அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
சக்தி சக்திதாசன்
லண்டன்
“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார்.
எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் மேடையேறும் காட்சிகளுக்கும் இவ்வாசகத்துக்கும் பொருத்தமிருக்கும் எனும் எனது பிரதிபலிப்பே அதற்குக் காரணமாகும்.
ப்ரெக்ஸிட் எனும் படகில் ஏறி தனது அரசியல் பயணத்தின் இலட்சியமான பிரதமர் எனும் பதவியைத் தனதாக்கிக் கொண்டார் எமது பிரதமர் பொரிஸ் ஜோன்சன்.
மிகவும் உற்சாகத்துடன் ப்ரெக்ஸிட் எனும் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விட்டேன் என்ற கோஷத்துடன் ஓரளவு மக்கள் ஆதரவுடன் இடைத்தேர்தலைச் சந்தித்த அவர் 80 பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்துக் கொண்டார்.
ப்ரெக்ஸிட் எனும் தீர்வு ஏதோ இலகுவாக செயற்படுத்தப்படக்கூடியதொன்றல்ல என்பது அரசியல் அறிவில் தெளிவுடைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.
அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவுகள் பற்றி அனுபவமிக்க அரசியல், மற்றும் பொருளாதார நிபுணர்கள் பல அறிக்கைகள் மூலம் அறிவுறுத்தியிருந்தனர்.
ப்ரெக்ஸிட் பிரச்சனையைத் தீர்த்து வைத்தவர் எனும் பெயரெடுப்பதற்காக அவசரம் அவசரமாக பல சிக்கலான தீர்வுகளை ஏற்றுக்கொண்டு விட்ட பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அதன் விளைவுகளைச் சமாளிக்கத் திணறிக் கொண்டிருக்கும் போதுதான் முன்னறிவிப்பின்றி உலகினுள் பிரவேசித்தது கொரோனா.
கொரோனா எனும் நுண்கிருமியின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பதுதான் தலையாய கடமை எனும் கோஷத்துடன் ப்ரெக்ஸிட் பிரச்சனைகளை ஓரம் கட்டி வைத்தார் எமது பிரதமர்.
2020 மார்ச்/ஏப்பிரல் தொடங்கி 2022 ஜனவரி முடிவுவரை பல்வேறு காலப்பகுதிகளில் லாக்டவுண் பல்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு பரிமாணங்களிலும் நிறுவப்பட்டது..
அதிகபட்ச லாக்டவுண் விதிகளாக ஹாஸ்பிட்டல்களில் இறுதிக் கட்டத்தில் இருக்கும் உறவினர்களைக் கூட கடைசிமுறையாகப் பார்க்க முடியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டன.
வயோதிப இல்லங்களில் வசிக்கும் தமது வயதான உறவினர்களைச் சந்திக்க முடியாதவாறு லாக்டவுண் விதிகள் அமைந்திருந்தன. மிகவும் கடினமான விதிகளை மிகவும் சிரத்தையுடன் ஐக்கிய இராச்சிய மக்கள் பின்பற்றினர் , இவ்விதிகளை இயற்றி நடைமுறைப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர் பிரதமரே.
இவ்விதிகளை மீறியோர் மீது போலிஸார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர்.
ப்ரெக்ஸிட் வெற்றியின் பின்னனியில் உழைத்தவரான டொமினிக் கமிங் ஸ் என்பவரைத் தனது அரசியல் அலோசகராக தான் பிரதமரானவுடன் பொரிஸ் ஜோன்சன் அவர்கள் நியமித்திருந்தார். இவ்வாலோசகரின் அதீத நடவடிக்கைகள் பிரதமரின் கட்சி உறுப்பினர்கள் பலரை மனக்கசப்புள்ளாக்கியது.
சுமார் ஒருவருடத்தின் முன்னால் தீவிரமான லாக்டவுண் நேரத்தில் பிரதமரின் அரசியல் ஆலோசகர் தனது ஜோடியுடன் ஒரு உல்லாச இடத்திற்கு விஜயம் செய்தார் என்பது சிறிது காலத்தின் பின்னால் அம்பலத்துக்கு வந்தது.
வெகுஜனத்தின் அதிருப்தியையும் பொருட்படுத்தாது விதிகளை மீறிய அவ்வாலோசகருக்கு தனது ஆதரவை அளித்துப் பாதுகாத்தார் பிரதமர்.
ஆனால் சில காலத்தின் பின்னால் பிரதமருக்கும், அவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலினால் அவ்வரசியல் ஆலோசகர் பதவி நீக்கப்பட்டார். ஆனால் பிரதமருடன் நெருக்கமாகவிருந்த அவரினால் பிரதமருக்கு பல இடையூறுகள் நேரிடலாம் எனும் அச்சம் பிரதமரின் ஆதரவாளர்களிடம் அப்போதே நிலவியது.
இந்தப் பின்னனியில் தான் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது பதவியையே பறிகொடுக்கக் கூடிய ஒரு நிலைக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கிறார்.
எப்படி என்கிறீர்களா ?
ஐக்கிய இராச்சிய மக்களின் மீது அதிகூடிய லாக்டவுண் விதிகள் போடப்பட்டு அவர்கள் அதனை கடைப்பிடித்து வந்த அதே நேரம் பல்வேறு காலகட்டங்களில் பிரதமரின் கீழியங்கும் அவரது கட்டிட அரச உத்தியோகத்தர்கள் சுமார் 16 தடவைகள் விருந்துகளை ஐக்கிய இராச்சிய அரசுக் கட்டிடமான பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே நடத்தியிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியான தகவல்கள் ஓன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன.
நாடே ஓரளவு கொதித்தெழுந்தது. தமது நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கூட கலந்து கொள்ளாமல் விதிகளை பொதுமக்கள் கடைப்பிடித்துக் கொண்டிருக்கையில் பிரதமரின் உத்தியோகபூர்வமான கட்டிடத்தில் விருந்துகளை நடத்தியிருக்கிறார்கள் அதிலும் ஓரிரு விருந்துகளில் பிரதமரே நேரடியாகக் கலந்து கொண்டுள்ளார் எனும் தகவல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது..
இத்தகவல் முதலில் வெளிவந்தபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் விருந்துகள் எதுவுமே நடக்கவில்லையென்றும் லாக்டவுண் விதிகள் எவையுமே மீறப்படவில்லையென்றும் உறுதியளித்தார். தொடர்ந்து வெளிவந்த புகைப்படங்கள் செய்திகள் அனைத்தும் பிரதமரின் கூற்றுக்கு எதிராகக் காணப்பட்டது.
பிரதமர் ராஜினாமாச் செய்ய வேண்டும் எனும் கோஷம் நாட்டின் நாலாபக்கங்களில் இருந்து எழுந்தாலும் பிரதமரின் அமைச்சரவை அவருக்கு ஆதரவாக நின்றது.
பாராளுமன்றத்தில் பட்டும் படாமலும் மன்னிப்புக் கோரிய பிரதமர் மிகவும் உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரியாகிய சூ கிறே என்பவரை நடைபெற்ற விருந்துகளின் பின்னனியை விசாரிப்பதற்காக நியமித்தார்.
பிரதமரின் நிலை இன்னும் மோசமாகியது. அவரால் நியமிக்கப்பட்ட அரச உயரதிகாரியால் தனது அறிக்கையை முழுமையாகச் சமர்ப்பிக்க முடியவில்லை. காரணம் பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விருந்துகளில் 12 சட்டத்தை மீறியிருக்கலாம் எனும் காரணத்தினால் அவை போலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.. பொலிஸாரின் விசாரணைகள் முடிவுறும் வரை அறிக்கை முழுமையாக சமர்ப்பிக்கப்படக் கூடாது என்று பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதமர் பாராளுமன்றத்தில் தவறான செய்திகளைக் கூறியிருக்கிறார் என்பதால் அவர் உடனடியாக ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை விட்டு வருகின்றனர். நாட்டு மக்கள் மத்தியிலும் பிரதமரின் செல்வாக்கோடு அவரது கட்சியின் செல்வாக்கும் சரிந்து வருகிறது.
பிதமரும், அவர்து அமைச்சர்களும் நடந்த தவறுக்கு வருந்துகிறோம் ஆனால் ப்றெக்ஸிட், கொரோனா தடுப்பூசி, கொரோனா நோயின் கட்டுப்பாடு என்பனவற்றை பிரதமர் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் அவரின் பதவி ராஜினாமா என்பது அவசியமற்றது என வாதிடுகிறார்கள்.
அதேசமயம் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தமது கட்சியின் தலைமைப் பதவிக்கு ஏற்றவரில்லை எனப்தால் அவர்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என அவரது கட்சியைச் சேர்ந்த சுமார் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதங்கள் சமர்ப்பித்திருக்கிறார்கள் என்பது செய்தி. இவர்களது எண்ணிக்கை 54 ஐ எட்டுமானால் பிரதமர் மீது அவரது கட்சியே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்னெடுக்கும்..
பிரதமரின் உத்தியோக வாசஸ்தலத்தில் நிகழ்ந்த விருந்துகளைப் பற்றிய பொலிஸாரின் விசாரணை முடிவுகள் இன்னும் என்ன அதிர்ச்சிகளை வைத்திருக்கிறது என்பதும் பிரதமரின் பதவிக்கு ஒரு அச்சுறுத்தலே .
பிரதமருக்கு உடனடியான ஆபத்து இல்லையெனினும் மேமாதம் நடைபெறப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அவரது பதவிக்குச் சாவுமணி அடிக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது.
ஐக்கிய இராச்சிய அரசியல் மேடையில் இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேறப் போகின்றன என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டுமாயினும் இந்நாடகம் களைகட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை.
அது என்ன தொலைவில் ஒரு சத்தம்?
ஓ ! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா எனும் வாசகமோ?