Category: சிறுகதைகள்

கதைகள்

  • நாகையநல்லூர் சமையல்காரன்

    நாகையநல்லூர் சமையல்காரன்

    கார்கில் ஜெய்

    அது 2000த்துக்கு முன்பு. அப்போது வேலையில் சம்பாதித்த 2ஆம் மாதம். முதல் மாதம் அம்மாவுக்குப் புடவை. ரெண்டாம் மாதம் சம்பளத்தில் காலேஜ் ஜுனியர் சங்கருக்கு ட்ரீட். சும்மாவா? ஒரு செமெஸ்டர் முழுக்க அவன் ரூமில் ப்ரீயாகத் தங்க இடம் கொடுத்தவன். ஜீன்ஸ் பேண்டும், டீ சர்ட்டும் வாங்கிக்கொண்டு அண்ணா பல்கலை, கிண்டிக்குச் சென்றேன். காந்தி மண்டபத்தில் பேருந்திலிருந்து இறங்கி, பல்கலைக்கழக வாயிலில் நுழைந்து தென்மேற்காக 1 கிமீ நடந்தால் ஹாஸ்டல்தான். அவனைச் சந்தித்தேன். அவன் சொன்னதுதான் “நாகையநல்லூர் சமையல்காரன்”.

    சங்கரா, இப்போ எல்லாம் ஹாஸ்டல் மெஸ்ல சாப்பாடு எப்படி இருக்குது? என்றேன்.

    “வழக்கம் போலத்தான். நடுவில ஒரு மாசம் சூப்பர் டேஸ்ட் இருந்தது. மறுபடியும் சகிக்கல”.

    உயர்ந்து வளர்ந்திருந்த தூங்குமூஞ்சி மரங்களின் நிழலில் நடக்க ஆரம்பித்தோம்.. பேச்சும் தொடர்ந்தது..

    “ம்ம்..ஒரு மாசம் மட்டுமா? எப்படி?”

    நாகையநல்லூர்லேர்ந்து ஒரு சமையல்காரன் வந்திருந்தான். அய்யரு போலிருக்கு… யப்பா… என்ன ஜாலம் பண்ணினானோ தெரியல.. தோசைல தங்க நிறத்துல வெந்தய வாசனை மணக்கும்.. சாம்பார் அதுமாதிரி நான் யுனிவர்சிட்டில சேர்ந்ததில் இருந்து சாப்பிட்டதே இல்லை…. ரசம் தேவ லோகத்துலேர்ந்து வந்தா மாதிரி.. தனித்தனியா கருவேப்பிலை, மஞ்சள், கொத்தமல்லி, பெருங்காயம்னு மணக்கும்ங்க…

    ..தனித் தனியான்றேன்….. தனித் தனியா வாசனை தெரியும்…. என்ன பண்ணினான்னே தெரியல.. அவன் கைல பத்து விரலுக்கும் மோதிரம் போடணும்.. அவன் சொர்க்கதுலேர்ந்து வந்தவனுங்க..

    சொர்க்கத்துலேர்ந்தா? நாகையநல்லூர்னியே?

    நீங்க வேற கடிக்காதீங்க.. சொல்றதைக் கேளுங்க.. எல்லா ஐட்டமும் செம டெஸ்ட்.. நான்லாம் ஹாஸ்டல் மெஸ்ல ரெண்டு தோசைக்கு மேல அந்தக் கருமத்தைத் தின்ன மாட்டேன்.. அதுவும் எத்தையாவது தின்னு தொலைக்கணுமேன்னு தின்னுட்டுக் கெளம்பிருவேன். நாகையநல்லூர் அய்யர் கை டேஸ்ட்ல நாலு தின்னேன்..

    தோசைன்னு இல்ல, உப்புமா, பொங்கல், பொரியல் எதெடுத்தாலும் சான்ஸே இல்ல.. சப்பாத்தியோட தக்காளி கடலை மாவு சப்ஜி…. கத்திரிக்கா பயத்தம் சாம்பார், செய்வாம் பாருங்க… இட்லி புடிக்காத நானே தொட்டுக்கிட்டு ஆறு தின்னேன்…

    “அந்த ஆளுக்கு ஏதாவது பிரமோஷன் கொடுத்தாங்களா?” என்றேன். பழக்கமான நாய் ஓடி வந்து வாலாட்டியது. போன வருஷம் நாய் போட்டிருந்த குட்டிகள் இப்போது பெரிதாக வளர்ந்து இருந்தன. அவை தூரத்தில் நின்று சந்தேகத்தோடு வாலாட்டின.

    பிரமோஷனா? கிழிச்சானுங்க.. தலைகீழா நடந்தது.. நீங்க குறுக்க பேசாமே கேளுங்க ஜெய்…

    சூப்பர் டேஸ்ட்னால பசங்க எல்லாரும் உட்காந்து கார்த்தாலை 9 வரைக்கும் சாப்ட்டானுங்களா…. மெஸ் வெளில கியூ வெயிட்டிங்.. கிளாஸுக்கு லேட் ஆச்சு.. எப்பவும் மெஸ் பில்லு அறுநூறு ரூவாதான் வரும்.. அந்த மாசம் மளிகை சாமான் அதிகமாகி எழுநூத்து நாப்பது வந்தது..

    வார்டன் ரேமண்ட் உதறியராஜ் மெஸ்சுக்கே வந்தாரு.. அய்யரைக் கூப்புட்டு “எலேய் என்ன பெரிய மயிராட்டம் சமக்கியாமா?.. உனக்கு முன்னாடி இருந்தவங்க சமைக்கா மாதிரி நீயும் பண்ணுலே.. எல்லாருக்கும் ரெண்டு மடங்கு சோலி வெக்கியாம்”

    “சார், அவா தட்டெல்லாம் சுத்தமா அலம்பறது இல்லே.. சுண்ணாம்பு பவுடர்லாம் கலக்கறா.. அப்படி பண்ணினா ஸ்டுடென்ட்ஸ் வயிறு கெட்டுடும் சார்.. கொஞ்சம் சாப்பிட்டாலே எழுந்துடுவா”.

    “எலேய் பசங்க இங்க படிக்க வர்றாங்களா, இல்லை தின்னுட்டுப் பேள வர்ரானுங்களா? பசங்க பத்து நிமிஷத்துக்கு மேல சாப்பிடக் கூடாதுன்னு தானே சொல்றோம். குனுக்கு வலிக்க சமைச்சா பத்தாதுலே.. புத்தி வேணும்” ன்னு ஆரம்பிச்சு ரொம்ப மரியாதை இல்லாம பேசிட்டாரு.

    அய்யர் “என் தோப்பனார் சொல்லிக் குடுத்த வித்தையைக் கடமை தவறாம செய்யறேன்.. யாரும் 10 வருஷமா குத்தம் சொல்லலை.. நீங்கோ மட்டும் ஏன் சார் கோவிச்சுக்கறேள்?” னு கேட்டார்.

    “ஏலேய், நான் சொல்லுதது உனக்கு விளங்குதா இல்லையா? ஒன் அப்பன் வித்தை மயித்தைச் சொல்லிக் கொடுத்தான்குற.. ஒன் அப்பனா ஒரு ஸ்டுடென்ட்டுக்கு 140 ரூவா அதிகமா கட்டுவான்?..”

    அய்யருக்கு கண்லாம் கலங்கிப் போச்சு… குரலுடைய “ஸார் அவன் இவன்லாம் போயிட்டவாளப் பத்தி பேசாதேள்.. ஜட்ஜ், கலெக்டர் வீட்டுக்கெல்லாம் கூட போயி சமைச்சிருக்கேன், யாரும் இப்படிப் பேசினதில்ல”.

    கண்ணீரைப் பார்த்து இறங்கின வார்டன் சொன்னாரு “கேளுவே, சமையல்ல டேஸ்ட் இருக்கக் கூடாது, பசங்களுக்குச் சாப்பிடவே பிடிக்கக் கூடாது, 330 பேரு 12 லேர்ந்து 1க்குள்ள லன்ச் முடிக்கணுமே? வந்தான்ன்னா சாப்புட்டு ருசியே இல்லை கருமம்ன்னுட்டு அஞ்சே நிமிசத்தில வெளில போயிரணும்.. அப்போதாம்வே நம்ம ரிசர்வ்ல நாலு காசு மிஞ்சும்.. ஆடிட் பிரச்சனை வராது… நீ நல்லா சமைச்சு ஸ்டுடென்ட்ஸ் தின்னுட்டு தெனவெடுத்துப் போயி இருந்தாம்னா படிக்க மாட்டானுவ..கலாட்டா செய்வானுங்க..”

    “ஸார், என் தொழில் தர்மத்தை, கத்துண்ட வித்தையை மீற மாட்டேன் சார், கைப்பக்குவம்லாம் பகவான் பரம்பரையா அனுக்ரஹம் பண்ணினது. இங்க படிக்கற பசங்க எல்லாம் சரஸ்வதி கடாட்சத்துக்காக, பெத்த அம்மா சமையலை விட்டுட்டு வர்றா; எங்கெங்கேர்ந்தோ வந்து படிக்கற குழந்தேள் கிட்டேர்ந்து சுபோஜனத்தைப் பறிக்கப்படாது.. நான் கடமையை விடாம சரியாத்தான் செய்வேன்.. வேணும்னே மட்டமால்லாம் சமையல் செய்ய என்னால முடியாது..”

    “அப்புடியா ஸார்வாள்…. பாப்பான்ற திமிரு போல… அப்போ நீ தட்டு கழுவுலே.. இனி டேபிள்லேர்ந்து எச்சை தட்டு எடுக்கறது, களுவறதுதாம்லே உன் வேலை. இன்னிலேர்ந்து சமையலை ஏளுமலை, இசக்கி பாத்துப்பானுவ”..

    மறுபடியும் நான் பேசினேன் “…ஏன் சங்கர், எதுக்கு முதல்ல அந்த அய்யரு நம்ம ஹாஸ்டலுக்கு வந்தான்? அசிங்கப் படறான்?” என்றேன்.. எதுக்கு இவ்ளோ கடமையுணர்ச்சி, தொழில் தர்மம் பொருத்தமில்லாத இடத்துல?

    சங்கர் பேச்சில் மாற்றம் தெரிந்தது. சமையல்காரனை அவர் என்றும் வார்டனை அவன் என்றும் சொல்லிப் பேச ஆரம்பித்தான்.

    நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் போயி வார்டன் கிட்ட பேசினோம். கொஞ்சமும் மசியலை. “நீ ருசிக்காக 140 அதிகம் கொடுப்பே. மத்தம் 330 பசங்களுக்கும் சேத்து நீ 46,000 கொடுப்பியாவே? ஒவ்வொருத்தனும் 1 மணி நேரம் சாப்பிடுதான்.. எல்லாரும் உக்காந்து மொக்கின அப்புறம் கடைசி ஆளா நீ சாப்பிடணும். செய்வியா?”ன்னான்.

    அப்புறம் அய்யர் கிட்ட போனோம். என்னய்யா ஜட்ஜ், கலெக்டர்ங்கற. என்னத்துக்கு கம்மி சம்பளத்துக்கு இங்க ஹாஸ்டல் கேன்டீன்ல சமைக்கறீரு ன்னோம். அப்போதான் உண்மையான கதை தெரிஞ்சது

    …அய்யரோட அம்மாவுக்கு உணவுக் குழாய்ல கேன்சராம்.. அது தெரியாம 6 மாசம் வீட்டுல வேலைக்கு போவாம அம்மாவைக் கவனிச்சுக்கிட்டு இருந்திருக்கார். அப்புறம் இப்போ கிண்டி கேன்ஸர் இன்ஸ்டிடியூட்ல அட்மிட் பண்ணிட்டு, தொண்டைல டியூப் வச்சு தான் ஆகாரம். தங்க இடம் இல்ல, லாட்ஜுக்கு பணம் இல்ல.. என்ன பண்ணுறதுன்னு யோசிச்சு, தூங்க எடத்துக்காகவே பக்கத்துலேயே நம்ம ஹாஸ்டல் மெஸ்ல வேலைக்குச் சேந்துட்டார்.. அப்படியே ஹாஸ்டல்லயே ஓரமா வாட்ச் மேனோட தங்கிக்கலாம்னு பிளான் பண்ணிருக்கார்… வீட்டு வாடகை, ஆட்டோ சார்ஜ் மிச்சம். அதனாலதான் குறைஞ்ச சம்பளம், அவமானம், கடுமையான வேலையெல்லாம் தாங்கிக்கிட்டு இங்கயே கெடந்தார்.

    அவரே இதெல்லாம் சொன்னாரா?

    ஆமாம்.. ஆனா அவரோட தொழில் தர்ம உணர்ச்சி, அவரை நிம்மதியா இருக்க விடல. எதுக்கு அய்யரோட கடமை உணர்வைத் திட்டணும்? திட்டினாலும் இந்த வார்டன் ரேமண்டைத்தான் திட்டணும்.. அப்படியே இந்த எச்சைப் பாத்திரம், தட்டு எல்லாம் கழுவிட்டு இருந்தார் அய்யர்; வேலைய முடிச்சுட்டு ரெண்டரை மூணு வாக்குல அம்மாவப் பார்க்க கேன்ஸர் இன்ஸ்டிடியூட் போவாரு.. போவரத்துக்கு நான் என்னோட சைக்கிளைக் கூடக் கொடுத்திருந்தேன்… அப்புறம் ஆறரைக்குத் திரும்ப வந்து வேலை செய்வார்..

    ஆனாலும் ரெண்டு மாசம் கழிச்சு வார்டன் விடல… ஞாயிறு காத்தால சர்ச்சுக்கு போக டிரஸ் பண்ணிட்டு கார் எடுத்துட்டு குடும்பத்தோட வந்தான். ஆம்பிளைங்க ஹாஸ்டலுக்குப் பொண்டாட்டியோட இது வரைக்கும் வந்ததே இல்லை. நாங்க எல்லாம் வார்டன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிட்டு இருந்தோம்.

    “அய்யிரே, இனிமேலாவது மத்தவன் மாதிரி சமைப்பியாலே?”

    “ஸார், என் உயிரே போனாலும் உத்யோக தர்மத்தை மீறமாட்டேன்”.

    “ஒண்ணு பண்ணுவே.. ருசியா சமைக்க வேணும்னா எங்க சாந்தோம் சர்ச்சுல வந்து வக்கணையா, ருசியா சமைச்சுப் போடு.. என் வைஃப்தான் சர்ச்சுல செகரட்டரி; பாஸ்டர்கிட்ட பேசி உனக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்லே”.

    “மன்னிக்கணும் சார். நளனும் பீமனும் பண்ணின கலையை சரஸ்வதி கடாட்சம் உள்ள இடம்கறதால இங்க பண்றேன். சர்ச்சலெல்லாம் பண்றதுக்கில்லை ஸார்.. நான் எச்சை தட்டே அலம்பிண்டிருந்தாலும் பரவாயில்லை”.

    வார்டனின் மனைவி, குழந்தையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு கிடுகிடுவென காரில் சென்று அமர்ந்தார். ஒரு சாதாரண சமையல் கலைஞனின் முன் தன் கணவனின் பணம், படிப்பு, பதவி, அந்தஸ்து எல்லாமே தோற்றதைத் தாங்க முடியவில்லை.

    “எதுக்குய்யா மூஞ்சில அடிச்சாப்பல பேசின? படிப்புக்கு மரியாதை தரவேணாம்? அந்தாளே ஒரு சாடிஸ்ட்டு.. என்ன பண்ணுவாரோ?”

    “இப்பவே ரொம்ப மோசாமாதான் இருக்கேன். இதைவிட மோசமா என்ன பண்ணிட முடியும்?ன்னுதான்”.

    வார்டனால் முடிந்தது.

    ‘ஏண்டா சர்ச்சல சமைக்க மாட்டியா? பெரிய ஜில்லா கலெக்டரா நீ?’ ன்னு கருவிக்கிட்டுக் கிடந்த வார்டன், வேணுமுன்னே அய்யரை நான்வெஜ் மெஸ்ஸுக்கு மாத்திவிட்டான்.. வெஜ் மெஸ்ஸுல சாப்பிட அவருக்கு அனுமதி இல்லைன்னுப்புட்டான் படுபாவி.. அய்யரைச் சிக்கன் சாப்பிட்ட தட்டெல்லாம் எலும்பு பொறுக்கிக் கழுவ சொன்னான்..

    அய்யோ… சே… அப்புறம் என்னாச்சு? அன்னிக்கே வேலையவுட்டு போயிட்டாரா?

    போகல்லை. அம்மாவுக்குக் குணம் ஆகிற வரைக்கும் என்ன கேவலப்பட்டாலும் போமாட்டேன்னுட்டார். நான்வெஜ் மெஸ்ஸில் அய்யரால சாப்பிட முடியாது. ஆனா கார்த்தால டிபன் எப்பவும் சைவம் தானே? அதை மட்டும் சாப்பிடுவார்; மதியம், ராத்திரி சாப்பாடு இல்லை; தூக்கமும் இல்லை; திறமைக்கு மரியாதை இல்லை; நல்ல சம்பளமும் இல்லை; அஞ்சு நிமிஷம் ஓய்வில்லை. கடமையை மட்டும் தவறாம செஞ்சார்.

    அப்படியே ஒரு மாசம் ஓடிச்சு.. சாப்பிடாம இளைச்சுப் பூட்டாரு அய்யரு. அன்னிக்கு டிஸ்க்ரீட் மாதேமட்டிக்ஸ் பரீட்சைக்குப் படிச்சுட்டு இருந்தோம். அய்யரு பாத்திரமெல்லாம் தேய்ச்சு, தட்டெல்லாம் அலம்பி வச்சுட்டு ஹாஸ்டலுக்குப் படுத்துக்க ராத்திரி 12 மணிக்கு வந்தார்.

    நாங்க எல்லாரும் ஆளுக்கு 5 ரூபாய் போட்டு 80 ரூபாய் சேர்த்துக் கொடுத்தோம்.

    அண்ணே விடிகாத்தால, சொல்லாம கொள்ளாம நீங்க கிளம்பிடுங்க. இந்த காலேஜ் ஒத்து வராதுன்னு சொன்னோம். அவரு கண் கலங்கி பணத்தை வாங்கிக்கிட்டாரு. பையிலிருந்து ஒரு சாமி படத்தை எடுத்தாரு. சிருங்கேரி அம்மனாம்.

    “அம்மா சாரதாம்பா.. கண் தெறந்து பாறேன்.. நான் இன்னும் உயிரோடதான் இருக்கணுமா? அம்மா கண் திறம்மா” ன்னு குலுங்கிக் குலுங்கி அழுதார். அப்படியே குளிச்சுப்புட்டு மொட்டை மாடிக்குப் போயி நிலாவை வெறிச்சுப் பார்த்துட்டே தூங்கிட்டார்.

    நான் எதுவும் கேட்கக் கூடத் தோணவில்லை. கொஞ்ச நேரம் மயான அமைதி.. பெருமூச்சு.. சங்கரே தொடர்ந்தான்.

    அடுத்த வாரம் அம்மா கண் திறந்துட்டா… வழி விட்டுட்டா..

    சாராதாம்பாளா?

    இல்லை. அய்யரோட அம்மா… கேன்ஸர் இன்ஸ்டிடியூட்ல இறந்துட்டாங்க. அவரு பாடிய எடுத்துட்டு ஊருக்குப் போயிட்டாரு.

    -*-*-*-*-*-*-*-*-*-*-*-

    இது நடந்து 25 வருடங்கள் ஆகின்றன. பல்கலை மாணவர்கள் வெள்ளிவிழாச் சந்திப்புக்கு (college reunion) வந்த நானும் சங்கரும் நாகையநல்லூர் சென்றோம். அவர் ஹாஸ்டலுக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்தில் இருந்து சங்கர் முகவரி சேகரித்திருந்தான்.

    அக்ரஹாரத்தில் விசாரித்ததில் ஒருவர் “நீங்களும் போலீசா? இப்போதான் ஒருத்தர் தேடிட்டு வந்தாரு.. பஜனை மடத்துலேர்ந்து ஆறாவது வீடு.. இந்த பழைய நெம்பர்லாம் செல்லாது….” என்றார்.

    எப்படியோ தேடி வீட்டைக் கண்டுபிடித்தோம். சுண்ணாம்பு பெயர்ந்த சுவரில் அகல் விளக்குக்கான பிறையில் காரை பெயர்ந்து இருந்தது. வளைந்து கொடுக்கா நேர்மையின் விளைவு, வீட்டின் ஏழ்மையில் தெரிந்தது.

    உள்ளே ஒரு போலீஸ்காரர், அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    எங்களை “நீங்க யாரு? எதுக்கு வந்தீங்க” என்றார் போலீஸ்.

    அய்யர் பதில் சொன்னார்: “இவரு அண்ணா காலேஜ்ல நான் கேன்டீன்ல வேலை செய்யறச்சே படிச்சார்” என்று சங்கரைக் காட்டி .. “இவரு அவரோட சிநேகிதர் போலிருக்கு” என்று என்னைக் காட்டினார்.

    பதற்றத்தோடு “ஸார் ஏன் சார்? எதாவது பிரச்னையா சார்?” என்று போலீசிடம் கேட்டேன்.

    “இல்லல்ல… இவரோட பொண்ணு அமெரிக்கால படிச்சுட்டு இருக்கு.. இவரும் அமெரிக்கா போகப் போறாரு.. பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக வந்தேன்”.

    “சாராதாம்பா கண்ணைத் திறந்துட்டாடா” – கண் கலங்கினேன்.

     

    AI image by Google Gemini; prompt by Annakannan

    Share
  • ரெட்டைக்கிடா (சிறுகதை)

    ரெட்டைக்கிடா (சிறுகதை)

    சுருளி காந்திதுரை
    suruligandhidurai@gmail.com

    பால்ராசுக்கு மனசு என்னவோ போல் இருந்தது. இரவு ஒன்பது மணிக்கு பகல்போல் ஜொலிக்கும் வண்ணவண்ண டியூப்லைட், சீரியல் பல்புகள், விண்ணை முட்டும் அளவுக்கு ப்ரியா ஒலி ஒளி அமைப்பாளர்கள், மின் அலங்காரங்கள் செய்து இருந்தார்கள். மூன்றாம்நாள் நிகழ்வின் நிறைவுப் பகுதியாக அம்மன் மலையேறப்போறான்னு ஊர் மக்கள் எல்லாம் பேசிக் கொள்கிறார்கள்.

    ஊரே மகிழ்ச்சி வெள்ளம். எல்லா வீட்டுலயும் சத்துக்குத்தக்கனக் கறிக்கொழம்பு வச்சு நாளை ஊரே கறிவிருந்து நடக்கிது.

    ஊர் உறவு எல்லாம் அம்மனுக்கு நேர்ந்து விட்டக் கிடாய்கள் வெட்டப்பட்டு அவை டபராக்களில் கொதித்துக் கொண்டு இருக்கு.

    எல்லா வயிறும் கறிச்சோறுக்காகக் காத்துக்கிடக்கு எப்படாச் சோத்தப் போடுவீங்கன்னு. ஆனால், ஊரே கறிச்சோறும், திருவிழாவின் நிறைவுப் பகுதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல் நிகழ்வுக்கான ஏற்பாடு, குமரிகள் அத்தை மக்க, மாமா மக்க மேல் மஞ்சள் நீர்ஊற்றி உரிமையை உறுதி செய்யப் போகிறார்கள்.

    கழனியில் உருவான கல்கட்டங்களில் நகராகத் தெருவாக உருமாறிய நிலையில் இங்கே இதுக்கு வேறுபாடு அதிகமாக இருக்காது. இருந்தாலும்… சாமி கும்பிடவா, பொங்கல் வைக்கவோ, கிடா வெட்டவோ யாருக்கும் மறுப்பது கிடையாது.

    அங்கு உள்ளூர்க்காரர்களுக்கு சிலக் கட்டுப்பாடும், பலத்தட்டுப்பாடும் இருக்கும். கிராமங்கள் தோறும் திருவிழா வேதனை ஏராளம். ஆனால் வெளியூரில் இருந்து பொழப்புத்தேடிப் புதிதா வந்து நாச்சியாபுரத்தில் குடியேறியவர்களுக்குக் கிடையாது. அவன் பொழைக்க வந்தவன். இங்கு வந்தவுடன் சாதியை அறிவித்து விடுவான். அதன் பின்னணியில் இயங்குவான். அதையே முன்னொட்டாகக் கொண்டு அடைமொழியால் அடையாளப்படுத்துவது வழக்கமாக்கிக் கொள்வான். அலுவல் நிமித்தமாகக் குடியேறியவர்கள் அதிகமாக அலுவல் சார்ந்தப் புழங்குப் பெயர் பயன்பாட்டில் இருக்கும்.

    வக்கீல், வாத்தியார், பேங்குகாரர், டிரைவர், கண்டக்டர், டீச்சர் இப்படி அவரவர் வேலைக்குத் தகுந்தார்போல் அழைக்கப்பட்டார்கள். சாதிப்பெயரைக் கடந்து அலுவல் பெயர் நிற்க ஆரம்பித்துவிட்டது. அதுவே நிலைபெற்றது.

    பால்ராசு செல்லாயி அம்மன் மீது பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். அவருடைய பொஞ்சாதி சங்கீதா இன்னும் கூடுதல் பக்தி கொண்டவர்.

    இருவருமே பள்ளி ஆசிரியர்கள் என்பதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நாச்சியாப்புரத்துப் பிள்ளைகளை டவுனில் சேர்த்துப் படிக்கவைக்க ஊரோடு அனுக்கமானார்கள். இவ் அணுக்கம் கிராமத் தெய்வமான செல்லாயி அம்மன் மீதும் ஒட்டிக் கொண்டது.

    ஆக அவர்களும் குடியேறி பத்துப் பதினைந்து வருடம் ஆகிப்போனது.

    கிராமத்து மக்களோடு மக்களாக ஒன்றிப்போனார்கள். அவர்களின் பூர்வீகம் சின்னமனூர்ப் பக்கம் ஏதோ ஒரு கிராமம்.

    செல்லாயி அம்மனின் சக்தி ஊரே அறிந்தது. அதிலும் பால்கார முனியாண்டி எப்பப்பாரு வாத்தியார் வீட்டுக்கு ஒன்னுன்னா மொத ஆளா வந்து நிப்பான்.

    பழக்கவழக்கம், பிள்ளைக ரெண்டு பேத்தையும் வாத்தியார், டீச்சர் புண்ணியத்தில படிக்க வச்சு ரெண்டும் காலேஜ்ல பெரிய படிப்புப் படிக்கிறாங்க.

    பால்கார முனியாண்டி, மூச்சு முன்னூறு தடவை செல்லாயி அம்மனைச் சொல்லிக் கொண்டே இருப்பான்.

    ஊரே கறிவிருந்து செமத்தியச் சாப்பிட ரெடியாகிட்டேயிருக்கு. கறிவாசம் ஊர் முழுவதும் உலாவந்து கொண்டிருக்கு. ஒவ்வொருவர் நாசியிலும் கொழம்பின் சுவையை உணரத் தொடங்கியது. கறிக்கொழம்பு வாசனைதான். செல்லாயி அம்மன் இரவு சாத்தப்பட்டு காலையில் திறக்கவேண்டும். ஆட்டுககிடாய் வெட்டுவது நடந்துகொண்டு இருக்கும்.

    சாவுக்குச் சங்கு ஊதுறான். இவன் சாகிறதுக்கே சங்கு ஊதுறான்.

    இதுவரைக்கும் சாதிக்கொன்னு, தெருவுக்கு ஒன்னு, சங்கம் வாரியா, உழவர் சங்கம், டிரைவர் சங்கம், கடைக்காரர்கள் சங்கம். இப்படியாகக் கிடாய்கள் வெட்டப்பட்டு பின்பு தனித்தனியாக நேர்த்திக்கடன் கிடாய்கள் வரிசையாக வெட்டி அம்மனுக்கான நேர்த்திக்கடனை ஊரே செலுத்திய மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

    எல்லாக் கிடாய் மூனுக்கொடம் ஏழு எட்டுக்கொடம் வரைத் தண்ணிய வாங்கிக்கிட்டு தலையைக் குழுக்கும். தலையைக் குழுக்கிட்டா கிடாய வெட்ட அம்மன் உத்தரவு கொடுத்துட்டாக… நம்பிக்கை. ஒவ்வொருவரும் சத்துக்குத் தக்கன வெள்ளாட்டம் கிடாய், செம்மறிக் கிடாய், இளம் குட்டி, ரெண்டு மூனு வருஷம் வளர்த்ததாவும் இருக்கும்.

    இதில் எழைக்கடன் ஏழு வருஷம்… இப்படித்தான் வாத்தியார் வாராத சம்பளப்பாக்கி அரசாங்கத்திடம் இருந்து வேகமாக கிடைக்கனும், கிடைச்சா அது எப்படியும் புருஷன் பொஞ்சாதி இருவருக்கும் சேத்து அஞ்சு ஆறு இலட்சம் வரும்.

    சங்கீதா என்னங்க ஆச்சுப் போயிப்பாருங்க, ஏங்க போயிப் பாருங்க…

    அரியர் பணம் வந்தா பொன்னுப்பொருள் வாங்கலாம்ன்னு சங்கீதாவின் தொல்லைத் தாங்க மாட்டாம மெல்ல மெல்ல பால்ராசு பைல் நகர்ந்தது. சில நேரம் கடவுளிடம் வைக்கும் கோரிக்கை வேண்டுதல் போலப் பல தடைகளைக் கடந்து வரும் போகும்.

    சாமானியன் அலுவலக சிப்பந்திகள் ஆசையும் தேவையும் நிறைந்தவர்கள்.

    அவர்களுக்கு ஆயிரம் வேலை. இதில் பால்ராசின் சம்பள பாக்கி பைல் முதன்மையாகத் தெரிய வாய்ப்பில்லை.

    வெள்ளிக்கிழமை நிறைஞ்ச பௌர்ணமி, ஏங்க வாங்கக் கோயிலுக்குப் போயிட்டு வருவோம்ன்னு கூப்பிட்டாள் சங்கீதா.

    பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் குளிச்சு முடிச்சுட்டு பால்ராசு, சங்கீதாப் பிள்ளைக பாலச்சந்திரன், புனிதா ஆக நால்வரும் செல்லாயி அம்மன் கோயிலுக்கு தேங்காப்பழம், மாலை எல்லாம் எடுத்துட்டுப் போயி, தட்டுல வைச்சுக் கொடுத்தார்கள்.

    அன்னைக்கின்னு… பாத்து ரெட்டைக்கிடா வெட்ட கூட்டம். யாரோ ஊருக்குள் மோட்டார் பைக்கில போயி விழுந்துட்டு வந்தவன் பொழைச்சதாலா… பையனுக்கு மொட்டைப் போட்டுப் பொங்கல் வைச்சிட்டு இருந்தாங்க.

    பால்கார முனியாண்டி, பால்ராசு, சங்கீதா இருவரைப் பார்த்ததும், சார் வாங்க, என்ன சாமி கும்பிட வந்தீங்களா?

    பேச்சுவாக்கில, துடியான தெய்வம். இன்னைக்கு மொட்டைப் போடுறவன் கிடந்தக் கிடைக்கு இவன் கிடந்த கிடைக்கு ஊரேப் பொழைக்கமாட்டேன்னு சொல்லுச்சு. ஆத்தாப் புண்ணியத்துல ஆயுசுக் கெட்டியா எழுதியிருக்கு. எனக்கு ஒரு வகையில தங்கச்சி மகன். மருமகன் மொறை வரும்…

    டீச்சருக்கு இருப்புக்கொள்ள நமக்கு வேற சம்பளப்பாக்கி வரவேண்டியப் பணம் ஏழு எட்டு வருசமா கிடக்கு. தங்கம் கிராம் ரெண்டாயிரத்துல இருந்து நாலாயிரம் விஷம் ஏறிக்கிட்டே இருக்குன்னு…

    சங்கீதா டீச்சர் கணக்குல புலி. சம்பளக் கணக்கும், தங்க வெலைக்கும் உள்ள ஏத்த இறக்கத்த உள்மனசு எதையோ சொல்லிட்டே இருந்துச்சு சங்கீதா டீச்சருக்கு.

    அம்மனுக்குக் கிடாய் வெட்டியாச்சுன்னா கிடா வெட்டி மறுப்பொழுது வரை கதவுத் திறக்கமாட்டாங்க போங்கச் சார்ன்னு.. முனியாண்டி சொல்ல சொல்ல வேகமாக சாமி கும்பிட முன்னே வந்தார்கள்.

    யோவ் பூசாரி, மொதல்ல வாத்தியார் வீட்டுக்குப் பூசைய முடிச்சு அனுப்பிவிடுன்னு… பால்கார முனியாண்டி வேகம் பண்ணாரு.

    பால்ராசு அவசரமில்ல முனியாட்டி குறுகிக்கிட்டா…

    சார், கிடா வெட்ட முன்ன, நம்ம பூசைய முடிக்கனும். சும்மா இருங்க சார்.

    பூசாரி வந்து சங்கீதாவிடம் இருந்த தாம்பாளத்தட்டை வாங்கிட்டுப் போனார். இப்படியாக பத்துப்பேர் மேல வரிசையாக சூடம் பத்தி, பூ மாலை எல்லாம் வாங்கிட்டுப் போயிப் பூசையை ஆரம்பித்தார்.

    கோயில்ல கட்டியிருந்த மணியைக் குழந்தைகள் போட்டிப் போட்டு அடிக்க…

    திடீர்னு ஒரு அம்மாவுக்கு சாமி வந்திடுச்சு. பல்லக் கடிப்பதும், கையையும் உடம்பையும் முறுக்கிட்டு குலுக்கிட்டு ரெண்டு சத்தம், இருந்த ஆளுக மிலிட்டிரிலே நிக்கிற மாதிரி வெறப்பா இல்லாம பவ்வியமாக நின்றார்கள்.

    சாமி வந்த அம்மாட்ட அங்ஙண இருந்த ரெண்டு மூணு பேர் கால்ல விழுந்து எழுந்தார்கள்… போடாக் காப்பாத்தித்தாரேன்னுச்சு.

    யாரோ போய் சாம்பல் நீட்டவும், போடா ஆத்தாக் காத்துக் கொடுக்கிறேன். இப்படியாக மருளாடிப் பேச.

    ரெண்டு மூனு பேருக்கு சாம்பலப் போட்டுப் பூசிவிட்டு, போ நினைச்சக் காரியம் கைகூடும். அதுவே, சங்கீதா பக்கம் திரும்பியது. ஏத்தாக் கவலைப்படுற? ஆத்தாக்கிட்ட வந்துட்டேளே… நான் பாத்துக்கிறேன். உம் கோரிக்கையை எம் காலடியில போட்டுட்டுப் போ. போடா, எங்களாங்கன்னு ரெண்டு மூணு தடவப் போயிட்டு வரச் சொல்லு. முடிச்சுத் தாறேன். முடிச்சுத் தர்றேன். சத்தியம் சத்தியம்…

    பால்ராசுக்கு எதுவுமே புரியல.

    சங்கீதா தலையை ஆட்டினாள். மொகத்தில ஆயிரம் டியூப் லைட் வெளிச்சம் மின்னியது. அந்த அம்மா சாம்பலப் போட, அதுக்குள்ள பூசாரி பூசையை ஆரம்பிச்சுட்டார்.

    சங்கீதா நினைச்சு வந்த காரியம் “அரியர் பணம் வாங்கியது” போன்ற மகிழ்ச்சி.

    பூசாரி சங்கர் தேங்காப் பழத்தட்டோட நீட்ட வாங்கிட்டு, முனியாண்டியையும் சாமியாடுன அம்மாட்டையும் சொல்லிட்டு செல்லாயி அம்மன் கோயில இருந்து வீட்டுக்கு நகர்ந்தார்கள் நால்வரும்.

    பால்ராசும் சங்கீதாவும் வீடு வரைக்கும் பேசிக்கிட்டே போனார்கள்.

    சங்கீதா நல்ல கலர்னு சொல்ல முடியாது. இருவரும் ஜாடிக்கு  ஏத்த மூடி. ரெண்டு பேரும் உயரம் வளர்த்தியும் நிறமும் “சோதையானப் பூர்ணிக்காளைகள் போல் இருந்தார்கள்.”

    அரியர் பணம் கிடைச்சதும், சங்கீதாவுக்குத் தாங்க முடியல. ஏங்க… ஏங்க… ஏங்க… மெல்ல மெல்ல வாய் திறந்தாள் சங்கீதா.

    செல்லாயி அம்மனுக்கு ஆட்டுக்கிடாய் வெட்டுவதாக நேர்த்திருக்கேன்னு இழுத்தார்.

    பால்ராசு நான் நினைச்சேன். சொல்லியிருந்தா ரெண்டு மூனு மாசத்துக்கு முன்னே எங்க அண்ணகிட்ட ஆட்டுக் குட்டி வாங்கி விடச் சொல்லியிருப்பேன்ல… செலவு குறையுமில்ல..

    பங்குனி மாசம் சாமிகும்பிடும்போது நேர்த்திக்கடன நிறைவேத்திடலாங்க.

    உம் உம்ன்னு பால்ராசுத் தலையை ஆட்டினான். பங்குனித் திருவிழா வந்திடுச்சு. அம்மனுக்கு ஊர் சாட்டிக் கொடிக் கட்டியாச்சு. பால்ராசுவின் அண்ணன் திருமங்கலம் வெள்ளிக்கிழம சந்தையில மொரட்ட வெள்ளாட்டம் கிடாய வாங்கியாந்து கட்டியாச்சு.

    நாச்சியாபுரம் செல்லாயி அம்மன் திருவிழா கோலாகலமா நடந்தது. அம்மன் மஞ்சள் நீராட்டுக்கு தயாராகி விட்டாள். மூன்றாம் நாள் இரவு கிடா வெட்டுதல் நடைபெறும். பால்ராசுவின் அண்ணன் நல்லா உருமாக்கட்டிக் கிடாயப் பிடிச்சிட்டு நடக்க, பால்ராசு பிள்ளைக பெஞ்சாதிக் குடத்தில மஞ்சள் நீர் கலந்து எடுத்து வந்தாள்.

    கோயில் முகாமைத்தாரர்கள் கிடாய் வெட்டிய பின்னர், உள்ளூர் ஆட்கள் அடுத்து பால்ராசுக் கிடாய் கம்பீரமாய் வரிசையில் நின்றது.

    வரவேண்டிய சம்பளபாக்கி (அரியர்) நேர்த்திகடன் நிறைவேற்ற மகிழ்ச்சியில் புருஷனும் பெஞ்சாதியும் வெள்ளாட்டுக் கிடா முன்னே போக பின்னே போனார்கள்.

    ரேடியோச் சத்தம் காதை கிழித்தது. தெரு எங்கும் டியூப் லைட், சீரியல் பல்பு அலங்காரம், ஊர் மின்வெளிச்சத்தில் ஒளிர்ந்தது.

    கோயில் முன்பு கிடாய் நிறுத்தப்பட்டது. எங்கிட்டோக் கிடந்து பால்கார முனியாண்டி வந்துவிட்டான்.

    கிடா வெட்டா, தேங்காய் பழம் தட்டு எல்லாம் கோயிலுக்குள் பூசைமுடிந்து வெளியே வந்தது.

    சங்கீதா பெருமகிழ்ச்சி, ஊர்ல இருந்து உறவுகளை அழைத்திருந்தார். அவர்களும் வேன் பிடிச்சு வந்துவிட்டார்கள்.

    பொழைக்கப்போன இடத்தில் வீடுவாசக் கட்டி மகளும் மருமகனும் நல்லாயிருக்கிறாங்கன்னு ஊர்த் திருவிழாவுலக் கிடா வெட்டிக் கறிச்சோறு போடுறதுன்னாச் சும்மாவா?

    உறவுகள் வந்து சேர்ந்தார்கள். மந்தையிலக் கூட்டம் செமத்தியானக் கூட்டம். கிடாவெட்டும் இடமே ரத்தமும் சகதியுமாக கிடக்கு..

    வேட்டி சட்டைக் கரைப்பட்டுப் போகும். யாராச்சும் ஒரு ஆளு கயிறப்பிடிங்கன்னு மஞ்சத்தண்ணிய ஊத்துனதும். அங்ஙன இருந்த பெருசுகக் குலவப்போட கிடாய் முன்னை விடக்கிடாய்

    “நீட்டி விரப்பாய் நின்னது”. மார்நாடு கருப்பச்சாமி அருவா மாதிரி.

    தலையிலத் தண்ணிய ஊத்தியதுமே ஆட்டுக்கிடாய் தலையைக் குலுக்கனும்.

    பால்ராசுவின் வெள்ளாட்டம் கிடாய் நீட்டிய கழுத்தும் உடம்பும் வாளிப்பாக நின்னது. அந்தா இந்தான்னு பத்து குடங்களுக்கு மேல் தண்ணி ஊற்றிக்கிடாய் குலுக்கல…

    செய்தி மெல்ல மெல்ல காதுகளைக் கடந்து ஊருக்குள் பயணப்பட்டது.

    விளம்பரப்படுத்த பால்கார முனியாண்டி வாத்தியார் வீட்டுக்கிடான்னு…

    இன்னும் தலையக் குலுக்கல.. மார்நாடு கருப்பசாமி சாமியாடி ஆலமரத்துப்பட்டிப் பழனியாண்டிக் குடும்பன் வகையறா ஆட்கள் வந்து விபூதி போட்டா கிடாய் தலைக் குழுக்கிட்டுப் போகுது. கிடாய் காட்சிப் பொருளாய் நின்னது. கொட்டகை பூராவும் தலைகள்.

    பால்ராசுவுக்கும் சங்கீதாவுக்கும் மானப்பிரச்சனை. யாரு இன்னாரு வாத்தியார் வீட்டுக்கிடாவா? என்று பேச்சு. இதில ரெண்டு பெருசுக.

    நம் ஆத்தா பத்தி என்ன தெரியும். சுத்தபத்தமா இருக்கனும். சாமியாடியக் கூப்பிட்டு விபூதி போடச்சொல்ல வேண்டியது தானே? அவர் வந்து ஆடி ஆங்காரம் காட்டிப் பாவம் ஆட்டுக்காரவுக புருசனும் பொஞ்சாதியும் காலுல விழுந்து… எதுவுமே நடக்கல. கிடாய் ஊத்துற தண்ணிய வாங்கிட்டு சும்ம நிக்கிது.

    எப்பா, நம்ம ஊருக்குள்ள இதுவரைக்கு இப்படி நடந்ததுன்னு நான் கேள்விப்படலன்னு இருவரும் பேசிக்கொண்டார்கள்.

    என்னடி கொடுமையா இருக்கு. நானும் வாக்கப்பட்டு வந்து இருபத்து அஞ்சு வருசம் ஆகுது. இதுநா வரைக்கும் இப்படிக் கேள்விப்படல… சின்னாளு, பெரியாளு, மாத்தி, மாத்தி செல்லாயியிடம் மண்டியிட்டு வேண்டினார்கள். அன்னைக்கு சாமியாடி அம்மா காதுக்குப் போய்ச்சேர அது உயிர வெறுத்துட்டு வந்து…

    எத்தா, எம் பிள்ளைகப் பொளைக்க வந்த இடத்துள ஆசைப்பட்டு உம் இடத்துல இருக்கிதுக.

    சின்னஞ்சிறுசு. அறிஞ்சும் அறியாமலும் தெரிஞ்சம் தெரியாமலும் நடைமுறை தெரியாதுன்னு… நீ தான் பொறுத்துக்கன்னும்.. மங்குமங்குன்னு ஆடா,

    போடா எங்க அண்ணே வீட்டுக்குள்ள இருக்கான். அவன்தான் எங்களப் பாதுகாக்கிறவன். குமராண்டி மகன் குமராண்டி அவன்கிட்டப் போத்தா மகளே…

    உம் கவல  தீரும்…

    கெடா வெட்ட நின்னவுக வாயில இருந்துப் போப்பா, போயிப் பெரியவர் வீட்ல விபூதி வாங்கிட்டு… இங்க நடந்ததச் சொல்லு… பத்து அம்பது கொடம் தண்ணி ஊத்தியும் எல்லாம் காணிக்கையும் போட்டாச்சு… என்னான்னு தெரியில.

    அவுல கால்ல விழுங்க…

    ஊரின் கிழக்கே போனாப் பழையக்கார வீடு இருள் மண்டிப்போனநிலையில்ல, செல்வாக்கியமா இருந்த வீடு இப்பப் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது.

    பால்ராசு முகத்தில கவலை ரேகை, என்னவோ ஏதோ… என்னத் தப்பு எதுவும் புரியாமல் “பல்வலி வந்தவன் பேசாமல் இருப்பதைப் போல போயி நின்னான்.”

    உள்ளூர் ஆட்கள் கூட வந்தவர்கள் விலக்கிச் சொன்னார்கள். சூடம் பத்தி வாங்கியாறப்பட்டது.

    ஏய் ஏலா முத்துராக்கு எந்திரிச்சு அம்மில இம்புட்டு முனைமுறியாத மஞ்சள் அரைக்கனு முத்துராக்கு எதுவும் பேசல.

    அஞ்சறைப்பட்டியில் இருந்து மஞ்சளை நீட்டினாள். அங்ஙன இருந்த அடுப்பில் இருந்த சம்பல எடுக்கும் முன்ன பளுப்பேரிப்போன வேட்டிய இருக்கிக்கட்டி மேலே துண்டைக் கட்டிக் கொண்டார்.

    மஞ்சள முகத்துக்கு நேர கொண்டு போனார். எச்சிலைத் துப்பினார். கவுள் அடிக்கிதே. சீசீன்னு துப்பினார்… யார்டா இங்கியா… ன்ன பேசிக்கிட்டே,

    டேய், எங்கடா சூடம் வாங்கப் போனவன், வேகமா வந்து சூடத்த நீட்ட,

    வலது கையில் மஞ்சள் அதுக்கு மேல சாம்பல், அதுக்கு மேல சூடம்..

    ஊம்… பத்த வையிடா, எல்லாம் கட்டளை தான்.

    கிழக்கப் பார்த்து நின்னு சூடம் உள்ளங் கையில எறியுது, எறியுது. எறிஞ்சுட்டே இருக்கு.

    போடா இந்த மஞ்சள அரைச்சு வைச்சுட்டு பதினொருப் பணம் தண்டனைக் கட்டிட்டு, உம் வீட்டுப்போய்…

    எம் தம்பி தங்கை அதுதாண்டா உன் குலத் தெய்வத்துக்கு இருப்பத்தோரு பணம் முடிச்சு வச்சுட்டு. டேய்ன்னு குமராண்டிப் போட்டச் சத்தம், தெருவே அங்கதான் நிக்கிது.

    மஞ்சள அரைச்சு உம் சாமிக்கு வச்சுட்டு வீட்டுல தெளிச்சு விட்டுட்டு குளிச்சி ஈரத்துணிமணியோட நிறைக்கொடத் தண்ணியோட வாடா… பாக்கலாம்.

    நான் அங்க இருந்துக் காத்துக் கொடுக்கிறேன். போடு இருப்பத்தொரு உக்கி… உம் வீட்ல இருபத்தோரு உக்கி போடனும்.

    சொல்லவும் பால்ராசு எதுவும் பேசாமல் சாவிக் கொடுக்கப் பொம்மை மாதிரியே ஆகிட்டார்.

    பால்ராசும் சங்கீதாவும் போனாப் பிறவியில செய்த பாவமா என எண்ணும் அளவுக்கு மனம் சோர்ந்து விட்டார்கள்.

    ஊர்ல இருந்து வந்த உறவுகள் கஞ்சித் தண்ணியில்லாமக் கிடக்கு.

    ஏன்டாக்கிடா வெட்ட நேந்துக்கிட்டது குத்தமாடா கடவுளே! நாங்க ரெண்டு பேரும் ஒரு மாசமா சுத்தமா இருக்கோம்.

    பால்ராசும், சங்கீதாவும் மனத்துக்குள் பேசிக் கொண்டார்கள்.

    எப்படி என்னதாண்டா, தப்புப் பண்ணுனோம். வீட்டுக்குப் போன வேகத்தில கூடுதலா ரெண்டு மஞ்ச சேத்து…

    சங்கீதா அரைச்சுட்டு வீட்டுல குலத் தெய்வத்த வேண்டிட்டுக் குடத்துல மஞ்சளக் கறைச்சுக் குடத்தில தண்ணி கொண்டு வந்தார்கள் இருவரும்.

    ரெண்டு பேரும் எதுவும் பேசல.

    நடந்து கோயிலுக்கு வராக. ஊரே அவுக ரெண்டு பேத்தையும் வேடிக்கை பாக்கிது. அவுக கிடா தான். அவுக கிடா தான். “கிடாக் குலுக்காம நிக்கிது”. அவுக கிடாதான்.. கேட்காதக் காதுகளும் இல்ல, சொல்லாத வாயும் இல்ல… ஒரே நாள்ல ஊர் பூராவும் பேசுப்பொருள் ஆகிப்போனார்கள்.

    வெட்கம் புடுங்கித் தின்னுது. பால்ராசுவுக்கும் சங்கீதாவுக்கும்…

    இதுவுக்கு மேல வேற என்ன வேணும். இருவர் இதயமும் ஒரே மாதிரி துடித்தன. லப்டப்… லப்டப்… லப்டப்… லப்டப்… நிதாமான யோசித்தார்கள்.

    பால்ராசுக்கு மனதில் உதயமானது. இந்த சரவணன் சார் வம்பக் கருவட்டை வச்சு நம்மள வம்புள மாட்டி விட்டான்… மனுசன்?

    சங்கீதா டீச்சருக்கு மனதில் ஓடி ஓடி மோதி வெளியே வந்தது. செல்வி டீச்சர் பெண்ணு பெரிய மனுசியாகிருக்கு… முட்டைக் கொண்டாந்து வேணாம் வேணாம்ன்னு சொல்ல சோத்துல வச்சுட்டுப் போயிருச்சு…

    நான் சாப்பிடக் கூடாதுல்ல.. அப்படியே கொட்டிட்டேன்.. அவருக்குத் தெரிஞ்சாக் கொண்டே போட்டுடுவார். அவளுக்குத் தெரிஞ்சுச்சு… கொட்டு இல்லாம குலவ இல்லாம ஆடுமா? எல்லாம் கிரகம்…

    இரவு நடுசாமத்துக்கு முன்னக் கிடாய் வெட்டப் பூசாரி பறந்து கொண்டிருந்தார். குமராண்டி கோயில் நின்னார். பூசாரி சூடாம் காண்பித்தார்.

    டேய், சின்னஞ் சிறுசு… என்னக் கொறை இருந்தாலும் நீ ஏத்துக்கிடனும் மேலைக்கு… நல்லாச் செய்யுறோம்… உனக்கு ரெட்டைக்கிடா வெட்டுறேன்… பால்ராசும் சங்கீதாவும் வேண்டிக் கொண்டார்கள் ஒரே மாதிரியாக?

    டேய், குலுக்குடாத் தாயின்னு… அருள்வந்து ஆடியமேனிக்கு தண்ணியைக் குமராண்டி ஊத்தவும்..

    டேய், குலுக்குடா, குலுக்குடா இன்னு என்னவேனும் கிடாயா வெட்டுவதற்கு…

    அயோத்தி சேர்வை அரிவாளோடு நிக்கிறார். சாமியாடி சொன்ன மாத்திரத்தில் ஆட்டுக்கிடாய் தலைய குலுக்கியது. மீண்டும் தண்ணி ஊத்த மூனு முறை தலையைக் குலுக்கியது. இதுவரை ஊத்தியக் குடத்துக்கு அளவே இல்லை. பால்சாமியும் சங்கீதாவும்

    இருவரும் குமராண்டிக் காலில் கிடந்த கோபத்தில் விழுந்தது. அழுதமேனிக்கு எழுந்தார்கள்.

    மடியில் இருந்த சாம்பலைப் பூசிவிட்டார். மேலைக்கு நல்லா செய்யுங்க. சாமிக்குப் பயப்படுங்க.

    அதுக்குள் வெள்ளாட்டம் கிடாய் தலைவேறு உடம்பு வேறாக துண்டாகக் கிடந்தது மண்ணில்…

    பின்னத்தங்கால் சப்பை சாமியாடி வீட்டைத் தேடிப்போனது.

    தலையும் முன்னத்தங்காலும் காவக் கொடுக்கப்பட்டது. காவக்காரக வீட்டுக்கு. இரவு பனிரெண்டு மணி ஆயிருச்சுன்னு பூசாரி கோயில் திரையை இழுத்துவிட்டு கதவை அடைத்தார்.

    ஊரே வாத்தியார் வீட்டுக்கிடா குலுக்கிறுச்சு. யாரோ அடுத்த ஆண்டு ரெட்டைக்கிடா வெட்டுறேன்னு வேண்டிய பின்னாடி தான் ஆத்தா செல்லாயி அம்மான் ஏத்துக்கிருச்சாம்…


    சு. காந்திதுரை சுயவிபரக் குறிப்பு:

    சைவத்தைத் தமிழாகவும், தமிழைச் சைவமாகவும் ஆராதனை செய்கின்ற மதுரை தியாகராசர் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் முனைவர் சு. காந்திதுரை அவர்கள். அறுபது வயதினை நெருங்கும் வேளையில் பதினாறு வயது இளைஞனாய்ச் சுறுசுறுப்பாய் இயங்குகிறார். தனது குழவிப்பருவம் தொடங்கி இன்னாள் வரையிலான நினைவுகளைத் தோண்டுகிறார். சமூகத்தினை நுண்மையாய் கவனிக்கிறார். படைப்பாக்குகிறார். இலக்கியக் கூட்டங்களில் தொடர்ச்சியாய் பங்கெடுக்கிறார். எவ்விதச் சமரசமும் இன்றி தனது கருத்தினை முன் வைக்கிறார். வட்டார வழக்கினை உயர்த்திப் பிடிக்கிறார். புதிய படைப்பாளர்களுக்குப் பாடமாகிறார். விதைகள், பூஞ்சிரிப்பு, புதுவாழ்க்கை, ஒற்றைவாளி, கருவறை, சாமி போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.


     

    Share
  • ஒரு கதை

    ஒரு கதை

    அண்ணாகண்ணன்

    குருதிப்புனல் திரைப்படத்தின் கதைப்படி, காவல் துறை அதிகாரிகள் இருவர், தீவிரவாதக் குழுவிற்குள் ஊடுருவிக் கலப்பர். அவர்களுள் ஒருவர், படிப்படியாக முன்னேறி அதன் தலைமைப் பதவிக்கு வருவார். ரமணா திரைப்படத்தில், ஒரு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் போட்டித் தேர்வு எழுதி, அரசின் பல்வேறு துறைகளில் நுழைந்து நேர்மையாகப் பணியாற்றுவர். இதே போல் என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

    உலகையே மாற்ற வேண்டும் என்ற உந்துதல் கொண்ட கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஒரு குழுவாகச் சேர்கின்றனர். நாட்டின் அவல நிலை, அவர்களை வருத்துகிறது. சும்மா எழுதிக்கொண்டிருந்தால் சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றனர். இலஞ்சத்தை ஊழலையும் ஒழிக்க வேண்டும். நல்லாட்சி வழங்க வேண்டும். சரியான நீதி கிடைக்க வேண்டும். உரியவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். இவற்றையெல்லாம் நிறைவேற்ற, நேரடி அரசியலில் இறங்க வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என முடிவு செய்கின்றனர்.

    கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவுக் குரல் கொடுத்தால் போதாது என்று நேரடியாகக் கட்சிகளில் சேர்கின்றனர்.
    தங்களுக்குச் சாதகமான கட்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் சேர்கின்றனர். தங்கள் பேச்சாற்றலால், எழுத்தாற்றலால் முழுநேர அரசியல்வாதிகளையே தூக்கிச் சாப்பிடும் வகையில் செயல்படுகின்றனர். தங்கள் தலைவர்களைப் போற்றுவதானாலும் எதிர்க் கட்சிகளைத் தாக்குவதானாலும் முரட்டு அடி அடிப்பதில் முத்திரை பதிக்கின்றனர். பிரசார பீரங்கிகளாக வளர்கின்றனர். செய் அல்லது செத்துமடி, ஒன்றுசேர் புரட்சி செய், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என வீரமாகப் பேசுகின்றனர்.

    அவர்களின் பெயர்கள் சுவரொட்டிகளில், பதாகைகளில் சிறிய எழுத்தில் தொடங்கி, படிப்படியாகக் கொட்டை எழுத்தாக வளர்கின்றன. கட்-அவுட்டுகளிலும் இவ்வாறே அவர்களின் உருவம் வளர்கிறது. மேடைகளில் சிறிய மாலை, ஆளுயர மாலையாக வளர்கிறது. சிறிய நினைவுப்பரிசு, பெரிய நினைவுப்பரிசாக வளர்கிறது. தொலைக்காட்சிகளில் சில விநாடிகள் தோன்றியவர்கள், மணிக்கணக்காகப் பேசுகிறார்கள். பத்திரிகைகளில் ஓரச் செய்தியாக இருந்தவர்கள், தலைப்புச் செய்தியாக வளர்கிறார்கள். அவர்கள் வெளியிடும் புத்தகங்களும் சிறிய அளவிலிருந்து பெரிய புத்தகங்களாக வளர்கின்றன. விரைவில் அவர்களுக்குப் பட்டங்கள் கிடைக்கின்றன. தலைவர்களின் இதயத்தில் இடம் பிடிக்கின்றனர். கட்சிகளில் பொறுப்புகளுக்கு வருகின்றனர். படிப்படியாக முன்னேறி, தேர்தலில் போட்டியிடுகின்றனர். பதவிகளுக்கு வருகின்றனர்.

    இந்த இலக்கியவாதிகளும் அவர்களின் உள்வட்டத்தினரும் கட்சிகளின் அனைத்து நிலைகளிலும் அனைத்துக் குழுக்களிலும் இடம் பெறுகின்றனர். சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளுக்குமான செயல்திட்டத்தை இவர்கள் வடிவமைக்கின்றனர். எந்தக் கருத்தை முன்வைக்க வேண்டும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எப்படி முறியடிக்க வேண்டும், யாருடைய வாக்குகளை எப்படிப் பெற வேண்டும், எந்தக் கூட்டத்தை எப்படித் தூண்டிவிட வேண்டும், தங்களுக்குப் பாதகமான சூழலில், திடீர் சர்ச்சையைக் கிளப்பி, பிரசாரங்களை எப்படித் திசைதிருப்ப வேண்டும் என அனைத்திலும் நிபுணத்துவம் பெறுகிறார்கள்.

    அடுத்தடுத்த தேர்தல்களில் வேட்பாளர்கள் யார் என்பதிலிருந்து மாநில அரசின் விருதுகள் யாருக்குக் கிடைக்க வேண்டும், யாருடைய புத்தகங்களை நூலகத்திற்கு வாங்க வேண்டும், தலைவர்களை யார் சந்திக்க வேண்டும், தலைவர்கள் யாரைச் சந்திக்க வேண்டும், கூட்டங்களில் தலைவர்கள் என்ன பேச வேண்டும் என்பது வரை இவர்களே தீர்மானிக்கின்றனர். இவர்களின் படைப்புகள், பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படுகின்றன. தேர்வுகளில் இவர்களைப் பற்றிய கேள்விகளுக்கு மாணவர்கள் விடை எழுதுகின்றனர்.

    மாநிலத்தில் மட்டுமின்றி, மத்தியிலும் இவர்கள் அதிகாரத்திற்கு வருகின்றனர். இப்போது, நாட்டின் குரலாக இவர்கள் ஒலிக்கின்றனர். அயல்நாட்டுத் தூதுக் குழுவிலும் இவர்களே இடம் பிடிக்கின்றனர். இவர்களின் பின்னால் இலட்சக்கணக்கானவர்கள் திரள்கின்றனர். சுழல் விளக்கு பொருத்திய மகிழுந்துகளில் இவர்கள் விரைகின்றனர். இரண்டாம் கட்டத் தலைவர்களாக உயர்கின்றனர். எல்லாக் கட்சிகளிலும் இவர்களே மூளையாகச் செயல்படுகின்றனர். எந்த முடிவையும் இவர்களைக் கேட்காமல் தலைவர்கள் எடுப்பதில்லை. இவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சி என்ன? இவர்கள் என்னென்ன சமூக மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்? புதியதோர் உலகைப் படைத்தார்களா? மீதியை வெள்ளித் திரையில் காண்க.

    இந்தக் கதையைத் திரைப்படம், வலைத்தொடர் போன்று ஏதேனும் வடிவத்தில் எடுப்பவர்கள், எனக்கு உரிய காப்புரிமைத் தொகையை (ராயல்டி) தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    Share
  • வளையல் (சிறுகதை)

    வளையல் (சிறுகதை)

    சங்கரி கண்ணன்

    புவனா புரண்டு படுத்தாள். அவளுக்கு உறக்கமே வரவில்லை. நாளை அவளது அத்தை மகளின் திருமணம். நாளை அம்மாவுடன் அவளும் செல்ல வேண்டும்.

    நாளை தான் தான் போட்டுக்கொள்ள அந்த மயில் வளையலை அம்மா தருவாள். அந்த வளையலை நாளை போட போகிறோம் என்ற மகிழ்ச்சியான நினைவுவே புவனாவிற்கு தூக்கம் வராமல் செய்தது.

    ஏதாவது விசேஷம் என்றால் மட்டுமே அம்மா இந்த வளையலை அணிவதற்கு அனுமதிப்பாள். ஏனென்றால் அதன் வேலைப்பாடுகள் அவ்வாறு இருக்கும். தினமும் போட்டால் அதில் உள்ள மயில் கழுத்து உடைந்து விடும். இப்போது இருப்பது இந்த வளையல் மட்டுமே அதனால் அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று கூறுவாள்.

    ஒரு காலத்தில் இதைப் போன்று வேலைப்பாடுகள் மிக்க நகைகள் ஏராளமாக இருந்தது. வாழ்க்கையின் சுழற்சி , கடன், தந்தையின் இழப்பு காரணமாக அனைத்தும் போய் இப்பொழுது இந்த வளையல் மட்டுமே மிச்சம் இருக்கிறது. இந்த வளையலைத்தான் சீதனமாக கொடுத்து புவனாவின் திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற கனவில் இருந்தாள் அவளின் தாய்.

    தனது அத்தை மகள் திருமணத்திற்கு அந்த வளையலை அணிந்த போது புவனாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த இரண்டு வளையல்களை அணிந்தால் மட்டும் போதும் அவள் தேவதையாக இருப்பதைப் போல உணர்வாள். இந்த வளையல் ஆள் தான் தன் கையே அழகாக இருப்பது போன்று பேசுவாள்.

    அந்த வளையலும் மிகுந்த வேலைப்பாடுடன் மிக அழகாக இருக்கும். தன்னுடன் படிக்கும் தோழிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த வளையலைப் போலவே அவர்களும் அதே வேலைப்பாடுடன் கூடிய வளையலை வாங்கினார்கள். ஒரு சிலர் அதை மாதிரியாக வைத்து அதே போல வளையலைச் செய்து கொண்டார்கள். யாருடைய வளையல் எப்படி இருந்தாலும் அவள் வளையலை விட அழகாக இருந்தாலும் கூட அவளுக்கு அவளுடைய மயில் வளையல் மட்டுமே மிகவும் பிடிக்கும் அந்த வளையல் என்றால் அவளுக்கு உயிர் .

    தனது அத்தை மகளின் திருமணத்திற்கு சென்ற போது புவனாவின் திருமணமும் நிச்சயமானது. மாப்பிள்ளை சங்கரின் குடும்பம் நடுத்தர வசதி கொண்ட குடும்பம்.

    சங்கரின் தந்தையின் மரணத்திற்கு பின்பு குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொண்டான் சங்கர். ஒரு அக்காவிற்கு திருமணம் முடிந்து விட்டது. தங்கை மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

    மிக எளிமையாக முடிந்தது சங்கர் புவனாவின் திருமணம். புவனாவின் தாய் வீட்டு சீதனம் அந்த வளையல் மட்டுமே. எப்போதும் போல அதை கையில் அணியாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.

    சங்கரின் சம்பளம் வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாக இருந்தது. அதிகப்படியாக எதுவும் வாங்க முடியாது. சங்கரின் தங்கை சுமதி படிப்பில் கெட்டிக்காரி. பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள்.

    சுமதியை நல்ல கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே சங்கரின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

    தன் தாயின் உயிரை காப்பாற்ற தன்னால் முடிந்த அளவுக்கு பொருட்ச செலவு செய்து தன் தாயைக் காப்பாற்றினான்.

    சுமதியின் படிப்புக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ? கிடைக்கும் கல்லூரியில் படித்துக் கொள் ! என்று கூறி முடித்து விட்டான்.

    இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் கூட யாருமே புவனாவில் வளையலை பற்றி பேசவில்லை.

    புவனா தான் தன் வளையலை சங்கரிடம் கொடுத்து இதை விற்று சுமதியை நல்ல கல்லூரியில் படிக்க வையுங்கள் என்று கூறினாள்.

    புவனா இந்த வளையல் உனக்கு மிகவும் பிடித்த வளையல். அதுமட்டுமின்றி இதைத் தவிர வேறு நம்மிடம் தங்கப் பொருள் எதுவும் இல்லை.

    அதனால் என்ன ? இனி வரும் நாட்களில் நீங்கள் எனக்கு இதுபோன்ற வளையலை வாங்கி தருவீர்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறி வளையலை சங்கரிடம் கொடுத்தாள்.

    சங்கரும் அந்த வளையலை விற்று சுமதி ஆசைப்பட்ட கல்லூரியில் சேர்த்து விட்டான். சுமதிக்கும் அந்த வளை எவ்வளவு முக்கியமானது என்று நன்றாக தெரியும்.

    வருடங்கள் கடந்தது. சுமதி நன்றாக படித்து அவ் ஊரின் மாவட்ட ஆட்சியாளராக பதவி ஏற்றாள்.

    தனது அண்ணிக்கு மயில் கழுத்து வைத்த விலை உயர்ந்த வளையல்களை வாங்கி பரிசளித்தாள்.

    எத்தனையோ புதுப்புது வேலைப்பாடுகளுடன் கூடிய வளையல்கள் வந்தாலும் அவளுடைய வளையல்களுக்கு அது ஈடாகாது.

    தன்னுடைய வளையல் முக்கியமா ? சுமதியின் கல்வி முக்கியமா என்று யோசித்த போது , சுமதியின் கல்வியே முக்கியம் .

    அவளின் மயில் கழுத்து வளையலுக்கு முன்பு சுமதியின் மாவட்ட ஆட்சியாளர் பதவி மிகவும் அழகாக இருந்தது. கல்வியை அழகானது.

    Share
  • மாற்றம் (சிறுகதை)

    மாற்றம் (சிறுகதை)

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்,
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    E.mail.Kumaritathithan@gmail.com

    கல்லூரியில் உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பாடவேளை. மாணவன் கோகுல் வகுப்பறை சன்னல் வழியே தோட்டத்தில் எச்சிலைத் துப்பினான். வராந்தாவில் நடந்து சென்ற மாணவியர் முகம் சுழித்தபடி கடந்து சென்றனர்.

    “கோகுல் நீ துப்பின இடத்த பாரு… பான்மசாலா கறை புல்வெளிய அசிங்கமாக்கிடிச்சி” என்றான் குமரன். அதற்கிடையில் பேராசிரியர் வந்துவிட அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். பக்கத்து வகுப்பிற்குச் செல்வதற்காக, பேராசிரியை வாயிலைக் கடக்க, வேகமாக கதவருகே வந்து, “வணக்கம் மேடம்” என்றபடி ஏதோ பேசத் தொடங்கினார் பேராசிரியர். கோகுல் பாக்கெட்டுக்குள் கைவிட்டு சிறிய பாட்டிலைத் திறந்து மாத்திரை ஒன்ரே எடுத்து விழுங்கினான்.

    “என்ன மாத்திர சாப்புடுறே?” என்றான் குமரன்.

    “எல்லாம் சந்தோசமா நம்மள வச்சிகிற மாத்திரதான் … போத மாத்திர”

    “மாத்திர வயித்துல போயி அரிக்க போகுது… உடம்ப ஏன் கெடுத்துக்கிற…”

    “ஏய் நேத்துதானே இந்த வாத்தியார் ஹாஸ்டல்ல சாப்பாடு சரி இல்லைனு கம்பிளைண்ட் பண்ணுனப்போ, வயித்துக்குள்ள கல்லைப் போட்டாலும் ஜீரணமாயிடுற வயசுனாறு, சோ…. எல்லாம் சரியாயிடும்.” என்றபடி மெதுவாகச் செல்போனை பையில் இருந்து எடுத்தான்.

    “டேய் சார் பாத்திட போறாரு….”

    “சாரும் மேடமும் பேசி முடிக்கதுக்குள்ள, ஒரு வாட்ஸ்அப்  கான்வகேசனே முடிச்சிடுறேன்.” என்றபடி செல்போனை இயக்கிக் கொண்டிருந்தான்.

    “இண்ணைக்கி மட்டும் நாலாது தடவயா கிளாஸ்ல போன் யூஸ் பண்ற…” என்று கோகுலுக்கு மட்டும் கேட்கும் வகையில் சீறினான் குமரன்.

    கோகுல் பதிலளிக்க நிமிர்வதற்குள், பேராசிரியர் மேடத்திடம் பேசி முடித்துவிட்டு மாணவர்களிடம் தொடங்கிவிட்டார். சென்ற வாரம் நடந்த தேர்வின் விடைத்தாள்களைக் கொடுக்கத் தொடங்கினார்.

    கோகுலிடம்  விடைத்தாளைக் கொடுத்துவிட்டு, “நல்லா படிக்கிற பையனா இருக்கிறே. எல்லாத் தேர்விலேயும் 90%க்கு மேல் வாங்குற. ஒழுக்கம் தான் உன்னோட குறை. புருஞ்சுக்கோ கோகுல்,  ஒழுக்கம் தான் கடைசிவரை நம்மள காப்பாத்தும்.” என்று சலித்துக் கொண்டார்.

    •••

    வகுப்பு முடிந்து வராந்தாவில் குமரனும், கோகுலும் நடந்து சென்றனர்.

    கோகுலிடம், “ஏன்டா சார் சொன்னத கவனிச்சியா, உன்னோட ஒழுக்கத்த பத்திதான் கவலைப்படுறாரு” என்றான் குமரன்.

    “என்ன பண்ணுறது, நீ உயிர் நண்பனா பழகுறதுனால உங்கிட்ட சொல்றேன். எனக்குக் கூடதான் கவலையா இருக்கு.”

    “அப்புறம் என்னடா… எல்லாத்தையும் விட்டிடு”

    “போன வருசம்வர எந்த கெட்டப் பழக்கமும் கிடையாதுடா எனக்கு.”

    “ எப்படிடா திடீர்னு”

    “சூழ்நில… நிம்மதி இழந்த சூழ்நில… போன வருசம் அப்பா விபத்துல இறந்திட்டாரு… நோய்வாய்ப்பட்ட அம்மா, மரணம் எந்த நிமிடமும் வரலாம்ங்ற நிலையில. அவங்க நிம்மதியா இருக்க ஏதாவது செய்யணும். எப்படி தீர்க்க முடியும்ணே தெரியாத அளவு கடன்.  அக்கா இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணி கொடுக்கணும். அவங்களுக்கு நல்ல டிரஸ், சாப்பாடு எதுவும் இல்ல. அபத்தம் எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி… பயமா இருக்கு, அவங்கள கரசேக்கணும். அவங்க எல்லாம் சந்தோசமா இருக்கிறமாதிரி வாழ்க்கை அமையணும்.”

    “அதுக்கு நீ நல்லா இருந்தாதானே முடியும்.”

    “எப்போ இன்னும் பத்து வருசம் கழிச்சா… அதுக்குள்ள குடும்பம் என்ன ஆகும்…”

    “யாருக்கிட்டயாவது உதவி கேட்கலாம் இல்லையா”

    “உனக்கு உலகத்தபத்தி புரியல…. பட்ட அவமானம், அசிங்கம் கொஞ்சம் கிடையாது. சொந்த பந்தம், ஊர் உறவு எல்லாம் ஏளனமா பார்த்தபோதான் இப்படி ஆகிட்டேன்.”

    “எத்தனபேர் கிட்ட கேட்டே… யாருமே உதவலியா”

    “ஆமா. ஆனா ஒருத்தன் கேட்காமலேயே உதவினான்.”

    “உன்ன பார்க்க வருவானே… அந்த தாடிக்காரனா?”

    “ம்… அவன் தப்பானவன்தான். பண்ண சொல்ற போதை யாவாரமும் தப்புதான். வேற வழி தெரியல… யாரையும் அண்டியிருக்காம பணம் சம்பாதிக்கிற வழின்னான். கையில் காசில்லாமலும், பிரதிபலன் இல்லாமலும் யாரும் எதையும் செய்றதில்லை. புரிஞ்சுதான் விழுந்திட்டேன்.” சொல்லும்போது கண்கள் கலங்கியிருந்தன.

    “வேற ஏதாவது நல்லவழிய பாக்கலாம்டா, எங்க அப்பாகிட்ட பேசி பார்க்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாடிக்காரன் வந்துவிட, அவனை நோக்கி சென்றான் கோகுல்.

    •••

    மறுநாள் அதிகாலையிலேயே விடுதியில் கோகுலின் அறைக் கதவைத் தட்டினான் குமரன். அவன் முகத்தில் கரைகடந்த மகிழ்ச்சி. கதவைத் திறந்தான் கோகுல்.

    “வா குமரா” என்றவனிடம் எவ்வித மகிழ் உணர்வோ, வெறுப்போ, பகையோ, எதிர்ப்போ எதுவும் இல்லை.

    “கோகுல் எங்க அப்பாகிட்ட உன்னப்பத்தி பேசினேன். அவர் புதுசா ஒரு கோசாலா அதுதான் பசுமடம் ஆரம்பிக்றார். அத நிர்வகிக்கிற உதவிய உங்க அம்மா, அக்காலாம் செய்தா நல்லாயிருக்கும். அவங்களுக்கு உதவ அங்க ஆட்கள் இருப்பாங்க… கோகுல் இத அம்மாவ ஒத்துகிட சொல்லுடா… பிரதிபலனா எங்கப்பா மூலம் கிடைக்கிற ஊதியம், உங்க குடும்ப நிலைய மாற்றும். நீயும் நிம்மதியா புதுமனுசனா படிக்கலாம்” என மூச்சுவிடாமல் பேசி முடித்தான்.

    அப்பொழுது குமரனுக்கு அவனது அப்பாவிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது.

    “அப்பா இப்போதான் கோகுல்கிட்ட பேசினேன்… ம்… இதோ ஃபோனை அவன்கிட்ட கொடுக்கிறேன். இந்தாடா பேசு..”

    “அப்பா நல்லா இருக்கீங்களா… ம் ஆமா…. குமரன் சொன்னான் …. சரிங்கப்பா…” செல்போனை அணைத்த கோகுல், குமரனைக் கட்டித் தழுவிக் கொண்டான். கோகுல் முகத்தில் நீண்டா நாட்களுக்குப் பின் நம்பிக்கை உணர்வு தென்படத் தொடங்கியது.

    Share
  • சாதுரியம் (சிறுகதை)

    லோ. பாலமுருகன் 

    “ட்ரீங்..ட்ரீங்” போன் ஒலித்தது.’ராமின் மனைவி கலா, “என்னங்க நான் அடுப்பு வேலையா இருக்கேன், உங்க போன் அடிச்சுகிட்டே இருக்குது என்னன்னு தான் பாருங்களேன்”.

    தனது ரூமின் கதவை உள் பக்கமா சாத்திக்கொண்டு ஃபைலை தேடும் போது, அவனுக்கு தன் மனைவி சத்தம் போட்டு கூப்பிட்டது கேட்கவே  “சரி கலா நான் பார்க்குறேன்”. என்றான். அறையிலிருந்து அவசர அவசரமாக வெளியே வந்து ரிஸீவரை எடுத்து ஹலோ! என்றான்” ராம்.

    “சார் நான் அசோக் பேசுறேன்”. ‘சொல்லுங்க என்ன?”

    “நீங்க வீட்டுமனை ஏதாவது பார்க்கிறீங்களா?” ‘ஆமாம் நாங்க பார்த்து வருகிறோம் அதுகென்ன இப்போ?’

    “ஒன்னுமில்ல, உங்களுடைய ரிபரன்ஸ் எனக்கு எங்க கம்பெனி அனுப்பியிருந்தாங்க. அதான் உங்களுக்குப் போன் போட்டுப் பார்த்தேன்”.

    “ஓக்கே எந்த இடத்தில் இருக்கு நீங்க சொல்ற இடம்?”

    “அசோக் நகர் தெரியுமா சார்?” ‘தெரியும் சொல்லுங்க’.

    “அங்கே 7ஆம் அவின்யூவில் ஒரு கிரவுண்ட் இருக்கு”.

    “எவ்வளவு சொல்ராங்க?”

    “அதெல்லாம் நாம இடத்தைப் பார்த்த பிறகு பேசிக்கிலாமே?”

    “உங்க இடத்தின் லொகேஷன் கொஞ்சம் ஷேர் செய்ய முடியுமா?”

    “இதோ இப்பவே அனுப்புறேன் சார்” போன் துண்டிக்கப்பட்டது “…………” இரண்டு மூன்று நிமிடம் ஒரே மௌனம் நிலவியது வீட்டில்.

    கலா, “என்னங்க யாரு போன்ல?” அது ஒன்னுமில்ல. நாம இடம் பார்க்கிறோமில்ல அது சம்பந்தமாகத் தான் அசோக் என்பவர் பேசியிருந்தார். “ நான் அவரிடம் இடத்தின் லொகேஷனை கேட்டிருக்கேன்”.

    “அப்படியா எப்போ நாம போய்ப் பாக்கலாம்?” “உனக்கு இந்த வாரம் சனி கிழமை கம்பெனியில் வேலை உள்ள தா?”

    “இல்லை” என்றாள் கலா”.

    ‘சரி அப்படினா நான் அசோகிடம் நாங்க இந்த வாரம் சனி கிழமை மத்தியம் வருகிறோம் என்று சொல்லிடுறேன்.

    ***

    ராம், ஒரு கார் உதிரி பாகம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இன்ஞினியராகப் பணிபுரிகிறான். கலா, சாப்ட்வேர் கம்பெனில் புரோகிராமராக வேலை செய்கிறாள். நல்ல வருமானம் இருவருக்கும், சுமார் வருடம் ஏழு லட்சம் சி.டி.சி வாங்குறான் ராம். கலாவும் இவன் வாங்கும் அறவிற்கு தான் பெறுகிறாள். வருடத்திற்குப் பார்க்கப் போனால் இருவரது சம்பளமும் பிடித்தம் போகச் சுமார் பன்னிரண்டு லட்சம் கைக்கு வரும். அதனாலேயே அவர்கள் ஒரு சொந்த வீடு இருந்தால் நல்லா இருக்கும் என்று பல வருடங்களாகத் இடம் தேடி வருகின்றனர்.

    தற்போது இருவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 500 ஸ்கொயர் ஃபீட் இடத்தில் அவர்களது வாழ்வை நடத்திவந்தனர். அவர்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லை, அதனாலேயே அவர்கள் இப்போது  மும்முரமாக வீட்டுமனை வாங்க முயலுகிறார்கள், அதில் ஒரு சிறிய வீடு கட்டவேண்டும் என்று ஆசை.

    ‘பிள்ளைகள் பிறந்தவுடன் அனைவரும் புது வீட்டில் வசிக்கத் துடங்கிடலாம் என்று யோசித்திருந்தனர்’.

    “ஏண்டிமா கலா கிளம்பியாச்சா?”

    “என்னங்க சும்மா தொனத்தொனன்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தா எப்படிக் கிளம்ப முடியும்?”

    “சரி நான் இனி உன்னைக் கூப்பிடல, கொஞ்சம் சீக்கிரம் ரெடியாயிட்டு வெளியே வந்தா போதும்”

    “இதோ இரண்டு நிமிஷம் கொடுங்க வந்துடுறேன்”.

    அறையின் கதவு திறக்கப்பட்டது, கலா அறையினுள்லிருந்து வெளியே வந்தாள். “ வாங்க போகலாம், ஏன் இன்னும் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கீங்க?”

    ராம், அவளை அப்படியே கண்ணோடு கண் பார்த்தான். “……” ‘சில விநாடிகள் இருவரிடத்திலும் மௌனம் நிலவியது’. அடுத்த அடுத்த விநாடிகளில் இருவரும் வீட்டின் முகப்பு கதவை தாளிட்டு சாத்தி விட்டு வெளியே வந்தனர்.

    ராம் ஸ்கூட்டரை உதைத்தவுடன் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகிவிட்டது, “டப்பு..டப்பு..ட்ரூ..ட்ரூ” சத்தம் எழுப்பியது வண்டி. கலாவும் ஸ்கூட்டர் பின் புறம் அமர்ந்துகொண்டாள். ஸ்கூட்டர் விரைந்தது அந்த இடத்தின் லொகேஷனை நோக்கி. ஒரு மணி நேரம் வண்டியில் பயணம் செய்து பார்க்க வேண்டிய இடத்தை வந்து அடைந்தனர் இருவரும்.

    “ஹலோ சார்!” “ஹலோ மேடம்!”

    “நான் அசோக்”

    “ஹலோ ஹவ் ஆர் யூ?”

    “சார் ஐ அம் ஃபைன்”

    “சொல்லுங்க எந்த இடம்?” இதோ இப்படி வாங்க, இங்க பாருங்க மொத்தம் ஒரு கிரவுண்ட் இருக்கு.” “உங்களுக்கு வேண்டுமானால் நீங்க அரைக் கிரவுண்ட எடுத்துக்கலாம்”.

    ‘இதில அட்வான்டேஜ் ஒன்னு இருக்கு யார் முதலில் நிலத்தை வாங்குகுறாங்களோ! அவர்கள் நிலத்தின் முகப்பு பகுதியை வச்சுக்கலாம். பிறகு வாங்குபவர்களுக்கு நிலத்தின் பின் புறம் தான்’.

    ***

    ராம் மற்றும் கலாவிற்கு இடத்தைப் பார்த்த உடனே அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது, அசோகிடம் விலை என்ன என்று கேட்டனர். “சார் இடத்தின் ஓனர் ஒரு கிரவுண்டு என்றால் ஒரு விலை சொல்ராரு, பாதிப் பாதியாக வாங்கினால் வேறு விலை”.

    “ஓக்கே சொல்லுங்க என்ன விலை ஒரு முழுக் கிரவுண்டுக்கு?” ஸ்கொயர் ஃபீட் 6000 ரூபாய், “உங்களுக்கு எத்துணை ஸ்கொயர் ஃபீட் வேண்டும்?””எங்களுக்கு அரைக் கிரவுண்டு வேண்டும்”.

    “அப்படினா மொத்தம் நீங்க 1200 ஸ்கொயர் ஃபீட் கேட்கிறீங்க”.

    “ஆம் சரியே எங்களுக்குப் பாதிக் கிரவுண்டுதான் வேண்டும், அதுவும் முகப்பு பகுதி”.

    “ஆல்ரைட் சார் முழுக் கிரவுண்டை நான் சப்-டிவிஷன் செய்ய வேண்டும் முதலில்”. 1200 ஸ்கொயர் ஃபீட், இரண்டா பிரிக்க வேண்டும். டோக்கன் அட்வான்ஸ் கொடுத்தா நான் அடுத்த வேலையை ஆரம்பித்து விடுவேன்.

    ராம் மற்றும் கலா இருவரும் தங்களின் முகத்தை ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர். “ராம், கேட்டான் என்ன கலா இடம் புடிச்சிருக்கா?” ‘அவள் “இவ்வளவு வருஷமா பார்த்ததுல” இந்த இடம் கொஞ்சம் நல்லா இருக்கிற மாதிரி தெரியிது, அதனால் பேசாம இந்த இடத்தை முடித்து விடுங்க என்றாள்’.

    “முடிவா ஸ்கொயர் ஃபீட் ரேட்டை ஃபைனல் செய்யுங்க, நாங்க இந்த அரைக் கிரவுண்டை வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.” என்றான் ராம்.

    “சார் அதான் நான் முதலிலே சொன்ன மாதிரி ஸ்கொயர் ஃபீட்6000 ரூபாய்”

    “ஸ்கொயர் ஃபீட்6000 ரூபாய் ரொம்ப அதிகம் கொஞ்சம் குறைத்து சொல்லுங்க”.

    “இதில் எனக்கு ஒன்னும் லாபமில்ல ஓனர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் உங்களுக்குச் சொன்னேன்”.

    “முடிவாக ‘எவ்வளவு’ன்னா கொடுப்பார்”.

    “ஸ்கொயர் ஃபீட் 5800 ரூபாய் என்றால் கொடுப்பார் சார்”.

    “நல்ல யோசித்த பிறகு சொல்றேன் ஸ்கொயர் ஃபீட் 5500 ரூபாய் என்றால் உடனே நாங்க இந்த இடத்தை வாங்கிக் கொள்கிறோம். வேண்டுமானல் போன் போட்டு ஓனரிடம் பேசி ஒரு முடிவு எங்களுக்குச் சொல்லுங்க”.

    ***

    தொலைப்பேசியில் பேசிய பிறகு அசோக் இவர்களிடம் ஸ்கொயர் ஃபீட் 5500 ரூபாய் ஓக்கே என்று கூறி விட்டார் ஓனர் என்றான்.. இவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி, இருந்து இருந்து ஒரு நல்ல இடம் அமைய போகிறது என்று மனதில் ஒரு இனம் புரியாத ஆனந்தம்.

    “சார் டோக்கன் அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்குறீங்க?”

    “உங்க ஜீ.பேவில் டோக்கன் அட்வான்ஸ் 5000 ரூபாய் உடனே செலுத்துகிறேன்”.

    “உங்களுக்குக் கம்பெனி ரூல்ஸ் தெரிவிக்கிறேன். ஏனெனில் முதலில் சப்-டிவிஷன் செய்ய வேண்டும். அதற்குச் செலவாகும், அதை ஓனர் கொடுக்க மாட்டார்”. நீங்கள் தான் இந்தக் கிரவுண்டை வாங்கும் பணத்திலிருந்து சப்-டிவிஷன் சார்ஜை செலுத்தவேன்டும்.

    “சப்-டிவிஷன் செய்வதற்குக் குறைந்தது எவ்வளவு செலவாகும்?” அரசாங்க வேலை அல்லவா குறைந்தது ஒரு லட்சம் ஆகும்”.

    “நீங்கள் எனக்கு இரண்டு தவனையாகச் செலுத்துங்க., நான் மற்ற காரியங்களைப் பார்கிறேன்”.

    “இல்லை முதலில் இடத்துடைய பத்திரத்தின் நகல் எங்களுக்கு வேண்டும்”. அதை நாங்கள் எங்கள் அட்வகேட் இடம் காண்பித்து வில்லங்கம் ஏதேனும் உள்ள தா என்று சரி பார்த்த பிறகு நீங்க கேட்ட தொகையைக் கொடுக்க முடியும்”.

    “அதுவும் சரியே, இன்று சாயங்காலம் நான் உங்களிடம் இந்த இடத்தின் பத்திரத்தின் நகலை தருகிறேன்”. இதற்குப் பிறகு ராம் மற்றும் கலா தங்களுடைய ஸ்கூட்டரில் கிளம்பி வீடு வந்தடைந்தனர்.

    ***

    சாயங்காலம் அசோக் சொன்னபடி பத்திரத்தின் நகலை ராமிடம் கொடுக்க. அதை வாங்கிப்பார்த்தான் ராம், எங்களுக்குக் குறைந்தது மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும். இந்தப் பத்திரத்தின் நகலை எங்களுடைய அட்வகேட் இடம் கொடுத்து வில்லங்கம் சரிபார்த்த பிறகு, நான் உங்களுக்குத் போன் போட்டு பேசுறேன் சரியா?”.

    அடுத்த நாள் அட்வகேட் இடம் பத்திரத்தின் நகலை கொடுத்து சரி பார்க்க சொன்னான் ராம். அட்வகேட் பத்திரத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, “உங்களுக்கு ஓரல் கன்சல்டேஷன் வேண்டுமா? அல்லது ரைட்டப்பில் வேண்டுமா என்று கேட்டார்”.

    “அட்வகேட் சார் எங்களுக்குக் கிளியரன்ஸை ரைட்டப்பில் கொடுத்துடுங்க அதான் சரியாக இருக்கும்”.

    “அப்போ போயிட்டு இரண்டு நாள் கழித்து வாங்க என்னுடைய டீம் இதை அனைத்தையும் ஸ்கூர்டனைஸ் செய்து எனது பார்வைக்கு வைப்பார்கள். நான் அதை ஒரு தடவை பார்த்துவிட்டு உங்களுக்கு ரைடிங்கில் கொடுத்துடுறேன்.“

    இரண்டு நாள் ஆனவுடன் ராம் அட்வகேட் இடம் போன் போட்டுப் பேசினான். அட்வகேட் இன்னும் இரண்டு நாள் வேண்டும் என்று அவனிடம் கூற. அவனும் சரியென்று கூறினான். இதற்கிடையில் அசோக் போன் போட்டு “சார் என்ன ஆச்சு?”

    “எங்களுக்கு, அட்வகேட் இன்னும் பேப்பரை கொடுக்க வில்லை இன்னும் இரண்டு நாள் தவனைக் கேட்டிருக்கிறார்கள். மேலும் இரண்டு நாட்கள் வேண்டும் என்றான்” ராம்.

    ஆனால் மறு முனையில் அசோக் கூறினான். “சார் பேப்பர் வரது வரட்டும், நீங்க கொடுக்க வேண்டி அட்வான்ஸ் அமௌன்ட் கொடுத்தா நல்லா இருக்கும். நிறைய நபர்கள் வந்து இதே இடத்தைப் பார்த்துவிட்டுப் போய்யிருக்கிறார்கள்”.. அவர்கள் எல்லாம் டோக்கன் அட்வான்ஸா லட்ச கணக்கில் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். “நான் தான் உங்களிடம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கியதால் ஒன்றும் பேசாமல் இருக்கிறேன் என்றான்.”

    “எப்படிப் பேப்பர் வராமல் கொடுப்பது?”

    “இந்த இடம் எந்த வில்லங்கமும் இல்லாத இடம். என்ன நம்பி பணத்தைக் கொடுங்க, நான் உங்களுக்கு ரிசிப்ட் தருகிறேன் என்றான்” அசோக்.

    ராம் சிறிது நேரம் யோசித்து விட்டு “சரி நான் உங்களுக்குப் பார்ட் பேமென்ட் தரறேன் அதற்கு ரிசிப்ட் கொடுங்க என்றான்.” ‘எப்போதும் முடிவெடுக்கும் முன்னர்க் கலாவிடம் ஒரு வார்த்தை கேட்பான் ராம். ஆனால் இந்த முறை ஏனோ அவன் அவளிடம் கேட்கவில்லை.’

    ***

    மறுநாள் காலை எழுந்தவுடன், “கலா நான் உன்னிடம் கேட்காமலே அட்வான்ஸ் அமௌன்ட் கொடுப்பதாகச் சொல்லிவிட்டேன் அசோகிடம்.” ‘அவள் ஒரு வினாடி யோசித்தாள் “……” மௌனம் நீலவியது அங்கு. பிறகு குளித்து முடித்த பின்னர்க் காலை உணவு உண்ட பிறகு, நேரே லாக்கரில் உள்ள காசோலையை எடுத்து அதில் அட்வான்ஸ் அமௌன்டை எழுதி தன் பையில் வைத்துக்கொண்டு அசோக்கை பார்க்க சென்றான்.’

    செல்லும் வழியில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது, ‘ஒரு முறை ஏன் நாம் அட்வகேட் இடம் நேரே சென்று பார்க்க கூடாது. முடிந்தால் அவர்களிடம் நேராக ஒபினியன் வாங்கி விடலாம். பிறகு அசோகிடம் போய் அட்வான்ஸ் அமௌன்டை கொடுக்கலாம் என்று மனதில் எண்ணியவுடன் நேரே ஸ்கூட்டரை அட்வகேட் இடத்திற்குச் செலுத்தினான்.’ “அங்கு வந்து அவர்களிடம் நேரே கேட்டான்”., “பதில் அவர்கள் சாதகமாகச் சொன்னார்கள்.” அதாவது பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை என்று. நாளை வாங்க ரைட்டப்பில்  கொடுத்துவிடுகிறேன் என்று அட்வகேட் கூறினார் ராமனிடத்தில்.”

    உடனே காசோலையை எடுத்துக்கொண்டு அசோக்கை பார்க்க சென்றான் ராம். கிளம்பும் முன்னர் மறுபடியும் ‘ஒரு முறை அட்வகேட் இடம் சார் எல்லாம் சரி தானே? ஏனெனில் நான் அட்வான்ஸ் அமௌன்ட கொடுக்கப் போறேன்.’

    “எவ்வளவு அட்வான்ஸ் அமௌன்ட கொடுக்கப் போறீங்க?”

    “முதல் தவனையாய் 25000 ரூபாய் கொடுக்கப் போகிறேன், பிறகு படிப்படியாகப் பணத்தைக் கொடுத்துவிடுவேன்”.

    “ஓக்கே பணத்தைக் கொடுங்க பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை அதனால் நீங்க கொடுக்கலாம்”.

    “நன்றி சார்” நாளை வந்து ரைட்டப்பில் வாங்கிக்கொண்டு போறேன்”.

    ஸ்கூட்டர் கிளம்பி நேரே அசோக் இருக்கும் இடத்திற்கு வந்து அடைந்தது. ராம் தன் பையில் உள்ள காசோலையை எடுத்து அசோகிடம் கொடுக்க, அதை அசோக் முக மலர்சியுடன் பெற்றுக் கொண்டான். பின் அசோகிடம் லோன் வாங்கித் தான் இந்த இடத்தை வாங்குறோம் என்றான் ராம்.

    “,நாங்கள் எங்களுக்குத் தெரிந்த வங்கியில் லோன் ஆர்கனைஸ் செய்திடுவோம்”.

    “இல்லை எனக்குத் தெரிந்த நபர் இருக்கிறார் அவர்

    மூலம் நான் லோன் பெற்றுக் கொள்வேன்”. என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான் ராம்.

    போன் போட்டு தனக்கு தெரிந்த லோன் கொடுக்கும் நபரிடம் அப்பாயின்மென்ட் கேட்டுப் பேசினான். அவரு ஒரு தேதி சொல்லி ராமை அவரிடத்திற்கு வரச் சொன்னார். இரண்டு மூன்று நாட்கள் அப்படியே சென்றது. மீண்டும் அட்வான்ஸ் அமௌன்டை கேட்டு அசோக் போன் போட்டு ராமிடம் கேட்க இப்ப தான் கொடுத்தேன் அல்லவா என்று ராம் சொல்ல.

    “நான் தான் அரசாங்க வேலை என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா பணம் இருந்தால் மட்டும் காரியம் நடக்கும் இல்லை என்றால் அப்படியே போட்டு விடுவார்கள்.”

    “சரி நாளை உங்களைப் பார்க்றேன் நான் உங்களைப் பார்க்கும் போது ஒரு பார்ட் பேமென்ட் செய்றேன்”. என்றான் ராம்.

    ***

    அடுத்த நாள் காலை அலுவலகம் செல்லும் முன்னர் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து ஒன்பதிலிருத்து பத்து மணிக்குள் அசோக் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் முன்னரே சொல்லியிருந்த மாதிரி அவன் எடுத்து வந்த பணத்தை அசோகிடம் கொடுத்துவிட்டு சப்-டிவிஷன் பேப்பர் எப்போது கைக்கு வரும் என்று கேட்டு விவரம் அறிந்து கொண்டு நம்பிக்கையுடன் அலுவலகம் கிளம்பும் முன்னர். “ட்ரிங்..ட்ரிங்” தொலைப்பேசி மணி அடித்தது. யார் என்று பார்க்கையில் அந்தப் பக்கம் அவனது நண்பர் அவர்தான் வங்கி லோன் ஆர்கனைஸ் செய்து பொடுப்பவர் என்று அறிந்துகொண்டவுடன்.

    “ஹலோ சார் எப்படி இருக்கீங்க?””

    “கடவுள் புன்னியதில் நல்லா இருக்கிறேன் ராம்”

    “நீங்க சிறிது நேரம் என்னுடைய ஆபீஸுக்கு வர முடியுமா?”

    “அதற்கு என்ன சார், கட்டாயம் வருகிறேன்” பக்கத்தில் தான் உள்ளது உங்க ஆபீஸு”. நண்பரின் ஆபீஸுக்கு விரைந்தான் ராம். அங்கு அவரைப் பார்த்து லோன் சம்பந்தமாகச் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சமயத்தில் ராமின் நண்பர் “ எந்த இடம் என்று சொன்னீர்கள்?”

    “அதான் சார் அசோக் நகர் 7வது அவின்யூ “. “………” ‘சிறிது நேரம் ராமுடைய நண்பர் மௌனமாக இருந்தார்’

    ‘மௌனத்தை உடைக்கும் வகையில் ராம் அவரிடம் ஏன் சார் மௌனம் என்றான்.

    “ஒன்னுமில்ல பத்திரத்தையெல்லாம் சரிவர அட்வகேட் இடம் கொடுத்து சரிபார்த்தாச்சா?”

    “அதெல்லாம் அட்வகேட் அவர்கள் சரி வில்லங்கமெல்லாம் இல்லை என்று சொன்ன பிறகுதான் அட்வான்ஸ் அமௌன்ட் எல்லாம் கொடுத்திருக்கேன்.”

    “சுமார் எவ்வளவு அட்வான்ஸ் கொடுத்திருக்கீங்க”.

    “சார் அது வந்து வந்து”

    “சும்மா சொல்லுங்க”

    “சுமார் ஒரு லட்சம் கொடுத்திருக்கேன் சார்”

    “நான் சொல்றதை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.” நீங்க சொன்ன இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழே வரும் போல் தோன்றுகிறது.”

    “ஒரு முறை முனிசிபல் கார்ப்பரேஷன் போய் அந்த இடத்தைப் பற்றி விசாரிங்க.” பிறகு மற்ற ஃபார்மாலிடீஸ் எல்லாம் செய்யலாம்”.

    “என்ன சார் பயமுறுருத்துறீங்க”.

    “பயப்பட வேண்டாம் முதலில் போய் விசாரிங்க, ஒரு வேளை அந்த இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட கீழ் வரவில்லை என்றால் நல்லதுதானே!”

    “சரி சார் நான் முதலில் போய் விசாரிக்கிறேன்”. ஸ்கூட்டர் நேரே மறுபடியும் அசோக்கிடம் வந்து அடைந்தது.

    “எனக்கு இப்போதுதான் தெரியவந்தது நீங்க எங்களுக்குக் காண்பித்த இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழ் வருகிறதாமே?”

    “அப்படியா சார்” “அப்படி இருந்தால் நாங்க உங்களுக்கு என்.ஓ.சி வாங்கிக் கொடுத்திடுவோம்”

    “யாரிடமிருந்து என்.ஓ.சி வாங்கிக் கொடுப்பீர்கள்”

    “அரசாங்கத்திடமிருந்து தான்” குழப்பத்துடன் அலுவலகம் செல்லாமல் வீடு திரும்பினான் ராம்.

    ***

    மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது இந்த விஷயம். ராம் யோசீக்கத் தொடங்கினான், எங்குக் கேட்பது யாரை நாடுவது என்று இருக்கையில். அவனுக்கு ஒரு யோசனை உதித்தது. ‘ஏன் கூகிலில் தேடி பார்க்க கூடாது. அதில் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டைப் பற்றித் தகவலிருந்தால்! ‘ஏன் நாம் அதிலிருந்து எடுத்து அவர்களிடம் உதவி கேட்க கூடாது?’ பெரிய போராட்டத்திற்குப் பிறகு தகுந்த நபரின் விவரங்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு. அவரிடம் மின் அஞ்சல் மூலம் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கேட்டான்.’

    இரண்டு தினங்களுக்குள் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டிலிருந்து பதில் வந்திருந்தது. பதிலை படித்தவுடனே கவலையில் ஆழ்ந்தான் ராம். ஏனெனில் பதில் அவனுக்குச் சாதகமாக இல்லை. இவர்கள் அட்வான்ஸ் கொடுத்து வாங்க போகும் இடம் சரியாக ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழ்தான் வருகிறது.. அந்த மின் அஞ்சலில் தாங்கள் இடத்தை வாங்க வேண்டாம், ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் நிலத்தைத் தோண்டி பார்க்க வாய்ப்பு உள்ளது என்று எழுதியிருந்தது. அடுத்த நாள் காலை அவன் முனிசிபல் கார்ப்பரேஷன் சென்று அங்கும் விசாரித்தான். அவர்களும் இடத்தை வாங்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள். பதற்றத்துடன் அட்வகேட் இடம் வந்து நிலவரத்தை சொன்னான்.

    “அதற்கு அட்வகேட் நாங்க பத்திரத்தில் வில்லங்கம் ஏதேனும் உள்ள தா என்று தான் பார்ப்போம். மற்றது எல்லாம் நீங்க தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்”. என்ன செய்வது என்று தெரியாமல் அசோகிடம் வந்து பணத்தைத் திருப்பித் தரும்படி சொன்னான்.

    “சார் வேறு இடம் வேண்டுமானாலும் நான் காட்டுகிறேன் என்று ராமிடம் சொல்ல.”

    “வேறு வழியின்றி இரண்டு இடத்தைப் பார்வையிட்டனர் ஆனால் எதுவும் அவர்களுக்குப் படிக்கவில்லை”

    “பணத்தைத் திருப்பிக் கேட்டனர்”

    “சப்-டிவிஷன் செய்வதற்குக் கொடுத்து விட்டேன், இந்த நிலத்தை விற்றுதான் உங்களுக்குப் பணம் தர முடியும் என்று கூறி விட்டான் “அசோக்.

    வருஷங்கள் உருண்டோடியது ஒன்ற, இரண்டு, மூன்று….. என வருடங்கள் சென்றது தான் மிச்சம். இவர்களது பணம் இவர்கள் கையில் திரும்பி வரவில்லை.

    “எப்ப அசோகிடம் கேட்டாலும் நிலத்தை விற்றுதான் பணத்தைத் தர முடியும் என்று ஒரே பதிலை கூறிக் கொண்டு வந்தான்.

    எவ்வளவோ முயற்சி செய்து பார்த்த பின்பு ராம் ஒரு கட்டத்தில் அசோக் பொய் மேல் பொய் சொலிக் கொண்டுதான் இருக்கிறான். அவனிடத்திலிருந்து ‘பணத்தைத் திருப்பிக் வாங்குவது என்பது முடியாத காரியம்.’ ‘எப்படி இவனிடமிருந்து இந்தப் பணத்தைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளவது’. ‘போலீஸிடம் செல்லலாமா?’ இல்லை அவர்களிடம் சென்றால் நாம் அலைய வேண்டியது இருக்கும். ‘அப்படி அவர்களிடம் செல்லவதாக இருந்தால் முதல் வருடத்திலேயே போயிருந்திருக்கலாமே.’ என்ன செய்யலாம்? இந்த மூன்று வருஷங்களாக யோசித்துக் கொண்டிருந்த ராம்.. கடைசியாக அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது ஏன் நாம் முகநூலில் அசோக் கொடுத்த ரிஸிப்ட் எல்லாத்தையும் சேர்த்து அவனுடைய போட்டோவும் அதனுடன் இணைத்து, இந்த மாதிரி இவன் என்னை ஏமாற்றி விட்டான்.’ ‘அனைவரும் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.’ ‘இந்த நபரிடம் பணம் கொடுக்கும் முன் ஒரு தடவைக்கு மேல் யோசித்து விட்டுப் பணத்தைக் கொடுங்க என்றெல்லாம் அதில் எழுதி முகநூலில் பகிரிந்தான் ராம்’.

    மூன்று வருஷங்களாக போராடிய ராமுக்கு ஒரு மாதத்திற்குள் ஒரு போன் வந்தது.

    “சார் நான் அசோக் பேசுறேன்”

    “என்ன அசோக் மூன்று வருஷமாக நாங்க தான் போன் போட்டு உன்னுடன் பேசுவோம்.” “ முதல் முறையாக நீ எங்களுக்குப் போன் போட்டு பேசிக் கொண்டிருக்க. என்றான் ராம்.

    “சார் நான்தான் தருகிறேன் என்று சொல்றேன் அல்லவா பிறகு ஏன் முகநூலில் என்னைப்பற்றிப் பகிர்ந்தீர்கள்?”

    “நாங்க ஒன்னும் பொய் சொல்லவில்லை மூன்று வருஷங்களாகப் போராடி பார்த்தோம் ஆனால் உன்னிடமிருந்து ஒரு பைசா கூட வாங்க முடியவில்லை அதான் எல்லா ஆதாரத்தையும் இணைத்து முகநூலில் பகிர்ந்தேன். என்னைப் போன்று வேறு யாரேனும் இது போன்று மாட்டிக் கொள்ளக் கூடாதுனு தான்.”

    “சார் முகநூலிலிருந்து அந்தப் பதிவை நீக்குங்கள்”. “நான் உங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்”. ‘நீங்கள் போட்ட இந்தப் பதிவால் என் வேலை பறிபோனது எனது கம்பெனியிக்கு யாரும் வர மாட்டேங்கிறாங்க’.

    “சரி பணத்தைக் கொடு நான் பதிவை நீக்கி விடுகிறேன்” என்றான் ராம். இதற்குப் பிறகு ராம் மற்றும் கலாவிற்குச் சிறிய தெம்பு வந்தது.

    அவர்களுடைய பணம் அவர்களிடம் திரும்பி வந்து விடுமென்று.”

    Share
  • கடவுளாய் (சிறுகதை)

    கடவுளாய் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    கணவன் பூமிநாதன் இறந்தபிறகு அவருடைய கனவை எப்படியாவது நெறவேத்தனும்னு நெனச்சு இலங்கையிலிருந்து கடல் வழியாக வந்து டூரிஸ்டு பஸ்ஸில ஏறி இராமேஸ்வரம் சிவன் கோயிலுக்கு வந்து இன்னயோட அஞ்சு நாட்களாச்சு. ‘இராவணன கொல செஞ்ச பாவத்த இராமரே இங்கேதா தீர்த்துகிட்டாராம். அரக்கன் தானே இராவணன். தப்பு செஞ்சதுக்குதானே தண்டனை. இதிலென்ன பாவம் இருக்கு. ம்ம் அதுவும் சரிதா அடுத்தவ பொண்டாட்டிமேல ஆசப்படறது தப்புதா. இருந்தாலும் இராவணன் கண்ணியமா இருந்தாரே. ஆனா இப்போ நடக்கறத பாத்தா எத்தன பொம்பளப்புள்ளக  பலியாகுதுக பாவம். எல்லாத்தயும் செஞ்சிட்டு யோக்ய சிகாமணிகளா ஒருசிலரு ஊருக்குள்ள சுத்திகிட்டுத்தானே இருக்கானுக. இதெல்லா எப்போ சரியாகப்போகுது. நமக்கு இங்க மூணுவேள சோத்துக்கே வழியக்காணோ.  நம்ம ஒலக நடப்பப்பத்தி யோசிச்சு என்ன பண்ணப்போறோம். அன்னதானம், வாழைப்பழம், பிரசாதம் என எப்படியோ வயறு நெறஞ்சுடுது.  இனியும் இப்படி எத்தன நாட்களுக்கு இந்தப்பொழப்பு, தூணில சாஞ்சு கண்களை மூடி யோசிச்சிட்டிருந்தாள் இலட்சுமி.  குலசேகரன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தான்.  இந்த ஐந்து நாட்களாக யோசித்ததில் அவளுக்கு  ஒரு யோசனை தோன்றியது.

    இராமேசுவரம் வந்த அன்று அவள் பார்த்த காட்சிகளைச் சிந்தையில் தெளிய விட்டாள். கடலில் மூழ்கி குளிக்கின்ற பலராலும் கழட்டிவிடப்பட்ட ஆடைகள்.  பலராலும்  கழட்டிவிடபட்ட  உள்ளாடைகள், துண்டுகள் என ஆங்காங்கே குவிந்து கிடந்தன.  குளித்து முடிந்ததும் ஆடைமாற்றிவிட்டுதான் கோயிலுக்குள் செல்லவேண்டும்.   இலட்சுமி, பையனை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு பெண்கள் ஆடைமாற்றும் இடத்திற்குப் போனாள்.  தனித்தனியாக அறை அறையாக இருக்கும் என்று   எதிர்பார்த்தாள்.   சுத்திலும் மறைக்கப்பட்ட   மதிற்சுவர்  மட்டுந்தான் உயரமாக இருந்தது.  உள்ளே அப்படியே வெட்டவெளி. ஒருத்தர் உடைமாற்றுவதை  மற்றவர் பார்க்கலாம். ஆனால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வலைபோன்ற  கூடை வைக்கப் பட்டிருக்கிறது.

    கழட்டிய  பயனற்ற  ஆடைகளை இடுவதற்காக.  ஆனால் கடலில் மூழ்கிக் குளித்துவிட்டு பாவங்களை களைந்தபிறகு, கழட்டிய ஆடைகளை மீண்டும் தொட்டால் பாவம் ஒட்டிக்கொள்ளும் என நம்புகின்றார்கள். அதனால் அந்த ஆடைகளை பலர் அப்படியே ஈரத்துடன் கழட்டின இடத்திலேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். ஈரமான ஆடைகள் ஆங்காங்கே கிடந்தன.  இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் சுத்தம் செய்வார்களோ என்னமோ அந்த ஆடைகளை எடுத்துச் சென்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள். அதில் நல்ல ஒரு சேலையை எடுத்து அலசி காயப்போட்டாள்.   காய்ந்த பிறகு அந்த சேலையை மடிப்பு எடுத்து அழகாகக் கட்டினாள். குலசேகரனுக்கும் அதே போலச் சட்டை ஒன்றை  ரெடிபண்ணி மாத்திவிட்டாள்.  இப்போது இவர்களைப் பார்த்தால் யாருக்கும் எந்த ஐயமும் வராது.

    அங்குக் கிடந்த ஆடைக்குவியல்களில் சில நல்ல ஆடைகளையும் துடைக்கும் துண்டுகளையும் எடுத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தாள். அங்கேக் கிடந்த சோப்புத்துண்டுகளைப் பொறுக்கிப்போட்டு நன்றாகக் கசக்கினாள். கொஞ்சதூரத்தில் ஒரு பைப்பும் இருந்தது. நன்றாகத் துவைத்து ஆங்காங்கே காயப்போட்டு எடுத்தாள். ஆழகாக அழுத்தி அழுத்தி அயர்ன் போட்டது போல மடக்கி எடுத்தாள்.

    உடம்பில் தெம்பு இருக்கும் போது நாம் பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்கக் கூடாது. அது உண்மையிலேயே இயலாத ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டத்தொழில். கைகால்கள் நன்றாக இருக்கும் போது நாம் பிறரிடம்  கையேந்தப் பழகினால் அது நம்மை மனதளவில் முடமாக்கி விடும். செய்யக்கூடாது  என்று தலையை அசைத்தாள்,  கோயிலின் நுழைவு வாயிலிருந்து கடலுக்குச் செல்லும் வழி எங்கும் பல கடைகள் இருந்தன. பூசைசாமான்கள், மலர்கள், அலங்காரப் பொருட்கள் பிரசாதம், சடங்குப் பொருட்கள், சந்தனமாலைகள், துணிகள் விற்கும் கடைகள்  எனப்பல கடைகள். அதில் சில கடைகளுக்கு முன்பு வேட்டி, துண்டு போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  அதில் சிறிய ஒரு கடையைப் பார்த்து நடந்தாள்.  வயதான ஒரு தாத்தா உட்கார்ந்திருந்தார்.

    “தாத்தா இந்தத் துண்டு, துணியெல்லா யாரோ பயன்படுத்தினதுதா. ஆனா நல்லா தொவச்சிருக்கே. இதெ வாங்கிக்கோங்க. வாங்கி உங்க கடையில வையுங்க. விக்க வேண்டா. வாடகைக்கு.” என்று தயங்கித் தயங்கி கூறினாள்.  “யாராவது மாத்திக்கத்துணி எடுக்க மறந்தவங்களுக்கு இந்த வாடகைத் துணி ரொம்ப ஒதவியா இருக்கும்.” என்று கெஞ்சிக் கொண்டு நின்றாள் இத்தோடு இது நான்காவது கடை. ஒரு வழியாக அவரைப் பேசி சம்மதிக்க வைத்தாள்.

    “இப்படி  வேணும்னா செய்யலா  தாத்தா. எனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு துணிகள் வெளியில போகுதோ அதப்பொறுத்து காசு கொடுங்க.” என்று மறுபடியும் கெஞ்சினாள். ஒத்துக்கொண்டார் கடைக்காரர். நன்றி நிறைந்த மனதோடு கையெடுத்துக் கும்பிட்டாள். உத்வேகம் பிறந்தவளாய் அடுத்த ஆடைகளை அலசச் சென்றாள்.

    கோயிலுக்கு வருகின்ற பலரும்  வாடகைக்கு ஆடை கேட்டு வந்தார்கள். வார்த்தை தவறாமல்   வந்த வருமானத்தில் ஒரு பகுதியைக் கடைக்காரர் லட்சுமிக்கும் கொடுத்தார். அவளது கையில் அன்றாடச்  செலவுக்கு பணம் புழங்கத் தொடங்கியது. பல நேரங்களில் கோயில் பிரசாதமே உணவாக இருந்ததால் காசு அதிகம் செலவாகவில்லை. அது போகக் கோயிலுக்கு போகின்ற வழியில் இருக்கின்ற சில கடைகளுக்கு முன்னால் கூட்டிப்பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிடுவாள். கோயிலுக்குள் செல்பவர்களின் செருப்புகளைக் காவல் காப்பாள். யாரிடமும் கைநீட்டி இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க மாட்டாள். அவர்களாகக் கொடுக்கின்ற பணத்தை வாங்கிக் கொள்வாள்

    அமாவசை முடிந்து வருகின்ற புதன்கிழமையன்று அப்துல் கலாம் ஐயா படித்த பள்ளிக்குப் போகவேண்டும் என்று எண்ணியிருந்தாள்.  திட்டமிட்டபடியே பள்ளிக்குச் சென்றாள். எப்படியாவது கையில காலில விழுந்தாவது குலசேகரன பள்ளில சேர்க்கணும்  தலைமையாசிரியரை பார்க்கணும் காலை 8 மணிக்குப் பள்ளிக்குச் சென்றாள் மதியம் 12.30 மணி வரை காத்திருந்தாள். தற்போது அப்பள்ளியின் தலைமையாசிரியர் பெயர் வைத்தியநாதன். அவர் இப்பள்ளியில் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன.

    “ஐயா வணக்கம்.”

    “வணக்கம். வாங்க  என்ன விஷயம்?”

    “ஐயா  எம்புள்ள பேரு கலாம். கலாம் ஐயா படிச்ச பள்ளில என் பையனும் படிச்சு பெரிய ஆளா வரணும்ங்குறது அவ அப்பாவோட கனவு. என் பையன உங்க பள்ளியில சேர்க்கணு  சார் .”

    “எந்த வகுப்பு?”

    “நாலாம் வகுப்பு ஐயா.”

    “மூணாவது வரை படிச்ச டி.சி கொடுங்க”

    “இல்ல ஐயா அது வந்து….. வந்து ……நாங்க வேற ஊர்ல படிச்சோம் ஐயா. அங்க கொடுத்த டி. சி தொலைஞ்சு போச்சு”

    “டி.சி இல்லாம சேர்க்க முடியாதுமா.  இனி ஒரு மொற அந்த பள்ளில போய் கேட்டுப் பாருங்க.  நீங்க இதுக்கு முன்னாடி இங்கே வந்திருக்கீங்களா?”

    “இல்லீங்களே.  ஐயா திரும்ப அந்தப் பள்ளிக்குப் போக இயலாது. அங்க ஒரு தகராறு செய்துட்டோம். வேற ஏதாவது வழி இருக்கா ஐயா. நீங்க வேணா இவன மூணாம் வகுப்பு பாடங்களக் கேட்டு பாருங்களேன். இல்ல ஏதாவது எழுத வெச்சுப் பாருங்களேன்.

    ‘இயலாது’ இந்த வார்த்தை வைத்தியநாதனுக்கு மண்டைக்குள் ஏதோ குடைந்து கொண்டிருந்தது. இந்த அம்மாவ வேறு எங்கேயோ பார்த்து இருக்கோமே யோசித்துப்பார்த்தார்.

    “சரிமா ஒரு எழுத்துத் தேர்வு வைக்கிறேன் சரியா எழுதினா பார்ப்போம் இல்லனா வேற வழி இல்லம்மா இங்க சேர்த்த முடியாது.      நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க.”

    மேசை மேல இருந்த மணியை தட்டினார்.  “காளி அண்ணே இங்க வாங்க. இந்தப் பையன கீதா டீச்சர்கிட்ட கூட்டிட்டுப் போய் நாலாம் கிளாசுக்கு டெஸ்ட் வைக்கச் சொல்லுங்க.” என்றார்.

    இலட்சுமி வெளியில்  காத்திருந்தாள். வைத்தியநாதன் நெற்றியைத் தடவிக்கொண்டு  நாற்காலியில் குனிந்தபடி உட்கார்ந்து எதையோ யோசித்தான். திடீரென ஞாபகம் வந்தவனாய் பீரோவில் உள்ளிருந்து ஒவ்வொரு பைல்களாக தூக்கிப்பார்த்தான். ஒரு ஃபைலுக்குள் இருந்து ஒரு கவரை எடுத்தார்.  அதில் இலட்சுமியின் குடும்பப் புகைப்படம் இருந்தது.

    வைத்தியநாதனின் தந்தை துரைசாமி எழுதின  ஒரு கடிதமும் உடன் இருந்தது.

    ‘மகனே வைத்தியநாத என்னைப்போலவே ஏதோ ஒரு காரணத்துக்காக இயக்கத்தில சேர்ந்தவன்தான் பூமிநாதன். அவன் ரெண்டுதடவ கடல் கடந்து தமிழகத்திற்குச் சென்றுவிட்டா. அகதிகள் முகாமில வெச்சு  விசாரணைக்கப்பறம்  மீண்டும் சூழ்நிலைக்கைதியாக இங்கேயே வந்து மாட்டிக்கொண்டார. என்ன செய்ய?  இதேபோல நான் ஒரு முகாமில் தங்கி இருந்தபோது உன்னை யார் என்று தெரியாதுன்னு உன் எதிர்காலத்தை யோசிச்சு  சொன்னே. அப்போ   இவ காணாம போன எம்பையனு   மீனவ முத்தையானு ஒருத்தரு சொன்னாரு. முத்தையா போல ஒருத்தரும்  இவனக் காப்பாத்த  வரல. சொன்ன  மாதிரியே முத்தையா  தன்னுடைய கடைசி காலம் வர உன்ன அவரு மகனாவே படிக்க வச்சு இப்படி ஒரு பதவியும் வாங்கி கொடுத்தாரு. பூமிநாத ரொம்ப நல்லவன். அவன் இயக்கத்தில தனக்குக் குடும்பம் இல்லைன்னு சொல்லி இருக்கிறா. அவனுக்குக் குடும்பம் இருப்பது எனக்கு மட்டுந்தான் தெரியும். அவனுடைய கனவு, இலட்சியம், சிந்தனை,  ஆசை, விருப்பம் எல்லாமே அவனுடைய பையனப் படிக்க வைக்கணுங்கறது  மட்டுந்தா. அவனுடைய குடும்ப ஃபோட்டோவை உனக்கு அனுப்பித் தர்றே. இந்த கடிதம் உன் கைக்குக் கிடைக்கும்போது நானும் அவனும் உசுரோட இருப்போமா இல்லையான்னு தெரியாது. இந்த கடிதத்த மிகவும் சிரமப்பட்டுத் தான் உனக்கு கொண்டு சேர்த்துள்ளேன் இந்த புகைப்படத்தில் இருக்கிற பையனுக்கு எப்படி யாவது படிக்க வழி பண்ணுப்பா. இப்படிக்கு உன் வளர்ச்சிக்காக உன்னைப் பிரிந்து வாழும் உன்னுடன் உன் அப்பா.’ என்று முடிந்திருந்தது   கடிதத்தை மடக்கிவைத்துவிட்டு போட்டோவை திரும்ப ஃபைலுக்குள்ளேயே வைத்தார்.

    “காளி அண்ணே அந்த  அம்மாவை கூப்பிடுங்க டீச்சர்கிட்ட இருந்து டெஸ்டு பேப்பரையும் வாங்கிட்டு வாங்க.”

    காளி அண்ணன் நடையும் ஓட்டமுமாக வந்தார்.  விடைத்தாளை வாங்கி பார்த்தார்  வைத்தியநாதன்.

    “ம்மா பைய  நல்லா படிக்கிற பையனா இருக்கா. நாங்க சேர்த்துக்கறோம்” என்றார்.

    அவள் கண்களில் தண்ணீர் வழிகிறது என்பதை ரவிக்கைக்குள் நீர் வழிந்து ஓடிய போது தான் உணர முடிந்தது.

    “ அவ அப்பா எங்கே?”

    “அவ அப்பா ஆக்சிடென்டில எறந்துட்டாருங்க ஐயா”

    ‘உங்களுக்கு வீடு எங்கே?”

    “இங்க தாங்க ஐயா. இராமேஸ்வரம் கோயில் பக்கம்.”

    “உன் பேரு இலட்சுமி. பையன் பேரு கலாம் எப்படி?  கலப்பு திருமணமா?”

    “இல்லங்க ஐயா இவன் பேரு சேகர். அவன் அப்பாவுக்கு இவன் அப்துல் கலாம் ஐயா மாதிரி பெரிய ஆளா வரணும்னு ஆசை அதுனால பையன அப்படித்தான் கூப்பிடுவாரு. அதனால அந்த பேரையே வெச்சிரலாம்னு விட்டுட்டேன் சார்.”

    பூர்விகமாகவே நீங்க இங்க தானா மா? எவ்வளவு வருஷமா இங்க இருக்கீங்க?”

    “ஐயா அது வந்து எங்க பாட்டிக்கு அம்மா காலத்தில இருந்தே இங்கதான்யா. அவரு எனக்கு ஒன்னு விட்ட மாமா மொற ஆகுது. அவிக வீடும் இங்கதான் கோவிலுக்கு மேவரம். பூ வியாபாரம்.” கேட்ட கேள்விகளுக்கும் கேட்காத கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அவன் வெளியில் நீட்டிக்கொண்டிருந்த இலட்சுமியின் குடும்பப் புகைப்படத்தை உள்ளே தள்ளிவிட்டார்.

    “உங்க வீட்டுக்காரர் பேரு?”

    “அவரு  பேரு மயில்சாமி  ”

    ஆனால் சரிபார்க்கப்பட்ட விடைத்தாளில் மாணவன் பெயருக்கு நேராக குலசேகரன் என்றும் தந்தை பெயருக்கு நேராக பூமிநாதன் என்றும் எழுதி இருப்பதைப் பார்த்தார்.  ஏன் இவனுக்கு நான் இனியொரு முத்தையாவாக இருக்கக்கூடாது.

    மௌனமாகச் சிரித்துக்கொண்டே சேர்க்கை அட்டையில் கையெழுத்திட்டார்.

    Share
  • குழந்தையின் பெயர் (சிறுகதை)

    குழந்தையின் பெயர் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?”

    “நீங்கதான் சொல்லுங்களேன்!” பிரசாத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் பிரபா. முகத்தில் வெட்கமோ, புன்னகையோ இருக்கவில்லை. எதையோ யோசிப்பதுபோல் இருந்தாள் என்றுதான் பட்டது அவனுக்கு.

    முதலிலேயே யோசித்துவைத்திருந்தது நல்லதாகப்போயிற்று என்ற மகிழ்வுடன், “விட்டல், இல்லாட்டி கோகுல்,” என்று சற்று உரக்கவே சொன்னான்.

    “கிருஷ்ணர் பேரா,” என்று இழுத்தாள்.

    “அதேதான்!”

    “அவருக்கு நிறைய பெண்களோட சகவாசமில்ல?”

    அவனுக்குப் பெருமையாக இருந்தது. பிறக்கப்போகிற மகன் உத்தமபுத்திரனாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இதில் என்ன தவறு?

    கிருஷ்ணன் இல்லாவிட்டால் ராமன். “ராமசந்திரன்,” என்றான் அழுத்தமாக.

    “MGR வாத்தியாரா?”

    “இல்லே. தசரதகுமாரன். ராமாயணத்திலே..”.

    “எனக்கும் தெரியும்”. சற்று சூடாக வந்தது அவள் பதில்.

    “ராமர்தான் ஏகபத்தினி விரதன்,” என்றான் சமாதானமாக.

    “சுகமா அரண்மனையில இருக்கிறதை விட்டுட்டு, அப்பா சொல்றார்னு காட்டுக்குப்போய் கஷ்டப்பட்டாரே! அதைச் சொல்லமாட்டீங்களே!” என்று சாடினாள். “கொஞ்சம் சொந்த புத்தியை உபயோகிச்சிருக்கவேண்டாம்?”

    மகாபாரதம், ராமாயணம் ஆகிய இரண்டின் நாயகர்களும் சரிப்படவில்லை. வேறு யாரைச் சொல்லலாம்?

    “நடராஜன்?”

    “சிவன் பேரு. ஒங்களுக்கு பஸ்மாசுரன் கதை தெரியுமில்ல?”

    `இவள் எங்கே போகிறாள்?’ என்று சற்று அயர்ந்தான் பிரசாத்.

    அவளே சொன்னாள்: “தன்னோட கையை யார் தலையில வெச்சாலும் அவங்க சாம்பலாகணும்னு வரம் கேட்டானாம் அந்த அசுரன். யார்கிட்டே? சிவன்கிட்டே”.

    சுவாரசியமாக இருந்தது கதை.

    “எவ்வளவு கெட்ட குணம்!” என்று அவளை ஊக்கினான்.

    “ரொம்ப யோசிக்காம, சிவனும் அவன் கேட்டதைக் குடுத்துடரார். நைச்சியமா பேசறவங்களுக்கு ரொம்ப யோசிக்காம எதையாச்சும் குடுத்தா, குடுக்கறவங்களுக்குத்தான் கஷ்டம்”.

    சிவன் அப்படி என்ன கஷ்டத்தை அனுபவித்தார் என்று கேட்கவேண்டும்போல இருந்தது அவனுக்கு. `இதுகூடத் தெரியாதா!’ என்று ஏளனம் செய்துவிடுவாள். வேண்டாம்.

    “முருகன்? சிவகுமார்னு வெச்சா, நாகரிகமா இருக்கும்”. அவன் குரல் பலகீனமாக ஒலித்தது. இதற்கு என்ன ஆட்சேபம் தெரிவிக்கப்போகிறாளோ!

    “சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபிச்சுக்கிட்டு, பெத்தவங்களை விட்டு எங்கேயாவது போயிடுவான். ரெண்டு பொண்டாட்டிவேற!”

    அவன் மௌனமாக இருந்தான்.

    “வேற ஏதாவது பேசலாமா?” என்றாள்.

    அவன் வாயே திறக்கவில்லை.

    அவளே கேட்டாள்: “பிறக்கிறது பெண்குழந்தையா இருந்தா?”

    “சீதா,” என்று சொன்னவன், அவள் முகத்தைப் பார்த்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான். பழங்காலப் பெயராக இருக்கிறது என்பாளோ?

    “ஜானகின்னு பேர் வெச்சுட்டு, ஜானுன்னு செல்லமா..,” என்றவனை இடைமறித்தாள். “கட்டினவர் காட்டுக்குப் போனபோது, அவ எதுக்கு அவரோட கல்லிலேயும் முள்ளிலேயும் போய் திண்டாடினா? `நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்’னு போயிருக்க வேண்டியதுதானே?”

    அதற்குமேல் அவனுடைய கற்பனை ஓடவில்லை.

    மறுபடியும் அவளே கைகொடுத்தாள். ”பார்வதி புத்திசாலி. சிவனோட ஒடம்பிலே பாதி அவளுக்கு. சக்தி இல்லாட்டி சிவன். ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும். துணை இல்லாம நான் இல்லேன்னு ஒவ்வொருத்தனும் தவிக்கணும்”.

    “ஏண்டா பிரசாத்து? ரெண்டுபேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தீங்களே! `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ அப்படின்னு தரகர்கிட்ட சொல்லிவிடவா?” தாய் கேட்டாள்.

    “எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம்மா”.

    “அதான் ஏன்னு கேக்கறேன். `நான் நாகரிகமானவ. தமிழெல்லாம் படிக்கிறதில்லே’ன்னு சில அரைகுறைங்கமாதிரி அலட்டிக்காம, ஆன்மிகப் புத்தகங்களெல்லாத்தையும் கரைச்சுக் குடிச்சிருக்கா. ரொம்ப புத்திசாலிடா!”

    “எனக்கு இவ்வளவு புத்திசாலியான பொண்ணு வேண்டாம்மா. பெண்ணியம் பேசறா. எல்லாத்தையும் அலசறா”.

    “அதான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கா”. அழுத்தமாகச் சொன்னாள் அம்மா.

    “அவளோட ஆராய்ச்சியை வேலையோட வெச்சுக்கட்டும். கோயிலுக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமான்னு இருக்கிற சராசரி பொண்ணுதான் எனக்குச் சரிப்படும்”.

    மனதுக்குள் சொல்லிக்கொண்டான், `கல்யாணம் ஆகி, பிறக்கப்போகிற குழந்தைக்குப் பெயர் வைப்பதில்கூட எங்களுக்குள் ஒற்றுமை இல்லையே! இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எதிரும் புதிருமாக இருந்தால் வாழ்க்கை நரகமாக இருக்காதா!’

    Share
  • பெயரின் முதல் எழுத்து (சிறுகதை)

    பெயரின் முதல் எழுத்து (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “அம்மா! நான் பட்டம் வாங்கறச்சே, எல்லாரோட அப்பா அம்மாவும் யூனிவர்சிடிக்கு வந்திருந்தா. எனக்கு மட்டும்..,” எப்பவோ நடந்ததை நினைத்து, அஞ்சனா பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

    “நான் வேலை செஞ்சாத்தான் நாம்ப சாப்பிட முடியும், ஒன்னைப் படிக்கவைக்க முடியும். ஒனக்குத் தெரியாதா, அஞ்சனா?” கங்காவின் குரல் கெஞ்சியது.

    “நான் ஒன்னைக் குத்தம் சொல்லலே. இன்னிக்காவது சொல்லிடும்மா. நெத்தியிலே பொட்டு இட்டுக்கறே. கழுத்திலேயும் இருக்கு. ஆனா, ஒனக்குத் தாலி கட்டினவரை நான் பாத்ததே இல்லே. அப்படி ஒத்தர் இருக்காரா, இல்லே..”.

    கங்கா பதறினாள். “என்ன வார்த்தை சொல்றே! நான் அப்படிப்பட்டவ இல்லேடி. சட்டப்படி என்னை ஒத்தர் கல்யாணம் பண்ணிண்டார். அவருக்குப் பிறந்தவதான் நீ.”

    “பின்னே ஏன் அவர் நம்பகூட இல்லே?”

    “என்னத்தச் சொல்ல! எங்க கல்யாணம் முடிஞ்ச மறுநாளே அவருக்கு என்னப் பிடிக்காம போயிடுத்து”.

    “நீ அப்படி என்ன பண்ணினே?”

    “நான் ஒரு தப்பும் பண்ணலே”. மகள் சற்றும் எதிர்பாராவிதமாக, கங்கா தன் புடவையைத் தூக்கினாள். “பாத்தியா? இதுதான்..!” அவள் சுட்டிய இடத்தில் சருமத்தின் நிறம் மாறியிருந்தது.

    “`குஷ்டரோகம் இருக்கிற பொண்ணை எல்லாருமா சேர்ந்து என் தலையிலே கட்டியிருக்கேள்!’ அப்படின்னு கத்திட்டுப் போனவர்தான். எங்கப்பா, `இவளுக்குச் சின்ன வயசிலேருந்து இப்படி ஒரு தழும்பு இருக்கு. இது வியாதியில்லே, மாப்பிள்ளை,’ அப்படின்னு அவர் காலைப் பிடிச்சுண்டு எவ்வளவோ கெஞ்சினார். அந்த மனுஷன் மசியலியே!”

    தனக்கு வேறு எந்த விவரமும் தெரியாதே என்று நினைவிலெழ,  “முக்கியமானதை விட்டுட்டியேம்மா. ஒன்னை நிர்கதியா விட்டுட்டுப் போனவரோட பேரு?”

    கங்கா மௌனம் சாதித்தாள்.

    அஞ்சனா மேலும் துருவினாள். “என் பேருக்கு முன்னாடி G ன்னு தலைப்பெழுத்து போட்டியே. அது ஒன்னோட பேரோட முதல் எழுத்துதானே?”

    “அவரோட பேரும் அதிலதான் ஆரம்பிக்கும்”. சொல்லியபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கங்கா, இதற்குமேலும் இதைப்பற்றிப் பேசத் தான் தயாரில்லை என்பதை உணர்த்துவதுபோல்..

    அதற்குமேலும் அம்மாவைக் கஷ்டப்படுத்த மனம் வரவில்லை அஞ்சானாவுக்கு. “இன்னிக்கு ஏதாவது சினிமா பாத்துட்டு, அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாமா?” என்று பேச்சை மாற்றினாள்.

    `அதுக்கெல்லாம் காசு கொட்டியா கெடக்கு?’ என்று முன்போல் சொல்ல முடியவில்லை கங்காவுக்கு. அவர்கள் உரையாடலால் அவள் மனமும் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கும். பாவம்!

    “இரு. புடவையை மாத்திண்டு வரேன். நீயும் பௌடர் அடிச்சுண்டு வா,” என்று சிரிக்க முயன்றாள்.

    அஞ்சனாவின் மனம் படத்தில் செல்லவில்லை.

    G என்ற எழுத்தில் என்னென்ன பெயர்கள் இருக்கும் என்ற யோசனையில் ஆழ்ந்தாள். கணேசன், கணபதி? கங்காதரன்?

    அதற்குமேல் யோசிக்க முடியவில்லை.

    படத்தில் கதாநாயகன் நாலைந்து தடியன்களை அடித்து உதைத்துக்கொண்டிருந்தான். பின் எப்படித்தான் கதாநாயகியின் மனதில் இடம் பிடிப்பது?

    அஞ்சனா முகத்தைச் சுளித்தாள். இந்த காதல், கத்தரிக்காய் எல்லாம் திரையில் பார்க்கத்தான் சுவாரசியமாக, கிளுகிளுப்பாக இருக்கும். நடைமுறையில் அம்மா மாதிரி எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்களோ!

    “ஒரே சத்தமா இருக்கு,” என்று முணுமுணுத்துவிட்டு, மெல்ல எழுந்தாள். இருண்டிருந்த தியேட்டரின் கதவிலிருந்து வெளிப்பட்டவளுக்கு ஒரு சிறு கும்பல் கண்ணில்பட்டது.

    `என்ன நடக்கிறது இங்கே?’

    ஒருவர் தரையில் கிடந்தார். முகம் நீல நிறமாக மாறியிருந்தது. கைகள் விறைத்திருக்க, கண்கள் என்னவோ திறந்தபடிதான் இருந்தன.

    அருகில் வேதனை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தவர் அவரது நண்பர் போலும்! “இருதயச் சிகிச்சை நடந்து ஒரு மாசம்கூட ஆகல,” என்று பொதுவாகத் தெரிவித்தார்.

    “நகருங்கள், ப்ளீஸ். என்னால் உதவ முடியும்,” என்றபடி, அவர் அருகில் சென்றாள் அஞ்சனா.

    அவர்களிருவரும் வீடு திரும்புகையில், கங்கா விசாரித்தாள்: “பாதி படத்திலே எங்கேடி போயிட்டே?”

    “நான் போனதும் நல்லதாப்போச்சு. ஒரு உசிரைக் காப்பாத்தினேன்”. நடந்ததை விவரித்தாள். “இந்த reflexology-யால ஒடனே பலன்! அவர் கையில சில எடங்களை அழுத்திப்பிடிச்சேன். ரத்த ஓட்டம் சீராகி, எழுந்து நடந்து போனார். `பை’ அப்படின்னு கையை ஆட்டினார்னா பாத்துக்கயேன்!”

    “அப்படியே புண்ணியம்!” தாய் மெச்சிக்கொண்டாள். “அவர் யாருன்னு கேக்கலியா நீ?”

    “யாரா இருந்தா என்னம்மா? அவர் எழுந்து நடந்ததும், அங்கே இருந்தவாளெல்லாம் என்னைப் பாத்து சிநேகமா சிரிச்சதே சந்தோஷமா இருந்தது! ஒண்ணும் பேசாம நடந்துட்டேன்”.

    வேடிக்கை பார்த்தபடி பேரங்காடியில் நடந்துகொண்டிருந்த அஞ்சனா குரல் வந்த திசையில் திரும்பினாள்.

    “ஹலோ! அன்னிக்கு பேர்கூடச் சொல்லாம அவசரமா போயிட்டீங்களே! எனக்கும் கேக்கத் தோணல”.

    அவள் முகத்திலும் சிரிப்பு படர்ந்தது. பெயரைச் சொல்லிவிட்டு, “சௌக்கியமா?” என்று விசாரித்தாள்.

    “ஒங்க புண்ணியத்தால நல்லா இருக்கேன். வாங்களேன், காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”.

    “ஒங்க பேரைச் சொல்லலியே, ஸார்?”

    “கௌரிசங்கர்”.

    G – யில் ஆரம்பிக்கும் பெயர்! இவருக்கும் தன் அப்பா வயதுதான் இருக்கும். ஒரு கணம் திகைத்தவள், தன்னையே கடிந்துகொண்டாள்.

    இது என்ன பைத்தியக்காரத்தனம்?

    `வேண்டாம்’ என்று அம்மாவைத் துரத்தியவரைப்பற்றி எதற்காக ஓயாது யோசித்து மூளையைக் குழப்பிக்கொள்வது? அந்த மனிதர் எங்கே, எவளுடன்  இருக்கிறாரோ!

    “மத்தவங்க எல்லாரும் வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னப்போ, நீதான் என்னை.,” மார்பில் கையைப் பதித்துக்கொண்டார். “ஒங்க அம்மாவும் அப்பாவும் ஒன்னை நல்லபடியா வளத்திருக்காங்க அஞ்சனா”.

    ஏதோ சொல்லவந்தவள், தன்னை அடக்கிக்கொண்டாள். `எனக்கு அம்மா மட்டும்தான்’ என்பதை கண்டவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பானேன்!

    “மனுஷனாப் பிறந்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யட்டா எப்படி?” என்றாள் அடக்கத்துடன்.

    “எனக்கு யாருமேயில்ல,” குழந்தைபோல, சுயபரிதாபத்துடன் கூறினார். “ரெண்டு கல்யாணம். ஒண்ணும் நிலைக்கலே”.

    ஒரு முறை அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள். இவ்வளவு பெரியவரிடம் எப்படித் துருவித் துருவிக் கேட்பது!

    தன் மனப்பாரத்தை யாரிடம் கொட்டுவது என்று காத்திருந்தவர்போல் அவரே தொடர்ந்தார்: “ஒருத்திக்குத் துரோகம் பண்ணினேன். தீர விசாரிக்காம அவளைத் துரத்தினேன்”.

    அவரே பேசட்டும் என்று அஞ்சனா காத்திருந்தாள்.

    “பெருநோய் அவ்வளவு லேசா பரவற வியாதியில்ல. ரொம்ப நாள், அதுவும் நெருக்கமா இருக்கிறவங்களுக்குத்தான் அந்த வியாதி வர வாய்ப்புண்டு. அது தெரிஞ்சதும், குத்த உணர்ச்சி உறுத்திக்கிட்டே இருந்திச்சு. எனக்கு அவசர புத்தி”.

    `இப்போது இந்தப் பேச்சு எதற்கு?’ என்று அஞ்சனா கேட்கவில்லை.

    “இன்னொருத்தியை ஏத்துக்க முடியல. அவ கேஸ் போட்டா. எனக்கு..,” தலையைக் குனிந்துகொண்டார். “நான்.. ஆம்பளையே இல்லேன்னு!”

    அஞ்சனாவுக்கு அதற்குமேலும் சந்தேகம் இருக்கவில்லை.

    `நீங்கள் ஆண்மகன்தான். உங்களுக்குப் பிறந்த பெண் நான்!’ என்று கூறிவிடலாமா?

    `எதற்காக?’ என்று அவள் மனம் இடக்கு செய்தது.

    துரோகமாம், குற்ற உணர்ச்சியாம்! என்னமாக அளக்கிறார்! பிரயாசைப்பட்டுத் தேடியிருந்தால் அம்மா இருக்கும் புதிய இடத்தைக் கண்டுபிடித்திருக்க முடியாதா?

    இத்தனை வருடங்களாக அம்மா எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பாள்! ஏன், தானே கேட்கவில்லையா, `நீ முறையாகக் கல்யாணம் செய்துகொண்டவள்தானா?’ என்று?

    இந்த மனிதர் நன்றாகத் துடிக்கட்டும்.

    சே! இவருக்கா உதவி செய்தேன்! மற்றவர்களைப்போல, வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்திருக்கலாம்.

    “என்னம்மா அஞ்சனா எழுந்துட்டே?”

    “எனக்கு அவசரமா ஒரு எடத்துக்குப் போகணும். மறந்தே போயிட்டேன்,” என்றபடி அஞ்சனா அங்கிருந்து விரைந்தாள்.

    அவள் போன திசையையே பார்த்தபடி இருந்தவருக்கு ஏதோ புரிந்தாற்போல் இருந்தது. இவளைப் பெற்றவள் தான் கைவிட்ட கங்காதான். அதே சாயல்! வேறு ஒருவரை மணந்து, இவளைப் பெற்றிருக்கிறாள்.

    தாலி கட்டிய பெண்ணுக்குத் துரோகம் செய்துவிட்டதாக எண்ணி இவ்வளவு காலமும் துடித்தோமே! எல்லாம் வீண்.

    கௌரிசங்கருக்கு அழுகை வரும்போல இருந்தது.

    வீடு திரும்புகையில், அஞ்சனா பலவாறாக யோசித்தாள்.

    `அம்மா! நான் அப்பாவைப் பாத்துப் பேசினேன்’.

    `அவர் யார் தெரியுமா? அன்னிக்கு ஒரு நாள் தியேட்டரில..’

    அம்மா என்ன சொல்வாள்?

    `கையோட அப்பாவை அழைச்சிண்டு வந்திருக்கமாட்டியோடி?’ என்பாள். கண்களில் ஆர்வம் கொப்புளிக்கும்.

    அவர் வந்தால், அம்மாவின் உலகத்தில் அவரும், அவருடைய உலகத்தில் அம்மாவும்தான் இருப்பார்கள், கடந்தகால இழப்பைச் சரிசெய்வதுபோல். இனி, அவளை யார் கவனிக்கப்போகிறார்கள்!

    வேண்டாம். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதுபோல் ஆகிவிடும். எனக்கு அம்மா வேண்டும்.

    “எங்கே போயிட்டே, அஞ்சனா? ரொம்ப இருட்டிப்போயிடுத்தே! வேலை அதிகமா இன்னிக்கு?” அம்மாவின் உண்மையான கரிசனம் ஒரு கணம் அவளை நிலைதடுமாறவைத்தது. சட்டென்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.  `ஆமாம்மா. ரொம்ப வேலை!” என்றாள், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.

    Share
  • அறுபதில் கல்யாணமா! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    வேதாவும் தினகரனும் ஒரே இடத்தில் வேலைபார்த்தவர்கள். குடும்ப பாரத்தைச் சுமப்பதால், அவளுக்குக் `கல்யாணம்’ என்ற எண்ணமே எழவில்லை என்றவரை அவருக்குத் தெரியும்.

    அரசியல், சினிமா என்று பொது விஷயங்களைப்பற்றிப் பேசி நண்பர்கள் ஆனபோது, `நம் மனைவிக்கு இவளைப்போல் புத்திசாலித்தனமாகப் பேசத் தெரியவில்லையே!’ என்ற சிறு ஏக்கம் எழும். உடனே அடக்கிவிடுவார்.

    “நான் எங்கம்மாவோட போயிடப்போறேன்,” என்றுவிட்டு, வேலைமாற்றம் வாங்கிக்கொண்டு வேதா போனபோது, `இவளுக்கு நம்மிடம் பிடித்தம் கிடையாதா!’ என்ற ஏமாற்றம் எழுந்தது.

    ஒரு வாரம் சென்றபின், வேதா தொலைபேசியில் அழைத்தாள். “பொழுதே போகலே,” என்றாள்.

    அப்படியே அவர்கள் தொடர்பு சில வருடங்கள் நீடித்தது. நோய்வாய்ப்பட்ட மனைவி கோகிலாவைப் பார்த்துக்கொள்வதைப்பற்றி தினகரன் விவரிக்க, ஆறுதலாக ஏதாவது கூறுவாள் வேதா.

    மனைவி இறந்தபின்னும் இப்படியே பேசியபோதுதான் தினகரனுக்கு அந்த எண்ணம் எழுந்தது.

    அவளை நேரில் சந்தித்தபோது, “நாம்ப ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா, வேதா மேடம்?” என்று கேட்டேவிட்டார்.

    அவள் வெட்கப்படுவாள், குனிந்த தலை நிமிராது என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தவருக்கு ஏமாற்றம்.

    “யோசிச்சுச் சொல்லட்டா?” என்று பதில் கேள்விதான் வந்தது.

    `வருகிற வெள்ளிக்கிழமை நான் வேதாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போகிறேன்,’ என்று ஈ-மெயிலில் தெரிவித்ததோடு சரி. அதற்குப்பின் அப்பாவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அழைப்பெல்லாம் கிடையாது.

    “இந்த வயசிலே அப்பாவுக்கு இப்படிப் புத்தி போக வேண்டாம்!” பொறுமினான் எம்.லிங்கம்.

    “அறுபதாம் வயசில ரெண்டாவது கல்யாணம் நடக்காத அதிசயமா என்ன!” என்று அப்பாவுக்குப் பரிந்து பேசினான் அவனுடைய தம்பி எம்.தேவன். அண்ணன், தம்பி இருவருமே தம் பெயரின் முதல் எழுத்தான `மகா’வைச் சுருக்கி விட்டிருந்தார்கள்.

    “அப்படி ஒரு கல்யாணம் மொதல் சம்சாரத்தோட நடக்கிற சமாசாரமில்ல? இந்த மனுசரோ, எப்ப நம்ப அம்மா சாகப்போறாங்கன்னு காத்துக்கிட்டு, இப்படி ஒரு காரியத்தில எறங்கிட்டாரு! அம்மா இருந்த எடத்திலே இன்னொருத்தி!“

    புற்றுநோயால் அம்மா அவதிப்பட்டபோது அப்பாதானே கவனித்துக்கொண்டார்!

    `இந்த வீட்டிலே நிம்மதியே இல்லே!’ என்றுவிட்டு, மனைவி, இரு குழந்தைகளுடன் வேற்றூருக்கு வேலை மாற்றம் வாங்கிக்கொண்டு, தனிக்குடித்தனம் போனவனுக்கு இந்தக் கரிசனம் எப்படி வந்தது?

    “ஏண்டா, தேவா? அம்பது வயசுக்குமேல ஆனவளுக்கு குழந்தை பிறக்காது. இல்லே?” அண்ணன் சந்தேகத்தை வெளிப்படுத்தியபோது, தேவனுக்குச் சிரிப்பு வந்தது. அப்பாவின் சொந்த வீடு, வங்கியில் ரொக்கம்—இதற்கெல்லாம் பங்கு கேட்க இன்னொரு வாரிசு வந்துவிடப்போகிறதே என்ற பயம் இவனுக்கு!

    “வயசான காலத்திலே அப்பாவுக்கு பேச்சுத்துணைக்கு ஒருத்தர் வேண்டியிருக்குபோல!”

    “பேச ஆள் வேணுமானா, ஏதாவது கிளப்புக்குப் போறது!”

    அயல்நாட்டில் குடியுரிமையுடன் வேலை பார்த்துவந்த இளையவனுக்கு அலுப்புத்தட்டியது. “என்ன இருந்தாலும், வீட்டிலே ஒருத்தர் கூடவே இருக்கிறமாதிரி ஆகுமா? யாருமில்லாத வீடு `ஹோ’ன்னு இருக்கும். உள்ளே நூழையவே அலுப்பா இருக்கும். அதோட, தலைவலி, காய்ச்சலுன்னு வந்தா, `இப்போ தேவலியா?’ன்னு அனுசரணையா கேக்க..”. தன் சொந்த அனுபவத்தை வார்த்தைகளாக வடித்தான்.

    “அப்பாவை விட்டுக்குடுக்க மாட்டியே! எப்பவுமே நீதான் அவரோட செல்லப்பிள்ளை! ஒன்கூடப் பேச வந்தேன் பாரு!” வெறுப்புடன், தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான் லிங்கம்.

    கடந்த இரண்டு நாட்களாக குழம்பியிருந்த மனதிற்குச் சற்று ஆறுதல் அளிப்பான் என்று தம்பியை அழைத்தது தண்டம்.

    `யாரோ, எப்படியோ தொலையட்டும்!’ என்று, தொலைக்காட்சியை முடுக்கி, அதில் ஆழ்ந்துபோனான்.

    `மணப்பெண் மாதிரியா வந்திருக்கிறாள்!’ முகம் சுளித்தது. பண்டிகை நாட்களில் பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு, அவர் காலில் விழுந்து நமஸ்கரித்த கோகிலா மனதில் வந்துபோனாள்.

    “ரெடி?” என்ற வேதாவின் முகத்தில் ஆர்வமோ, துடிப்போ இல்லை. ஏதோ காரியத்தை முடிக்கும் அவசரம்தான் தெரிந்தது.

    கசங்கிய காட்டன் புடவை. எப்போதும்போல், கழுத்தில் ஒரு சிறு சங்கிலி. கையில் கடிகாரம்.  வளை இல்லை. என்ன நாகரீகமோ!

    அதற்குமேல் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. “அழகா, கல்யாணப்பொண்ணா லட்சணமா பட்டுப்புடவை, தங்க வளையலுன்னு நீ வரக்கூடாதா, வேதா?”

    `நீங்க மட்டும் ஜரிகைக்கரை போட்ட பட்டு வேஷ்டியிலேயா வந்திருக்கீங்க? பேண்ட்-சட்டைதானே! ஒங்க லட்சணத்துக்கு இது போதும்!’ வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள் வேதா.

    தான் எது சொன்னாலும், செய்தாலும் புன்னகையுடன் ஆமோதித்த நீண்டகால நண்பன் இல்லை இவர். `மனைவி என்றால் தனது ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டவள்’ என்று நம்பி நடக்கும் ஒரு சராசரி கணவர்.

    `ஏமாந்துவிட்டேன்!’ என்றெழுந்த எண்ணத்தை ஒரு பெருமூச்சுடன் வெளியேற்றிவிட்டு, அவருக்குப்பின் நடந்தாள் புதுமனைவி.

    Share
  • அரட்டைக் கச்சேரி (சிறுகதை)

    அரட்டைக் கச்சேரி (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    பெண்களிடம் ஒரு விசேஷம். `பிரச்னை’ என்று எதையாவது சொல்ல ஆரம்பித்த உடனேயே அதற்குத் தீர்வு காணும் வழிகளை எடுத்துக் கூறமாட்டார்கள். தீர்வு காணவா பிரச்னைகளைப் பிறரிடம் கூறுகிறோம்? ஒரு விஷயத்தையே பலரிடமும் பலமுறை பகிர்ந்துகொண்டால் ஏதோ ஆறுதல். அவ்வளவுதான்.

    பெண்களின் இந்த மனோபாவம்கூட ஆண்களுக்குப் புரிவதில்லை. மனைவியோ, பிற பெண்களோ அரைகுறையாக எதையாவது கூற ஆரம்பித்த உடனேயே அதை எப்படிச் சமாளிப்பது என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

    அந்த இடைநிலைப் பள்ளியில் நாற்பது பேரில் இரண்டே இரண்டு ஆண்கள்தாம். அவர்களைப்பற்றி நமக்கென்ன! விடுங்கள்.

    ஆசிரியர்கள் அறையில் பெண்களின் குமுறல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.  அங்கிருந்த சுவர்களுக்கு வாயிருந்தால், கதறி அழும்.

    பிறரது வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொள்ள எல்லா ஆசிரியைகளும்  ஆர்வம் காட்டினார்கள். நாளைக்கே அவர்களுடைய பிரச்னைகளுக்கு அனுதாபம் காட்ட யாராவது வேண்டாமா? பத்து பேராவது வகுப்பிற்குப் போகாத நேரமெல்லாம் வாய் ஓயாது பேசினார்கள். அனுதினமும்.

    திங்கட்கிழமை

    “நீ ஒண்ணும் எனக்குப்புத்தி சொல்லவேண்டாம். நீதான் என்னை வளர்க்கலியே!” கோகிலாவின் குரல் கீச்சென்று ஒலித்தது. அவளுடைய மகள் அப்படித்தான் இரைந்திருப்பாளோ, என்னவோ!

    சிறுவயது முதல் பாட்டி வீட்டில் அருமை பெருமையாக வளர்ந்திருந்தாலும், பெற்றவள் தன்னைக் கைகழுவி விட்டதாகத்தான் தாரா நினைத்தாள். அந்த வருத்தம்தான் கோபமாக வெளிப்பட்டது.

    இடைநிலைப் பள்ளிக்கு வந்தபின், பெற்றோரிடம் திரும்ப வந்தது ஏதோ தண்டனைபோல்  இருந்தது அவளுக்கு. தான் எது செய்தாலும் பாராட்டிய பாட்டி, தாத்தா எங்கே, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கும் அம்மா எங்கே!

    `நீ ஒண்ணும் எனக்குப்புத்தி சொல்லவேண்டாம். நீதான் என்னை வளர்க்கலியே!’ என்று அழுகைக் குரலில் கத்தத்தான் அவளால் முடிந்தது.

    கோகிலா மகளைப் பற்றிய  அதே கதையைச் சக ஆசிரியைகளிடம் எத்தனையோ முறை சொல்லிவிட்டாள். அவர்களும் குறுக்கே பேசாமல் கேட்டுக்கொண்டார்கள்.

    “பாட்டி-தாத்தாகிட்ட வளர்ந்திருந்தா, அருமையாக இருந்திருப்பாங்க,” பொதுவாகக் கூறினாள் பூமா. “என் மகனுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லே. வேலைக்காரி போட்டிருந்தேன், பிறந்ததிலிருந்தே அவனை வளர்க்க!”

    “ரொம்ப அடிச்சாளா?” கம்மிய குரலில் யாரோ கேட்டார்கள்.

    அவள் பதில் சொல்வதற்குள் இருவர் குறுக்கிட்டுப் பேசினார்கள்.

    “பிள்ளை பெத்து லீவு முடிஞ்சதும் நாம்ப வேலைக்கு வந்துடணும். வீட்டிலே குழந்தையைப் பாத்துக்க சொந்தக்காரங்க இல்லாட்டி என்ன செய்யறது?”

    “நாப்கின் மாத்தற வேலையை அடிக்கடி வைக்கிறதுன்னு ஒரு சின்னக் குழந்தையைக் கொன்னுட்டாளாமே ஒரு ராட்சசி! பேப்பரில பாத்தீங்கல்லே?”

    “கடவுள் புண்ணியத்திலே எங்க வீட்டிலே அப்படி எதுவும் நடக்கலே,” என்ற பூமாவின் குரலில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ ஒலிக்கவில்லை. “குழந்தையை அடித்தோ, திட்டியோ செஞ்சா வேலை போயிடும்னு பயம் அவளுக்கு. வீட்டுக்குள்ளே காமெரா போட்டிருந்தோமா! அதனால அவன் பெரியவன் ஆனதும்கூட என்ன தப்பு செஞ்சாலும் கண்டுக்கமாட்டா”.

    சிறிது மௌனம்.

    வேலைக்காரிகளிடம் வளர்ந்த பிள்ளைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பது அவர்கள் உத்தியோகத்தில் அறிந்ததுதான். இப்போது எல்லா மாணவ மாணவிகளும் அதனால்தானே யாருக்கும் அடங்காமல் இருந்தார்கள்!

    “அன்னிக்கு க்ளினிக்கில பாத்தேன். ஒரு ஆறு வயசுப் பையன் ஹாண்ட்ஃபோனில் என்னவோ விளையாடிக்கிட்டு இருந்தானா! அவங்கம்மா அதைப் பிடுங்கப் பாத்தப்போ அவ கையைக் கடிச்சுட்டான்!”

    `ஒன் பிள்ளையும் அப்படித்தானோ!’ என்ற ஏளனம் அந்தச் சமாசாரத்தில் தொக்கி இருந்தது.

    சண்டை ஆரம்பமாவதற்குள் மணி அடிக்கவே, அவர்கள் கலைந்தார்கள்.

    செவ்வாய்

    “தோளெல்லாம் ஒரே வலி!” முனகலுடன் அரட்டைக் கச்சேரி ஆரம்பித்தது.

    “என்ன ஆச்சு, லாய்?” அனுதாபத்தைவிட உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வமே அக்கேள்வியில் தொக்கி இருந்தது.

    முதல் நாள் இரவு, கணவர் குடித்துவிட்டு, வீட்டு வாயிலிலிருந்த சாக்கடையில் விழுந்துவிட, நாலடி ஆழத்துக்குள் இறங்கி அவரைத் தன் தோளில் தாங்கியபடி மாடிவரை தூக்கிப் போனதை விவரித்தாள், தோளைப் பிடித்துவிட்டுக்கொண்டபடி, மிஸஸ் லாய் என்ற சீன ஆசிரியை.

    `நானாக இருந்தால், அந்தக் குடிகாரரை அப்படியே விட்டுத் தொலைத்திருப்பேன்!’ என்று தமக்குள் எழுந்த எண்ணத்தை யாரும் வெளியிடத் துணியவில்லை.

    “ஆண்கள் வளர்ந்துவிட்ட சிறுகுழந்தைகள்!” கசந்து வந்தது ஒரு குரல். “என் கணவர் எப்போதும் நண்பர்களுடன் கிளப்பில் குடித்துக்கொண்டு இருப்பார். அபூர்வமாக ஒருநாள் வீட்டில் தங்குவார். ஒரே இடத்தில் உட்கார்ந்துகொள்வார், எதையோ எதிர்பார்த்தபடி. அப்போது குழந்தைகள் அவரைக் கண்டுகொள்வதேயில்லை என்று ஆத்திரப்படுவார்”. அவள் அனுபவம் சிரிப்பில் முடிந்தது.

    “பசங்களை வெளியில கூட்டிட்டுப் போய், நாலு விஷயத்தைப் பத்திக் கலந்துபேசி – இப்படியெல்லாம் செஞ்சாத்தானே அவங்களுக்கு நம்பளை மதிச்சுப் பேசத் தோணும்!”

    “பெண் குழந்தைகள் ரொம்ப மோசம்!” என்றபடி மிஸஸ் கூ தன் கதையை ஆரம்பித்தாள். “நேத்து ராத்திரி என் மகளைப்பிரம்பால் அடிச்சேன். ராத்திரி பூராவும் `ஙொய் ஙொய்’னு அழுகை. சரியான நியூசன்ஸ். என் மகன் அப்படி இருந்ததே இல்லே. என்ன அடிச்சாலும் அழமாட்டான். சமர்த்து!”

    பதினைந்து வயதான மகனுக்குப் பிறகு, அல்லோபதி, அக்யூபங்க்சர் என்று பல சிகிச்சைகளுக்குப் பிறகு கடந்த வருடம் பிறந்தது! ஒரே வயதான பச்சைப் பாலகியைப் பிரம்பால் அடிப்பார்களா!

    இந்திய ஆசிரியைகள் அதிர்ச்சியுடன் எதுவும் பேசாதிருக்க, அது புரியாது, “பிரம்பால் அடிக்காத குழந்தை ஒழுங்கா வளராது,” என்று தன் வளர்ப்புமுறையைப் பாராட்டிக்கொண்டாள் மிஸஸ் கூ.

    `நாம் நல்ல தாயாக இருக்கிறோமா?’ என்ற கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் எழ, அன்றைய கும்பல் கலைந்தது.

    புதன்

    “என் பொண்ணுக்கு மூணு வயசாகுது. நேத்து மத்தியானம் படத்துக்குக் கூட்டிப் போறதா இருந்தேன். `மழை வந்துடும். இல்லாட்டி வெயில் காயும். நம்ப காரை டிரைவரோட அனுப்பறேன்,’ அப்படின்னாரு ஹஸ்பண்ட்”. மூச்சு விட்டுக்கொண்டாள் நர்மதா.

    எல்லாரும் சுவாரசியமாகக் கேட்டபடி இருந்தார்கள், அவர்கள் முன்னால் வைத்திருந்த நூடுல்ஸ் ஆறியதைப் பொருட்படுத்தாது.

    “எப்பவும் காரிலேயே போனா, ஏழைபாழைங்க படற கஷ்டத்தை அவளுக்கு எப்படிப் புரிய வைக்கிறது? பஸ்ஸுக்காக வெயில்லே காத்துக்கிட்டு நிக்கறப்போ, `நான் பாவம்!’னு திரும்பத் திரும்பச் சொன்னா. `பாவம் இல்லே!’ன்னு நல்லா திட்டிட்டேன்”.

    “நீ ஒரு நல்ல அம்மா!” மிஸஸ் லாய் சிலாகிக்க, அதை ஆமோதித்து, எல்லாரும் தலையாட்டினார்கள் – வயிற்றெரிச்சலை மறைக்க ஒரு சிறு புன்னகையுடன்.

    வியாழன்

    “நேத்து எனக்கும், ரவிக்கும் ஒரே சண்டை,” ஆரம்பமே சூடு பிடித்தது. கணவன்-மனைவி சண்டை பூசலென்றாலே சுவாரசியம்தான்.

    “எதுக்கு?”

    “பின்னே என்ன? சமையல், வீட்டு வேலை, பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறது எல்லாம் என் தலையிலதான். புதன்கிழமை அவரோட முறை — குப்பையை வெளியே கொட்ட. அந்த ஒரு வேலைகூடச் செய்யாம டி.வி பாத்துக்கிட்டு இருந்தா? வந்த கோபத்திலே நல்லா கத்திட்டேன்”.

    “திரும்பக் கத்தினாரா?”

    “அதான் இல்லே. `இஸ்மயில் சொன்னான், இந்தப் பெண்களால எப்பவும் தொல்லைதான்’ அப்படின்னார், என்னை மட்டம் தட்டறதா நினைச்சுக்கிட்டு. `ரெண்டு பொண்டாட்டி கட்டினவனுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்’னு பதிலடி குடுத்தேன்!”

    அப்போது எழுந்த சிரிப்போசையில் சுவர்கள் நிமிர்ந்தன. `நாம்ப இப்படி பேசறமாதிரி, ஆம்பளைங்களும் நம்பளைப்பத்திப் பேசுவாங்களா?’ என்று அப்பெண்கள் மனத்தில் எழுந்த கேள்விக்கு விடையும் கிடைத்தது.

    Share
  • கல்யாணமே வேண்டாம்! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    பல வருடங்களுக்குப்பின் அன்று சாயங்காலம்தான் அவளைப் பார்த்தேன். நாகரிகமான தோற்றம். ஆனால், முகத்தில் ஏதோ கோபம், இல்லை, வருத்தம். தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் உடனே பிடிபடவில்லை. ஏன்தான் வயதாகிவிட்டதோ என்ற அர்த்தமற்ற எரிச்சல் பிறந்தது.

    எப்போதும்போல் விளையாட்டு மைதானத்தில் பார்த்ததால், சற்று பொறுத்துத் தெளிவு பிறந்தது.

    நோர்லேலா! என் மகளின் பால்யத் தோழி.

    என்னைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொண்டாள். “ஆன்ட்டி!” என்று கூவியபடி சிமெண்டு பெஞ்சில் என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.

    என் மகள் சுந்தரியைப்பற்றி விசாரித்தாள்.

    “அதோ, ஊஞ்சல்ல ஒக்காந்து, சிவப்பு கவுன் போட்டிருக்கே, அவளோட பொண்ணுதான். இப்போ ரெண்டாவது பிரசவத்துக்கு வந்திருக்கா,” என்று தகவல் தெரிவித்துவிட்டு, “ஒனக்கு எத்தனை குழந்தைங்க?” என்று விசாரித்தேன்.

    “நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லே,” என்றாள், சிரிக்காமல்.

    “என்னது?”

    “எனக்கு கல்யாணம் ஆகல,” என்று அலட்சியமாகச் சொன்னவள், “பண்ணிக்கவே போறதில்ல,” என்றாள் உறுதியாக.

    மேலே ஏதும் கேட்டுவிடப்போகிறேனோ என்று பயந்தவள்போல், , “சும்மா காத்தாட நடந்துவந்தேன். ஒங்களைப் பாத்ததில சந்தோஷம்,” என்றபடி எழுந்து நடந்தாள்.

    நான் மௌனமாக இருந்தேன்.

    “யாரு பாட்டி?” என்று விசாரித்தாள் பேத்தி.

    “ஒன்னைமாதிரி குட்டியா இருந்தப்போ, ஒங்கம்மாவோட ஃப்ரெண்ட்,” என்றேன்.

    அப்போது அச்சிறுமிகள் இருவரும் சேர்ந்து விளையாடினாலும், நட்பு இருக்கவில்லை. அவ்வளவு ஏன், நோர்லேலாவுக்கு எவருடனும் இணைந்து விளையாடக்கூடத் தெரியவில்லை.

    `நான்தான் ஃபர்ஸ்ட்  வந்தேம்மா. நோர்லேலா என்னை இடிச்சுத் தள்ளிட்டு, ` நான்தான் ஃபர்ஸ்ட்!’ அப்படின்னு பொய் சொல்றா!” அழுகைக்குரலில் சுந்தரி கூறியது உண்மைதான் என்று அவர்கள் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் தெரிந்திருந்தது.

    “போனாப்போறா, பாவம்!” என்று சமாதானப்படுத்தினேன்.

    “பொய் சொல்றது தப்புதானேம்மா?” நான் சொல்லிக்கொடுத்த பாடத்தை எனக்கே புகட்டினாள் என் எட்டு வயதுப்பெண்.

    “அவகூட தினமும் வராளே ஆரிஸ், அவ நோர்லேலாவை ரொம்ப அடிக்கறா, பாவம்!” அதற்குமேல் என்னால் சொல்ல முடியவில்லை.

    நோர்லேலாவின் பெற்றோரை அங்கு எவரும் பார்த்தது கிடையாது. அந்த இந்தோனீசிய வேலைக்காரிதான் அவளுக்கு ஒரே துணை.

    ஒருமுறை, நோர்லேலா ஓடிவர, என்மேல் மோதிக்கொண்டாள். நான் புன்னகைத்தேன். பின்னால் வந்துகொண்டிருந்த ஆரிஸ் அவள் கையைப் பிடித்திழுத்து ஒரு வயதே நிரம்பிய அந்தக் குழந்தையின் முதுகில் அடிக்க ஆரம்பித்தாள்.

    “விடு, விடு,” என்று நான் அலறியபோது, “ஒங்களுக்குத் தெரியாது, ஆன்ட்டி. இவ ரொம்ப நாட்டி!” என்றாள். அடியை நிறுத்தவில்லை.

    இந்த வன்முறை அடுத்த பத்து வருடங்கள் தொடர்ந்தது. `நமக்கெதற்கு வம்பு!’ என்று என்னைப்போலவே பல தாய்மார்களும், பாட்டிகளும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

    அதற்கும் முடிவு வந்தது.

    `வீட்டுக்குப் போகலாம், வா!’ என்று ஆரிஸ் அழைத்ததைச் சட்டைசெய்யாது நோர்லேலா விளையாடிக்கொண்டே இருக்க, `என்னையா அலட்சியம் செய்கிறாய்!’ என்று ஆத்திரத்துடன், அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள் ஆரிஸ். சிறுமியின் அலறல் மைதானம் முழுவதும் கேட்டது.

    ஐந்து வயதே ஆகியிருந்த சீ சூனை அவனைப் பார்த்துக்கொள்ளவென்று நியமிக்கப்பட்டிருந்தவள் `உப்புமூட்டை’ தூக்கிக்கொண்டு வருவாள், அருமையாக. இப்போது அவன் நோர்லேலாவின் நிர்கதியைப் பார்த்து, பெரிதாக அழ ஆரம்பித்தான்.

    ஒரு குழந்தைக்கு இருந்த மனிதாபிமானம்கூட நமக்கில்லையே என்று வெட்கமாகப்போயிற்று எனக்கு. இந்தக் கொடுமைக்கு எப்படி முடிவு கட்டுவது?

    சற்று இருட்டியதும், நோர்லேலாவின் வீட்டுக்குப் போய், அழைப்பு மணியை அழுத்தினேன்.

    “எஸ்?” கதவைத் திறந்தவளிடம், “நான் தினமும் பார்க்கில் உங்கள் மகளைப் பார்க்கிறேன். அந்தக் குழந்தையை வேலைக்காரி சித்திரவதை செய்கிறாள். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான்,” நான் முடிப்பதற்குள் உள்ளேயிருந்து வந்தவர் நோர்லேலாவின் தந்தையாக இருக்கவேண்டும். வயதானவராக தோற்றமளித்தார்.

    “என்ன விஷயம்?” என்று விசாரித்தவுடனே, “உள்ளே வாங்களேன்!” என்று உபசரித்தார்.

    “சும்மா பார்த்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்,” என்றபடி நடையைக் கட்டினேன்.

    இவர்களிருவரையும் நான் பார்த்ததே இல்லையே என்று என் யோசனை போயிற்று. அதுதான் ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறோமே, இனி வேலைக்கு வந்தவள் பாடு என்று விட்டுவிட்டார்கள்!

    அடுத்த சில நாட்கள் நோர்லைலா விளையாட வரவில்லை. அவள் வந்தபோது, அப்பா உடன் வந்தார். என்னைப் பார்த்ததும், முகம் சிறுத்துப்போயிற்று.

    வாயை வைத்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. “ஆரிஸ் வரலியா?”

    அவர் கையை வீசினார். “போயிட்டா!” குரலில் வெறுப்புடன் நிம்மதியும் கலந்து வந்தது.

    பெற்ற குழந்தையைச் சரியாகப் பராமரிக்கத் தெரியவில்லையே என்று பிறர் கேலி செய்யும் அளவுக்கு நடந்துகொண்டுவிட்டோமே என்ற அவமானம். விரைவில் என்னைக் கடந்துபோனார்.

    அதன்பின்னர் இருவரையுமே காணவில்லை. அப்பெண்ணை ஹாஸ்டலில் விட்டுவிட்டார்கள் என்று யாரோ சொன்னார்கள்.

    நோர்லேலா கூச்சல் போட்டபடி விளையாடும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் ஏக்கம் என்று என் கற்பனை போயிற்று. அவள் என்று அப்படி மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறாள்?

    நான் பேச்சை ஆரம்பித்தேன். “கல்யாணம்தான் வேண்டாங்கிறே. ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாமே!”

    “ஐயோ! வேண்டவே வேண்டாம். நான் வேலைக்குப்போறப்போ, எவகிட்டேயாவது விட்டுட்டுப் போகணும். அவ அடிச்சுக் கொல்வா!” சிறுவயதில் பட்ட துன்பங்கள் அவளை எவ்வளவு தூரம் காயப்படுத்தியிருக்கிறது!

    பிறகு, மெல்லிய குரலில் சொன்னாள்: “ஆன்ட்டி! அன்னிக்கு நீங்க மட்டும் எங்க வீடு தேடி வந்து, அந்த அம்மாகிட்ட நான் அனுபவிச்ச கொடுமையைப்பத்தி சொல்லியிருக்காட்டி, என்னைக் கொன்னே போட்டிருப்பா அந்தப் பழிகாரி!”

    அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. ஏன் பல வருடங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தீர்கள் எல்லாரும் என்கிறாளோ? உங்கள் குழந்தையை யாராவது படுத்தினால், பொங்கி எழமாட்டீர்களா என்கிறாளோ?

    “குழந்தைங்க பாரம்னு நினைக்கிறவங்க தத்து எடுத்துக்கக் கூடாது”. அவள் குரலில் ஏக்க இறக்கம் இல்லை. இயந்திரம் பேசுவதுபோல் இருந்தது.

    இவள் யாரைச் சொல்கிறாள்?

    அவளே விளக்கமும் அளித்தாள். “நான் யாரோ அனாதையாம். எங்கேயிருந்து பொறுக்கினாங்களோ! சாப்பாடு போட்டு, படிக்கவும் வெச்சா அவங்க கடமை முடிஞ்சுட்டதுன்னு நெனைச்சாங்க எங்க வீட்டிலே!” அவள் குரலில் அளப்பற்ற வெறுப்பு. “நான் அன்பா வளரலே. சின்ன வயசில எனக்குக் கிடைக்காததை இன்னொரு குழந்தைக்கு என்னால எப்படி ஆன்ட்டி குடுக்க முடியும்?”

    கண்கள் சொருகியிருந்தன. “எப்பவாவது, வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா நம்பகூட பேச ஒருத்தன் இல்லியேன்னு இருக்கும். ஆனா, அவனும் அடிக்க ஆரம்பிச்சா? எனக்கு வழிகாட்ட யாரும் இல்லியே! அதான் கல்யாணமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம்னு இப்படியே இருக்கேன்!”

    சம்பந்தம் இல்லாமல், “வீட்டுக்கு வாயேன், லேலா. சுந்தரி ஒன்னைப் பாத்தா சந்தோஷப்படுவா!” என்று ஏதோ சொன்னேன். மனம் கனத்திருந்தது.

    Share
  • மனித வடிவில்…… (சிறுகதை)

    மனித வடிவில்…… (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    விடியற்காலை நான்கு மணி இருக்கும்… “மீனவர்கள்  இன்றும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்”………. காவல்துறை வாகனம் எச்சரிக்கை விட்டுக்கொண்டு இருபக்கமும் மணல் நிறைந்த தார்ச்சாலை வழியாக வேகமாகச் சென்றது.

    கீதாவுக்கு இது ஏழாவது மாசம் வயிற்றைத் தள்ளிக்கொண்டு கணவன் சுந்தரத்துடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    “ஏங்க, மீனு இன்னும் கொஞ்சம் ஐஸ்கட்டில கெடக்கு. இன்னைக்கும் டூரிஸ்டுக்காரங்க வரலேன்னா அது நொஞ்சுரும்.  ஒலத்தவும் முடியாது. வெயிலடிக்குமானும் தெரியல”

    “என்ன பண்ண நம்ம பொழப்பு இப்படி ஆயிப்போச்சு.  தூக்கி வீசு. நமக்கு இந்த மீன் புடிக்கறதத் தவிர வேற ஒரு எழவுந்தெரியாது. ஏதோ கடலில போய் மீன் புடிச்சா மட்டு சாப்பாடு கெடச்சிடுமா?.  எப்போ கடலுதண்ணி வந்து நம்ம ஊர அழிச்சுதோ அதோட நம்ம எனத்தோட வாழ்க்கெயும் முடிஞ்சு போச்சு.”

    “ஏங்க புலம்புறிங்க. நா இப்ப என்ன கேட்டுட்டே”

     “பொலம்பாம என்ன பண்ண. வருசத்துல நாலஞ்சு மாசம் மழக்காலமாப்போச்சு, கடலுக்கும் போக முடியல. மாசத்துல பாதி நாளு புயலு எச்சரிக்க.  மீதி சில நாளு இலங்கக்காரங்களோட தாக்குதலு.  தனுஷ்கோடினு  ஒரு பகுதி இருந்துச்சு. அது அழிஞ்சு போய் இம்புட்டு வருசமாச்சு. அந்தப்பகுதி மக்களுக்கு ஏதாவது ஒரு பாதுகாப்பு இருக்கா. இல்ல,  வீடுகதா நல்லா இருக்கா.  ஏ… சுனாமி வந்த ஊரெல்லா மறுபடியும் பழைய நெலமக்கு வரல?.  நம்ம ஊர மட்டும் பழய வரலாறா காமிச்சு சுத்துலா இடம்னு மாத்திட்டாங்க. இங்கே இருக்கறவங்க நெலமய யோசிச்சுப்பாரு.  சுத்துலாக்காரங்கள  நம்பித்தான நாம பொழப்பு நடத்துறோம்.  சுத்திப்பாக்க வர்றவிக  எல்லாரு  இங்க வந்து சாப்புடுறாங்களா?.  யாரோ ஒரு சிலரு வராங்க. அதிலே  பாதி நாளு அவங்களையும் விடறதில்ல. பொழுதுபோய் பொழுது விடிஞ்சா வயத்துப் பொயப்புக்கே வழியில்லாம இருக்கோ. வடக்கனுக  ஒருத்த ஊர வுட்டுட்டு வந்தாப்போதும் அப்படியே அவ ஊரயே கூட்டிட்டு வந்து இங்கிட்டு  தங்கிடறானுக. பொயப்புக்காக ஊருவிட்டு ஊரு போயிடறானுக. நாமதா சித்தப்பா, பெரியப்பா, மாமான்னு எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒன்னா கெடந்து இங்கேயே சாகுறோம். இதக்கடந்து நம்ம யோசனப் போகுதா? உரிமையோடு பழகுன இந்த மண்ண விட்டுட்டு எங்கிட்டுபோயி ஒண்டறது. வாழ்வோ? சாவோ? அது இந்த மண்ணோடு தா அப்படின்னு எங்கப்பங்கார சொல்லிப்புட்டு போய் சேந்துட்டா. மனசு கேட்க மாட்டேங்குது. நாளக்கு எம்புள்ளயும் இந்த சொந்த பந்தத்தை விட்டுப்புட்டுப் போக மனசில்லாம இங்கனயே தங்கிக்கினு, நம்ம பொழப்பு இப்படித்தா முடியப் போகுது .” என்று தலையில் தட்டினான்.

    வங்காள விரிகுடாவும், இந்தியப்பெருங்கடலும்  சங்கமிக்கின்ற அழகிய இடம். பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தார் சாலையின் இரு பக்கங்களிலும் கடல்.   ஒரு பக்கம் அமைதியானக் கடல். மறுபக்கம் அதிபயங்கர ஓசையை எழுப்பிக்கொண்டு அலைகளுடன் ஆர்ப்பரிக்கும் கடல். சுற்றுலா வழிகாட்டிகள் அமைதியானக் கடல் பரப்பைப் பெண் கடல் என்றும் ஆர்ப்பரிக்கும் கடல் பரப்பை ஆண் கடல் என்றும்தான் விளக்குகிறார்கள். திரும்பிய திசை எங்கும் கடல்நீர். ஆர்ப்பரிக்கும் அலை ஓசை.  மிதமான ஈரக்காற்று. சுண்ணாம்பு போன்ற வெள்ளை மணல் படுகைகள். காற்றில் அடித்து வரும் அலைகளிலிருந்து நம்மீது தெளிக்கும் பன்னீர்த்துளிகளாய் நீர்த்துளிகள்.  கடலலைகளை இரசிக்கப்பிடிக்காத மனித மனமும் உள்ளதோ. அலையின் ஓசைகளில், அதன் ரம்மியங்களில் மூழ்கிப்போவது எத்தனை எத்தனை நினைவலைகள்.  ஆபத்துகள் நிறைந்தது என்று தெரிந்தும் கால்களை நனைக்காமல் மீள மனம் வருமா?.

    “மத்தவங்களுக்கு அழகா இருக்கற கடலு நம்மளபோல இருக்கற அன்றாடங்காட்சிகளுக்கு  ஒரு சாபமாப்போச்சு. அறுபது வருஷமாச்சு நாம எல்லாத்தயும் எழந்து”

    என்று புலம்பலைத் தொடர்ந்தான் சுந்தரம். “நம்ம பொழப்பப்பாரு…… யாராவது சுத்துலாக்காரங்க வந்தா போய் ‘சாப்பிட வாங்க’. ‘சாப்பிட வாங்க’ன்னு கெஞ்சி கையப்புடிக்காத கொறயா இழுக்கணும். அவன் பக்கத்துக் கடைக்கு போயிட்டா  அது மாமன் மச்சா கடையா இருந்தாலும் நமக்கு வியாபாரம் போச்சுன்னு அம்போன்னு இருக்க வேண்டியதுதா. அந்தி விழுந்தா வெளிச்சத்தில உட்கார வகுசு இருக்கா? பொழுதுபோக ஒரு டி.வி பொட்டி இருக்கா? ஊருக்கெல்லா கரண்டு இருக்கு. ஆனா நம்ம பொழப்பு இருட்டுக்குள்ளயே கெடக்கு. இங்க வர்றவனுகளப் பாக்கும்போது வயிறு பத்திகிட்டு வருது. அடுத்த ஜென்மத்துலயாவது நாம இவனுக வீட்டுல நாயாவாவது பொறக்க மாட்டோமான்னு தோணுது. என்னக்கோ ஊர சுத்திப்பார்க்க வர்றவனுக கடலுக்கு எல்லையே இல்லன்னு ஆசையா பாத்துகிட்டுப் போறானுங்க. ஆனா, நமக்கு இந்த ரெண்டு கடலுந்தானே எல்லையாவேப் போச்சு. ஒவ்வொரு பொழுதயும் பயந்துகிட்டே கழிக்க வேண்டியதா இருக்கு. இதில பாதி நாளு ஏதாவது மண்டபத்திலத் தங்க வெச்சர்றாங்க. கடல் தாயே….. ஒனக்குக் காது கேட்குமா……”

    “போதும் மாமா..  நா ஒண்ணும் பேசல. சும்மா பெனாத்தாம போய் படு. நாளைக்குக் கடலுக்குப் போவியாமா.”

    அடுத்தநாள் பொழுதுசாய சுந்தரம் வலைகளைத்தூக்கிப் படகில் போட்டுக்கொண்டு கடலை நோக்கிப் புறப்பட்டான். சாயுங்காலம் கிளம்பினால்தான் விடியற்காலம் மீனுடன் திரும்ப முடியும். இரவு அலைகள் அதிகமாக இருக்கின்ற நிலவொளியில்தான் மீனவர்களின் வேலையே ஆரம்பமாகிறது.

    2

    “ம்மா ரொம்பப் பசிக்குது மா…………. இன்னிக்காவது நம்மள யாராவது பாப்பாங்களாமா…….”

    குலசேகரனோட வாயப்பொத்தினாள்  இலட்சுமி.

    இலங்கையிலிருந்து எப்படியோ தப்பித்து வந்து இராமேஸ்வரம்சென்று, மகனை அப்துல்கலாம்போல படிக்க வைக்கணும்ங்கிறது குலசேகரனுடைய அப்பா பூமிநாதனுடைய கனவு. பூமிநாதனோட அப்பாவின் குடும்பம் இராமேஸ்வரம் வழியாக மீன்பிடிக்க வந்தபோது எல்லை மீறினதால இலங்கை கடற்படையால் கைது  செய்யப்பட்டவர்கள். அக்கைதிகளுள் ஒரு கூட்டத்தை உருவாக்கி அங்கேயே தங்கி விட்டார். அவரின் சண்டித்தனத்துக்குச் சரியானது  இயக்கத்தில சேர்வதுதான் சரியென்று இணைந்து விட்டார். உடன் வந்த நாலு பேரையும் சேர்த்து விட்டு, அங்கேயே கல்யாணமும் முடித்து  பூமிநாதனப் பெற்றெடுத்தார். இயக்கத்தோடப் போராட்டப் பயிற்சிக்காக பூமிநாதனையும் அழைச்சிட்டுப் போவார். மறைந்திருந்து தாக்கும் பயிற்சி அளிக்கும்போது கால்தவறி விழுந்து கல்லில் மண்டை அடி பட்டு இறந்திட்டார். மகனையும் அதே இயக்கத்துக்குத் தாரைவார்த்து கொடுத்துவிட்டார். ஆனா பூமிநாதன் வளர்ந்து பெரியவனானதும்   தெளிவானவனாகிவிட்டான். ‘எக்காரணம் கொண்டும் தன் மகனை இந்த இயக்கத்தில சேர விடக்கூடாதுன்னு மனைவி இலட்சுமியையும்  மகனையும் அவர் இயக்கத்தில சேர விடவே இல்லை.  அவர் சாகும்போது கடைசியா ‘எம்புள்ளய எப்படியாவதுப் படிக்க வைன்னு’ சொல்லிவிட்டு கண்ண மூடினார்.’ என்று கூறிய அவருடைய நினைவுகளை அசைபோட்டாள் இலட்சுமி.  ‘

    ‘அவருக்கு சத்தியம் செஞ்சுக் கொடுத்த வார்த்தைக்காக எம்புள்ளைய கூட்டிட்டு யாருக்குந்தெரியாம காட்டுவழியா இரவெல்லா நொழஞ்சு நொழஞ்சு ஒரு கடல் எல்லைக்கு வந்திருக்கே. ஏதாவது  மீன் புடிக்கிறவங்க கண்ணுல பட்டாக்கூடப் போதும். அவங்ககிட்ட எப்படியாவது கேட்டு இராமேஸ்வரம் போயிடுவே. நேத்து இரவு முழுக்க  இந்தக் குளுருலேயே உட்கார்ந்து கெடக்கோ. ஒரு படகெயாவது கண்ணுல காட்டு சாமி. என்று இலட்சுமி வானத்தைப் பார்த்துக் கும்பிட்டாள். ‘குலசேகர அப்படியே அவென்ட அப்பாவ உருச்சு வெச்சிருந்தா. அவ அப்பா எப்பவுமே இவனெ கலாம் கலாம்னுதா கூப்புடுவாரு. எப்படியாவது என்டெ தங்கத்தெ பள்ளிக்கொடத்தில சேத்தரணு. நானும் அவரும் ஜீவிச்ச வாழ்க்கக்கு என்னெ கண்ணோட மணியா வெச்சு  பாத்ததுக்கு அவருக்காக நா இதக்கூட செய்யலேன்னா அவரோட ஆத்மா சாந்தி அடையாம  அலயுமே.’ என்று புலம்பினாள்.

    காடு வழியாக நிமிர்ந்து நடக்காமல்  நடு நடுவே முட்டிப்போட்டு மறைந்து மறைந்து நடந்து வந்ததில அவர்களுடைய உள்ளங்கைகளில் வலியின் கொடூரம். குலசேகரனின் தலமுடியைக்   கைகளால் கோதிவிட்டு கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை புடவை முந்தானயால் ஒத்தினாள்.  திங்கட்கிழமைக் கெளம்பனது.  இப்போ புதன்கிழமை. நடுராத்திரி ஆயிடுத்து. ‘தூரத்தில் ஒரு படகு தெரிந்தது. சாமி இந்தப் படகெயாவது காட்டிடு சாமி.’ மெதுவாக நகர்ந்து வந்த படகு இலட்சுமியைப் பார்த்து நகர்ந்து வந்தது.கடவுளுக்கு அவளது பிரார்த்தனை கேட்ட து.

    திருமணமாகி நான்கு வருடத்திற்குப்பிறகு  கருத்தரித்த கீதாவை நினைத்துக்கொண்டு படகை செலுத்திய சுந்தரத்தின் கண்களுக்கு,  தூரத்தில் ஒரு சின்ன கை  அசைவது தெரிந்தது. மீன்பிடி படகு என்பதால் கொஞ்சம் வேகமாகச் செல்லும்.  மனம் கேட்கவில்லை. அவர்களை நோக்கிப் படகை நகர்த்தினான்.  இன்னும் இரண்டு மீட்டர் போனால் இலங்கை எல்லைப்பகுதி  வந்து விடும். அதற்குமுன் நீர் ஒழுகிப்போவது போன்ற அலைகள் குறைந்த  பெரிய நீர்  பரப்பு உள்ளது. சிறுவன் அந்தத் தண்ணீரில் குதித்துவிட்டான்.  யாரும் இல்லாமல் தத்தளிப்பானோ? மூழ்கி விடுவானோ?. அவனெக் காப்பாத்தப் போய் நமக்குச் சிக்கலாகி விடுமோ? பரவால்ல. சின்னப்பயனா தெரியுறா. நாலு வருடமா குழந்தை இல்லாத கவல என்னன்னு எனக்குத் தெரியும். படகு அவன் அருகில் செல்வதற்கு முன் அவன்  கொஞ்சதூரம் நீந்தி வந்து விட்டான். அவனுடன் நாப்பது நாப்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பொண்ணும்.

    ‘எங்கள காப்பாத்தவந்த எங்குலசாமி, எங்கள எப்படியாவது கூட்டிட்டு போ சாமி! எம் பையனைப் படிக்க வைக்கணு. இங்கே இருந்தா இயக்கத்தில சேர்த்து விட்டுருவாங்க.” என்று சுந்தரத்தைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.

    “ஐயோ! சாமிங்களா நீங்க இலங்கக்காரங்களோ. ஆளவிடுங்கப்பா கொழந்தப்பய  தண்ணீல கெடக்கானேனு வந்தே.  இந்த வேல நமக்காகாது.  ஆள விடுங்க’ சாமி என்று துடுப்பைத் திருப்பினான்.

    “மகனே ஒன்னய பாக்குறதுக்கு எனக்குப் பொறக்காத பையனாட்ட தெரியுற தங்கோ. எங்களுக்குக் கல்யாணமான வருசத்தில கொழந்த பொறந்திருந்தா ஒன்னய மாதிரி வளர்ந்திருப்பாஞ்சாமி. எட்டு வருஷம்கிட்ட கொழந்த இல்லாம எல்லாக்கடவுளையு வேண்டிதா கெடச்சது. ரெண்டு நாளா எங்களக் காப்பாத்த கடவுள் வடிவத்தில  யாராவது வருவாங்கன்னு காட்டுக்குள்ளேயே கெடந்தோ மகனே.  எப்படியாவது கருணை வையுப்பா.  உங்குடும்ப நல்லா தழச்சு வளரு. என்று ஈரச்சேலையுடன் வணங்கினாள்.

    “ம்மா இங்கன இருந்து, அங்க ஒருசிலர கூட்டிக்கினுப்போக வருவாங்க  அப்ப வாங்க. இப்ப வந்தா சிக்கிருவீங்க.”

    தாயின் கதறல், சிறுவனின் முகம், ‘என்டெ மகனாட்ட  இருக்கேன்னு  வெள்ளந்தியா சொன்ன வார்த்தைகள். அந்த நேரத்தில அவர்களை அப்படியொரு நிர்கதியில் விட்டுட்டுப்போக அவனுக்கு மனம் வரவுமில்லை.  அவனை என்னமோ செய்தது.

    “அம்மா  நாமபோற வழியில போலீசுக்காரனுவ பாத்தாங்கன்னா என்னயும் சேத்து உள்ள வச்சிருவானுக.”

    சுந்தரத்தின் மன எண்ணங்களை உணர்ந்தவளாய் “இல்லெ மகனே நான் ஒனக்கு ஒங்க குடும்பத்துக்கு எந்த தொந்தரவு கொடுக்கமாட்டே. என்னை நம்புப்பா. இது என்டெ வீட்டுக்காருமேல சத்தியம். எங்கள எப்படியாவது  கரைகிட்ட வர கூட்டிக்கிட்டுப் போனாப் போதும். அதுக்கப்பறம் நாங்க கண்ணுலகூட படமாட்டோம். என்ன நம்புப்பா. இது என்டெ கடவுளா இருக்கற வீட்டுக்கார நெனச்சு சொல்றே.  என்ன கரையில மட்டும் சேர்த்தாப் போதும்.

    “நீங்க அங்கன போயி என்ன பண்ண முடியு?. நீங்க பேசுறதே ஒங்கள மாட்டிக்கொடுத்துரு.”

    “இல்லையப்பா எனக்கு ரொம்ப குளிருது.  குளிர்ல வாய் ஒளருது.  எனக்கு வேற மாதிரியும்  பேச வரும். என்ன பண்ண என்னோட வீட்டுக்காரோட மொழிய பேசும்போதெல்லா அவர்கூட இருக்கறதா நெனப்பு. நான் என்ன மாத்தி பேசிக்கடறே.”

    அவனுக்கு விட்டுச்செல்லவும் மனமில்லை. சிக்கலில் மாட்டவும் விருப்பமில்ல. சிலநிமிட தயக்கத்திற்குப்பிறகு “சரி சீக்கிர ஏறுங்க. ஆனா நாஞ்சொல்றத நீங்க கேட்கணு. நல்லா குமிஞ்சுதா ஒட்காரோனு. போலீஸ் ரவுண்ட்சு போயிட்டு இருப்பாங்க. ஏறுங்க………   நானே சாப்பாட்டுக்கே வழியில்லாமதா மீன்புடிக்கவே வந்தே. கொஞ்சம் முன்னாடிதானே சரக்குவண்டி போச்சு, அதுல போயிருக்கலாமில்ல.”

    “இல்லெ சாமி அதுல நெறெய பேரு இருந்தாங்க. எங்களக்காப்பாத்த  உங்களாட்ட ஒரு கடவுள், ஒரே ஒரு கடவுள் வருவாருனு காத்துக்கெடந்தோ.”

    இருவரையும் ஏறச்சொல்லி சைகைக் காட்டினான்.   இருவரும் சுந்தரத்துக்கு நேராக மீன் வலைக்கு  அந்தப்பக்கம் உட்கார்ந்தனர், மீன்கள் வலைக்குள் துள்ளிக் கொண்டிருந்தன. வலைக்கு அந்தப்பக்கமாக இருவரும் அமர்ந்தனர்.   மௌனம் சிறிதுநேரம் நீடித்தது.

    “இதா பாருங்கம்மா மணி ரெண்டுதா ஆகுது. நாம்போயி கரையில எறக்கி விட்டுடறே.  அதுக்கப்புற என்னான்ட எதுவு கேட்டு தொந்தரவு பண்ணக்கூடாது.”

    “இல்லை மகனே உங்களை ஒரு தொந்தரவும் செய்ய இயலாது என்னை நம்புங்கள்.”

    சற்றுதூரம் சென்றதும் மோட்டார் படகில் போலீஸ்காரர்கள் ரோந்து வருவது தெரிந்தது. மீன்பிடித்து வருபவர்களை அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். சந்தேகத்திற்கு உரியப் படகுகள் ஏதாவது தென்படுகிறதானு  பார்ப்பதுதான்  அவர்கள் வேலை.

    “அம்மோ போலீஸ் வண்டி வருது. அப்படியே படுத்துக்கோங்க.”

    தனது சேலைக்குள் பொதிந்த உடம்போடு சேர்த்து இறுக்கி அணைத்திருந்த தனது மகனையும் சேர்த்து அப்படியே படுத்துக்கொண்டாள்.  சுந்தரம் சீக்கிரமாக  தார்ப்பாயைத் தூக்கி அவர்கள் மேலே போட்டுவிட்டு  அதற்கு மேல் மீன்வலையைத் தூக்கிப் போட்டான். மீன்கள் வலைக்குள் பிடைவது தார்ப்பாய் வழியாக அவர்கள்  உணர்ந்தனர், முடியாமல் குலசேகரன் நெளிந்தான். அவனை மேலும் இறுக அணைத்துக்கொண்டாள். உயிரைப் பாதுகாத்து ஊர்ப்போய் சேருவது எண்ணமாக இருப்பதால் அவள் தன் ஆடையின் ஈரத்தைப்பற்றி யோசிக்கவில்லை. ஆடை முழுவதும் ஈரம். குளிர் நடுக்கியது. சுமார் அதிகாலை இரண்டரை மணி இருக்கும், படகு கரையை அடைந்தது. உடன்வந்த படகுகள் எல்லாம் கரைசேர்வதுவரை மெதுவாக துடுப்பிட்டான்  சுந்தரம். “எல்லோரும் அரை மணி நேரத்தில் மீன மார்க்கெட்டுக்கு எடுத்துட்டுப்போயிடுவாங்க. அதுக்கப்புறம் யாருக்கும் தெரியாம எறங்கிப் போயிடனு சரியா…”

    அவள் கையெடுத்துக் கும்பிட்டாள்

    சுந்தரத்தின் மச்சினன்  கடற்கரையில் சைக்கிளில் காத்து நின்றான்.  சுந்தரன்  மச்சினனுடன் மீனை எடுத்துக் கொண்டு போனான். இலட்சுமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, யாரும் இல்லாத சமயம் பார்த்து தலையைத்தூக்கி ஒருமுறை கடலைத் திரும்பி பார்த்தாள். ‘இவ்வளவு தூரம் கடந்து வந்து விட்டோம்! பிறந்த மண்ணை விட்டு! அடிமை மண்ணை விட்டு! தன் கணவன் வாழ்ந்த  மண்ணை விட்டு. கண்ணீர் ததும்பி நின்றதால் கடல் எல்லை தண்ணீரின்றி சலனமற்று இருளாகத் தெரிந்தது. அமைதியான கடல். எல்லையில்லா நீர்ப்பரப்பு.  மீண்டும் தான் வாழ்ந்த மறுகரையை நினைக்கவே கூடாது என்று குனிந்து கடல்நீரை எடுத்துத் தலையில் தெளித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள். குலசேகரன் தலை மீதும் தெளித்து விட்டாள்.  கண்களில் ஒத்தி கொண்டாள்.

    கும்ம்ம்மிருட்டு.  சாலை எது? ஓரக்கரை எது? என்று தெரியாமல் இருந்தது. அந்த ஊர் மக்களின் காவல்தெய்வம் சங்கிலிக்கருப்பனாக கடல் மட்டும் ஓயாமல் சிலம்பொலிகளாய் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. தனுஷ்கோடியின் வளைவு நன்றாகத் தெரிந்தது, இரு கடலும் சங்கமிக்கின்ற பகுதியைக் கூர்ந்து கவனித்தாள், அவளின் இடதுகை பக்கமுள்ள கடலோ அலைகளை வேகமாக வீசியது, வலது பக்கக்  கடல் அமைதியாக இருந்தது. துணியின் ஈரமும், காற்றின் வேகமும், யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயமும், அவர்களது நடையின் வேகத்தைக் குறைத்தது. குலசேகரனை இழுத்துக்கொண்டு முன்னோக்கி வேகவேகமாக நடந்தாள். ஆங்காங்கே சிலரின் நடமாட்டம் தெரிந்தது. ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. இனியும் விடிவதற்கு நேரம் இருக்கு. ஓடிப்போய் பாதி பிய்ந்து தொங்குகின்ற ஓர் ஒற்றைக்  குடிசையின்   பின்புறமாகத்   தஞ்சம் புகுந்தனர்.

    “ம்மா எனக்கு ரொம்ப ஒறக்கமா வருது.” இரண்டு நாட்களாக அலைந்துவந்த களைப்பு உண்மையில் அவளையும் தளர்த்தவே செய்தது.

    “ஒறங்கலாம் பா. நல்லாவெடியறவர இங்கதா இருக்கணு. வெடிஞ்சதுக்கப்பறோ டூரிஸ்டு வண்டிக வரத்தொடங்கனதும் கூட்டத்தோடு கூட்டமா இங்கன இருந்து போயிரலா.”  என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பிய்ந்துபோன கூரைக்கடியில்  கிடந்த சில அட்டைகளை எடுத்து விரித்தாள். மகனை அதில் படுக்கச் சொன்னாள். அவன் படுத்ததும் உறங்கி விட்டான்.  காற்று பலமாக வீசியது. மணற்துகள்கள் குலசேகரனின் தலை முழுக்க ஒட்டியிருந்தன. அவனுடைய  தலையை தட்டி விட்டுக்கொண்டும், தடவிக்கொண்டும், தூங்கிக்கொண்டிருந்த குலசேகரனை  பார்த்துக்கொண்டே இருந்தாள். கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தமிட்டாள். ‘என் ராசா என்னோட அடிவயுத்தில பால்வார்க்க வந்தவ. நல்லா இருப்படா மகனே. உனக்கு எந்த துன்பமும் நேரக்கூடாது என்று மனதில் எண்ணியவளாய் குளிரில் நடுங்கிக்கொண்டு இரு தொடைகளுக்கிடையில் கைகளை வைத்துப்  படுத்துக்கொண்டிருந்த தன் மகன்மீது  கண்ணீர்த்துளிகள் விழாமல் புடவையால் துடைத்துக் கொண்டாள்.  பாதி கிழிந்த அரிசிப்பையொன்று அங்கு கிடந்தது. அந்த அரிசிப்பைக்குள் குலசேகரனின் கால்களைத் தூக்கி  வைத்தாள். முட்டி  வரை மூடியது. பாதி உடல் மணலிலும் பாதி உடல் அட்டைகளிலுமாகப் படுத்துக்கொண்ட அவள் மகனின் மேனியை சேலையால் இறுக மூடினாள். தலை மணலில் படாதவாறு தனது கையை நீட்டி அதன்மேல் தலையை மெதுவாகத் தூக்கிவைத்தாள்.  கொஞ்சம் குளிர் நின்றது.

    3

    அசதியில் நன்றாகத் தூங்கிவிட்டார்கள். குடிசைக்குப்பின்புறம் என்பதால் யாரும் கவனிக்கவும் இல்லை. விடியலின் வெளிச்சம் பளீரென இருந்தது. வண்டிகளின் இரைச்சல், மக்களின் பேச்சு சத்தம், பலமொழிகளின் கலவை, காதுகளில் விழுந்தன. நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா? இல்லை ஏதாவது வடக்குப் பகுதிக்கு வந்துவிட்டோமா எனும் அளவிற்கு இந்தி பேசுபவர்களின் கூட்டம் அதிகம், வயதான பெண்மணிகள் அரைக்கால் சட்டையில் வெள்ளைவெளேர் என்றிருக்கும் தொடைப்பகுதி தெரியும்படியான  டிரௌசரும், பனியனும் போட்டிருந்தனர். பனியனில் மார்புக்கு நடுவில் மாட்டிய கூளிங்கிளாசுடன்  நிறையப் பெண்கள். உடையில் ஆண்பெண் வித்தியாசமே தெரியவில்லை.

    சுற்றுலாப்பயணிகளை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த இலட்சுமி ‘என்ட வீட்டுக்காரரும் என்ன எப்பவும் அழகா சிங்காரிச்சுக்கத்தா சொல்லுவாரு. வாடிப்போய் இருந்தா அவருக்கும் பிடிக்காது. என்ன வருத்தமானாலும் நாம உடையில காட்டக்கூடாதுங்கறது அவரு விருப்பமா இருந்துச்சு.” என்று பெருமூச்சு விட்டாள்.’

    இரண்டு நாட்களாகப் புயல் எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடிக்குச் சுற்றுலாப்பயணிகள் செல்ல இடப்பட்டிருந்த தடை நீங்கியது.  அடுத்தநாள் நிறைய கூட்டம். கூட்டத்தோடு கூட்டமாக இலட்சுமியும் பையனுடன்சென்று தனுஷ்கோடியின் அழகைக் கண்டு ரசித்தாள். இரண்டு கடல்கள் சங்கமிக்கின்ற காட்சியைப்பார்க்க அவ்வளவு இரம்மியமாக இருந்தது. காலை உணவிற்கு நல்ல வேளை சுந்தரம்  கொடுத்த பிஸ்கட் இருந்தது.  தப்பிவந்து தமிழ்நாட்டை அடைந்ததில்  உருவான மகிழ்ச்சி வயிற்றை அடைத்திருந்தது. எப்படியாவது இராமேஸ்வரம் கோயில் செல்லவேண்டும். அரசு பஸ்ஸில் ஏறினால்  இடையில் செக்கிங் வந்தால் மாட்டிக்கொள்வோம், கையில் காசுவேறில்லை. இரவு முழுவதும் அமைதியாக இருந்த இடம் காலையில் சுற்றுலாப் பயணிகளின் வண்டிகளால் போக்குவரத்து நெரிசல்  நிரம்பி வழிந்தது. வெள்ளரிக்காய், மாங்காய் விற்பவர்கள், வண்டிகளில் வேர்க்கடலை மற்றும் சோளம் விற்கும் வியாபாரிகள், சங்கினாலான அலங்கார பொருட்களைத் தூக்கி நடப்பவர்கள். புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள். வழியோரங்களில் சுடச்சுட மீன் வறுவல்களின் வாசம்.  கருவாட்டுக்கடை, குளிர்பானக்கடை, ஐஸ்க்ரீம் வண்டி என அவ்விடமே பரபரப்பாக விளங்கியது. அதிகாலையில் அமைதியாக இருந்த இடமா இது. இடையிடையே காக்கி உடை அணிந்த காவல்காரர்களின் அறிவிப்பு. யாராவது வண்டியின்டிக்கியைத்திறப்பார்களா என்று ஒவ்வொரு வண்டியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.   ரொம்ப நேரம் கழித்து ஒரு ஆம்னி பஸ்ஸின் டிக்கியைத் திறந்தவர் அதை சரியாக மூடாமல்  போனதைப் பார்த்தாள்.  அதற்குள் ஏறி பெட்டிகளுக்கிடையில் அவனுடன் அமர்ந்துகொண்டாள்.

    பஸ் இராமேஸ்வரம் நோக்கிச்சென்றது. பூனாரைமுனை  வந்ததும் ஏதோ சந்தேகம் வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி டிக்கியைத்திறந்தார். இலட்சுமி கையெடுத்துக் கும்பிட்டாள்.  இவர்களை இப்போது நடுவில் இறக்கி விட்டால் நாம் சிக்கிவிடுவோம். உள்ளிருக்கும் பயணிகள் என்ன நினைப்பார்கள்.  பேசாமல் கதவை இழுத்து மூடிவிட்டுச் சென்றுவிட்டான். சந்தன மாரியம்மன் தெரு வந்ததும் டிரைவர் வண்டியை மறுபடியும் நிறுத்தினார். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்தப்பகுதியில் ஓட்டுநர் இறங்கி டிக்கியைத் திறந்து அவர்களை வெளியில் இறங்கும்படி சைகைக் காட்டினார். கையைப்பிடித்து இழுத்து வெளியில் இறக்கிவிட்டார். இருவரும் திசையற்று நின்றனர். இவ்வளவு நேரம் மூச்சடக்கி இருந்ததற்கு வெளிக்காற்று ஆசுவாசமாகத்தான் இருந்தது.  ஏதோ லட்சியத்தை அடையப்போவதுபோன்ற உள்ளுணர்வு. மகனின் தலைமுடியைக் கோதிவிட்டு நெற்றியில் முத்தமிட்டாள். “பதினொரு  வயசுல எவ்வளவு பொறுமை, எவ்வளவு சாந்தம்,  எதையும் பொறுமையாக எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை உண்மையில் நான் கொடுத்துவெச்சவதா.  பசிவந்தாக்கூட வாயத்திறந்து கேட்க மாட்டேங்கறா. என்னுடைய நெலம தெரிஞ்சு நடத்துகுறா எஞ்செல்லமே” என்று குலசேகரனை, நாதியற்றவளாய்  கட்டி அணைத்தாள்.

    இறக்கிவிட்ட  பேருந்து சென்ற வழியிலேயே சிறிதுதூரம் நடந்தனர்.  அங்கேதான் அப்துல்கலாம் அவர்கள் பிறந்த வீடு, நினைவு மண்டபமாக இருந்தது, அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அந்தஇடம் அவளுக்குக் கோயிலாகத் தெரிந்தது. நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு மண்ணைத் தொட்டு வணங்கினாள். மகனையும் தொட்டுக் வணங்க சொன்னாள். மனம் குளிர்ந்தது. கடல்வெப்பக்காற்று அவர்களைத் தென்றலாக வரவேற்றது.   இராமேஸ்வரம் கோயிலுக்கு எப்படி போகவேண்டுமென்று   வழிநெடுக விசாரித்து விசாரித்து,  கோவில் வாயிலை அடைந்தனர்.

    இராமாயணத்தில் இராமர்,  இராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்ப்பதற்காக  இலங்கையிலிருந்துத் திரும்ப வரும்போது இராமேஸ்வரம் மணலால் லிங்கம்  உருவாக்கி பூஜித்து  பாவத்தைக் கழித்த இடம் என்பது வரலாறு.  இராமேஸ்வரம் கடலில் மூழ்கி நீராடினால் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. சின்ன வயதிலிருந்தே இதேபோன்ற  புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் இலட்சுமி. எனவே, தனது புதிய வாழ்க்கையைக் கடலில் நீராடி பாவங்களைக் கழுவிய பிறகு தொடங்கலாமென்று கடலை நோக்கி நடந்தாள்.

    இராமேஸ்வரக் கடலில் அவ்வளவாக அலைகள் இல்லை.  அமைதியாக  இருந்தது. இராமர் பூசை செய்ததால் அவரைப்போலவே அமைதியாகிவிட்டதோ? இலட்சுமி மகனுடன் கடலில் மூழ்கி எழுந்தாள். பலராலும் அகற்றி விடப்பட்ட துணிகள், துண்டுகள், விட்டுப்போன சோப்புகள் என ஆங்காங்கே கிடந்தன. அவள் மனதிலும் புதிய எண்ணம் தோன்றியது. கடலில் நீராடியபிறகே கோயில் பிரகாரத்திற்குள் நுழைய வேண்டும். கோயிலிலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும்  நீங்கிவிடும் என்பது ஐதீகம். ஆனால் சீட்டு எடுக்க வேண்டும். சீட்டு வாங்கக் காசில்லை. கோயிலுக்கு  வெளியிலேயே பலர் வாளியை வைத்துக்கொண்டு அழைத்தனர்.

    காற்றில் ஏதோ ஒரு சீட்டு பறந்துவந்து இலட்சுமியிடம் விழுந்தது. சீட்டை கையிலெடுத்து கண்களில் ஒத்தினாள். தீர்த்தமாடும் பகுதிக்கு நடையும் ஓட்டமுமாக விரைந்தாள். அன்றைக்குக் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. ஏனோ, மனதில் குளிர்ச்சி பொங்கியது.  தீர்த்தத்தில் நீராட எங்கு முதலில் செல்லவேண்டும் எனற ஐயமின்றி ஒவ்வொரு கிணறுக்கருகிலும் ஒன்று இரண்டு என்று எழுதிவைக்கப்பட்டிருந்தது. முதல் தீர்த்தம் மகாலெட்சுமி தீர்த்தம். தன்பெயரில் முதல் தீர்த்தம் இருந்ததில் அவளுக்கு பூரிப்பு. கருங்கற்களாலான ஆழமான சின்னக் கிணறு அது. அதில் வாளி விட்டு தண்ணீர் முகந்து எடுக்கிறார்கள். கூட்டமாக நின்றால் அவர் எல்லார் மீதும் படும்படி அள்ளி வீசி ஊற்றுவார். வாளி மிகப்பெரியதொன்றுமில்லை. பெரிய மக் மாதிரி இருக்கும். ஓவ்வொரு கிணறுக்கும் கொஞ்சதூரம் நடக்க வேண்டும். சுற்றிலும் மதில். ஓயாமல் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கிறது. ஆனால்,  கொஞ்சம்கூட வழுக்கவே இல்லை. கிணற்றுமேடுமீது நின்றுதான் அவர் முகர்ந்து ஊத்துகிறார். ‘நளதீர்த்தம்’. ‘சேதுமாதவதீர்த்தம்’, ‘நீலதீர்த்தம்’ என சில தீர்த்தங்கள் தள்ளித்தள்ளி இருக்கும்.  ஒரு கிணற்றினை இரண்டாக பகுத்ததுபோல. ‘சிவ தீர்த்தம்’. ‘சந்திர தீர்த்தம்’ ‘சர்வ காயத்ரி’, ‘சரஸ்வதி’, ‘சாவித்திரி தீர்த்தமும்’. ‘கங்கா’, ‘யமுனா’, தீர்த்தமும் அடுத்தடுத்து இருந்தது. தீர்த்தநீர் தலையில் விழ விழ அவளுக்கு புத்துணர்ச்சியும் புது எண்ணமும் பிறந்தது.   இறுதியாக ‘கோடி தீர்த்தம்’.  மற்ற தீர்த்தங்களை  யாரோ ஊற்றுவார்கள்.              கோடிதீர்த்தத்தை அர்ச்சகர்தான் ஊற்றுவார். வாளியில் அல்ல  சின்ன கமண்டலத்தில். ‘இராமன் லிங்கத்தை பிரதிஷ்டைசெய்யும்போது நீர் தேவைப்பட்டதால் தனது அம்பின் நுனியை, பூமிமீதுவைத்து அழுத்தியதால் பூமியைப்பிளந்துகொண்டு வந்த தீர்த்தமே இந்த  ‘கோடி தீர்த்தம்’ என்று மகனுக்கு சொல்லிக்கொடுத்தாள்.’ கோயிலில் ராமநாதசுவாமி உட்பட அனைத்து சாமிகளுக்கும் இந்தக் கோடி தீர்த்தத்தில்தான் அபிஷேகம் செய்கிறார்கள். இருபத்தி இரண்டு தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு ஆடைமாற்றியப்பிறகு சிவபெருமானை தரிசிக்க வரிசையில் நிற்கவேண்டும். இலட்சுமியிடம் ஈர  உடையை மாற்றி உடுத்த வேறு ஆடை கூட கிடையாது. குலசேகரனுக்கும் அதே நிலைதான். சிறிதுநேரம் வெயிலில் நின்றால் காய்ந்துவிடும் என்று வேகவேகமாக நடந்தாள். பெரிய பெரிய தூண்கள். தூண்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள். ஒரேமாதிரியான வளை வடிவில் அரண்மனைபோல அமைக்கப்பட்ட பிரகாரங்கள், கருங்கற்சுவர்கள் என ஒவ்வொன்றும் ஆச்சர்யம் தரும்விதமாக சினிமாக்களில் பார்ப்பதுப்போல இருந்தன.

    “கடவுளே என்னை யாருமே அடையாளம் கண்டுக்கக் கூடாது. ஏங்கிட்ட எதுவு கேட்கவு கூடாது” என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டிருந்தாள் இலட்சுமி. ஊர், பெயர், வீடு, வேலை, குடும்பம்னு இப்படி எல்லாமும் இருக்கறவங்களே எதை எதையோ தேடி அலையும்போது எதுவும் இல்லாத அவளுக்கு வேறுவிதமான  பதட்டம். கடவுளைத் தரிசிக்க வரிசையில் நிற்பதற்காக அவசரமாக நடந்துகொண்டிருக்கும்போது இடது பக்கம் ஒரு பெரிய விநாயகர் சிலை. அதை சிலர் நின்று வணங்கிச்செல்கிறார்கள். சிலர் போகின்ற போக்கில் வணங்குகிறார்கள். இலட்சுமியும் அதைக் கவனிக்காமல்தான் சென்றாள். அச்சிலைக்கு பூசைசெய்யும் வயதானப்பாட்டி  ‘இங்கே வாம்மா’ என்று இலட்சுமியை அழைத்தாள்.  “ஐயோ ஏதோ சிக்கல் போல மாட்டிக்கொண்டோம்” என்று பயந்து பயந்து அருகில் போனாள்.

    ‘பாட்டி மூன்று விரல்களால் விபூதியைத்தொட்டு அவ்விருவர் நெற்றியிலும் பூசிவிட்டாள். மறுபடியும் விபூதியில் விரல்களை நெனைத்து ‘இனி ஒனக்கு எல்லா காரியமும் நல்லா நடக்கும்மா. கவலய விடு.’  என்று  நெற்றியில் பூசினாள். கடவுள் நேரடியாகக் காட்சி தரமாட்டாரே இதுபோல வேறு வேறு உருவத்தில் காட்சி தருவது போலிருந்தது.  இந்தப் பாட்டி மட்டுமல்ல கடவுள்? தப்பித்து, தனுஷ்கோடிக்கு வரத் துணையாக இருந்த சுந்தரனும் கடவுள்தான். அறிந்தோ அறியாமலோ பஸ்ஸில இவ்வளவு தூரம் வரஉதவின பேர் தெரியாத அந்த டிரைவரும் கடவுள்தான். இவ்வளவு நேரம்  சந்தேகப்பட்டு எந்த கேள்வியும் கேட்காத  இந்தப் பிரபஞ்சமே கடவுள்தான் என்று எண்ணிக்கொண்டாள்.  ஆனால் இவர்கள் மனித உருவில் வந்த கடவுள்கள். இலட்சுமி மயங்கி பாட்டியின்  காலுக்கடியில் விழுந்துவிட்டாள். கண்விழிக்க சற்றுநேரம் ஆனது. கண்விழித்துப் பாத்தால் அவளைச்சுற்றி பலர் ‘உடோ உடோ னு’ சொல்ற வார்த்தைகள் மட்டும் அவள் காதில்  விழுந்தது. கூட்டத்தில நின்றிருந்த பெரிய மீசைவைத்த செக்யூரிட்டி அவளது கண்களுக்குப் போலீசுக்காரராகத் தெரிந்தார். கூட்டத்தில குலசேகரனைக்காணவில்லை. அவளுக்கு ஓ ஓ என்று கத்தவேண்டும் போலிருந்தது. அவளது கண்கள் அவனையே தேடின. அவனை மட்டும் தேடின. குலசேகரா…….. குலசேகரா…… எதுவும் நினைவில் இல்லாதவளாய் நிலையற்றுத் தேடினாள்.

    Share
  • உணர்வுகள் (சிறுகதை)

    உணர்வுகள் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    ‘கமலா எனக்கு சீரு முடிச்சு இது நாலாவது வருஷம். இப்போ வரைக்கும் எனக்கு இப்படி ஆனதே இல்லடி.’

    ‘ எனக்கு ஞாபகம் இருக்குடி என்னோட சீரு முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சுதானே உனக்கு சீரு வச்சாங்க சுமி…. கரெக்டா?’

    ‘ஆமா. ஆனா இதுவரைக்கும் டேட் தவறனதே இல்ல. ரெண்டு நாள் மூணு நாள் முன்ன பின்ன ஆகும். இப்போ நாலு நாள் ஆச்சு இன்னும் ஒண்ணுமே ஆகல.’

    ‘ வெயிட் பண்ணு பார்ப்போம் உனக்கு எதுக்கெல்லாம் கவலைப்படணும்னு வெவஸ்தயே இல்ல.’

    ‘இல்லடி………… போன மாசமும் ஆறு நாள் கழிச்சு தான் ஆச்சு நான் அம்மாகிட்ட பொய் சொன்னே கரெக்ட்டா ஆச்சுன்னு இந்த தடவை சொல்லவும் முடியாது அம்மாவே டேட் குறிச்சி வெச்சிருக்கா.’

    ‘இன்னைக்கு நாம காலேஜ் சேர்ந்து ஃபர்ஸ்ட் செமஸ்டர் கடைசி எக்ஸாம். நாளைலிருந்து 25 நாளக்கி லீவு. லீவ் என்ஜாய் பண்ணுவியா இத உட்கார்ந்து இப்ப போய் பேசிட்டு. சுமி ரொம்ப யோசிக்காத வா அச்சாயங்கடையில போயி ஒரு பழம் பொரி சாப்பிட்டா சரியாகும் வா’

    குழப்பத்துடன் சென்றாள். இனி கமலாவ காலேஜ் திறக்கறவரப் பார்க்கவும் முடியாது. இது போன்ற விஷயங்களை ஷேர் செய்யவும் முடியாது என வருந்தினாள் சுமி. வீட்டுக்குக் கிளம்பி வந்துவிட்டாள்.

    அம்மா, துபாயிலிருந்து அப்பா வர்ற குஷியில் இருந்தா. துபாயில் பெரிய வைட் காலர் வேலை ஒன்றுமில்லை. பிளம்பிங் வேலை தான். போய் நாலு வருஷம் ஆச்சு சீருக்கு வந்தது அதுக்கப்புறம் இப்போதான் வராரு. இவங்க இருக்கிறது  ஒரு கிராமம். தப்பட்டன்கிழவன்புதூர். பஸ் வசதி மிகக் குறைவுதான், ஆனால் ஆற்றின் ரம்மியமான ஓசை, ஈரமான சாரல் காற்று, அடுக்கி வைத்த தென்னந்தோப்புகளின் மிருதுவான காற்று, காற்றில் மிதந்து வரும் வாழைக்கனிகளின் வாசம் என்று இயற்கையோடு கலந்த உணர்வுகள். பிளஸ்டூவிற்குப் பிறகு சுமி எப்படியோ கோயம்புத்தூரில் இலவசமாக ஒரு காலேஜ்ல சீட் வாங்கிட்டா.  லீவு விட்டா வந்துருவா.

    வசதிகள் குறைவா இருந்தாலும் ஒட்டு ஒறவோடு பழகுற கிராமம். லீவுக்கு வரும்போது சுமி அங்கலாய்ப்போட வந்தா. போன மாசம் 16ஆம் தேதி விலக்கானது.  இன்னைக்கு தேதி 20 ஆச்சு அம்மா போனதும் முதல்ல அதுதான் கேட்பா. போன அன்னைக்கு மறந்துட்டா அடுத்த நாள் காலைல எழுந்ததும் முதல் கேள்வியே அம்மாவோடது அதுதான்.

    “ஏம்புள்ள நீ இன்னும் விலக்கு ஆகல.  27ஆம் தேதி கல்யாணத்துக்குப் போகோணும். அதுக்குள்ள ரெடி ஆயிடுவியா?. அப்பா சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாளு அங்க போய் இருக்கலாங்கற திட்டத்தோட வர்றாரு. நீ வேற போற நேரத்துக்கு முக்குல உட்கார்ந்துடாதே”

    “இல்லம்மா இன்னைக்கு அஞ்சு நாள் தள்ளியாச்சு இன்னும் ஆகல.”

    ‘சரி பார்ப்போம்.   தோட்டத்திற்குப் போன செண்பகம் நன்றாகப் பழுத்த பப்பாளியையும், எள்ளுருண்டை பாக்கெட்டையும் சுமித்ராவுக்குக் கொண்டு வந்து கொடுத்தாள். சீக்கிரமா விலக்கு ஆவதற்காக.

    தேதி 23 ஆனது பப்பாளியும். எள்ளுருண்டையும் வேலை செய்யவில்லை. அவளது அப்பா ஊர்ல இருந்து வந்த முசுவில் யாரும் இதைப்பற்றி யோசிக்கவே இல்ல.

    சரி முன்னப்பின்ன ஆகும். ஆகும்போது ஆகட்டும். கல்யாணத்துக்கு எதுக்கும் முன்னெச்சரிக்கையாக எல்லாம் எடுத்துட்டுப் போனாள் சுமி. சுமியின் அப்பா வெங்கடேசனின் ஒண்ணு விட்ட அத்தை பையனுக்குக் கல்யாணம். அவனுக்கு உறவினர்களைப் பார்த்த மகிழ்வு, சொல்லி அடங்காது. கொண்டாடி தீர்க்க டாஸ்மாக் மட்டும் செல்லவில்லை.

    28-ஆம் தேதி ஊருக்குத்  திரும்பின போது தான் செண்பகத்துக்கு ஞாபகம் வந்தது, சுமி இனியும் விலக்காகவில்லை என்று. தனக்குத் திருமணமாகி வந்த புதிதில் விலக்கானால் தன் மாமியார் காட்டும் சுத்தத்தை எண்ணிப் பயப்படுவாள். படுக்க, பாய் தரமாட்டார்கள், தலையணை கிடையவே கிடையாது. விடிவதற்குள் ஆத்துக்குப் போயி குளிச்சிட்டு வரணும். மாத்திக்கத்துணி எடுத்துகிட்டு போகக்கூடாது. ஈரத் துணியோட வீட்டுக்கு வந்ததுகப்பறம்தா துணி மாத்தணும், மூணாவது நாள்  பயன்படுத்தின துணிக,, போர்வை எல்லாத்தையும் நெனச்சுப் போடணும்.வீட்ட சாணிபோட்டு வளிச்சு விடணும். கோமியம் எடுத்திட்டு வந்து வீட்ட சுத்திலும் தெளிச்சு விடணும்.  அம்மாடி இப்போ நெனச்சுப் பார்த்தாலே மலைப்பா இருக்கு.

    சுமியோ மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். 13 நாட்கள் தள்ளிப்போனது கல்யாண வீட்டில் இரண்டு தடவை வாந்தி வேறு எடுத்தாள். செண்பகத்திற்கு வயிறு கலங்கியது நம்ம பொண்ணு தப்பான வழிக்கு எதுவும் போயிருக்க மாட்டா. இருந்தாலும் காலம் வேற கெட்டுக் கெடக்கு. போன மாசந்தா காலேஜிலிருந்து டூர் போறாங்கன்னு கொடைக்கானல் போயிட்டு வந்தா. போன இடத்தில ஏதாவது……….. சொல்ல பயப்படுறாளோ? அப்பா இருக்காரேனு யோசிக்கிறாளோ? அப்படி எல்லாம் செய்யாது எம்புள்ள. கடவுளே நம்ம ஜாதி சனத்துக்கு தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா ஊரே ஒன்னு கூடிருமே. நானா கற்பனை பண்றேனா? வயசு புள்ளைய வச்சிருக்கிற எல்லா அம்மாவும் இப்படித்தான் யோசிப்பாங்களா?

    சுமி ஒரு தடவை பேரன்ட்ஸ் மீட்டிங் வர முடியலன்னு அவங்க மேம் கிட்ட பேசச் சொல்லி ஒரு நம்பர் கொடுத்தா. அவங்கள கூப்பிட்டுக் கேட்போம். ஒரு எளவும் புரிய மாட்டேங்குது. இல்ல இனியும் ஒரு வாரம் பொறுத்துப் பாக்கலாமா? உடம்புல சத்துமானம் கொறவா இருந்தாலும் இப்படித்தான் ஆகும். வேண்டாம் நாளைக்கே மேம் கிட்ட கூப்பிட்டுக் கேட்டுப் பாக்கலாம்.

    சுமி மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். உணவில் நாட்டம் குறைந்தது. வாய்க்கு எதுவும் பிடிக்காமலானது.சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொண்டாள். மறுநாள் காலையிலேயே

    “சுமி நானு டௌனு வர போயிட்டு வந்திடறேன்” என்று பழைய நோக்கியா ஃபோன கையில் எடுத்துக்கொண்டு சென்றாள்.

    “ஹலோ மேடம் நான் சுமியோட அம்மா பேசுறேன். இல்ல……….. சுமிக்கி விலக்கு 15 நாளா தள்ளிப்போயிருக்கு. என் பொண்ணு பத்தி நானே தப்பா பேசக்கூடாது இருந்தாலும் பெத்த வயிறு எரியுது காலேஜ்ல அவளுக்கு ஏதாவது பையனோட சகவாசம் இருக்கானு கேட்கத் தான் கூப்பிட்டேன்.”

    “என்ன கேக்குறீங்க? பெத்தவங்க. நீங்க உங்க பொண்ணு எப்படின்னு உங்களுக்குத் தெரியாதா அதெல்லாம் ஒன்னும் இல்ல அவ நல்ல பொண்ணு”

    “இல்லைங்க மேடம், கொடைக்கானல் போன எடத்தில ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிருந்துச்சுன்னா?”

    “அம்மா நீங்க தேவையில்லாம மனச போட்டுக் குழப்பிக்காதீங்க இது இப்போ இருக்கிற பிள்ளைகளுக்கு சாதாரணமா இருக்கிற ஒரு விஷயம் நீங்க ஒரு நல்ல கைனகாலஜிஸ்டாப் போய் பாருங்க”

    “யாருங்க மேடம்”

    ‘கைனகாலஜிஸ்ட்’

    “சரிங்க மேடம் நான் கூப்பிட்டுப் பேசினதா அவகிட்ட சொல்லாதீங்க…. வெச்சிர்றே”

    ‘ம்ம்ம் சரிங்க’

    22 நாட்கள் தள்ளி ஆகிவிட்டது. சுமியின் நடவடிக்கைலயும் நிறைய மாற்றம். அவ மேடம் சொன்ன டாக்டர பாக்கணும்னா டவுனுக்கு தான் போகணும். அவங்க அப்பாவுக்குத் தெரியாம தான் போகணும் ஏன் எதுக்குன்னு கேட்டு என்னைத் தொலைத்துவிடுவாரு. இது தான் புள்ளைய வளத்துற அழகானு என்ன அங்கேயே வெட்டிப் போட்டாலும் போடுவாரு. சுமிகூட படிக்கிற பொண்ணோட அக்காவுக்குக் கல்யாணம் மதுக்கரைலனு பொய் சொல்லி அம்மாவும் மகளும் கிளம்பினர்.

    சுந்தராபுரத்தில் நல்ல ஒரு ‘கைனகாலஜிஸ்ட்டிடம் சென்றனர் அந்த டாக்டர் சுமியை நன்றாகப் பரிசோதித்து பார்த்துவிட்டு “நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லம்மா. இது நார்மல் தான். விட்டமின் மாத்திரை மட்டும் எடுத்துக்கோங்க. நார்மலாவே சரி ஆயிடும்” என்றார்,

    ‘ச்சே அதுக்குள்ள நம்ம புள்ளையை என்னெல்லாமோ நினைச்சிட்டோமே. சாமி மன்னிச்சுக்கோ’

    வீடு திரும்பினர் டாக்டர் சொன்னது ஆறுதலாக இருந்தாலும் செக்கப் முடிஞ்சு ஒரு வாரம் ஆகிப்போச்சு. ஒருவேளை இவ டாக்டர் கிட்ட சொல்ல வேண்டாம் நான் அம்மாகிட்ட பேசிப் புரிய வச்சிக்கிறேன்னு சொல்லி இருப்பாளோ? மறுபடியும் வயிற்றில் புளி கரைந்தது. இனி அவ அப்பாகிட்ட சொல்ல வேண்டியதுதான். வேற வழி இல்ல. இப்போ கொஞ்சம் அவ வயிறு பெருசா இருக்கிற மாதிரி இருக்கு. வெயிட்டா இருக்குனு அவளே சொல்றா. எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை. ஒரு நாள் நள்ளிரவு தூக்கம் வராமல் உருண்டு படுத்த அவள் புருஷனை உலுக்கினாள்.

    ‘ஏங்க நாம வீட்டை மாத்திட்டு டவுன் பக்கம் போகலாமா இங்க கொடுக்கிற வாடகைய அங்க கொடுத்துட்டா போச்சு’

    பகலில் தூங்கியதால் தூக்கம் வராத அவனும் எழுந்து உட்கார்ந்தான்.

    “இல்லே எங்க ஜாதி சனமெல்லாம் சுத்துமுத்தும் இருக்கு. நல்லது கெட்டதுக்கு ஓடி வருவார்கள் சரிதா ஆனால் அதுவே நமக்கு உபத்திரவமா மாறக்கூடாது இல்ல”

    “என்ன சொல்ற எனக்கு ஒரு எளவும் புரியல. நான் இன்னும் ரெண்டு வாரத்துல திரும்பிப் போயிருவேன் அப்போ நீ தனியா இருப்பேனு தான் நம்ம சாதி சனத்துக்கு கூட உன்னை இருக்க சொல்றேன் உனக்கு என்ன பிரச்சனை இப்போ?”

    “இல்ல சொன்னா டென்ஷன் ஆகாம கேட்கணும். நம்ம சுமி அவ தப்பு பண்ணிட்டான்னு சொல்ல வரல. போன மாசம் அவளுக்கு தூரம் ஆகவே இல்லை. இப்போ அவளோட நடவடிக்கைகளைப் பார்த்தா பயமா இருக்கு . வயிறு வேற பெருசாருக்கிற மாதிரி இருக்குன்னு சொல்றா. நல்லதோ கெட்டதோ நம்ம ஜாதி சனத்துக்கு புள்ளி வெச்சா போதும். கோலம் போட்டு ரோடு போடுவாங்க.  அப்புறம் அவ வாழ்க்கை? நாம ஒரே புள்ளைய வச்சிருக்கோம். மூதேவி வாயைத் திறந்து எதையும் சொல்லவும் மாட்டேங்குது. எனக்கு அப்படியே மூளையே வெடிக்கிற மாதிரி இருக்கு.”

    தனக்கு என்ன ஆச்சுன்னு குழம்பிய மனத்தோடு படுத்தும் உறங்காமல் விழித்துக்கொண்டிருந்த சுமித்ரா, அம்மா பேசியது அவ்வளவையும் கேட்டுக் கொண்டுதானிருந்தாள். உண்மையிலேயே எனக்கு என்னமோ பிரச்சனை இருக்கு. என்னமோ இருக்கு. என்னவா இருக்கும். வயிறு வேற அப்பப்ப ரொம்ப வலிக்குது. கொடைக்கானல் போகும்போது பஸ்ல கிருஷ்ணா மட்டும்தான் எங்கிட்ட நெருக்கமாப் பழகி, எங்கிட்ட ஏதோ சொல்ல முயற்சி செஞ்சா. எல்லாருக்கும்தா அவ கூல்ட்ரிங்க்ஸ் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்தா எல்லாரும் தான் அதைச் சாப்பிட்டோம். பஸ்ல போன சலிப்பில நல்லா படுத்துத் தூங்கிட்டேன். மேம் கூடவே தான் இருந்தாங்க. எனக்கு கன்பியூசனா இருக்கு. கிருஷ்ணா என்ன விரும்புறான்னு பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க ஆனால் நான் எஸ் சொல்லவே இல்லையே ஒரு வேள…….. ச்சேச் சே வாய்ப்பில்லை.

    அப்புறம் ஏன் தல சுத்துது கொடைக்கானலில் எல்லாரும் எழுந்த பிறகு கடைசியா தான் நான் எழுந்தேன். இரவு என்ன ஆகி இருக்கும். இல்ல என் உடம்பு நார்மலா இல்லன்னு மட்டும் தெரியுது.

    முழுசா கேட்ட வெங்கடேசன் ‘அட போடிஇவளே……. .  இல்ல என் பொண்ணு தப்பு பண்ணியிருக்க மாட்டா. நாளைக்கு காலைல டவுன்ல ஏதாவது நல்ல ஹாஸ்பிடலா பார்த்துப் போயிட்டு வரலாம். ஸ்கேன் பண்ணிப் பார்த்தா தெரிஞ்சிரப் போகுது. கொடைக்கானல் ஏற்காடு சுத்திப் பார்க்கப் போறோம்னு ஊர்ல சொல்லிடுவோம். ஒரு வாரம் கழிச்சு வரலாம்.

    ‘தனக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமலே தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று சுமித்ராவிற்குத் தோன்றியது. ஆனால் இந்த நிலைமையில் நான் அப்படி செஞ்சா எங்க அம்மாவோட சந்தேகம் உறுதி ஆயிடும். ஊர் சும்மா இருக்காது அப்படி ஒரு களங்கத்தோட நான் சாக விரும்பல எனக்கும் எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியணும்.  அப்பா என் மேல இவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருக்கும்போது அவரை ஏமாத்தக் கூடாது இருந்தாலும்…………..’

    காலை விடிந்ததும் மூவரும் கிளம்பி கோவையில் உள்ள ஐ.எப்.சி. மருத்துவமனைக்கு வந்தனர். கைனகாலஜிஸ்ட்கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கியாச்சு. பீரியட் தள்ளிப் போயிருக்கு என்று செக்கப் அறையில் படுக்க வைக்கப்பட்டாள். உள்ளே வரும்போதே சிஸ்டர் “மாசமா இருக்கியாமா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

    “எனக்கு இனியும் கல்யாணமே ஆகல சிஸ்டர்.’’

    சிஸ்டர் பார்த்த  கேவலமான பார்வை அவளை உருக்கியது.

    டாக்டர் வந்தாரு நல்லா வயத்த அமர்த்தி செக்கப் செய்தாங்க. ஒரு டியூப்பில் ஜெல் தடவி பிறப்புறுப்புக்குள் விட்டு ஸ்கேன் பண்ணினாங்க. வலி உசுரு போற மாதிரி இருந்துச்சு. ஏதேதோ மெடிக்கல்  ரிப்போர்ட் ரெடி பண்ணனாங்க. செக்கப் புல்லா முடிச்சு ‘அம்மாவைக் கூப்பிடுமா’ என்றாங்க. என்னைக் கொஞ்சம் வெளியில நிக்க சொன்னாங்க. எனக்கும் என்னன்னு தெரிஞ்சுக்கணும்னு இருந்துச்சு.

    “நீங்கதான் சுமியோட அம்மாவா?  நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா அவங்க அப்பா இருந்தா உள்ள வரச் சொல்லுங்க. நான் சொல்றத பதற்றப்படாம கேளுங்க,”

    செண்பகத்திற்கு இதயத் துடிப்பு இ.சி.ஜியின் எல்லையைத் தொடும் அளவிற்குப் போனது, அடி வயிறு புரண்டு தொண்டை அடைத்தது, நாக்கு வறண்டது. கண்கள் பிதுங்கின,

    “நீங்க நெனைக்கிற மாதிரி உங்க பொண்ணுக்கு தப்பா எதுவும் நடக்கல. ஆனா நீங்க அவள அப்படி நினைச்சு மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கீங்க”என்று சொல்லி, கொஞ்ச நேரம் கழித்துக் கூறினார். “பெண்களுக்குக் கருமுட்டை உருவாகற இடம் தான் ஓவரி. அது ரெண்டு இருக்கும் அதுதான் குழந்தை பிறக்க ரொம்ப முக்கியம் அதுல ஒரு ஓவரி ஃபுல்லா உங்க பொண்ணுக்கு தண்ணி நெறஞ்சிருக்கு. அதனால அது ஃபுல்லா இன்பெக்க்ஷன் ஆகி இருக்கு. சோ சர்ஜரி பண்ணி அந்த ஓவரியை ரிமூவ்  செய்யதறதத் தவிர வேற வழி இல்ல. இல்லனா இனி ஒரு ஓவரியையும் அது பாதிச்சிடும். ஆயிரத்தில் ஒருத்தருக்கு இந்த மாதிரி பிரச்சனை வரும். எப்படி வருது என்ன காரணம்னல்லா சொல்ல முடியாது. எவ்வளவு சீக்கிரமாகக் கல்யாணம் பண்ணி வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிருங்க. மாப்பிள்ளை பார்க்கும்போது இந்த விஷயத்தைச் சொல்லாமப் பாருங்க அவங்க ஏற்கனவே உடல் ரீதியா பாதிச்சுருக்காங்க. நீங்க உங்க பிரஷர அவங்கமேல காமிச்சு மனதளவில பலவீனமானவங்களா மாத்திடாதீங்க. அவங்க மனதால பாதிப்பு அடைச்சுடுவாங்க. கருமுட்டை உருவாகறது கஷ்டமாயிடும்.”

    செண்பகம் முந்தானையால் கண்களை ஒப்பினாள். சுமியிடம் வயித்தில சின்ன கட்டி. அதை சர்ஜரி செய்து அகற்ற வேண்டும் என்று மட்டும் கூறினர். தன்னுடைய கற்புத்தன்மை நிரூபிக்கப்பட்டது. கர்ப்பமா இருக்குமோ என்ற அம்மாவின் அங்கலாய்ப்பு, சிஸ்டர் பார்த்த கேவலமான பார்வை, மனத்தில் ஏற்பட்ட பயம் என அவள் அடைந்த மன உளைச்சலுக்கு இது பெரிதாகத் தெரியவில்லை அடுத்த நாளே  ஆபரேஷனுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    அரசாங்க வேலை வாங்கிட்டு அம்மா, அப்பாவப் புது வீடு கட்டி  உட்கார வெச்சிட்டுதான்  கல்யாணம் பண்ணுவேன்னு சவால் விட்ட மகளை எண்ணிக்  கண் கலகிங்கினாள் செண்பகம். செண்பகத்திற்கும்  ஆசையில்லாமல் இல்லை. புள்ளய அவசரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டா  பாரம்  ஒழிஞ்சிடும்னு  நெனக்கற பெற்றோர்களுக்கிடையில் செண்பகம்  சற்று வித்தியாசமானவள்.

    சுமி ப்ளஸ்டூ படிக்கும்போதே கணவரோட வகையறால ஒருத்தரு            மாப்பிள்ளை இருக்குனு சொல்லி வந்தாரு. அதைத் தட்டிக் கழித்தாள். செண்பகம்

    ‘புள்ள இன்னும் கொஞ்சநாள் பெத்தவங்க வீட்டில இருக்கட்டும். அவசரமா கல்யாணம் பண்ணி என்ன ஆகப் போகுது. ஒரு வருசத்தில கையில புள்ளயோட வந்து நிக்கும். அப்பறம் அத வளத்து ஆளாக்கவே பொழுதுக்குக்  கஷ்டப்படணும். அஞ்சுக்கும் பத்துக்கும்   இனி ஒருத்தங்க  கைய  எதிர்பார்த்திட்டு இருக்கணும். கொஞ்சநாள்  படிச்சு முடிச்சிட்டு ஏதோ வேலைக்குப் போட்டம். நமக்கு எதுவும் தரவேண்டா.  அவ  சம்பாதிச்சு  அவ  தேவைக்கு , அவ செலவு செஞ்சுகட்டும். ஒடம்பயும் கொஞ்சம் தேத்திட்டு அதுக்கப்பறம் கல்யாணத்தப் பத்தி யோசிப்போம்” என்று கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தவள்.

    ஆப்பரேஷன் தியேட்டருக்குள் போகும்போது சுமி அவள் அம்மாவைப் பார்த்த பார்வை, செண்பகத்தை உப்பு போடப்பட்ட நத்தையாகச் சுருங்கச் செய்தது. இரண்டு மணிநேர ஆபரேஷன்  முடிந்து  அறைக்குக் கொண்டு வரப்பட்டாள். சுமிக்கு  இன்னும் சுயநினைவு வரவில்லை ஆனால் கண்களின் ஓரங்களில் கண்ணீர் ஓயாமல் வந்து கொண்டிருந்தது. அறுவை சிகிச்சையின் வேதனை வருத்தி அவளைக் கண்ணீர் விட வைத்ததா? இல்லை தூய்மை நிரூபணமானதன் ஆனந்தக் கண்ணீரா? மகளின்  நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான் கணேசன். வருத்தத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது செண்பகத்தின்

    “ஏங்க கையோடு நம்ம குமரேச  புரோக்கர வரச்சொல்லி சீக்கிரமா மாப்பிள்ளை பார்க்கச் சொல்லலாம்” என்கிற வார்த்தைகள்.

    எப்படி இந்த பொம்பளைங்க மட்டும் உடனுக்குடனே சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி தங்கள மாத்திக்கிறாங்க என்ற ஆச்சர்யத்தோடு, கண்ணீரை, மறைத்துக்கொண்டு திரும்பிப்  பார்த்தான் வெங்கடேசன்.

    Share
  • வாயாடி (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    லதாவின் பதிலைக்கேட்ட அவள் அம்மா மாலதி அதிர்ச்சியில் உறைந்தாள்.

    “என்னடி சொல்றே? பைத்தியமா உனக்கு?” என்று இரைந்தாள்

    “ஆமாம்மா! நான் ராகுலை கல்யாணம் பணணிக்க மாட்டேன்!” என்றாள் லதா ஆழ்ந்த அமைதியுடனும் அழுத்தமான தீர்மானத்துடனும்.

    “மானம் போய்டும்டி!” என்று ஆவேசமாக லதாவை அறைய கையை ஓங்கினாள் அம்மா.

    ஆனால் லதாவிடமிருந்த தீர்க்கமான முடிவும் அவள் கடின உடல்மொழியும் அவளை தடுத்து நிறுத்தியது.

    மாலதிக்கு தலை சுற்றியது. அப்பா இல்லாத பெண்ணை செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

    லதாவும் ராகுலும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய்  விரும்பி காதலித்து இரு வீட்டாரின் ஆரம்ப நிலை தயக்கத்தை உடைத்து இருவரும் இரு வீட்டாரையும் கெஞ்சியும் கொஞ்சியும் சம்மதிக்க வைத்து தாஜ் ஹோட்டலில் “பெட்ரோதல்” எனப்படும் நிச்சயதார்தத்தை ஆடம்பரமாக  நடத்தி இருவரின் அலுவலக ஐ . டி. இஞ்சீனியர்களையும் வியப்பில் ஆழ்த்திய ஒரே வருடத்தில் “ராகுல் வேண்டாம்” என்றால் யாருக்குத்தான் திகைப்பு ஆவேசம், கோபம் வராது?

    சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு அதிர்ச்சி செய்தியை மெல்ல ஜீரணித்துக்கொண்டு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்திக்கொண்டு மாலதி, மகளிடம் “ஏன்? என்ன ஆச்சு? என்று பதட்டம் தணிந்த குரலில் வினவினாள் மாலதி.

    பொதுவாக நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே திருமணம் நடத்திவிடும் இந்த காலகட்டத்தில் மேல் படிப்பு, ட்ரான்ஸ்பர் என்பதை காரணம் காட்டி முகூர்த்ததை  ஒத்திப்போடுவது விபரீதத்தில் முடியலாம் என்பதற்கு ராகுல்-லதா கேஸ் ஒரு சாம்பிள்.

    லதாவிடமிருந்து மௌனமே பதிலாக வந்ததால் மாலதி மேலும் தொடர்ந்தாள்.

    “ஏண்டி! இதுக்குதான் சொன்னேன், தொட்டதெற்கெல்லாம் பார்ட்டி, பிக்னிக் என்று சுத்தாதே! அவா ஆத்துக்கெல்லாம் அடிக்கடி முணுக்கென்றால் போயிண்டு இருக்காதேன்னு  வார்ன் பண்ணினேன்!“ நீ கேக்கலே;”

    “மூணு முடிச்சு போடற வரைக்கும் எட்டி இருந்தால்தான் வாசனை’ன்னு உனக்கு எத்தனை தரம் திருப்பி திருப்பி சொல்றது! போடி!” என்று அம்மா பெரும் மூச்சிறைந்தாள்.

    “இல்லேம்மா! அவரை  ரொம்ப குளோஸ்சா  அப்சர்வ் பண்ணப்பதான் எனக்கு அவரோட ரொட்டீன், வீக்னஸ்லாம் தெரிஞ்சுது! அவரு ரொம்ப சோம்பேறிமா! எழுந்திருக்கருத்துக்கே  எட்டு மணி! எக்சர்சைஸ் வாக்கிங் ஒண்ணும் கிடையாது! சில சமயம் குளிக்காமலேயே ஆபீஸ் வந்துரராரு, ஷேவிங் பண்ணிக்கிறதில்லே; அன்டர்-ஆர்ம்ஸ் ஷேவ் பண்ணிக்கிறதில்லே; ஒரே “ஸ்வெட் ஸ்மெல்”; “இன் தி லாங் ரன்“ அவர் எனக்கு சூட் ஆக மாட்டார்மா;!

    “பின்னே என்ன தைரியத்திலே அவனை லவ் பண்ணினே?”

    ஆரம்பத்திலே நன்னாதான் பேசினார், பழகினார்மா; இம்ப்ரஸிவ்வா இருந்தார்”

    “அப்புறம் என்ன ஆச்சு?”

    எப்பவாவது சிகரெட் ஸ்மோக் பண்ணுவார்; பீர் சாப்பிடுவார், கே.எஃப்.ஸி  போவாரு!

    “கண்டராவி! அதெல்லாம் ரொம்ப ரொமான்டிக்கா இருந்துதோ?”

    லதா குற்ற உணர்வால் சற்றே தலை குனிந்தாள்.

    திடீர்ன்னு “நீங்க இதப்பண்ணப்படாது  அதப்பண்ணப்படாதுன்னு சொன்னியா?”

    ஆமாம்மா ! மொதல்ல ஒண்ணு ரெண்டு சிகரெட், இப்ப ஒரு பாக்கெட்;

    ஆரம்பத்தில்  ஒரு பாட்டில் பீர், இப்ப ஸ்காட்ச்சும் பீரும் கலந்து காக்டெயில்லா அடிக்கிறார்மா!

    “நீ ஏதாவது சாப்பிட்டாயா?”

    ………………………………………….

    ………………………………………….

    சொல்லுடி! வாயை திறந்து?!”

    ஆமாம்மா! ஒரு பீர் மாத்திரம்  கம்பெனி கொடுத்தேன்!”

    “கர்மம்! கர்மம்! கம்பெனியாம்! இப்படி ஏதாவது  செய்யறது; அப்புறம் ஆம்பளை எல்லை மீறினா “அய்யோ! அய்யோன்னு புலம்பறது!

    ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம்மோல்யோ!

    சொன்னா கேள்டி, அதையெல்லாம் சரி பண்ணிருல்லாம், வீக்னஸ் இல்லாத ஆம்பிளையா இல்லை பொம்மனாட்டியா?

    அம்மா! எனக்கு ராகுல் வேண்டாம்”என்றாள்  லதா தீர்மானமாக.

    மாலதியின் கோபமும் ஆவேசமும் உச்சத்திற்கு சென்றன.

    “போடி! பைத்தியக்காரி! நூறு பேர் முன்னாடி பந்தாவா தாஜ் ஹோட்டல்ல நிச்சயம் பண்றது, குதிக்கறது, குடிக்கறது, கும்மாளம் போடறது, அப்புறம் மாப்பிள்ளை வேண்டாம்கிறது! புதுசா வேற ஒருத்தன் பேரை போட்டு நான் அந்த நூறு பேர் கிட்ட “என் பொண்ணுக்கு கல்யாணம்”னு பத்திரிக்கை கொடுத்தால் அவா என்னை செருப்பால அடிக்க மாட்டா? என்ன நெனைச்சுண்டு இருக்கே உன் மனசிலே? எல்லாம் உங்கப்பா கொடுத்த செல்லம்டி! அவர் ஆக்சிடென்ட்ல பொசுக்குன்னு போய்ட்டார்! இப்ப நான் கிடந்து இந்த கர்மத்தை எல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு! போ!”

    நாட்கள் சென்றன. மாலதியின் தங்கை ரம்யா டில்லியில் இருந்து சென்னை வந்தாள். இந்த நேரம் பார்த்து  சித்தி வர்றாளே என்று லதா கவலைப்பட்டாள். ஏனென்றால் சித்தி வாயாடி. நோண்டி நோண்டி விஷயத்தை எப்படியாவது கறந்துவிடுவாள்.

    பிரயாண களைப்பு  தீர்ந்த சில மணி நேரத்திலேயே ரம்யாவின் பேச்சு களை கட்டியது.

    “இந்த “வந்தே பாரத்” வந்தாலும் வந்தது , மத்த இரயில் ஸ்டாண்டர்ட்  எல்லாம் குறைஞ்சு போய்டுத்து; இத்தனைக்கும் “தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்”ஸில் ஏ. ஸி. 3 டயர்ரில் தான் வந்தேன். எவன் எவனோ டிக்கெட் இல்லாமலேயே ஏறறான்; பெர்த் பாசஞ்சர் கேட்டால் முறைக்கிறான்; டி. டி. ஈ., ஐபேட்ஐ பார்த்துக்கொண்டே அடுத்த கம்பார்ட்மெண்ட்க்கு போய்டிரார்! ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்க்கும் ஒரு செக்யூரிட்டி கார்ட் போட்டால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்; நமக்கு நிம்மதி கிடைக்கும்; ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் கூட பத்து ரூபாய் பதினைந்து ரூபாய் எக்ஸ்ட்ராவாக வாங்கினால் செக்யூரிட்டிக்கு சம்பளம் கொடுக்கலாம்; நமக்கும் நல்ல  தூக்கம்  கிடைக்கும் என்று ரயில்வேக்கு விலையில்லா இலவச யோசனை வழங்கினாள். பொதுவாகவே ரம்யா வாயாடி. இப்ப டில்லியில் வேற இருக்காளா, ஹிந்தியும் வெளுத்து வாங்கறா!

    ஒரு காப்பிக்கு பின், “ஏண்டி லதா! எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறே? என்று கச்சேரியை  ஆரம்பித்தாள். “ராகுல் பிள்ளையாண்டான் எப்படி இருக்கான்? கல்யாண மாப்பிள்ளை அல்லவா? அதான் விசாரிச்சேன்”

    லதாவுக்கு சித்தியின் “ஆல் இன் ஆல்” அரட்டை என்றாலே கொஞ்சம் அலர்ஜி!

    சித்தியின் அபார ஆளுமையால் கலங்கி நின்ற லதா “சட்டென்று அவசரப்பட்டு, விதரணை தெரியாமல்,  “ராகுல்ஐ கல்யாணம் பண்ணிக்க போறதில்லை” என்று உளறிவிட்டாள்.

    அவ்வளவுதான்! சித்தியின் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்துவிட்டது!

    ஏற்கனவே மாலதி மறைமுகமாக லதாவின் அபத்த முடிவை சொல்லியிருந்ததால், சித்தி ஆரம்பித்து விட்டாள் ஆவேச அட்வைஸ்ஐ!

    ஏண்டி! உங்கப்பா எங்க அக்காவை கல்யாணம் பண்ணாமல் வேறொரு பெண் வாக்கப்பட்டு இருந்தால் நீ பிறந்தே இருக்க மாட்டே தெரியுமோ! என்று பொட்டில் அறைந்தார்போல் ஆரம்பித்தாள்.

    உங்கம்மா மேலே வேறொரு ஜாதிக்கார ஆபிசர் உயிரையே வச்சிருந்தான்! ஜாதி பிரச்னையிலே, ஆத்தில் நடந்த யுத்தத்திலே அந்த கல்யாணம் நடக்கலே! அப்படி நடந்து இருந்தா நீ பொறந்திருப்பியா? வேறொரு பொண்ணோ ஆணோ இந்த ஆத்திலே நடமாடிண்டு இருந்திருப்பா இப்ப!

    உங்கப்பா மட்டும் என்ன பெரிசா கிழிச்சார்? தாம்பத்திய உறவிலேயே இண்டரெஸ்ட் இல்லாம கோவில் கோவிலா சுத்தி திரிஞ்சவரை, செக்ஸ்சாலஜிஸ்ட்  சைக்கியாடிறிஸ்ட், என்றெல்லாம் காண்பித்து, தாது லேகியம், என்று ஏதேதோ உங்கப்பாவை சாப்பிட வைத்து நீ பொறந்தே! கொஞ்ச நாளிலேயே அவர் போய்ட்டார்! உங்கம்மாதான் ஒத்த ஜீவனா பாங்க் வேலைக்கும் போய்யிண்டு உன்னை வளர்த்து ஆளாக்கியிருக்கா;

    சித்தி சற்று லதாவிடம் நெருங்கி வந்து கிசு கிசு குரலில்” ராகுல்லோட சினிமாவுக்கெல்லாம் போய் இருக்கியே? தியேட்டர்ல பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து இருக்கரச்ச ரொமான்டிக் மூட்ல, அவன் மடியிலே வாட்டர் பாட்டில்லையோ, பாப்கார்ன் பாக்கெட்டையோ ஒண்ணுமே தெரியாத மாறி வச்சு அதை எடுக்கரச்ச படாத இடத்தில விரல் பட, அவன் “கும்” என்று ஆம்பிளையா இருந்ததை கண்டு பிடிச்சு இருப்பியே?

    சித்தியின் “ஏவுகணை” பேச்சைக்கேட்டு அதிர்ந்த லதா  ரெகவர் ஆவதற்குள், சித்தி “அப்புறம் என்னடி, அதாண்டி முக்கியம், மத்த எல்லாத்தையும் கல்யாணத்துக்கு அப்புறம் மாத்திடலாம்டி! “

    சித்தி இப்பொழுது ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்தாள். “சரி! இன்னொருத்தனோட போறே; அவன் ராகுலை விட மோசமா இருந்தா அவனையும் விட்டுட்டு இன்னொருத்ததனோட சுத்துவியா?

    யாருக்குத்தான் ஆசையில்லே? ம்ஹூம்! ஒவ்வொரு ஜோடியையும் பாக்கறச்சே நமக்கும் அதுமாதிரி அமையலேயேன்னு  சில சமயம் தோணும்; உள்ளே போய் பார்த்தால்தான் பவிசு தெரியும்!” என்னையே எடுத்துக்கோ! அவர் பஹ்ரைன்ல இருக்கார். வருஷத்துக்கு ஒரு மாசம் வந்துட்டு போறார்;” பணம் ஏதோ இருக்கு; மத்த சுகம்?

    லாஸ்ட் ஓவர் என்பதால் தோனி போல சித்தி சிக்ஸ் அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

    “அவன் யோக்கியனா, நல்ல குடும்பமா, நன்னா சம்பாதிக்கிறானா, ஓரளவுக்கு நாம் சொல்றதை கேட்பானா, இதெல்லாம் இருந்தால் போதும்டி, அவனை நம் கையிலே போட்டுண்டுரலாம்!

    கடைக்கு போய் புடவை எடுக்கிறோம், கடைக்காரன்  எடுத்து போடறதை எல்லாம் பார்க்கிறோம். பெரும்பாலும், நாம் முதன் முதல்ல பார்த்து புடிச்ச புடவையை தாண்டி எத்தனை புடவையை பார்த்தாலும் முதல்ல நமக்கு  எது புடிச்சு  இருந்துதோ, அந்த  புடவையைதான்  நாம் செலக்ட் பண்ணுவோம்.” விலை முன்ன பின்ன இருந்தாலும்;

    “First impression is the best impression”டி!

    “உன் உள்மனசு சொல்லி சொல்லி ஒரு வருஷமா ராகுலை நெஞ்சுக்குள்ளே வச்சு பூஜை பண்ணியிருக்கே,!

    அவனை எவளாவது அள்ளிண்டு போறதுக்குள்ளே நீ அவனை விட்டுறாதேடி! உள்ளதும் போய்த் தொலைக்கப்போறது!” என்று முடித்தாள் சித்தி.

    ஒரு கணம் லதாவின் மனதில் அவள் ஆபீஸ் தோழி ரேகா பெர்ஃப்யூம் மணத்துடன்  ராகுலுடன் அடிக்கடி நெருங்கி நெருங்கி பேசுவது நினைவுக்கு வந்தது.

    சித்தியின் “உள்ளதும் போய்த் தொலைக்கப்போறது “ என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் ஊஞ்சலாடியது.

    அவள் திருமண விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது.

    Share