வள்ளுவம் வழங்கும் வாழ்வியல் முறைகள்!

0

மகாதேவஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா 

வள்ளுவத்தின் சிறப்பு

தமிழிலே தோன்றிய பலநூல்கள் வாழ்வியலைப் பற்றிய கருத்துக்களை பலவாறு எடுத்துக்காட்டி இருக்கின்றன. அவைகள் கூறும் கருத்துக்கள் முழுமையானதாகவே எக்காலத்துக்கும் ஏற்றனவாகவோ இருகின்றனவா என்று பார்க்கின்ற பொழுதான் திருக்குறளை நாம் கூர்ந்துபார்க்க வேண்டியுள்ளது. வாழ்வியல் சம்பந்தமான கருத்துக்களைப் பகர்ந்து நின்ற நூல்களுக்கு மத்தியில் திருக்குறள் ஒன்றோ முன்னுக்கு நிற்கிறது என்பதே பலரதும் கருத்தாக இருக்கிறது.

நூல்களை இரண்டுவகையாகப் பார்க்கலாம். அந்தக்காலத்துக்கு ஏற்றவை. எக்காலத்துக்கும் ஏற்றவை என்று வகைப்படுத்தலாம். இதேவேளை நூல்களைக் கற்கும் வகையிலும் இருவகைப் படுத்தலாம். முதலாவது எழுதிய காலத்துக்கே சென்று கற்பது. மற்றையது வாழும் காலத்திற்கு வந்து கற்பதாகும். இந்த வகையில் வள்ளுவமானது வாழும் காலத்திலேயே கற்கும் நூலாக விளங்கின்றது. ஆகையால்த்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாழ்வியல் நூலாக விளங்கும் பெருமையைப் பெற்றிருக்கிறது.

திருக்குறள் தான் தோன்றிய காலம் முதல் இன்றளவும் தனித்துவம் மிக்கதாகவே விளங்குகிறது என்பதை எவருமே ஒத்துக் கொள்ளுவார்கள் அந்த அளவுக்கு அதன் அமைப்பும்அதில் சொல்லப்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன.  பகவத்கீதை வாழ்வுக்கு வழிகாட்டிதான். திருக்குரான் வாழ்வியலைக் காட்டும்  கருத்துக்கள் கொண்டதுதான். பைபைளில் கூட வாழ்வியல் கருத்துகள் காணப்படுகிறது. ஆனால் இவையாவும் சமயம் சார்ந்தனவாக இருக்கின்றன.

கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னதுதான் வள்ளுவம். ஆகவேதான் திருக்குறள் எந்தவிதச் சமயச்சார்பும் கலவாத சமுதாயச் சிந்தனை மிகுந்த நூலாக இருக்கிறது. கூறப்படும் சிந்தனைகளும் யாராலும் கூறப்படாதன வாகவும்புரட்சிகரமானதாகவும், புதுமையானதாகவும் இருக்கின்றன.

ஒருநூல் எழுதப்பட்ட காலத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் சிலகாலத்துக்கு மட்டுமே பொருந்துவதாகவே பெரும்பாலும் இருக்கும்.சிலவேளை எழுதப்பட்ட காலத்தோடே அக்கருத்துக்களும் வலுவிழந்தும் கூடப் போய்விடலாம் அப்படியான நூல்கள் நிலைத்து நிற்பது என்பது கடினமானதாகவே இருக்கும். ஆனால் எழுந்த காலம் தொடக்கம் இன்றுவரை ஏன் இன்னும் பலகாலங்களுக்கும் நிலைத்து நிற்கும் அளவுக்குச் சிந்தனைக் கருவூலங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பெருமை திருக்குறள் நூல் பெற்றிருப்பதால்த்தான் அது வாழும் நூலாக வாழ்வியலைக் காட்டும் நூலாக இருக்கிறது என்பதை யாவருமே ஏற்றுக் கொள்வார்கள்.

உண்டோம்உடுத்தோம்உறங்கினோம்என்பது வாழ்க்கையல்ல.வாழ்க்கை என்பது இவற்றுடன் அடங்கிவிடுகிறது என்னும் அபிப்பிராயம் பெரும்பாலும் எம்மிடையே காணப்படுகிறது. விலங்களும் சாப்பிடுகின்றன. உறங்கிவிடுகின்றன. நாமும் அப்படியிருந்தால் அதன் அர்த்தம்தான் என்னமனிதன் என்றால் அவன் சிந்திக்கத் தெரிந்தவன். பகுத்தறியும் தன்மை பெற்றவன். அவன் வாழ்வும் விலங்கு வாழ்வும் ஒன்றாகுமா?

எனவே மனிதனது வாழ்வு இப்படித்தான் வாழவேண்டும்  என்னும் நிலைக்குள் இருந்துவிட்டால்த் தான்  அங்கு வாழ்வியலைப் பார்க்கமுடியும். இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்குப் பலவழிக ளைத் தேர்ந்து அவற்றை வழங்கி நிற்பதால்த்தான் வள்ளுவம் மிகச்சிறந்த வாழ்வியல் நெறியாகி நிற்கிறது எனலாம்.

வள்ளுவம் காட்டும் வழிகளை உலகிலுள்ள அனைவரும் கடைப்பிடித்தால் மிகவும் உன்னதமான வாழ்வு அவர்களுக்குக் கிடைத்துவிடும். யாவரும் அறத்தின் வழியில் வாழுதல்  வேண்டும். அறத்தின் வழியில் பொருள் தேடுதல்வேண்டும். அறத்துடன் அன்பினையும் இணைக்கவேண்டும். அறமும் அன்பும் இணையும்வேளை அத்துடன் ஒழுக்கத்தையும் சேர்த்துவிடல் மிகவும் முக்கியம் என்பதுதான் வள்ளுவத்தின் தத்துவம்.

வாழ்வியல் முறைகள்   

எப்படியும் வாழலாம் என்று மனம்போன போக்கிலே வாழ்ந்தால் வாழ்க்கை வாழ்க்கையாக இருந்து விடாது. வாழ்வென்றால் அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். குறிக்கோள் அற்ற வாழ்க்கை குருட்டு வாழ்க்கையாகும். சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்குக் கிடைத்திருக்கும் பெரும் வரப்பிரசாதமாகும். பகுத்தறியும் பாங்கு என்பது மனிதனை மாநிலத்தில் உயர்த்திவைப்பதற்குக் காரணமாய் இருக்கின்றது.

விலங்காக  மனிதன் விலங்குகளுடன் காட்டில் இருந்த நிலையைக் கடந்து நாட்டில் நாகரிகமாக வாழும் நிலைக்கு வந்ததுவிட்ட பின்னரும்கூட மனிதனாக வாழ எண்ணாவிட்டால் மனிதவாழ்வுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் அல்லவாஎனவே கல்வியியும்கற்றலும்வாழ்வியலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதுதான் வள்ளுவத்தின் நிலைப்பாடாகும். கல்வி என்றால் என்ன என் பதை முதலில் தெரிந்துகொள்ளுதல் அவசியமானதாகும். கல்விபற்றி நோக்கங்கள் பல சொல்லப்பட்டாலும் – அதன் பிரதான நோக்கம் -“சுயசிந்தனையும் மனித நேயமிக்க மனிதனை உருவாக்குவதுமேயாகும்”  அதனூடாக தெள்ளிய அறிவுநன்னடத்தைமனிதத்துவம்இறைபற்றிய உணர்வுஏற்படுகிறது என்பதுதான் முக்கிய அம்சமாகும்.

இவற்றை எல்லாம் உள்வாங்கிய வள்ளுவம் முதலில் என்ன சொல்லுகிறது என்றால் “கற்க” என்று தொடங்குகிறது. கற்க என்ற பொழுதே எம்மிடம் ஒரு விழிப்பு ஏற்படுமல்லவாஅது எப்படியிருக்கும் என்று ஆராயும் எண்ணம்கூட ஏற்படலாம் அல்லவாஅதன்பின்னர்தான் அடுத்து என்னதான் இருக்கிறது என்ற ஆவலை எம்மிடத்தில் உருவாக்கி.. “கசடறக்” என அடுத்த நிலையினை வள்ளுவம் காட்டிய பின்னர் எவற்றைக் கற்கவேண்டும் என்பதை .. “கற்பவை” என்று வரையறுத்துச் சொல்லியபின்னர்.. மிகவும் முக்கியமான இடத்துக்கு வள்ளுவம் வந்து நிற்கிறது. அதாவது  .. ” கற்றபின் நிற்க அதற்குத் தக” கற்று முடித்து விட்டால் மட்டும் போதாது கற்கும் பொழுது எவற்றையெல்லாம் கற்றோமோ அதன்படி வாழ் வினை அமைத்து வாழுவதுதான் கற்றதன் பயன்பாடு என்று நிறைவாக இந்த வரிகளால் வள்ளுவம் காட்டி நிற்கிறது.

இங்கே சுட்டப்பட்ட வழிகள் கல்வி உளவியல் சார்ந்ததாகும்.தூண்டலும் அதைத் தொடர்ந்து நல்ல துலங்குதலும் கல்வியால் அதுவும் நல்ல கல்வியாலும். கற்றலாலும் எற்படும் என்பது கல்வியியலாளர்களின் எண்ணமாகும். அந்தக் கல்விச்சிந்தனை வாழ்வியல் வழியுமாகும் என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்து எங்களுக்குத் தந்த வள்ளுவத்தின் சிறப்பினை என்ணெயெண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்ளுதல்  வேண்டுமல்லவா!

கல்விபற்றிய வள்ளுவத்தின் பார்வை குறுகிய பார்வையல்ல. அது உலகம் தழுவியதாகும். இது ஒரு பொதுப்பார்வை எனலாம். கற்பது.. தேர்ந்து கற்பதும்அதன் வழி வாழ்வில் நடப்பதும் என்பது யாவருக்கும் ஏற்றதே! இதில் மொழியில்லை. மதம் இல்லை.இனம் இல்லை .நாடுகூட சுட்டப்படவில்லை. இந் தவகையான வாழ்வியல் முறையக்கூறிய வகையால் உலகநூல்களில் வள்ளுவம் உயர்ந்தே நிற்கிறது எனலாம்.

பல நூல்கள்-  இயற்கைவீரம்காதல்வெற்றிச் செய்திகள்சமயக்கோட் பாடுகள் என்னும் ரீதியில் பொதுமைக் கருத்துகளை வெளிப்படுத்தி நின்றதைப் பார்க்கின்றோம். அப்படியான நூல்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்து  மாறு பொதுவியல்புகளை பெரும்பாலும் வெளிப்படுத்தும் நிலையில் அமைந்திருக்கவில்லை. ஆனால் வள்ளுவமோ – அறவியல்அரசியல்பொருளியல்இல்லறவியல்இன்பவியல்எனவகுத்து யாவற்றையும் வாழ்வியல் ஆக்கியிருக்கிறது. இதனால் வள்ளுவத்தின் வாழ்வியலானது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தமிழினத்துக்கு மட்டுமல்ல உலக மாந்தர் அனைவருக்குமே பொருந்துவதாக இருக்கின்றது என்பது மனங் கொள்ளத் தக்கதாகும்.  அறத்துக்கு முதல்வனாகிய இறை வனை முதலாகக் கொண்டுதான் இந்த உலகம் இயங்குகின்றது என்பதுதான் “வள்ளுவத்தின் தொடக்க மேயாகும்.

அகர முதல எழுதெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

இறைமை என்பது இயற்கை.அதனுடைய பொதுமை இயக்கமே அறத்துக்கு முதல் வடிவமாகும். ஆகவே இறைமையே இயற்கை. இயற்கையே அறம். அறமே பொதுமை. பொதுமையே வாழ்க்கை. இவற்றில்  வேறுபாடுகள் மாறுபாடுகள் இருக்கும். ஆனால் உணர்வு எனப்பார்க்கும் பொழுது அது ஒன்றுதான் அதைத்தான்  பொதுமை என்கின்றோம். இப்பொதுமை உணர்வு நோக்கியே அனைத்து மக்களது வாழ்க்கையும் இயங்குதல் வேண்டும் என்பதே பொதுமைக் கொள்கைக்கு மூலமும் வேரும் ஆகும் என்பதையே முதற்குறளில் வள்ளுவம் தெளிவாக்கி நிற்கிறது.

கல்விகற்று அதன்படி நிற்கவேண்டும் என்று சொல்லிய வள்ளுவம் கல்வியின் பயனைக் காட்டும் பொழுது இறைவனை உணர்தலும் பணிவதும்  என்று வாழ்வாகக் காட்டி நிற்பதும் நோக்கத்தக்கதே. இந்த இடத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்தமுறையை எப்படி தமக்கு வாழ்வியலாக்க முடியும் என்றொரு வினாவும் எழுமல்லவா அதற்காகவேதான் “வாலறிவன்” என வள்ளுவம் சொல்லி நிற்கிறது.இங்கு எந்தக் கடவுளும் குறிக்கப் படவில்லை. வாலறிவு என்றால் – தூய்மை ஆன அறிவு என்றும் கொள்ளலாம். அதாவது கற்றபின் ஏற்படும் அறிவில் தூய்மை என்பது – அறியாமயை நீக்கி எல்லாவற்றையும் அறியும் நிலையைப் பெறுகின்ற நிலையாகும்.மக்கள்முழுவதையும் உணரும் நிலையை அடைவதையே வாலறிவன் (இறைவன்) எனக் குறிப்பிடுவதால் நாத்திகம்பேசுகின்ற வர்களுக்கும் வள்ளுவத்தின் இந்த வாழ்வியல் முறை பொருந்தியதாகவே இருக்கிறது.

வள்ளுவம் கடவுளை நம்புகிறது.அது ஆணுமல்ல பெண்ணுமல்ல. வள்ளுவத்தின் கடவுளுக்குக் கோபுரங்களும் இல்லை. கோட்டைகளும் இல்லை.. வள்ளுவத்தின் கடவுளுக்குக் கணக்குமில்லை. வழக்குமில்லை. அதற்குப் பெயர் பேரறிவு! தூய்மையான அறிவு! குணங்களின் திரு உரு! இன்பத்தின் திரு உரு! அன்பின் திரு உரு! அறத்தின் திரு உரு! இதனை ஆத்திகரும் ஏற்றுக் கொள்வார்கள். நாத்திகரும் ஏற் றுக்கொள்வார்கள். இதுதான் பொதுமையான வாழ்வியல் நெறியாகும். இதனை இன்றைய நிலையில் யாவரும் ஏற்றுக்கொள்வார்கள் அல்லவா!

தூய்மையான அறிவு வந்தால் அங்கே நல்லறமும் இணையவேண்டும். அறம்தான் யாவற்றுக்கும் அத்திவாரமாகும். அறத்துடன் இணைந்து வாழ்வு அமைந்துவிட்டால் ஆனந்தம் அங்கே அமர்ந்தே இருந்துவிடும். செயல்கள் அனைத்துக்கும் சிந்தனையே அடிப்படையாகும். சிந்தனையின் நிலைக்களனாக இருப்பது மனமாகும். நாம் செய்யும் செயல்கள் பலவற்றில் தூய்மைகாண வேண்டும் என்று தனித்த னியாக முயல்வதைவிட செயல்கள் அனைத்திற்கும் பொறுப்பாக உள்ள சிந்தனையைத் திருத்தி மனத்தை மாசின்றிவைத்துக் கொள்ளுவதுதான் நல்லதும் சிறந்ததுமாகும்.

இதைத்தான் மனதுக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்று வள்ளுவம் தொட்டுக் காட்டுகிறது. மனத்திலே மாசு இல்லாவிட்டால் அதுவே மிகச்சிறந்த  அறம் என்னும் வாழ்வியல் முறையை வள்ளுவம் காட்டுவது உலகத்துக்கே உகந்ததாகும்.      இன்றைய  நிலையில் மனத்திலே ஏற்படும் அழுக்கினால்த்தான் எங்குபார்த்தாலும் சண்டையும் சச்சரவுகளும் மலிந்து காணப்படுகின்றன. சாந்தியும் சமாதானமும் காண்பதென்பது  முயற்கொம்பாக இருக்கிறது.

அரசியல் செய்வார்கள, படித்துப் பட்டம்பெற்று பலபதவிவகிப்பார்கள். வைத்தியத்துறை சார்ந்தவர்கள், நீதித்துறை உள்ளோர்கள், யாவருமே மனத்தில் மாசுள்ளவராக விளங்குவதால் மனிதவாழ்வே அர்த்தமற்றதாகிவிடுமோ என்னும் பயமே தோன்றி இருக்கிறது. இந்த அவலம் மாறவேண்டுமானால் அனைவருமே வள்ளுவத்தின்படி “மனத்துக்கண்  மாசில்லாமல் வாழுதல்” அவசியமானதாகும்.

மாசற்ற மனம் யாவருக்கும் அமையும் பொழுது நல்ல ஒழுக்கமும் வந்தமையும் நிலையும் எழலாம் அல்லவாஒழுக்கும் என்பது உயிரிலும் மேலானது என்பது வள்ளுவத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இதனால் ஒழுக்கத்தை வாழ்வியல் ஆக்கியிருக்கின்றது வள்ளுவம். இந்த ஒழுக்கமானது தனிமனித ஒழுக்கம்சமுதாய ஒழுக்கம்உலகுதழுவிய ஒழுக்கமாகாவும் விரிவடைய வல்லது. ஒழுக்கத்தால் என்ன வரும்ஒழுக்கத்தால் சிறப்பு வரும்! உயர்வு வரும்! அதனால் ஒழுக்கமானது உயிரிலும் மேலானதாகும் என்று வள்ளுவம் சொல்லுகிறது.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஆடை அணிகலனோபட்டம்பதவிகளோவைர வைடூரியங்களோபற்பல வாகனங்களோமாடிமனை களோபட்டுப்பீதாம்பரங்களோமந்திரிப்பதவிகளோசிறப்புத்தர மாட்டாது. சிறப்பைத் தரவேண்டுமென்றால் அதனைஒழுக்கம்தான் தரும் என்பதுதான் வள்ளுவத்தின் நிலையாகும். அப்படியான ஒழுக்கத்தைக் காப்பாற்றுவது எப்படி என்பதையும் அறியவேண்டும் அல்லவா?

வீடிழந்தால் மீண்டுமொன்றைவாங்கலாம் அல்லது கட்டிக்கொள்ளலாம். மனைவி இறந்தால் மறு தாரம் மணம்செய்து கொள்ளலாம். பொருளை இழந்தால் பின்பு உழைத்துக்கொள்ளலாம். ஆனால் போனால் வராத பொருள் இரண்டு. ஒன்று ஒழுக்கம். அதாவது மானம். மற்றொன்று உயிராகும். இரண்டுமே போனால் போனதுதான். சிலவேளை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் போன உயிரை ஒரு வேளை மீட்டாலும்.. போனமானத்தை எந்தக்கண்டு பிடிப்பாலுமே திரும்பக் கொண்டுவர முடியவே முடியாது. எனவேதான் “உயிரினும் ஓம்பப்படும்” என்று வள்ளுவம் வலியுறுத்திக் காட்டி இருக்கிறது. அதாவது உயிரைக் காப்பாற்ற எப்படியெல்லாம் வாழ்வில் போராடுகின்றோமோ அப்படி..  ஒழுக்கத்தையும் காப்பாற்றி நிற்கவேண்டும் என்பதுதான் வள்ளுவத்தின் வாழ்வியல் முறையாகும்.

இன்றைய இளந்தலை முறையினருக்குக் கட்டாயம் ஒழுக்கத்தைப் பற்றி வள்ளுவம் சொன்னதை மனதில் படியப்பண்ணுதல் வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே  கோலம் என்றலைகின்ற மனப்பாங்கை மாற்ற வேண்டும். இளந்தலைமுறையினருக்கு அறிவுறுத்துவதற்கு வளர்ந்தவர்களும் ஒழுக்கமுடன் வாழ்ந்துகாட்ட வேண்டியது மிக மிக அவசியமானதாகும். ஒழுக்கம் என்று பார்க்கின்ற – பொழுது போதைப் பொருள்ப்பாவனைசூதாடுதல், கொலைசெய்தல்விபசாரம்யாவும் இவற்றுள் அடங்குகின்றன. போதைப் பொருள்ப் பாவனையால் படிக்கும் மாணவ சமுகமே தறிகெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. கல்விக் கூடங்களிளெல்லாம் போதைப் பொருட்கள் பயன்படுத்தல் மலிந்து காணப்படுகின்றதென நாளும் வருகின்ற செய்திகளால் அறிந்து – வேதனைப்படுகின்றோம். இந்த நிலையில் வள்ளுவத்தின் “கள்ளுண்ணாமை” என்னும் வாழ்வியல் தத்துவம் மிகவும்இன்றியமையாததாகவே இருக்கும்.

அறிவைக் கெடுப்பதுகள்ளாகும். அதாவது போதைப் பொருட்களாகும். அறிவு இழந்தால் அனைத்துமே இழந்தமாதிரித்தானே! எந்தப்பிழைகள் செய்தாலும் தாங்கும் தாய்கூட கள்ளுண்ணும் பிள்ளையைக் காறி உமிழ்ந்து வெறுத்து நிற்பாளாம் பெரியவர்கள் கூட இவர்களை வெறுத்து ஒதுக்கி விடுவார்களாம்.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்று
சான்றோர் முகத்துக் களி.

அன்புசெலுத்தும் அம்மாவும் அருள் செலுத்தும் பெரியோர்களும் கள்ளுக்குடியனை கண்டாலே வெறுத் தொதுக்கி விடுவார்கள் எனும் நிலை வாழ்வில் தேவைதானா?

இளம் தலைமுறையினரே எண்ணிப்பாருங்கள்! கள்ளினால் அறிவு மழுங்க என்ன செய்கிறோம் என்று தெரியாத மயக்க நிலையில் கொலையும் செய்துகொள்ளையிலும் ஈடுபட்டு வாழ்வினையே நரகமாக்கும் வழியில் செல்லுதல் தகுமா! வெறி ஏறினால் நெறியங்கே இறங்கிவிடும். நெறி பிறழ்ந்தால் நீசத்தனம்தான் தலைவிரித்து ஆடும் !

இதனை இன்று கல்விக்கூடங்களிலும்,  வேலைத்தலங்களிலும், பார்க்கின்றோம். குடியால் வீதியில் கொலை! பல்கலைக்கழக விடுதிகளிலே கொலை! இவை தேவையா எனச் சிந்திக்கும் பொழுதுதான் வள்ளுவத்தின் அவசியம் யாவருக்கும் தேவைப்படுகின்றது. கள்ளுண்பது நஞ்சுண்பதற்குச் சமமாகும்.  நஞ்சை விரும்பாதீர் நல்லதை விரும்புங்கள் என்கிறது வள்ளுவம்.  குடி குடியைக் கெடுக்கிறது.காமமும் வாழ்வையே அழிக்கிறது. காமத்தை அளவோடுபக்குவமாகக் கையாண்டால் அது இல்லற இன்பமாக மலரும். ஆனால் அதேகாமத்தை துஷ்பிரயோகம் செய்தால் எல்லாமே அழிந்துவிடும்.

இன்று உலகையே உலுக்கி எடுத்துக் கொண்டிருப்பது எது தெரியுமாஅதுதான்  எயிட்ஸ் என்னும் பிசாசாகும். இது பிடித்துவிட்டால் விடவே விடாது. இதனால் இதன் பெயரைக் கேட்டாலே மரணபயமே முன்னிற்கிறது .இதற்குக் காரணம்தான் என்ன? வரம்பற்ற காமமேயாகும். “அளவுக்கு மிஞ்சினால் அமுத மும் நஞ்சு” என்பதை மறந்த காரணமே இந்தப்பயங்கரமாகும்.

பெண்கள் வரம்புமீறுவதோ ஆண்கள் வரம்புமீறுவதோ கூடாது. வரம்பை மீறியதன் விளைவுதான் எயிட்ஸின் வருகை எனலாம். உள்நாட்டிலும்சரிவேலைக்காகப்படிப்புக்காககப் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலும்சரிவரம்புமீறினால் விபரீதம் வரும் என்பதை “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்னும் மந்திரமொழியால் வள்ளுவம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் சொல்லிய வாழ்வியல் நெறி இப்போதும் ஏற்றத்தக்கதாக இருக்கிறதல்லவா!

காமம் எப்படியெல்லாம் மனிதவாழ்வைப் படாதபாடு படுத்துகிறதோ அப்படிதான் கோபமும் அமை ந்துவிடுகிறது. சினத்தின் உச்சத்தால் வெடித்ததுதான் உலகத்தின் போர்கள் எல்லாமே! தனிப்பட்ட சினம் தன்னையழிப்பதோடு தன்னைச் சேர்ந்தவர் களையும்கூட அழித்துவிடும்  கொடூரமானதாகும். ஹிட்லர் என்பவனின் கோபம்முசோலினி என்பவனின் கோபம்,ஜார்மன்னர்களின் கோபம்பிரிட்டிஷாரின் கோபம், உலகின் அழிவுகளுக்கு வித்திட்டன. இன்றுவரை உலகின் பல பாகங்களிலும் அரசியல் தலை மைகளின் அடங்காத கோபத்தால் சண்டைகள் ஓயாமல் நடந்தபடியே இருக்கிறது. அழிவுகளும் தொடர்கின்றன. அழிவுகள் அகலவேண்டுமானால் சினம் அடங்குதலே சிறந்த மார்க்கமாகும். இந்த இடத்தில் வள்ளுவம் காட்டும் –

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும் .

என்னும் வாழ்வியல் தத்துவம் மிகவும் மிகவும் பயனுடையதாகவே இருக்கிறது அல்லவா! இதனால்த் தான் சினத்தை நெருப்புடன் இணைக்கின்றது வள்ளுவம். “சேர்ந்தாரைக் கொல்லி” என்று மிகவும் நுட்பமான கருத்தை நெருப்புக்கு வைத்தமை வள்ளுவத்தின் திறனல்லவாயார் சேர்ந்தாலும் நெருப்பு – வைத்துப் பார்க்கமாட்டாது. பொசுக்கியே விடும்.அதே அளவு சக்தி சினத்துக்கும் இருக்கிறது என்று காட்டியிருப்பதில் இருந்து சினம் என்பது  – எவ்வளவு பயங்கரமானது என்பதை மக்களனைவரும் ஏன் உலகமே உணரவேண்டும் என விரும்பிய வள்ளுவத்தைப் போற்றாமல் இருக்க முடியுமாஇஸ்ரேலி யர்களுக்கும்பாலஸ்தீனயர்களுக்கும்உலகின் தீவிரவாதக் கூட்டங்களுக்கும் வள்ளுவத்தின் இந்தப் போதனையை உணர்த்தினோமேயானால் சாந்தியும் சமாதானமும் அங்கு உதயமாகும்!

சினம் மக்கள் வாழ்வியலைச் சீரழித்துவிடும் என்பதால் அதனை புறந்தள்ளி விட்டு விட்டு – யாவரும் அன்பை வளர்த்தல்அவசியமானதாகும். அன்பு என்பது யாவரையும் உயர்தும். அன்பு என்பது யாவரையும் மகிழ்ச்சிப்படுத்தும். அன்புடன் இருப்பதுதான் வாழ்வினுக்கு அர்த்தத்தையே ஏற்படுத்தும்.

அன்பு இல்லாதவர்கள் உலகத்தில் இருக்கின்ற அனைத்து இன்பங்களும் தமக்கு மட்டும்தான் என்றே எண்ணுகிறார்கள். அவர்களது நினைப்பு தவறானதாகும். ஆனால் அன்புகொண்ட நெஞ்சத்தாரோ – தங்களின் உடல்பொருள், ஆவி அனைத்தினாலும் உதவியே நிற்கின்றார்கள்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

உயிர்வளர்ச்சி என்பது – உடலாலும் அறிவாலும் அன்பாலும் வளர்வதாகும். அறிவும் அன்பும் வளராத உடல்வளர்சி உண்மையான வளர்ச்சியாகாது. ஆகையால் அன்பு இல்லாதவர்கள் எல்லா நன்மைகளும் தமக்கே வந்து அமையவேண்டும் என்று எண்ணுவது – அவர்களிடம் அன்பு வளர்ச்சிஅறிவு வளர்ச்சி இல்லை என்பது மட்டுமல்ல – வெறும் உடல் வளர்ச்சி மட்டுமே பெற்றிருக்கின்றார்கள் என்பதும்அந்த உடல் வளர்ச்சியுடனேயே அழிந்து ஒழிந்து விடுவார்கள் என்ற உண்மையயும் வள்ளும் காட்டும் பாங்கு வாழ்வியலில் முக்கிய எச்சரிக்கை அல்லவா !

வள்ளுவம் காட்டிய “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பதை வாழ்வியல் ஆக்கி வாழ்ந்து காட்டியவர்தான் அல்பேணியா ஈன்றெடுத்த அன்னை திரேசா என்னும் அன்பின் திருவுரு என்பதை யாவரும் நினைத்துப் பார்ப்பது அவசியமே! எங்கிருந்தோ வந்து இன்னார் இனியார் என்று எண்ணாது அன்னையவர்கள் ஆற்றிய பணி வள்ளுவத்தின் வழியல்லவாவள்ளுவம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் நாம்தான் அதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறோம்.!

உள்ளத்து உயர்வுக்கு வாய்மையும் முக்கிய காரணம் ஆகிறது. வாய்மைவழி உலகம் நிற்கவேண்டும்உலகமக்கள் உள்ளத்தால் பொய்யாது இருக்கவேண்டும் என்பதே  வள்ளுவத்தின் இலட்சியமே ஆகும். ஒவ்வொருவரும் உள்ளத்தால் பொய்யாது  ஒழிகினால் உலகத்துக்கே உவந்தவனாக எல்லோரும் கொண்டாடும் ஒருவனாக வருவான் என்று நம்பிக்கையை சொல்லி நிற்பதுதான் வள்ளுவத்தின் வாழ்வியலாகும்.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

