Category: Featured

Featured

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(57)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    கைவிரல்களின் வளைவுகள் உங்கள் நலத்தினை அறியும் வரிகளை விதைத்திடும் வகையில் வரைந்திடும் இம்மடலுடன் உங்கள் முன்னே !

    காலச் சக்கரத்தின் சுழற்சியினூடாக வாழ்க்கைத் தேர் விரைவாக அகவைகள் எனும் பாதையினூடாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

    இப்பயணம் வெவ்வேறு கால கட்டங்களினூடக பயணித்துக் கொண்டிருப்பதால் அக்காலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப மனிதனது தேடல்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன.

    இன்றைய இந்தச் சூழலிலே மனிதர்களின் வாழ்வில் அவர்களால் கணிக்கப்படும் பல விடயங்களின் அடிப்படை உடமைகளிலேயே தங்கியுள்ளது.

    ஒவ்வொரு மனிதரது தேவைகளும் வித்தியாசப்படுகிறது. அவரவருடைய பார்வைகளுக்கேற்ப அவர்களுடைய தேவைகளின் முக்கியத்துவம் வரிசைப்படுத்தப்படுகிறது.

    இது மாற வேண்டும், மனிதர்கள் பொருளாசையில் இருந்து விடுபட வேண்டும்.வாழ்வின் நிலையாமையை உணர்ந்து இவ்வாசைகளில் இருந்து தம்மை அந்நியப் படுத்தி வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பல ஆன்மீகவாதிகள் ,பல ஆன்மீக கருத்துக்கள் காலத்துக்குக் காலம் மனித சமூகங்களுக்கிடையில் பரவிக் கொண்டே வந்திருக்கின்றது,, வருகின்றது.

    ஆனால் இவை எந்த வகையில் யதார்த்தமானவை என்பதைச் சிறிது நோக்கினால் மிகவும் வியப்பான விளக்கங்கள் எம் மனங்களை அலைக்கழிக்கும் என்பதுவே உண்மை.

    மனிதர்களுடைய ஆசைகளின் வித்தியாசங்களின் அடித்தளத்திலேதான் உலகத்தின் பொருளாதாரம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

    மனித சமூகம் இத்தகைய பொருளாசைகளிலிருந்து என்றுமே தம்மை அந்நியப்படுத்திக் கொள்ள முடியாது எனும் நம்பிக்கையே இவுலகத்தின் பொருளாதர வளர்ச்சியின் மீதான நம்பிக்கையின் வலிமைக்கு ஆதாரமாகிறது.

    உலகத்தின் இயக்கம் நன்ம்மை, தீமை ஆகிய இரண்டு நிகழ்வுகளினாலுமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

    உலகில் உள்ள அனைவருமே புத்தர்களாகி விட்டால் இன்று புத்தர் எனும் ஒருவரினது அதியுயர் போதனைகளை நாம் போற்றிக் கொண்டிருக்க முடியாது.

    அதே போல உலகில் உள்ள அனைவருமே துரியோதனர்களாக இருந்து விட்டால் பாஞ்சாலிக்கு நடந்த அநீதியின் மூலம் வாழ்க்கையின் தர்மத்தை நாம் போதித்துக் கொண்டிருக்கவும் முடியாது.

    ஒவ்வொரு மனங்களிலேயும் நன்மைகளும் தீமைகளும் குடி கொண்டிருக்கிறது.நன்மையின் கை ஓங்கியவர்கள் நன்மை செய்பவர்களாகவும், தீமையின் கை ஓங்கியவர்கள் தீமை புரிபவர்களாகவும் உருவகம் பெறுகிறார்கள்.

    வாழ்க்கையின் வெற்றிக்கு வழி உண்மையான உழைப்பே. இந்த உண்மையான உழைப்பை மூலதனமாகக் கொடுத்த யாருமே தம் வாழ்வில் தோற்றதாகச் சரித்திரமே இல்லை.

    என்ன இதை எவ்வாறு உன்னால் அடித்துக் கூற முடிகிறது ? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுவது எனக்குப் புரிகிறது.

    வாழ்வின் “வெற்றி” என்பதன் உண்மையான அர்தத்தைப் புரிந்து கொண்டால் என் வாதத்திலுள்ள ஆணித்தரமும் புரியும். வெறும் பணமும், உடமையாயுள்ள பொருட்களும் மட்டும் ஒருவருடைய வாழ்வின் வெற்றிக்குச் சான்றுகளல்ல.

     நான் எனது இளமையான வயதில் (18) இங்கிலாந்துக்குள் கால் பதித்தவன். எமது பின்புல நாடுகளில் பணி புரிந்த அனுபவமற்றவன் ஆனால் இங்கிலாந்தில் எனது உழைப்பின் அனுபவத்தின் அடிப்படையில் பல உண்மைகளை உள்வாங்கிக் கொண்டவன்.

    பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் நிறைந்த நாட்டிலே தாய்மொழியல்லாத ஆங்கிலத்தை நன்கு பேசக் கற்றுக் கொள்ள வேண்டிய காட்டாயத்தின் நடுவில் எனது புலம்பெயர் வாழ்வினை ஆரம்பித்தவன்.

    ஆங்காங்கே வெள்ளை இனத்தவருள் சில காடையர் மத்தியில் நிறவேற்றுமை காரணமாக சில தாக்கங்களைக் கண்டேனேயொழிய உண்மையான உழைப்பிற்கு அவர்கள் கொடுத்த மரியாதையைக் கண்கூடாக கண்ட அனுபவம் எனக்குண்டு.

    பேராசைகளின் வழி குறுக்கு வழியில் செல்வந்தர்களாகும் எண்ணம் கொண்டு அலையும் பேர்வழிகள் இகத்தினில் என்றுமே இருக்கத்தான் போகிறார்கள். அதே போல இப்பேராசைகளின் வழி நடந்தால் இறுதியில் அடையப் போகும் அழிவுகளை வாழ்வின் நிலையாமையின் உதாரணங்களின் மூலம் விளக்கும் ஆன்மீகச் சித்தர்களும் இருக்கத்தான் போகிறார்கள்.

    இவர்கள் இரண்டுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் எனும் தண்டவாளத்தில் தான் உலகம் எனும் ரயில் தனது பயணத்தைத் தொடரப் போகிறது. இவற்ரில் ஒன்று இல்லையென்றாலும் உலகின் பயணம் ஆட்டம் கண்டு விடும்.

    இவை இரண்டுக்கும் நடுவே தாமரை இலைமேல் உருளும் தண்ணீர்த்த துகளைப் போல வாழப் பழகிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள் தமது வாழ்வை அமைதியாக வாழ்ந்து விடுவார்கள் என்பதுவே உண்மையாகும்.

     மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை!….

     முனைவர். ப. பானுமதி

    கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு விடுமுறை. பெற்றோர்களுக்கு விடுமுறை இல்லை அலுவலகம். குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியப் பணியில் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு மற்ற நேரத்தில் எப்படியோ, இந்த இரண்டு மாதங்கள் மட்டும் வரப்பிரசாதம். ஆசிரியப் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு விடுமுறை இருக்கும்போது தமக்கும் விடுமுறையாக இருப்பதால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு விடுமுறையைக் கழிக்க கிளம்பி விடுவார்கள்.

    மற்ற அலுவலர்கள் நிலை பெரிய பிரச்சனைதான். வெளியூர் செல்வது இருக்கட்டும். முக்கியமாகக் குழந்தைகளைக் கண்காணிக்க முடியாது. யார் வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு அலுவலகம் செல்வது என்று அலையும் அல்லல் சொல்லில் வடிக்க முடியாது. நடுத்தர வர்க்கத்தினர்க்குக் கோடைக்கால வெய்யில் மட்டுமல்ல வறுமையும் சேர்ந்து உடலையும் மனத்தையும் எரிக்கவே செய்கிறது.

    முடி உள்ள சீமாட்டி முன்னும் முடிவாள், பின்னும் முடிவாள் என்பது போல வசதி படைத்தவர்களாக இருந்தால் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ஊட்டி, கொடைக்கானல் என்று கிளம்பி விடுவார்கள். அது மட்டுமல்ல ஜனவரி பிப்ரவரி மாதங்களில் துண்டுப் பிரசுரங்களில் பல வண்ணங்களில் பூக்கத் தொடங்கும் கோடை விடுமுறை வகுப்புகள் செல்வக் குழந்தைகளின் விடுமுறையில் பாதி நாட்களை எடுத்துக் கொள்ளும்.. ஆட்டம், பாட்டம், நீச்சல், கையெழுத்து, மொழி, கணிதம் என்று குழந்தைகள் பணத்தையும் காலத்தையும் மகிழ்ச்சியாகச் செலவு செய்வார்கள். வசதி இருப்பவர்களுக்கு எக்காலத்திலும் வாழ்வு சுகமாகிவிடுகிறது.

    வசதி இல்லாதவ்ர்கள் என்ன செய்வார்கள். இரண்டு சினிமாவுடன் குழந்தைகளின் கோடை விடுமுறையை முடித்து விடுகின்றனர். மற்ற நாட்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியைப் பார்க்கச் சொல்லிவிட்டு அலுவலகம் செல்கிறார்கள்.  ஆனால் தொலைக்காட்சியெல்லாம் குழந்தைகளுக்கு அலுத்துப் போய் பல நாட்கள் ஆயிற்று. எப்போது கணினி வந்ததோ அப்போதே குழந்தைகளுக்குத் தொலைக்காட்சி புளித்துப் போய்விட்டது. இப்போதெல்லாம் கணினியில் விளையாடுவது பெருகிவிட்டது.

    அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், கார் ரேஸ், பைக் ரேஸ் முதலிய கணினி விளையாட்டுகள் குழந்தைகளின் கவனத்தை அவற்றின் பக்கம் திருப்பிக்  கொண்டுள்ளன. இவற்றைத் தவிர Stratcgic games என்று அழைக்கப் படும் ஹாரிபார்டர், பிரின்ஸ் ஆஃப் பர்சியா போன்றவை சி.டிக்களில் வலம் வந்து குழந்தைகளைக் கும்மாளமிட வைத்துள்ளன. இது மட்டுமன்று கூகுல், முகப்புத்தகம், டிவிட்டர் முதலிய வலைத்தளங்கள் எண்ணற்ற புத்தம் புதிய விளையாட்டுகளை நாள்தோறும் அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கின்றன. பபுல் சாகா, பபுல் எபிக், பபுல் வேல்ட், பபுல் ஸ்நேக் சாகா, பிரமிட் சாகா போன்ற நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் குழந்தைகளின் மனத்தைக் கொள்ளை கொண்டுள்ளன.

    இந்த விளையாட்டுகள் எல்லாம் குழந்தைகளின் மூளையைத் தூண்டி சிந்தனையை வளர்க்கின்றன என்பதில் உண்மை இருக்கிறது. மூளையை வளர்த்தால் மகிழ்ச்சி. ஆனால் இவ்விளையாட்டுகள் மூளையை அதிகமாக வளர்த்து சிந்தனைத் திறன் அனைத்தையும் விளையாட்டிலேயே முடக்கி விடுகின்றன என்பதே இன்றைய அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. விளையாட்டுகளில் மூளை முடங்கி விடுவது கூட அவ்வளவு அபாயம் இல்லை. இவ்விளையாட்டுகளை விளையாடும் போது மட்டுமல்ல விளையாடி முடித்து உறங்கும் போதும் மூளை விளையாட்டிலேயே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்விளையாட்டுகளிலேயே காலத்தைக் கழி(ளி)க்கும் குழகுழந்தைகளை விசாரித்த போது அவையும் இக்கருத்தை ஒப்புக் கொள்கின்றன. மூளையை ஒட்டுமொத்தமாக இவ்விளையாட்டுகள் ஆக்கரமிப்பு செய்கின்றன என்பதே உண்மை.

    நினைவு, நினைவிலி என்னும் இரு நிலையிலும் மூளை விளையாட்டிலேயே இருப்பதால் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் (Epilepsy) வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. மூளை நரம்பில் இருக்கும் அணுக்கள் ஒரு வினாடிக்கு சுமார் 80 முறை துடிக்கும். இவை முன்னும் பின்னும் துடிப்பதால் எண்ணங்கள், நினைவுகள், உணர்வுகள் ஆகியவை உருவாகின்றன. இம்மூளை நரம்பின் அணுக்கள் சில வேளைகளின் விபரீதமாக வினாடிக்கு 500 வரை துடிக்கும். அணுக்களின் இப்படிப் பட்ட அதிக பட்ச துடிப்பால் மூளை முழுவதும் அல்லது மூளையின் ஒரு பகுதி பாதிக்கப் படுகிறது. உணர்வு ரீதியாக குழந்தை பாதிக்கப் படும்போது இந்நோய் வருகிறது. இந்நோய் வரும்போதும் குழந்தைகள் உணர்வு ரீதியாகப் பாதிக்கப் படுகின்றன. கணினி விளையாட்டு இவ்விரண்டுக்கும் காரணமாகி விடுகிறது.

    ஃபிட்ஸ் எனப்படும் இந்நோய் குழந்தை பிறப்பின்போது ஆயுதம் பயன்படுத்துவதால், மூளையில் இரத்தக் கட்டிகள் இருப்பதால், குறைந்தும் மிகுந்தும் கேட்கப் படும் ஒலிகளால், குறைந்தும் அதிகரித்தும் பார்க்கப்படும் பளிச்சிடும் ஒளிகளால் அதாவது தொலைக்காட்சியை வெளிச்சமின்றி பார்ப்பதால், அதிகப் படியான மனக்கவலையால், கால வரைமுறை அற்ற உணவுப் பழக்கத்தால், பெண்குழந்தைகளுக்குப் பூப்புக்காலத்தில் ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகளால் என்று பல காரணங்களால் வருகிறது. கணினியும் மெல்ல மெல்ல இந்நோயைக் குழந்தைகளுக்குத் தந்து கொண்டு இருக்கின்றது. குழந்தைகளின் பொழுதைக் குடிக்கும் கணினி மெல்ல மெல்ல அவர்களின் உடல் நலத்தையும் குடிக்கிறது.

    “ஓடி விளையாடு பாப்பா – நீ

    ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

    கூடி விளையாடு பாப்பா

    ஒரு குழந்தையை வையாதே பாப்பா”

     

    என்று அன்றே அறிவுரை கூறினான் பாரதி. அவன் தேசியக் கவி, சுதந்திரக் கவி என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவன் ஒரு குழந்தை நல மருத்துவனும்.  குழந்தைகளின் உடல், மன நலத்திற்கு எது தேவையோ அதைப் பாடியுள்ளான். இது போன்ற இயந்தரங்களுடன் விளையாடும் விளையாட்டுகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்ப்பது போல வளர்த்து வாழ்விழக்கச் செய்து விடும் என்பதை அறிந்தவன் அவன்.

    கணினி விளையாட்டில் ஒரு குழந்தைதான் விளையாட முடியும். வேறு ஒருவருடன் விளையாட முடியாது. வேண்டுமானால் கணினியில் ஒவ்வொரு விளையாட்டிலும் உடன் விளையாடுபவர்களைப் போல ஒரு உயிரற்ற உருவம் விளையாடும். இப்படியே கணினியைத் தான் மட்டுமே பயன் படுத்தி விளையாடிப் பழகிய குழந்தைகள் இன்னொரு குழந்தை விளையாட வந்து விட்டால் பாண்டியன் நெடுஞ்செழியன் கன்னி யுத்தம் செய்தது போல் இந்தக் குழந்தைகள் கணினி யுத்தம் புரிய தொடங்கி விடுகின்றனர். கூடி விளையாடும் பண்பும் கணினியால் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.

    ஓடி விளையாடுவது குழந்தைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்பது பெற்றோர்கள் அறிந்ததே. கூடி விளையாடுவதால் நட்பு, அன்பு, பகிர்வு, ஒற்றுமை முதலிய நற்பண்புகள் வளர்வதை எவராலும் மறுக்க முடியாது.

    பெற்றோர்களே உங்களுக்கு விடுமுறை இல்லாவிட்டால் என்ன? வெள்ளைப்பணம் கைகளில் இல்லாவிட்டால்தான் என்ன? வெளியூருக்குத்தான் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டுமா? பணக்காரர்களுக்குப் பாதாம் பருப்பு என்றால்  ஏழைக்கு என்று ஒரு பட்டானிப் பருப்பு கூடவா கிடைக்காமல் போய் விடும். அவர்கள் ஊட்டி, கொடைக்கானல் சென்றால் நீங்கள் அருகில் இருக்கும் பூங்காவுக்கு, கடற்கரைக்கு,, அழைத்துச் செல்லுங்கள். அடி, கடி பட்டால் பதில் சொல்ல வேண்டிய தைரியம் உங்களுக்கு இருந்தால், உங்கள் குழந்தைகளுடன். பக்கத்து வீட்டு குழந்தைகளையும் சேர்த்து அழைத்துச் செல்லுங்கள். கூடி விளையாட அனுமதியுங்கள். நீங்களும் உங்கள் குழந்தைகளின் விளையாட்டை நாள் தோறும் இரண்டு மணிநேரம் கண்டு மகிழுங்கள். கோடையை கொஞ்சமாவது இன்பமாக கழித்த புத்துணர்வு குழந்தைகளுக்குக் கிடைக்கும். ஏன்? உங்களுக்கும் கிடைக்கும். சும்மாவா சொன்னார்கள் ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்று. அதிலும் சுவை இருக்கத்தானே செய்கிறது!

     

     

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டி உணவுமுறையும்: டயபடிஸ் 3

    செல்வன்

    டயபடிஸ் ஏன் வருகிறது என்பதற்கான விளக்கம் எளிமையானது.

    நாம் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைந்தவுடன் டயபடிஸ் நம்மை வந்தடைகிறது.

    நம் உணவில் நாள் தவறாமல் சர்க்கரை சத்து சேர, சேர இன்சுலினின் தேவையும் அதிகமாகிறது. இன்சுலின் நம் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பாக மாற்றி நம் உடலில் சேகரிக்கும்படி செல்களுக்கு கட்டளை பிறப்பிக்கிறது. உடலால் 2 நாள் தேவைக்கு மேலான குளுகோசை சேமிக்க முடியாது. ஆனால் ஏராளமான அளவு கொழுப்பை உடலால் சேர்க்க இயலும். ஆனால் தினமும் இன்சுலின் பிறப்பிக்கும் இந்த உத்தரவுக்கு கட்டுபடும் நம் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைகிறது. இந்த சூழலில் இன்சுலினின் கட்டளையை ஏற்று சர்க்கரையை கொழுப்பாக்க உடல் மறுக்கிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

    உடலை சொல்பேச்சு கேட்க வைக்க நம் பேன்க்ரியாஸ் மேலும் அதிகமான அளவில் இன்சுலினை சுரக்கிறது. ஒரு கட்டத்தில் தன்னால் இயன்ற அளவு அதிகபட்ச இன்சுலினை பென்க்ரியாஸ் சுரக்கிறது. ஆனால் அந்த அளவு அதிக இன்சுலினயும் எதிர்க்கும் ஆற்ரலை உடல் பெறுகிறது. அதனால் நாம் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்கு ஆளாகிறோம்.

    உணவில் உள்ள சர்க்கரை அளவை குறைத்தால் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் மிக குறைந்துவிடும். டயபடிஸ் வரும் வாய்ப்பும் குறையும்.

    இது குறித்து நிகழ்த்தபட்ட ஆய்வு ஒன்று கூறுவதாவது

    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15047685

    ஆய்வு நிகழ்த்தபட்டது கனெக்டிகட் பல்கலைகழத்தில்

    குண்டாக ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் 13 பெண்கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டனர். இரு பிரிவுகளாக பிரிக்கபட்டனர். ஒரு பிரிவு நம் மருத்துவர்கள் பைந்துரைக்கும் குறைந்த கொழுப்பு உணவை உட்கொண்டது. இன்னொரு பிரிவு குறைந்த சர்க்கரைசத்து நிரம்பிய உணவை உட்கொண்டது. இரு குழுவினரும் ஒரு நாளைக்கு 500 காலரி மாத்திரமே உண்ண பணிக்கபட்டனர். 1 மாதம் முழுக்க இப்படி முக்கால் பட்டினி டயட்டை அவர்கள் மேற்கொண்டனர்.

