கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 44

0

-மேகலா இராமமூர்த்தி

கம்பராமாயணத்தில் தொண்டு என்ற சொல்லுக்கொரு முழுவடிவமாய்க் கம்பன் படைத்திருப்பது அனுமனை. உயர்ந்த பண்புநலன்களும் அறிவாற்றலும் வீரமும் விவேகமும் நிரம்பியவனாகவும், காப்பியத் தலைவனுக்குத் தேவைப்படும்போதெல்லாம் உதவும் சமய சஞ்சீவியாகவும் திகழும் இப்படிப்பட்டதோர் ஒப்பற்ற கதாபாத்திரத்தை வேறெந்த உலகக் கவிஞர்களும் படைக்கவில்லை என்றே சொல்லலாம்.

கம்பராமாயணத்தில் ஐந்தாவதாயிருக்கும் சுந்தர காண்டத்தை அடுத்து ஆறாவதாக இடம்பெற்றிருப்பது யுத்த காண்டம். வான்மீகத்தை அடியொற்றியே காண்டத் தலைப்புகளைத் தன் காப்பியத்திற்குச் சூட்டியிருக்கின்றார் கம்பர் என்பது கருதத்தக்கது. இவற்றில் யுத்த காண்டம் ஏனைய காண்டங்களைவிடப் பாடல்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிது.

கடல்காண் படலம் தொடங்கி விடைகொடுத்த படலம் ஈறாக 39 படலங்களைக் கொண்டிருக்கின்றது இக்காண்டம்.

இராமகாதையின் தொடக்கத்தில், முடிசூடி மன்னனாகவிருந்த இராமனுக்கு அரசாட்சி செய்யும் முறைமை பற்றி அறிவுறுத்தும் வசிட்டர்,

”யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது…”
என்றுரைத்திருப்பார்.

போரின் தீமைகளை வசிட்டரின் வாயால் பேசவைத்து அதனைத் தவிர்த்தலே நல்லரசனுக்கு அழகு என்று முழங்கிய அதே கம்பர்தான் யுத்த காண்டத்தையும் விரிவாய்ப் படைத்துள்ளார் என்பது நமக்கு முரணாய்த் தோன்றலாம்.

எனினும், யுத்தம் இங்கே எதன் பொருட்டு நிகழ்ந்துள்ளது என்பதனையும் நாம் சிந்திக்கவேண்டும். நாடு பிடிக்கும் நோக்கத்திலோ, தானே பூமண்டலத்திற்கெல்லாம் இணையற்ற ஒரே பேரரசனாய்த் திகழவேண்டும் எனும் பேராசையின் பாற்பட்டோ இராமன் ஈண்டு இராவணனோடு போர் புரியவில்லை. மாறாகத் தன் மனையாளைத் திருட்டுத்தனமாய்க் கவர்ந்துசென்று அவளைத் தாங்கவொண்ணா வேதனைக்குள்ளாக்கிய ஓர் அரக்கனிடமிருந்து அவளையும் அவ் அரக்கனால் அடிக்கடி அல்லலுக்குள்ளாகும் ஏனைய நல்லோரையும் காத்தற்பொருட்டே யுத்தம் செய்கின்றான்.

கத்தியால் ஒருவனைக் குத்திக் கிழித்தல் வன்முறை என்று கருதப்படுகின்றது. ஆனால், அதே கத்தியைப் பயன்படுத்தி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்யும்போது அச்செயல் நோயாளனின் உயிர்காக்கும் நற்செயலாய் மாறிவிடுகின்றது. கத்தியால் கிழிக்கும் அந்த மருத்துவரை நோயாளன் வெறுப்பதில்லை; விரும்பவே செய்கின்றான்.

இதனையே,

”வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன்…”
என்பார் குலசேகராழ்வார்.

பயிர்களுக்கு இடையில் களை மண்டும்போது அதனைக் களைந்து பயிர்களைக் காத்தல்போல், உயிர்களுக்கிடையில் களைபோல் விளைந்து ஊறுசெய்ய விழைவோரை அழித்தல் பேராண்மையாளனின் கடன்தானே?

