-மேகலா இராமமூர்த்தி

போருக்கு இராவணனின் வரவை எதிர்நோக்கி இராமன் தன் சேனைகளோடு வடக்கு வாயிலில் வெகுநேரம் காத்திருந்தும் இராவணன் வாராதுபோகவே, இராமன் வீடணனைப் பார்த்து, ”தூதுவன் ஒருவனை நம்மிடத்திலிருந்து விரைவில் அனுப்பி இப்போதாவது சீதையை விடுதலை செய்கிறாயா? என்று வினவிப் போர் தவிர்த்திட இராவணனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்ப்போம்; அப்போதும் அவன் விடமறுத்தால் போரில் அவனை அழிப்போம் என எண்ணுகின்றேன்; அஃதே அறம் என்று எனக்குத் தோன்றுகின்றது” என்றான்.  

வீடணனும் சுக்கிரீவனும் இராமனின் கருத்துக்கு உடன்பட்டுக் ”கொற்றவற்கு உற்ற செயல் இது” என்று பாராட்டினர்; ஆனால், இலக்குவன் அதனை ஒப்பவில்லை. ”இனியும் இராவணனிடம் இரக்கம் காட்டுவது இழுக்கு; அரக்கர்களிடம் நாம் செலுத்தவேண்டியது அம்பே தவிர அன்பு இல்லை” என்றான் அவன்.

இலக்குவனின் சொற்களைக் கேட்டு முறுவல்பூத்த இராமன், “இலக்குவா! இறுதியில் நீ சொல்வதுபோல் போர்வரத்தான் போகின்றது; எனினும், பொறுமை காத்தலே அரச நீதியும் அறிஞர்க்கு அழகு தருவதும் ஆகும். ஆதலால், நம் சார்பாய்த் தூதுவனை அனுப்பி இராவணனின் கருத்தறிவோம்!” என்றுகூறிவிட்டு, ”மாருதியை மீண்டும் நாம் அனுப்பினால் அவனைவிட்டால் மாற்றாரிடம் சென்றுவர நம் படையில் வேறு ஆளில்லை எனும் எண்ணம் நம் பகைவர்களிடம் ஏற்படும் என்று சிந்தித்தவனாய் இம்முறை அங்கதனைத் தூதனுப்புவோம்; பகைவர்கள் தம் வீரத்தைக் காட்ட முயன்றாலும் அதனை வென்றுத் தீங்கின்றி மீளவல்லவன் அவனே!” என்றான்.

ஏனையோரும் அதனை முழுமனத்துடன் ஆமோதிக்கவே, அங்கதன் இராமனிடம் அழைத்துவரப்பட்டான். தன்னை இராவணனிடம் தூதனுப்ப இராமன் முடிவுசெய்திருப்பதை அறிந்த அங்கதனின் தோள்கள் பெருமிதத்தில் பூரித்தன. இராவணனிடம் தான் உரைக்க வேண்டியது யாது என்று இராமனிடம் வினவினான் அவன் வினயத்துடன். அதற்கு இராமன், ”உயர்ந்த அணிகளையணிந்த சீதையைச் சிறையிலிருந்து விடுதலை செய்து தன்னுயிரைப் பெறுதல் நல்லதா? அல்லாது போனால் உன் பத்துத் தலைகளும் சின்னபின்னம் செய்யப்பட்டுச் செருக்களத்தில் கிடப்பது நல்லதா? நான் கூறியவற்றுள் இரண்டில் ஒன்றைத் தேர்ந்து சொல்லுக என இராவணனிடம் கூறிவருக” என்றான் வாலியின் வீரமைந்தனிடம்.

என்அவற்கு உரைப்பது என்ன ஏந்திழையாளை விட்டுத்
தன்உயிர் பெறுதல் நன்றோ அன்றுஎனின் தலைகள் பத்தும்
சின்னபின்னங்கள் செய்ய செருக்களம் சேர்தல் நன்றோ
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக எனச் சொல்லிடு என்றான்.
(கம்ப: அங்கதன் தூதுப் படலம் – 6984)

அதனையேற்று விரைந்து புறப்பட்ட அங்கதன் வெயில் கடக்க அஞ்சும் இலங்கையின் அயில்களை (மதில்கள்) அநாயாசமாகக் கடந்துசென்று இராவணனின் இருப்பிடத்தை அடைந்தான். அவனைக் கண்டதும் அனுமன்தான் மீண்டும் வந்துவிட்டானோ என்று அஞ்சிய இராவணனின் சுற்றத்தினர் தம்மைக் காக்குமாறு இராவணனிடம் கெஞ்சினர்.

ஓலக்கத்தில் கம்பீரமாய் வீற்றிருந்த இராவணனைக் கண்ட அங்கதன், அவன் தோற்றத்தைக் கண்டு வியந்தான். இராவணனின் மணிமகுடத்தில் இருந்த மணிகளைப் பறித்துவந்த சுக்கிரீவனின் வலிமை அப்போது அவன் நினைவுக்குவரவே, ”என் சிறிய தந்தை யாரினும் வலியன்” எனப் பெருமிதம் கொண்டவனாய் இராவணனின் அருகில் சென்று நின்றான்.

”யார் நீ? இங்கு வந்த காரியம் என்ன?” என்று இராவணன் அங்கதனைச் சினத்தோடு கேட்கவும், தன் வெள்ளிய பற்கள் ஒளிர நகைத்த அங்கதன், ”ஐம்பூதங்களுக்கும், தெய்வங்கள் போற்றும் வேதங்களுக்கும் நாயகனான இராமனின் தூதன் நான்” என்றான்.

அதைக் கேட்ட இராவணன், கங்கையைத் தலையில் தரித்த அரனும், சங்கைக் கரத்தில் ஏந்திய அரியும் என் நகர்வர அஞ்சி இங்கே வாரார்; அவ்வாறிருக்கக் கேவலம் மனிதருக்காகத் தூதுவந்த நீ யாவன்?” என்றான் இகழ்ச்சி தோன்ற.

”நானா? இராவணன் என்று சொல்லப்படும் ஒருவனை முன்பு தன் வாலில் தொங்குமாறு அவனது அழகிய தோள்களுடன் பிணித்து, யானைகள் வாழுகின்ற மலைகள்தோறும் தாவிப் பாய்ந்து திரிந்தவனும், தேவர்கள் அமுதத்தை உண்ணும்பொருட்டு மந்தர மலையினால் கடலைக் கலக்கியவனும், இந்திரனின் புதல்வனுமாகிய வாலியின் மைந்தன் நான்” என்று தன் தந்தையின் அளப்பரிய பேராற்றலையும் அவன் இராவணனைப் படுத்தியபாட்டையும் அங்கதச் சுவையோடு இராவணனுக்கு நினைவுபடுத்தித் தான் யார் என்பதை அவனுக்கு எடுத்தியம்பினான் அங்கதன்.

இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான் தன்னைச்
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன் தேவர் உண்ண
மந்தரப் பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான்.
(கம்ப: அங்கதன் தூதுப் படலம் – 6997)

அங்கதன் வாலி மைந்தன் என்பதை அறிந்த இராவணன், தன் சூழ்ச்சித் திறத்தால் அவனைத் தன்வயமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டவனாய்,

”அடடே! வாலி மைந்தனா நீ? உன் தந்தை என் நண்பனாயிற்றே! உன் தந்தையைக் கொன்ற இராமனோடு நீ இணைந்திருப்பது நிந்தனை அல்லவா? என்னோடு நீ இணைந்துகொள்! வானர அரசை மீண்டும் உனக்களிப்பேன்!” என்று ஆசைகாட்டினான்.

இராவணனின் கெடுமதியையும் பிரித்தாளும் சூழ்ச்சியையும் புரிந்துகொண்ட அங்கதன், தன் தோளும் மார்பும் இலங்கை மாநகரமும் குலுங்கும்படிப் பலமாகக் கைகொட்டி நகைத்தவாறே, ”இந்த இலங்கை நகர் வாழ்வோர் அனைவர்க்கும் இறுதி நேர்வது உறுதி என்று அறிந்ததால் அல்லவோ உன் தம்பியாகிய வீடணன் எங்கள் பக்கம் வந்துசேர்ந்தான்” என்றான்.

மேலும் தொடர்ந்தவன், ”வாயில்வந்த சொற்களைச் சொல்லி என்னை நீ உன் வயப்படுத்த முயல்வாயானால் தூதனாக வந்தவன் அரசினை ஆட்சி செய்வது இதுவரை நடந்துள்ளதா என்பது ஆராயத்தக்கதோர் செயல் அன்றோ? வானர ஆட்சியை நீ தர நானா ஏற்பேன்? இச்செயலுக்கு இனி வேறோர் ஒப்புமைகூற எண்ணினால் நாயானது கொடுக்க ஒரு நல்லரசைச் சிங்கம் ஏற்றுக்கொள்வதை ஒக்கும் என்றுகூறி ஏளனமாய்ச் சிரித்தான்.

வாய்தரத் தக்க சொல்லி என்னைஉன் வசஞ்செய்வாயேல்
ஆய்தரத் தக்கது அன்றோ தூதுவந்து அரசது ஆள்கை
நீதரக் கொள்வென் யானே இதற்குஇனி நிகர்வேறு எண்ணின்
நாய்தரக் கொள்ளும் சீயம் நல்அரசு என்று நக்கான்.
(கம்ப: அங்கதன் தூதுப் படலம் – 7002)

அங்கதனின் ஏளனச் சொற்களால் கடுங்கோபம் அடைந்த இராவணன், இந்தக் குரங்கினை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று எழுந்தான்; உடனே ஓர் அற்பக் குரங்கினைக் கொல்வதற்காக என் உடைவாளைத் தொடுவேனா என்றெண்ணித் தன் சினத்தினை அடக்கிக்கொண்டு, ”நீ வந்த காரியத்தை உரை” என்றான் அங்கதனைப் பார்த்து.

அதற்கு விடையிறுக்குமுகத்தான் இராவணனை நோக்கிய அங்கதன், ”உன்னிடம் இன்னமும் அருள் நீங்காதவனாகிய இராமன், இன்று என்னை அழைத்து, நீ போய்த் தன் குலம் முழுவதையும் அழிக்கவுள்ள பாவப்பட்டவனும், போருக்குப் பயந்து கோட்டைக்குள் பதுங்கியிருப்பவனுமான இராவணனிடம் சென்று, சீதாதேவியை விட்டு விடுக; அன்றேல் போர்க்களத்தில் எதிர்நின்று தன் முன்பாக ஆவியை விடுக என்றுரைக்கச் சொன்னான்” என்றான்.

கூவிஇன்று என்னை நீபோய்த் தன்குலம் முழுதும் கொல்லும்
பாவியை அமருக்கு அஞ்சி அரண்புக்குப் பதுங்கினானை
தேவியை விடுக அன்றேல் செருக்களத்து எதிர்ந்து தன்கண்
ஆவியை விடுக என்றான் அருள்இனம் விடுகிலாதான்.
(கம்ப: அங்கதன் தூதுப் படலம் – 7004)

அங்கதன் மொழிகேட்டுச் சினத்தில் விழிகள் சிவந்த இராவணன், ”அவனைப் பற்றுமின்; பார்மிசை எற்றுமின்!” (மோதிக் கொல்லுங்கள்) என்று வலிமிகு அரக்கர் நால்வரை அங்கதன்பால் ஏவினான். தன்னைப் பற்றப் பாய்ந்த அரக்கர்களைப் பற்றிக் கோபுர வாயிலில் மோதிக் கொன்ற அங்கதன், ”பாதுகாப்பான இடங்களைச் சென்று சேருங்கள்; இல்லையேல் இராமனின் அம்பால் அழிவீர்கள்” என்று அங்குள்ளோரை எச்சரித்துவிட்டு அவ்விடம் விட்டகன்று இராமனைச் சென்றடைந்தான்.

அங்கதனைக் கண்ட இராமன், இராவணனின் உள்ளக் கருத்தை உரை என்று அவனிடம் கூற, ”அந்த இராவணனின் நிலையை முற்ற ஓதி என்ன பயன்? அந்த மூர்க்கன் அவனுடைய முடிபுனைந்த பத்துத் தலைகளும் அறுபட்டு மண்ணில் வீழ்ந்தாலன்றி ஆசை நீங்கான்!” என்றான்.

உற்றபோது அவன் உள்ளக் கருத்து எலாம்
கொற்றவீரன் உணர்த்து என்று கூறலும்
முற்றஓதி என் மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் என்றான்.
(கம்ப: அங்கதன் தூதுப் படலம் – 7016)

சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் அமைய உரையாடுந் திறனுக்கு அங்கதனுக்கும் இராமனுக்குமிடையே நிகழ்ந்த இந்த உரையாட்டை நாம் சான்று காட்டலாம். ”மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்ற முதுமொழிக்கேற்பத் தான் கொண்ட, குலத்தை அழிக்கக்கூடிய, கொள்கையில் உறுதியாக நின்ற இராவணனை மூர்க்கன் என ஈண்டு மொழிந்தார் கம்பநாடர்.

இராவணனின் கருத்தறிந்த இராமன், ”இனிப் பூசலே அன்றிச் சமாதானம் எனும் பேச்சுக்கு இடமில்லை என முரசறையுங்கள்” என்று தன் வீரர்களுக்கு ஆணையிட்டான். இராமன் எவ்வளவு முயன்றும் இராவணனுடனான போர் என்பது தவிர்க்கவியலாத ஒன்றாகவே அவனுக்கு அமைந்துபோனது.

வானரப் படைகளால் இலங்கையிலுள்ள அகழிகள் தூர்க்கப்பட்டன; மதில்கள் கைப்பற்றப்பட்டன; இலங்கை நகரம் சுற்றி வளைக்கப்பட்டது. சற்று நேரத்தில் அரக்கர் சேனையும் நால்வகைப் படைகளுடன் களத்தில் இறங்கியது. கிழக்கு வாயிலில் குரக்குப் படைவீரன் நீலனுக்கும் அரக்கர்படைத் தலைவனும் சுமாலியின் மகனுமான பிரகத்தனுக்கும் கடும்போர் நடைபெற்றது; இறுதியில், தன் வாலில் சுற்றி நீண்ட கைகளால் குத்திப் பிரகத்தனின் வாழ்வை முடித்தான் நீலன்.

இவ்வாறே ஒவ்வொரு வாயிலிலும் அரக்கர்படைத் தலைவர்கள் அழிவைச் சந்தித்து வருவதை இராவணனுக்குத் தெரிவித்தனர் அவனின் தூதுவர்கள். ஆற்றல்மிகு ஆயுதங்களை ஏந்தியவனும், இந்திரனை வென்றவனுமான பிரகத்தன் வெறும் மரக்குச்சிகளைக் கொண்டு போரிடும் வானரங்களிடம் வீழ்ந்துபட்டதை இராவணனால் பொறுக்க இயலவில்லை.

”எலியைப் போன்ற இழிந்த குரங்கு தாக்கிச் சூரியன் சுற்றும் மலையாகிய மேருமலை போன்றவனான பிரகத்தன் இன்று மாண்டான்; பகையினையும் அரிய நெருப்பையும் அற்பமென்று இகழ்ந்தால் அது நீதியாகுமா? ” என்ற எண்ணம் இராவணனின் மனத்திலெழுந்தது.

கருப்பைபோல் குரங்கு எற்ற கதிர் சுழல்
பொருப்பை ஒப்பவன்தான் இன்று பொன்றினான்
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல்
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ.
(கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7108)

தீயையும் பகையையும் சிறிதென இகழ்தல் கூடாது என்ற இராவணனின் எண்ணவோட்டத்தை,

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
(674) எனும் வள்ளுவத்தோடு நாம் ஒப்பிட்டு நோக்கலாம்.

இனியும் தான் போருக்குச் செல்லாமல் தாமதித்தல் கூடாது எனும் முடிவுக்கு வந்த இலங்கை வேந்தன் இராவணன், எமனின் நாக்குப்போல் வீணைக்கொடி உயரத் தோன்றும் தன் தேரில் ஏறினான்; அவனோடு புறப்பட்ட அரக்கர்படை, மகிழ்ச்சிப் பெருக்கால் ஆரவாரம் செய்யப் போர்க்களத்தில் தோன்றினான் பாரைவென்ற அந்தப் பெருவீரன்!

[தொடரும்]

*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.|
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.|
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.