    1 மாதம் கழித்து முடிவுகள் ஒப்பிடப்பட்டன.

    உயர்கொழுப்பு உணவை உண்ட பெண்களின் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவு குறைந்த கொழுப்பு சத்து நிரம்பிய உனவை உண்ட பெண்களைன் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவை விட குறைந்தது கண்டுபிடிக்கபட்டது. அதாவது உயர்கொழுப்பு, குறைந்த சர்க்கரை சத்து நிரம்பிய உணவு 1 மாதத்தில் அதை உண்ட பெண்களின் உடலின் இருந்த இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைத்தது. ஆக வெறும் ஒரே மாதத்தில் இந்த பெண்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை ஜீரணம் செய்ய அவர்களுக்கு குறைந்த இன்சுலினே போதும் என்ற நிலை உருவானது.
    இன்னும் பல ஆய்வுகளை எழுதலாம்.

    ஆனால் அவற்றின் முடிவுகள் பெரிதும் மாறுபடுவது இல்லை.

    சர்க்கரை சத்து உள்ள உணவுகள் கெடுதல். இயற்கையான கொழுப்பு நிரம்பிய உணவுகள் உடலுக்கு நன்மையளிப்பவை.

    இதை தான் பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஏன் இன்னும் டயபடிஸ் பேஷன்டுகளுக்கு சர்க்கரைசத்து நிரம்பிய உணவுகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றன?

    அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் உண்மையில் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை குணமாக்க ஆலோசனை கூறுகிறதா அல்லது அவர்களை நிரந்தரமாக சர்க்கரை நோயிலேயே இருக்க வைக்க ஆலோசனை கூறுகிறதா என்பது பலசமயம் பிடிபடுவது இல்லை.

    உதாரணமாக அந்த சங்கம் கூறுவது

    “உங்கள் உடல் சர்க்கரையை குளுகோசாக எளிதில் மாற்றிவிடும்

    உடலில் உள்ல குளுகோஸ் லெவெலை விரைவில் ஏற்றும் சக்தி படைத்தது கார்போஹைட்ரேட் நிரம்பிய உணவுதான்

    எத்தனைகெத்தனை அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுகிறீர்களோ அத்த்னைக்கு அத்தனை உங்கள் உடலில் சர்க்கரை லெவெல் ஏறும்

    நீங்கள் அதிகம் உண்னவேன்டிய உணவுகள் கார்போஹைட்ரேட் நிரம்பிய ரொட்டி, அரிசி, பாஸ்டா போன்ற உணவுகளே..”

    எதாவது புரிகிறதா?

    எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

    சர்க்கரை உண்பதால் சர்க்கரை நோய் வரும் என சொல்லிவிட்டு சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை நிரம்பிய உணவுகளை பரிந்துரைப்பது ஏன்?

    எனக்கு புரியவில்லை

    உங்களுக்கு புரிகிறதா?

    (அடுத்த பகுதியில் நிறைவுறும்..)


    செல்வன்
    www.holyox.blogspot.com

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 71

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     

    “முகம் இல் வரி”
    “காமம் மிக்க கழிபடர் கிளவி”
    (46)

    நாரையே! நாரையே!
    எம் கானலிடத்தே வந்துதான் அடையாதே!
    கரையில் அடித்து
    அதை உடைக்கின்ற அலைகளையுடைய
    கடல் பகுதி சார்ந்த
    எம் தலைவனுக்கு
    நீ எம் காதல் நோயை
    உரைக்கவே இல்லை.
    எனவே,
    இனி எம் கானலில் வந்துதான் அடையாதே!

    கட்டுரை
    மாதவி பண்ணுப் பெயர்த்துப் பாடத் தொடங்குதல்

    (47)

    அங்ஙனம் கோவலன் பாடியது போலவே
    பாடல்கள் பாடிமுடித்தனள் மாதவி;
    பின்னர் தன் மென்காந்தள் மென்விரல்களால்
    கைக்கிளையைச் சுருதியாகக் கொண்டு
    இன்னிசையுடைய செவ்வழிப்பாலை என்னும்
    இசையதனை எழுப்பி
    முறைப்படி பாடினள் மாதவி;
    அதற்குப் பின்பு
    வேறொரு பண்ணையும் பாடத் தொடங்கினள்.

    முகம் இல் வரி
    தலைவி மாலைபொழுது கண்டு கூறுதல்

    (48)

    மாலைப் பொழுதே!
    நெய்தல் நில மக்களுக்குரிய
    ‘விளரி’ எனும் இனிய பாலைப்பண்ணை
    யான் யாழ் மீட்டிப் பாடுங்கால்,
    இளி நரம்பைத் தடவுவதற்குப் பதிலாக
    கைக்கிளை எனும் நரம்பைத் தடவும் வண்ணம்
    எனக்குத்தான் மயக்கத்தைத் தந்துவிட்டாயே!
    இங்ஙனம் பகைநரம்பு
    எனை மீட்டவைக்க வல்ல நீ
    என் உயிரை மாய்க்கவும் வல்லாய்!
    ஆதலால்,
    என் உயிரினைக் கொண்டு சென்று வாழ்வாயாக!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html<http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html>

    படத்துக்கு நன்றி:
    http://blondesearch.ru/index.php?key=Raja_Ravi_varma_paintings&page=1

    Share
  • அலைமகள் அருள் தரும் அக்ஷய திருதியை

    பார்வதி இராமச்சந்திரன்

    நமது இதிகாச புராணங்களின்படி, சில முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், சில குறிப்பிட்ட திதி/நட்சத்திரம் கூடிய தினங்களில் நடந்தேறியுள்ளன. அத்தகைய தினங்களில், இறையருட் பேராற்றல் பூவுலகில் அதிக அளவில் நிலைபெறுகிறதென்று கண்டறிந்துள்ளனர் நம் முன்னோர்கள்.  (ஒரு வருடத்தில் வரும்) அந்த‌ தினங்களையே நாம் பண்டிகை தினங்களாகக் கொண்டாடுகின்றோம். வருடம் முழுவதும் சிறப்பாக இறைவழிபாடு  செய்ய இயலாவிட்டாலும், அந்த குறிப்பிட்ட தினங்களில் செய்வது மிக அதிக அளவில் நன்மைகளைப் பெற்றுத் தரும் என்பதாலேயே இவ்வாறு செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

    அத்தகையதொரு திருநாளே ‘அக்ஷய திருதியை’.  அக்ஷயம் என்றால் குறைவில்லாத என்று பொருள்.  சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை திதி, அக்ஷய திருதியை. அந்நாளில் நாம் செய்யும் அறங்கள், தொடங்கும் செயல்கள் பன்மடங்காகப் பெருகிப் பலனளிக்கும் என புராணங்கள் கூறுகின்றன. குசேலர், ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் செல்வச் செழிப்பை அடைந்ததும், குபேரன் மஹாலக்ஷ்மியின் அருளால் நவநிதியைப் பெற்றதும், சூரிய பகவான் யுதிஷ்டிரருக்கு அக்ஷய பாத்திரத்தை அருளியதும், அகில உலகுக்கும் அன்னம் அளிக்கும் அன்னபூரணி தேவி திருஅவதாரம் செய்தருளியதும் அக்ஷய திருதியை தினத்தில் தான்.

    நலங்களையும் வளங்களையும் பல்கிப் பெருகச் செய்யும் தினம் என்பதால் அன்றைய தினம் லக்ஷ்மி தேவியின் வழிபாட்டுக்கு உகந்த தினமாகக் கூறப்படுகிறது.

    பாற்கடலில் உதித்தவளாதலாலும், திருப்பாற்கடலை வாசஸ்தலமாகக் கொண்ட எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் திருமார்பில் உறைபவளாதலாலும் ‘அலைமகள்’ என்ற திருநாமம் லக்ஷ்மிதேவிக்கு.

    ‘திரு’ வாகிய செல்வத்திற்கு அதிபதியாதலால், ‘திருமகள்’ என்றும் போற்றப்படுகிறாள் ஸ்ரீலக்ஷ்மிதேவி. செல்வத்துக்கு அதிபதியாக குறிக்கப்படும் ஸ்ரீதேவியானவள், பொருட்செல்வத்துக்கு மாத்திரம் அதிபதியல்ல. அருட்செல்வத்துக்கும் அவளே தலைவி.

    நல்ல உடல் நலம், நிறை வாழ்வு, ஆத்மானுபூதி அனைத்தும் அவள் அருளும் பிரசாதங்களே.

    ஸ்ரீலக்ஷ்மி ஹ்ருதயத்தில்,

    ‘கத்யை நமோஸ்து வரஸத்கதி தாயிகாயை’

    என்று மஹாலக்ஷ்மி போற்றப்படுகின்றாள். ‘ஸத்கதி’ எனச் சிறப்பிக்கப்படும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்க வல்லவள் ஸ்ரீமஹாலக்ஷ்மியே.

    ஸ்ரீவைணவத்தில் ‘தாயார்’ என்றே  சிறப்பிக்கப்படுகின்றாள் திருமகள்.  ‘அகலகில்லேன்’ என்று திருமாலின் திருமார்பில் நிரந்தரமாக உறைபவளின் கருணைக்கு ஈடேது?!!. திருமகள், திருமாலின் திருமார்பில் உறைவதாகச் சொல்வதும் ஒரு உள்ளர்த்தம் காரணமாகத்தான். யாராவது நம்மிடம் கடுமையாக நடந்து கொண்டால் என்ன கேட்கிறோம்?. ‘நெஞ்சில் ஈவு, இரக்கம் இருக்கிறதா?’ என்று தானே!!. ஆம், இரக்கம், கருணை, அன்பு  அனைத்தும் இருக்கும் இடமாக‌,  நெஞ்சத்தைக் குறிப்பது மரபு.  ஆகவே இறைவனின் திருமார்பில் கருணையின் ஸ்வரூபமாக உறைகிறாள் அன்னை என்று சொல்கிறோம்.

    ‘ஸ்ரீ’ என்ற பதம், பொதுவாக, திருமகளையே குறிக்கும்.

    திருமகளைக் குறிக்கும் ‘ஸ்ரீ’ என்ற பதத்துக்கு ஆறு விதமான அர்த்தங்கள் உண்டு என்று அருமையாகச் சொல்வார் ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் அவர்கள்.

    1. நம்மிடம் இருக்கிற குற்றங்களை நிவர்த்திப்பவள்.

     

    2. பகவானுடைய அனுக்கிரஹத்தை நமக்குக் கிடைக்கப் பண்ணுகிறவள்.

     

    3. நாம் சொல்வதைக் கேட்கிறவள். அதாவது, நாம் நமது குறைகளையெல்லாம் சொன்னால் பொறுமையாகக் கேட்கிறாள். யாராவது கஷ்டத்தையே சொன்னால் கேட்டுக் கொண்டிருப்பார்களா?. ஆனால் நம் தாயார்  கருணையோடு நம் கஷ்டங்களையெல்லாம் காது கொடுத்துக் கேட்கிறாள்.  அதனால் “இதி ஸ்ரீ:”, ச்ருணோதி” என்று பெயர் அவளுக்கு.

     

    4. பகவானை, நம் கஷ்டங்களையெல்லாம்  கேட்கப் பண்ணுகிறவள். நாம் சொல்லும் குறைகளை எம்பெருமானிடத்திலே, ஏகாந்தத்திலே,  நம் குறைகளை எடுத்து சொல்கிறாள். அதிலும் நமது குறைகளை கொஞ்சம் அதிகப்படுத்திச் சொல்லி இன்னும் பகவானுக்கு நம்மீது விசேஷ காருண்யம் ஏற்படுவதற்கு தானே இரண்டு மூன்று சேர்த்துக்கொள்வாளாம். அதிலே நாம் சொன்னதைக்காட்டிலும் ரொம்ப அழகாக, அதையே பகவான் திருவுள்ளம் உகக்கும் படியாக, அவன் உடனே ஒடிவந்து உதவி விடும்படியாக அதை மாற்றி, பக்குவமாக சொல்வாளாம். இதனால் ச்ராவயதி இதி ஸ்ரீ: என்றழைக்கப்படுகிறாள்.

     

    5.பகவானான ஸ்ரீமந் நாராயணனை எப்போதும் ஆச்ரயிப்பவள்.

     

    6. நாம் எப்போதும் ஆச்ரயிக்கத் தகுந்தவளாக, நம்மிடத்தில் நெருக்கமாக, தாயாக இருந்து நம்மை ரக்ஷிப்பவள்.

     

    ‘ஸ்ரீ’ எனும் பதத்திற்கு ‘மிகச் சிறப்பு வாய்ந்த’ எனும்  அர்த்தமும் உண்டு.  ஸ்ரீநகரம், ஸ்ரீசக்ரம், ஸ்ரீமான், ஸ்ரீமதி என்றெல்லாம் குறிப்பிடுவது அதனால் தான். அதே நேரத்தில், ‘ஸ்ரீ’ எனும் பதத்திற்கு ‘விஷம்’ என்னும்  அர்த்தமும் உண்டு. பொருட்செல்வம் நன்முறையில் பெறப்பட்டு, பயன்படுத்தப்பட்டால்  அங்கு லக்ஷ்மி தேவி மகிழ்வடைந்து அருள் செய்கிறாள். இல்லையெனில் அந்தப் பொருளே அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது என்பதையே இது உணர்த்துகிறது.

    ஸ்ரீலக்ஷ்மி தேவி, நல்ல ஆடைகள், ஆபரணங்கள், பொன், வெள்ளி, தெளிந்த நீர், சுத்தமான இல்லம், நற்குணங்கள் நிரம்பிய பெண், நெல் முதலான தானிய வகைகள், இறை விக்ரகங்கள், நறுமணம் மிகுந்த பொருட்கள், மலர்கள், பால், சந்தனம், உப்பு, ஊக்கமுடன் செயல்புரிபவர், புலனடக்கம் உள்ளவர், நல்லியல்பு உடையவர், நல்ல இனிமையான வார்த்தைகள் பேசுபவர், துணிவுள்ளவர் இவர்கள் யாவரிடத்திலும் மிக விரும்பி உறைகிறாள்.

    பக்தர்கள் நிந்திக்கப்படும் இடம், பெரியோரை மதிக்காதவர்கள், அடக்கமற்றவர், வேலை அல்லது தொழில் செய்யாமல் பொழுதை வீணடிக்கும் சோம்பேறிகள், ஒழுக்கம் இல்லாதார், மிகுந்த கோபமுள்ளவர், எப்போதும் சோகமாகவே இருப்பவர்கள், ஊக்கமின்மையால் தான் நினைக்கும் அளவுக்குச் செயல்பட முடியாதவர், தன் வீட்டிற்கு வரும் விருந்தினரை நன்முறையில் உபசரிக்காதோர், பூமியை நகத்தால் கீறுபவர், துர்க்குணங்கள் நிரம்பியவர், அசுத்தமாக இருக்கும் நபர், அசுத்தமான இல்லம், ஈரக்கால்களுடன் படுத்து உறங்குபவர், வீணாக பிறரைப் பழிப்பவர், தேவையின்றி சிரிப்பவர், வார்த்தைகளையும் பொருட்களையும் விரயம் செய்வோர் இவர்களிடத்தில் திருமகள் வாசம் புரிவதில்லை. அவள் விரும்பாத நடத்தைகள் இவையெல்லாம்.

    மேற்கண்டவற்றில் இருந்து நாம்  அறிவது யாதெனில், நேர்மறை சக்தியை அதிகரிப்பவை அனைத்தும் திருமகள் உறையும் இடங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதே. நேர்மறை சக்தியே நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணம்  என்பது கண்கூடு.

    நல்ல விஷயங்கள் பேசுவது, சிந்திப்பது, செய்வது எல்லாம் நேர்மறை சக்தி (பாசிடிவ் எனர்ஜி) தரும் விஷயங்கள். அது போல், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், வீட்டிலுள்ள பொருள்களை சுத்தமாகப் பராமரித்தல், முறையாகப் பயன்படுத்துதல், பொருள்களை வீணாக்காமல் இருத்தல் ஆகியவை  நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் நன்மையளித்து,  நம்மைச் சுற்றி நேர்மறை சக்தியை அதிகரிக்கச் செய்யும் செயல்கள்.

    நாம் செய்யும் நன்மைகள் அனைத்தும் பல்கிப் பெருகும் தினம் அக்ஷய திருதியை. நல்லன அனைத்திற்கும் ஸ்ரீலக்ஷ்மி, அதிதேவதையாக அறியப்படுவதால், அன்றைய தினம் லக்ஷ்மிக்கு உகந்த செயல்களைச் செய்வது, நம்மைச் சுற்றிலும் நேர்மறை சக்தியை பெருகச் செய்யும் . இதனால் நம் வாழ்வு மகிழ்ச்சிப் பூங்காவாக மாறும்.

    இறை வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், இனிமையான வார்த்தைகளைப் பேசுதல், இயன்ற அளவு மற்றவருக்கு உதவுதல் இவையனைத்தும் திருமகள் அருளைப் பெற்றுத் தரும் சாதனங்களே.

    ஆனால்,   இன்று இது தங்கம் வாங்கச் சிறந்த நாளாக மட்டுமே அறியப்படுவது வருந்தத்தக்கது.  தங்கத்தில் லக்ஷ்மி தேவி உறைகிறாள் என்பதால் தங்கம் வாங்குவது செல்வத்தைப் பெருகச் செய்யும் என்று ஐதீகம்.  ஆனால் தங்கம்  வாங்கித்தான் ஆக வேண்டுமென்று கட்டாயமில்லை. இயன்றவர்கள் வாங்கலாம். உப்பு, நாம் உண்ணும் உணவிற்கு மிகத் தேவையான பொருள். உப்பிலும் திருமகள் உறைகிறாள். ஆகவே அன்றைய தினம் உப்பு வாங்குவதும் திருமகள் அருளை  நிலைக்கச் செய்யும்.

    அக்ஷய திருதியை அன்று, காலையிலோ அல்லது மாலையிலோ, லக்ஷ்மி தேவியின் படம் அல்லது ஐந்து முக‌ தீபத்தை, சந்தனம், குங்குமம், மலர்கள் முதலியவற்றால் அலங்கரித்து, இயன்ற துதிகளைச் சொல்லி, பூஜிக்கலாம். பால் பாயசம், தயிர் சாதம் முதலியவை நிவேதனம் செய்ய உகந்தவை. இயலாவிடில், பழங்கள் வைத்தும் நிவேதனம் செய்யலாம். கற்பூரம் காட்டி, அதன் ஜோதியில் ஆத்ம ஸ்வரூபமான ஸ்ரீதேவி தெரிவதாகப் பாவித்து, வணங்கி நமஸ்கரிக்க வேண்டும். பிரசாதங்களை கட்டாயம் விநியோகிக்க வேண்டும்.

    அன்னதானம் மிக விசேஷமாகச் சொல்லப்படுகிறது. குறைந்தது பதினோரு நபர்களுக்கேனும் அன்று அன்ன தானம் செய்ய வேண்டும். இயன்ற மற்ற விதமான தான தர்மங்களும் செய்யலாம். நீத்தார் கடன் என்று சொல்லப்படும் பித்ரு வழிபாடு செய்வதற்கும் அக்ஷய திருதியை உகந்த தினம். முக்கியமாக, அக்ஷய திருதியை தினத்தில் நல்ல இனிமையான வார்த்தைகளைப் பேசுதல்,  நல்ல செயல்களைச் செய்தல்  ஆகியவற்றைச் செய்தால், அவை அக்ஷயமாக வளர்ந்து, நம் வாழ்வை மேன்மைப்படுத்திச் சிறப்பிக்கும் என்பது நிச்சயம். அக்ஷய திருதியை தினத்தில் அன்னையை வழிபட்டு, அவள் அருள் பெற்று உயர்வோம்!!

    Share
  • அம்மா

    சு.ரவி

    அம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு!
    பாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், ‘கண் பார்த்தால் கைசெய்யும்’ என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் கற்றுத்தேறும் ஆர்வமும்-

    ஓர் அபூர்வக் கலவை அம்மா!.

    பொருளாதார வசதி குறைவாய் இருந்த காலகட்டங்களிலும், எப்போதும் வீட்டுக்கு எத்தனை விருந்தினர் வந்தாலும், அத்தனை பேருக்கும் சுவையான உணவு இருக்கும். பண்டிகை நாட்களிலோ ‘குறைவொன்றும் இல்லை கோவிந்தா’ தான்! தீபாவளி என்றால் உள்ளாடை முதல்,கர்சீப் வரை எல்லாருக்கும் புதிதாக அடுக்கப்பட்டிருக்கும். 2 ஸ்வீட், 4 காரம், லேகியம் என்று அனைத்தும் வீட்டிலேயே தயாராகும்.

    உழைப்புக்கு அஞ்சாத அம்மா!

    தையல் கலையில் தேர்ச்சிபெற்று, மயிலையில் ஒரு மாதர் சங்கக் கூட்டுறவு அமைப்பில் சேர்ந்து, ஸ்கூல் யூனிஃபர்ம் போன்ற ஆர்டர் எடுத்து, வீட்டில் தைத்துக் கொடுத்து அந்த சிறு வருமானத்தையும் வீட்டுப் பொருளாதாரத்திற்கு முட்டுக் கொடுத்து-

    தன் நேரத்தை வீணாக்காத அம்மா!

    அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும், எங்கள் நண்பர்களையும் தன் மக்களாகப் பாவித்து அன்புகாட்டும் மனம். ஒருமுறை பக்கத்து வீட்டுப் பெண்குழந்தை (வயது3) வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை மிட்டாயென்று எண்ணித் தின்றுவிட்டுத் துவண்டு தலைதொங்க, அத்தனை பேரும் செய்வதறியாது திகைத்த போது, போட்டது போட்டபடி விட்டு, குழந்தையை அள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி, அவள் உயிரை மீட்டு வந்த

    செயல்வீராங்கனை அம்மா!

    எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், அப்பாவோடு சேர்ந்து காலை அலுவல்களுக்கிடையே லலிதாஸஹஸ்ரநாமம் தினசரி பாராயணம் செய்யும் அம்மா!

    மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி மாத ப்ரம்மோத்ஸவத்தின் முக்கியத்திருவிழாக்களுக்கு (3ஆம் நாள் அதிகாரநந்தி, 5ஆம் இரவு வெள்ளிவிடை, 7ஆம் நாள் திருத்தேர், 8 ஆம் நாள் அறுபத்துமூவர், அன்றுமாலை வைரமுடி சேவை) வருடம் தவறாமல் அழைத்துச் செல்லும் அம்மா!

    வீட்டுப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவே எங்கள் வாழ்க்கைத்தரத்தை மெல்லமெல்ல முன்னேற்றி, ஒரு சொந்தவீடு என்ற கனவைத் திட்டமிட்டு நனவாக்கிய அம்மா!

    1967ஆம் ஆண்டு, எனக்குப் பொறியியல் படிப்புக்காகக் கோவையில் கிடைத்த உத்தரவை, ஒரு குடும்ப நண்பருடைய உதவியுடன் தொழில்நுட்பப் படிப்பின் இயக்குனரைச் சந்தித்து கிண்டி கல்லூரிக்கு மாற்றல் வாங்கித் தந்த அம்மா!

    1973 ஆம் வருடம், பிள்ளைகள் நாங்கள் வாழ்க்கையில் காலூன்றாத நிலையில் அப்பா திடீரென்று காலமானபோது, எங்கள் வாழ்க்கைப் படகு தத்தளிக்காமல் தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு எங்களைக் கரை சேர்த்த அம்மா!

    தனக்குக் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தொகையை, சேமித்து வைத்து அதைக் கண்ணும் கருத்துமாகத் துல்லியமாகக் கணக்கிட்டுத் தன்பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும், அவ்வப்போது தவறாமல் பங்கீடு செய்யத் தவறாத அம்மா!

    தன்மக்கள் நலம் வேண்டி, தன் உடல் வருத்தி, உப்பில்லாத உணவும், உணவே இல்லாத நோன்புமாகத் தன் வாழ்வைத் தியாகவேள்வியாக வாழ்ந்த அம்மா!

    நான் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகித்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாட்களிலும், என் ஐமபது வயதில் அம்மையின் வெம்மையால் வீழ்ந்தபோதும், இரவு பகல் பாராமல் என்னை அருகிருந்து அகலாமல் காப்பாற்றிய அம்மா!

    கால்மூட்டுகள் தேய்ந்தபோதும், 75 வயதில் அதற்குப் பயிற்சி கொடுக்க, எக்ஸர்சைஸ் ஸைக்கிள் வாங்கிப் பயிற்சி செய்த அம்மா! தன் கடைசிகாலங்கள் வரை தன் வேலையைத்தானே பார்த்துக் கொள்வதென்ற பிடிவாத அம்மா!

    நினைவு மழுங்கிய இறுதி நாட்களிலும் பயிற்சி தரவந்த ஃபிஸியோ தெரப்பிஸ்டிடம்
    “Don’t Touch me; self Help is the Best Help”என்று சொல்லி அசத்திய அம்மா!
    “என்னை என் அம்மா அழைக்கிறார்; ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்” என்று திடமாக எமனை எதிர்த்துப் போராடிய அம்மா!

    அம்மாவைப் பற்றிய நினைவுப் பதிவுகளுக்கு ஏது எல்லை!

    அம்மா,
    சிறுவனாக இருந்த நாட்களில், எங்களை வீட்டில் விட்டுவிட்டு, அப்பாவோடு மாலையில் வெளியில் செல்லும் நீங்கள் வீடுதிரும்ப நேரமானால், தவித்துத் தவித்து, வந்தவுடன் தாவிஅணைத்து ஆறுதல் பெறுவேனே, அம்மா-

    இன்றைக்கு….?

    சு.ரவி

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)

    பவள சங்கரி

    விட்டுக் கொடுத்தல் என்னும் வேதம்!

    அனைத்து சமரசமும் கொடுத்துப் பெறுவது என்ற அடிப்படையில் இயங்குவது, ஆனாலும் அடிப்படையில் எந்த கொடுக்கல், வாங்கலும் இருக்க முடியாது. எந்த சமரசமும் சரணடைவதையையே அடிப்படையாகக் கொண்டது. காரணம் இவையனைத்தும் கொடுப்பதில் மட்டுமே உள்ளதேயன்றி எடுப்பதில் அல்ல…
    மகாத்மா காந்தி

    சில உறவுகள் நாம் விரும்பி ஏற்பது, சில உறவுகள் நாம் பிறக்கும்போதே தானாகவே அமைவது. பல நேரங்களில் உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள் என்று தானாக அமைந்த உறவுகளின் மன வேறுபாடுகளைக்கூட அனுசரித்துப் போகும் நமக்கு, நாமாக விரும்பி ஏற்றுக் கொள்ளும் உறவுகள் மற்றும் நட்புகளின் சிறு தவறுகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை. ஒரு கை ஓசையாக இருக்கும் பிரச்சனைகள் வெகு விரைவிலேயே நீர்த்துப் போய்விடுவதும் கண்கூடு.

    வங்கியில் காசோலையைக் கொடுத்து ஞாபகக் குறியையும் பெற்றுக் கொண்டு காத்திருக்கும் வேளையில் இருக்கையின் மறு முனையில் எனக்குத் தெரிந்த பெண் ஒருவரைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஏனோ ஒரு வாட்டம் தெரிந்தது. இரண்டு வருடமாகக் காதலித்தவரை சமீபத்தில்தான் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மணந்து கொண்டவர். இருவரும் கணினித் துறையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அவர் அருகில் சென்று நலம் விசாரித்தேன். ‘ஏதோ இருக்கிறேன்’ என்பது போல பதில் வந்தது. கணவரும் மற்றும் குடும்பத்தாரும் நலமாக இருக்கிறார்களா என்று விசாரித்தேன். அதற்கும் ஒற்றை வரியில் பதில் வந்தது. ஏதோ உடல் நலக் கோளாறாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. காரணம் அவர் எப்பொழுதும் கலகலவென பேசிக்கொண்டிருப்பவர். அடுத்தடுத்து எங்கள் இருவரின் ஞாபகக் குறி (டோக்கன்) எண்ணையும் அறிவிக்கவும் இருவரும் ஒன்றும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். மரத்தடியில் நிறுத்தியிருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுக்கப் போனவரை நெருங்கி, எடுத்த எடுப்பில் ‘கணவரிடம் ஏதும் பிரச்சனையா’ என்றேன் மனம் கேட்காமல். இதை சற்றும் எதிர்பாராதவர், என் கண்களை உற்று நோக்கியவாரு ஒரு நிமிடம் யோசித்தவர், வண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் மரத்தடிக்கே வந்தார். பின்னாலேயே சென்ற நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன் அவர்கள் திருமணத்திற்கு நானும் என்னால் ஆன முயற்சியை செய்த உரிமையுடன்.

    ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. ஆனால் வீட்டில் நிம்மதி இல்லாதலால் ஆபிசில் வேலை சரியாக பார்க்க முடியவில்லை’.

    ‘என்ன அப்படிப் பிரச்சனைன்னு நான் தெரிந்து கொள்ளலாமா’ என்றேன்.

    சற்று தயங்கியவர், மளமளவென கொட்ட ஆரம்பித்துவிட்டார். “அவர் கொஞ்சமும் அனுசரித்துப் போக மாடேங்கிறார். என்னமோ அவர் மட்டும் வேலைக்குப் போவது போலவும், நான் வீட்டில் நிம்மதியாக இருப்பது போலவும், எதற்கெடுத்தாலும் என்னையே அதிகாரம் செய்கிறார். ஏதோ நான் அவரோட அம்மா மாதிரியும், இவருடைய தேவைகள் அனைத்தையும் நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். என்னைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை, வீட்டு வேலைகளை பங்கிட்டுச் செய்யத் தயங்குகிறார். நான் அவமானப்படுத்தப்படுவது போல உணருகிறேன். இதனாலேயே ஆபிசிலும் வேலையை சரியாகச் செய்ய முடியவில்லை” என்றார்.

    ‘அவ்வளவுதானா, இன்னும் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? உன்னை சரிவர கவனித்துக் கொள்வதில்லையா அவர்?’ என்றேன் நிதானமாக.

    உடனே சட்டென்று, ‘அப்படியெல்லாம் இல்லை. என்மேல் உயிரையே வைத்திருக்கிறார். நான் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் தவித்துப் போய்விடுவார்’ என்றார்.

    நானும், ‘நீ முன்னால் சொன்ன அனைத்தையும் அப்படியே அவர் கோணத்திலிருந்து, அவர் சொல்வதாக நினைத்துப் பாரேன், அவரிடம் மனம் விட்டுப் பேசினாயா?’ என்றேன்.

    சற்று நேரம் அமைதியாக யோசித்தவர், ‘ஆமாம் அவரும் என்னை இப்படி நினைக்கலாமே.. ஆனால் ஒரு நாளும் இப்படியெல்லாம் அவர் என்னை திட்டுவதற்கு நினைத்துக்கூடப் பார்த்ததில்லை’ என்றவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். சட்டென கண்ணில் நீர் கலங்க ‘நான் தான் தவறு செய்துவிட்டேனோ. அவருடைய சுபாவம் அதுதான் என்பதைப் புரிந்து என் ஈகோவை கொஞ்சம் விட்டுக் கொடுத்து, அவரிடம் என் நிலையை மெல்ல மெல்லப் புரிய வைத்திருக்க வேண்டும். என் மேல் இத்தனை அன்பு வைத்திருப்பவர் என் சிரமத்தையும் புரிந்து கொள்வார். நான் எப்படி யோசிக்காமல் போனேன்’ என்று கூறியவாறு கண்களை துடைத்துக் கொண்டவரின் முகத்தில் தெளிவைக் காண முடிந்தது. விட்டுக் கொடுக்கும் அந்த மனோபாவம் வந்த மறு நொடியே அவர் மனத்திலிருந்த குழப்பம் நீங்கி, நிம்மதி பிறந்தது தெரிந்தது. கட்டாயம் இனி அவர் மன நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிற மாற்றம் அவருடைய வாழ்க்கையை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

    ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் ஒரு எல்லைக்கோடு அவசியம் தேவைப்படுகிறது. மனிதருக்கு மனிதர் அது வித்தியாசப்படலாம். அதனை உணர்ந்து அந்த எல்லையை மீறாமல் நடந்து கொள்வதே, குடும்பத்தில் நல்ல அமைதியான சூழலை ஏற்படுத்தக்கூடியது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் வாழ்க்கையில் அமைதி நிலைத்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. நாம் உண்மையாக அன்பு செலுத்துபவரிடம் அதிகக் கோபம் காட்டவோ அல்லது வெறுப்பை உமிழவோ இயலாது. கோபத்தினால் ஏற்படும் விவாதமும், விதண்டாவாதமும், அந்த அன்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும். நாம் அன்பு செலுத்துபவர் நம்மீது தேவையில்லாத கோபத்தை வெளிப்படுத்தும்போது, இடையில் ஒரு நொடி அவர் நம்மீது அன்பு மழை பொழிந்த அந்த இனிய தருணங்களை நினைவில் கொண்டுவந்தால் போதும். அந்த சூழலே நொடியில் மாறிவிடும். பின்பு மெல்ல அவர் கோபப்பட்டதன் சூழலைக் கேட்டறிந்து அதற்கான உபாயம் மூலம் நம்மால் முடிந்த அளவிற்கு அதனைத் தீர்க்கப் பார்க்கலாம்.  இந்த  இடத்தில் நமக்கு வேண்டியதெல்லாம் ‘நான்’ என்ற அந்த எண்ணம் மறைந்து நாம் என்ற உணர்வு மேலிடல்தான்.  இது அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். இந்த உணர்வே அவர்தம் கோபத்தையும், வேகத்தையும் குறைக்க முயலலாம். ஆக, நெருங்கிய உறவோ, நல்ல நட்போ எதுவாயினும் அடிப்படையான அந்த அன்பு பலப்பட வேண்டுமாயின் விட்டுக் கொடுத்தல் என்ற அந்த வேதத்தை கடைபிடிப்பதே சிறந்த யுக்தியாகும்.

    படங்களுக்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 30

    இன்னம்பூரான்


    இன்றைய ஊடகங்களில் பலவற்றை ஊன்றி படித்தேன், ஒரு முட்டுக்கட்டையும் இன்னொரு முட்டுக்கட்டையும் மோதிக்கொள்வது போன்ற மாயத்தோற்றம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வை அவை விமர்சித்த அழகை (இது வஞ்சப்புகழ்ச்சி என்று சொல்லாமலே புரியும்!) கண்டு. ஊடகம் என்றாலே அவர்களுக்கு வாசகர்களை தட்டி எழுப்பவேண்டும், சுட்டி அளித்து, கட்டித் தழுவவேண்டும்; ஆருஷி மர்டர் கேஸ் என்றால், உடனடி ஆஜர். உச்ச நீதிமன்றம்/ஆடிட் மவராஜன் என்றால், சுவையான தகவல் நாடி, வபையான செய்திகளை கோட்டை விடவேண்டும். சர்குலேஷனும், சந்தாவும் கூடினால் போதும். இந்த குறையை நீக்குவது வெளி நாட்டு ஊடகங்கள் என்பது, இன்றைய எகானமிஸ்ட் இதழில் வெள்ளிடைமலை.

    கனம் கோர்ட்டார் தீர்ப்புகளையும், ஆடிட் ரிப்போர்ட்களையும் ஊடகங்கள் சரிவர புரிந்துகொள்வதில்லை; துலாக்கோல் ஆய்வு செய்து, அவற்றின் சாராம்சங்களை அளிப்பது இல்லை என்ற கவலை எனக்கு பல வருடங்களாக உண்டு. வால்டர் லிப்மென் என்ற பிரபல இதழியல் வல்லுனர் ஊடகங்கள், மக்களின் கருத்துக்களை உருவாக்கும் பணியை நடுவு நிலையிலிருந்து, பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றார். நம் ஊடகங்கள் அதை மறந்து விட்டன என்று தான் பல நாளிதழ்களில், இன்றைய நிகழ்வறிக்கை தோற்றுவிக்கிறது.

    அது என்ன? ஒரு பன்னாட்டு நிறுவனமும், இந்திய நிறுவனமொன்றும் சம்பந்தப்பட்ட பங்கு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசும், அதனுடைய பெட் ரோலிய கம்பெனியும் (ஓ.என்.ஜீ.சீ) எடுத்த முடிவின் மீது ஆடிட்டர் ஜெனெரல் குறை கண்டுள்ளார். அது தவறு. மத்திய அரசு செய்தது தான் சரி. தணிக்கத்துறை சொல்வது எல்லாம் வேதவாக்கு அன்று. தணிக்கை அறிக்கையை நாடாளுமன்றம் விவாதிக்கும். பொதுக்கணக்குக் கமிட்டி அலசும். பிறகு, அமைச்சரகம் சொல்வதை ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றம் தணிக்கை அறிக்கையை நிராகரிக்கக்கூடும் என்று கனம் உச்சநீதி மன்றத்தில் இன்று சொல்லிவிட்டார்கள். டும்! டும்! என்று ஹூங்காரத்துடன் தொடங்கி, ஆடிட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரு பொது நலவழக்கு இது, தணிக்கைத்துறையின் செயல்பாடுகளை கனம் கோர்ட்டார் விமரசிக்கவில்லை என்பதையெல்லாம் அடக்கி வாசித்தது, வால்டெர் லிப்மென் என்ற இதழியல் பிதாமகனின் அரிச்சுவடிக்கு முரண்.
    சரி. கனம் கோர்ட்டார் சொன்னது தான் என்ன என்று அறிய உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பைப் படித்தேன். அன்றாடம் தீர்ப்புகள் வெளி வந்து விடுவது ஒரு பெரிய ஆறுதல்.

    அருண் குமார் அகர்வால் என்ற விண்ணப்பதாரரின் பொது நலவழக்கு (ரிட் பெட்டிஷன் 69/2012) மீது இன்று (09 04 2013) நீதிபதிகள். திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் & தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில், தள்ளுபடி செய்யப்பட்டது. விண்ணப்பத்தில் தணிக்கை அறிக்கை சான்றாகக் கூறப்பட்டிருந்தது. 46 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில், முதல் 36 பக்கங்களில் தணிக்கை அறிக்கை பற்றிய பேச்சே இல்லை. அரசு எடுத்த முடிவுகள் பற்றி ய சாட்சியம், ஆவணங்கள், இரு தரப்பு வாதங்கள், அரசியல் நடைமுறைகள், பொருந்தும்/பொருந்தாத முன்னைய தீர்ப்புகள் பற்றி விவரமான, தெளிவான அலசல்கள் தான் இடம் பெற்றன. அடுத்த பத்து பக்கங்களில், ஆடிட்டர் ஜெனரல் பற்றி அரசியல் சாஸனம் கூறுவது, நாடாளு மன்றத்தின் மேலாண்மை, ஆடிட் வரலாறு, வல்லுனர்களில் கருத்து எல்லாவற்றையும் விலாவாரியாக அலசி, தொகுத்து அளித்து விட்டு, நான்கு வாக்கியங்களில், தணிக்கை அறிக்கையின் மீது நாடாளும் மன்றத்துக்கு உள்ள மேலாண்மையை கோர்ட்டார் ஸ்வீகரிக்கலாகாது என்பதை விளக்கும் போது, ஆடிட் கூற்றை வேதவாக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றாலும், இந்திய அரசியல் சாஸனம் அமைத்த தணிக்கைத்துறையின் அறிக்கையின் மதிப்பை குறைத்து எடை போடக்கூடாது; அதே சமயம் எதிர்வாதங்களில் நியாயம் இருந்தால் அதை புறக்கணிப்பதும் சரியல்ல என்று தீர்ப்பு கூறுகிறது. இதையே தான் தணிக்கைத்துறையும் ஒவ்வொரு அறிக்கையிலும் முன்னெச்சரிக்கையாக, பல வருடங்களாக தாக்கல் செய்து வருகிறது. இந்த வழக்கில் தணிக்கைத்துறை ஒரு கட்சிக்காரர் இல்லை. அதனால், இந்த விளக்கம் அளிக்க அவர்களுக்குத் தருணம் கிட்டவில்லை.

