செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(393)

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

– திருக்குறள் – 289 (கள்ளாமை)

புதுக் கவிதையில்

அடுத்தவர் பொருளை
அபகரித்தல் தவிர
அடுத்துள
அறவழிகளை நம்பித் தெளியார்,
அளவில்லாமல்
அச்செயல்களையே செய்து
அவற்றாலே
அழிந்தே போவர்…!

குறும்பாவில்

திருடுதல் தவிர மற்றுள
நல்வழிகளை நம்பித் தெளியார், அளவிலாதந்தத்
தீச்செயலைச் செய்தே அழிவர்..!

மரபுக் கவிதையில்

அடுத்தவர் பொருளைக் களவிடுதல்
அல்லால் மற்ற அறவழிகள்
கொடுத்திடும் நலனைக் கருதாதே
கொண்ட கொள்கைத் தெளிவின்றி
எடுத்திடும் பொருளை எண்ணியேதான்
என்றும் திருட்டை விட்டிடாமல்
கெடுத்திடு மதையே தொடர்வோர்கள்
கெட்டே யழிவர் அதனாலே…!

லிமரைக்கூ

கொடிய குற்றம் திருட்டு,
கருதாமலிதை அறவழியலாது செய்வோர் வாழ்வே
ஆகிடும் என்றும் இருட்டு…!

கிராமிய பாணியில்

வேண்டாம் வேண்டாம்
களவு வேண்டாம்,
அடுத்வங்க பொருளுக்கு
ஆசப்பட்டழியும் களவு
வேண்டவே வேண்டாம்..

ஓலகத்தில உள்ள
நல்ல வழியயெல்லாம்
நெனச்சிப்பாக்காம உட்டுப்புட்டு,
அடுத்தவங்க பொருளுக்கு
ஆசப்பட்டுத் திருடுறத உடாம
அளவில்லாம செய்யிறவன்,
அழிஞ்சியே போவான்
அந்தக் களவுனாலயே..

அதால,
வேண்டாம் வேண்டாம்
களவு வேண்டாம்,
அடுத்வங்க பொருளுக்கு
ஆசப்பட்டழியும் களவு
வேண்டவே வேண்டாம்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *