சேக்கிழார் பாடல் நயம் – 163 (அருமறை)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
வரலாறு:
திருத்தலையூரில் வாழ்ந்த சிவனடியார் தம் குல வழக்கப்படி நாள்தோறும் மூன்று வேளையும் உருத்திரனாகிய சிவபெருமானைத் துதிக்கும் உருத்திர மந்திரத்தை ஓதி வந்தார். அவ்வகையில் இவர் ஓதிய மந்திரத்தைச் செவியுற்ற சிவபெருமான் மகிழ்ந்தார், அதனைச் சேக்கிழார்,
அருமறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை
வரும் முறைப் பெரும் பகலும் எல்லியும் வழாமே
திருமலர்ப் பொகுட்டு இருந்தவன் அனையவர் சிலநாள்
ஒருமை உய்த்திட உமையிடம் மகிழ்ந்தவர் உவந்தார்
என்று பாடினார். இப்பாடலின் பொருள், அரிய மறைகளின் பயனாகிய உருத்திரத்தை வருமுறையில் பெரும்பகலிலும் மாலையிலும் தவிராமல் தாமரையினது பொகுட்டில் இருக்கும் பிரமதேவனைப் போன்ற பசுபதியார் சிலநாள் ஒன்றுபட்ட வுணர்வுடன் இவ்வாறு கணித்தபோது, உமையம்மையாரை இடப்பாகத்தில் மகிழ்ந்து வைத்த சிவபெருமான் உவந்தனர்.
விளக்கம்: அருமறைப்பயன் ஆகிய உருத்திரம்- உருத்திரனே பரமன் என்று காட்டும் சிவமந்திரத்தைத் தன் னடுவுட்கொண்டு விளங்குதலால் மறைப்பயனாகிய உருத்திரம் என்றார். அருமறை என்றது ஞானத்துக்கு முதலாயிருக்கும் தன்மைபற்றி. ஞானத்தின் முடிந்தநிலை திருவுருத்திரத்திற் பெறப்படுவதனால் அதனை மறைப்பயன் என்றார்.
மறைகள், மந்திரம் – பிராமணம் -உபநிடதம் என்று மூன்று பாகுபாடுபெறும். சாமானிய காமியாதிகளைப் பயக்கும் யாக முதலியவற்றுக்கு உதவுவன மந்திரம் என்ற பாகம் எனவும்,இந்த யாகாதிகளுக்குரிய சடங்குகளை வகுப்பன பிராமணம் எனவும், இறைவனது இலக்கணங்களை எடுத்துச்சொல்வன உபநிடதங்கள் எனவும் கூறுவர்.
உருத்திரமானது மந்திரமாகியும், வேள்வித்தீயைத் தன்னுளடக்கிக் கொண்டதாயும் உள்ளதோடு, சிவனே “தனிமுதலாம் பரன்” என்று சிவனது முழுமுதற்றன்மையும் கூறுவதனால் அது வேதங்களின் மூன்று தன்மைகளையும். தன்னுட்கொண்டு விளங்குதல்பற்றி அதனை அருமறைப்பயன் என்றார் என்பதுமாம். அன்றியும், ஆன்மாக்கள் பக்குவபேதத்திற்கேற்பப் பலபல தெய்வங்களை வழிபடுவர்; அவ்வாறு வழிபடப்படும் இந்திரன், அக்கினி, யமன், பிரமன் முதலிய பிற எல்லாத் தேவர்களையும் எடுத்து ஓதி, முகமனால் அவர்களுக்கு வழிபாடு வேதத்தினுட் கூறப்படும்; ஆயினும், இம்மந்திரத்தினை இதயத்தில் வைத்துப் போற்று முகத்தால் முழுமுதல்வன் சிவனேயாம் என்ற உண்மையைத் தேற்றம்பெறவேதம் எடுத்துக் காட்டுவதனாலே இது மறைப்பயனாயிற்று என்றலும் பொருந்தும்.
அருமறைப்பயனாகிய உருத்திரம் – 1. ஸ்ரீருத்ரம் அல்லது திருவுருத்திரம் எனத் தமிழில் வழங்கப்படும். ஸ்ரீருத்ர ப்ரச்னம், ஸ்ரீருத்ரசூக்தம், ஸ்ரீருத்ராநுவாகம் என்பன முதலிய பெயர்களால் ஆரிய மொழியில் இது வழங்கப்படும்.
ஸ்ரீ அல்லதுதிரு என்பதற்குப் பார்வதிதேவி, சம்பத்து, காந்தி என்பன பொருளாம். இம் மூன்றனோடும் என்றும் கூடியிருத்தலின் சிவபெருமானுக்கு ஸ்ரீருத்ரன் எனப் பெயர் போந்தது.
2. துன்பக் கடலினுட்பட்ட தொண்டரை எடுத்து இன்பக்கரைக்கண் ஏற்றுவதனால் சிவபெருமானுக்கு உருத்திரன் என்னும் திருநாமம் எய்திற்று, அப்பெருமான் தந்த திருக்குமாரர்களுக்கும், அவனடி யடைந்தோர்க்கும், அவனுடைய கணங்கட்கும், அவனுருவந் தாங்கினோர்க்கும் அவன் சார்பு பற்றி உருத்திரப் பெயர் வழங்கும்.
3. முழுமுதற்கடவுளாகிய அவ்வுருத்திர மூர்த்தியின் எல்லா வடிவங்களும் கோரவடிவம், சாந்தவடிவம் என்னும் இரண்டனுள் அடங்கும். அவற்றுள் கோரவடிவம் பிறவிப் பெரும் பிணிக்கு மருந்தாக உள்ளது. சாந்தவடிவம் சிவத்துவ விளக்கந் தருவது. முன்னது திருவுருத்திர நமக மந்திரங்களால் துதிக்கப்படுவது. பின்னது சமக மந்திரங்களால் துதிக்கப்படுவது.
4. வேதம் மூன்றனுள் நடுவிலுள்ள யசுர் வேதத்தின் ஏழு காண்டங்களுள் நடுக்காண்டத்துள்ளது திருவுருத்திரம். இது பதினோரு அநுவாகங்களாகிய உட்பிரிவுகளை யுடைமையால் ‘’உருத்திரை காதசநீ’’ என்றும் பெயர்பெறும். இப் பதினொரு அநுவாகங்களிலும், இருக்கு, யஜுஸ் ஆகிய மந்திரங்கள் கூறப்படும்.
அவற்றுள் 1 – வது அநுவாகத்தில் 15 இருக்கும், 2 முதல் 9 வரை அநுவாகங்களில் முறையே, 13, 17, 17, 15, 15, 16, 17, 19 யசுசும், 10 – வது அநுவாகத்தில் 12 இருக்கும், 11 – வது அநுவாகத்தில் 10 இருக்கும் 3 யஜுஸும் ஆக இருக்கு 37 – ம், யசுசு 132 – ம் ஆக மந்திரங்கள் 169 கூறுப்பட்டுள்ளன. இம்மந்திரங்களை நியமமாக ஓதும் முறை, தியானம், பயன் முதலிய எல்லாம் உருத்திர கற்பத்துள்ளும், ஏனைய கற்ப சூத்திரங்களிலும் விரிவாகக் காணலாம்.
இவ்வுருத்திரப் பிரசினத்தின் பாடியம் இரண்டனுள் பட்டபாஸ்கரர் பாடியத்தும் அவை கூறப்படுதல் காணலாம்.
5. பிரளயாகலராகிய ஆன்மாக்களுள் மலபரிபாக மெய்திச்,சிவபெருமானால் நிரதிகரணமாகத் தீக்கை செய்யப்பெற்று, முத்தராகிப், பல்லாயிரங்கணங்களுடன் கூடிய நூற்றுப் பதினெட்டு உருத்திரருள், நிவிர்த்திகலையின் பிருதிவிதத்துவ அண்டங்கள் ஆயிரகோடியினும் அமைந்த நூற்றெட்டுப் புவனங்களுள், புறத்தேம் கிழக்கு முதலிய பத்துத் திசையினும் ஒவ்வொரு திசைக்கும் பதின்மராக வைகும் புவன பதிகளாகிய உருத்திரர் நூற்றுவர்க்கும் அவர் கணங்கட்கும் வணக்கங்கூறி, இவர் அனைவரையும் பரிசனங்களாகவுடைய முழுமுதலாய்ச் சாந்தியதீத கலாபுவனாந்தம் முழுதும் யாவையும் இறுதியுறச் சங்கரிக்கும் மகாருத் திரனாகிய சிவபிரானுக்கு வணக்கங்கூறிப், பிறவிப் பெரும்பிணித் துன்பவெள்ளக் கடல் நீந்துங் கருத்தே மிக்குச் சாந்தி வேண்டிக்கோடலின் அருமறைப் பயனாகிய திருவுருத்திரம் ‘’சதருத்திரீயம்’’ எனவும் பெயர்பெறும். இங்குக்கூறிய உருத்திரர் பெயர் முதலியனவும் பிறவும் ஸ்ரீ பவுட்கராகம விருத்தியில் பசுபடலத்தின் அத்துவப் பிரகரணத்திற் காண்க.
“தைத்திரீய சாகையின் உருத்திரப் பிரசின முடிவிலே அவ்வத்திக்கி னிருப்போராகிய இவ்வுருத்திரர்கள் பப்பத்து எண்ணிக்கையோடும் நமஸ்காரத்தோடும் சுருக்கமகக் குறிக்கப்பட்டனர்” என அப்பிரகரண முடிவில் கூறியதும் இங்கே சிந்திக்கற்பாலது.
6. வேதம் நான்கினும் மெய்ப்பொருளாகிய திருவைந்தெழுத்து இத்திரு வுருத்திரத்துள் இருத்தலின், இதனை வேத புருடனுக்குக் கண்ணாகவும், திருவைந்தெழுத்தைக் கண்மணியாகவும் பெரியோர் கூறுப. நிற்பனவும் நடப்பனவுமாகிய உலகப்பொருள் அனைத்தினும் இறைவன் பகுப்பின்றி அவையேயாய்க் கலந்துநிற்றல் பற்றி, இறைவனை விசுவரூபனாகவும் விசுவேசனாகவும் புகழ்ந்து வணக்கங் கூறும்.
இத்திருவுருத்திரம்.1 வருமுறை – முன்சொன்ன அம்முறையாகிய நியதியிலே. பெரும்பகல் – உச்சி வேளை வரையுள்ள சிறுபொழுது என்ற காலப்பகுதி, எல்லி- மாலை. “அல்லும் பகலும்” என்றது வகை நூல்.
“அந்தியு நண்பகலு மஞ்சு பதஞ்சொல்லி” என்ற நம்பிகள் தேவாரங் காண்க.
வழுவாமே என்ற சொல் அன்பாலும், சொல்லாலும், செயலாலும் தவிர்தலிலராகி. என்பதைக் குறித்தது.
திருமலர்….அனையவர் – திருமலர் – தாமரை – “பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை” “பூவெனப் படுவது பொறிவாழ் பூவே”. பொகுட்டு – கொட்டை. மலரில் இருந்தவன் – பிரமன். செங்கமலப் பொய்கையுள் மேவியிருத்தலாலும், வேத மோதுதலாலும் பிரமனைப் போன்றவர் என்றார்.
சிலநாள் என்ற தொடர் இந்தக் கடுந்தவத்தை அவர் நீண்டகாலம் செய்யவிட்டுத் தாழ்க்காதபடி இறையவர் சில நாட்களிலே மகிழ்ந்து அருள் புரிந்தனர் என்பதைக்க குறித்தது.
ஒருமையுய்த்திட – மனவொருமைப் பாட்டுடன் செலுத்த. வழுவாமே – உய்த்திட என்று கூட்டுக. உய்த்தல் – செலுத்துதல்.
உமை இடம் மகிழ்ந்தவர் – இடம் – இடப்பாகம். உமை – சிவனருள்.
உவந்தார் – மகிழ்ந்து ஏற்று அருள் புரிந்தனர்.
1இவை ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான்சுவாமிகள் அன்புடன் எழுதிய குறிப்புக்கள்.
இப்பாடலால் வேதத்தின் பகுதியாகிய உருத்திர மந்திரத்தின் பொருளும், வகையும், இதனை ஓதுதலால் உண்டாகும் பயனாகிய ‘’சிவதரிசனம், சிவலோகப்பிராப்தி’’ ஆகியவற்றை நாம் உணர்ந்து கொள்கிறோம்!