பெருஞ்சித்திரனார் வீட்டைப்போல்!

smartcapture
ஏறன் சிவா
ஓடுடைந்து விதவிதமாய்
உறுத்துகின்ற பல்பூச்சிக்
கூடடைந்து மனைக்குரிய
கோலந்தான் முற்றழிந்து
வீடிடிந்து ஒளிவீசும்
விளக்கிழந்து நிற்பதைப்போல்
நாடிழந்து நிற்குதையா
நற்றமிழர் பேரினந்தான்!
நடையிழந்து குருதிபாயு
நரம்பிழந்து வானுயர்ந்த
கொடியிழந்து வளையாச்செங்
கோலிழந்து மறவரெனும்
படையிழந்து பார்ப்பதற்குப்
பேய்வீடாய் நிற்பதைப்போல்
உடையிழந்து உயர்மானம்
இழந்ததையா தமிழினந்தான்!
காலங்கள் மாறுமையா
கனித்தமிழர் எழுச்சிவரும்
வேல்எங்கள் பகைவர்தம்
வீதிகளை வெற்றிகொள்ளும்
கோலங்கள் மாறிவிடும்!
கோட்டைஎழும்! கொடிபறக்கும்!
வாழுங்கள் அதுவரையில்
வண்டமிழர் நெஞ்சத்தே!
(மார்ச் 10, பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள்)