கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 46

0

-மேகலா இராமமூர்த்தி

மைந்தன் பிரகலாதனைக் கொல்ல இரணியன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியவே, தானே தன் மைந்தனைக் கொல்வது என்ற முடிவோடு பிரகலாதனைத் தேடிவந்தான் இரணியன்.

தந்தையைக் கண்ட பிரகலாதன், ”உன்னால் என்னைக் கொல்ல முடியாது! என்னுயிர் இவ்வுலகைப் படைத்த பரமன் வசப்பட்டது. அவன் சாணிலுமுள்ளான்; தூணிலுமுள்ளான்” என்று புகலவே, அதுகேட்டு நகைத்த இரணியன், ”அப்படியானால் உன் இறைவனை இங்குள்ள தூணில் காட்டு! இல்லையேல் உன்னை நானே கொன்று தின்பேன்!” என்றான் சீற்றத்தோடு.

”நான் ஏற்கனவே சொன்னதுபோல் நின்னால் கொல்லப்படுவதற்கு என்னுயிர் எளியதன்று! அந்தப் பெருமான் நீ தொட்டுக் காட்டும் இடந்தோறும் தோன்றானாயின் எனது உயிரை நானே மாய்த்துக்கொள்வேன்! அதற்குப் பிறகும் நான் உயிர்வாழ விரும்பினால் அந்தத் திருமாலுக்குரிய நல்ல தொண்டனாக மாட்டேன்” என்று சூளுரைத்தான் பிரகலாதன்.

”அப்படியா? நல்லது நல்லது” என்று ஏளனமாய்ச் சிரித்த இரணியன், தூணில் இறைவனைப் பார்க்கலாமே எனும் விருப்பத்தோடு இடிவிழுந்தது போன்ற வேகத்தோடு அருகிலிருந்த ஒரு தூணைத் தன் கையால் ஓங்கி அறைந்தான். அவ்வாறு அவன் அறைந்தவுடனே திசைகளைப் பிளந்துகொண்டு, அண்டமும் கிழியுமாறு, செந்நிறக் கண்களைக் கொண்ட, திருமாலாகிய நரசிங்கம் பெருஞ்சிரிப்புச் சிரித்தது.

நசைதிறந்து இலங்கப் பொங்கி நன்று நன்று என்ன நக்கு
விசைதிறந்து உருமு வீழ்ந்ததென்ன ஓர் தூணின் வென்றி
இசைதிறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும்
திசைதிறந்து அண்டம் கீறச் சிரித்ததுஅச் செங்கட் சீயம்.
(கம்ப: இரணியன் வதைப் படலம் – 6315)

பெருமானின் சிரிப்பொலியைக் கேட்ட பிரகலாதன் மகிழ்ச்சி மீதூர ஆடினான்; பாடினான்; சென்னியில் கைகள் கொண்டு தொழுதான்; அழுதான்.

சிரிப்பொலி செவியில் விழுந்ததும் இரணியன் தான் நின்ற இடத்திலிருந்து நகர்ந்து, ”தூணிலிருந்து சிரித்தவன் யாரடா? இச்சிறுவன் சொன்ன அரியோ? எனக்கு அஞ்சிப் புகுந்துகொண்டிருந்த கடல் போதாதென்று இந்தத் தூணையும் ஒளிந்துகொள்ளத் தேடினாயோ? என்னோடு போர்செய்ய விரும்புவாய் எனின் உடனே புறப்பட்டு வா!” என்றான்.

இரணியன் போருக்கு அறைகூவல் விடுத்தவுடன் அந்தத் தூண் இரண்டாய்ப் பிளந்தது; அங்கே நரசிங்கம் தோன்றியது; தோன்றியவுடனே வளர்ந்து பேருருவம் கொண்டது; அதனால் உலக உருண்டையாகிய அண்டமும் விண்டது (பிளந்தது).

நரசிங்கத்தின் வருகையைக் கண்ட இரணியன், உறையிலிருந்து வாளினை உருவித் தன் ஒரு கையில் ஏந்தி, மறு கையில் கேடயத்தைப் பிடித்தவண்ணம் சினத்தோடு வாய்மடித்து மேருமலைபோல் அதன் எதிர்நின்றான்.

தந்தையின் போர்க்கோலம் கண்ட பிரகலாதன், “பெருமானை இத்தோற்றத்தில் கண்டபின்பும் அவன் ஆற்றலை நீ உள்ளத்தில் உணர்ந்திலை போலும்! சக்கரப் படையானை வணங்கு! உன் புன்மைகளைப் பொறுப்பான் அவன்!” என்று அறிவுறுத்தினான்.

அதுகேட்ட இரணியன், ”நான் சொல்லும் இதனைக் கேள்! நீயும் மற்றவர்களுடன் பார்த்துக்கொண்டிருக்க, சினம் கொண்டெழுந்த கொலைத்தொழில் வல்ல இந்தச் சிங்கத்தின் ஒப்பற்ற தோள்களையும் தாள்களையும் வெட்டி வீழ்த்தி, உன்னையும் வாளால் துண்டித்துப் பின் என் வாளினைத் தொழுவதல்லாது பணிந்து வணங்குவதென்பது பெண்கள் ஊடல் புரியும் காலத்தும் என்னிடம் உள்ளதோ?” என்று வினவி அண்டங்கள் நடுங்கச் சிரித்தான்.

கேள்இது நீயும்காணக் கிளர்ந்தகோள் அரியின் கேழில்
தோளொடு தாளும்நீக்கி நின்னையும் துணித்துப் பின்என்
வாளினைத் தொழுவதல்லால் வணங்குதல் மகளிர் ஊடல்
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான்.
(கம்ப: இரணியன் வதைப் படலம் – 6334)

அதனைத் தொடர்ந்து நரசிங்கத்துக்கும் இரணியனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் இரணியனைச் சுற்றிவளைத்த மாயவனாகிய நரசிங்கப் பெருமான், அவன் மார்பைத் தன் நகங்களால் கீற உதிரவெள்ளம் உலகெங்கும் பரவியது. மாலைப் பொழுதினிலே இரணியனின் அரண்மனை வாயிலிலே தன் அழகிய மடிமீது அவனைக் கிடத்தி, நகங்களால் கீறியதால் ஏற்பட்ட குருதிப் பீறிட, அவன் வைரம் பாய்ந்த மார்பிலிருந்து தீயெழ, மார்பை இரு பிளவாகப் பிளந்து அவனைக் கொன்று வானவரின் இடுக்கண் தீர்த்தான்.

ஆயவன் தன்னை மாயன் அந்தியின் அவன் பொன்
வாயிலில் மணிக் கவான்மேல் வயிரவாள் உகிரின் வாயின்
மீஎழு குருதி பொங்க வெயில்விரி வயிர மார்பு
தீஎழப் பிளந்து நீக்கித் தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்.
(கம்ப: இரணியன் வதைப் படலம் – 6341)

”இரவிலும் பகலிலும் சாகக் கூடாது; வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் சாகக் கூடாது; மண்ணிலும் விண்ணிலும் சாகக் கூடாது; பறவை விலங்கு மனிதர் தேவர் அரக்கர்களால் சாகக் கூடாது; எந்தப் படைக்கலத்தாலும் சாகக் கூடாது” என்று பிரமனிடம் மிகச் சாதுரியமாக வரம்பெற்றவன் இரணியன். ஆகையால், இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத வகையில் மாலை நேரத்தில் வாயிற்படியில் மனிதனுமல்லாத விலங்குமல்லாத நரசிங்கத் தோற்றத்தில் படைக்கலத்தைப் பயன்படுத்தாது தன் நகங்களையே ஆயுதங்களாய்க் கொண்டு இரணியனைக் கிழித்துக் கொன்றான் நரசிங்கமாய் வந்த திருமால்.

பின்பு பிரகலாதனை அருளோடு நோக்கிய நரசிங்கப் பிரான், ”என்றும் நீ சிரஞ்சீவியாய் வாழ்வாய்” என்று வாழ்த்தி, தேவர்களைக் கொண்டு அவனுக்கு முடிசூட்டுவிழா நடாத்தித் தன் கையாலேயே மணிமுடிசூட்டி மூவுலகுக்கும் அவனை அரசனாக்கினான்.

இவ்வாறு இரணியன் வரலாற்றை, இரணியன் வதைப் படலத்தில், விரிவாக இராவணனுக்கு எடுத்துரைத்த அறிவிற் சிறந்த வீடணன், “எம் தலைவ! என் பேச்சினை உனக்கு நன்மை தருவது என்று கருதாது இகழ்ந்து ஒதுக்குவாயெனின் தீமை விளைதல் திண்ணம்” என்றான் உறுதிபட.

வீடணன் கூறிய அறிவுரைகள் இராவணனின் செவிகளில் விழுந்தபோதிலும், அறநெறியினின்று திரிந்த சிந்தையனாகிவிட்ட அவன், அவற்றைத் தனக்கு உறுதிபயப்பவை எனக் கொள்ளவில்லை. மாறாக, வீடணனையே மீண்டும் சினந்துரைக்கலானான்.

”தன்னைப் பெற்றுவளர்த்த தந்தையின் உடலைத் தன் கண்ணெதிரிலேயே மாயவனாகிய திருமால் பிளந்திட, அதுகண்டு மகிழ்ந்த பிரகலாதனும் நம் பகைவனான இராமனுக்கு நட்புள்ளவனாகிய நீயும் சமமானவர்களே!

சூழ்ச்சியால் தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய பிரகலாதனைப் போல நீயும் நான் இராமனிடம் தோற்றபின் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எண்ணிக்கொண்டிருக்கின்றாய்; அது நடக்கின்ற காரியமா? இல்லை!

என் பகைவர்களுக்கு நண்பனாகிவிட்ட நீயிருக்க எனக்கு வேறு பகை வேண்டுமோ?

எனக்குப் பழிநேரும் என்பதால் உன்னைக் கொல்லமாட்டேன்; இதுபோன்ற அறிவுரைகளை எனக்குச் சொல்வதை நீ முதலில் நிறுத்து! இங்கிருந்து சீக்கிரமாய்ப் போய்விடு; என் கண்ணெதிரே நின்றால் நீ சாவாய்!” என்றான் நல்லறிவு நீங்கியவனும் அழிவினை அடையப் போகின்றவனுமான இராவணன்.

பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை
ஒழிசில புகலுதல் ஒல்லை நீங்குதி
விழிஎதிர் நிற்றியேல் விளிதி என்றனன்
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.
(கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6372)

நமக்கு நல்லூழ் வரும் காலத்தில் நல்லறிவு தோன்றும்; தீயூழ் ஏற்படவிருக்கும் தருணத்திலோ உள்ள அறிவும் போய் நம்மைப் பேதையாக்கும். அதுவே இராவணன் விசயத்தில் நடந்தது. இதையே, ’பேதைப் படுக்கும் இழவூழ்’ என்பார் வள்ளுவப் பேராசான்.

அதன்பின்னரும் அங்கிருக்க விரும்பாத வீடணன், அங்கிருந்து கிளம்பி விண்ணில் எழுந்துநின்று, ”அண்ணலே! உன் வாழ்வுக்கு ஏன் கேடு சூழ்கின்றாய்? அறநெறி தவறியவர்க்கு நல்ல வாழ்க்கை அமையுமோ? வீணாக உன் புத்திரர்கள், மித்திரர்கள், சுற்றத்தினர் என அனைவரையும் அழிக்க முற்படுகின்றாய். நான் எவ்வளவோ நல்லுரைகளை நவின்றும் அவற்றை நீ கேட்கவில்லை. ஆகவே, நான் உன்னைவிட்டு நீங்குகின்றேன்; என்னை மன்னித்துவிடு!” என்று இராவணனிடம் உரைத்துவிட்டு இலங்கையைவிட்டு நீங்க முற்படுகையில் நற்பண்பாளர்களும் வீடணனின் அமைச்சர்களுமான அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகியோர் அவனோடு இணைந்துகொண்டனர்.

இலங்கையை நீங்கி எங்குச் செல்வது என்று புரியாமல் சிந்தித்திருந்த வீடணனிடம், ”வானரர்களோடு மனிதர்களான இராம இலக்குவரும் கடலின் அப்புறத்தில் தங்கியிருக்கின்றனர்; நாம் அவர்களிடம் போவோம்” என்று அவ் அமைச்சர்கள் கூறவே, அவர்களோடு புறப்பட்டு அக்கரையை அடைந்தான் வீடணன்.

அங்கே கடற்கரையில் விளக்கொளி பரந்திருப்பதையும் அதில் வானரப் படைகள் நிறைந்திருப்பதையும் கண்டான்.