இதன்படி வாழ முடியுமா என்று கேட்காதீர்கள்! வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஒருவர். அவர்தான் அண்ணல் தேசபிதா மகாத்மா காந்தி அவர்கள்.காந்தி அவர்களின் பிரிவுச்செய்தி பரவியவுடன் “புத்தருக்குப் பின் இந்தியாவில் தோன்றிய மாமனிதர் மறைந்துவிட்டார்”  என்று உலகத்தலைவர்கள் தமது மனக் கிடைக்கையை வெளிப்படுத்தினார்கள். அதுமட்டுமல்ல நடந்துகொண்டு இருந்த ஐக்கிய நாடுகளின்சபையின் கூட்டமே ஒத்திவைக்கப்பட்டது.உலக நாடுகள் அனைத்திலும் அந்நாட்டுக் கொடிகள் அரைக்கம்பத்தில்பறக்க விடப்பட்டன.இங்குதான் வள்ளுவத்தின் வாழ்வுநெறியை மகாத்மா காந்தி அவர்கள் உலகுக்கே உணர்த்திய உத்தமராகி நிற்கின்றார்!  

வள்ளுவத்தின் உன்னதம்

“வள்ளுவரைப் போல் மிகப்பெரிய ஞானக்களஞ்சியத்தை வழங்கியவர்கள் இந்தவுலகில் எவரும் இல்லை” என்னும் சிந்தனை மகாத்மா காந்தியின் சிந்தனையாகும். அதனைத் தனது வாழ்வியல் ஆக்கிய படியால்த்தான் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் அமரும் நிலையினைப் பெற்றார் என்பது யாவருக்கும் நல்லதொரு எடுத்துக் காட்டு அல்லவா!

இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்  என்னும் நூலில் –  “திருக்குறள் இல்லாமல் இந்தியச் சிந்தனை என்பது முடிவில்லாததாகும்” என்று ஆல்பிரட் ஸ்வைட்சர் என்னும் அறிஞர் போற்றி நிற்கின்றார்.

ஒழுக்கமே மனிதனுடைய உயர்ந்த குறிக்கோளாக இருக்கவேண்டும் என்பதை மிகுந்த உறுதியோடு வள்ளுவர் கூறியிருக்கிறார். ஒவ்வொருவரும் தனக்குள் தானே செய்ய வேண்டிய கடமை என்னமற்றவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்ன? என்பனவற்றையெல்லாம் சிறந்த பண்பாட்டோடும், மதிநுட்பத்தோடும், வள்ளுவர் பேசுகிறார். உலக இலக்கியங்களுள் இத்தகைய மாண்புமிக்க மெய்யறிவு வேறு எந்த நூலிலும் இத்தனை சிறப்பாகப் பொலிவுறவில்லை என்று சொல்லலாம் “என உலக அறிஞரான ஆல்பர்ட்  ஸ்வைட்சர் போற்றி ள்ளார். அதுமட்டுமல்ல” பிற இந்திய மொழி நூல்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்துகின்றன. ஆனால் திருக்குறளோ வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உடன்பாட்டினை உணர்தும் நூல் என்றும் விதந்து கூறுகின்றார். இதிலிருந்து வள்ளுவம் என்பது மிகச்சிறந்த வாழ்வியல் என்பது புலனாகிறதல்லவா!

பல உலக மொழிகளில் வள்ளுவம் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எதற்காக இப்படிச் செய்யப்பட்டது என்பதை உற்றுநோக்கினால் வள்ளுவம் காட்டும் வாழ்வியலை யாவருமே விரும்புவதுதான் முக்கிய காரணமெனலாம்.

வள்ளுவத்தில் சொல்லப்பட்ட வற்றைத் தவறாது வாழ்வில் கடைப்பிடிக்கத் தவறுதல் கூடாது. வாழ்க்கையுடன் பொருத்திப்பார்த்து எவற்றைச் செய்தல்  வேண்டுமோ அவற்றைச் செய்து எவற்றைத் தவிர்க்க வேண்டுமோ அவற்றைத்   தவிர்க்க வேண்டும். எப்படியும் வாழலாம் என்று வாழும் உலகமக்களுக்கு இப்படி வாழ்ந்து பாருங்கள்  உங்கள் வாழ்வு  – இன்பமாக,  இன்னலின்றிஅமைதியாகஅறம் செறிந்து, அகமும்புறமும் தூய்மையாகஇதுதான் வாழ்க்கை என்று இருக்கும் என்னும் வழியைக் காட்டி நிற்பதுதான் வள்ளுவத்தின் வாழ்வியலாகும். ஆகவே வைகத்திலுள்ளோர் வாழ்வாங்கு வாழ வேண்டுமாயின் வள்ளுவம் சொல்லும்  வாழ்வியலைப் போற்றுங்கள். அதன்படி வாழ்ந்து வளம்பெற்றிடுங்கள்!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.