அரசியல் அறிஞரான வள்ளுவர்,
”கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.”
என்று இதனை வலியுறுத்தவில்லையா?

ஆதலால், இராமகாதையில் எழுந்த இராம இராவண யுத்தம் தவிர்க்க இயலாதது; போரின்றி வேறு எவ்வகையிலும் சீர்செய்யவியலாதது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இனி காப்பியத்தைத் தொடர்வோம்!

இராவணனோடு போரிட்டுச் சீதையை மீட்பதற்காகக் கிட்கிந்தையிலிருந்து புறப்பட்ட எழுபது வெள்ள வானரசேனை தென்திசை நோக்கிப் பயணித்துக் கடலை அடைந்தது.

அப்போது மடிந்துவிழும் அலைகளுடன் காட்சியளித்த கடலின் தோற்றமானது, ”பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியை உடையவளும், கொடியேனாகிய நான் பெற்ற பாவையும், தவத்தின் பயனால் பிறந்த பாவை போன்றவளுமான சீதை அங்கே அரக்கருக்கிடையே தனியே இருந்து வருந்துதல் தகுமோ என மனம் தளர்ந்து, நன்முத்துக்களாகிய கண்ணீர்பொங்கி, அலைகளாகிய கைகளை விரித்துக்கொண்டு எழுந்துவந்து வள்ளல் இராமனின் மலர்போன்ற திருவடிகளில் வீழ்ந்து முறையிடுவதைப் போலிருந்தது” என்கிறார் கம்பர்.  

இந்து அன்ன நுதல்பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்
தந்த பாவை தவப் பாவை தனிமை தகவோ எனத் தளர்ந்து
சிந்துகின்ற நறுந்தரளக் கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து
வந்து வள்ளல் மலர்த் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறிகடலே.
(கம்ப: கடல்காண் படலம் – 6067)

சீதை பாற்கடலில் பிறந்த திருமகளாய்க் கருதப்படுதலால், ’கொடியேன் தந்த பாவை’ என்று கடல் தன் மகளின் அவல நிலைக்குத் தன்னை நொந்துகொண்டதாய்க் காட்சியமைத்துள்ளார் கவிவேந்தர்.

கடலில் அலைகள் எழுந்ததுபோலவே இராமனின் மனத்திலும் தென் கடலைக் கடந்து இலங்கையை அடைதல் எங்ஙனம் எனும் சிந்தனை அலைகள் எழுந்துகொண்டிருந்தன. சிந்தனை வயப்பட்டிருக்கும் அண்ணலைத் தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு நாம் இலங்கைக்குச் செல்வோம் ஆங்கு நிகழ்பவற்றை அறிந்துகொள்ள!

அனுமனால் எரியூட்டப்பெற்ற இலங்கை நகரம் தேவதச்சன் மயனால், பிரமதேவனின் வழிகாட்டுதலின்படி, மீண்டும் அழகுறப் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலே நடக்கவேண்டியவை குறித்து ஆலோசிப்பதற்காகத் தன் அரியணையில் அமர்ந்த இராவணன், முனிவர், தேவர், வித்தியாதரர், இயக்கர், பெண்கள், இளைஞர்கள் என அனைவரையும் தன் அவையிலிருந்து விலகிப்போகச் செய்தான்.

கல்வியில் மேம்பட்ட அறிஞர்கள், நெடுநாள் பழகிய நண்பர்கள், நற்பண்புடையோர், தன்னைவிட்டு நீங்காத அமைச்சர்கள் முதலியோரையும் நெருங்கிய சுற்றத்தினருள் பிள்ளைகள், தம்பிமார்கள் ஆகியோரையும் மந்திராலோசனைக்குத் தன்னருகில் வைத்துக்கொண்டான்.

மந்திராலோசனைக் கூட்டம் தொடங்கியது. இலங்கையை ஒரு குரங்கு எரித்தழித்தது என்பதனை எண்ணி வருந்திய இராவணன்,

”ஒரு குரங்கு சுட்டது; அதன் விளைவாய் நெருப்பு சூறையாட, கொடிகள் கட்டப்பட்ட இலங்கை மாநகரமே அழிந்து கெட்டது. உறவினர்களும் நண்பர்களும் இறந்துபட்டனர்; அவமானம் எங்கும் பரவியது. நேர்ந்த தீமையைத் தடுக்கவியலாத எனது உடலோ பலனின்றி இந்த அரியணையில் இருந்தது” என்று கழிவிரக்கத்தோடு பேசினான்.

சுட்டது குரங்கு எரி சூறையாடிடக்
கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும்
பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும்
இட்டது இவ்அரியணை இருந்தது என்உடல்.
(கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6082)

இராவணனின் கருத்தைக் கேட்ட அவனுடைய படைத்தலைவர்கள் ஒவ்வொருவராய் எழுந்து, நம் ஆற்றலுக்கு ஏற்றதாய் இல்லாவிடினும், அந்தக் குரங்கையும் அதனை ஏவிய மானிடரையும் அழிப்பதே நம் முதல் வேலை என்று வீராவேசத்துடன் முழங்கினர்.

அரக்கர்களின் வீராவேச மொழிகளைச் செவிமடுத்துக்கொண்டிருந்த இராவணன் தம்பியாகிய கும்பகருணன், அவர்களின் வெற்றுரைகளை நிறுத்திவிட்டு,

“தம்பியாகிய இவன் நமக்கு நன்மையே உரைப்பான் என்று நீ நம்புவாயாகில் உனக்கு நன்மையானவற்றை நான் எடுத்துரைப்பேன்” என்று சொல்லிவிட்டுத் தன் கருத்துக்களைக் கூறலானான்…

”அழகிய இலங்கை மாநகரைத் தீ உண்டமைக்கு வருந்தி, நமது ஆட்சியின் சிறப்பு அழிந்துவிட்டது என்று மனம் உளைந்தாய். அரக்கரினத்தைச் சாராத வேறோர் குலத்தவனான இராமனின் தேவியை விரும்பி நீ சிறைவைத்த செயல் மட்டும் நன்றோ? பாவம் செய்தவர் அடையும் பழிகளில் இதனினும் கொடிய பழி வேறுண்டோ?” என்று இராவணனை நோக்கிக் கேள்விக்கணை தொடுத்தான்.

”குற்றமில்லாத வேறொருவன் மனைவியை அழகிய சிறையிலே அடைப்போம்; குற்றமற்ற புகழை அடையவும் விரும்புவோம்; பெருமையோடு பேசுவதோ மானமிகு வீர உரைகள்! அதற்கிடையில் விரும்புவதோ காமம்; அஞ்சுவதோ மானுடரைப் பார்த்து; நம் வெற்றி நன்றாய் இருக்கின்றது!” என்றான் எகத்தாளமாக!

ஆசில் பரதாரம் அவை அஞ்சிறை அடைப்பேம்
மாசில் புகழ் காதலுறுவேம் வளமைகூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம கொற்றம்
(கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6122)

”பரதாரம் அவை” என்ற கும்பன் பன்மையில் சுட்டியிருப்பதைக் காண்கையில் இராவணன் ”பரதாரங்கள்” (பிறர் மனைவியர்) பலரை நயந்திருப்பானோ எனும் ஐயம் எழுகின்றது.

இவ்வாறு இராவணனின் இழிசெயல்களைக் கும்பகருணன் பட்டியலிட்டு உரைத்து வருகையில் இராவணன் முகத்தில் தெரிந்த மாற்றத்தைக் கவனித்தான். தான் கூறிய கருத்துக்களை அவன் விரும்பவில்லை என்பதை அது உணர்த்தவே தன் பேச்சின் போக்கினை மாற்றிய கும்பகருணன்,

”மன்னா! நீ பெரியவர்கள் செய்யும் நல்ல செயலைச் செய்யவில்லை; நம் குலமாகிய புலத்திய மரபுக்கே சிறுமைதரும் செயலைச் செய்துவிட்டாய். எனினும், மலர்க்குழலாள் சீதையை இனி இராமனிடம் செல்லவிடுவோமானால் நாம் வலிமையற்ற எளியவர்கள் என்றாகிவிடும். அதற்கு பதிலாய் அந்த மானிடர்கள் நம்மைப் போரில் வெல்ல நாம் இறந்துபடுவோமாயின் அதுவும் நல்லதே; நமக்குப் பழியுண்டாகாது!” என்றான்.   

தொடர்ந்தவன், ”பகைவர் படை நம்மைத் தாக்க வருமுன் நாம் கடல்கடந்து சென்று அவர்களைத் தாக்கி அழித்துவிடுதல் வேண்டும்” என்று இராவணனின் மனத்துக்கு உகந்த வகையில் தன் கருத்தை வெளியிட்டான்.

கும்பகருணன் கருத்தால் மகிழ்ந்த இராவணன், ”இப்போதே போருக்குப் புறப்படுவோம்” என்றுகூற, ஆலோசனைக் கூட்டத்திலிருந்த இந்திரசித்து சினத்தோடு எழுந்து, ”எந்தையே! நான் சென்று அந்த மானுடர்களையும் அவர்க்குத் துணைநிற்கும் குரங்குகளையும் வென்று வருவேன்; இல்லையேல் நான் உன்றன் மகனில்லை!” என்று வஞ்சினமுரைத்தான் வெஞ்சினத்தோடு.

இந்திரசித்தின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த, நன்மைகளை நன்குணர்ந்தவனான, இராவணனின் இளவல் வீடணன், கோபத்தோடு பற்களால் உதட்டைக் கடித்தவனாய் எழுந்தான்.

“இளமையால் அரசியல் முறையை எண்ணிப் பாராதவனே!  ஓவிய ஞானமில்லாதவனும், கண்பார்வை அற்றவனுமான ஒருவன் ஓவியம் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு இதனை நன்கு திருத்தியமைப்பேன் என்பதுபோல் நீ பேசுகின்றாய். அகவைமூத்த அறிஞர்களும், சிறந்த வினையம் உடையவர்களும் இருக்கத்தக்க மந்திராலோசனை சபையில் நீ இருத்தல் தகுமோ?” என்று இந்திரசித்தைச் சினந்துரைத்தான்.

கருத்துஇலான் கண்இலான் ஒருத்தன் கைக்கொடு
திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய்
விருத்த மேதகையவர் வினைஞர் மந்திரத்து
இருத்தியோ இளமையால் முறைமை எண்ணலாய்.
(கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6137)

இந்திரசித்தைக் கண்டித்த வீடணன் அடுத்து இராவணனுக்கு நன்மை பயக்கும் நல்லுரைகளை நவிலத் தொடங்கினான்.

”நமது தலைநகராகிய இலங்கையும், உன்னுடைய வெற்றியும் உலகின் தாயாகிய சானகி எனும் அந்தத் தேவியின் கற்பினால் வெந்ததே அல்லாது ஓர் வானரம் சுட்டது என்று நினைத்தல் அறிவுடைமையோ?”

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
ஆனவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ. (
கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6145)

”நீ ஒப்பற்ற தலைவனாய் ஏழுலகையும் வென்றவன்தான்; எனினும், ஆயிரம் தோளுடைய கார்த்தவீர்யன் எனும் மானுட மன்னனுக்குத் தோற்றாய். எனவே, மானுடர்க்குத் தோற்பதில் புதிது ஒன்றும் இல்லையே!

பெரும! சம்பராசுரனை வென்ற பெருவீரனும் சூரிய குலத்தில் உதித்தவனுமான தயரதனுடைய புதல்வர்கள் இராமனும் இலக்குவனும். அவர்கள் முனிவர்களுக்கெல்லாம் தலைவரான அகத்தியரிடம் படைக்கலங்கள் பெற்ற சிறப்புக்குரியவர்கள்.

புகழும் செல்வமும் உயர்ந்த நம் குலத்து இயல்பும் கெட, பழியும் தாழ்வும் மேலோங்க, உற்றார் உறவினரோடு நாம் அழியாதிருக்கத் தளர்ச்சியில்லாக் கற்புடை தெய்வமகளாகிய சீதையை இராமனிடம் விட்டருள்வாயாக. இதைவிடச் சிறந்த வெற்றி வேறில்லை!” என்று நயமாய் உரைத்தான் அறிஞரில் சிறந்தவனான வீடணன்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *