிர்பார்த்திடவே கூடாது. இந்த நோக்கில்த்தான் சேக்கிழார் கண்ணப்பரை நோக்குகிறார். எங்களுக்கும் காட்டுகிறார்.

    வெல் படைத் தறுகண் வெஞ்சொல்
    வேட்டுவர் கூட்டம் தோறும்
    கொல் எறி குத்து என்று
    ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்

    கண்ணப்பர் பிறந்த சூழலை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து சேக்கிழார் காட்டுவது மிகவும் முக்கியமான கருத்தெனலாம். “கொல், எறி , குத்து ” என்னும் ஓசைதான் அங்கே முன்னிற்கும் ஓசையாகக் காட்டப்படுகி றது.

    மைச்செறிந் தனைய மேனி
    வன்தொழில் மறவர் தம்பால்
    அச்சமும் அருளும் என்றும்
    அடைவிலார் உடைவன் தோலார்
    பொச்சையி னறவும் ஊணின்
    புழுக்கலும் உணவு கொள்ளும்
    நச்சழற் பகழி வேடர்

    கண்ணப்பரின் வேடர் கூட்டம் கரிய மேனியைக் கொண்டவர், அச்சம் என்பது அவர்களிடம் இல்லை. அதேவேளை அருளுங்கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் தொழிலே கொடுந்தொழிலாகவே இருப்பதாய் சேக்கிழார் படம் பிடிப்பதுபோல் ஆரம்பத்திலே காட்டி நிற்கிறார். அதுமட்டுமல்ல கண்ணப்பரின் தகப்பன் குற்றமே குணமாகக் கொண்டிருக்கிறானாம். காரணம் அவனின் இந்தப்பிறவியில் அவனுக்கு வாய்த்த சூழலேயாகும். அதனால் அவன் கொலை செய்யவும் அஞ்சா நிலையினை உடையவனாகவே காணப்படுகிறான். அப்படி இருக்க அவனுக்கு எப்படி கண்ணப்பராகப் போகின்றவர் பிள்ளையாகப் பிறக்க முடிந்தது என்னும் ஐயம் எழுத்தானே செய்யும்? அதற்கும் பொருத்தமாய் சேக்கிழார் பதிலினைப் பகர்ந்து நிற்கிறார்.

    பெற்றியால் தவமும் செய்தான்
    ஆயினும் பிறப்பின் சார்பால்
    குற்றமே குணமா வாழ்வான்
    கொடுமையே தலைநின் றுன்னான்

    முற்பிறப்பில் செய்த தவப்பயனால்த்தான் கண்ணப்பர் அவனுக்குப் பிள்ளையாக வாய்க்கும் நல்வாய்ப்புக் கிடைத்திருக்கிறதாம் என்பதையே “பெற்றியால் தவமும் செய்தான்” என்று சேக்கிழார் தகுந்த பதிலாகக் காட்டுகின்றார். ஆனால் இப்பிறப்பில் கண்ணப்பரின் தந்தையின்  இயல்பு வேடர்க்குரியதாகவே ஆகிவிட்டது என்பதையும் சேக்கிழார் காட்டி நிற்கத் தவறவே இல்லை என்பதைத்தான் இப்பாடலின் அடுத்த வரிகள் காட்டி நிற்கின்றன.

    வேடர் குலத் தலைவனுக்கு எல்லாவளமும் இருந்தும் பிள்ளைச் செல்வம் இல்லா நிலையில் தங்களின் குலதெய்வமான முருகக்கடவுளை வேண்டி நிற்கிறான். அவனின் முன்வினைப் பயனாக ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. வேடர் குலமே ஆனந்தப் பரவசப்பட்டு நிற்கிறது. பிறந்த குழந்தையை தந்தை ஆசையுடன் தூக்குகிறான். அந்தக் குழந்தை மற்றைய குழந்தைகள் போலல்லாமல் கனமாக அதாவது திண்மையாக இருந்தத படியால் “திண்ணன்” என்று பெயர் சூட்டி மகிழ்கிறான். வேடர் குலமே திண்ணன், திண்ணன் என்று வானைத் தொட கோஷமிட்டு நிற்கிறது. திண்ணன் என்னும் பெயரும் கூட பின்னால் வரப்போகின்ற நிகழ்வுக்கு கட்டியங் கூறுவதாக அமைகிறதோ என்பதும் சிந்திக்க வேண்டியதேயாகும். தன்னையே இழக்கும் திடம் அதாவது திண்ணம் அவனின் கருவிலேயே கருக்கொண்டு விட்டிருக்கிறது என்பதைத்தான் தந்தையின் வாயிலிருந்து அந்தக் குழந்தைக்குப் பெயராக வாய்ததோ என்றும் எடுத்துக் கொள்ளும் நிலையும் இருக்கிறதல்லவா?

    திண்ணன் வளர்கிறான். வளர்ந்த திண்ணன் வேடர்குல வழக்கப்படி காட்டுக்குக் கன்னி வேட்டையாடச் செல்கிறான். அவனுடன் வேடர்கள் பலர் செல்கிறார்கள் வேட்டை நாய்களும் செல்லுகின்றன. திண்ணனின் அணுகு தொண்டராக நாணன் என்பவனும் காடன் என்பவனும் கூடவே செல்கிறார்கள். வேட்டையின் பொழுது முரட்டுப் பன்றி ஒன்றினால் திண்ணனும் கூட் டமும் களைத்தே போகும் நிலை உண்டாகிறது. களைத்தாலும் திண்ணனின் தீரத்தால் அந்த மூர்க்கமான பன்றி குத்திக் கொல்லப்படுகிறது.களைத்த திண்ணன் நீரருந்தும் இடத்தை நாட நிற்கும் நிலையில் அவனுடன் வந்த நாணன் பக்கத்தில் பொன்முகலி ஆறு இருக்கிறது என்னும் செய்தியைச் சொல்லி அவனை அழைத்துச் செல்லுகிறான். ஆற்றில் நீருண்டு களைப்பாறும் திண்ணனுக்கு அங்கிருக்கும் மலைபற்றிச் சொல்லுகிறான். திண்ணனும் மலையிலேறி மலைவளத்தைப் பார்த்திட விரைகிறான். அங்கு குடுமித்தேவரைக் காணுகிறான். அதன் பின் அவன் எப்படியெல்லாம் நடந்து கொள்ளுகிறான் என்னும் கதைகளை நாமனைவருமே நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.

    திண்ணன் என்னும் வேடன், ஒரு காடன், எப்படி இவ்வாறு ஆகினான் என்பதுதான் அனைவரின் மனத்திலும் இன்றுவரை எழுந்து கொண்டே இருக்கும் கேள்வி எனலாம். கொத்து, வெட்டு, கொல்லு, என்னும் சூழலைக் கொண்ட இடத்தில் பிறந்தவன். அன்பு என்றால் என்னவென்றே விளங்காதவன், சமயம் தெரியாதவன், தத்துவம் என்றால் என்னவென உணராதவன், எப்படித் தன்னையே மறந்தான். தன் கண்ணையே பிடுங்கினான்! புரியாத புதிராக இருக்கிறதல்லவா? அன்பு என்பது சாதாரணமானது அல்ல! இதனால்த்தான் “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்றார் வள்ளுவப் பேராசான் என்று எண்ணத் தோன்றுகிறது. மாறா அன்பு ஒருவரிடம், ஒரு இடத்தில் ஏற்பட்டுவிடுமானால் அந்த நிலையில் செய்யப்படும் அனைத்துமே வியப்புக்குரியதாக,  நினைத்துமே பார்க்க முடியாததாகவேதான் அமைந்துவிடும். அந்த வியப்பினையே திண்ணன் தன் கண்ணைப் பிடுங்கி அப்பிய நிலையும் எனலாம். தவமிருந்து பெற்ற பிள்ளையை தாய் பிடிக்க தந்தை வாளால் வெட்டுகிறார். நடக்குமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? எப்படி நடந்தது? தன்னை மறத்தலும். தன்னையே இழத் தலும்தான் இதன் அடிப்படை எனலாம்.

    முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
    பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
    அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
    தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

    தன்னை மறக்கும் நிலை பற்றி இத்திருப்பாடலின் கருத்தாகவேதான் திண்ணனின் செயலும் அமைந்திருக்கிறது.

    நல்வினையும், தீவினையும், ஆன்மாவைப் பற்றியபடியேதானிருக்கும். நல்வினை இறை நாட்டத்துக்கு அழைத்துச் செல்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். அவ்வேளை தீவினை தடுத்திட முன்வந்து நிற்கும். நல் வினையானது முந்திக்கொள்ளும் பொழுது தீவினை செயலற்றுப் போய் விடுகிறது. ஆண்டவனை ஆன்மா அடையும் பொழுது நல்வினையினையையும் விட்டு விட வேண்டும். இருவினைகளும் அறும் பொழுது இறை நிழல் ஆன்மாவுக்கு வாய்க்கிறது என்பதுதான் தத்துவ நிலையாகும். திண்ணன் என்னும் ஆன்மாவைச் சுற்றி நாணன் என்னும் நல்வினையும், காடன் என்னும் தீவினையும் நிற்கிறது. பன்றியைக் கொன்று காடனிடம் ஒப்படைத்த பின்னர் திண்ணன் என்னும் ஆன்மாவுக்கு நாணன் என்னும் நல்வினைதான் மலையைக் காட்டுகிறது. குடுமித் தேவர் இருக்கிறார் என்பதையும் சொல்லுகிறது. திண்ணன் என்னும் ஆன்மாவை நாணன் என்னும் நல்வினை கூட்டிச் செல்லுகிறது ஆனால் ஒரு கட்டத்தில் நல் வினையாகிய நாணணனையே ஆன்மாவாகிய திண்ணன் ஒதுக்கியே விடுவதையே காண்கிறோம். நல்வினையும், தீவினையும், ஒதுக்கப்பட்ட நிலையில்த் தான் இறைவனை ஆன்மாவால் நெருங்க முடிகிறது. இறைவனின் அருளுக்கும் பாத்திரமாகவும் முடிகிறது. இவ்வாறு தான் கண்ணை அப்பிய கண்ணப்பரை நாம் பார்க்க வேண்டும்.

    கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
    ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
    கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
    வீடும் வேண்டா விறலின் விளங்கினார்

    கண்ணப்பரின் நிலைக்கு மிகவும் பொருத்தமாக இத்திருப்பாடல் இருக்கிற தல்லவா! திண்ணன் என்னும் பெயருடன் இருந்த வேடன், கண்டதும் தன்னை இழந்து, தன் கண்ணையே இழக்கிறான் எனும் பொழுது அவனிடத்து ஏதாவது எதிர்பாப்ர்பு இருந்திருக்கிறதா என்றால், அங்கு எதுவுமே இல்லை என்றுதான் விடை சொல்ல வேண்டும். “வீடும் வேண்டா விறல்” என்பதுதான் கண்ணை அப்பிய நிலையில் திண்ணனிடம் காணப்பட்டிருக்கிறது என்பதுதான் பொருத்தமாய் அமைகிறது. குடுமித் தேவரின் கண்ணிலிருந்து இரத்தம் வடிவதற்கு உரிய மருந்து தன்னுடைய கண்ணைப் பிடுங்கி வைப்பதுதான் என்று எண்ணினானே அன்றி, பிடுங்கி வைத்தால் தனக்கு அதனால் பெருவரமோ, அல்லது உரமோ கிடைக்கும் என்று அவன் கருதவே யில்லை. இதனால்த்தான் இறைவனாலே ஆட்கொள்ளப்பட்டு ஆறாம் நாளே முத்தியின்பத்தைப் பெறும் நிலை க்கு ஆளாகியும் விடுகிறான்.

    கண்ணை அப்பிய வேடன் திண்ணன் “கண்ணப்ப நாயனார்” என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டு அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராய் குருபூசை செய்து வணங்கும் நிலைக்கு வந்தமை என்பது எதனைக் காட்டுகிறது என்றால் அப்பளுக்கில்லா, ஆசையில்லா அன்பின் உச்சநிலையினையே காட்டுகிறது என்பதுதான் உண் மையாகும். இதனால்த்தான் அன்பு என்று வரும்பொழுது அங்கே கைகாட்டப்படும் நிலை கண்ணப்பருக்கு மட்டுமே உரித்தாகி நிற்கிறது.கண்ணப்பரை அன்புக்காகக் கைகாட்டுபவர்யார் தெரியுமா அவர்தான் “மெய்தானரும் பும் வண்ணம்” திருவாசகம் தந்த மணிவாசகப்பெருமான்.

    கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
    என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட் கொண்டருளி
    வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
    சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ

    கண்ணப்பரை மணிவாசகர் காட்டினார். எம்பெருமானே கண்ணப்பரின் அன்பின் உயர்வினைக் காட்டு வதாக சேக்கிழார் தரும் இச்செய்திதான் மிகவும் உச்சமான உயர்வுடை செய்தியாகும். இது ஒன்றே கண்ணப்பரைக் காட்டுவதற்குப் போதுமானதாக இருக்கும் அல்லவா!

    அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கம் அன்பென்றும்
    அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
    அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
    அவனுடைய நிலையிவ்வா றறிநீயென் றருள்செய்வார்

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 43

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 43

    -மேகலா இராமமூர்த்தி

    சுந்தர காண்டத்தின் இறுதிப் பகுதியாக அமைந்திருப்பது ’திருவடி தொழுத படலம்.’ இந்தப் பெயரை நோக்கும்போது இலங்கையிலிருந்து புறப்பட்ட அனுமன், கிட்கிந்தை சேர்ந்து இராமனின் திருவடிகளைத் தொழுததைப் பற்றிப் பேசும் படலமிது என்றுதான் எண்ணுவோம். அது சரிதானா? என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு அனுமன் இலங்கையைக் கடந்துசென்று தன் நண்பர்களைப் பழைய இடத்தில் சந்தித்தபோது நிகழ்ந்தவை குறித்து அறிந்துகொள்வோம்.

    இலங்கையை எரியூட்டியபின்பு சீதையை மீண்டும் சந்தித்து அவள் பத்திரமாக இருக்கின்றாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட அனுமன், இலங்கையின் அருகிலிருந்த ’அரிஷ்டம்’ என்ற குன்றிலேறி வான்வழியே விரைந்துசென்று மகேந்திர மலையில் தனக்காகக் காத்திருந்த தோழர்களைச் சந்தித்தான்.

    அனுமன் கடல்தாவி இலங்கை சென்றதை மிக விரிவாய்ப் பாடிய கவிச்சக்கரவர்த்தி, அவன் மீண்டும் தன் பழைய இடத்திற்குத் திரும்பிவந்த நிகழ்வை வளர்த்தாமல் இரண்டே பாடல்களில் சொல்லி முடித்துவிடுகின்றார்.

    எவற்றை விரிவாய்ச் சொல்லவேண்டும்; எவற்றைச் சுருங்கச் சொல்லவேண்டும் எனும் கதையமைப்புத் திறனில் அவருக்கிருக்கும் புலமையை இது புலப்படுத்துகின்றது.

    இலங்கை சென்ற அனுமனின் நிலையென்னவோ எனும் கலக்கத்தோடும் அச்சத்தோடும் மகேந்திர மலையில் காத்திருந்த வானரர்கள், அவன் வரவைக் கண்டதும் கூட்டிலிருந்த பறவைக் குஞ்சுகள் வெளியில் சென்ற தம் தாயின் வரவைக் கண்டதுபோல் உவகையுற்றனர்.

    …பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத்
    தாய் வரக்கண்டதன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா.
    (கம்ப: திருவடி தொழுத படலம் – 6009)

    அங்கதன், சாம்பவான் முதலியோரையும் ஏனைய வானரர்களையும் அவரவர்க்கு ஏற்றவகையில் வணங்கிய அனுமன், சீதை அவர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சொன்னதைத் தெரிவித்தான்.

    வானரர்கள் அனைவரும் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கச் சொல்லி அனுமனிடம் கேட்கவே, அங்கே தான் சந்தித்த சீதாப் பிராட்டியின் கற்பொழுக்கத்தின் சிறப்பையும், அவள் இராமனிடம் அடையாளமாய்க் காட்டச்சொல்லிக் கொடுத்த சூடாமணியைப் பற்றியும் குறிப்பிட்ட அனுமன், தான் அங்கு அரக்கர்களோடு போர்புரிந்து பெற்ற வென்றிகள் குறித்தோ, இலங்கையை எரியூட்டிய தன் திறன் குறித்தோ ஏதும் சொல்லாது விடுத்தான் தற்புகழ்ச்சிக்கு நாணி!

    ஆண்தகை தேவி உள்ளத்து அருந்தவம் அமையச் சொல்லி
    பூண்டபேர் அடையாளம் கைக்கொண்டதும் புகன்று போரில்
    நீண்டவாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்புச் சிந்தி
    மீண்டதும் விளம்பான் தான்தன் வென்றியை உரைப்ப வெள்கி.
    (கம்ப: திருவடி தொழுத படலம் – 6015)

    தற்புகழ்ச்சியில் திளைப்பது அற்பர்கள் குணம்; நற்குணமும் நல்லறிவும் பெற்ற சான்றோர் அதனை விரும்புவதில்லை என்பதற்கு அனுமனின் அடக்கம் சான்றாய் அமைகின்றது.

    அனுமன் தன்னுடைய பெருமையைத் தானுரைக்க விழையாவிடினும் அவன் உடலில் காணப்பட்ட புண்களும், இலங்கை நகரிலிருந்து எழுந்த புகையும் அங்கு நிகழ்ந்தவற்றை வானரர்களுக்குத் தெளிவாய் உணர்த்திவிட்டன.

    இலங்கை நிகழ்வுகளை இராமனிடம் விரைவில் உரைக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு வானரர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு கிட்கிந்தை வந்தனர். அங்குள்ள மதுவனம் எனும் சோலையை அடைந்தவர்கள், அலுப்புத்தீர தேனுண்டு களித்தனர்; களிப்பு மிகுதியில் அச்சோலைக்குச் சேதம் விளைவிக்கவும் தொடங்கினர். அதனையறிந்த அவ்வனத்தின் காவலன் ததிமுகன் என்பவன் தன் சேவகர்களோடு அங்குவந்து அங்கதன் உள்ளிட்ட வானரர்களோடு சண்டையிட்டான். அங்கதனும் அவனுடைய சேனையும் ததிமுகனையும் அவனுடைய சேவகர்களையும் கடுமையாய்த் தாக்கி விரட்டிவிட்டு அங்கேயே இளைப்பாறிக் கொண்டிருந்தது.

    வானரர்கள் சோலையில் இளைப்பாறிக் கொண்டிருக்கட்டும். நாம் இராம இலக்குவரின் தற்போதைய நிலையென்ன என்பதை அறிந்துவருவோம் புறப்படுங்கள்!

    சீதையின் பிரிவால் வாடிக்கொண்டிருந்த இராமனைக் கதிர் மைந்தனாகிய சுக்கிரீவன் நம்பிக்கை மொழிகள் சொல்லித் தேற்றிக்கொண்டிருக்கின்றான். அம்மொழிகளால் இராமனும் சிறிது மனம்தேறியவனாய்க் காணப்பட்டான். வடக்கு கிழக்கு மேற்கு திசைகளில் சீதையைத் தேடிச்சென்ற வானரர்கள் சீதையைக் காணாது திரும்பிவிட்டமை வருத்தத்தைத் தந்தாலும், தென்திசை சென்ற திறலுடை அனுமனிடமிருந்து நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்பே அவன் உயிரைப் பிடித்து வைத்திருந்தது.

    எனினும், குறித்த கெடு தாண்டியும் தென்திசைச் சென்றோர் திரும்பாமை இராமனுக்குக் கவலையையும் அளிக்கவே, அவர்களுக்கு என்னவாயிருக்கக் கூடும் என்பது குறித்த தன் ஐயங்களைச் சுக்கிரீவனிடம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். அப்போது குருதிவழியும் முகத்தோடு அங்கு வந்த ததிமுகன், அங்கதனும் அவனுடைய சேனையும் மதுவனத்தில் நுழைந்து அட்டகாசம் செய்ததையும் தட்டிக்கேட்கச் சென்ற தன்னையும் தன் சேவகர்களையும் தாக்கியதையும் சுக்கிரீவனிடம் வருத்தத்தோடு தெரிவித்தான்.

    அதுகேட்ட சுக்கிரீவன், ”தென்திசைச் சென்றவர்கள் சீதையைக் கண்டு திரும்பியிருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சித் திளைப்பில்தான் மதுவனத்தில் அவர்கள் இவைபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும்” எனும் தன் ஊகத்தை இராமனிடம் வெளிப்படுத்திவிட்டுத் ததிமுகனை நோக்கி, ”மகிழ்ச்சியில் அவர்கள் செய்த இச்செயல்களைப் பெரிதுபடுத்த வேண்டா; அத்தோடு, வாலி சேயான அங்கதனின் அரசல்லவா இது? எனவே, அவனைத் தண்டித்தல் முறையாகா! அவனிடம் நீ சரணடைதலே சரியானது!” என்றுகூறித் ததிமுகனைத் திருப்பியனுப்பினான்.