    இந்த தீர்ப்பில், மற்றும் பல வகைகளில் முக்கியமானது.
    அரசு தீர்மான கட்டங்கள் துல்லியமாக அலசப்பட்டுள்ளன;
    நடைமுறை சாத்தியங்கள் அழகாக விவாதிக்கப்பட்டுள்ளன;
    ஆடிட் வரலாறு நிரல் நிறையாக கொடுக்கப்பட்டுள்ளது;
    குறிப்பிடப்பட்ட பழைய தீர்வுகள் மிகவும் தேவையானவை;

    இன்றைய காலகட்டத்தில் -கர்நாடக தேர்தல் முடிவுகள், ஜேபிஸி வில்லங்கம், ஸீபீஐ வில்லங்கள் – இது மேலும் ஆய்வு செய்ய வேண்டிய ஆவணம்.
    வாசகர்களுக்கு ஆர்வம் இருக்கும் பக்ஷத்தில், ‘கனம் கோர்ட்டார் அவர்களே!’ என்ற தொடரில் அவற்றை பற்றி எழுதுவதாக உத்தேசம். பார்க்கலாம்.

    உசாத்துணை:

    http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=40390


    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-vcKSHYj-3lc/TfM1y3C05wI/AAAAAAAAAFg/A-HNd614QXk/s1600/SUPREME+COURT+AND+PRIVACY+RIGHTS.jpg


    Share
  • அந்தர் முக ஸமாராத்யா. பஹிர் முக ஸுதுர்லபா.

     

    -கவிநயா

     

    லலிதா சகஸ்ரநாமத்தில் வருகின்ற அன்னையின் நாமங்கள்.

    அந்தர் முகம் என்றால் உள் முகமாக. உள் நோக்கி.
    பஹிர் முகம் என்றால் வெளி முகமாக. வெளி நோக்கி.

    உள் நோக்கிய, ஒருமுகப் பட்ட மனதால் மட்டுமே அறியப்படுபவளாம், லலிதாம்பிகை.
    வெளிப்புறத்தில் எங்கு, எப்படி நோக்கினாலும் நமக்குச் சிக்க மாட்டாளாம்.

    அவளை நினைக்கும் போதும், பூஜிக்கும் போதும், ஒரு முகமாக அவளை நினைக்க வேண்டும்.  மனம் நிறைந்த அன்பு இருக்க வேண்டும். பக்தி இருக்க வேண்டும். அதல்லாமல், வெளி நோக்கிற்காக மட்டுமே, வெளிப் பகட்டிற்காக மட்டுமே அவளை பக்தி செய்வதாக பாவித்தால், அவளை அறிய முடியாது என்கிறது லலிதா சகஸ்ரநாமம். புற வெளிப்பாடுகள் அவளைப் பொறுத்த வரை அவசியம் இல்லாதவை. புறத்தில் எப்படி இருந்தாலும், மனதில் தூய்மையான பக்தி இருக்க வேண்டும். அதுவே முக்கியம்.

    சில பேர் எக்கச்சக்கமாக பணத்தைச் செலவழித்து ஆடம்பரமாக ஹோமங்கள் செய்து, தான தருமங்கள் செய்வார்கள். ஆனால் அவர்கள் மனதில், “எவ்வளவு செய்கிறோம், எவ்வளவு நன்றாகச் செய்கிறோம்” என்ற எண்ணம் வந்து விட்டால், செய்தது அத்தனையும் வியர்த்தமாகி விடும். அதே சமயம், ஒரு சிறிய மலரால் பூசித்தாலும், அன்புடனும், அடக்கத்துடனும் அன்னைக்கு அர்ப்பணித்தால் அதிலேயே அவளுக்கு ப்ரீதி அதிகம் ஏற்படும்.

    சிலர் தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்வார்கள். ஆனால் ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கண்களும் காதுகளும் மற்ற விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருக்கும்; வாய் பேசிக் கொண்டே இருக்கும். “கொஞ்சம் அந்த அடுப்பை அணைச்சுடுங்களேன்…”, என்றும், “கண்ணா, ஃபோன் அடிக்குது பாரு… எடுத்து, அப்புறம் கூப்பிடறேன்னு சொல்லிடேன்…” என்றும் ஸ்லோகத்தோடு சேர்த்தே சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐம்புலன்களையும் அடக்கி (அல்லது முயற்சியாவது செய்து), உள்ளத்தை அவளிடம் திருப்பினால்தானே அவளை அடைய முடியும்?

    மகாபாரதத்தில் பல உப கதைகள் உண்டு. அவற்றில் ஒன்று, ஒரு கீரிப் பிள்ளையின் கதை. நினைவிலிருந்து சொல்கிறேன், கதை ரொம்பச் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது; கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    மகாபாரதப் போர் முடிந்த பிறகு தருமன் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்கிறான். அந்தக் காலத்தில் ராஜாக்கள் யாகங்கள் செய்து, அவை முடியும் தருவாயில் அளவில்லாமல் தான தருமங்கள் செய்வார்கள். அப்படி யாகம் முடியும் சமயத்தில், ஒரு கீரிப் பிள்ளை அங்கு வருகிறது.

    அந்தக் கீரிப் பிள்ளை, பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. எப்படி என்றால், அதனுடைய ஒரு பக்க மேனி முழுவதும் தங்க மயமாக இருக்கிறது. மற்றொரு புறம் சாதாரணமாக, அதனுடைய நிறத்திலேயே இருக்கிறது. இந்த அதிசயக் கீரிப் பிள்ளையை எல்லோரும் அதிசயமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்தக் கீரிப்பிள்ளை, யாக சாலை முற்றிலும் சுற்றி,  தானம் கொடுக்கையில் சிந்தியிருக்கும் தானியங்களிலும், மாவுகளிலும், மற்ற பொருட்களிலும், தன் உடம்பு முழுக்க படுமாறு புரண்டு எழுந்து வருகிறது. பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டு, ஒரு பெரிஞ் சிரிப்பு சிரிக்கிறது.

    இத்தனை நேரம் இதனை வேடிக்கை பார்த்தவர்கள் என்னடா இது, இந்தக் கீரிப் பிள்ளை வித்தியாசமாக இருப்பதோடல்லாமல், மனிதர்களைப் போல சிரிக்க வேறு செய்கிறதே என்று அசந்து போய் விடுகிறார்கள்.

    “ஏய், கீரிப் பிள்ளையே! எங்கள் யாக சாலைக்கு வந்தது மட்டுமல்லாமல் ஏன் இப்படி ஏளனமாகச் சிரிக்க வேறு செய்கிறாய்? ஏன் உன் உடல் ஒரு பக்கம் மட்டும் தங்க மயமாக இருக்கிறது?” என்று கேட்கிறார்கள்.

    அதற்குப் பதிலாக அந்தக் கீரிப் பிள்ளை அனைவரது ஆச்சர்யத்துக்கும் நடுவில் மனிதர்களைப் போல் பேசவும் ஆரம்பிக்கிறது.

    “சிறிது காலம் முன்பு, நான் ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்த போது, ஒரு வீட்டில் நடந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள். அந்த வீட்டில், ஒரு பிராமணரும், அவர் மனைவியும், இளம் மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்கள். அவர்கள் மிகவும் ஏழைகள். தினமும் உஞ்சவிருத்தி செய்து, அதில் கிடைப்பதை அன்றன்றைக்கு சமைத்து சாப்பிட்டு வந்தார்கள். இப்படி இருக்கையில், ஒரு நாள், சோதனையாக அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. கொஞ்சம் சோளம் மட்டுமே கிடைத்தது. அந்தக் குடும்பத் தலைவியும் அந்த சோளத்தை மாவாகத் திரித்து சாப்பிடுவதற்குத் தயார் செய்தாள். அந்த சோள மாவை, ஆளுக்கொரு பகுதியாகப் பிரித்து கொண்டு சாப்பிட அமர்ந்தார்கள்.

    அந்த சமயத்தில் அவர்கள் வீட்டிற்கு ஒரு அதிதி வந்து சேர்ந்தார். நமக்கே இல்லை, இப்போது விருந்தாளி வேறா என்றெல்லாம் சங்கடப் படாமல், வந்தவரை மகிழ்வோடு வரவேற்றார்கள். அவர் மிகவும் பசியோடு வந்திருப்பதை அறிந்து, குடும்பத்தின் தலைவர் தன் பங்கு சோள மாவை அவருக்கு உண்பதற்கு அளித்தார். ஆனால் அதிதியின் பசிக்கு அது போதவில்லை. அதைக் கண்ட குடும்பத் தலைவி தன் பங்கையும் அவருக்கு அளித்தார். அப்படியும் அவர் பசி அடங்கவில்லை. அதன் பின் இளம் பிள்ளையும், பிறகு அவன் மனைவியும், இப்படி எல்லோருமே தங்கள் பங்கை அதிதிக்குக் கொடுத்து விட்டார்கள். அதன் பிறகே அவர் பசி ஒருவாறு தீர்ந்தது.

    தங்கள் உணவை அவருக்குத் தந்த போது அவர்களில் யாருமே வேண்டா வெறுப்பாகத் தரவில்லை. அனைவருமே, மிக்க மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும், மனமுவந்தும், தங்கள் பங்கை அவருக்குத் தந்தார்கள். அதன் பிறகு ஒரு தேவ விமானம் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றது. இதை நான் என் கண்களால் பார்த்தேன்”, என்ற கீரிப் பிள்ளை,

    “அப்போது அங்கு சிந்திக் கிடந்த சோள மாவில் நான் புரண்ட காரணத்தால் என் ஒரு பக்க உடம்பு முழுவதும் சுவர்ண மயமாகி விட்டது. அது முதல் நானும் இந்த உலகில் நடக்கும் எத்தனையோ யாகங்களுக்குச் சென்று பார்த்து விட்டேன், என் உடம்பின் மறுபாதியைச் சுவர்ணமயமாக்கும் தகுதி இது வரை எவர் செய்த தான தருமங்களுக்கும் இல்லை”, என்றதாம்!

    உள்ளார்ந்த ஈடுபாட்டோடு, பலன் எதிர்பாராது செய்யும் செயலே சிறந்த பலன் அளிக்கும்.

    ஸ்ரீ ராமானுஜரைப் பற்றியும் ஒரு செய்தி சொல்வார்கள். ஒரு முறை அவர் சீடர்களுடன் நடந்து போய்க் கொண்டிருந்தாராம். வழியில் சில சிறுவர்கள் ஒரு கல்லை எடுத்து அதை சுவாமியாகப் பாவித்து பூசைகள் செய்து, சிறிய மரக் குச்சிகளால் பல்லக்கு போல செய்து, அதில் அந்த சுவாமியை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தார்களாம். பிறகு பாவனையாகவே தீர்த்தம், பிரசாதம், எல்லாம் கொடுத்தார்களாம். அதனை ஸ்ரீ ராமானுஜரும் மிகுந்த பயபக்தியோடு பெற்றுக் கொண்டாராம். அவரோடு இருந்த சீடர்கள், “இந்தப் பிள்ளைகள் விளையாட்டுக்குச் செய்வதை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களே?” என்று கேட்டார்களாம். “அவர்கள் விளையாட்டாகச் செய்தாலும், அவர்கள் பாவனையில் உள்ளார்ந்த அன்பும் பக்தியும் இருக்கிறது. அதனால்தான் ஏற்றுக் கொண்டேன்”, என்று பதிலளித்தாராம்.

    இதனையே வாக்தேவதைகளும் லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்கிறார்கள்.

    உள்ளன்போடு செய்யும் செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுவே இறைவனை மகிழ்விக்கும். இதற்கு உதாரணமாகப் பலப்பல அடியார்களின் சரித்திரங்கள் இருக்கின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், சபரித் தாயார், இப்படி எத்தனையெத்தனையோ.

    அன்பே உருவான அன்னையை உள்ளார்ந்த அன்போடு உள்ளத்துள்ளே வைத்து வழிபட்டு, அவள் அருளைப் பெறுவோம்.
    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

     

    படத்துக்கு நன்றி: http://mahasakthipeetam.wordpress.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/

     

    Share
  • ஏன் முதல் ஏடு வரை…

     

    மாதவன் இளங்கோ

     

    சிறிது குழப்பமான தலைப்புதான்.

    என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே!

    ஓரிரு நாட்களுக்கு முன்பு எனது பெல்கிய நண்பருக்கு ‘கிப்ளிங் முறை’ (Kipling Method) பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன்.

    அது என்ன ‘கிப்ளிங் முறை’ என்று உங்கள் புருவங்கள் சுருங்குவது தெரிகிறது.

    Rudyard Kipling – எனது ஆதர்ச கவிஞர், எழுத்தாளர். தலைவலி வந்தால் மருந்தை உட்கொள்வது போல, எப்போதாவது மனவலி வந்தால் அவருடைய ‘IF’ என்கிற கவிதைதான் எனக்கு மருந்தே! என்னைப் பொறுத்தவரையில், IF – உலகின் தலைசிறந்த கவிதைகளில் ஒன்று.

    அவரது “The Elephant’s Child” கதையில் வரும் “I KEEP…“ என்கிற கீழ்வரும் கவிதைதான் கிப்ளிங் முறைக்கு அடிப்படையாக அமைந்தது.

    I KEEP six honest serving-men

     (They taught me all I knew);

    Their names are What and Why and When

     And How and Where and Who.

    நாம் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முயலும்போதும் அல்லது ஒரு திட்டத்தைத் (Project) தொடங்கும்போதும், ‘ஏன்?’, ‘என்ன?’, ‘எப்போது?’, எங்கே?’, ‘எப்படி?’ மற்றும் ‘யார்?’ என்கிற இந்த ஆறு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டும். இந்த ஆறு கேள்விகளுக்கு விடையளித்தாலே பாதித் தீர்வு கிடைத்ததற்குச் சமம், பாதித் திட்டத்தை முடித்ததற்குச் சமம்.

    இது ஒன்றும் நமக்குப் புதிய விஷயமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது பாட்டனார் ‘வினைசெயல்வகை’அதிகாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று விளக்கிவிட்டார்.

    ஆனால், என் மகனுக்கு என்னவோ இவர்கள் இரண்டு பேரையும் விட,   டாய்ச்சி ஓனோ-வைத்தான் நிறைய பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஓனோ, ஆறு கேள்வியெல்லாம் வேண்டாம், ஒரே ஒரு கேள்வி போதும் – ‘ஏன்?’. ஆனால், அதை விடாமல் ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’ என்று கேட்டுகொண்டே போக வேண்டும் என்றார்.

    இதைத்தான் செம்மையாக செய்து கொண்டிருக்கிறான் என் மகன் – ஒனோவை பற்றியெல்லாம் தெரியாமலேயே! நேற்று முழுவதும் ‘ஏன்? ஏன்? ஏன்?’ என்று அவன் கேட்ட கேள்விகளை எண்ணியிருந்தால் நிச்சயமாக எண்ணிக்கை ஐநூற்றைத் தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

    “ஏன் அலுவலகத்திற்குப் போகிறீர்கள்?” என்பதில் தொடங்கி “ஏன் பாட்டு பாடுகிறீர்கள்?” என்பதில் முடியும் (முடியாது.. நீளும்!). ஏதோ நான் அலுவலகத்துக்குச் செல்வதே பாட்டு பாடுவதற்காகத்தான் என்று தோன்றுமளவிற்கு எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ முடியும் அந்தக் குழந்தையின் கேள்விகள்.

    சிறிது சிந்தித்துப் பார்த்தோமானால், இப்படி ஏன்-களைப் போட்டுக்கொண்டே செல்லும் போதுதான் ஒரு சிக்கலுக்கான அடிப்படைக் காரணத்தை தெரிந்துகொள்ள முடியும். அடிப்படைக் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் நம்மால் எந்தவொரு சிக்கலையும் தீர்க்கவே முடியாது.

    நான் அலுவலகத்தில் என் அணியினருக்கு அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம்: “அறிகுறிகள் எல்லாம் மூல காரணங்கள் அல்ல. அறிகுறிகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அறிகுறிகளே காரணங்கள் அல்ல. எனவே காரணங்களைத் தேடுங்கள்!”.

    ‘ஏன்-கள் மூல காரணங்களை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் சாதனங்கள்!’.

    சிறுவர்களுக்கு இருக்கும் இந்தக் ‘கேள்விகேட்டுப் பெறும் திறம்’, அவர்கள் வளரும் போது சிறிது சிறிதாகக் குறைந்து, பின்னர் முற்றிலும் அழிந்தே போய்விடுகிறது. இவற்றிற்கான காரணங்களை சற்று அலசுவோம்.

    • குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கச் சோம்பல்பட்டுக்கொண்டு , அவர்களை நன்றாகத் திட்டி, அதனைத் அவர்கள் தொடரவிடாவண்ணம் ஒருவித குற்ற உணர்ச்சியையை அவர்களுக்குள் ஏற்படுத்தி விடுகிறோம்.
    • இன்னும் சொல்லப்போனால், அவர்கள் சிறிது வளர்ந்த பிறகு கேட்கும் நிறைய கேள்விகளுக்கு நமக்கு உண்மையாக பதிலே தெரிவதில்லை. ஏனெனில் நம்மில் பலர் அறிவை வளர்த்துக்கொள்ளப் படிப்பதில்லை – அந்தப் பழக்கமே இருப்பதில்லை.
    • ‘கற்றலின் கேட்டல் இனிது’ என்பதுபோல பிறர் சொல்வதைக் கேட்டோ, கவனித்தோ அறிவைப் பெறலாம். ஆனால் யார் பேசுவது? பெரும்பாலான நேரம் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து கொண்டு சினிமாவைப் பற்றியோ அல்லது வீடு, மனை விற்றல்-வாங்கல் தொடர்பாகத்தான் பேசுகிறோம்..

    அறிவியலும், இலக்கியமும், வரலாறும், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களைப் பற்றியுமா பேசுகிறோம்?

    “அதையெல்லாம் எதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும்? இணையம் இருக்கிறதே, விக்கிபீடியா இருக்கிறதே!” என்று ஒரு கேள்வி எழலாம்.

    Wikipedia is a great platform. However, It may not be complete. நானும் ஒரு விக்கிப்பீடியன் என்கிற முறையில், இதனைக் கூறமுடியும். நாங்கள் எங்கோ எப்போதோ, படித்தோ கேட்டோ தெரிந்துகொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்கிற உந்துதலால் விக்கிபீடியாவில் பதிவு செய்கிறோம். அவற்றை யார் வேண்டுமானாலும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் செம்மைப்படுத்த முடியும்.

    ஆனால், விக்கிபீடியாவைக்கூட இன்று எந்த அளவிற்கு உபயோகிக்கிறோம் என்று தெரியவில்லை.

    ஒரு காலகட்டத்தில் சினிமாவில் போதிக்கப்படுவது மட்டுமே அறிவாக இருந்தது மாறி, இப்போது FACEBOOK-இல் பகிர்ந்து கொள்ளப்படும் விஷயங்கள் மட்டுமே நம் அறிவை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது என்பது ஒரு Painful reality!

    இவையனைத்துமே ‘நுனிப்புல் மேய்வது’ போலத்தான். நாம் பார்க்கும் விஷயங்களைப் பற்றிய நுண்ணறிவை வளர்த்துக்கொள்ள இவை சிறிதும் உதவாது.

    வேறு என்னதான் வழி?

    ஏடுகளை வாங்கிப் படிக்கலாம்.

    ஆயிரம்தான் விஷயங்கள் இணையதளத்தில் பொதிந்து கிடந்தாலும், புத்தகத்தை கையில் எடுத்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசிப்பது போல் வராது.

    கடந்தமுறை இந்தியாவிற்கு வந்தபோது நண்பர்களைச் சந்திக்கக்கூட  நேரமே போதவில்லை. ஆனால், Landmark-ற்கு இருமுறையும், Higgin Bothams-ற்கு ஒருமுறையும் சென்றேன்.

    எனக்கு இதுபோன்ற புத்தகக்கடைகள் – மது அருந்துபவர்களுக்கு TASMAC போன்றது. இதைவிட மோசமான உவமை இருக்கமுடியாது என்று உங்களுக்குத் தோணலாம். இதைக்கூறிய உவமைக்கவிஞர் வேறு யாருமல்ல – என் மனையாளே தான்.

    இதற்கான காரணத்தைச் சொன்னால், அவருடைய இந்த உவமை உங்களுக்குச் சரியெனப் படலாம். புத்தகக் கடைகளைக் கண்டாலே என் கைகள் பரபரவென்றும், கால்கள் நடுநடுங்கவும்  ஆரம்பித்துவிடும். உள்ளே சென்றுவிட்டு வந்தால் CARD நன்றாகவே தேய்ந்து போயிருக்கும்.

    இந்தமுறை நான் வாங்கிய புத்தகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

    1. பாற்கடல் – லா.ச.ராமாமிருதம் (சந்தியா பதிப்பகம்)

    2. புத்ர – லா.ச.ராமாமிருதம் (சந்தியா பதிப்பகம்)

    3. நடந்தாய்; வாழி, காவேரி! – தி.ஜானகி ராமன் – சிட்டி (காலச்சுவடு பதிப்பகம்)

    4. வாழும் கணங்கள் – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    5. பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    6. நானும் என் எழுத்தும் – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    7. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)

    8. நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    9. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    10. வாசக பர்வம்  – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    11. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (உயிர்மை பதிப்பகம்)

    12. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (விசா பதிப்பகம்)

    13. கண்ணீரில்லாமல் – சுஜாதா – (உயிர்மை பதிப்பகம்)

    14. இன்னும் சில சிந்தனைகள் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    15. எழுத்தும் வாழ்க்கையும் – சுஜாதா – (உயிர்மை பதிப்பகம்)

    16. தமிழ் அன்றும் இன்றும் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    17. சுஜாதாவின் நாடகங்கள் – முழுத்தொகுப்பு (உயிர்மை பதிப்பகம்)

    18. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    19. டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன – மனுஷ்யபுத்திரன்  (உயிர்மை பதிப்பகம்)

    20. பூமித்தாயே – கோ.நம்மாழ்வார் (இயல்வாகை பதிப்பகம்)

    21. Famous Chinese Short Stories – Lin Yutang (Classic Library)

    22. Great Short Stories – Anton Checkov (Classic Library)

    23. By the River Piedra I sat down and Wept – Paulo Coelho (Harper Collins)

    24. Sudden flash of a thunder – OSHO (Wisdom Tree)

    இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே?

    இவற்றில் சில நான் ஏற்கனவே படித்தவை. இது தவிர, திரு.அண்ணாகண்ணன் அவர்கள் வேறு மூன்று புத்தகங்கள் அனுப்பி இருந்தார். விமானத்தில் 30 கிலோ எடைக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் புத்தகங்களே கிட்டத்தட்ட இருபது கிலோ தேறும். என்ன செய்வது, இங்கெல்லாம் தமிழ் புத்தகங்களே கிடைப்பதில்லையே!

    ‘யாம் பெற்ற இன்பம் யாவரும் பெற’ வேண்டுமென்பதால் கூறுகிறேன்.  விரைவாய்ச் சென்று புத்தகங்களை வாங்குங்கள்! வாசியுங்கள்! UPSC, CAT, GRE, GMAT இவற்றிற்குத் தயாரிப்பது போல, ஏதோ ஒரு இலக்கிற்காக அல்லாமல், அனுபவத்திற்காக வாசியுங்கள். வாசித்தல் என்பது மனதிற்கினிய விஷயம்.

    ‘ஏன் என்பதில் தொடங்கி ஏடுகள் வரை’பேசிவிட்டோம்!

    வாசி!

    வல்லமைக்கு வா…SEE …!

    Share
  • சிவதனுசும் விஷ்ணுதனுசும்

    -ஓம் வெ.சுப்பிரமணியன்

    ஓம்
    ”செய்யும் தொழிலே தெய்வம்”-இது சான்றோர்கள் நமக்கு உரைத்துச் செனற நல்மொழி. அதாவது, நாம் எந்தத்தொழிலைச் செய்தாலும், அதைத் தெய்வம் அருளிச் செய்த வரப்பிரசாதம் அல்லது கலை என்று எண்ணிப் போற்றி வழிபடவேண்டும்.

    செய்யும் தொழில் அல்லது தொழிலுக்கு உதவிடும் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மீது நாம் கொள்ளவேண்டிய பக்தி குறித்து தெய்வப் புலவர் திருவள்ளுவர், “ நமக்கு மகிழ்ச்சியளித்து, வாழ்வாதாரம் என்ற இன்பத்தை நல்கிடும் தொழிலைச் செய்யும் போது துன்பங்கள் பல நேரிடலாம். அத்தருணத்தில், அத்துன்பங்களைக் கண்டு மனம் கலங்கிடாமல் தொழில் மீதான பக்தி, மற்றும் துணிவு இவைகளுடன் அத் தொழிலைச் செய்வோமானால், தானாகவே இன்பம் விளையும்.”

    துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை.

    மிதிலாபுரியில் திருமணம் முடித்து, தங்கள் மனைவியர்கள், தாய்மார்கள், தந்தை தசரதர், சுற்றம்- மற்றும் பரிவாரங்கள் இவர்களுடன் அயோத்தி நகரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் ராம லட்சுமண பரத சத்ருக்கன- சகோதரர்கள். வழியில் அவர்கள் முன் பரசுராமர் தோன்றுகிறார். க்ஷத்திரியர்கள் மீது மிகுந்த விரோதமுள்ளவர் பரசுராமர். பாரத தேசம் முழுவதும் ஆட்சி செய்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் வதம் செய்தவர் அவர். பரசுராமரைக் கண்டவுடன், அவரால் அரச குமாரர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என அஞ்சுகிறார் தசரதர். எனவே, நிலைமை மீறிப்போவதற்கு முன், பரசுராமருக்கு முன்சென்று நின்ற தசரதர், அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறார்.ஆனால், பரசுராமரோ,தசரதர் அளித்த மரியாதையைப் புறக்கணித்துவிட்டு ஆணவத்தோடு இவ்வாறு சவால் விடுகிறார்.

    “க்ஷத்திரிய குமாரா, முன்னரே சிறிது முறிந்து, பின்னர் இறறுப்போன (பழுதாகிப் போன), சிவனின் ஆயுதமான சிவதனுசுவை முறித்துவிட்டதனால் நீ வலிமையானவன் என்று எண்ண வேண்டாம். அது உன் வீரத்திற்கும் அழகல்ல. இதோ, என் கையில் உள்ள திருமாலின் வில்லை நீ வாங்கி, வளைத்து, நாணேற்று பார்க்கலாம்”

    “ஊனவில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால்
    “மலைகுவென் வல்லை ஆகின் வாங்குதி தனுவை என்றான்”

    -என பரசுராமர் ராமனுக்கு விடுத்த ஆணவச் சவாலை கம்பர் விளக்குகிறார்.

    பரசுராமனின் கூற்றைக் கேட்ட தசரதரோ நடுநடுங்குகிறார். ஆனால், ராமனோ, சிறிதும் அஞ்சாமல், எந்தவிதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல், பரசுராமரின் கையிலிருந்த வில்லை நிதானமாக வாங்கி, வணங்கி, பிறகு வளைத்து, நாணேற்றி அந்த வில்லில் அம்பு ஒன்றைப் பொருத்துகிறான். மேலும் பொருத்திய அம்புக்கு இலக்கு எது எனவும் பரசுராமரிடமே வினவுகிறான் ராமன். அதனால் வெட்கமடைந்த பரசுராமர், கர்வம் அழிந்து, தன் தவங்களின் மூலம் பெற்ற அனைத்து பலன்களையும் அந்த அம்புக்கு இலக்காகத் தாரை வார்த்துவிடுகிறார்.

    ஓம்
    ஜனகரிடம் சிவ தனுசு வந்த கதை.

    மிதிலையில் ராமன் முறித்த சிவதனுசுவின் கதை. மிதிலாபுரியில் ராமன் வளைத்து, நாணேற்றி முறித்த சிவ தனுசு, பரசு ராமர் கூறியது போல், முன்னரே சிறிது இற்றுப்போய் முறிந்திருந்ததா? அப்படியென்றால் அந்த முறிவும் பழுதும் எவ்வாறு ஏற்பட்டன? அதற்கான காரணம் என்ன? முறிவும் பழுதும் ஏற்பட்ட அந்த சிவதனுசு கவனியாமல் விடப்பட்டதா ? சீதையை மணம் புரியும் பொருட்டு, ஏற்கனவே சிறிது முறிந்து, பின்னர் பழுதாகிப் போன ஒரு வில்லை வளைத்து முறித்த ராமனின் செயல் ஜனகரை ஏமாற்றும் விதத்தில் அமையப் பெற்றதா? இத்தகைய சந்தேகக் கேள்விகளுக்கு அல்லவா இடம் கொடுத்துவிட்டன அந்தப் பரசுராமரின் ஆணவச் சவால்.

    பரசுராமர் கூறியதில் கால் பாகமே உண்மை. சிவதனுசுவின் முழுச் சரித்திரத்தை பரசுராமர் அறிந்திருக்கவில்லை. காரணம் அவர் பாரத தேசத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததுதான். அந்த நேரத்தில் பல நிகழ்வுகள் நடந்திருந்தன. மேலும், பல க்ஷத்திரியர்களைத் தன் கோடரியாலும்,திருமால் அளித்த அந்த வில்லாயுதத்தாலும் அவர் அழித்ததனால், அவருக்குத் தன் வசமுள்ள ஆயுதங்களே சிறப்பானதாகத் தெரிகின்றன. மட்டுமல்லாமல், ராமன் யார் என்றும் உணர்ந்து கொள்ளாததால் அவருடைய பேச்சிலும் ஆணவம் வெளிப்பட்டது.

    பரசுராமர் மறைமுகமாக மேல் கூறிய சந்தேகங்களுக்கும், கூடவே ஆயுத வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், ஆயுத வழிபாட்டால் கிடைக்கப் பெறும் நற்பலன்களையும், தவறும் பட்சத்தில் உண்டாகும் துன்பங்கள் குறித்தும் கம்பர் விரிவாக விளக்குகிறார்.

    முன்காலத்தில் விஸ்வகர்மாவினால் இரு மகோன்னத விற்கள் படைக்கப்பட்டன. அவை பிரகாசத்தில் சூரியனைப்போல ஜொலித்துக்கொண்டும், மேகம் போல் வளைந்தும் மேரு மலை போல் உறுதியாகவும், மானிடர்களின் கற்பனைக்கு எட்டாத்தாகவும், வேறு வில் ஆயுதங்களுடன் ஒப்பிடமுடியாததாகவும் இருந்தன.

    “ஒருகால் வருகதிர் ஆம் என ஒளி கால்வன உலையா,
    வருகார் தவழ் வட மேருவின் வலிசால்வன வையம்
    அருகா வினைபுரிவோன் உளன் அவனால் அமைவனதாம்,
    இருகார்முகம் உள யாவையும் ஏலாதன மேல் நாள்”

    அந்த இரண்டு விற்களில் ஒன்றை உமாபதியான சிவபெருமான் மனம் உகந்து ஏற்றுக்கொள்கிறார். மற்றொரு வில்லை, சக்கரதாரியும், உலகளந்த பெருமாளும் ஆன மஹாவிஷ்ணு முறையாக ஸ்வீகரித்துகொண்டார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இந்திராதி தேவர்கள், “இரு விற்களுமே வலிமை மிக்கவை. இதில் எந்த வில் அதிக வலிமை மிக்கதாக இருக்கக்கூடும்?” என ஐயங் கொள்கின்றனர். தங்கள் ஐயத்தைப் பிரம்மதேவனிடம் கூறி அதற்கு விடை கேட்கிறார்கள் இந்திராதி தேவர்கள்.

    “ஒன்றின உமையாள் கேள்வன் உவந்தனன்- மற்றை
    ஒன்றை உலகளந்த நேமி நெடியமால்- நெறியின் கொண்டான்
    என்று இது உணர்ந்த விண்ணோர்- இரண்டிலும் வலிமை எய்தும்
    வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அந்நாள்”

    இங்கே ஒரு விஷயத்தைக் கூறியே ஆகவேண்டும். இந்திராதி தேவர்களுக்குத் ’தாங்கள் தேவர்கள்’ என்ற இறுமாப்பு எப்பொழுதும் இருப்பதுண்டு. அதன் விளைவாய் அவர்கள் வீண் சந்தேகங்களைக் கிளப்பி விடுவார்கள். பிறரைச் சங்கடப்படுத்துவார்கள். பிற்பாடு அந்த இறுமாப்பால் தாங்களும் துன்பமடைவார்கள். சந்தேகம் என்பது ஒரு மன நோய். புலன்களைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த சந்தேக நோய் ஏற்படுவது திண்ணம். எனவேதான் வள்ளுவர் பெருமான் இந்திரனைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஐந்து புலஙளால் உண்டாகும் உணர்ச்சிகளை நாம் முளையிலேயேக் கிள்ளி எறிந்துவிடவேண்டும். இல்லையென்றால், வேறு ஒருவர் வந்து தன்னுடைய வலிமையால் அவற்றை நம்மிடமிருந்து அழித்து விடுவார். அதற்குச் சான்று தேவர்களின் தலைவன் இந்திரன்”- என்று கூறுகிறார்.

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்பு
    வார்கோமன் இந்திரனே சாலுங்கரி

    தேவர்களின் இந்த வீண் சந்தேகத்தைச் செவிமடுத்த பிரமன், அந்த விற்களில் ஒன்றினாலேயே இறுமாப்புப் பிடித்த தேவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணம் கொள்கிறார். ஒரு நாள் அந்த விற்களைக் காரணமாக்கி, சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் இடையே ஒரு பெரிய போர் வruமாறு தூண்டிவிடுகிறார், பிரம்மன்.

    “சீரிது தேவர் தங்கள் சிந்தனை என்பது உன்ன
    வேரிஅம் கமலத்தோனும் இயைவது ஓர் வினயம் தன்னால்
    பாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை
    மூரி வெஞ்சிலைமேல் இட்டு மொய் அமர் மூட்டிவிட்டான்.”

    அரனும், ஹரியும் அவ்விற்களை நாணேற்றிக் கடும்போர் புரிந்தனர். அப்போரின் விளைவால் ஈரேழு உலகங்களும் கலங்கின. அஷ்ட திக்குகள் இடம் பெயர்ந்தன. அந்தப் போரின் ஒரு கட்டத்தில் சிவபெருமானின் வில் சற்று முறிந்தது. அதனால் சிவபெருமான் பெரும் கோபம் கொள்கிறார்.

    ”இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும்
    வெகுவர தயீசைகள் பேர வெஙகனல் பொங்க மேன்மேல்
    செருமலைகின்ற போழ்திரிபுரம் எரித்த தேவன்
    வரிசிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ”

    தன் வில் முறிந்ததனால் ஆக்ரோஷமான சிவபெருமான் தன் போர்த்திறனின் தீவிரத்தை அதிகரிக்கிறார். சிவனின் தீவிரமான போரைக் கண்டு நடுங்கிய தேவர்கள், போரின் நடுவே தலையிட்டுப் போரை நிறுத்துகிறார்கள்.

    சினம் தணிந்தனர் அரனும் மாலும். சிவபெருமான் தனது வில்லை இந்திரனுக்கும், திருமால் தனது வில்லை ரிசிகன் என்ற முனிவருக்கும் அருளிச் செய்துவிட்டு தம் தம் இடத்திற்கேகினர்.

    “மீட்டும் போர் தொடங்கும் வேலை விலக்க வல்லில்
    நீட்டினன் தேவர் கோன் கை நெற்றியில் கண்ணன் வெற்றி
    காட்டிய கரிய மாலும் கார்முகம் தன்னைப் பாரில்
    ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகர்க்கு ஈந்து போனான்.”

    திருமாலிடமிருந்து தான் பெற்ற வில்லை அதன் கட்டமைப்பு சீர்கெட்டுக் கலையாமல், அதை நித்தமும் பராமரித்துக் காத்துவந்த ரிசிக முனிவர், அதை ஜமதக்கினி முனிவருkகு வழங்க, பின்னர் ஜமதக்கினி அந்த வில்லை நன்றாகப் பராமரித்துத் தன் மகன் பரசுராமருக்கு அளிக்கிறார் இதைத்தான்,

    “இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்குத் தந்த
    வரிசிலை இது தொல்தின் வாங்குதி ஆயின் மைந்த

    என பரசுராமர் இராமனிடம் ஆணவத்துடன் கூறுகிறார்.

    சிவ பெருமானிடமிருந்துபெற்ற வில்லை அது சிறிது முறிந்திருந்ததனால், அலட்சியமாக ஆயுதக் கிடங்கில் கவனிப்பாரின்றி போட்டு விடுகிறான் இந்திரன். அதனால் சிவ தனுசு வேதனை அடைகிறது. மேலும் பழுதாகவும் துவங்குகிறது. தன் வில்லுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை சிவனின் காட்சிக்கும் தெரிகிறது. தன்னுடைய வில்லில் ஏற்பட்ட விரிசலையும், இந்திரனால் விளைந்த பழுதையும், வீரியக் குறைவையும் சீர் செய்யும் பொருட்டு அவ்வில்லை இந்திரனிடமிருந்து தன்னிடம் அழைத்துக் கொள்கிறார் சிவபெருமான்.

    அவ்வாறு திரும்ப சிவபெருமானிடம் செல்லும் போது, அந்த சிவதனுசு இந்திரனைப் பார்த்து,” சிவனின் ஆயுதம் என்றும் கருதாமல், என்னை நீ கைவிட்டதற்கு தண்டனையாக தக்க தருணம் வரும்போது நான் உன்னைத் தண்டிப்பேன்” எனச் சாபம் அளித்துவிட்டு சிவபெருமானைச் சென்றடைகிறது. தன்னிடம் வந்து சேர்ந்த அந்த வில்லைச் சரி செய்து அதற்கு மீண்டும் வீரியம் அளிக்கிறர் அரன்.