ஒரு முடிவுக்கும் வர இயலாதவனாய்த் தவித்த வீடணன், “அறவழியில் நடப்பவர்களான இராம இலக்குவரிடத்து அன்பு பூண்டேன்; நற்புகழைப் பெறுதல் அல்லாமல் உயிர்வாழவும் நான் விரும்பமாட்டேன்; எனக்கு நன்மையானவற்றை நீ செய்யவில்லை என்று அண்ணன் இராவணன் சொன்னதால் அவனை நீங்கிவிட்டேன். இனி நான் செய்யவேண்டியது என்னவென்று கூறுங்கள்!” என்று தன் துணைவர்களிடம் கேட்டான்.

புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும்  கொள்ளலர்”  (புறநா.182)” எனும் புறநானூற்று அடிகளை ”நற்புகழைப் பெறுதல் அல்லாமல் உயிர்வாழவும் விரும்ப மாட்டேன்” எனும் வீடணனின் கருத்தோடு நாம் பொருத்திப் பார்க்கலாம்.

கல்வியிலும் ஆலோசனை சொல்வதிலும் வல்லவர்களான அவ் அமைச்சர்கள் வீடணனிடம், ”தாழ்ச்சியில்லாத ஞானத்தைத் தரும் அறமே வடிவான இராமபிரானைக் கண்டு தரிசிப்பதே இனி நம் கடன். அதனினும் மாண்பு பொருந்தியது வேறெதுவுமில்லை” என்றனர்.

மாட்சியின் அமைந்தது வேறு மற்றுஇலை
தாட்சிஇல் பொருள்தரும் தரும மூர்த்தியைக்
காட்சியே இனிக்கடன் என்று கல்விசால்
சூட்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார்.
(கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6382)

அமைச்சர்கள் சொன்னதைக் கேட்ட வீடணன், ”நமக்கு நன்மையானதையே நீர் சொல்லினீர்; இராமபிரானைச் சேர்வதல்லாது வேறு செய்வோமாயின் நாமும் அரக்கத் தன்மையினர் ஆவோம். ஆதலால், எல்லையில்லாப் பெருங்குணங்களைக் கொண்ட இராமனைச் சேர்வோம்” என்று அக்கருத்தை ஆமோதித்து ஏற்றுக்கொண்டான். 

ஆக, தம் அமைச்சர்களின் ஆலோசனைப்படியே இராமனோடு சேரும் முடிவை, தமையன் இராவணன் தன்னை நிந்தித்து விரட்டிய நிலையில், எடுக்கின்றான் வீடணன். எனவே, இராமன் அக்கரைக்கு வந்ததிலிருந்தே எப்படியாவது இராவணனைப் பிரிந்து இராமனோடு சேர்ந்துவிட வேண்டும் என்று வீடணன் சூழ்ச்சியாய்த் திட்டமிட்டான் என்று அவன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்பதற்கு இப்பாடல் தெளிவான சான்று பகர்கின்றது.

வீடணனும் அவன் அமைச்சர்களும் இராமனோடு சேர்வது என்ற முடிவுக்கு வந்தபோது இரவாகிவிட்டிருந்தது. எனவே, அந்த நேரம் இராமனைச் சந்திப்பதற்கு ஏற்றதன்று; மறுநாள் காலை சந்திக்கலாம் எனும் எண்ணத்தோடு அருகிலிருந்த ஒரு சோலையில் அன்றைய இரவுப் பொழுதைக் கழித்தார்கள் அவர்கள். மறுநாள் காலை வானர சேனை குழுமியிருந்த இடத்தருகே வீடணன் தன் துணைவர்களோடு வந்துநின்றான். அரக்கர்களை அருகில் கண்ட வானரர்கள், ”இவர்களை அடியுங்கள்; பிடியுங்கள்; ஆயுதங்களால் தாக்குங்கள்” என்று கூச்சலிட்ட வண்ணம் வீடணனையும் அவன் துணைவர்களையும் சூழ்ந்துகொண்டனர்.

”இவன் இராவணனோ?” என்று சிலர் ஐயத்தைக் கிளப்ப, ”அவனுக்குப் பத்துத் தலைகளும் இருபது கைகளும் உண்டென்பார்களே; அவையெல்லாம் சிதைந்து போயினவோ?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.

இவ்வாறு வானரர்கள் தோன்றியபடியெல்லாம் பேசிக்கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருப்பதைச் சற்றுத் தூரத்திலிருந்த அனுமன் கவனித்தான். மயிந்தன், துமிந்தன் எனும் இரு வானரர்களை கூச்சலிட்டுக்கொண்டிருந்த வானரர்கள் இருந்தவிடத்துக்கு அனுப்பி அங்கு நடப்பதனை அறிந்துவரச் சொன்னான்.