    திரும்பிவந்த ததிமுகன் அங்கதனைத் தொழுது வணங்கவே, அவர்களுக்குள் பிணக்கம் தீர்ந்து, இணக்கம் பிறந்தது. இனியும் தாமதித்தல் சரியில்லை என்றுணர்ந்த வானரர்கள் அனுமனை இராமனிருக்கும் இடத்திற்கு முதலில் அனுப்பினர்.

    கீழ்த்திசைச் சூரியன் தெற்கிலிருந்து வருவதுபோன்ற ஒளியோடு தென் திசையிலிருந்து இராமனை நோக்கி வந்தான் வன்திறல் அனுமன். வந்தவன், இராமனைத் தொழுதானா என்றால் இல்லை! ”தாமரை மலரினின்று நீங்கிய தையலான சீதாப் பிராட்டியை அவளிருக்கும் தென்திசை நோக்கிய தலையையும் கைகளையும் உடையவனாய்த் திரும்பி, நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி அவளை வாழ்த்தினான்” என்கிறார் காப்பியக் கவிஞர் கம்பர்.

    எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
    மொய்கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
    தையலை நோக்கிய தலையன் கையினன்
    வையகம் தழீஇநெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.
    (கம்ப: திருவடி தொழுத படலம் – 6028)

    சீதை, கற்புத் திண்மையுடன் இலங்கையில் இருக்கிறாள் என்பதை உணர்த்தவே அறிவிற் சிறந்த அனுமன், இராமனைக் கண்டவுடன் அவனைத் தொழாது சீதையிருந்த திக்கில் வீழ்ந்து வணங்கினான் என்பதே அவன் செய்கை உணர்த்தும் உட்பொருள்.

    எனவே, ’திருவடி தொழுத படலம்’ எனும் தலைப்பு அனுமன் சீதையின் திருவடியைத் தொழுதமையையே குறிக்கின்றது என்று நாம் பொருள்கொள்ளவே கம்பரின் இப்பாடல் இடமளிக்கின்றது.

    அனுமனின் செய்கையால், ”அனுமன் சீதையைக் கண்டிருக்கின்றான்; அவள் கற்புத்திறனும் சிறப்பாகவே இருக்கின்றது” என்பதை உய்த்துணர்ந்து உவகைகொண்டான் இராமன்.

    வந்தவுடன் வளவளவென்று பேசாமல் குறிப்பிலேயே தான் கொண்டுவந்திருக்கும் நற்செய்தியை உணர்த்தியது அனுமனின் மதிநுட்பம்; அந்தக் குறிப்பை உடனே உணர்ந்துகொண்டது இராமனின் நுண்ணறிவு.

    இராமனின் மனம் கொந்தளிப்பு நீங்கி அமைதிகொண்ட நிலையில், அவனிடம் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கத் தொடங்குகின்றான் அனுமன்.

    ”தேவர்களுக்குத் தலைவனே! கற்பினுக்கு ஓர் அணிகலனாய்த் திகழ்கின்ற பிராட்டியைத் திரைகடல்சூழ் இலங்கை நகரில் என் கண்களால் கண்டேன்; இனி, பிராட்டியின் நிலைகுறித்த ஐயத்தையும் இதுவரை நீ கொண்டிருந்த துயரத்தையும் துறப்பாய்!” என்றான் அனுமன்.

    கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
    தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்நகர்
    அண்டர் நாயகஇனி துறத்தி ஐயமும்
    பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான்.
    (கம்ப: திருவடி தொழுத படலம்: 6031)

    இப்பாடலில் பயின்று வந்துள்ள ’கண்டனென்’ என்ற சொல் ’த்ருஷ்டா ஸீதா’ என்ற வான்மீகத்தின் தொடரைத் தழுவியது. எனினும், அதனை அடுத்துள்ள ’கற்பினுக்கு அணியை’ என்ற கம்பரின் சொல்லாடல், ‘ஸீதா’ எனும் மூலநூலின் சொல்லைவிட ஆழ்ந்த நுணுக்கமான பொருளை உணர்த்துவதாய் அமைந்துள்ளது.

    ”ஐய! தவம் என்பது செய்த தவத்தின் வடிவமாய்த் திகழும் தையலான சீதை, கடலிடையுள்ள இலங்கை எனும் பெரிய நகரின் ஒருபுறத்தில் விண்ணை அளாவி நிற்பதும் காலை மாலை எனும் வேறுபாடின்றி ஒரேவிதமாய் விளங்குகின்ற பொன்மயமான கற்பகத் தருவை உடையதுமான ஒரு பூஞ்சோலையினுள்ளே உன் தம்பி இலக்குவன் புற்களைக் கொண்டு வேய்ந்து அமைத்த தூய்மையான அதே பன்னசாலையில் தங்கியிருந்தாள்” என்றுரைத்தான் அஞ்சனையின் அரும்புதல்வன்.

    வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய்
    காலையும் மாலைதானும் இல்லதுஓர் கனகக் கற்பச்
    சோலை அங்குஅதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
    சாலையில் இருந்தாள்ஐய தவம் செய்த தவம்ஆம் தையல்.
    (கம்ப: திருவடி தொழுத படலம் – 6037)  

    வான்மீகத்தில் இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிச் செல்வதாய்க் கதை அமைந்திருக்கும். ஆனால், கம்பநாடர் தம் காப்பியத்தில் அவ்வாறு அமைக்காது, பன்னசாலையுடனேயே இராவணன் சீதையைத் தூக்கிச் செல்வதாய்த் தமிழ்மரபுக்கு ஏற்றவகையில் காப்பியத்தை மாற்றியமைத்திருந்தமையை முன்னரே கண்டோம். அந்தப் பன்னசாலையிலேயே சீதையை இராவணன், அசோகவனத்தில், சிறை வைத்திருந்தான் எனும் வகையில் காப்பியத்தைத் தொடரும் கம்பர், அச்செய்தியை அனுமனின் சொற்கள் வாயிலாக இராமனுக்கு மட்டுமல்லாது காப்பியத்தைக் கற்கின்ற ஏனையோர்க்கும் ஈண்டு அறியத் தருகின்றார்.

    தொடர்ந்து பேசிய அனுமன், ”கற்பிற் சிறந்த பெண்ணொருத்தி தன் கண்களில் உயரிய காதலைத் திரட்டி வைத்துக்கொண்டு, உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற செல்வத்தைப் பெற்ற நீயே உலகில் ஆடவர் பெறவேண்டிய செல்வத்தை முழுதாய்ப் பெற்றவன் ஆனாய்!” என்று இராமனைப் பாராட்டுகின்றான்.

    மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
    சேண்பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீராக்
    காண்பிறந் தமையால் நீயே கண்அகன் ஞாலம் தன்னுள்
    ஆண்பிறந்து அமைந்த செல்வம் உண்டனை யாதி அன்றே.
    (கம்ப: திருவடி தொழுத படலம் – 6043)

    மணமான ஆடவனொருவன் தன் மனையாட்டியின் காதலை முழுமையாய்ப் பெறுவதே அவன் பெறும் பேறுகளில் பெரிய பேறு எனும் அரிய கருத்தை மாணியான அனுமன் வாயினால் இங்குச் சொல்லவைத்த கம்பரின் சிந்தனை நம்மைச் சிலிர்க்கவைக்கின்றது.

    ”நான் தங்களின் கணையாழியை அடையாளமாய்ச் சீதையிடம் கொடுத்தபோது அதுகண்டு நெகிழ்ந்தவள், அதனை மார்புறத் தழுவிக்கொண்டாள்” என்ற அனுமன், “இன்னும் ஒரு மாதம்வரை நான் பிழைத்திருப்பேன்; அதன்பின்னரும் என்னை மீட்க இராமன் திருவுளம் இரங்கவில்லையாயின் உயிர்துறப்பேன்” என்று சீதை சொல்லச் சொன்னதையும் மறவாது இராமனிடம் செப்பினான். 

    இவ்வாறு இருபத்தொரு பாடல்களில் தான் இலங்கையில் சீதையைத் தேடிக் கண்டடைந்தமை, சிறையிருந்த சீதையின் கற்புத்திறம், அவளுரைத்த செய்திகள் ஆகியவற்றை இராமன் மனங்கொள்ளும் வகையில் விளங்கவுரைத்த சொல்லின் செல்வனான அனுமன், பின்பு தன் ஆடையில் முடிந்து வைத்திருந்த ஒளி உமிழும் சூடாமணியை எடுத்து, சீதை தந்த அடையாளமாய், இராமனிடம் காட்டினான்.

    அந்தச் சூடாமணியைத் தன் அங்கையில் வாங்கியபோது மணநிகழ்வின்போது நங்கை சீதையின் கையைப் பற்றிய உணர்ச்சியை அடைந்தான் இராமன். அவன் உரோமங்கள் சிலிர்த்தன; கண்கள் நீரைப் பொழிந்தன; மார்பும் தோள்களும் பூரித்தன.

    அப்போது அங்கதன் முதலிய இதர வானரர்களும் இராமனிடம் வந்துசேர்ந்தனர்.

    ”சீதையை மீட்கும் பணிக்கு எழுக!” என்று தன் படைகளுக்கு ஆணையிட்டான் சுக்கிரீவன். வெள்ளத்தனைய மிகுபடை கிட்கிந்தையிலிருந்து புறப்பட்டது. அனுமனின் வேண்டுகோளின்படி அவன் தோளில் இராமனும், அங்கதன் விருப்பப்படி அவன் தோளில் இலக்குவனும் ஏறிக்கொள்ள, வானர சேனை அணிவகுத்துத் தென்திசை நோக்கிப் பயணித்துக் கடலைச் சென்றடைந்தது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • படித்தேன்! சுவைத்தேன் பகிர்ந்தேன் – 11

    படித்தேன்! சுவைத்தேன் பகிர்ந்தேன் – 11

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    நூல் மதிப்பீடு

    முன்னுரை

    இலக்கண, இலக்கியப் படைப்பு நுகர்ச்சியில் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களும் அவற்றிற்கு உரையாசிரியப் பெருமக்கள் தந்திருக்கும் அரிய விளக்கப் பகுதிகளும் திரையிசைப் பாடல்களும் செயப்படுபொருட்களாக அமைந்து அவற்றுள் நான் கரைந்து போனது காலம் எனக்குத் தந்த கொடை என்றே கருதுகிறேன். போலிச் சடங்குகளால் நிறைந்த இந்தச் சமுதாயப் பெருவெளியில் என் சஞ்சலத்தைப் போக்கும் மாமருந்துகளாக அவை எனக்கு அமைந்திருக்கின்றன. அஞ்சலிக் கண்ணீர் உப்பில் கரிப்பில்லை. வாழ்த்துக்களில் ஈரமில்லை. எல்லாம் செயற்கை. போலிப்படைப்புக்களைப் புறங்கையால் ஒதுக்கும் பேராற்றலை அந்த இலக்கியப் பயிற்சியும் இலக்கணப் பயிற்சியும் எனக்களித்திருக்கிறது. என்னின் சிறு திறனுடையார் யாவரே எனினும் அவரெல்லாம் என் வணக்கத்திற்குரியவரே!. கவிதைகளில் நான் கரைந்து போகிறேன் என்பதைவிடக் காணாமல் போகிறேன் என்பதுதான் உண்மை. சொற்பயன்பாடும், கற்பனையும் எளிய யாப்பமைதியும் இடைமறிக்காத தொடை விகற்பங்களும் உள்ளத்தை வருடும் சந்தங்களும் கவிதையை ஒரு சதிராடு மண்டபமாகவே என் கண்களுக்குக் காட்டுகின்றன. சமுதாயத் தாக்கத்திலிருந்து இதயத்தை மூடியிருக்கும் பெரிகார்டியத்தைப்போல (PERICARDIUM) நான் என்னையும் என் உள்ளத்தையும் காத்து வருகிறேன். அந்த உள்ளத்தை ஊடுருவும் கவிதைகளைக் கவிதை வல்லாளர்கள் சிலர் அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற் போலப் பதிவிடுகிறார்கள். சிலர் பொருட்செலவைக் கருதாது நூலாக்கம் செய்து வருகிறார்கள் அத்தகைய ஆற்றலையும் திறனையும் தொண்டுள்ளத்தையும் கண்டு அவர்தம் படைப்புக்களுக்கு ஏற்பளிப்பதும் அதனை வெளியுலகிற்கு அறிமுகம் செய்வதும் ஒரு சாதாரண தமிழனின் இனம் சார்ந்த நித்திய கடமையாகும். அத்தகைய கடனை வலங்கைமான் வேல்முருகனுக்கு நான் செய்ய வேண்டிய தருணம் இது! இங்கே வேல்முருகன் என்பது ஆகுபெயர்!

    வரலாற்றில் வலங்கைமான்

    நாயன இசையில் தங்களை இழந்த எவரும் தவில் இசைக்கலைஞர் திரு. சண்முகசுந்தரத்தை மறந்துவிட இயலாது, அப்பெருமகனார் தோன்றிய ஊர்தான் வலங்கைமான்! இடங்கைப் பிரிவு, வலங்கைப்பிரிவு என்னும் இரண்டு பிரிவுகள் பத்தாம் நூற்றாண்டு அளவில் இயங்கி வந்த அரசியல், சமுதாயக் குழுக்கள் ஆகும். வரலாற்றுப் பேராசிரியர் திரு.நீலகண்ட சாஸ்திரியாரும் இதன் தோற்றத்தைக் கணிக்க முடியவில்லை.   உண்மையான வரலாற்று நிகழ்வுகளைத் தொன்மமாக்கியும் கற்பனைக்கெட்டாத தொன்மச் சித்திரிப்புக்களை வரலாறாக்கியும் திரிபுவாதம் செய்வதில் வல்லோர் சிலர் வரலாற்றில் எல்லாக் காலத்திலும் இருப்பார்கள். அவர்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள் என்னும் பாசாங்கு மொழிக்கும் உரியவர்கள். அத்தகைய திரிபுவாதத்தால் உருவானதுதான் இடங்கை – வலங்கைப் போர் என்பது! களத்தில் நிகழ்ந்தது அன்று. தெருவில் நடந்தது. உயர்சாதி அரசு அலுவலர்களால் கொல்லப்பட்ட ஆதித்திய கரிகாற் சோழனை ஆதரித்தவர்களுக்கும் ஆதித்திய சோழன் கொல்லப்படுவதற்குக் காரணமானவனும் அவசரமாக அரச பதவியேற்றுக் கொண்டவனுமான உத்தமச் சோழனை ஆதரித்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற தெருச்சண்டைதான் வலங்கை இடங்கைப்போர். தெருச்சண்டை என்றால் குழாயடிச் சண்டையில்லை. திருக்கோயில்களிலும் செழித்த வயல்களிலும் தங்கள் உரிமைகளை இழந்த பாட்டாளி வர்க்கத்தினருக்கும் அடியாட்கள் சிலரை வைத்துக் கொண்டு அவர்களை ஏமாற்றிக் கொள்ளையடித்த சில பிரிவினருக்கும் ஏற்பட்ட உரிமைப்போர்! கவிதை பற்றிய ஆராய்ச்சியில் ஊராராய்ச்சி தேவையா? ஒரு ஆராய்ச்சியில் மற்றொரு செய்தியைத் தெரிந்து கொள்வதை ஏன் ஒரு இலவச இணைப்பாகக் கருதிக் கொள்ளக் கூடாது? உள்ளடக்கம் அதனால் கனத்துவிடக் கூடாது. நமத்துவிடக் கூடாது அவ்வளவுதான். பயன் தெரிவார் எங்கும் இருப்பர் எண்ணிக்கையில் குறைவானாலும்! அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற அந்த ஊரின் பெருமையைத் தற்போது தமிழ்க்கவிதை வரலாற்றிலும் தக்க வைக்க வேண்டும் என்னும் தாளாத் தமிழ்க்காதலால் கவிதைப் பணி செய்துவருபவரே திரு.வலங்கைமான் வேல்முருகன்!. பொறியியல் துறை மற்றும் நிர்வாகத்துறையில் உயர்கல்வி பெற்ற அன்னார் படைத்துள்ள  நூல்களில் ‘நீர்வழி ராகம்’ என்னும் கவிதை நூலும் ஒன்று. அந்த நூலைப் படித்தேன்! அனைத்துப் பரிமாணங்களையும் உணர்ந்தேன். படிப்பார் உள்ளங்களின் கொள்ளளவு தெரியாமல் பரிமாறுகிறேன்!

    வடிவமே கவிதையாகாது!

    ஒருவர் சொல்கிறார் ‘நான் காணாமல் போன என் காதலியைப் பற்றிக் காவடிச் சிந்து பாடியிருக்கிறேன்!’ சரி! இன்னொருவர் சொல்கிறார்! ‘நான் முச்சந்தியில் நிற்கும் முனியாண்டிக்குப் பாடிய நேரிசை வெண்பாக்கள் முந்நூறைத் தாண்டும்’ சரி! ‘பிறக்காத பிள்ளைக்கு நான் பாடிய பிள்ளைத் தமிழ் குமரகுருபரரைத் தூங்க விடாது!’ சரி! ‘என் ஆசிரியர் பற்றி நான் பாடிய ஆசிரியர் ஆற்றுப்படையை நச்சினார்க்கினியர் அறியாமற் போனது அவரது போகூழ்!’ சரி! ‘கந்துவட்டி கண்ணுசாமிக்கு நான் பாடிய கலம்பகத்திற்கு உரையெழுத ஆள் கிடைக்காத காரணத்தால் வட்டியில்லாமலே கடன் கொடுக்க வந்திருக்கிறான் கண்ணுசாமி!’ சரி! இன்னும் சொன்னான்! நான் இத்தனையும் கேட்டுக் கொண்டேன்! பிறகுதான் அவனைக் கேட்டேன்! “நீ சொல்வதெல்லாம் சரிதான்! உன் படைப்பாற்றலைப் பாராட்டுகிறேன்!. ஆனால் நீ எழுதியவற்றுள் கவிதையாக ஏதேனும் சொல்லி என் இதயத்திற்கு நெருக்கமாக முடியுமா? என்று. இத்தனை வடிவங்களில் எழுதியிருக்கிறேனே? இவைகள் எல்லாம் கவிதைகள் இல்லையா? இல்லை உனக்குத்தான் இதயம் இல்லையா? என்றான். ‘இலை சோறாகுமா?’ என்றேன்! சோறுதானே விருந்து? இலை மட்டும் எப்படி விருந்தாகும் என்றேன்! விழித்தான்! அவன்மீது தவறில்லை! .அவன் அவ்வாறு நம்பவைக்கப்பட்டிருக்கிறான். கவிதையை எழுதுவதற்கு முன்னாலேயே அதுபற்றிய கற்பனை, உணர்ச்சி, கருத்து ஆகியன கருவறைக்குள் நுழைவதற்கு முன்பாகவே வாய்பாடுகளை எழுதி வைத்துக் கொள்ளும் ஒரு பரிதாப நிலை! இசையமைப்பாளர் எழுதிவைத்துக் கொள்ளும் ‘NOTATIONS’ என்பன தேமா புளிமா வாய்பாடுகளிருந்து வேறுபட்டன என்பதைக் கூட இவனால் அடையாளம் காண முடியவில்லை. ஏடுகள் கவிதைகளை வெளியிடுவதில்லை என்பது சரியான ஏக்கமே! “நாமும் வருந்தி இந்தப் பொங்கல் நாளில் வாசகர்களையும் வருத்த வேண்டுமா?” என்ற நல்லெண்ணமும் காரணமாக இருக்கலாம் அல்லவா? இதழில் வெளிவரவில்லையே என்பது எழுதியவரின் ஏக்கமென்றால் நல்ல கவிதையை எழுதமாட்டார்களா என்னும் என்னையொத்தார் ஏக்கத்தைப் புரிந்து கொள்வது யார்? புரிந்து தீர்த்து வைப்பது யார்? ஒரு நல்ல திரைப்படத்தில் கேமரா தன் இருப்பைக் காட்டாது! காட்டக் கூடாது! படத்தோடு ஒன்றாமல் போவதற்கு அதன் வேறுபட்ட கோணங்கள் காரணமாகிவிடக்கூடாது!. மார்க்கஸ்பார்ட்லே, பாலுமகேந்திரா முதலிய ஒளிப்பதிவாளர்கள் இதற்குச் சான்று. இதற்கு எதிரணியில் இருப்பவர்கள் வின்சென்ட், கர்ணன் மற்றும் ஜிகே இராமு போன்றோர். ஒரு நல்ல கவிதையில் வடிவம் முந்திரிக்கொட்டையாகிவிடக் கூடாது. வடிவங்களுக்கான ஓசையைப் பாடலுக்கேற்பப் பிரித்துக் காட்டிய நுண்ணியத்திற்கு அதுதான் காரணம். ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே’ என்றால் கண்ணகியின் முகம் நம் கண்முன் வந்தால்தான் அது கவிதை!  அதனைவிட்டுத் கூவிளம் தேமா கருவிளம் தேமா என்பன முன்னிற்கக் கூடாது! கருத்து, உணர்ச்சி, கற்பனை இவற்றுக்குத் துணையாக இருப்பதுதான் வடிவம். இவற்றைப் பின்னுக்குத் தள்ளித் தன்னை முன்னிறுத்திக் கொண்டால் கவிதை சடுகுடுவில் சிக்கிக் கொள்ளும்.

    நீர்விழி ராகத்தின் உள்ளடக்கத் தலைப்புக்கள்

    கவிஞன் ஒருவனுக்கு அவனுடைய கவிதையே முகவரி. அவன் எழுதுகிற கவிதைக்கு அவன் தெரிவு செய்து வைத்திருக்கும் தலைப்பே முகவரி. ஒரு நூலின் தலைப்பு அல்லது ஒரு கவிதையின் தலைப்பே உள்ளடக்கத்தை உரசிப் பார்க்கும் உரைகல்லாகும். சிலப்பதிகாரம் என்னுந் தலைப்பு எத்தகைய விவாதங்களுக்கும் இடம் கொடுத்து நின்றதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. ‘இராமகாதை’ என்று பாத்திரத்தின் பெயரால் பெயரைப் படைப்பாளன் வைக்க, இலக்கிய உலகமோ அதனை அப்படியே புறந்தள்ளிக் ‘கம்பராமாயணம்’ என்று எழுதியவனுக்கு உரிமையாக்கியது.  ‘பாஞ்சாலி சபதம்’ என்று மகாகவி இட்ட பெயரை அவருக்கு முன்னாலே இருந்த வியாசரோ வில்லியோ வைக்கவில்லை. வியாசர் இந்தப் பகுதிக்குத் ‘திரௌபதியின் துயரம்’ என்று பெயரிட்டிருக்கிறார். வில்லியார் ‘சூதுபோர்ச்சருக்கம்’ என்று தலைப்பிட்டார். வைணவச் சமயச் சொற்பொழிவாளர்கள் ‘திரௌபதை மான சம்சரட்சணம்’ என்று சொன்னார்கள். பாரதிதான் இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டுப் ‘பாஞ்சாலி சபதம்’ என்று பேர் வைத்தான். பாஞ்சாலியை வைத்துச் சூதாடியவர்கள் பாண்டவர்கள். பாஞ்சாலியை வைத்துப் பாரதத்தை அடையாளப்படுத்தியவன் பாரதி. எனவே ஒரு நூலின் தலைப்பும் ஆய்வுப் பொருளாகும். உள்ளடக்கங்களின் தலைப்பும் ஆய்வுப் பொருளாகும். படைப்பாளனின் உள்ளக் கிடக்கையினை அறிய முற்படுவதே ஆய்வு. அதற்கு உதவும் எதுவும் ஆய்வுப்பொருளே!

    உள்ளடக்கத்தால் உயர்ந்து நிற்கும் ‘நீர்விழி ராகம்’

    ‘நீர்விழி ராகம்’ என்னும் இந்தக் கவிதை நூல் உள்ளடக்கத்தாலும் சிறக்கிறது உள்ளடக்கத்திற்கான தலைப்புக்களாலும் சிறக்கிறது. வழக்கமான தமிழ் வாழ்த்தையும் இவர் விட்டுவைக்கவில்லை. மேகம் போடும் தாளம் என்றும் ‘மேகமே மேகமே’ என்றும் மேகத்தைத் தூது விடுகிறார். ‘நிலவோடு ஒரு பயணம்’, ‘நிலவே வா’ என்றெல்லாம் நிலவைப் பாடுகிறார். ‘நதிக்கரை நாணலை’யும் பாடுகிறார். ‘கிணற்றுத் தவளை’யையும் பாடுகிறார். அகவை எத்தனையானாலும் காதல் யாரை விட்டது? ‘‘ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று’’ என்று அருணகிரியார் பாடுவார். அவர் பாடிய வேல்முருகன் ‘மைதீட்டிய ஏவுகணை ஒன்று’ என்று அன்பு விழியை அம்புவிழியாக்கிப் பாடுகிறார். அடுத்த பாட்டிலேயே ‘மையூறும் கண்ணாள்’ என்றும் மயங்கி விழுகிறார். ‘வைகைக்கரை காற்றே நில்லு’ என்னும் இராஜேந்தரின் சொற்கள் இவர்வழியாக வருகிறபோது ‘தென்னையிளம் காற்றே கேளு’ என்று மாறுகிறது. ‘தென்னையிளம் காற்றுக்குக் காப்புரிமை பெற்றவர்  கண்ணதாசன் ‘தென்னையிளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது’ என்பது ஆண்டவன் கட்டளை! பரிசல் பற்றிப் பாடியவர் ‘கரிசல்’ பற்றியும் பாடியிருக்கிறார். நெருஞ்சி முள்ளையும் பாடி ஆவாரம்பூவையும் பாடியிருக்கிறார். பெண்கள் தாலாட்டை மறந்து போனதால் அவரிடத்தில் வந்து நின்ற வேல்முருகன் தாலாட்டையும் பாடியிருக்கிறார். பெண்ணுரிமை அமைப்புக்கள் காப்புரிமை கோரமாட்டார்கள் என்பது தம்பி வேல்முருகனுக்குத் தெரியும்.

    இந்தத் தலைப்புக்களைத் தொகுத்தும் பகுத்தும் நோக்கினால் எதனையும் பாட கைவந்திருக்கும் இவரது படைப்பாற்றல் தெற்றெனப் புலப்படுகிறது. நாட்டுப்பாடல்கள் அமைப்பில் இவர் பாடியிருக்கும் பாடல்கள் பண்பாட்டுப் பதிவுகளாகும். ‘கனவுகள் ஆயிரம்’ என்னும் கவிதை கவிஞரின் சமுதாயப் பார்வையையும் ‘இரவும் பகலும்’ என்ற கவிதை தனிமனித நம்பிக்கையை வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றன.

    நீர்வழி ராகத்தில் கற்பனை

    கற்பனை என்று சொல்ல முடியாது. சமுதாயத்தில் நாளும் பரவலாக நிகழ்கின்றவைதான். முறை மாப்பிள்ளை இருக்கிறபோது காதலனை வரச்சொல்லிப் பெண்ணே கவிதை பாடுவது தற்காலத்தில் வழக்கமாகிப் போன ஒன்று. பொதுவாகக் காதல் உணர்வுகளைப் பெண்கள் தாமே முன்வந்து முதலில் வெளிப்படுத்துவதில்லை என்பது அகத்திணை மரபு மட்டுமன்று. தமிழ்ப்பண்பாட்டு மரபும் கூட. பலர் புரட்சி என்ற பெயரில் எதனையோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பட்டுப்புடவையின் சரசரப்பைச் சுடிதாரில் எதிர்பார்ப்பவன் கோமாளி! போலிப்பெண்ணுரிமைக்காக நாம் கொடுத்திருக்கிற விலை எவ்வளவு என்பதை வைரமுத்து தான் எழுதிய இரத்த தானம் என்னும் நூலில் ‘அவசரத் தாலாட்டு’ என்னுந் தலைப்பில் அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். நாம் அதற்குள் செல்வது கட்டுரைப் பொருளுக்கு அன்னியமாகிவிடும். ‘உன்வருகைக்காய்த் தவமிருக்கேன்’ என்னும் பெண்ணின் ஏக்கத்தில்,

    “கண்வருகைக்காய் காத்திருப்பேன் உன்
    ‘காட்சியைத் தந்து விடு’

    என்று பாடுகிறாள். ‘கண் வருகை’ என்பது ‘உன் வருகை’ என்பதற்காகப்  போடப்பட்ட இன எதுகையன்று, கற்பனைத் திறனே!. உன் பார்வைக்காகத் தவங்கிடந்த அனுபவ வெளிப்பாடு. இதனை ஆகுபெயராக்கி உரைசொன்னால் கவிதை ‘பாலிடால்’ குடித்துவிடும். கவிதை உணர்வதற்கு., உரைக்கல்ல! தொடர்ந்து தலைவி பாடுகிறாள்!

    “என்னுயிர் என்னுடல் காத்து நிற்கும்
    தெய்வமாய் நின்றுவிடு!  —நானும்
    உன்னுயிர் தன்னை என்னுயிராக
    உரிமையாய்ப் பார்த்திருப்பேன்!”

    தலைவி பாடுவதாகக் கவிஞர் பாடுகிறார். இது நடப்பியல் அன்று என்பதும் வேல்முருகனுக்குத் தெரியும். அவருடைய ஆதங்கத்தை இப்படிப் பதிவு செய்திருக்கிறார். கணவனுக்கு மனைவி தெய்வம் என்பதும் மனைவிக்குக் கணவன் தெய்வம் என்பதும் சகாராப் பாலைவனத்துத் தொலைத் தூரக் குடிலில் அணையப்போகும் சிறு அகல்விளக்குச் சுடராக இருக்கிறது என்பதுதான் உண்மை. தமிழக மகிளா நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மணமுறிவு வழக்குகளின் எண்ணிக்கை தெரியாமலேயே இங்கே பலர் பெண்ணுரிமை பற்றிப் பேசிவருகின்றனர். கவிஞரின் கற்பனைத் திறத்தினை ஓரிடத்தில் ஓர் உவமத்தால் காணமுடிகிறது.

    ‘பூ’ என்பதாலேயே ‘வாழைப்பூவைத் தலையில் வைக்க முடியாது, பூத்தரு புணர்ச்சியில் தலைமகன் தலைமகளுக்கு வாழைப்பூவையோ காலிபிளவரையோ கொடுத்துக் காதல் செய்ய முடியாது. ‘சாமத்திலே வந்தாலும் சாமந்திப்பூ’வைத்தான் கங்கை அமரன் கொண்டு வரவேண்டும்.  மருத்துவக் குணம் உடைய இந்தப் பூவை அதாவது மரத்ததில் இந்தப் பூ தொங்குகிற அழகைப் பார்த்த சுரதா ‘வாழைப்பூ வேதாந்தம்’ என்று பயன்படுத்தியிருக்கிறார். திரைப்படப் பாடலாசிரியர் வாலி ‘வாழை மலர் போலப் பூமி முகம் பார்க்கும் கோழை குணமாற்று தோழா!’ என்று எழுதியிருக்கிறார். கொண்டையில் பூ வைத்தவர்களைக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். கொண்டையையே பூவாக்கிய கவிஞராக வேல்முருகன்  திகழ்கிறார்.

    “வட்ட வட்டப் பொட்டுக் காரி
    வாழைப்பூ கொண்டைக்காரி!

    வாழைக்குருத்தினைச் சடைப்பின்னலுக்கு உவமம் சொல்வது உண்டு. இங்கே கோடாலிக் கொண்டையைத்தான் கவிஞர் இவ்வாறு வாழைப்பூ கொண்டை என்று கற்பனை செய்திருக்கிறார்!. நானறிந்தவரையில் இவ்வளவு நுண்ணியமாகக் கொண்டையையும் நோக்கி வாழைப்பூவையும் கவனித்து உவமித்தவர் வலங்கையாராகத்தான் இருக்க இயலும்!

    “இல்லாத இடைதன்னைத் தேடி நான்
    இருக்குமிடம் ஓடிடுவேன் நாடி!
    சொல்லாத வரிகளையே போட்டு எனைச்
    சொக்க வைத்த அவள்புதிய பாட்டு!

    என்று தலைவன் பாடுகிறான். ‘சொல்லாத சொல்’, ‘பாடாத பாட்டு’ என்பன உலகத்தரம் வாய்ந்த இலக்கியத் தொடர்கள். ‘Heard Melodies Are Sweet, but Those Unheard Are Sweeter” என்று ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸ் கிரேக்கத்தின் தாழியின் மீது வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்துப் பாடியிருக்கிறான். ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ என்பார் கண்ணதாசன்! ‘பார்க்காமல் பார்க்கின்றான்’ என்பார் வாணிதாசன்! காதலைப் பற்றிப் பாடுகிற எவருடைய உணர்வுகளும் அடுத்த நொடியே இருபத்துக்கும் கீழ் இறங்கிவிடுவது ஒரு விந்தையே!

    நீர்விழிராகத்தில் நாடகப் பாங்கு

    நாடகப் பாங்கில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதும் தொடர்ந்து வரும் மரபு சார்ந்த இலக்கிய உத்தியே! இந்த உத்தி பள்ளு இலக்கியத்தில் உச்சம் பெற்றது. வினாவிடையாக,

    “காளையரின் கோமகன் உன்
    கவிதைகளை நாடும் – இரு
    கண்கள் உனைத் தேடும் என்
    கால்களுமே ஆடும் உன்
    காந்தவிழிப் பார்வைகளோ
    காவியப்பண் பாடும்!

    தலைவியில்லாக் காவியங்கள்
    தமிழிலெங்கே உண்டு? உன்
    தயவதனைக் கொண்டு நான்
    தமிழ்க்கனியை உண்டு தினம்
    தங்கமென வைரமெனத்
    தாங்கிடம் பூச்செண்டு!

    கன்னித் தமிழ் நாட்டினில் நீ
    காளையிளங் கன்று
    தமிழ்க்காவியத்தில் நின்று
    என் கடிமனதை வென்று – தினம்
    களிப்புடனே ஏறிடுவாய்
    காதலெனும் குன்று!”

    இந்தப் பாட்டில் இழையும் ஓசை நயம் நம்மையும் அறியாமல் உள்ளத்தை ஈர்ப்பதை உணரலாம். தேமா புளிமா என்ற அளவுகோல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் சந்த ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட புனையப்பட்ட இந்தக் காதல் பரிமாற்றத்தில் இளமை, இனிமை, அழகு, ஆழம் அனைத்தும் உள்ளன என்பதைப் பாடலை வாய்விட்டுப் படிப்பார் உணர முடியும்.

    செவிக்கினிமையான இந்த ஓசை ஒழுங்கு, தலைவியில்லாத காப்பியங்களாகிய சீவக சிந்தாமணி, பெரியுராணம் ஆகியவற்றையும் கவனிக்காது பாடியிருக்கும் தலைமகனுடைய அறியாமையையும் ரசிக்க வைத்திருக்கிறது. காரணம் தலைவியை உயர்த்திப் பாடி எல்லாக் காப்பியங்களுமே தலைவியைப் பெற்றுத்தான் அமைந்திருக்கிறது என்று படைத்து மொழிகிறான்! காதலில் ‘பேதைமை’ உள்ளம் உணர்வு சார்ந்தது!. அங்கே ஆராய்ச்சிக்கு வேலையில்லை. கால் மீட்டர் தலை முடியைக் கார் கூந்தல் என்று சொல்வதில்லையா அதுபோல! அப்போதுதான் காதல் கைகூடும்!. அதனால்தான் ‘மனத்தை’ என்று அத்துச் சாரியைப் பெற்றுச் சொல்ல வேண்டியதை அல்லது எழுத வேண்டியதை நூலாசிரியர் ‘மனதை’ என்று பாட வைக்கிறார்!. அத்துச் சாரியை மொழியைச் சரியாகச் சொல்வது. சாரியை இன்றி உச்சரிக்கப்படுவது தலைவியின் மனதுக்கு இதமாகும்! அருமை! தலைவியின் முந்தானையில் மயங்கிக் கிடப்பவன் தலைவன்! அவன் ஒரு மொழியாராய்ச்சி வித்தகன் அல்லன்! இலக்கியம் இதயத்திற்கு நெருக்கமான தருணம்!

    நீர்விழி ராகத்தில் கவிதைக் கட்டுமானம்

    கவிதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்ளும் தற்காலப் படைப்பாளர்களில் பலரும் மரபுக்கவிதை என்ற சொல்லை அடிக்கடிப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் யாப்பற்றவை புதுக்கவிதைகள் எனப்படுவதால் யாப்புடையவை மரபுக்கவிதைகளே என்னும் கருத்தியலை முன்னெடுப்பதாகத் தெரிகிறது. உண்மையில் இரண்டுமே இமாலயத் தவறுகள். யாப்பில் சொற்களை அடைத்துக் காட்டுவதாலேயே ஒன்று மரபுக் கவிதையாகிவிடாது. அதுபோல யாப்பில்லாததாலேயே ஒன்று புதுக்கவிதையாகிவிட முடியாது. மரபுசார்ந்த பொருண்மைகளை மரபு சார்ந்த வடிவங்களில் மரபுசார்ந்த சொற்களாகிய சீர்களைக் கொண்டு மரபுசார்ந்த உத்திகளால் உருவாக்கப்படுபவையே மரபுக்கவிதை. சமுதாயத்தில் நாளும் தோன்றும் வாழ்க்கைச் சிக்கல்களை அதன் பரிமாணத்திற்கும் பாதிக்கப்படுவோன் அளவுக்கும் ஏற்ப நீட்டி முழக்காமல் நறுக்குத் தெறித்தாற்போலப் பொருண்மைக்கு முன்னுரிமை தந்து சொல்வதுதான் புதுக்கவிதை. புதுக்கவிதை என்பதில் உள்ள புதுமை என்னும் அடை பாரதியின் ‘சொல்புதிது பொருள் புதிது…. நவகவிதை’ என்ற ஆளுகையின் பொருளையே தருமேயன்றி அது யாப்பினைக் குறிக்கும் என்பது மயக்கம் கலந்த அறியாமை. புதுக்கவிதை கூறுகளைப் புறநானூற்றில் தேடுவது இமயமலையில் இலந்தமரத்தைத் தேடுவது போல!

    ‘நீர்விழி ராகம்’ என்னும் இந்தக் கவிதை நூலில் பல்வகை யாப்புக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    • ‘கரிகால் சோழன் வாழ்க’ என்னுந் தலைப்பில் அமைந்த பாடலும் ‘முகில்விடு தூது’ என்ற பாடலும் முறையே நிலைமண்டில ஆசிரியப்பாவிலும் நேரிசையாசிரியப்பாவிலும் அமைந்துள்ளன.
    • நீர்விழி ராகம் என்னும் நூற்தலைப்புக்குரிய பாடல் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என எண்ணிக் கொண்டு எழுதப்பட்டதாகத் தெரிகிறது.
    • ‘நாட்டார் பாடல்கள்’, ‘பேரண்டப் பெருவெளி’, ‘கல்வீச்சு’ முதலிய பாடல்கள் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்களால் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆசிரியரின் யாப்பறிப் புலமை பற்றி ஐயமில்லை!. கற்பனை, உணர்ச்சி, கருத்து என்னும் கவிதைகளின் ஏனைய கூறுகளைச் சிறப்பிப்பதாக அமைவதே வடிவத்தின் பணி. வடிவம் ஒரு கவிதைத் தாங்கி! பாடல்களை எழுதி வெளியிடுவதற்குமுன் செப்பம் செய்வது இன்றியமையாக் கடன். ஒரு காப்பியம் பல யாப்புக்களைக் கொண்டிருக்கலாம். ஒரு பாடலே பல யாப்புக்களைக் கொண்டிருந்தால் கவிதை நொண்டியடிக்கும்.

    “கூடியே கழித்த காலம்
    குறையாகப் போன தோடி
    பாடியே திரிந்த காலம்
    பாதியாய் போன தோடி?
    ஆடிநாம் ரசித்த காலம்
    அரைகுறை ஆகிப் போமோ?
    வாடியே போனேன் இன்று!
    வசந்தமே போன தேனோ?”

    “காரணம் சொல்ல மறுத்தே – என்
    கழுத்தையே அறுப்பதும் ஏனோ?
    நாரதர் எவரும் வந்தே – மனக்
    குட்டையைக் குழப்பி னாரோ
    பாரினில் காதலுக் கென்றும்
    பெற்றோரே எதிரி யானாரோ?
    ஆரிடம் சொல்வேன் நானே?
    அறுக்குதே நெஞ்சம் தோழி!”

    இவ்விரண்டு பாடல்களும் நூற்தலைப்புக்கான பாடல் வரிகள். அறுசீர் விருத்தத்தில் அல்லது எண்சீர் விருத்தத்தில் தனிச்சொல்லைப் பெய்து எழுதுவது ஒரு நடைதான். பல பாடல்கள் உண்டு. ஆனால் ஒரே பாட்டில் இருவேறு நிலைப்பாடுகள் இருக்கலாமா என்பதுதான் ஐயம்? முதல்பாட்டில் விருத்த யாப்பு திருத்தமாக அமைந்திருக்க இரண்டாவது பாட்டில் முதல் இரண்டு வரிகள் தனிச்சொல் பெற்றதொரு செப்பமில்லாத யாப்பு. மூன்றாவது அடியில் முதல் அரையடி ‘காதலுக்’ என்னும் தவிர்க்கப்பட்ட கூவிளம் வாய்பாடு! இரண்டாவது அரையடியில் ‘ஆனாரோ’ என்னும் மூவசைச்சீர்! ஒரே குழப்பமாக இருக்கிறதா இல்லையா? இவற்றுக்கெல்லாம் ஒரே காரணம் பாடல்களை மீள்பார்வை செய்யாமையே! எண்சீர் விருத்தங்கள் பலவற்றிலும் இந்த நிலை நீடிக்கிறது என்பது தகவலுக்காகப் பதிவு செய்யப்படுகிறது!

    நிறைவுரை

    எதனையாவது எழுத வேண்டும் அதுவும் கவிதையில் எழுத வேண்டும் என்னும் உந்துதல் எல்லார்க்கும் வந்துவிடாது. அடுத்த நிலையில் போலி இலக்கியச் சுவைஞர்களால் பாராமுகத்திற்கு ஆளாகியிருக்கும் இன்றைய தமிழ்க்கவிதைகளை நூலாக வெளியிடுவதற்கு இட்லரின் துணிச்சலும் இந்திராகாந்தி துணிச்சலும் தேவை. தம்பி வேல்முருகன் அந்தத் துணிச்சலைப் பெற்றிருக்கிறார். பாவலர் என்பதனினும் மிகச் சிறந்த பண்பாளர். கூடித் தமிழ்வளர்க்கும் கொள்கையாளர். என் பார்வைக்கு வரும் ஆய்வேடுகளில் பெரும்பாலும் பாரதிக்குப்பின் வந்த படைப்புக்களிலிருந்து மேற்கோள் காட்டுவதை ஆய்வாளர்களுக்கு முன்மொழிகிறேன். முன்மொழிந்த நானே செயல்படுத்திக் காட்டிக்கொண்டு வருகிறேன். அத்தகைய பெருமைக்குரிய படைப்புக்களில் கவிஞரின் கன்னித் தொகுப்பான ‘நீர்விழி ராகமும்’ ஒன்று! படித்துச் சுவைத்தவன் பகிர்ந்திருக்கிறேன், நீங்களும் பகிர வேண்டாமா?

    (தொடரும்…)

    கவிஞர் வலங்கைமான் திரு.இராம வேல்முருகன் M.A.,M.Sc.,M.Lib.Sc.,M.Ed.,

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 42

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 42

    -மேகலா இராமமூர்த்தி

    அனுமனை அயன்படையால் பிணித்து இழுத்துவந்து இராவணன் முன்னிலையில் நிறுத்தினான் இந்திரசித்து. அவனைப் பார்த்து ”யார் நீ?” என்று இராவணன் சினத்தோடு வினவ, தன்னைப் பற்றியும் தான் சீதையைத் தேடி வாலி மைந்தன் அங்கதன் அனுப்பிய தூதனாக இலங்கைக்கு வந்தது பற்றியும் இராவணனுக்கு விரிவாய் விளம்பினான் அனுமன்.

    வாலி மைந்தனைப் பற்றி அனுமன் குறிப்பிட்டதைக் கேட்ட இராவணன், தன் பல்வரிசையைக் காட்டிச் சிரித்து, ”வாலி மைந்தன் அனுப்ப வந்த தூதனே!  மிகுவலி படைத்த வாலி நலமா? அவன் அரசாட்சி சிறப்பாக நடைபெறுகின்றதா?” என்று கேட்டான். அனுமன் நகைத்தபடியே, ”அரக்க இராவணனே! அஞ்சாதே! கொடுஞ்சினம் கொண்டவனான வாலி விண்ணுலகம் போய்ச் சேர்ந்துவிட்டான்; இனித் திரும்பி வரமாட்டான்; அவன் போன அன்றைக்கே அவனுடைய வாலும் போய் அழிந்துவிட்டது. அஞ்சனமேனியான் இராமனின் அடுகணை ஒன்றினால் வருந்தி இறந்தான் வாலி. இப்போது எங்களுக்கு அரசன் சூரியன் மகனான சுக்கிரீவன்” என்றான்.

    அஞ்சலை அரக்க பார்விட்டு
    அந்தரம் அடைந்தான் அன்றே
    வெஞ்சின வாலி மீளான்
    வாலும்போய் விளிந்தது அன்றே
    அஞ்சன மேனியான் தன்
    அடுகணை ஒன்றால் மாழ்கித்
    துஞ்சினன் எங்கள் வேந்தன்
    சூரியன் தோன்றல்
     என்றான். (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5888)

    ”வாலி இறந்துவிட்டான்; இனி அவனையும் அவன் வாலையும் எண்ணி அஞ்சவேண்டா” என்று இராவணனை எள்ளல்செய்த அனுமன், வாலி மரணித்த விதத்தைக் கூறுமுகத்தான் இராமனின் வில்திறனையும் இராவணனுக்குக் குறிப்பாலுணர்த்தித் தான் சொல்லின் செல்வன் என்பதை நிறுவினான்.

    அஞ்சனை மைந்தன் வஞ்சனையின்றி இராமனின் வீரப் பிரதாபங்களை விதந்தோதுவதைக் கேட்ட இராவணன், ”வாலியைக் கொன்ற இராமனுக்கு நீவிர் அடிமைத் தொழில் செய்வது இழிசெயல் இல்லையா?” என்று பழித்துரைத்துவிட்டு, ”தூதனாக வந்த நீ இலங்கையில் சோலைகளையும் அரக்கர்களையும் அழித்தது ஏன்?” என்று கேட்டான் காட்டமாக.

    சற்று சிந்தித்த அனுமன், இவனிடம் அனைவர்க்கும் பொதுவான அறக்கருத்துக்களை எடுத்துரைக்க இதுவே ஏற்ற தருணம் என்ற முடிவுக்கு வந்தவனாய், பதினாறு பாடல்களில் அவற்றை எடுத்தியம்புகின்றான்.

    ”நெருப்பினும் தூயவளான சீதையைத் துன்புறுத்தியதால் பெருந்தவம் ஆற்றிப் பெற்ற பலனை நீவிர் இழந்துவிட்டீர். தீமையால் என்றுமே நன்மையை வெல்ல முடியாது என்பதை உணர்க!

    இச்சையின் இயல்பினால் அயலார் மனைவியை விரும்பி எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்கும் வண்ணம் நாணமற்றவனாய், பசுமையான செழித்த உடம்பு காமதாபத்தால் உலரப்பெற்றுப் பழிப்பை அடைகின்ற ஆண்மையும் சிறப்பினைப் பெறுமோ? என்று இகழ்ந்துரைத்தான்.

    இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
    நச்சி நாளும் நகைஉற நாண்இலன்
    பச்சை மேனி புலர்ந்து பழிபடூஉம்
    கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ.
    (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5903)

    பிறன்மனை நயத்தலின் இழிவு இப்பாடலில் வீரியமாய் எடுத்துரைக்கப் பெற்றுள்ளமையைக் காண்கின்றோம்.

    எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி.
    (குறள் – 145) என்ற குறட் கருத்தையே மேற்கண்ட பாடல் பிரதிபலிக்கின்றது.

    ”ஆகவே, இந்த இழிசெயலை விடுவாய். பெறற்கரிய உன் செல்வத்தையும், பல்வகைச் சுற்றத்தையும், உன்னுடைய உயிரையும் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் சீதையை இராமனிடம் ஒப்படைப்பாய் என்று உன்னிடம் சொல்லச் சொன்னான் சூரியன் மகனாகிய சுக்கிரீவன்” என்று இராவணனிடம் இயம்பினான் அனுமன்.

    ஆனால், அனுமனின் உரைகளுக்கு இராவணன் செவிசாய்க்கவில்லை; மாறாக ஒரு குரங்கு எனக்கு அறிவுரை கூறுகின்றது என்று எள்ளி நகையாடிவிட்டு, ”அது இருக்கட்டும்! தூதனாக இங்குவந்த நீ அரக்கர்களைக் கொன்றது ஏன்?” என்று மீண்டும் வினவினான்.

    ”அதுவா? உன்னை எனக்குக் காட்டுவார் இல்லை; அதனால்தான் காவல்மிகுந்த உன் சோலையை அழித்தேன்; என்னைக் கொல்லவந்தவர்களை நான் கொன்றேன்; அதன்பின்னரும் எளியவனாய் உன்மாட்டு வந்தது உன்னைக் கண்டு சில செய்திகளைக் கூறவேண்டும் என்பதற்காகவே” என்றான் அனுமன் அலட்சியமாக.

    காட்டுவார் இன்மையால் கடி காவினை
    வாட்டினேன் என்னைக் கொல்ல வந்தார்களை
    வீட்டினேன் பின்னும் மென்மையினால் உன்தன்
    மாட்டு வந்தது காணும் மதியினால்.  
    (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5913)

    ”நான் வரவேண்டும் என்று விரும்பியதால்தான் மிகவும் எளிய(வ)னாக என்னைக் காட்டிக்கொண்டு இங்கே வந்தேன். அயன்படைக்கு அஞ்சியன்று” என்ற குறிப்புப் பொருளும் அனுமனின் சொற்களில் பொதிந்திருக்கின்றது.

    அனுமனின் அச்சமற்ற அலட்சியச் சொற்களால் சீற்றமடைந்த இராவணன், ”இந்தக் குரங்கைக் கொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டான். அனுமனை நெருங்கிய கொலையாளிகளைப் பார்த்து, அவையிலிருந்த இராவணனின் தம்பியும் அறநெறியில் நடப்பவனுமான வீடணன், ”நில்லுங்கள்!” என்று தடுத்தான். அவர்கள் தயங்கி நிற்கவே, எழுந்துநின்று இராவணனை வணங்கிவிட்டு, ”ஐயனே நீ அறிவாற்றல் மிக்கவன்; வேதங்களை நன்கு கற்றவன்; இந்திரனை வென்ற பேரரசன். அப்படியிருக்க மற்றொருவர் சொல்லச் சொன்னதைச் சொல்லும் தூதனைக் கொல்லக் கருதுதல் முறையா? என்று அமைதியாய்க் கேட்டான்.

    தொடர்ந்தவன்… “இப்புவியிலும், அண்டக் கோளத்திலும், அதன்புறமாகிய பகிரண்டத்திலும், பொய்ம்மையில்லா வேதநெறியைப் பொருந்திவாழும் உலகங்களிலும், வெவ்வேறு இடங்களில் உள்ள அரசர்களிலும் மாதரைக் கொன்றவர் உளர் என்றபோதிலும், பழமையான நீதி தவறாதவர்களில், தம்மிடம் வந்த தூதரைக் கொன்றவர் யாருளர்?” என்ற வினாவை எழுப்பினான்.  

    பூதலப் பரப்பின் அண்டப்
    பொகுட்டினுள் புறத்துள் பொய்தீர்
    வேதம் உற்றுஇயங்கு வைப்பின்
    வேறுவேறு இடத்து வேந்தர்
    மாதரைக் கொலை செய்தார்கள்
    உளர்என வரினும் வந்த
    தூதரைக் கொன்றுளார்கள்
    யாவரே தொல்லை நல்லோர்
    . (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5917)

    பாவங்களில் கொடிது மாதரைக் கொல்வது; அதனினும் கொடிது தூதரைக் கொல்வது என்ற செய்தியை வீடணன் இப்பாடலில் தெளிவாய் வெளிப்படுத்துகின்றான்.

    சங்க இலக்கியத்தில் பெண்கொலை புரிந்த நன்னன் என்று ஓர் மன்னன் குறிக்கப்படுகின்றான். நன்னனது காவல் மரத்து மாங்காயை அருகிலுள்ள ஆற்றில் குளிக்கும்போது கண்டெடுத்த பெண்ணொருத்தி அதனைத் தின்றுவிட, அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான் நன்னன். அப்பெண்ணின் தந்தையார் அக்குற்றத்திற்குக் கழுவாயாக அப்பெண்ணின் எடைக்குச் சமமான பொன்னாலான பாவையையும், எண்பத்தொரு களிறுகளையும் தருவதாய்க் கூறியும் அதனையேற்காது தன் கொலைத் தண்டனையை நிறைவேற்றி நீங்காப் பழி சுமந்தான்.

    இவ்வாறு ஓர் அபலைப் பெண்ணைக் கொல்வதைவிடவும் பிறரிடமிருந்து வந்த தூதரைக் கொல்வது கொடியதாய் அன்று கருதப்பட்டது என்பதை அறிகையில் அரசாட்சி என்பது அறத்தின் ஆட்சியாக இருக்கவேண்டும் என்பதில் அற்றைய அரசர்கள் செலுத்திய கவனம் புலப்படுகின்றது.

    வீடணனின் பொருளுரையை ஏற்ற இராவணன், ”நல்லது உரைத்தாய் தம்பி! இவன் குற்றம் புரிந்தவனாயினும் தூதன் என்பதால் நீ சொல்வதுபோல் இவனைக் கொல்லுதல் இழுக்கமுடையதே ஆகும் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்” என்று சொல்லிவிட்டு அனுமனை நோக்கி, ”நீ உன்னை அனுப்பியவர்களிடம் சென்று, சீதையை விடமுடியாதென்ற, என் நோக்கத்தை உரைத்து அவர்களைப் போருக்கு அழைத்து வா!” என்றான்.

    அடுத்து அங்கிருந்த அரக்கர்களைப் பார்த்து, ”இந்தக் குரங்கின் தொல்லைக்கிடமான வாலானது அடியோடு அழியும்படி அதில் நெருப்பை வைத்து, இவனை நகரைச் சுற்றி இழுத்துச் சென்று பின்பு நகரின் எல்லையைக் கடந்துபோகும்படி விட்டுவிடுங்கள்!” என்று கட்டளையிட்டான். இலங்கைக் காவலனின் ஆணையை ஏற்ற அரக்கர்கள் ஆரவாரத்துடன் கிளம்பினார்கள்.

    தம் மனைவிமார்களின் கழுத்திலிருந்த மங்கலக் கயிற்றைத் தவிர வீட்டிலும் நாட்டிலும் தட்டுப்பட்ட அனைத்துக் கயிறுகளையும் அள்ளிக்கொண்டு வந்து அவற்றால் அனுமனைக் கட்டினார்கள்.

    இவ்வாறு கயிறுகளால் கட்டப்பட்டபோதே அயன்படையிலிருந்து விடுபட்டான் அனுமன். (அயன்படையால் கட்டுண்டிருக்கும்போது வேறொரு கயிற்றினால் கட்டினால் அது பலமிழந்துவிடும்; அதனை அரக்கர்கள் அறியவில்லை.) தன் வாலில் இவர்கள் நெருப்பு வைப்பது மிகவும் நல்லது; இலங்கையை நான் கொளுத்துதற்கு அதுவே பெருந்துணைசெய்ய வல்லது என்று தன்னுள் எண்ணி மகிழ்ந்தான் அஞ்சனையின் அருமை மைந்தன்.

    இராவணன் அரண்மனையைக் கடந்து வெட்டவெளிக்கு அனுமனை அழைத்துச் சென்ற அரக்கர்கள், அவன் வாலில் துணிகளைச் சுற்றி அவ்வாலை நெய்யிலும் எண்ணெயிலும் தோய்த்தெடுத்து அதில் கொடுநெருப்பைக் கொளுத்திவிட்டு அண்டம் பொடிபட மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர்.

    வேந்தன்கோயில் வாயிலொடு
    விரைவில் கடந்து வெள்ளிடையின்
    போந்து புறம்நின்று இரைக்கின்ற
    பொறைதீர் மறவர் புறம்சுற்ற
    ஏந்து நெடுவால் கிழிசுற்றி
    முற்றும் தோய்த்தார் இழுதுஎண்ணெய்
    காந்து கடுந்தீக் கொளுத்தினார்
    ஆர்த்தார் அண்டம் கடிகலங்க.
    (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5927)

    இவ்வாறு அரக்கர்கள் ஆர்த்திருக்க, இச்செய்தி அறிந்த சீதையோ மிகுந்த வேதனையுற்றவளாய் அங்கியக் கடவுளைத் தொழுது, ”தீயே! நான் கற்பில் தூயவள் என்பது உண்மையானால் நீ அனுமனைச் சுடாதே!” என்று வேண்டிக்கொண்டாள்.

    அங்கியக் கடவுள் சீதையின் வேண்டுதலை ஏற்று நிறைவேற்றினான். அதன்விளைவாய் அனுமனின் வாலில் தீ எரிந்துகொண்டிருந்தபோதும் அஃது அவனைச் சுடவில்லை; மாறாகச் சில்லென்ற குளிர்ச்சியைத் தந்தது.

    தன் காயம் (உடல்) சுடாமல் குளிர்வது சனகன் பாவை கற்பினால் ஏற்பட்ட மாயம் என்றுணர்ந்த அனுமன் களிப்படைந்தான்.

    இலங்கை நகர் முழுவதையும் பகலில் மற்றொரு முறை காணுதற்கு இது நல்ல வாய்ப்பு என்றெண்ணித் தன்னைக் கயிறுகளால் கட்டியிழுத்துச் சென்ற அரக்கர்களோடு நகரின் எல்லைவரை சென்ற அனுமன் திடீரென்று உயரே கிளம்பவே அவனைக் கட்டியிழுத்துச் சென்ற அரக்கர்கள் அனைவரும் மேலிருந்து கீழே விழுந்தனர்.

    அவர்களிடமிருந்து தப்பிய அனுமன் இலங்கை நகர மாளிகைகள்தோறும் எரியும் வாலோடு தாவிச் செல்ல இலங்கை நகர் முழுவதிலும் தீ பரவியது.

    தீ பரவியதால் இலங்கையில் நிகழ்ந்த அவல நிகழ்வுகளை நாம் சிலப்பதிகாரக் கண்ணகி மதுரையை எரித்தபோது ஆங்கே நிகழ்ந்தவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    சிலம்பின் வென்ற சேயிழை நங்கையான கண்ணகி ”தீத் திறத்தார் பக்கமே சேர்க” என்று அங்கியக் கடவுளுக்கு ஆணையிட்டதால் நல்லோர்கள் தீயின் வாயிலிருந்து தப்பினர். ஆனால், அனுமன் அவ்வாறெல்லாம் யாருக்கும் விலக்களிக்கவில்லை. அதனால் இலங்கையெங்கும் அழல் மண்டியது. இராவணனின் பிரம்மாண்டமான எழுநிலை மாளிகையும் எரியால் அழிந்ததால் அவன் அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. அரக்கர்களோடும் தன் உரிமை மகளிரோடும் மாளிகைவிட்டு வெளியேறிப் புட்பக விமானத்தில் ஏறியவன், தன்னோடு வந்த அரக்கர்களைக் கண்களில் தீயெழ நோக்கி, “உலகங்களை எரித்தழிக்கும் ஊழிக் காலம் வந்துவிட்டதா? அல்லது வேறு காரணங்களால் இலங்கை நகரம் வெந்துவிட்டதா?” எனக் கேட்டான்.

    அரக்கர்கள் அவனிடம், ”அரசே! நம்மால் வாலில் எரியூட்டப்பட்ட குரங்கு சுட்டது இலங்கையை” என்றனர். அதுகேட்ட இராவணன், “புன்தொழில் குரங்கின் வலிமையால் இலங்கை எரிந்து சாம்பலானது; நெருப்பு நம் நகரத்தைத் தின்று ஏப்பம் விட்டது; இதனைக் கண்டால் நம்மிடம் தோற்றோடிய தேவர்கள் நகைப்பார்கள்; நம் போர்த்திறமை மிக நன்று!” என்று வெகுளி மேலீட்டால் சிரித்து, ”இலங்கைக்குத் தீங்குசெய்த அந்தக் குரங்கு ஊரைவிட்டு நீங்குமுன் பற்றி வாருங்கள்!” என்று கட்டளையிட்டான்.

    அனுமனோடு மீண்டும் போரெதிர்ந்து அவனைப் பற்ற முயன்றனர் அரக்கர்கள்; போரில் அவர்களை அழித்த அனுமன், தான் வைத்த நெருப்பு சீதையிருந்த சோலைப்புறத்தைச் சுடாதது கண்டு நனிமகிழ்ந்து சீதையை நாடிவந்து அவள் அடிதொழுது விடைகொண்டான்.

    அனுமன் இருக்கும் தைரியத்தில் இலங்கையை அதுவரை அழித்துவந்த அக்கினி தேவன், அனுமன் அங்கிருந்து புறப்பட்டுவிடவே, அரக்கர்கள் தன்னைக் கண்டால் நிந்தித்துப் பிடித்துச் செல்வர் என்றஞ்சி, ஓடி ஒளிந்துகொண்டான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share