திருச்சி புலவர் இராமமூர்த்தி 

மும்மையால்  உலகாண்ட சருக்கம் 

19 திருநாளைப்  போவார்  புராணம் 

வரலாறு

அடுத்து  வருபவர் திருநாளைப்போவார்  நாயனார். இவரைப்பற்றி சேக்கிழார் கூறிய வரலாறு, பிற்காலத்தில் மாற்றங்களுடன் அமைந்துள்ளது. இங்கே பத்தொன்பதாம் நாயனாராகிய திருநாளைப்போவார் வரலாறு புராணமாகக் கூறப்பெறுகிறது. இந்நாயனார் தோன்றிய ஆதனூர் என்ற ஊரின் சிறப்பை சேக்கிழார் கூறுகிறார்.

பாடல் 

பகர்ந்துலகு சீர்போற்றும் பழையவளம் பதியாகுந்
திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமணிக டிரைக்கரத்தான்
முகந்துதர விருமருங்கு முளரிமலர்க் கையேற்கும்
அகன்பணைநீர் நன்னாட்டு மேற்கானாட் டாதனூர்.

பொருள்

விளக்கங்கொண்ட நீரினையுடைய கொள்ளிடம் என்ற ஆறு, பொன்னையும் செழுமணிகளையும் அலைகளாகிய கையினால் முகந்துதர இருபக்கங்களிலும் உள்ள தாமரைகளின் மலர்க்கையினாலே அவற்றைஏற்றுக்கொள்கின்ற இடமகன்ற வயல்களையுடைய நன்மை தருகின்ற நீர் நாட்டிலே மேற்கானாட்டின் உள்ள ஆதனூர் என்பது; உலகம் அதன் சிறப்பினை எடுத்துச்சொல்லித் துதிக்கின்ற பழைமையாகிய வளத்தையுடைய வூர்.

விளக்கம்

சீர்பகர்ந்து உலகம் போற்றும் என்பது பொருள். அத்திருப்பதியின் சீர் இந்நாயனாருக்கு முற்காலத்தில் போற்றப்படாமல், அவர் அருள்பெற்ற பின்னரே பேசப்படுவதனால்சீர் என்பதனை முன்வைக்காது பின்வைத்தோதினார். சீர் என்ற சொல்  நந்தனார் அவதரித்து வாழ்ந்து திருவருள் பெறநின்ற சிறப்பைக் குறித்தது..

பழைய வளம்பதி – என்ற தொடர் , நந்தனார் அவதரித்ததன் பின், சீர்,வந்ததேயாயினும் அதன் வளம் பழைமையுடைத் தென்பது. பழைய வளமாவது கொள்ளிடத் திருநதியின் நீர்வளத்தாலாவது என்பார், அதனை  பொன் – மணி – முளரி – பணை – நீர் – நன்னாடு என்றிவற்றால் விளக்கினார்.

பதி ஆகும் – என்ற தொடர் இதுவே உயிர்களுக்கு ஆகுவது எனவும்,  ஏனை வெறும்உலக வளம்பதிகள் இத்தகையன ஆகா என்பதும் குறிப்பு.

திகழ்ந்த புனல் கொள்ளிடம் – என்ற தொடர் கொள்ளிடத் திருநதியானது காவிரியினது மிக்க நீரினைக் கடலினுட் செல்ல விடுத்தற்கமைந்த வடிகால் ஆறு, பெரிய அணையின்கீழ் வடியும் ஊற்றுநீர் இதனுள்ளே செல்வதாதலின் எப்போதும் தெளிந்த நீரினையுடையது என்று குறிக்கத் திகழ்ந்தபுனல் என்றார்.  திகழ்ந்த என்பதற்கு இவ்வாறன்றி வெள்ளகாலத்தில மிகுதியாய்ப்போந்து விளங்கிய என்றுகூறுதலுமாம்.

பொன் செழுமணிகள் – என்ற தொடர்  பொன்னையும் செழுமணிகளையும் குறித்தது .பொன்னும் மணிகளும்காவிரியினால் மலையினின்றும், வழியில் உள்ள நிலங்களினின்றும்அலைத்துக்கொண்டு வரப்பட்டன.. பொன்விளை மலைநிலங்களிற் போந்து பொன் கொண்டு வருதலிற் பொன்னி எனப்படும்.

திரைக் கரத்தால் முகந்துதர – திரைக்கரம் – முகத்தலும் தருதலும் செய்தலால் திரையைக் கையாக உருவகம் செய்தார். முகந்து தர – எடுத்துக் கொடுக்க. உருவகத்தால் இயைந்த வினையை விரித்ததுக் காட்டியவாறு.

“நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்” என்றபடி காற்றின் வேகத்தால் நீரின் பரப்பு உந்தப்பட்டுச் சுருண்டுமேலே எழும்; அவ்வாறு அது சுருண்டு எழும்போது நீரின் கீழே கிடந்த பொன்மணல் மணி முதலியவற்றை அள்ளிக்கொண்டு மேற்கிளம்பும்; பின்னர்க் கரையில் மோதிப்பரவும்போது அவற்றை அங்கு உதிர்த்துவிடும். இச்செயல்களையே  முகத்தலாகவும் தருதலாகவும் உருவகித்தார்.

கொள்ளிடத்தின் இரு கரைகளிலும் அகன்ற வயல்கள் உள்ளன.அவற்றினுள்ளும் அங்குள்ள தடாகங்களினுள்ளும் தாமரைகள்பூத்துள்ளன. அத்தாமரைப் பூக்களினுள் கொள்ளிடத்தின் அலைகளால்  தரப்படும் பொன்னும் மணிகளும் சென்றுதங்கும் தோற்றம் தாமரைமலராகிய கைகளினால் பணை அவற்றை ஏற்கின்றது போன்றது என விரிவு செய்துகொள்க.

மலர்க்கை – திரைக்கை என்றதற்குரைத்தபடி உரைத்துக்கொள்க. “வயல்புகு பொன்னி” என்றபடி காவிரியின் நீர் வயலுள்ளே வந்து புகுவதுபோலக் கொள்ளிடநீர் புகாது; வெள்ளம் பெருகும் காலத்தில் அலைகளால், நீர், கரைகளின் அயலின் வயல்களில் வீசப்படும் இயல்பு குறிக்கப்பட்டது.

வள்ளன்மையுடையோர் தம் வழியிற்சென்றுகொண்டே தமது பொருள்களை வாரிஇறைத்து ஈந்து செல்லும் இயல்பும், அவ்வாறே அவ்வழியிலே நின்ற இரவலரும் தாந்தாம் இருந்த இடத்தைவிட்டுப் பெயராது தம் கைகளை விரித்திருந்து அவற்றுள் வீழ்வனவற்றைப் பெறும் இயல்பும் போலக் கொள்ளிடத்தின் திரைகள் பொன்மணிகளை வீச இருபுறமும் முளரிக்கைகளால் அகன்பணைகள் ஏற்றன என்ற குறிப்பும் காண்க.

ஈதலும் ஏற்றலுமாகிய தற்குறிப்பேற்ற அணியின்சுவையும் கருதுக.

நீர் நன்னாடு – என்றதொடர், நீர் நாடு என்று வழங்கும் சோழநாடு.நன்மைஎன்பது இங்கு ஏற்குமிடத்து வந்த இடைப்பிறவரல்.

மேற்கானாடு – சோழநாட்டின் உள்நாடுகளுள் ஒன்று.கானாடு – கோனாடு – கானாட்டுமுள்ளூர் முதலியவை காண்க.

ஆதனூர்- நந்தனார் அவதரித்த ஊரின் பெயர். ஆதனூர் -பதி ஆகும் – இது நாயனாரது திருவவதாரத்தினால் தன்
சீரினை உலகு பகர்ந்து போற்றும் பதி ஆகும் பெருமைபெற்றது என்பது குறிப்பு.

இப்பாட்டு, தன்மை, உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் முதலிய பல அணிநலன்களும் விரவிக், குறிப்பு முதலிய பல உள்ளுறைகளுடன் விளங்கும் கவிநயம் காண்க.

“உணர்வினின்வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்” என்றதற்கு இஃது ஒப்பற்ற இலக்கியமாய் விளங்குவதென்க.

இப்பாட்டில் கொள்ளிடத்தின் கரையில்  அமைந்த வயல்களில் நீட்டிய தாமரைக் கைகளில் பொன், முத்து ஆகியவற்றைக்  கொடுக்கும் காட்சி, தம் தாழ்வை எண்ணி  ஒதுங்கியபோதும் , நந்தியை விலக்கிக் காட்சி தந்த சிவபெருமானின் எளிவந்த தன்மையை விளக்குகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *