கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 45

0

-மேகலா இராமமூர்த்தி

”சீதையை விடுதலே நமக்கு வெற்றி” என்றுரைத்த வீடணன் சொற்களைக் கேட்ட இராவணன், தன் கரங்களைக் கோத்துக்கொண்டு, தோளும் மார்பும் குலுங்க நகைத்தவாறே,

”ஏற்கனவே ஊனமான வில்லை முறித்து, ஓட்டை மரத்திலே அம்புசெலுத்தி, கூனிசெய்த சூழ்ச்சியால் அரசை இழந்து, உயர்ந்த மரங்கள் நிறைந்த வனமடைந்து, நான் செய்த செயலால் மனைவியை இழந்து இன்னுயிரைச் சுமந்து திரியும் ஒரு மானுடனின் வலிமையை உன்னையல்லாது மதித்தவர் வேறு யாருளர்?” என்றான் பரிகாசத்தோடு.

ஊனவில் இறுத்து ஓட்டை மாமரத்துள் அம்புஓட்டி
கூனி சூழ்ச்சியால் அரசுஇழந்து உயர்வனம் குறுகி
யான் இழைத்திட இல்இழந்து இன்உயிர் சுமக்கும்
மானுடன்வலி நீஅலாது யார்உளர் மதித்தார்.
(கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6179)

இராமன் வில்லை முறித்ததும், மராமரங்களைத் துளைத்ததும் அரிய செயல்கள் என்று பலரும் புகழ, அவற்றை இங்கே கேலிசெய்து பேசுகின்றான் இராவணன். இச்செயல் இராமன்பால் அவனுக்குள்ள வெறுப்பைப் புலப்படுத்துகின்றது.

இராவணனின் இகழ்ச்சியான பேச்சுக்களைத் தொடர்ந்து வீடணன் மீண்டும் அவன் அடிதொழுது நல்லுரைகளை எடுத்துக்கூறத் தொடங்க அவற்றைப் பொருட்படுத்தாது,

”கொடுஞ்சினத்தை உண்டாக்கும் போரில் பங்குகொள்வதற்கு நீ எங்களுடன் புறப்பட வேண்டாம்! மதில்சூழ்ந்த மாநகரான இலங்கையில் நிறைய இடமிருக்கின்றது. நீ இங்கேயே தங்கியிரு! அஞ்சாதே! அஞ்சாதே!” என்று சொன்ன, விடத்தினும் கொடியோனான, இராவணன் தன்னருகிலிருந்த அமைச்சர் முதலியோரின் முகத்தைப் பார்த்துக் கைகொட்டி இடி இடித்ததுபோல் நகைத்தான்.

வெஞ்சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா
இஞ்சி மாநகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி
நஞ்சின் வெய்யவன் கைஎறிந்து உரும் என நக்கான். 
(கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6187)

அண்ணன் இராவணனின் எள்ளலைக் கண்டு மனங்கலங்காத இளவல் வீடணன், இராவணனுக்கு அறிவுகொளுத்தும் பொருட்டுத் திருமாலை எதிர்த்தழிந்த இரணியன் கதையைச் சொல்லத் தொடங்குகின்றான். அதுவே கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ள ’இரணியன் வதைப் படலம்.’

யுத்த காண்டத்திலுள்ள படலங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வகையிலேயே அமைக்கப்பட்டிருக்க, இரணியன் வரலாற்றைச் சொல்லும் இரணியன் வதைப் படலம் மட்டும் யுத்த காண்டத்தோடும் இராமன் கதையோடும் தொடர்பின்றி அமைந்திருக்கக் காண்கிறோம்.

தமிழகத்தின் முதல் திறனாய்வாளராக அறியப்படும் வ.வே.சு. ஐயரும், பல்கலைச்செல்வர் முனைவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரும் இப்படலம் காப்பியத்தோடு தொடர்பின்றித் தனித்து நிற்பதையும், 176 பாடல்களில் விரிவாகப் பாடப்பட்டுள்ள இது காப்பியத்துள் மற்றொரு குறுங்காப்பியமாகப் பொலிவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அறிஞர்கள் பலரும் பொருத்தமற்றதாகச் சுட்டுகின்ற இந்தப் படல அமைப்பு காப்பியம் படைத்த கவிச்சக்கரவர்த்திக்குத் தெரியாமல் இருக்குமா? தெரிந்தேதான் அவர் இதனைப் படைத்து இடையில் இணைத்திருக்கவேண்டும்.

அதற்கான காரணங்களாகக் கம்பனில் தோய்ந்த பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் முன்வைப்பவை:

”பக்தி இயக்கத்தின் எழுச்சிக்குப் பின்பு கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஆதிசங்கரர், அத்வைதம் என்ற கொள்கையையும் உபநிடதக் கருத்துக்களையும் தமிழகத்தில் பரப்பினார். அறிவுவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அவ்வியக்கம் சண்டமாருதம்போல் தமிழகத்தில் தன் வேகத்தைக் காட்டியதால் பக்தி இயக்கத்தின் பலம் குறையலாயிற்று.

பக்திநெறியில் திளைத்தவரான கம்பருக்கு அவ் அத்வைதக் கோட்பாடுகளில் உடன்பாடில்லை. அதனாலேயே பக்தியின் மகிமையை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும் சங்கரர் உயர்த்திப் பிடித்த உபநிடதங்களிலும் பக்தியைப் போற்றும் அம்சங்கள் இருப்பதைப் பறைசாற்றும் வகையிலும் இரணியன் வதைப் படலத்தை உள்நுழைத்திருக்க வேண்டும்” என்கிறார்.

இரணியன் வதைப் படலம் மூலநூலான வான்மீகத்தில் இல்லை.

இனிக் கம்பகாதையில் மற்றொரு குறுங்காப்பியமெனக் காட்சிதரும் இரணியன் வதைப் படலத்தின் கருத்துக்களை நாமும் சுருக்கமாக அறிந்துகொள்வோம்.

மாவீரனான இரணியனின் இயல்பையும் ஆற்றலையும் விளக்கி இப்படலம் தொடங்குகின்றது.

மும்மூர்த்திகளும் தம் தொழில்களை முடிக்க இயலாதவர்களாய் ஆயினர்; யோகியர் தமக்குரிய பதவிகளை இழந்தனர். தேவரும் இரணியனின் பாதங்களை அல்லால் வேறொன்றையும் பூசிக்கமாட்டார் எனும்படி வாழ்ந்தான் இரணியன்.

பெரும் புறக்கடலில் விதிப்படி நீராடிமுடித்துப் பின் நாகலோகத்து மகளிருடனே இனிய (காலை) உணவினை உண்டு, எல்லோராலும் போற்றப்படும் இந்திரலோகத்தில் பகல்பொழுதைக் கழித்து, இரவுநேரத்தில் பிரமனின் உலகமான சத்தியலோகத்தில் கொலுவீற்றிருப்பான் இரணியன் என்று அவனுடைய அன்றாட நிகழ்வுகளை விளக்கி நம்மை வியக்கவைக்கின்றார் கம்பர்.

மரபின்மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி
அரவின் நாட்டிடை மகளிரோடு இன்அமுது அருந்தி
பரவும் இந்திரன் பதியிடைப் பகற்பொழுது அகற்றி
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்.
(கம்ப: இரணியன் வதைப் படலம் – 6193)  

தான் பெற்ற வரத்தால், பெண்ணாலோ ஆணாலோ அலியாலோ உயிருள்ளவற்றாலோ உயிரற்றவற்றாலோ மண்ணிலோ விண்ணிலோ மரிக்கமாட்டான் இரணியன்; தேவராலோ இயக்கராலோ அரக்கராலோ மும்மூர்த்திகளாலோ அவனுக்கு மரணமில்லை; ஐம்பூதங்களாலும் அவன் ஆயுளுக்கு பாதிப்பில்லை; யாரிடும் சாபமும் அவனை ஒன்றும் செய்யாது.

வீட்டுக்கு உள்ளேயோ வெளியேயோ சாகமாட்டான்; தெய்வப் படைக்கலங்கள் எவையும் அவனைக் கொல்லும் ஆற்றலற்றவை; அவனுக்கு இரவிலும் மரணமில்லை; பகலிலும் மரணமில்லை; கூற்றுவனாலும் அவனுயிரைக் கவரமுடியாது. மந்திரங்களால் அவனைக் கொல்லவியலாது; அவனைப் பெற்ற தந்தையே அவனைக் கொல்ல நினைத்தாலும் அது நடவாது!

இத்துணை விவரமாக வரம் பெற்றவனை வெல்லவும் கொல்லவும் ஆற்றல் பெற்றவர் யார்? ஒருவருமில்லை!

எனவே, அனைத்து உலகங்களுக்கும் தானே இறைவன் எனும் அகந்தையோடு ஆட்சி செலுத்திவந்தான் இரணியன்.

அந்த இரணியனுக்கு அரியதோர் மைந்தன் இருந்தான். அவன் பெயர் பிரகலாதன். அறிவிற் சிறந்தவனாக விளங்கிய அவனுக்கு வேதங்களைக் கற்பிக்க அந்தண ஆசிரியன் ஒருவன் இரணியனால் நியமிக்கப்பட்டான்.

வேதங் கற்பிக்க வந்த அந்த ஆசிரியன் மாணவன் பிரகலாதனை “இரணியாய நம” என்று ஓதுமாறு பணிக்க, காதுகளைப் பொத்திக்கொண்ட பிரகலாதன், ”அறிவில் மூத்தவரே! இப்பெயரை உச்சரிப்பது நன்னெறியன்று! வேதத்தின் முடிவான உபநிடதங்கள் உரைக்கும் மெய்ப்பொருளின் பெயரான “ஓம் நமோ நாராயணாய!” எனும் பெயரே நாம் உச்சரிக்க வேண்டியது” என்றுரைத்து அப்பெயரை ஓதினான்.

இதனால் அச்சமுற்ற அவ் அந்தண ஆசிரியன், ”கெடுமதியோனே! இரணியனின் பெயரைக் கூறாமல் வேறு பெயரைக் கூறினால் என்னையும்… ஏன்…உன்னையும் இரணியன் தண்டிப்பானே! இருவருக்கும் நீ கெடு சூழ்ந்தாயே” என்று பிரகலாதனை ஏசினான்.

அதனை மறுத்த பிரகலாதன், ”என்னையும் உம்மையும் என் தந்தையையும் உய்யச் செய்யும் மந்திரத்தையே நான் மொழிந்தேன். இதில் என்ன குற்றம் உள்ளது?” என்று மறுமொழி பகர்ந்தான்.

கோபங்கொண்ட ஆசிரியன், ”தேவர்களுக்கும் அவர்களுக்கு முதல்வர்களான அயன் அரி அரன் ஆகியோருக்கும் முதன்மை பெற்றவனாக விளங்குகின்றான் உன் தந்தை. ஆகவே, அவன் திருநாமத்தை உச்சரிப்பவனாக அந்தணனாகிய நான் உள்ளேன்; என்னிலும் அதிகம் அறிந்தவனோ நீ?” என்று முனிந்து மொழிய, மீண்டும் ஆசிரியனின் சொற்களை மறுத்த பிரகலாதன்,

”அந்தணர் ஓதும் வேதங்களெல்லாம் யாரைச் சிறப்பித்துப் பேசுகின்றனவோ, கற்றுணர்ந்த சான்றோர்கள் நினைந்துரைப்பது எப்பொருளையோ, அதுவே உபநிடதங்களும் முடிந்த முடிபாகக் கூறும் பொருளாகும். அதனை உணர்ந்த தேவரும் முனிவரும் செப்பும் அப்பேரைச் சொல்லாது தவிர்த்துச் சொல்லுவதற்கு வேறொன்றும் உளதோ?” என்று கேட்டான்.

ஆரைச் சொல்லுவது அந்தணர் அருமறை அறிந்தோர்
ஓரச் சொல்லுவது எப்பொருள் உபநிடதங்கள்
தீரச் சொல்பொருள் தேவரும் முனிவரும் செப்பும்
பேரைச் சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ.
(கம்ப: இரணியன் வதைப் படலம் – 6217)

’உபநிடதம்’ என்ற சொல்லை முதன்முதலில் தமிழில் பயன்படுத்தியவர் கம்பரே என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது. உபநிடதம் என்ற சொல்லை மட்டுமல்லாது அவற்றின் சாரத்தையும் இப்படலத்தில் வடித்துத் தந்துள்ளார் கம்பர் என்பதனைச் சான்றுகளோடு விளக்கியுள்ளனர் கம்பனில் ஆழங்காற்பட்டவர்களான பேராசிரியர் அ. பாண்டுரங்கனும், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனும்.

இரணியன் கதைக்கு வருவோம்!

பிரகலாதனின் உறுதியான மறுமொழியைக் கேட்ட ஆசிரியன், இனி இவனிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்து இரணியனிடம் சென்றான். ”நான் கற்றுத்தர விரும்பிய வேதங்களை உன் மகன் கற்றுக்கொள்ளவில்லை; அவன் வேறொரு நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறவே, ”அது என்ன?” என்று கேட்டான் இரணியன். ”அதனை நான் என் நாவால் சொல்லமாட்டேன்” என்று ஆசிரியன் மறுத்துவிடவே, பிரகலாதனை அழைத்துவரச் செய்தான் இரணியன்.

பிரகலாதன், ”ஓம் நமோ நாராயணாய” எனும் அத்திருவெட்டெழுத்தின் சிறப்பினை இரணியனுக்கு விரித்துரைத்து, ”என்னுயிர்க்கும் உன்னுயிர்க்கும் இம்மன்னுயிர்க்கும் உறுதிபயப்பது இம் மந்திரமே”  என்று சொல்ல கடுங்கோபம் கொண்டு விழிகளில் தழலெழ நோக்கிய இரணியன்,

”மண்ணுளோரும் விண்ணுளோரும் தொழுவது என்னிரு கழலை; துதிப்பது என் பெயரை; இவ்வாறிருக்க நீ இந்தப் பெயரை அறிந்தது யாரிடம்?

உலகு ஏழையும் தன் வயிற்றினுள் அடக்கும் ஆற்றலாளனான என் இளவல் இரணியாட்சனைப் பன்றி வடிவெடுத்து வந்து தந்தங்களால் குத்திக் கொன்றவன் பெயரைச் செப்பவோ உன்னை நான் மகனாய்ப் பெற்றேன்?

போகட்டும்! அறிவு நிரம்பப் பெறாத சிறுவனான உன் பிழை பொறுத்தேன்! நம் பகைவரின் புகழ்பேசும் மொழிகளை இனிப் புகலாதே! உன் ஆசிரியன் சொல்லித்தருவனவற்றைக் கற்றுக்கொள்!” என்று ஆணையிட்டான் இரணியன்.

அப்போது திருமாலின் பெருமைகளைத் தன் தந்தையிடம் உரைக்கத் தொடங்குகின்றான் பிரகலாதன்.

”அரிய வேதங்களின் உச்சியில் அமைந்த மெய்ப்பொருள் எனத் தெளிந்துரைத்த பரதத்துவமாக விளங்குபவன் அவன்; தம்மை உணர்ந்த ஞானியர் அதனை அறிவார்கள்; வேறுவேறாகப் பிறழ உணரும் பித்தர்கள் சிலர் உளர்; ஞானியரும் யோகியரும் அடையத்தக்க வீடுபேற்றைப் பெறாதவர்கள் அவர்கள்.

அந்தப் பரம்பொருளின் சிறப்பை எந்தப் பிரமாணங்களாலும் அளந்தறிய இயலாது; சொல் பொருள் இவற்றின் துணைகொண்டு இத்தகையவன் என்று கூறற்கியலாதவன் அவன்; அவனது மெய்ந்நிலையைக் கண்டவரில்லை; எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமுமாக உள்ளான் அவன்; எங்கும் நிறைந்து விளங்குபவன் அவன்.

இத்தகு பேரியல்பு வாய்ந்த இறைவனை இகழ்ந்துரைத்துத் தவபலத்தால் எய்திய செல்வங்களையும் நற்பெயரையும் வாணாளையும் தொலைத்து உயிரையும் இழக்கப் போகின்றாயே என்று அஞ்சியே அப்பரமனின் திருநாமத்தை நான் வாழ்த்தினேன்” என்றான் பிரகலாதன்.

பிரகலாதனின் மொழிகளைக் கேட்டுச் சினத்தின் உச்சிக்கே சென்ற இரணியன், அவனைக் கொன்றுவிடுமாறு தன் ஏவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

அரசன் ஆணையை ஏற்ற ஏவலர்கள் பிரகலாதனை வாளாலும் மழுவாலும் தாக்கினர். திருமாலைத் தியானித்தபடியே இருந்த அவனை அவ் ஆயுதங்கள் வீழ்த்தவில்லை; அடுத்துப் பிரகலாதனைத் தீக்குழிக்குள் தள்ளினர்; ”அரி” என்று உச்சரித்த அவனை எரி தீண்டவில்லை; விடப் பாம்புகளால் கடிக்க வைத்தபோது அவற்றின் விடம் அவனைத் தாக்கவில்லை; யானையின் காலால் அச்சிறுவனை இடறவைக்க முயன்றபோது யானை அவனை வணங்கிவிட்டுச் சென்றுவிட்டது.

தன் முயற்சிகள் ஏதும் பலிக்காதது கண்ட இரணியன், பிரகலாதனை மலையோடு சேர்த்துக்கட்டிக் கடலில் வீசச் செய்தான். அந்த மலை பிரகலாதனுக்குப் புணைபோல் ஆகி அவனைக் கரைசேர்த்ததே ஒழியக் கடலில் மூழ்கடிக்கவில்லை. கடுமையான நஞ்சை அந்தப் பிஞ்சுப் பிள்ளையின் வாயில் ஊட்டியும் அவன் சாகவில்லை.

இந்தக் கொலை முயற்சிகள் அப்பர் பெருமானைக் கொல்ல மகேந்திரவர்ம பல்லவன் மேற்கொண்ட முயற்சிகளை ஒத்திருக்கக் காண்கின்றேன். ”நமச்சிவாய” மந்திரத்தின் துணையோடு அவர் அம்முயற்சிகளை வென்றதுபோல், ”நாராயண” மந்திரத்தின் துணையால் பிரகலாதன் வெல்கிறான்.  

எதிலும் பிரகலாதன் சாகாதது கண்ட இரணியன், ”நானே என் மகனைக் கொல்வேன்” என்றெழுந்தான்.

தன்னைக் கொல்லவந்த தந்தையை வணங்கிய பிரகலாதன், ”எந்தாய்! என்னுயிரைக் கவர நினைப்பாயானால் அஃது உன் வசப்பட்டதன்று! உலகைப் படைத்த அந்தப் பரமன் வசப்பட்டது” என்றான்.

”உலகைப் படைத்தவர் யார்? என்னைத் தொழுது நிற்கும் மும்மூர்த்திகளா? அந்த மூவரும் அல்லரென்றால் முனிவர்களா? என்னிடம் தோற்றோடிய தேவர்களா?” என்று சீற்றத்தோடு கேட்டான் இரணியன்.

”அத்தா! உலகினையும் உலகுவாழ் உயிர்களையும் படைத்தவன் அந்தத் திருமால்; உன் இளவல் பொற்கண்ணனின் (இரணியாட்சன்) உயிரை மாய்த்த அந்தத் தாமரைக் கண்ணான், நீ காணுதற்கு அரியவன்; ஆனால், என் கண்களுக்கு அவன் எங்குமுள்ளவன்” என்றான் பிரகலாதன்.

அதுகேட்டு ஏளனமாய்ச் சிரித்த இரணியன், ”உன் இறைவன் எங்குமுள்ளான் என்கிறாய்; அந்த வஞ்சகன் இந்தத் தூணிலுள்ளானா? அப்படியானால் அவனை எனக்குப் புலப்படும்படிக் காட்டு” என்றான்.

”ஆம், ஒரு சாண் அளவுடைய பொருளிலும் அவன் இருப்பான்; பிரிக்கவியலாதபடி ஒன்றுபட்ட ஓர் அணுவை நூறு பகுதிகளாகப் பிரித்த நுண்பகுதியிலும் இருப்பான்; மிகப் பெரிய மலையிலும் இருப்பான்; இங்கு நின்ற இந்தத் தூணிலும் இருப்பான்; நீ சொன்ன சொல்லிலும் இருப்பான்; எங்குமவன் நிறைந்திருக்கும் தன்மையை நீ விரைவில் காண்பாய்” என்றான் பிரகலாதன். ”நல்லது” என்றுகூறிவிட்டு மீண்டும் ஏளனமாய்ச் சிரித்தான் இரணியன்.

சாணினும் உளன் ஓர்தன்மை அணுவினைச் சதகூறு இட்ட
கோணினும் உளன் மாமேருக் குன்றினும் உளன் இந்நின்ற
தூணினும் உளன் நீசொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை
காணுதி விரைவின் என்றான் நன்றுஎனக் கனகன் நக்கான்.
(கம்ப: இரணியன் வதைப் படலம் – 6312)

தன் ஏளனச் சிரிப்பை உடனடியாய் நிறுத்திவிட்டு, ”நீ சொன்னபடி இந்தத் தூணில் உன் இறைவனைக் காட்டாவிட்டால் யானையை வலியசிங்கம் பற்றிக் கொல்வதுபோல் இப்போதே உன்னைக் கொன்று உன் குருதியைக் குடித்து உடலையும் தின்பேன்” என்று பிரகலாதனிடம் சினந்துரைத்தான் இரணியன்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.