    இந்திராதி தேவர்களுக்கு சிவ தனுசு கொடுத்த சாபம் நிறைவேறும் தருணம் வருகிறது. சிவபெருமானையும், அரனின் மனைவியும், தன் மகளுமான தாட்சாயிணியையும் அவமானம் செய்து அவமரியாதை செய்யும் பொருட்டு, அவர்களுக்கு அழைப்பு அனுப்பாமல், யாகம் ஒன்றைச் செய்கிறான் தட்சப் பிரஜாபதி. அந்த யாகத்தில் இந்திராதி தேவர்கள், வேத விற்பன்னர்கள் இன்னும் பலர் கலந்து கொள்கிறார்கள். சிவ பெருமானின் பேச்சினையும் மீறி தட்சன் நடத்தும் யாக சாலைக்குச் சென்ற தாட்சாயிணி, தட்சனால் இகழப்படுகிறாள். இதனால் சினமுற்ற அரன் தன்னுடைய சிவ தனுசுவை எடுத்துக் கொண்டு யாக சாலைக்கு விரைகிறார். அங்கு, தட்சன் நடத்தும் வேள்வியில் பங்கெடுத்த இந்திராதி தேவர்களின் பற்களையும், கரங்களையும் வில்லால் உடைத்தும், அறுத்தும் தள்ளுகிறார் சிவபெருமான். அதனால் அஞ்சிய தேவர்கள் மறைவிடத்தல் ஒளிந்து கொள்கிறார்கள். அதனால் அவர்கள் உயிர் தப்புகிறார்கள். பிறகு தட்சனின் வேள்வியை அழித்து சினம் தணிந்த அரன், தேவர்களை மன்னித்து, தன்னுடைய சிவ தனுசை, ஜனகனின் முன்னோரான தேவநாதன் என்னும் மன்னனுக்கு அளித்துவிட்டு கயிலாயத்தை அடைகிறார்.

    “இமையவில் வாங்கிய ஈசன் பங்கு உறை
    உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய
    கமை அறு சினத் தணி. கார்முகம் கொளா,
    சமை உறு தக்கனார் வேள்வி சாரவே”

    “உக்கன பல்லோடு கரங்கள் வீழ்ந்தன,
    புக்கனர் வானவர் புகாத சூழல்கள்,
    தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின
    முக்கண் எண் தோளவன் முனிவு மாறினான்.”

    “தாளுடை வரிசிலை சம்பு உம்பர்தம்,
    நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இக்,
    கோளுடை விடை அனா குலத்துள் தோன்றிய,
    வாளுடை உழவன் ஓர்மன்னன் பால் வைத்தான்.”

    அரனிடமிருந்து தான் பெற்ற அந்தக் கட்டமைப்புக் கலையாத வில்லை தேவ நாதன் நன்றாகப் பராமரித்து, தன் சந்ததியர்களிடம் கொடுக்க, முடிவில் அந்த சிவ தனுசு ஜனகரிடம் வந்து சேருகிறது. சான்றோர்கள் உரைத்த, “மறவாமை என்னும் கருவி கொண்டு தொழில்களைப் போற்றினால், , செய்வதற்கு அரியவை என்னும் செயல்கள் எதுவுமே இல்லை என்ற நல்மொழியைப் பின்பற்றி ஜனகரும் அந்த சிவ தனுசை சிறப்பாகப் பேணிக் காக்கிறார்.

    சிவனின் ஆயுதமான அந்த சிவதனுசை மிக்க மரியாதையுடன், பூஜைகள் செய்து சிறப்பாக கவனித்ததின் பலனாக, தேவநாதன், ‘ஜீவன்முக்தர்’ என அறியப்படும், ஜனகரை வாரிசாக அடைகிறார்.. ஜனகரோ, திருமகளின் அவதாரமான சீதையை மகளாகவும், திருமாலின் அவதாரமான இராமனை மருமகனாகவும் அடையும் பேற்றைப் பெறுகிறார். மாறாக, அந்த சிவ தனுசுவை உதாசீனம் செய்ததின் விளைவாக, தேவர்கள் அந்த சிவதனுசினாலேயே தக்க தண்டனை அடைகிறார்கள்.

    ….நன்றி:-பெங்களூரு எஸ். கிருஷ்ணமூர்தி- தெய்வதரிசனம் இதழ்.
    ஓம்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(56)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய மடல் மூலம் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    புரியாத பல புதிர்கள், புதிதான பல வினாக்கள் புலர்ந்து மனதில் அபல அசைவுகளை நிகழ்த்துவதுண்டு.

    நான் எனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது எனது காரில் உள்ள வானொலியில் நடந்த கருத்தாடலைச் செவிமடுத்தேன்.

    அதன் சாரம் என் உள்ளத்தில் பல விடையறா வினாக்களை விதைத்தன. நாம் இலகில் எந்த நாட்டில் வாழ்கிறோம் என்பது அல்ல எங்கு வாழ்ந்தாலும் எம் வாழ்வை எம்முறையில் வாழ்கிறோம் என்பதுவே முக்கியம்.

    குழந்தைகள் எந்த நாட்டிலும் சரி, எந்த சமூகத்திலும் சரி ஒரே மதிரியான உணர்வுகளுக்குள்ளாக்கப் படுகிறார்கள் .தமது குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்ளாத பெற்றோர் இருப்பது அபூர்வம்..

    ஒரு குழந்தையின் எதிர்காலத்தை சரியான வகையில் வழிநடத்துவதற்கு அந்தக் குழந்தைக்கான கல்வியறிவே முக்கியமானது. அக்கல்வியறுவைப் புகட்டுவதர்குக் காரணமான ஆசிரியர்கள் அக்குழந்தையின் எதிர்காலத்தை வகுப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

    அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் எத்தகைய மதிப்பைக் கொடுக்கிறார்கள் ? இது ஒரு ஆழமான கேள்வியே !

    சரி, இனி நான் வானொலியில் செவிமடுத்த அந்தக் கருத்தாடலுக்கு வருவோம். அதன் சாரம் இதுதான்,

    இங்கிலாந்திலே உள்ள பாடசாலை மாணவை ஒருவரின் தாயர் அவருக்கு அம்மாணவியின் தலைமை ஆசிரியரால் கொடுத்தனுப்பப்பட்ட கடிதத்தைப் பற்றிக் கொண்ட ஆவேசத்தைப் பற்றியதுவே !

    சரி எதற்காக அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது என்று நினைக்கிறீர்கள்?

    அம்மாணவியின் வயது 11 வயது. இங்கிலாந்திலிலுள்ள பாடசாலைகளில் மாண்வர்களின் கல்வித் தராதரத்தை நிர்ணயிப்பதற்காக “கல்வித் தராதர நிர்ணயிப்புப் பரீட்சை (Scholastic Assessment Test – SAT) @ என்றழைக்கப்படும் பரீட்சை 11 வயது மாணவர்களுக்கும் நடத்தப்படும்.

    இப்ப்ரீட்சையில் அதி சித்தி எய்தும் மாணவர்களின் விகிதாசாரப்படி பாடசாலைகளும் வரிசைப் படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தப்படும்.

    இப்படியான பரீட்சையொன்றில் தோன்றப்போகும் 11 வயது மாணவியின் மூத்த சகோதரிக்காக ஒரு பிறந்தநாள் விழாவைத் தாயார் ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்ட நாள் அப்பரீட்சைக்கு முந்திய மாலையாகும்.

    சரி இதர்கும் அம்மாணவியின் தலைமை ஆசிரியருக்கும் என்ன சம்மந்தம் ? உங்கள் கேள்வி புரிகிறது.

    அவ்விழாவிற்கு இம்மாணவியின் சில நண்பர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தச் செய்தி அத் தலைமை ஆசிரியரின் காதுக்கு எட்டியதும் அவர் அம்மாணவியின் தாயாருக்கு ஒரு கடிதம் னௌப்பியிருக்கிறார்.

    “உங்களுடைய மகளின் பரீட்சைக்கு முந்திய மாலை இப்படியான ஒரு விழாவை ஏற்படு செய்து உங்கள் மகளையும் அவர்களது நண்பர்களையும் அழைத்திருப்பது வேதனைக்குரியது.இதைத் தாங்கள் ரத்துச் செய்ய வேண்டும்” எனும் வேண்டுகோளை இக்கடிதத்தின் வாயிலாக விடுத்திருந்தார்.

    இம்மாணவியின் தாயாருக்கோ பொத்துக் கொண்டு வந்து விட்டது கோபம்.

    என்னுடைய மகளின் பிறந்தநாள் வாழ்த்தை இஅரத்துச் செய்யச் சொல்லிக் கேட்பதற்கு இவர் யார்? என்னை என்ன கையாலாகாத தாயார் என்று எண்ணி விட்டாரா? என்று கோபம் கொண்டு ரகளை செய்திருக்கிறார்.

    இவ்விடயத்தில் அத் தலைமை ஆசிரியர் நடந்து கொண்ட முறையா ? அன்றி அத் தாயார் நடந்து கொண்ட முறை சரியா என்பதுவே அவ்வானோலியிக் கருத்தாடலின் கரு..

    குழந்தைகளின் மாணவப் பருவம் என்பது பொன்னான பருவமாகும். இப்பருவத்திலே இவர்களின் மனங்களிலே ஏற்படும் நிகழ்வுகளின் தாக்கம் அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானதாகி விடுகிறது.

    இப்பருவத்திலே பிள்ளைகள் தமது இல்லங்களிலே பெற்றோர்களுடன் கழிக்கும் நேரத்தோடு ஒப்பிடும் வகையில் அதிக நேரத்தை பாடசாலிகளில் மற்றைய மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் செலவிடுகிறார்கள்.

    ஆசிரியர்களும் இம்மாணவர்களின் நலன்களிலே பெற்றோர்களுக்கு இணையான வகையில் அக்கறை கொள்வது அவசியம்.

    அப்படிப் பார்க்கையில் இத் தலைமை ஆசிரியர் அம்மாணவியின் நலன் குறித்து அம்மாணவியின் தாயாருக்கு வலியுறுத்தியது எப்படித் தவறாக முடியும் என்பது ஒரு சாராருடைய கருத்து.

    தன் குழந்தையின் நலனில் ஒரு தாய்க்கு இருக்கக் கூடிய அக்கறையை விட ஒரு தலைமை ஆசிரியருக்கு அதிக அளவில் எப்படி அக்கறை இருக்க முடியும் ? தன்னுடைய பாடசாலை தர அட்டவணையில் மேலிடத்தைப் பெற வேண்டும் எனும் அக்கறையினால் அத்தாய்ய்ய்ய்யைக் கட்டுப்படுத்த முயல்கிறார் என்கிறார்கள் ஒரு சாரார்.

    சரி எது எபடியாக ஆவது இருந்து விட்டு போகட்டும்.

    தன்னுடைய பாடசாலை உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு அதிக அளவிலான மாணவர்கள் அதிக புள்ளிகள் எடுத்துச் சித்தியெய்த வேண்டும் என்று அத்தலைமையாசிரியர் அம்மாண்வியை அதிக புள்ளிகள் எடுக்கும் வகையில் தூண்டுவாராக இருந்தால் அத்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹு அம்மாணவிக்கும், அம்மாணவியின் தாயாருக்கும் நன்மையாகத் தானே முடியும் ?

    மாணவர்களுக்கு நாமளிக்ககூடிய செல்வங்களில் அதியுயர்வானது கல்விச் செல்வம் ஒன்றேதான். ஏனேனில் அதை யாராலும் எப்போதும் அவர்களிடமிருந்து பறித்து விட முடியாது .

    பெற்றோர்களும், ஆசிரியர்களும் இணைந்தால் தான் மாணவர்களின் வாழ்க்கை ஒளிமயமானதாகும். பெற்றோர்கள் ஆசிரியர்களை இடையூறாக நோக்குவதோ அன்றி ஆசிரியர்கள் பெற்றோர்களை இடையூறாக நோக்குவதோ ஒரு மாணவ பருவக் குழதைக்க்கு ஆரோக்கியமாக அமையாது.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • உலக சுழற்சியும், தமிழ் வளர்ந்த தன்மையும்

    எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம்
    தலைவர், சத்தியத்தின் சக்தி நிலைச் சங்கம், பவானி
    5வது உலக தமிழ் மாநாட்டில் ஆற்றிய உரை


    இன்று நாம் மொழி வளர்ந்த உண்மை அறிய பழங்கால கல்வெட்டுக்களையும், ஓலைச்சுவடிகளையும், புதைப்பொருள் நிலையிலிருந்தும், மொழி உருவான விதத்தையும் அதன் பழமையைக் கொண்டு வருடக் கணக்குகளையும், மாறி வந்த காலங்களின் நிலையிலிருந்து மொழி வடிவம் மாற்றம் கொண்டதை இன்று அறியக்கூடிய நிலையில் உள்ளோம்.

    தமிழ் மொழியும் பண்பாட்டு வாழ்க்கை வழித்தொடரும் எப்படி உருவானது? தமிழ் மொழி உருவான உண்மைத் தன்மை என்ன? இவ்வுலகில் இந்த இந்திய பூமியில் உருவான பலகோடி ஞானிகளும், சப்த ரிஷிகளும் இம் மொழி உருவாக செயல்பட்ட முறை எப்படி?

    ஆரம்பத்தில் இம் மொழி எப்படி எழுத்துருவம் கொண்டது? இன்றுள்ள இம் மனித உணர்வின் ஞானசக்தி, இயற்கை ஒலி அலையுடன் ஒளி அலைப்பெற்று ஜெபமெடுக்கும் முறை கொண்டால், இப் பூமி உருவான நிலையும், உயிரணுத் தோன்றி உருக்கொண்டு, ஒலியின் பாஷை அறிந்த நிலை யாவையுமே, இஜ் ஜீவ பிம்ப உடல் ஆத்ம சக்தியினால் ஒலியை ஒளியாக்கி, இன்றுள்ள வளர் தொடர் உண்மை நிலைகள் யாவையும் உணர முடியும். உணரும் நிலை எப்படி?

    இப்பூமியில், தமிழ்மொழி உச்சரிப்பு ஒலித்தன்மை ஏற்பட்டு பத்தாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்பூமிக்கு ஒலியில் சொல் வடிவம் தந்த முதல் மொழி, தமிழ்மொழிதான். இம்மொழித் தொடர் எப்படி உருவானது?

    பண்பாட்டு பழக்க வழக்கங்கள் எப்படி ஏற்பட்டது? என்றால் இப்பூமி தோன்றி, வளாந்து பல பிரளய மாற்றங்களுக்குப் பிறகு ஆரம்ப உயிரணு தோன்றி, தலை சிறுத்தும் வால் போன்ற உடல் அமைப்புக் கொண்ட, நீரில் மிதந்த உருவம் தோன்றி, பல அவதார மாற்றங்களுக்குப் பிறகு, பல உரு நிலை மாற்றம் கொண்டு, பலவில் உருவாகி உருவாகி, மோதுண்டு மோதுண்டு ஒலிக் கொண்டு ஒளியாகி, ஜீவபிம்ப உடலின் அங்க அவையங்களினால் செயலாற்றும் தன்மை கொண்ட பிறகு, பிரிதொரு மாற்றம் கொண்டு எடுத்த உடலில் கண் ஒளி பாய்ச்சி, ஒலி ஈர்க்கும் மாற்றத்திற்குப் பிறகு ஒலி பாய்ச்சி ஒலி கேட்கும் வளர்ப்பு நிலைக் கூடிய பிறகு, ஒலி வெளிப்படுத்தும் ஒலி ஆற்றல் மனிதனுக்கு கிடைத்தது.

    ஒலியின் வளர்ப்பு நிலையிலேயே, சொல் வடிவாற்றல் மனிதனுக்கு ஏற்பட்ட நிலையிலிருந்தே, எழுத்து வடிவம் உருக்கொள்ளும் காலத்திற்கு முன்னே, இப்பூமியில் உருவான மனிதனுக்கு சொல்லாற்றும் திறமை ஏற்பட்டவுடன். இப்பூமிக்கு வியாழன் மண்டலத்தில் பலக்கோடி ஆண்டுகளாய் வாழ்ந்த மனித ஞான வழித் தொடர் கொண்ட, வளர்ச்சியுற்ற வழித்தொடர் அலை சப்த ரிஷிகள் வியாழனில் வாழ்ந்து, உயர்ஞானம் கொண்டு, அவர்கள் வாழந்த எம் மண்டலத்திற்கும் சென்று வாழக்கூடிய நிலை பெற்றவர்கள் வியாழனில் மனிதன் வாழ முடியா நிலை ஏற்பட்டவுடன் இப்பூமியில் மனித கரு வளர்ந்தவுடன் ஒலி அலையின் ஒளிப் பாய்ச்சி, இப்பூமியில் பல மகான்கள் தோன்றி மொழி வடிவம் தோன்றுவதற்கு முதலிலேயே சொல்லாற்றலும், செயலாற்றலும்; மனித சக்திக்கு கூடிய நிலையில் அன்றைய மகான்களில் ஒளி அலையைப் பாய்ச்சி, மனிதனின் சொல்லாற்றலுக்கு வித்திட்டு, அச்சொல் தொடர் முதல் மொழியாய் அன்று தமிழ் மொழி தோன்றியது.

    இவ்வொலி அலைத் தொடர்பிலிருந்து எழுத்து வடிவம் பெற பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு பிறகு உருவாகிய தமிழ்மொழி எழுத்து வடிவம், இன்று எழுதப்படும் இந்நூற்றாண்டின் தமிழ் மொழி மரபு ஏழாவது மாற்றமாகும்.

    அன்று ஆண்ட அரசர்கள், அரசர்களின் செயலுக்கொப்ப இம்மொழியை மாற்றிவிட்டார்கள். மொழியின் தன்மை இதுவென்றால், தமிழரின் பண்பு முறை எப்படி வழிவந்தது? ஞான சக்தியை எடுத்த சக்தியும், வளர்ந்த ரிஷித் தன்மை கொண்டவர்களும் இவ் அலைத்தொடர் வழியில்தான் முதலில் உருப்பெற்றது. இராமாயண, மகாபாரத காவியங்களில் அன்று எழுதிய முனிவர்களினால் காவியக் கதையில் விழித்துள்ள யாவையுமே மனித சக்தியினால் பெறக்கூடிய சக்தி முறையை கதாப்பாத்திர நாமங்களில் அந்தந்த குண நிலையில் வடிவமைத்து எழுதிவிட்டார்கள்.

    தமிழ் மொழியில் எழுதப்பட்ட பலகோடி உண்மைத் தன்மைகள் இம்மனித சக்தியினால் பெறவல்ல ஆற்றல் நிலையை அன்றே உணர்த்தி, இப்பிம்ப உடலை அழியாத் தன்மை கொள்ளக்கூடிய நிலைக்கு, பல மூலிகைகளை எழுத்தில் பதியச் செய்தும், இம் மனித பிம்பத்திலிருந்து செயலாற்றக்கூடிய சக்தி அனைத்தையும், ஞானத்தால் ஒலியுடன், இவ் ஒளி பாய்ச்சி எந்த நிலையையும் அறியவல்ல ஆற்றல் கொண்ட, படைப்பின் படைப்பையே படைக்கவல்ல, தெய்வ சக்தி கொண்ட நிலைக்கு, மனித சக்திக்கு செயலாற்றும் தன்மை எல்லாவற்றையும் ஏட்டு உருவிலும், காவிய வழித் தொடர்களிலும், மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்திச் சென்றார்கள் அச் சப்த ரிஷிகள். இன்று மற்ற இடங்களைக் காட்டிலும் இப் பூமியில், இந்திய கண்டத்தில் சுழற்சி முறை வாழ்க்கைத் தொடரில் தமிழ் குடும்ப வாழ்க்கையில் பக்தியும், பண்பும் கூடி வருவது பிறப்பில், குடும்ப வழித்தொடரில், வழி வழியாய் வந்த வழித்தொடர் வாழ்க்கையில் இருந்து மட்டும் வரவில்லை. இப்பூமியில் ஞானம் பெற வழிப்படுத்திய ஞானிகளின் அலைத் தொடர்பு சக்தி இன்றளவும் இப்பூமியின் வெட்கையிலும், காற்று மண்டல சுழற்சியிலும், தமிழ் கடவுள் முருகன் என்றுணர்த்திய தெய்வ வழிபாட்டு முறையிலும் சுழன்று கொண்டுள்ளதினால், இப்பிம்ப உடலில் ஆரம்ப கலவை எத்தொடரில் இவ் உயிரணுத் தோன்றி உயிராத்மா உருப்பெற்றதோ, அவ் அமிலத் தொடர் கொண்ட ஜீவ பிம்பங்களுடன் வாழ்பவர்களும், பிம்பமற்ற ஆவி உலக ஆத்மாக்களும் அவ்வமிலத் தொடர் கொண்டு உருப்பெற்று, உருவாகி வளர்ந்த ஒவ்வொரு நொடிக்கும் எவ் அமிலக் கூட்டின் மேல் மோதுண்டு காற்று சுவாசம் வெளிப்படுகின்றதோ, அவ் அலைத் தொடர் சக்தி மாறி மாறி உருவாகும் உருவகங்களின் மாற்றங்கள் பல கொண்டாலும் தன்மையின் குணம் வழிப்பெற்றுக் கொண்டே உள்ளது.

