குறளின் கதிர்களாய்…(406)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(406)
வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.
-திருக்குறள் -83 (விருந்தோம்பல்)
புதுக் கவிதையில்…
தேடிவரும் விருந்தினர்க்குத்
தின்னக் கொடுத்தே
தினம் உபசிப்பவனின்
வாழ்க்கை,
அவன்
வறுமையுற்றிடும் நிலையிலும்
வருந்திடும்படி
பாழ்படுவதில்லை…!
குறும்பாவில்…
வரும் விருந்தினரை வரவேற்று
உபசரித்து வருபவனின் வாழ்க்கை, அவனது
வறுமையிலும் வருந்திடப் பாழ்படுவதில்லை…!
மரபுக் கவிதையில்…
இல்லம் வந்திடும் விருந்தினரை
இனிய முகத்துடன் வரவேற்றே
இல்லை யென்றெதும் சொலாமலவர்
இன்பம் பெறும்படி உபசரிக்கும்
இல்லத் தலைவனின் வாழ்க்கையதும்,
இன்னல் தந்திட வருகின்ற
பொல்லா வறுமையே வந்தாலும்
போகா தென்றுமே பாழ்பட்டே…!
லிமரைக்கூ…
வருவிருந்தை உபசரிப்போன் வாழ்வு
உயர்ந்திடும் விருந்தோம்பலினால், வறுமையதில் வரினும்;
வராதே பாழ்படுத்தும் தாழ்வு…!
கிராமிய பாணியில்…
ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
வாற விருந்த ஒபசரிக்கணும்,
ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
நல்லபடியா ஒபசரிக்கணும்..
வூட்டுக்கு வாற விருந்தாளிய
மொகங்கோணாம வரவேத்து
நல்லபடியா ஒபசரிச்சி
அனுப்புறவன் வாழ்க்கயில
வறுமையே வந்தாலும்
அதுனால அவனுக்கு
வருந்தும்படியாப்
பாதிப்பு எதுவும் வந்திடாதே..
அதால
ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
வாற விருந்த ஒபசரிக்கணும்,
ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
நல்லபடியா ஒபசரிக்கணும்…!