குறளின் கதிர்களாய்…(407)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(407)
முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினிதே யறம்.
-திருக்குறள் -93(இனியவை கூறல்)
புதுக் கவிதையில்…
பிறரொருவரைப் பார்க்கையில்
முகமலர்ச்சியுடன்
இனிதாய்ப் பார்த்து,
நெருங்கியவர் வரும்போது
நெஞ்சினிக்க
மனங்குளிர
இன்சொற்கள் பேசுதலே
இனிய அறமெனப்படுவதாகும்…!
குறும்பாவில்…
முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்து
அகமலர்ச்சியுடன் அவரிடம் இனிய சொற்களைப்
பேசுதலே இனிய அறமாகும்…!
மரபுக் கவிதையில்…
முதலில் ஒருவரைப் பார்க்கையிலே
முடிந்த வரையிலே முகம்மலர்ந்தே
பதமா யவரையே பார்த்தபின்னே
பழகும் விதத்திலே பண்புடனே
இதயம் குளிர்ந்திடும் வகையினிலே
இனிய முகத்தினைக் காட்டியேதான்
மிதமா யுரைத்திடும் இன்சொல்லே
மிகவும் உயர்வுடை அறமாமே…!
லிமரைக்கூ…
முகம்மலர்ந்தே பிறரைப் பார்த்தே
அகம்மலர அவரிடம் இன்சொற்கள் பேசுதலும்
இனிய அறமாம் சேர்த்தே…!
கிராமிய பாணியில்…
நல்லது நல்லது
எல்லாருக்கும் நல்லது,
நல்லசொல்லாச் சொல்லுறது
எல்லாருக்கும் நல்லது..
மொதலுல ஒருத்தரப் பாக்கையில
மொகங்கோணாமச்
சிரிச்சமொகத்தோட பாக்கணும்,
அப்புறமா பேசுறப்போ
மனசு குளிர
நல்ல வார்த்தயா பேசணும்,
அதுதான்
ஒலகத்தில இனிமயான
ஒசந்த அறமாகும்..
அதால
நல்லது நல்லது
எல்லாருக்கும் நல்லது,
நல்லசொல்லாச் சொல்லுறது
எல்லாருக்கும் நல்லது…!