    இப்பூமியில் மட்டும்தான் மனித இனம் உண்டா? மற்ற கோளங்களில் மனித இனங்கள் உள்ளனவா? என்ற வினா பலருக்கு உண்டு, இப்பூமியைச் சார்ந்த சூரியக் குடும்பத்தின் இந் நாற்பத்தி எட்டு மண்டலங்களிலும், இந் நாற்பத்தி எட்டு வளர்ந்த மண்டலங்கள் வளர்க்கும் சனிக்கோளத்தின் பன்னிரெண்டு நட்சத்திர மண்டலங்களிலும், ஆக இவ் அறுபது கோளத்திலும் இப் பூமியில் மட்டும்தான் மனித இனம் உண்டு. வியாழனில் இருந்து மனித கரு வித்து நம் பூமிக்கு வந்தது. அதன் வழித்தொடர் மொழி நம் தமிழ்மொழி. ஆனால் வளர்ந்த சக்தி கொண்ட சுழற்சி ஈர்ப்பு விகிதத்தன்மை கூடிய வியாழன் மண்டலத்தில் இன்று மனித கரு உரு நிலை இல்லை அதன் தொடர்ச்சி கருவும், சொல், மொழி, வடிவம் இப்பூமியில் இன்று வேர் ஊன்றி உள்ளது.

    இந் நாற்பத்தி எட்டு மண்டலங்களிலும் இல்லாதத் தன்மை கொண்ட மனித கரு இப் பூமியில்தான் உண்டு. இப்பூமியின் ஞானத்தில் இம் மனித பிம்ப செயலாற்றும் சக்தியை விஞ்ஞான ரூபத்தில் செலுத்தி விட்டான் மனிதன். விஞ்ஞானம் கொண்டு இப்பூமியின் கனி வளங்களை பல பக்குவங்களுக்கு பயன்படுத்துகின்றான். இப்பூமியில் பொக்கிஷ திரவங்களை இக்குறுகிய நூற்றாண்டில் எடுத்து பல செயல்களுக்கு உபயோகப்படுத்துகின்றான். சூரியனின் சக்தி கொண்டு ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும் சூரியன் எடுத்து வெளிக்கக்கி, நம் பூமி அதன் சுழற்சியில் சூரியனின் ஒளி அலை எடுத்து வளர்க்கும் உயர் காந்த மின் சக்தியினால் இப்பூமி சுழன்று ஓடி வளர்ந்த ஞான ஆத்மாக்கள் வளரும் வாழ்க்கையில் மனித சக்திக்கும், ஜீவசக்திகளுக்கும் உயிர் வாழ இன்றியமையா சக்தியான உயர் காந்த மின் அலையின் துடிப்பு சக்தியையே மின்சாரம் காண மனித விஞ்ஞானம் காண இயற்கை மின் காந்தத்தையே செயல்படுத்துகின்றது இன்று.

    பிற மண்டலங்களுக்குச் சென்று அங்குள்ள உண்மையறிய பலகோடி உலோக சக்திகளையும், திரவ சக்திகளையும், காந்த மின் அலையின் சக்தியையும், மனித ஞான சக்தியையும் விரையப்படுத்துகின்றனர். இம்மனித உடல் பிம்பத்தில் உயிர்; காந்த சக்தியைக் கொண்டு உயர காந்த மின் அலைத் தொடர்பை சூரியனின் அலைத் தொடருடன் இவ்வுணர்வின் எண்ணத்தைச் செலுத்தி நேராக எடுக்கும் சுவாசத்தினால், இப்பூமியின் ஈர்ப்பு பிடியில் சிக்கி, உண்டு, உறங்கிக்கழித்து உழன்றுள்ள வாழ்க்கையில் இருந்து இதே பிடிப்பில் ஜீவன் பிரிந்தாலும் இவ்ஈர்ப்பலையிலேயே பிறந்து இச்சுழற்சியில் சிக்குண்டுள்ள வாழ்க்கையில் இருந்தும் இஜ் ஜீவ பிம்ப உடலுக்குள்ளே நாமெடுக்கும் சுவாசத்தினால் வளர்த்துக் கொண்டோமானால், இம்மனித எண்ணத்தால் பெறவல்ல சக்தி ஞான வளர்ச்சி தொடர் உணர்வால் இப்பூமியில் மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் நாற்பத்தி எட்டு மண்டலங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மண்டலங்களின் தன்மையும், மற்றெல்லா மண்டலங்களின் தொடர்புகளையும், உருதோன்றி உரு வளரும் செயல் முறைகளையும், ஒலியாகவும் ஒளிக்காட்சிகளாகவும் இவ்வுணர்வின் எண்ணத் தொடர் அலையை எந்நிலைக்கெல்லாம் காண விரும்புகின்றோமோ, அவை அனைத்தையுமே இம் மனித ஞான சக்தியினால் மட்டும்தான் பெற முடியும்.

    விஞ்ஞானத்தில் வளரும் மனித ஆத்மா, எவ் விஞ்ஞானத் தொடர் அலையில் வளர்ந்து, விஞ்ஞானம் பெற்று செயல்புரிந்திருந்தாலும், அவனின் ஆத்ம பிம்பம் ஜீவன் பிரிந்த பிறகு, மீண்டும் இவ்ஈர்ப்பின் பிடியில்தான் சிக்குண்டு சுழல முடியுமே தவிர, உயர் ஞான சக்தி பூண்ட, தன் ஞானம் பெற்ற ஞானிகளின் ஜீவ பிம்ப சக்தி என்றுமே அழியா வண்ணம், தான் வளர்ந்த சக்தியைக் கொண்டு எம்மண்டலத்திலும் வாழக்கூடிய தன்மையும், இம்மண்டலத்தில் மனித உரு ஞானம் மாறினாலும் இஞ்ஞானத்தால் பெற்ற சக்தியைக் கொண்டு ஞான கரு வித்து மனிதனை உருவாக்கும் சக்தி இம் மனித பிம்ப ஆத்ம எண்ண ஞானத்திற்கு உண்டு.

    இந்நாற்பத்தி எட்டு மண்டலங்களில், இச்சூரிய குடும்பத்தில், எப்படி இப்பூமியில் மட்டும் மனித ஞானம் வளர்ச்சி கொண்ட ஜீவ பிம்ப வாழ்க்கைமுறை உள்ளதோ, அதைபோன்று மற்ற சூரிய குடும்பங்களில் நம்மைக் காட்டிலும் அறிவும், ஞானமும் முதிர்ந்த மனித பிம்ப உடல்கள் இரண்டாயிரம் மண்டலங்களில் உண்டு. நாம் இன்று உள்ள நிலை உள்ளதைக் கொண்டு, நமக்கு முதலில் வாழ்ந்தவர்களையும், வாழ்ந்த முறைகளையும், ஆராயும் நிலையும், செயற்கை விஞ்ஞான இன்ப வாழ்க்கையின் பிடியிலும்தான் இன்றுள்ளோமே தவிர, மனித சக்திக்குகந்த உண்மை சக்தியை அன்றே உணர்த்திச் சென்ற சப்த ரிஷிகளின் நிலை மறந்து இன்றளவும் செயற்கை பிடியில்தான் சிக்கியுள்ளோம்.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே திருக்குறள் தந்த திருவள்ளுவரின் குறட்பாக்களை ஆராயும் தன்மையிலும் அதற்கு தெளிவுரையும், விளக்க உரையும் தருவதில்தான் நம் எண்ணச் செயல் உள்ளதேயன்றி குறள் வடிவாய், குறளின் உண்மை உணா;ந்து, குறள் வழியில் நாம் வளர வழிகொண்டோமா? திருக்குறள் எழுதிய அம்முனிவரின் சக்தி என்ன? அவர் எழுதிய குறள் வடிவம் அனைத்தும் வெளிப்பட்டதா, பொருட்பால், அறத்துப்பால், இன்பத்துப்பால் இவற்றைத்தான் தந்தார் என்கிறார்கள். அவர் எழுதிய ஞானத்துப்பால் அன்று ஆண்ட அரசர்களினால் மறைக்கப்பட்டுவிட்டது. ஞானத்தின் பால் அறத்துப்பாலும், பொருட்பாலும், இன்பத்துப்பாலும் வெளிப்பட்டதேயன்றி, அவர் எழுதிய முதல் பாலே ஞானத்துப்பால்தான். ஞானப்பாலில் ஆத்ம உயர் ஞான வளர்ச்சி முறையும், ஞானத்தின் வளர்ப்பால் வளரக்கூடிய வழித்தொடர் அனைத்துமே, அன்றாண்ட அரசர்களால், தன் சாதனைக்கு இவர் தரும் போதனையால், தன்னை மீறிய நிலை மனித ஆத்மாக்கள் பெற்றவிடுவர் என்ற அச்ச உணர்வால் மறைக்கப்பட்டுவிட்டது ஞானப்பால்.

    திருவள்ளுவரின் உண்மை ஞான சக்தி எப்படிக் கூடியது? திருவள்ளுவருக்கே சக்தி தந்தவா; வாசுகி அம்மையார்தான். அவ்வம்மையின் ஞானத்திற்கு பொருள் தந்தவர்தான் திருவள்ளுவர் இதன் தொடர்நிலை எந்நிலையென்றால் உருவாகும் சக்திக்கே சக்தி குணம் பெண்மையில் இருந்து வருகின்றது.

    ஆண், பெண் என்ற இரு நிலைக்கொண்ட தொடாநிலையில் வளர்ப்பு நிலைதான் உருவாகும் உரு நிலை அனைத்துமே. சிவசக்தி, வினாயகன், முருகன், வள்ளி, தெய்வயானை என்று மட்டும்தான் நம் புராண இதிகாசநூல்களில் தெய்வ சக்தியை உணர்த்துகின்றார்களே அன்றி, முருகனுக்கு குழந்தையை காட்டவில்லை. வினாயகனுக்கு மனைவியை காட்டவில்லை. அப்படியென்றால் என் அர்த்தம்?

    ஆதி சக்தி என்ற சக்தியின் பொருள் என்ன? கோலமாமகாரிஷி வணங்கிய தெய்வம் முகாம்பிகை தேவி. ஆதி சங்கரர் வணங்கியது சாரதாம்பிகை, போகர் வணங்கியது புவனேஸ்வரியை, கொங்கணவர் வணங்கியது அஷ்டலட்சுமியை.

    நம் சப்த ரிஷிகளினால் வணங்கப்பட்ட தெய்வ சக்தி யாவையுமே பெண்மை சக்தி. இதன் உண்மை என்ன? காளியையும், மகாலட்சுமியையும், பத்ரகாளியையும் வணங்கும் முறையெல்லாம் எவை?

    ஆவியான சுழற்சிவட்டத்தில் இப்பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள அமில சக்திக்கு அப் படர் அமில ஆவி நிலை திடம் கொண்டு எச்சுவைக் கொண்டு திடப்பட்டதோ அவ்வமிலம்தான் சிவபிம்பம், திடம் கொண்டு சிவபிம்பம் கனமாகி தங்க இடம் கொள்ளாது ஈர்ப்பின் சுழற்சி கொள்வது சக்தி ஈர்ப்பு. ஆவியான ஆதி சக்தி, திடமான சிவ உருவாகி, சக்தியான ஈர்ப்பு கொண்டு சிவ சக்தியாகி ஈர்ப்பின் சுழற்சியில் உருவாகும் ஒலி, ஒளி, நீரான முதலாம் வளர்ச்சி வினாயக செயலாகி, வளரும் வளர்ப்புத்தன்மை முருக குணமாகி, முருக குணத்திற்கு தேவைக் கொண்ட வளர் உணவு சக்தி தெய்வானையாகி, தேவைக்கு மேல் உணரும் சக்தி வள்ளியாகி உள்ள சக்திதான் இன்றளவும் உருவாகி உள்ள ஒவ்வொரு சக்தியுமே.

    உயிர் துடிப்பு உயிரணு வளர்ச்சி நிலை ஒவ்வொன்றுமே சிவசக்தி, வினாயக, முருக, வள்ளி, தெய்வானை வடிவமாய்தான் வழிந்துள்ளது இன்று பெண்மையின் சக்திக்கும், ஆண்மையின் சக்திக்கும் உள்ள குண மாற்றம் யாவை? ஆண் எடுக்கும் சுவாசத்தால் அமிலப் படைப்பை படைக்கத்தான் முடியும்.

    பெண்மையின் சுவாசத்தால் கரு வளர்க்கும் செயல்தான் முடியும். ஆண் விடும் சுவாசத்தால் ஆணின் அமில வர்க்கம் தாவரங்கள், கனிவளங்கள், மண், மரம் போன்றவைதான் வளர்க்க முழயும். பெண் இன சுவாச அமில குணத்தால் ஆண் இன அமிலத்திற்கே ஜீவ துடிப்புக் கொண்ட, ஜீவ சக்தி வளரக் கூடிய புழு, பூச்சிகள், வண்டின உயிர்கள் யாவையுமே வளர்க்க முடியும். ஒன்றின் தொடர்பு ஒன்று வளர முடியுமே தவிர ஒன்றான சக்தி எவையுமேயில்லை.

    இரண்டு ஒன்றாகி, ஒன்று பிறந்து, அப்பிரிதொன்று சேர்ந்து ஒன்று வளருமே தவிர, ஒன்றான சக்தி எவையுமே இல்லை. சக்தியில்லையேல் சிவனில்லை, சிவனில்லையேல் சக்தியில்லை என்ற வாதம்தான் சுழல்கின்றதே தவிர ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்பதை உணர்ந்து அமிலப்படைப்பு அனைத்திற்குமே ஜீவ சக்தி வளர்க்கும் பெண்மை ஈர்ப்பு சக்தி குணம் வளர வேண்டும் என்பதனை உணர்ந்துதான் பெண்மை குணத்தை பூஜித்து வணங்கினர் சப்தகள் ரிஷி அனைவருமே.

    இதன் தொடர் வழி முறையில் சக்தி கொண்டவர்தான் வாசுகி அம்மையாரும், திருவள்ளுவ முனிவரும். அஞ்ஞானம் பேசி இஞ்ஞானம் வளர்ந்தது. அன்னையின் ஞானத்திற்கு இம்முனிவரின் ஞானம் உருவம் தந்த உருவகம்தான் காலப்போக்கில் மாறுபட்டாலும் இன்றளவும் பேசப்படும் உயர் ஞானக் குறட்பாக்கள். நம் வாழ்க்கை காலத்திலேயே சாரதா தேவியின் துணையுடன் ராமகிருஷ்ண பரமஹம்சரும், கஸ்தூரிபாய் அம்மை தந்த பக்தி வலுவில் மகாத்மா காந்தியடிகள் தோன்றியதைபோல் ஒவ்வொரு ஆத்மாக்களும் வாழ்க்கை என்ற வழித் தொடரில் இல்லறம் என்ற இனிய வாழ்க்கையுடன் ஆணிற்கு பெண் துணையில் சக்தியும், பெண்ணிற்கு ஆண் துணையின் படைப்பையும் கொண்டு வாழ்க்கை என்ற வழிமுறையிலிருந்தே அன்பு, பண்பு, ஆசை, வீரம், ஞானம், சாந்தம்; இந்நற்குணங்களை பெற்று தீய குணங்களான சலிப்பு, சோர்வு, கோபம், குரோதம், வஞ்சனை, வெறி இவற்றின் குணத்தைவிட்டு இவ்வுணர்வின் உந்தலுக்கு உகந்த நிலையில் ஆசை உணர்வை பேராசைக்குச் செல்லாமல் ஆகையுடன் வாழ்க்கை முறையை உணர்வால் உந்தப்படுமு; எவ் இச்சையையும், தூக்கம், பசி, காமம் இவற்றை உணர்வின் உந்தலின் பிடிக்கொப்ப நாம் செல்லாமல் உணர்வுடன் எண்ணத்தை பக்குவம் கொண்டு வழிமுறைப்படுத்தி வாழ்க்கை முறையின் தேவைக்கு ஜீவாதார வழிக்குகந்த இன்பமுடன் வாழ்க்கை நெறியை அமைதிப்படுத்தி வாழ்க்கையில் பொருள் சக்தியை எப்படி நடைமுறைக்கு சேமிக்கின்றோமோ அதைப்போன்று இவ்வுயிராத்மாவிற்கு என்றுமே அழியா சக்தியான ஞான சக்தி வலுவைக் கூட்டிக்கொண்டால் இவ்வுடல் பிம்பக்கூட்டிற்குள் பல ஜென்மத்தில் சேமித்த குண அமில சக்தியையும், இஜ் ஜென்ம வாழ்க்கையில் நாமெடுக்கும், உணா;வின் உந்தலுக்கு உகந்த சுவாசத்தால் சேமித்த சக்தியைக் கொண்டு மனிதனின் உயா;ந்த ஞான குண சக்தியை எடுக்கும் முறையாய் மாற்றி உள்ள நிலையை நல்ல குணமுடன் கூடிய ஜெபமுறையால் ஞானத்தால் பெற்ற, ஞான சக்தி பூண்டு இன்றைய மருத்துவத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் பல வழிமுறைகளை உணர்த்திச் சென்ற சப்த ரிஷிகளின் நிலைக்கு நாமும் செல்லலாம்.

    இன்று இயற்கை தாவரங்களின் வளர்ப்பு முறையில் வீரிய சக்தி கொண்ட இரசாயன உரங்களை இட்டு ஒன்றுடன் பிரிதொன்றின் இனச் சேர்க்கையை சேமித்து, இன வளர்ச்சியின் மாற்ற குணத்தையே, விஞ்ஞான ஆராய்ச்சி தாவர இயல் உள்ளதுவோ, அதைப்போன்று இம்மனித ஜீவ பிம்ப உடலில் நற்குணங்களை வளர்த்து, தீய குணங்களை விட்டு, உடல் உணர்வின் வழியை நல்வழிப்படுத்தி நாமெடுக்கும்; சுவாச ஜெபத்தால் நமக்கு இப்பிறப்பெடுக்க, பிறப்புத்தந்த முதல் தெய்வங்களை வணங்கி, ஞானத்திற்கு வழித் தந்த குருவையும், தெய்வசக்தி கொண்ட அலைத் தொடர் குணங்களை வணங்கி “ஓம்” என்ற நாத ஒலியில் இயங்கும் இப்பூமியின் சுழற்சி ஒலியில், “ஓம்” க்குள் ஓமாய் நாம் அமர்ந்து, சூரிய சக்தியிலிருந்து உயர் காந்த மின் அலையின் தொடர்பை நாம் பெற்று, வளர்ப்பின் வளர்ப்பாய் தமிழ் வளர்ந்து பிறதையும் வளர்த்து, தமிழ் கொண்ட பண்பு சுடரொளியை இப்பூமியின் சுழற்சியிலிருந்து எப்பூமியிலும் இத்தொடர்த் தமிழ் சொல் ஒலி வளர்க்கும் இத் தமிழ் பண்பு குண தெய்வ வளர்ப்பை, நாம் வளா;க்க, நம்மை வளா;த்த தமிழ் குணசக்திகளின் வளர்ப்பிற்கே வளம் பெறும் இத்தமிழை என்றுமே இஞ்ஞானத்தால் நாமும் வளர்ப்போம்.

    தாய், தந்தையின் ஈர்ப்பில் பிறப்பிற்கு வந்த நாம், நம் தாய் தந்தையரை முதல் தெய்வமாக வணங்குகின்றோம். நம் பிறப்பின் உண்மையும் மற்றெல்லா ஜீவராசிகள், தாவரங்கள், கனி வளங்கள், நம் பூமி எல்லாமே எப்படி பிறப்பெடுத்தன? ஆவியான அமில பிம்பம் ஜீவன் கொண்டு அஜ் ஜீவ ஈர்ப்பலையின் உணர்வுடன், அவ்வுணர்வின் உந்தலில் எண்ணம் கொண்டு வழி வந்த ஒவ்வொரு பிம்ப ஜீவனும் மீண்டும் ஆவியாகிறது. இப் பிரபஞ்சமும் ஆவிதான், நாமும் ஆவிதான், பிரபஞ்சத்தையும், மற்றெல்லா ஜீவ ராசிகளைப் படைத்த படைப்பாண்டவனே ஆவிதான். இப் பிரபஞ்சத்தில், பால் வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள ஆவியின் ஈர்ப்பு சக்திக் கொண்டு உணர்வலையில் ஜீவன் கொண்ட நாம், முற்பிறப்பையும், இப்பிறப்பையும், வரும் நிலையையும் உணர்ந்து இப் பிம்பமான உடலைவிட்டு ஆவி பிரிந்து, ஆவியாய் சுழலும் நிலைக்கு முதலே இப்பிம்ப உடலில் நம் உயிராத்மாவை சகல சத்து நிலைகளையும் உணரும் ஈர்ப்புடன் நம் எண்ணத்தை செலுத்தி வாழ்ந்து இவ் ஈர்ப்பின் உணர்வைக் கொண்டு நாம் தீய எண்ணங்களையும், தீய சொற்களையும், தீய செயலையும் நாம் எண்ணி, சொல்லி, செய்யும் நிலையில் நம்மை அறியாமலே நம் உடல் பிம்ப கூட்டிலுள்ள ஆவி அமிலமும், அத் தீய உணர்வின் அலையையே அதிகமாக ஈர்தது நம் உடலைவிட்டு நம் ஆவி பிரிந்த பிறகும், நம் ஆவியின் குண அமிலம் தீய குண அமிலமாய், காற்றாய் படரவிட்டு மேன்மேலும் அசுத்த நிலையை நாம் ஏற்படுத்தாமல் ஒவ்வொரு ஆத்மாவும் தான் எண்ணும் எண்ணத்தையும், சொல், செயல் எல்லாவற்றையும் நல் உணர்வுடன் வாழ்ந்தால், நாம் வாழ்ந்து நம் ஆத்மா பிரிந்த பிறகும், நல்ல உணர்வின் ஈர்ப்பு ஆவியாய் சுழன்று மீண்டும் நற்கதியின் பிம்பத்தின் வழித்தொடரை நாம் அடையலாம்.

    Share
  • பாரதியின் வேத முகம் – 10

    சு. கோதண்டராமன்

    தேன் வந்து பாயுது காதினிலே

    பாரதியின் பிரபலமான பாட்டு, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பது. நாவால் சுவைக்க வேண்டிய தேன் காதிலே பாய்ந்தால் அதன் இனிமையை அனுபவிக்கமுடியுமா என்று எண்ணுகிறோம்.

    ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்று ஒரு பாடல். வாக்கு காதினால் உணரப்படுவது. இதில் கண்ணால் காணக் கூடிய ஒளி எங்கிருந்து வந்தது என்று நமக்குச் சந்தேகம் வருகிறது.

    குழந்தைக் கதை என்ற தலைப்பில் ஒரு கதை- பாரதி எழுதியது. பெயர் தான் குழந்தைக் கதை. விஷயம் என்னவோ கனமானது தான், முதல் உலகப் போரைப் பற்றியது. அதில் ஒரு வரி, மேலே பருந்துகளும் கருட பக்ஷிகளும் வட்டமிட்டு வெயிலைத் தின்று கொண்டுலாவின, என்று வருகிறது. வெயிலையாவது தின்பதாவது.

    இப்படிப் பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றி மாற்றிச் சொல்வது, ஒரு கவித்வ உத்தி மட்டுமல்ல. அதன் பின்னணியில் ஒரு பெரிய தத்துவம் உள்ளது.

    பாரதியின் பதஞ்சலி யோக சூத்திர விளக்கத்தைப் பார்ப்போம். யோக சாஸ்திரப்படி, வெளியில் தெரியும் கண் காது முதலான பொறிகளால் நாம் காட்சி கேள்வி முதலான அனுபவம் பெறுவதில்லை. மாறாக, சித்தமே காண்கிறது, கேட்கிறது, வாசனை, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவற்றை அறிகிறது. சித்தம் செயல் படாமல் இருக்கும் போது பொறிகள் தம் வேலையைச் செய்தாலும் அது நம் அறிவுக்கு எட்டுவதில்லை. மாறாக, சித்தம் ஆனந்த நிலையில் இருக்கும் போது இந்த எல்லா அனுபவங்களும் பொறிகள் இல்லாமலே கூட நிகழும்.

    இதை விளக்குவது அவருடைய ஞானரதம் என்னும் கட்டுரை. கந்தர்வ லோகத்தில் பாரதி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அனுபவத்தை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்.

    கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னை அறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான ஸங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினை உடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமை ஆகமாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக் கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று யோசித்தேன். எனது அறிவிற்குப் புலப்படவில்லை.

    இந்த இனிய ஒலி என்னைப் பரவசப்படுத்துகிறதே, அது எங்கிருந்து வருகிறது என்றேன். மேலே பார் என்றனள். நீல வானத்தில் சந்திரன் தாரகைகளிடையே கொலு வீற்றிருக்கக் கண்டேன்.

    அவருடைய கிரணங்கள் என்றாள்.

    சந்திர கிரணங்களா, சந்திர கிரணங்களுக்கும் இந்த மனோகரமான தொனிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன்.

    சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓசை இயற்கை. அது இந்த உலகத்தில் நன்றாகக் காதில் விழுகிறது. உங்கள் மண்ணுலகத்திலே ஜனங்களுடைய செவியில் விழுவது கிடையாது. ஆனால் அங்கே கூட அருமையான கவிகளின் செவியில் இந்த ஓசை படும் என்றாள்.

    இவ்வாறு பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றிச் சொல்வதற்கு வேத ஆதாரம் உண்டா? உண்டு. யஜுர் வேதம் 1.1.5.11 ‘ஒளியுள்ள சொற்களைச் சொல்லுக’ என்கிறது. நம்மைப் போன்ற சாமானியர்கள் சொல்லின் ஒலியை மட்டுமே அறிவோம். ரிஷிகள் அதன் ஒளியையும் அறிந்திருந்தார்கள். மருத்துகள் (புயற் காற்று) சூரியனைப் போலப் பிரகாசிக்கிறது என்கிறது ரிக் வேதம் 1.64.2. இன்னும் நிறைய உண்டு.

    வேத ரிஷிகளைப் போல் பாரதியின் சித்தமும் எப்பொழுதும் பரம்பொருளின் நினைவிலேயே, ஆனந்த நிலையில் தோய்ந்திருந்தது. அதனால் அவருக்குப் புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் சாத்தியமாயிற்று. தீக்குள் விரலை வைத்த போது நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கிடைத்தது. காற்றுத் தேவனின் உடல் வயிர ஊசி போல ஒளி வடிவமாகக் காட்சி தந்தது.

    Share
  • பிக்கோலிம் புளுகு – 3

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

     

    இப்ரம்பூர் மோதல்:

    தங்கள் பேரரசின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க விரும்பிய மராட்டியர்கள் அது குறித்து கோவாவின் ஆட்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினர். ஆனால் அவ்வதிகாரிகள் அதற்கு உடன்பட மறுத்தனர் [9] [10]. அத்துடன் ஒரு கால கட்டத்தில் போர்சுக்கீசியர்கள் தங்களது கடற்படையை வடக்கு நோக்கி நகர்த்தி, கோலாப்பூர் பகுதியினை ஊடுருவி நோவா கான்கியுஸ்டாஸ் பகுதியில் உள்ள மராடியர்களை விரட்டியடிக்கவும் எண்ணினர். ஆனால் இந்த எண்ணத்தை அவர்கள் நிறைவேற்றத் தயங்கியதற்கு இருந்த ஒரே காரணம், இது மராட்டியர்களுக்கு வெறுப்பை ஏற்றி அவர்களை டச்சுக்காரர்களுடன் கூட்டணி அமைக்கச் செய்து, அந்தக் கூட்டணி போர்ச்க்கீசியர்களுக்கெதிராக மாறி அவர்களுக்கேப் பாதகம் ஏற்படுத்தக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வினால்தான் [12].

    மோதலின் முதல் துவக்கம் ஏற்பட்டது பேர்நேம் பகுதியில் உள்ள சிறிய ஊரான இப்ரம்பூரில். இப்ரம்பூர் முக்கிய சாலை வழித்தடங்களுக்கும் சப்போரா (Chapora River) ஆற்றுப் பகுதியிலும் அமைந்திருந்தது. போர்ச்சுக்கீசியப் படைகள் இப்ரம்பூரில் குவிக்கப்படுவதாக பிக்கோலிம் பகுதியில் இருந்த மராட்டியர்களுக்குத் தவறான தகவல் கிடைக்கிறது [9]. ஆனால் உண்மையில் அந்த சமயத்தில் போர்ச்சுக்கீசியப் படைகள் எல்லையில் இருந்து வெகு தொலைவில் இருந்த ‘அலோர்னா’ (Alorna Fort) கோட்டைப் பகுதியில்தான் இருந்தது [13].

    மராட்டியர்கள் தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து குதிரைப்படையை இப்ரம்பூருக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தனர் [9]. ஆனால் போர்சுக்கீசியப் படை அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி அங்கு இல்லாது போனாலும், போர்ச்சுக்கீசியர்கள் படை அவ்விடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கக்கூடும், எனவே இப்ரம்பூரை கண்காணிப்பது அவசியம் என்று மராட்டியப் படைத் தளபதி கருதினார். பிக்கோலிம் மற்றும் பேர்நேம் பகுதியின் போர்சுக்கீசியப் படைகள் ‘மேனுவல் டி எலாமினோஸ்’ (Manuel de Elaminos) தலைமையின் கீழ் வழிநடத்தப் பட்டது. இப்டைத் தளபதிக்கு மராட்டியர்கள் இப்ரம்பூரில் நுழைந்து விட்ட தகவல் கிடைத்தது. மராட்ரடியர்களின் ஊடுருவல் தகவல் கோவாவில் உள்ள வாஸ் கோட காமா நகருக்கும் அறிவிக்கப்பட்டது [13]. இத்தகவல் அறிந்ததும் போர்ச்சுக்கீசியர்கள் அலோர்னா கோட்டையினை பாதுகாப்பில்லாத நிலையில் விட்டு விட்டு இப்ரம்பூருக்கு படையை நகர்த்தி அங்கிருக்கும் மராட்டியர்களைத் தாக்க முடிவு செய்தனர் [13].

    ஆகஸ்ட் 1640 ஆம் ஆண்டு நடந்த போர்ச்க்கீசியத் தாக்குதல் விரைவாகவும் திறம்படவும் நடத்தப்பட்டது. இப்ரம்பூருக்குச் செல்லும் மேற்கிலும் வடக்கிலும் இருந்த இரு முக்கிய வழித்தடங்களும் சூழ்ந்து கொள்ளப்பட்டது. நகருக்கு அதிக சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் பொருட்டு காலாட்படைகளையே அடுத்தடுத்து அனுப்பி போர்ச்சுக்கீசியர்கள் போரை நடத்தினர். காலாட்படையினறுக்குச் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், மராட்டியர்கள் குவித்திருந்த சேனையின் அளவைக் கண்டதும் போர்சுக்கீசியர்கள் பின்வாங்கத் தொடங்கினர் [9]. போரில் தங்கள் கை மேலோங்கியிருப்பதை உணர்ந்த மராட்டியர்கள் போர்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டைக்கு செல்லும் வழியில் விரட்டியடிக்க முடிவெடுத்தனர் [9]. மராட்டியர்களின் குதிரைப்படை பின்வாங்கிய போர்ச்சுக்கீசியர்களின் காலாட்படையை மேலும் எல்லையையிலிருந்து துரத்தியது. தொடர்ந்த போரின் காரணமாக இப்ரம்பூரின் வடதிசைப் பாதுகாப்பில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகள் மேற்குப் பகுதியில் நடைபெறும் போரில் உதவி புரிய வரவழைக்கப் பட்டனர் [9].

    ஆனால் ஒப்பிடும்பொழுது அளவில் மிகக்குறைவாக இருந்த வடதிசையின் போர்ச்சுக்கீசியப் படை, இப்ரம்பூரில் இருந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைகளினால் தடை செய்யப் பட்டது [9]. அதனால் முதல் நாள் போரின் இறுதியில் இரு துருப்புகள் மட்டுமே எஞ்சின, இழப்புகளும் குறைவாகவே இருந்தது. அத்துடன் மேற்குப் பகுதியின் போர்சுக்கீசியப் படை கையாண்ட புத்திசாலித்தனமான போர் நடவடிக்கைகளினால் ஒரு ஒழுங்கு முறையில் கட்டுப்பாட்டுடன் அவர்களால் பின்வாங்க முடிந்தது [9]. ஆயினும், போரின் தீவிரமும், மராட்டியச் சேனையின் பெரும்பான்மை பலமும் போர்சுக்கீசியர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன், இம்ரம்பூர் மக்கள் மராட்டியப் படைகளை ஆதரித்ததுடன் அவர்களது படைகளையும் பலப்படுத்திக் கொள்ள உதவியுள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்குப் போர்சுகீசியர்கள் தள்ளப் பட்டனர். இந்துக்கள் பெரும்பானையாக வசிக்கும் இப்ரம்பூர் போன்ற மற்ற பிற எல்லைப்புற ஊர்களுக்கும் இம்பரம்பூர் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் நம்பத் தொடங்கினர் [14].

    தொடர்ந்து இரண்டு நாட்களாக அலோர்னா கோட்டையினை நோக்கி மராட்டியர்கள் விரட்டிய பின்பு கோவாவின் வாஸ் கோடா காமா பகுதியிலிருந்த போர்ச்சுக்கீசியப் படை போர்ச்சுக்கீசியர்களின் உதவிக்கு வந்து சேர்ந்தது [9]. இதனால் ஏற்பட்ட சமஅளவுள்ள படை பலத்தினால் போர்ச்சுக்கீசியர்களுக்கு மராட்டியர்களை எதிர்த்து நிற்கும் திறன் ஏற்பட்டது. அடுத்த நாள் மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளினால் இருபடைகளும் ஒன்றை ஒன்று முன்னேறவிடாதவாறு முடக்கப் பட்ட நிலை ஏற்பட்டது. அடுத்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் நிகழவில்லை. இருதரப்பினரும் தேவையற்ற, ஆபத்து நிறைந்த வழிகளை மேற்கொண்டு இழப்புகளை அதிகப்படுத்தும் நிலையினைத் தவிர்க்க விரும்பினர் [9]. இருதரப்பினரும் தற்காப்பிற்காக மட்டுமே தாக்குதலை நடத்த முயன்றனர். போரின் முதல் இரு துவக்க நாட்களில் மராட்டியப் படை ஏற்படுத்திய சேதங்கள் போர்ச்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டையினை நோக்கி பின் வாங்க வைத்திருந்தது. ஆனால் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு பின்வாங்குதல் நிறுத்துப் பட்டிருந்தது. தனது திறமையான குதிரைப்படையினை கையாண்ட விதத்தின் மூலம் போர்ச்சுக்கீசியர்களைத் தாக்காமல் அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே மராட்டியப் படை தடை செய்தது [9].

    ஜூலை மாதத்தின் துவக்கத்தில், இம்பர்ம்பூரில் இருந்து வெகு தொலைவிற்கு நகர்த்தப் பட்டு விட்ட காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் பீரங்கிகளை போரில் உபயோகப் படுத்த தங்கள் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றனர். பீரங்கித் தாக்குதல் மராட்டியக் காலாட்படையினை செயலிழக்கச் செய்ய உதவியது, ஆயினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறைவே. தொடர்ந்த பீரங்கித் தாக்குதல் மராட்டியக் குதிரைப் படைகளைக் குறிவைத்தது. இதனால் சுடப்படக்கூடிய தாக்குதல் எல்லையிலிருந்து மராட்டியப் படைகள் பின்னடைந்தன [9].

    மராட்டியர்கள், அலோர்னா கோட்டையின் அருகாமையை விட்டு விலகி, மீண்டும் ஒருங்கிணைத்து, சாலையின் தென்திசையில் இருந்து வேகமாக முன்னேறித் தாக்கி எதிரியின் பீரங்கிப் படையைச் சிதறடித்து அவர்களுக்கு பேரிழப்பை உருவாக்கத் திட்டமிட்டனர் [9]. போர்ச்சுக்கீசியர்களின் கைவசம் இருந்த உயர் தொழில்நுட்ப போர்க்கருவிகளுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் தங்களது போர்த் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு மராட்டியப் படைகள் தள்ளப்பட்டன.

    மராட்டியர்களின் போர்த்திட்டத்தைப் புரிந்து கொண்ட போர்ச்சுகீசியர்கள் விரைவில் தங்களது படைகளைப் பல பிரிவுகளாக்கி புதிய வேகத்துடன் முன்னேறிய மராட்டியப் படையினை எதிர்த்துத் தாக்கினர். இத்தாக்குதல் முறையினை சற்றும் எதிர்பாராத மராட்டியப் படை, எதிர் தாக்குதலில் நிலைகுலைந்து மேலும் தென் திசையை நோக்கி, சப்போரா ஆற்றினை நோக்கி நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது [9].

    சப்போரா ஆற்றினை அடைந்த மராட்டியக் குதிரைப் படை, மராட்டிய எல்லைக்குள் பின்வாங்கி தந்திரமாக போர்ச்சுக்கீசியப் படையினை அவர்களது பாதுகாப்பான கோவா பகுதியில் இருந்து நகரச் செய்து தங்களது மராட்டிய எல்லைக்குள் இழுக்க நினைத்தனர். ஆனால் போர்ச்சுகீசியப் படையோ சப்போரா ஆற்றினை நோக்கி முன்னேறுவதைத் தவிர்த்தனர் [9]. ஜூலை மாதத்தின் முடிவில் மராட்டியப் படைகள் தங்கள் எல்லைக்குள் ஒருங்கிணைந்தன. அலோர்னா கோட்டையினைப் பலப்படுத்திய பிறகு, ஆல்பெர்ட்டோ பின்ட்டோவின் தலைமையின் கீழ் போர்ச்சுக்கீசியப் படைகள் சப்போரா ஆற்றின் வடக்கில் பரவலாக நிலைகொண்டு தங்களது நிலையினை நன்கு பலப்படுத்திக் கொண்டனர் [11].

    (தொடரும்)

    படம் உதவி:
    அலோர்னா கோட்டை – http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    [12] Thompson op cit. p 211.
    [13] Thompson op cit. p 212.
    [14] Thompson op cit. p 206.
    [15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
    [16] Thompson op cit. p 215.
    [17] Thompson op cit. p 219.

    Further reading
    Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
    Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
    Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

    Share