வீடணனும் அவன் துணைவர்களும் நின்றிருந்த இடத்துக்கு வந்த மயிந்தனும் துமிந்தனும் ”நீங்கள் யார்? இங்கு வந்த நோக்கமென்ன?” என்று கேட்க, வீடணனின் துணைவனான அனலன் வீடணனைப் பற்றியும் அவன் தன் தமையனான இராவணன் சீதையைச் சிறைவைத்திருப்பதைக் கண்டித்து நல்லுரைகள் சொன்னபோது அதனை ஏற்க மறுத்த இராவணன் வீடணனைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி விரட்டவே அவனை விட்டுநீங்கி இங்கு வந்துள்ளான் என்றும் நிகழ்ந்தவற்றை விளக்கியுரைத்தான்.

அதனைச் செவிமடுத்த மயிந்தன், ”நீவிர் கூறியவற்றை இராமபிரானிடம் சொல்லி அவர் முடிவினை அறிந்துவருவேன்” எனச் சொல்லிவிட்டு, ”அதுவரை இவர்களைக் காவல் காத்துக்கொண்டிருங்கள்” என்று துமிந்தனையும் ஏனைய வானரர்களையும் பணித்துவிட்டு இராமனை அணுகினான்.

வீடணனுக்கும் இராவணனுக்கும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டையும் இராவணனால் விரட்டப்பட்ட வீடணன் தற்போது இராமனிடம் அடைக்கலம் நாடிவந்திருப்பதையும் எடுத்துரைத்தான் மயிந்தன்.

அதனைக் கேட்ட இராமன், ”வீடணனை நாம் நம்மோடு சேர்த்துக்கொள்வதா? விலக்கி வைப்பதா? உம் கருத்து என்ன?” என்று தன்னருகிலிருந்த நண்பர்களைக் கேட்கவே, சுக்கிரீவன் முதலில் ஆரம்பித்தான்…

”அனைத்து அறநூல்களையும் பழுதறக் கற்ற நீ எம்மைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது எதுவுமில்லை. எனினும், எம் கருத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில் கேட்கின்றாய்; ஆதலால் என் கருத்தைச் சொல்கின்றேன் எனும் பீடிகையோடு தொடங்கி,

”தகைமை உடைய தன் முன்னோனையும் (தமையன்), தாய் தந்தையையும், சிறப்புடைய சான்றோரையும், உலகாளும் மன்னனையும் பகைத்துக்கொண்டு வருவதும், பிரிந்து நீங்குவதும் நகைப்புக்கு இடமாவதே அன்றி விரும்பத்தக்க செயலோ?” என்று கேட்டான்.

தகைஉறு தம்முனை தாயை தந்தையை
மிகைஉறு குரவரை உலகின் வேந்தனை
பகைஉற வருதலும் துறந்த பண்புஇது
நகையுறல் அன்றியும் நயக்கற்பாலதோ.
(கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6424)

தொடர்ந்தவன், ”அண்ணனோடு வாழ்ந்த நாளெல்லாம் அவன் செல்வத்தை அனுபவித்துவிட்டு இடையில் பகைவர் சினந்து எழுந்தபோது அந்த அண்ணனுக்கு உறவாக இல்லாமல் அண்ணனின் பகைவர்களோடு சேரவருகின்ற இவன் யார்க்கு உறவாவான்?” என்றும் வினாவெழுப்பி வீடணனுக்கு அடைக்கலம் தருதல் தீங்காய் முடியும் எனும் தன் கருத்தை வெளிப்படுத்தினான்.

இதில் நகைமுரண் யாதெனின், அரசாட்சியைத் தான் பெறுவதற்காகச் சொந்த அண்ணனான வாலியையே இராமனின் துணையோடு கொன்றவன் இந்தச் சுக்கிரீவன். இவன், வீடணன் அண்ணனைப் பகைத்துக் கொண்டு மாற்றானோடு கூட்டுச் சேர்வது முறையற்றது; நகைப்புக்கு இடமாவது என்று அறமுரைக்கின்றான்.

”தனக்கொரு நீதி; அடுத்தவனுக்கொரு நீதி” என்றிருப்பதுதான் இராமாயணக் காலத்திலிருந்தே உலக வழக்கம் போலிருக்கின்றது.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *