Category: சிறுகதைகள்

கதைகள்

  • சிவராமன் (சிறுகதை)

    சிவராமன் (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    சில விஷயங்களைப் பேச வேண்டும் என்றான்.

    எங்கே போலாம் எனக் கேட்டேன்

    நாளைக்கு மீட் பண்ணலாம் என்றான்

    வேணாம். நான் முட்டி வலி டாக்டரைப் பார்க்கணும். இன்னிக்கே வேணும்னா பார்க்கலாம் என்றேன் .

    கொஞ்சம் யோசித்து, சரி ஆறு மணிக்கு பழைய வுட்லண்ட்ஸ் வா என்றான்.

    முன்னை விட ரொம்ப மெலிந்து இருந்தான் அவன் தோள் பையைச் சரி செய்துகொண்டே நடந்து வந்தான்.

    என்னாச்சு உன் ஸ்கூட்டர்.

    கை காட்டி காண்பித்தான்.

    சீக்கிரம் விக்கணும். பழையபடி ஒரு டிவிஎஸ் பிப்டி செகண்ட் ஹாண்ட்ல வாங்கணும்.

    ஏன்டா அவனவன் பெரிய வண்டி வாங்குவான் . நீ என்ன இப்படி சொல்ற?

    என் நிலைக்கு எல்லாமே சொகுசு தான்.

    புரியல என்றேன்

    என்னாச்சு என்றேன்.

    நல்ல வேலை, உனக்கென்ன?

    இப்ப எல்லாம் போச்சு

    என்ன?

    தப்பு பண்ணிட்டேன்டா . ஏதோ ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கிட்டு இன்னிக்கு கேஸ் நடக்குது விஜிலன்ஸ்ல மாட்டிண்டேன். இப்ப சர்விஸ்ல இல்லை. சாலரி இல்லை. இன்னும் ஒரு வருஷம் தான் சர்விஸ்.. சபலம் பெரிய கொடுமை .

    பணம் எதனா வேண்டுமா.

    ஆமாண்டா.

    எங்கிட்ட ரெண்டாயிரம் இருக்கு, வச்சுக்க.

    எனக்கு இரண்டு லட்சம் வேண்டும்.

    டேய், என்னடா கேக்குற? கேஸ் நடத்தவா?

    இல்லை நான்தான் பணம் வாங்கியது உண்மைன்னு சொல்லிட்டேன்.

    இந்த பணம் நான் சீட்டு சேர்த்த பணம்.

    வந்தவங்க எல்லாத்தையும் அள்ளிண்டு போயிட்டாங்க…

    சீட்டு போட்டவங்க பிரஷர் தாங்க முடியல.

    சாரி என்றேன்.

    சரி, கிளம்பறேன் என்றான்.

    என்னடா அவ்வளவு அவசரம்.

    இல்லடா உடனே பணம் புரட்டணும்

    நான் கிளம்பறேன்.

    நிறைய பேசணும்னு சொன்ன?

    இதைத் தாண்டி வேறேதும் முக்கியம் இல்லை இப்ப.

    அப்ப ரெண்டாயிரம்.

    வேணாண்டா.

    என்னடா இவ்வளவு நேர்மையா இருக்கற நீ எப்படிறா கைநீட்டின?

    பதில் சொல்லவில்லை . ஒரு கணம் பலவீனம் இப்ப அனுபவிக்கிறேன்.

    எவ்வளவுடா வாங்கின.

    மூனு லட்சம்.

    தோளைத் தட்டி நான் கிளம்பறேன் என்றான்

    அப்ப கேஸ்.

    என்னைக் கைது செய்யறதுக்கு ரெண்டு வாரம் தான் இருக்கு. நேரம் இல்லை. பை என்றான்.

    எனக்குப் பேச்சு வரவில்லை.

    சிவா என்றேன். குரல் எழும்பவில்லை. அவன் கிளம்பிவிட்டான்.

    ஒரு காபி குடிக்கலாம் என்றேன்.

    அடுத்த வாட்டி என்றான்.

    காலை ஒரு சேனலில், தேனாம்பேட்டை அருகே குடிநீர் லாரி மோதி நேற்று இரவு எட்டு மணியளவில் சிவராம் என்ற அரசு ஊழியர் மரணம் என்று செய்தி வந்தது.

    முதலில் வந்த சிந்தனை –

    நல்ல வேளை பணம் ஏதும் கொடுக்கல.

    பின்னால் வந்த இன்னொன்று.

    ஒரு வேளை நாளை அவனைச் சந்தித்து இருக்கலாமோ?

    Share
  • கொல்லாமை (சிறுகதை)

    கொல்லாமை (சிறுகதை)

    வசுராஜ்

    இன்று பல்வலி அதிகமாக இருந்ததால் பல் மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்தேன்.

    கொரானா பயத்தால் வெளியே செல்ல பயந்து ஒத்திப் போட்டதால் பல்வலி அதிகமாகி இன்றுபோய்த் தான் ஆக வேண்டும் என்ற நிலையில் காலை 11 மணிக்கு கிளினிக் வர சொல்லி இருந்தார்கள்.

    என் கணவர்  மாஸ்க் போட்டுக்கொண்டு தயாராக நின்றார். நான் எளிமையான சமையல் செய்து மேசை மேல் வைத்து விட்டுக் கைப்பையுடன் கிளம்பினேன். வீட்டைப் பூட்டிக் கொண்டு வருவதற்குள் என் கணவர் காரைச் சரிபார்க்கக் கீழே போய்விட்டார். ரொம்ப நாளாக எடுக்காததால் பெட்ரோல் எல்லாம் இருக்க வேண்டுமே என நினைத்துக்கொண்டு கீழே இறங்கினால் எங்கள் காரைச் சுற்றி நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

    பதற்றத்துடன் பக்கத்தில் போனால் “கிட்டே போகாதே” இது என் கணவர்.

    எங்கள் குடியிருப்பில் என் தளத்திலேயே குடியிருக்கும் தோழியும் அவள் கணவரும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். “என்ன ஆச்சு?” எனக் கேட்டேன். என்னோட பல் வேறு “சுருக் சுருக்” என வலித்தது.

    “உங்க காருக்கு அடியில ஒரு பாம்பு பார்த்தோம்” என்றாள்.

    பயத்தில் நான் பத்தடி தள்ளிப் போனேன். அதற்குள் செக்யூரிட்டி கம்புடன் வந்துவிட்டார்.

    அந்தத் தோழி அவரைப் பார்த்து “பாம்பையெல்லாம் அடிக்கக் கூடாது. உடனே “Forest Department”க்கு ஃபோன் பண்ணுங்கள்” என்றார். எனக்குப் பதற்றமாய் இருந்தது.

    இவங்க எப்ப ஃபோன் பண்ணி, அவங்க வர வரைக்கும் அது அங்கேயே உட்கார்ந்திருக்குமா? ஏதாவது பொந்துக்குள் போய்விட்டால் கண்டுபிடிப்பது கஷ்டம். குழந்தைகள் எல்லாம் இங்கே தான் விளையாடுகிறார்கள். பெரியவர்கள் எல்லாம் இங்கே தான் காலையும் மாலையும் நடக்கிறார்கள். விஷமுள்ள பாம்பாய் இருந்தால் என்ன செய்வது என யோசனையில் மூழ்கினேன்.

    பல் வலி கூட மறந்து விட்டது.

    செக்யூரிட்டி பரிதாபமாய்ப் பார்த்தார். பாவம் அவர் தானே ராத்திரி எல்லாம் சுற்றிச் சுற்றி வருகிறார்!

    மெதுவாக அந்தத் தோழியைப் பார்த்து “போன தடவை ஃபோன் பண்ணினோம். அவங்க வந்து பார்க்கும் போது ஒண்ணும் கண்ணுல மாட்ட மாட்டேங்குது. அப்புறம் நாங்க ராத்திரி சுற்றி வரும் போது கண்ணுல படுது. சில நேரம் அடிச்சுடுவோம். பல தடவை தப்பிச்சுடுது” என்றார்.

    அதற்கு அந்தப் பெண் “நீங்களே பாம்பு பிடிக்கப் பழகிக் கொள்ளுங்கள். பிடித்து வைத்திருந்து Forest Department ஆள் வந்ததும் அவங்க கிட்ட கொடுத்து விடுங்கள்” என்றார்.

    எனக்கு எங்கள் செக்யூரிட்டியின் மைன்ட் வாய்ஸ் கேட்டது. “நீங்க கொடுக்கற சம்பளத்துக்கு 12 மணி நேரம் காவல் காக்கறேன். இதுல பாம்பு பிடிக்க வேற கத்துக்கணுமா?”

    அதற்குள் அது மெதுவாக வெளியே வந்தது.

    இதற்குள் இன்னும் நாலைந்து பேர் கூடி விட்டனர். அதில் ஒருவர் “இதைப் பார்த்தா விஷமுள்ளது மாதிரி தெரியுது, அடிச்சுடுவோம்” என்றார்.

    அந்தத் தோழி விடுவதாயில்லை. “இல்லை, நான் ஃபோன் பண்றேன், கொல்லாதீங்க!” என்றார்.

    நான் பிரமிப்பாய் அவரைப் பார்த்தேன். ஜீவகாருண்யம் என்பது இது தானோ, நானும் இரக்கப்படுபவள் தான் என்றாலும் பாம்பை வைத்துப் பாதுகாக்கச் சொல்லும் அளவுக்கு அவ்வளவு இரக்கம் எல்லாம் என்னிடம் கிடையாது.

    இதற்குள் அப்போது தான் வந்த ஒருவர், பட்டென அதன் தலையில் அடித்துவிட்டார். உடனே இன்னும் 2 பேர் அடித்து விட்டார்கள். எனக்குக் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. திரும்பப் பல் வலிக்க ஆரம்பித்து விட்டது. கடவுளே அந்தப் பாம்புக்கு மோட்சத்தைக் கொடு என வேண்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். அந்தத் தோழி செக்யூரிட்டியைத் திட்டிக் கொண்டிருந்தார்.

    மருத்துவரிடம் போய் விட்டு வந்து விட்டோம்.

    மாலை அந்தத் தோழி வீடு பூட்டி இருந்ததைப் பார்த்து விட்டு அவருக்கு ஆறுதலாக 2 வார்த்தை பேசலாமென ஃபோன் பண்ணினேன்.

    அவர்களிடம் “உங்களுக்குத் தான் எவ்வளவு இளகிய மனசு. வருத்தப் படாதீர்கள். இதுக்கு எல்லோரும் சேர்ந்து பேசி ஒரு முடிவு பண்ணலாம். ஆமாம், வீடு பூட்டி இருக்கே எங்கே போயிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

    “ஆமாம் மேடம், அவர்கள் பாம்பை அடித்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை” என்று சொல்லி விட்டு உடன் உற்சாகமாக “இங்கே தாம்பரத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன். இன்னிக்கு அம்மா எனக்காக ஸ்பெஷல் சமையல் பண்ணி இருந்தாங்க. அதை சாப்பிட்டப்புறம் செம குஷி ஆயிட்டேன்” என்றார்.

    “அப்படியா? என்ன சமையல்”னு அப்பாவியாய்க் கேட்டேன்.

    “இந்தக் கொரானா நேரத்துல வெளில வாங்க வேண்டாம்னு வீட்டுல வளர்த்த நாட்டுக் கோழி குழம்பு, மட்டன் (அதுவும் வீட்டுல வளர்த்தது தான்) எல்லாம் செஞ்சுருந்தாங்க. செம கட்டு கட்டிட்டேன்”என்றாள்.

    எனக்குத் தலை சுற்றியது.

    இது தான் ஜீவகாருண்யமா? “ஒண்ணுமே புரியல உலகத்திலே”. சந்திரபாபு பாட்டு தான் நினைவுக்கு வந்தது.

    Share
  • வலி (சிறுகதை)

    வலி (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    எல்லோருக்கும் வணக்கம் என்றார் டாக்டர் .

    அவர் இன்றுடன் இந்த மருத்துவமனையில் சேர்ந்து பத்து வருடங்கள் முடியப் போகிறது .

    உங்கள் அனைவருக்கும் நன்றி என ஆரம்பித்தார் .

    நாம் எல்லோரும் சின்ன அல்லது பெரிய தப்புகளைச் செய்திருப்போம் . நான் உள்பட.

    இந்தக் கூட்டத்தில் எல்லோரும் அதனை உண்மையாகச் சொன்னால் நான் மகிழ்வேன். எந்தத் தவறுக்கும் தண்டனை எந்த வகையிலும் இல்லை. இந்தக் கூட்டம் குற்ற உணர்ச்சியை எடுக்க மட்டுமின்றி, இனி அந்தத் தவறை செய்யாமல் இருக்க என்றார்

    யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை .

    சரி , நான் ஆரம்பிக்கிறேன் . நான் வந்த புதிதில் ஒரு முதிய பெண்மணியிடம் மிகக் கடிந்து பேசி அவர்களை கிட்டத்தட்ட அழ வைத்து இருக்கிறேன். அப்போது மன்னிப்பு கேட்க கூட ஒரு முதிர்ச்சி இல்லை .

    சார் நான் சிஸ்டர் கற்பகம் – ஒருவர் ரத்த தானம் கொடுக்க வந்தபோது அதிகமாக ரத்தம் எடுத்துவிட்டேன். அவர் மயங்கி விழுந்து எழுந்துவிட்டார். என்றாலும் இன்னும் வலிக்கிறது

    மத்தவங்களும் சொல்லுங்க.

    சார் நான் .

    உங்க பெயரைச் சொல்லிட்டு ஆரம்பிங்க .

    டேவிட் சார் .

    சொல்லுங்க

    நான் ஒருத்தர்க்கு ப்ளட் க்ரூப் மாத்திப் போட்டேன். ஆறு மாசம் கழிச்சு அவர் விலாசம் கண்டுபிடிச்சு சொல்லிட்டேன். ஆனாலும் தப்பு தப்பு தான் .

    அடுத்து என்றார் .

    நான் பிரபா .நான் ஒரு பேஷன்ட் கிட்ட கடன் வாங்கினேன் . அதைத் திருப்பியும் தரல. அவரும் இப்ப இறந்துட்டுதாகச் சொல்றாங்க

    ம் . அடுத்து

    நான் ஏழுமலை சார் .டெட்டால் பெனாயில் அடிக்கடி எடுப்பேன் .

    எப்படி?

    சாப்பாடு டிபன் பாக்ஸ்ல .

    ம் என்றார்

    அடுத்து?

    நான் வீட்டுக்கு ப்ரூட் ஜூஸ் எடுத்துண்டு போவேன் .அது பேஷண்டுக்கு வாங்கினது

    பேரச் சொல்லுங்க ?

    சாவித்திரி

    நான், பிறந்த குழந்தையோட பிறந்த நேரத்தையே மாத்திப் போட்டுட்டேன் . ஒன்னரைக்கு பிறந்த குழந்தையை இரண்டரைன்னு எழுதிட்டேன் .அதைப் பின்னால மாத்த பயம் .

    அடுத்தது ..

    சார் நான் வின்சென்ட் . இந்த வேலைக்கு நான் லஞ்சம் கொடுத்தேன் சார். மாசா மாசம் சம்பளம் வாங்கும்போது குத்துது சார். வாங்கினவர் போன வருஷம் இறந்துட்டாரு

    நெக்ஸ்ட்

    சார் இன்னும் முடியல .

    சொல்லுங்க .

    கோச்சிக்காதீங்க . அந்த பணம் வாங்கினவர் உங்க அண்ணன் .

    நெக்ஸ்ட் .

    யாரும் பேசவில்லை .

    டாக்டர் என்ன சார் செய்யப் போறீங்க .

    என் வலிக்கு ஒரே மருந்து நான் வேலையை விட்டுப் போறதுதான் .

    சார் நாங்க .

    அது உங்க இஷ்டம். இது சுய தண்டனை .

    உங்களுக்கு வலி முக்கியமா, வாழ்க்கை முக்கியமான்னு நீங்க முடிவு பண்ணுங்க தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் .

    அடுத்த ஐந்தாவது நிமிடம், அந்த மருத்துவமனை பரபரவென இயங்கத் தொடங்கியது .

    Share
  • வழிவாணிபன் மியான் ஹுசைனின் ஜூஹூ அனுபவம்

    வழிவாணிபன் மியான் ஹுசைனின் ஜூஹூ அனுபவம்

    மூல ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி: மலையாளம்
    தமிழில்: முனைவர் நா.தீபாசரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    மும்பையின் பரபரப்பான நகரத்தில் வழிவாணிபக்காரனான மியான் ஹுசைன், வெயில் காலமானதால் தனது வியாபாரத்தை மாலையுடன் நிறுத்திவிட்டு தனது இருப்பிடமான சிஞ்ச் போக்கலிக்குத் திரும்பினார். வழக்கமாக இரவு பத்து மணிக்குத் தான் வீட்டுக்குத் திரும்புவார். குழந்தைகள் அதற்குள் தூங்கி இருப்பார்கள். மியான் ஹுசைன் உறங்குவதற்குள் நடுநிசி ஆகிவிடும். குளித்து முடித்து வருகின்ற அவருக்கு உணவுப் பரிமாறுவதோடு நிலோஃபரின் வேலை முடிந்தது. அவள் மக்களுக்கு அருகில் சென்று சுருண்டுவிடுவாள். மியான் ஹுசைன் சாப்பிட்ட உடனே தனக்கு விருப்பமான கிராமஃபோனுக்கு அருகில் போவார்.

    சொல்லவில்லையா……………………. அவர் ஒரு சங்கீதா ரசிகர். தன்னைவிட அவர் விரும்புவது கிராமஃபோனைத்தான் என்று நிலோஃபர் கூறுவாள். அவர் அதை மறுக்கமாட்டார்.

    “அப்பா”,  ஹௌசான் வெளியில் கைநீட்டிக்கொண்டு சொன்னான்.

    ”உனக்கெப்பவும் அப்பாவோட நெனப்புதா” நிலோஃபர் ரொட்டிக்காக மாவு பிசைவதற்கிடையில் கொஞ்சம் சலிப்புடன் முனகினாள்.

    ஹௌசான், அம்மாவைக் கவனிக்காமல் மீண்டும் அப்பா என்று கூறினான். அவன் சும்மா சொல்றானென்று நிலோஃபர் நினைத்தாள். ஆனால் கொஞ்ச நேரத்துக்குள் மியான் ஹுசைனின் சத்தம், காதுகளில் முழங்கியது. குண்டுவெடிப்போ, கலவரமோ நிகழ்ந்திருக்கும் என்ற குழப்பத்தில் அவள் குதித்து எழுந்தாள்.

    ”ஏ………………..என்னாச்சு?” அவள் வேகமாகக் கேட்டாள்.

    ”ஒன்னுமில்ல எனக்கு ஜூஹூ வரை போற ஒரு வேலை இருக்கு” மியான் ஹுசைன் கூறினான்.

    ”ஜூஹூவில் என்ன?” நிலோஃபர் கேட்டாள்.

    ஆனால் அவர் பதில் கூறவில்லை. அவருடைய முகம் உற்சாகப்பூர்வமாக இருந்தது. நிலோஃபரின் கன்னத்தில் தட்டினார். அவன் பிரமிப்புடன் பார்க்கவே ஒரு கசல் பாடிக்கொண்டே வியர்வை நாற்றமுடைய ஆடையை மாற்றினார். அவசரமாகக் குளித்து வந்தார். விசேஷ நாட்களில் மட்டும் அணியும் சில்க் ஜிப்பாவைக் கையில் எடுத்தார். அதை அணிந்த பிறகு, மசூதித் தெருவிலிருந்து வாங்கிய பர்ஃப்யூம் எடுத்து, கழுத்திலும் இரு கைகளுக்கிடையிலும் தொட்டுத் தேய்த்தார். அறை முழுக்க மணம் வீசியது.

    ”நில்லுங்க! ஜூஹூவில் என்னான்னு எங்கிட்ட சொல்லக் கூடாதா?” நிலோஃபர், ஹௌசானைத் தூக்கிக்கொண்டு அவருக்குப் பின்னால் சென்றாள்.

    அவர் திரும்பி நின்றார். மும்பை நகரத்தில் நல்ல செல்வாக்குடன் இருக்கின்ற பரம்பரையில் பிறந்தது போன்ற முகபாவம் அவரது கண்களில் தெரிந்தது.

    ”ஜூஹூவில் என்னான்னு தானே தெரியணும். சொல்றேன்….. குலாம் அலி பாடறாரு”. மியான் ஹுசைன் கர்வத்தோடு கூறினான். தொடர்ந்து ஜூஹூவை லட்சியமிட்டு நடந்தார்.

    ஹோட்டல் அறையில் ஜன்னல் வழியாக இரவு, ஜூஹூவைப் பார்த்து குலாம் அலி ஆச்சர்யத்துடன் கூறினார். “யெஹ் ஜஹத் பஹூத் அஜிப் ஹே”.

    அதைச் சரியென்று கூறும் விதமாக கடல் அலை ஒன்று வந்தது. கடற்கரை, மக்கள் கூட்டத்தில் நிரம்பியது. சிறுவர்கள் கொக்கோ கோலாவினுடையவும், பெப்சியினுடையவும் காலியான டின்களைக் கடலில் வீசி எறிந்து விளையாடினர். அவை அலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் சென்றன. பேல்பூரியும் பழவகைகளும் குளிர்பானங்களும் விற்கிறவர்கள் மக்களைக் கவரும் விதமாகச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். தீப ஒளிகளுக்கு அப்புறம் காலத்தோடு கட்டப்பட்ட வானம். அதற்குக் கீழே மியான் ஹுசைன் உல்லாசமாய் நடந்தார்.

    ஹோட்டல் கேட்டில் காக்கி யூனிஃபோம் அணிந்த காவல்காரன், மியான் ஹுசைனைச் சந்தேகத்துடன் உற்றுப் பார்த்தார். மியான் ஹுசைனோ ஒரு சிறு புன்சிரிப்புடன் ஜிப்பாவின் ஜோப்பிலிருந்து டிக்கெட்டெடுத்து நீட்டினார். அவன் சந்தேகம் தீர்ந்தது.

    ”மாஃபி மாங்கதா ஹூம். சாஹ்ப்” காவல்காரன் சலாம் வைத்தான்.

    ”டீக் ஹே” மியான் ஹுசைன் முன்னோக்கி நகர்ந்தார். அறையில் உட்கார்ந்து பேடா சாப்பிடுவதற்கிடையில் குலாம் அலி தெளிவான ஒரு சிரிப்புடன் கூறினார்: “ஹமேம் மும்பய் கி ஹர் சீஸ் பஸந்த் ஹே”

    விநாயக் பாஹெ, கட்கோப்பில் ஒரு ஆடை ஆலையில் வேலை செய்யும் வேலைக்காரனும் ஹோட்டலின் கேட்டருகே ஒரே நேரத்தில் வந்தனர். விநாயக் பாஹெவின் கையில் ‘சாம்னா’ பத்திரிகையின் ஒரு கோப்பி இருந்தது. நெற்றியில் குங்குமம். கொஞ்சம் பெரிய மீசை, சீக்கிரம் கோபம் கொள்ளக் கூடியவனே தான் என்கிறதை அழைத்துச் சொல்லும் விதமாக கண்களில் ஒரு பொலிவு தெரிந்தது.

    ”ஏய்!………….எங்கே போறீங்க” காவல்காரன் அவனை உற்றுப் பார்த்தான். ஹோட்டலின் வாடிக்கையாளராக எந்தத் தகுதியும் இல்லை என்ற வியூகத்தில் வந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றினான்.

    விநாயக் பாஹெ நின்றார். அவருடைய கண்களில் கோபம் மின்னியது.

    ”சால, உனக்கு இவ்வளவு துணிச்சலா?”

    விநாயக் பாஹெ தனது வலது கையை உயர்த்தினான். காவல்காரன் பின்னால் நகர்ந்தான். விநாயக் பாஹெ நேராக நடந்தார். காவல்காரனுக்கு தான் உடனே என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிக்க முடியவில்லை. அதற்குள் வரிசை வரிசையாகப் பத்துக்கும் மேலான வாகனங்கள் கேட்டிற்கு அருகில் வந்தன. அவற்றிலிருந்து இறங்கியவர்கள், கேட் வழியாக உள்ளே கூட்டமாகச் சென்றனர். விநாயக் பாஹெவும் அக்கூட்டத்தில் சேர்ந்தார்.

    மியான் ஹுசைன் உற்சாகத்துடன் தனது இருக்கையிலிருந்து கொஞ்சம் முன்னால் தள்ளி உட்கார்ந்தார். ஆடிட்டோரியத்தில் கைத்தட்டல் அடங்கியது. குலாம் அலி காட்சி அளித்தார். இரு பக்கத்திலும் தபேலாவும், ஆர்மோனியமும். ஆடிட்டோரியத்தில் நிசப்தம் நிறைந்தது. குலாம் அலி பாடத் தொடங்கினார்.

    ஜூஹூவில் காற்று வீசியது. மியான் ஹுசைனுக்குத் தனது மனது நிறைந்தது. நரம்பு மண்டலம் முழுவதும் உற்சாகம் அடையும் விதமான ஒரு மகிழ்ச்சியை அனுபவித்தார். தான் சிம்ச்போக்கலியில் வசிக்கின்ற வழிவாணிபக்காரன் என்பதை அவர் மறந்தார். கண்களை மூடி அவர் விண்மீன்களைக் கண்டார். விண்மீன்களுக்கிடையில் குலாம் அலியின் குரல் கடந்து சென்றது.

    ”போதும் நிறுத்து!” விநாயக் பாஹெ, ஆடிட்டோரியத்தில் கடந்து வந்து சத்தம் போட்டுக் கத்தினான்.

    மியான் ஹுசைன் நடுங்கினான். விநாயக் பாஹெவும் உடன் இருந்தவர்களும் என்னவெல்லாமோ சத்தமாகக் கூறிக்கொண்டு மேடைக்கு நேராகக் குதித்தனர். ஆடிட்டோரியத்தில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்களும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லை. பார்வையாளர்கள் பலரும் செய்வதறியாது எழுந்தனர்.

    விநாயக் பாஹெ ஒரு மைக்கைக் கைப்பற்றினான்.

    ”உங்க யாருக்கும் வெட்கமா இல்ல? பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருத்தனோட பாட்டக் கேட்டு மதிமறந்து உட்கார்றதுக்கு? அவங்க நம்ம ஆட்கள காஷ்மீரில் கொலை பண்ணீட்டு இருக்காங்க. நீங்க ஒரு பாகிஸ்தானியோட பாட்டக் கேட்டு வாஹ்……………..வாஹ்னு சொல்லறீங்க. இங்க இருக்கற சாப்பாட்டையும் சாப்பிட்டு வெட்கமானமில்லாத கூட்டம்.

    மியான் ஹுசைனுக்கு அதைக் கேட்கச் சகிக்கவில்லை.

    ”பாகிஸ்தான் நம்மோட எதிரியாய் இருக்கலாம். ஆனா சங்கீதம் யாருடைய எதிரியும் அல்ல”

    ”நீ யாரடா, பன்னியோட மகனே!” விநாயக் பாஹெ அவன் மீது விழுந்தான்.

    பின்னால் வேறு சிலரும்.

    மியான் ஹுசைன் அவர்கள் உருவாக்கின வளையத்தில் அகப்பட்டார். அடியும் உதையும் வாங்கி அவரின் உடல் நசுங்கியது. வாய்க்குள் இரத்தத்தின் சுவை அனுபவப்பட்டது. கெட்ட வார்த்தைகள் செவிக்குள் நுழைந்தன. எவர் எவரோ அவரின் முகத்தில் துப்பினர். ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் அவர் கீழே விழுந்தார். வினாயக் பாஹெ அவரை மீண்டும் உதைத்தான். போடா நாயே! பாகிஸ்தானுக்கு. குலாம் அலி தனது அறையில் நிம்மதியில்லாமல் நடந்தார்.

    ”சூர் சப்கா ப்யாரா ஹோதா ஹை. யஹ் சீமா நஹி பெச்சான் தா” குலாம் அலி தனக்குத் தானே கூறிக்கொண்டார். மற்றுள்ளவர்கள் நிசப்தமாக நின்றனர்.

    ”தில் சே நிகலி ஆவாஸ் தோ துஷ்மனி பி பூலா தேதா ஹெ” யாரோ ஏதோ கூறத் துணிந்தனர். குலாம் அலி கையுயர்த்தி அவனை விலக்கினார்.

    ”குதா நெ இன்சான் பனாயா, ஒளர் ஹம் பேத் பாவ் கர்தா ஹெ” குலாம் அலி கோபத்தோடு ஜன்னலுக்கருகில் நடந்தார். வெளியில் ஜூஹூ. இரவில் கடல் விளக்குகள். வானம். மியான் ஹுசைன் ஒரு கை கடல் தண்ணி எடுத்து முகத்தைக் கழுவினார். “இன்ஷா அல்லா!” ஜூஹூவின் வெப்பம் தணிந்த தூசு படர்ந்த பாதை வழியாக அவர் இழுத்து இழுத்து நடந்தார்.

    கொஞ்ச தூரம் சென்ற பிறகு தான் பின்னால் ஒரு அசைவைக் கவனித்தார். அலைந்து திரிகின்ற ஒரு நாய். மியான் ஹுசைன் நின்றதும் கொஞ்சம் தள்ளி அவரைப் பார்த்துக் கொண்டு அதுவும் நடந்தது. அவர் நின்று அதற்கு நேராகத் திரும்பினார்.

     ”எதுக்கடா நீ என் பின்னால வர்றே?. போ………………………பாகிஸ்தானுக்குப் போ………………………”

    சர்வசக்தியும் உபயோகித்து நாயை எட்டி உதைத்தார். அது மூண்டுகொண்டே புழுதியில் தெறித்து வீழ்ந்தது. மியான் ஹுசைன் தடுமாறி நடந்து மீண்டும் அதனருகில் சென்றான். மறுபடியும் எட்டி உதைத்தார்.

    ”சொல்றது கேட்கலயா? போடா பாகிஸ்தானுக்கு”.

    சத்தமிட்ட மியான் ஹுசைனின் குரல் அழுவது போலாயிற்று. வேதனை தாங்காமல் அவர் நிலத்தில் விழுந்தார். நாய் மெதுவாக எழுந்து, அவருடைய காலுக்கடியில் சென்று அமர்ந்தது.

    Share
  • நடை (சிறுகதை)

    நடை (சிறுகதை)

    வசுராஜ்

    மொட்டை மாடியில் நடக்க ஆரம்பித்தேன். மாலை வானம் எஸ்.பி.பி. அவர்களை நினைவுபடுத்தும் “வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கொரு சேதி தரும்” தந்து கொண்டு தானிருக்கு. என்ன நிறங்கள்!

    இந்த நிறங்களுக்கு இறைவன் எதைக் கொண்டு வண்ணம் சேர்க்கிறான்? எந்தத் தூரிகையால் தீட்டுகிறான்? அட எனக்கே கவிதை வரும் போல் இருந்தது. தலைக்குப் பக்கத்தில் விமானம் தரையிறங்கத் தாழ்ந்து பறந்தது. (விமான நிலையம் வெகு அருகே) எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காட்சி. விமானம் தரையிறங்குவது ஒரு ராட்சசக் கழுகு மிக லாகவமாகத் தரையைத் தொடுவது போல இருக்கும். விமானம் கண்ணை விட்டு அகன்றதும் கீழே எட்டிப் பார்த்தேன்.

    எதிரில் சின்னச் சின்னத் தகரத் தடுப்புகள். பக்கத்தில் உள்ள அடுக்குமாடிப் பணியாளர்களின் தங்குமிடம் புறாக் கூண்டுகள் போலிருந்தது. வேலை நேரம் முடிந்து வட மாநிலப் பசங்க வந்து கொண்டிருந்தார்கள். ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாய் வந்தார்கள். பாவம் வாழ்க்கையின் கஷ்டங்களைச் சிரித்தே தாங்கிக்கொள்ளப் பழகிவிட்டார்கள் போலும். நான் நடக்க ஆரம்பித்தேன். பக்கத்து வீட்டுக் குழந்தை சிரித்துக்கொண்டே தத்தக்கா பித்தக்கான்னு  நடந்து கொண்டிருந்தது. பாட்டி, குழந்தை கூட ஓடிக்கொண்டிருந்தாள்.

    இந்தக் கொரானா காலத்தில் எல்லா மொட்டை மாடியிலும் தலைகள். எல்லாருக்கும் வெளிக் காற்றை சுவாசிக்க ஆசை. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்க ஆரம்பித்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் காணாமல் போய்விடுவான். நண்பா, காலையில் பார்க்கலாம் என்று மனத்துக்குள் விடை கொடுத்தேன். சீருடைப் பள்ளிக் குழந்தைகள் போல் காகங்கள் வரிசையாக நின்றபடி ஒன்றுக்கொன்று ஏதோ பேசிக்கொண்டன. உற்றுக் கேட்டேன்.

    “என்ன இன்னிக்கு நல்லா சாப்பாடு கிடைச்சுதா மகனே?”

    அம்மா. இன்னிக்கு 4ஆவது மாடி பாய் வீட்டு பிரியாணி சூப்பரா இருந்தது. நான் உன்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன். நீ வரவேயில்லை. அதுனால நானும் நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணும் சாப்பிட்டோம்” என்றது.

    அம்மா காக்கா “எனக்குத் தெரியுண்டா, உனக்கு அவ மேல ஒரு கண். என்னைக் கூப்பிட்டெல்லாம் இருக்க மாட்ட. அவளப் பார்த்தா தான் உனக்குத்  தலகால் புரியாதே. நான் 2ஆவது மாடி மாமி வீட்டுத் தயிர் சாதம் சாப்பிட்டேன்” என்றது.

    இன்னொரு பெரிய காக்கா வந்து “எல்லாரும் வந்தாச்சா? அவங்க அவங்க வீட்டுக்குப் போகலாமா”ன்னு கேட்டது. அது தான் கூட்டத்துக்குத் தலைவர் போல.

    நம்ம பிரியாணிக் காக்கா மெதுவாக “எங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு வரலை”ன்னு சொல்லிச்சு. அம்மா காக்கா, ஒற்றைக் கண்ணால் முறைத்தது. பையனுக்குக் கண்ணுல புது ஒளி. தோழி வந்துவிட்டாள். “எல்லாரும் வந்தாச்சு” உற்சாகமாய்ச் சொன்னது. தனித் தனி பேட்ச்சா கிளம்பிப் போச்சு எல்லாம்.

    ஐ. எனக்குக் காக்கா பாஷை புரியுது.   போன ஜென்மத்துல காக்காவாப் பொறந்திருப்பேனோ!

    கீழே எட்டிப் பார்த்தேன். சப்பாத்தி, உருளை மசாலா ரெடியாகிக் கொண்டிருந்தது. இன்னும் 15 நிமிடம் நடந்து விட்டுக் கீழே இறங்க வேண்டியது தான் என்று நினைத்தேன். கிழக்கே நிலாப் பெண் தகதகவெனப் புறப்பட ஆரம்பித்தாள். இயற்கை தான் என்ன அழகு. ஓ! இன்னிக்கு பௌர்ணமி. நிலாவுடன் பேசிக் கொண்டே கொஞ்ச நேரம் நடந்தேன். இப்போது கடற்கரையில் இருந்தால் நல்லா இருக்கும். இப்போ தான் பீச்சக் கூட பூட்டிட்டாங்களே!

    கீழே எட்டிப் பார்த்தேன். வரிசையாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் ஒன்றிரண்டு பெண்களும் இருந்தார்கள். குடும்பத்தோடு வேலைக்கு வந்திருப்பார்களோ. பாவம் இதில் பெண்களும் எப்படித் தங்குகிறார்களோ.  பக்கத்தில் Movable toilet & bathroom இருக்கு. அதில் பெண்கள் குளிப்பார்களோ. ஆண்கள் எல்லாம் தெருவிலேயே தான் குளிப்பார்கள். அதில் ஒரு பையனும் பெண்ணும்  கண்ணால் பேசிக் கொள்வது போல் தெரிந்தது. தெரு விளக்கும் நிலா வெளிச்சமும் இருந்ததால் ஓரளவு தெரிந்தது.

    நம்ம பிரியாணிக் காக்கா மாதிரி தானா இவர்களும். நல்லா இருக்கட்டும் 2 ஜோடியும் என மனதிற்குள் வாழ்த்தினேன். மனுசனும் ஒரு விதத்தில் காக்கா தானோ, இல்லை,  அவற்றிடமிருந்து நாம் தான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டுமோ? சப்பாத்தி பசியைத் தூண்டியது. போய் தோசை பண்ணலாம் என நினைத்துக் கொண்டே கீழிறங்கினேன்.

    Share
  • மரங்கள் உருவாக்கினது யார்? (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மரங்கள் உருவாக்கினது யார்? (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூலநூலாசிரியர்: சி. வி. பாலகிருஷ்ணன்
    மொழி :மலையாளம்
    தமிழில்: முனைவர் நா. தீபாசரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணாமகளிர்கலைஅறிவியல்கல்லூரி, கோவை.

    என்னுடைய மகன் பச்சுவுக்கும், எங்களுடைய வயல்தோப்பில் உள்ள வீட்டிற்கு விருந்து வந்த குர்யாச்சனின் மகன் ரோபினுக்கும் இடையே ஒரு சின்ன விவாதம். மரங்களை உருவாக்கினது யார்? அதுதான் விவாதப் பொருள்.

    அவர்கள் கொஞ்ச நேரமாக மரங்களுக்கிடையில்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நானும்  குர்யாச்சனும் ஆளில்லாத வயல் வெளியில் உள்ள கூரையின் கீழிருந்து சிறிது மது அருந்திக் கொண்டிருந்தோம்.

    குர்யாச்சன் பள்ளிக்கூடம் படிக்கும் போதிலிருந்தே எனது நண்பன். நாங்கள் இப்போது பல கடமைக் கதவுகளைக் கடந்து நடுத்தரவயதை அடைந்திருக்கிறோம். குர்யாச்சன் இரண்டு நாட்கள் நிம்மதியாக என்னுடன் செலவழிக்கலாம் என நினைத்துதான் சோஃபியாவையும் மக்களையும் அழைத்து வந்திருந்தார். வயல் வெளிக் கூரைக்கு அப்புறமுள்ள பலா மரத்தின் கீழ் அவர்கள் பயணித்து வந்த மாருதி சென் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் தள்ளி வெட்டவெளியில் கொஞ்சம் கூட அவமான எண்ணம் தோன்றாத என்னுடைய பழைய ஜீப். மாருதி ஸென்னை விட இந்த கிராமப்பகுதிக்கு நல்லது என்னுடைய ஜீப்தான். சந்தேகமே இல்லை. குர்யாச்சன் வந்த உடனே கூறிவிட்டார்.

    தாமதிக்காமல் நான் கொழுகொழுத்த ரெண்டு கோழிகளைப் பிடித்தேன். பத்மஜாவும், சோஃபியாவும் சேர்ந்து அதை சரிசெய்துகொண்டிருந்தனர். மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஸ்மால் குடித்துவிட்டு நானும் குர்யாச்சனும் வயற் கூரையில் அமர்ந்திருந்தோம்.  எங்களுக்கு அசைபோட நிறைய ஞாபகங்கள்.

    குர்யாச்சனின் மக்கள் ரோபினும், பெற்றியும் பிறந்ததும் வளர்வதும் எல்லாம் நகரத்தில் அவர்களுக்கு பச்சுவையும் குட்டனையும் விளையாடக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நான்கு பேரும் வயல்வரப்புகளில் உல்லாசமாய் காணப்பட்டனர்.

    “நாமும் ஒரு காலத்தில் அவங்கள போலவே சின்னப் புள்ளகளா இருந்தது தானே?”  குர்யாச்சன் நினைவுகளுடன் கூறினான்.

    “ஆமா பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு நான் அவனின் நினைவுகளைப் பகிர்ந்தேன்.

    “அன்று பறவகளைப்போல இருந்தோம் ஒரு வானம் முழுவதும் நமக்கு சொந்தம்”

    “வித்தியாசமானக் கனவுகள்”

    “ஓராண்டு சொன்னாலும் அவை தீராது”

    “மரணம்னா என்னன்னு அப்போ தெரியாது”

    ”மனசில ஒரு கெட்ட நெனப்பும் இருக்கல”

    “யோசிச்சுப்பாத்தா ஒரு சொர்கமே நஷ்டம். இல்லையா?”

    ”அதேதா……………”

    குர்யாச்சன் கவலை மறப்பதற்காகக் டம்ளரைக் கையில் எடுத்தான். நானும்.

    அப்போதுதான் பச்சுவும் ரோபினும் ஓடிவந்தனர். அவர்களுக்குப் பின்னால் பெற்றியும் குட்டனும் இருந்தனர்.

    “என்னடா? வெளையாடி போதும்னு ஆயிடுச்சா?”

    குர்யாச்சன் அன்போடு மகனிடம் கேட்டான். அவன் மூச்சு வாங்கிகொண்டு அவனுக்கருகில் நின்றான்.

    “டாடீ, மரங்கள உருவாக்கினது யார்? நம்மோட ஏசு இல்லையா? பச்சு என்னுடையத் தோளைப் பிடித்தான்.

    “நம்மளோட சிவன் தானே அப்பா மரங்களை உருவாக்கினது”

    ”இல்ல எங்களோட ஏசு தான்”

     ரோபின் பச்சுவின் நேராகத் திரும்பிக் கூறினான்.

    “இல்ல எங்களோட சிவன் தா” பச்சு வேகமாக எதிர்த்தான்.

    “மரங்களை யாரும் உருவாக்கல. அது தானாக மண்ணிலிருந்து முளைத்து வருது”. நானொரு நடுநிலமையானவன் என்ற முறையில் அப்படியொரு முடிவைக் கூறினேன். ஆனால் அதை குர்யாச்சனின் மகனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    “தானா முளச்சு வந்ததொண்ணுமில்ல. எங்களோட தேவன் உருவாக்கனதுதா……….”

    அவன் தன்னுடைய முடிவிற்கு அப்பாவின் துணை தேடினான். குர்யாச்சன் மிகவும் குழப்பத்திலாழ்ந்தார்.

    “இல்ல சிவன் உருவாக்கனது தான். இல்லையாப்பா பச்சு கேட்டான். நானும் கவலைக்குள்ளானேன். குர்யாச்சன் என்னைப் பார்த்தார். எனக்கொரு யுக்தித் தோன்றியது.

    “நிறைய மரங்களை தேவன் படைத்தார். பிறகு நிறைய மரங்களை சிவனும்” நான் கூறினேன்.

    “முதலில் யாரு?” என்னோட முடிவில் பதறிய ரோபின் ஆராய்ந்தான்.

    “சிவன். இதிலென்ன சந்தேகம்? ”பச்சு உடனே கூறினான்

    “இல்ல…………….. ஏசு தான்” ரோபின் கத்தினான்.

    “யாராவது இருக்கட்டும். மரங்களை உருவாச்சில்ல அது போதும்”

    குர்யாச்சன் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதம் கூறினார். மக்களுக்கு முழு திருப்தி ஆகவில்லை. இருந்தாலும் அவர்கள் எங்களை எங்கப் போக்கிற்கு விட்டுவிட்டு மறுபடியும் விளையாட செல்லத் தயாராயினர்.

    செல்லும் வழியில் இடதுபுறமுள்ள மூன்றாண்டுகள் வளர்ந்த மாமரத்தைச் சுட்டிக்காண்பித்து பச்சு கூறினான்.

    “அது சிவன்”

    மாருதி ஸென்னிற்கு மேல் நிழல் படர்த்தி நிற்கும் பலாமரத்திற்கு நேராக விரல் காண்பித்து ரோபின் கூறினான்.

    “அது ஏசு”

    பிறகு பெற்றியினுடையவும், குட்டனுடையவும் சுற்று. நான் நினைத்து நினைத்து சிரித்தேன். குர்யாச்சன் கையில் டம்ளருடன் கொஞ்சம் முன்னால் நகர்ந்து உட்கார்ந்தார்.

    “இல்ல தெரியாமத்தா கேட்கறே உண்மைல மரங்கள உருவாக்கனது யார்?”

    Share
  • வேட்டி போர்த்திய உடல் (சிறுகதை)

    வேட்டி போர்த்திய உடல் (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    “சார், அந்தப் பக்கம் போகாதீங்க, இட்ஸ் ஹாரிபல்”

    “ஏன் என்னாச்சு?”

    “எவனோ ஒருத்தன் குடிச்சிட்டு துணி மணி இல்லாம இருக்கான். எதிர்த்த பக்கம் போங்க.”

    நான் நகர்ந்து அந்தப் பக்கம் சென்றாலும் என் கண்கள் அவன் இருந்த திசை நோக்கி இழுக்க அவனை நோக்கிச் சென்றேன் .

    மெலிந்த தேகம். எலும்பெல்லாம் தெரியும் ஒடிசலனா உடல். இந்த நிலையிலும் போதை என்ற விஷயம் எவ்வளவு பெரிய வேதனை. மனம் கலங்கியது.

    நேர அங்கே போய் அவனைப் பார்த்தேன். கிட்டதட்ட முழு நிர்வாணம். பக்கத்தில் இருந்தார் ஒருவர்.

    “சார், ஒரு சின்ன ஹெல்ப்” என்றேன்.

    “சொல்லுங்க சார்”

    “எதிர்க்க ரேவதில ஒரு நாலு முழ வேட்டி வாங்கி வர முடியுமா? இந்தாங்க பணம்.”

    “தோ சார். பில் யாரு பேர்ல?”

    “அதெல்லாம் வேணாம் ப்ளீஸ்.”

    “இவரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போலாமா?”

    “போலாம் சார். ஆனா பக்கத்துல போனா ஒரே கலீஜ். ஆனா உயிர் இருக்கு.”

    வேட்டி வந்தது. “கொஞ்சம் போர்த்த முடியுமா?” எனக் கேட்டேன். பதில் வரவில்லை.

    நெருங்கிப் போர்த்தினேன். “இவரைப் பத்தி யாருக்காவது தெரியுமா?” எனக் கேட்டேன்.

    “தெர்ல சார். ஆனா இங்க தான் குந்தினு இருப்பான் பேரல்லாம் தெர்ல.”

    “ரெண்டு தபா வந்து போலீஸ் துரத்திச்சு..  அவன் போல. என்னா தில்லு பாரு.”

    ஒரு காவலர் இரு சக்கர வண்டியில் வந்தார்.

    “சார் நீங்க?”

    சொன்னேன்.

    “இப்ப ஆம்புலன்ஸ் வரும்” என்றார்.

    உங்க நம்பரைக் கொடுங்க என்றார் . கொடுத்தேன்.

    “பயப்படாதீங்க. எங்களுக்கு இதெல்லாம் சகஜம்” என்றார் .

    “இட்ஸ் ஒகே.” அவர் எண்ணை வாங்கிக்கொண்டேன்.

    “ஏன் சார் இவரை ஏதாவது மறுவாழ்வு இல்லத்துல சேர்க்க முடியுமா?”

    பதில் வரவில்லை ..

    “சார். நீங்க கிளம்புங்க, அது உங்க காரா?”

    இல்லை என்றேன்.

    ஆம்புலன்ஸ் வர நான் புறப்பட்டேன்.

    “சார் என்ன பேர் சொன்னீங்க?”

    “ராமஸ்வாமி.”

    “நன்றி. ராயப்பேட்டை தான் போறேன். கூப்பிடுறேன்” என்றார்

    இந்தக் குடி பற்றியும், அதன் தாக்கத்தையும் பற்றியும் உள்ளே நிறைய கேள்விகள் எழுந்தன. தீர்வாக ஏதும் கைகூடவில்லை.

    கைப்பேசியில் ஓர் அழைப்பு .

    “சார். நான் சண்முகம். மார்னிங் பாத்தீங்களே”

    “சொல்லுங்க, இ ஒன் தானே?”

    “ஆமா சார்.”

    “என்னாச்சு?”

    “அவர் இரண்டு மணிக்கு இறந்துட்டார் சார்”

    “மை காட்” என்றேன் .

    ஆர் எம் ஒ ரிப்போர்ட் இப்போதான் வந்தது. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அவருக்கு கொரோனாவும் இல்லை . அவர் ஆல்ககாலிக் கூட இல்லை.”

    “அப்ப என்னா தான் ஆச்சு?”

    “ஸ்டார்வேஷன் சார். பட்டினிச் சாவு.”

    இணைப்பு துண்டிக்கப்பட்டது .

    அவன் உடலைக் கட்டிப் பிடித்து அழ வேண்டும் போல இருந்தது.

    Share
  • என்னை நான் தேடித் தேடி.. (சிறுகதை)

    என்னை நான் தேடித் தேடி.. (சிறுகதை)

    திவாகர்

    ஓ.. கொரோனா வந்ததே உங்களுக்குத் தெரியாது என்பதை மறந்துவிட்டு நான் அதையே பேசிண்டிருக்கேன். ஆறு மாசம் ஓடிப்போயிடுச்சு. சரி, விடுங்க..”உங்களை ஆறு மாசம் முன்னாடி ஜாகேஷ்வர்ல பார்த்தப்போ என்னவோ தோணிச்சு, மறுபடியும் இங்கே எங்கேயோ உங்களைப் பார்ப்பேன்னு.. உங்களுக்கும் அப்படிப் பட்டுதா?”

    நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்.. கொஞ்சும் மழலைத் தமிழில் இவள் பேசுவது எத்தனை அழகாகக் கேட்கிறது. “இல்லைம்மா! அப்ப நீ பார்க்கறச்சே நான் இருந்த மனநிலை வேற. இப்போ உன்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பேசறதே எனக்குப் பெரிசு. ஆனா அடுத்த முறை இங்கே எங்கேயாச்சும் பார்த்தேன்னு வைச்சுக்கோ.. உடனே ஞாபகம் வந்துடும்.”

    அவளும் சிரித்தாள். கள்ளமில்லா சிரிப்பு.. ஆறு மாதம் முன்பு ஜாகேஷ்வரில் அவளைப் பார்த்துப் பேசியதெல்லாம் நினைவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. பெரிய பணக்காரவீட்டுப் பெண். அம்மா இல்லை இவளுக்கு.. சின்ன வயதில் இருந்து ஹாஸ்டல் வாசம்.. ம்ம்.. இன்னும் என்னென்னவோ சொன்னாளே.. ஓ மறந்துவிட்டேனே.. இந்த சிறிய வயதில் அதுவும் வாழ்க்கையின் அனுபவ வாசலில் நுழையப்போகும் தருணத்தில் அடிக்கடி ஜாகேஷ்வர் வந்துவிடுவாளாம். மாதக் கணக்கில் இருப்பதாகச் சொல்வாள். இந்த மலைப்பக்கம் சுற்றுவட்டாரம் எல்லாம் தெரியும் என்று கூடச் சொன்னாள். இன்னும் ஏதேதோ சொல்லி இருக்கிறாள். நினைவில்லை. அப்போது நான் இருந்த மனநிலையில் இவள் பற்றிய இத்தனை நினைப்புகளும் இன்னமும் என் ஞாபகத்தில் இருப்பதே ஆச்சரியம்தான்.

    ’என்ன ஆண்ட்டி! எதுவும் பேசவே இல்லை.. ஆமாம்.. உங்களை ஆண்ட்டி என்று கூப்பிடலாமா இல்லை அக்கா என்று கூப்பிடட்டுமா?”

    ’வேண்டாம்மா.. என்னை மங்களா என்று எங்கப்பா வெச்ச பேரைச் சொல்லியே கூப்பிடு.. இந்த உறவு முறைல்லாம் எதுக்கப்பா.. உறவுகளை ஒதுக்கிவிட்டுதான் வந்தாச்சே..”

    ”இது நல்லா இருக்கே மங்களா.. மங்களகரமான முகத்துக்கு மங்களம்னுதான் பேர் வெக்கணும். உங்கப்பா செஞ்சது சரி.. எங்கப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது.. மேடைல வக்கணையா பேசுவார்.. கீழே இறங்கிவந்தா என்ன பேசினார்னு உடனேயே மறந்துடற நல்ல மனசு அவருக்கு. வர்ஷினி’ன்னு பேர் யார் வெச்சுருக்கார்’னு அவருக்கே ஞாபகம் இல்லே.. மங்களா! நீங்க எனக்கு அன்னிக்கு பேசினதெல்லாம் இன்னமும் ஞாபகமிருக்கு. உங்க குடும்பம் ரொம்பப் பெரிசு. ரொம்ப பிளான்லாம் பண்ணிதான் இங்க வந்தீங்கன்னு சொன்னீங்க.. சரிதானே?  பாருங்க.. இந்த மலை இங்கேதான் கொஞ்சம் சமானநிலம். கொஞ்சதூரம் இப்படியே போயிட்டே இருந்தா அப்புறம் பெரிய பள்ளம். அதுக்கு முன்னாடி ஒரு சில குடும்பங்கள் கூட்டமா இருக்கும். சுட்ட கிழங்கு அப்படியே சுடச்சுட கொடுப்பாங்க. நான் போன வருஷம் பார்த்தேன். இப்ப அங்கேயே இருக்காங்களோ இல்லையோ… பார்க்கத்தானே போறோம்..”

    ”ஓ.. வர்ஷினி நான் கொஞ்சதூரம்தான் உன்னோட வருவேன் போல இருக்கே. இந்த மலையிலேர்ந்து கிழக்கே கீழே இறங்கிடுவேன். அங்கயும் ஒரு சின்ன கிராமம் இருக்கு. அங்கதான் எங்க குரு இருக்கார். அவரைப் பார்க்க வரச் சொல்லியிருக்கார். அதனாலதான் இந்தப் பயணம்.”

    ”பரவாயில்லை மங்களா.. நானும் உங்களோட வர்ரேனே.. எனக்கு எந்த ஒரு வேலையும் கிடையாது. இப்படி நடந்துண்டே போவேன். எங்காவது இடம் கிடைச்சா தங்குவேன். போய்க்கொண்டே இருப்பேன். புகலிடம் எங்கேன்னு தெரியலே.. இன்னிக்கு உங்க கூட வரதுல உங்களுக்கு ஏதாச்சும் கஷ்டமா?.”

    சட்டென அவளை நிறுத்தினேன். ”வர்ஷினி.. தாராளமா என்னோட வாம்மா.. எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லே. உனக்குப் பிடிச்சுதுன்னா எங்க கூடவே தங்கலாம்”

    அவள் குதூகலித்தாள். அந்த குதூகலம் அவள் துள்ளல் நடையில் தெரிந்தது.

    ’மங்களா இந்த ஆறு மாசத்துல  உங்க குடும்ப ஞாபகமே இல்லாம இருக்கீங்களா.. நல்ல வைராக்கியசாலிதான்.. எனக்கு அதெல்லாம் போறாது.. கொஞ்ச நாள் இங்கே வருவேன்.. தைரியமா நடப்பேன்.. எங்கேயாவது வாகான இடம் கிடைச்சால் சாதனா செய்வேன். திடீர்னு ஊர் ஞாபகம் வந்துடுச்சுனா போச்சு.. திரும்பி ஏதாவது ஷார்ட்கட்லே போயி எப்படியாவது ஊருக்குப் போயிடுவேன்.. உங்களை மாதிரி வைராக்கியம் வரணும்னு தேவிகிட்டே இன்னிக்கு சாயந்திரம் வேண்டிக்கிறேன்’.

    “அதென்ன சாயந்திரம்?”

    “அது அப்படித்தான்.. சாயங்காலம்தான் எனக்கே தோணும். வேண்டிக்குவேன்.. உடனே அவளும் நான் கேட்பதையெல்லாம் தந்துடுவாள், ஒரே ஒரு விஷயம் தவிர”

    சிரித்தாள் அவள். உள்ளம் போலவே பளிச்சிட்டன. அந்த ஒரே ஒரு விஷயம் என்ன என்று கேட்கவில்லை. நான் கூட இவளை மாதிரிதானே.. என்னவோ பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக மனதுள் வலம் வந்தன. அதற்கேற்றாற்போலவே இவளும் கேட்கிறாள். குடும்ப ஞாபகம் வந்ததா என்று இவளுக்கு சொல்லலாமா.. சொல்லலாம்.. கடந்த காலத்தை நினைவுப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

    ”வர்ஷினி.. உன் பெயர் நல்ல பெயர்தான்.. நன்மையே பொழிபவள் என தேவிக்கு வர்ஷினி, வர்ஷா என்பார்கள். எனக்கு என் குடும்ப ஞாபகம் எல்லாம் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். பலவந்தமாக மறக்க முயன்றாலும் அதெல்லாம் முடியாதுதான். குடும்ப பந்தம் என்பது சாமான்யமான விஷயம் இல்லைம்மா.. சட்டென அத்தனையும், அத்தனை பந்தங்களையும் உதறிவிட்டு ஓடி வர முடியுமா.. அதுவும் நல்லதொரு குடும்பத்தைக் கட்டிக் காத்து வரும் பெண்ணால் முடியுமா.. அப்படிப்பட்ட கட்டுக்கோப்பான குடும்பப் பெண், அதுவும் பொறுப்புள்ள குடும்பப்பெண் திடீரென காணாமல் போனாள் என்று எல்லோரும் தேடுவார்களே என்ற கவலையும் பயமுமாய் இருப்பவள் இப்படி எல்லாவற்றையும் உதறி வரமுடியும் என் நினைக்கிறாயா.. இல்லையம்மா.. நான் வணங்கும்தேவி அவளருள் குருவின் அருளாய் கட்டளையாக வந்ததாய் எனக்குத் தோன்றியது.. வந்துவிட்டேன். அவ்வளவுதான்.!”

    நிதானமாகத்தான் அவளுக்குச் சொன்னேன். அவளுடன் மெல்ல நடந்துகொண்டே இருக்கும்போதே என் மனம் ஆறு மாதங்களுக்கு முன்னால் நடந்ததையெல்லாம் அசை போட ஆரம்பித்துவிட்டதுதான். மனம் தூண்டப்பட்டாலும் கூட மனத்தை அடக்கும் சக்தியை என்றாவது ஒருநாள் தேவி அருளத்தான் செய்வாள். அதுவரை மனம் தன் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் நினைக்கட்டுமே..

    உண்மைதானே.. என்னால் எப்படி அத்தனை உறவுகளையும் ஒரே நாளில் சட்டென உதறி வரமுடியும்? அந்த நாளுக்காகவே ஒரு வருடமாக நான் காத்திருந்தேனே.. என்ன குறையை எனக்கு என் வாழ்வில் வைத்தாள் என் தேவி. எதுவும் இல்லையே.. ஆரோக்கியமான கணவன், இரண்டு பிள்ளைகள், ஒரு பெண் எல்லோருமே என்னுடன் அன்று வரை பிரியமாகத்தானே இருந்தார்கள். கணவர் அவருக்கு உலகத்தின் உண்மை சொரூபம் தெரியாதோ இல்லை தெரிந்தாலும் அலட்சியப்படுத்தும் மனநிலையோ.. கொஞ்சம் படாடோபக்காரர்தானே.. தான் எப்போதும் செல்வச் செழிப்போடு, வளமான ஆரோக்கியமாக இருக்கவேண்டும், மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவது என்பதை எப்போதும் விரும்பமாட்டார். தான் உண்டு தன் ஷட்டில்காக் விளையாட்டு உண்டு,  படிக்கிறாரோ இல்லையோ ஆனால் கையில் எப்போதும் ஆங்கில புதினங்கள் உண்டு, தன் பணக்கார நண்பர்களோடு அரசியல் பேசிக்கொண்டும், ஹாஹாவென பெரிதாகக் கத்திச் சிரித்துக்கொண்டும் கொண்டாடிக்கொண்டும், மற்றவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என எவ்விதக் கவலையுமில்லாமல் வாழ்ந்து வருபவர். அப்படிப்பட்டவர் திடீரென நான் கோயிலுக்கு அந்தக் கடைசி நாள் போகும்போது கூடவே தானும் வருவதாக பிடிவாதமாக காரில் ஏற்றிக்கொண்டு போனாரே…

    நான் காரில் கோயில் செல்வது இல்லை. வீட்டில் இருந்து சரியாக ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள என் தேவியின் கோயிலுக்கு நடந்தே தினம் செல்வேன். சரியாக ஒன்றேகால் மணிநேரம் ஆகும். அதைப் போல அங்கே பொது தரிசனம்தான் செய்வேன். அங்கேயே ஏறத்தாழ ஒருமணி நேரம் ஆகும். ஒரு சில நாட்கள் இன்னும் தாமதமானாலும் கூட பொறுமையாக இருந்து அவளைத் தரிசனம் செய்வேன். தட்டில் போடும் அந்த பத்து ரூபாய்தான் மொத்த செலவு. மறுபடி திரும்பி வரும்போது நடைதான். ஒன்றேகால் மணி நேரம்.. இது என் நித்திய வேலை வீட்டிலே கூட எல்லோருக்கும் தெரியும்தான். அவர்களுக்கும் பழகிவிட்டது. ஆனால் இவரென்ன காரில் போகவேண்டுமென்று சொல்கிறார். சரி, இன்று கடைசி நாள். தேவியின் திருவுள்ளம் கணவரோடு ஒருநாள் சேர்ந்து வர வேண்டுமென்றிருக்கிறது போலும். வாழ்நாளில் இவரோடு ஒருநாள் கூட சேர்ந்து கோயிலுக்குச் சென்றதே இல்லையே..

    அவரே காரை ஓட்டினார். பத்தே நிமிஷத்தில் கோயில் வந்தோம். பெரிய மாலையை வாங்கிக்கொண்டார். தலையை நிமிர்த்தி ஒரு தனவந்தருக்கான தோரணையோடு கையில் மாலையோடு சென்றவரை அங்குள்ளோர் வியப்பாக பார்த்திருக்கலாம். சிறப்பு டிக்கெட் எடுத்துக் கொண்டார். முன்னூறு ரூபாய் கொடுத்தால் தேவியின் அருகாமைக்குக் கொண்டு சென்று காண்பிப்பார்கள்தான். ஆனால் நான் அப்படிப் பழகவில்லை. சாதாரண பக்தையாகத்தானே இத்தனை நாள் சென்றவள். ஏனோ தேவியை அருகே பார்ப்பதை விட வழக்கப்படி  சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் என்ன என்று மனதுக்குள் தோன்றியது. ஆனால் இவரோ கையைக் கூப்பியபடி தேவியைக் கும்பிட்டார். வீட்டில் பூஜை அறைப் பக்கம் தலை வைத்துப் படுக்காதவர். எனக்கு அதிசயமாகத்தான் இருந்தது. ஏதும் பேசவில்லை. தேவியையே பார்த்துக்கொண்டிருந்தேன். அர்ச்சகர் வந்ததும் எங்களை தடபுலடாகக் கவனித்தார். பெரிய மாலையை வாங்கிக்கொண்டார். கோத்திரம் கேட்டார்.. இவருக்கு அதெல்லாம் சொல்லத் தெரியாது. நானே சொன்னேன். உள்ளே சென்று மாலை சார்த்தி அட்டகாசமாக ஸ்தோத்திரம் சொல்லி பூஜை செய்தவர் அம்பாளின் மேல் சார்த்தியிருந்த அந்தப் பெரிய மாலையைக் கஷ்டப்பட்டு எடுத்தார். கொஞ்சம் மல்லிகைச் சரத்தையும் எடுத்துக் கொண்டு எங்களிடம் வந்தார். பெரிய குரலில் ஆசீர்வசனம் சொல்லி அந்தப் பெரிய மாலையை என் கணவர் கழுத்தில் போட்டார். எனக்கு மல்லிகைச் சரத்தைக் கொடுத்தார். இவர் தன் பர்ஸிலிருந்து இரண்டு புது ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அர்ச்சகர் தட்டில் வைத்தார். அர்ச்சகர் கண்கள் பெரிதாகின. சௌஜன்யமாக எங்களைப் பற்றி விசாரித்தார். அடிக்கடி கோயிலுக்கு வரவேண்டும் என்று என்னிடம் ஆதரவாகப் பேசினார். எனக்குச் சிரிப்புதான் உள்ளுக்குள் வந்தது. நிதம் வருகிறேன். சாதாரணமான  பக்தர்களுடன் வருகிறேன். பத்து ரூபாய் போடுகிறேன். ஆனால் நான் போடுவதைப் பல சமயங்களில் அவர் பார்ப்பது கூட கிடையாது. குங்குமம். மட்டும் அவர் கையிலிருந்து எங்கள் கைகளில் போட்டுக்கொண்டே வருவார். ’சீக்கிரம் நகருங்கோ, தரிசனம் ஆயிடுத்து இல்லையா.. பின்னாடி நிறைய பேர் இருக்காங்களே.’. என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படிப்பட்டவர் இன்று எங்களுக்கு ஆசீர்வசனம் மாலை போட்டு மரியாதை தருவதோடு என்னையும் நித்யம் வருமாறு அழைக்கிறார். இவர் கவனமே இப்போதுதான் என் மீது விழுந்தது. இருக்கட்டும்.

    கோயிலைச் சுற்றி வந்த என் கணவர் அங்கே பக்தர்கள் அதிகம் கூடாத ஒரு இடம் பார்த்து சப்பணம் போட்டு உட்கார்ந்துகொண்டார். என்னை அங்கே உட்காரச் சொல்லி சைகை செய்தார்.

    ”மங்களா, ஏதோ சின்ன வயசுல கோயிலுக்கு வந்திருக்கேன். கல்யாணம் ஆனதிலேர்ந்து உன் கூட கோயிலுக்குன்னு வந்தது இல்லேதான். ஆனாலும் இன்னிக்கு ஏன் வந்தேன்னா ஒரு காரணம் இருக்கு. அந்தக் காரணமே நீதான்”.

    என்ன இவருக்கு எல்லாம் தெரிந்து விட்டதா.. நான் நாளைக் காலை வண்டிக்கு டில்லிக்கு ஒரு குழுவோடு பிரயாணம் செய்வது தெரிந்து விட்டதோ.. அங்கிருந்து ஜாகேஷ்வர் செல்கிறோம். அந்த யாத்திரை விஷயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. குழுவுடன் ஜாகேஷ்வர் வரைதான் என் பயணம். அதற்கடுத்த பயணம் எனக்கே தெரியாதே. தேவியை நம்பித்தானே செல்கிறேன். சென்றவருடம் சென்றபோதுதான் அந்தக் கட்டளை  எனக்கே வந்தது என்ற உண்மையை இவரிடம் சொல்லிவிடலாமா?

    சென்ற வருடம் எனக்கு ஏற்பட்ட ஒரு அபூர்வ அனுபவம்தான் இந்த அபூர்வ நிகழ்ச்சிக்கும் வித்திட்டது, ஜாகேஷ்வரில் நான் இருந்த அந்த ஒரு வாரத்தின் கடைசி நாளில்தான் அவர் தரிசனம் கிடைத்தது. என்னை விட வயதில் இளையவர்தான் எனினும் என்னைப் பார்த்ததும் தனிக் கனிவோடு பேசினார். அவர் முகத்தில் இருந்த காந்த ஒளியை என்னால் வர்ணிக்கவே முடியாது. அவர் பேச்சு உடனடியாக என்னை ஈர்த்தது. குருவானவர் எப்படி எந்த உருவில் வேண்டுமானாலும் வருவார் என்று சூசகமாகச் சொன்னவர் என்னை நானே தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். ’இங்கேயே இருந்து விடுவாயா’ என்று கேட்டார்’. மனதுக்குள் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. ’உடனே ஒப்புக்கொள்’ என்றது மனம். ஆனால் வாய் மட்டும் கொஞ்சம் கால அவகாசம் கேட்டது. ’சரி ஒரு வருடம் உன்னைத் தயார் படுத்திக்கொண்டு வந்து விடு. நீ வரவேண்டிய நேரம்கூட சரியாக அமையும்தான்’ என்று ஆசிர்வதித்துப் போனவர் திரும்பி வந்து ’நான் உன்னைக் கண்காணித்துக் கொண்டே இருப்பேன். கவலையே பட வேண்டாம். தேவியின் அருள் உனக்கு உண்டு’ என்றார். இந்த ஒருவருடம் என்னை நானே ஒவ்வொரு கணமும் தயார்படுத்திக்கொண்டேன். அனுதினமும் இரவில் சாதனா செய்தேன். அவ்வப்போது நான் ஏதாவது மனதுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டும் சந்தேகம் எழுப்பிக்கொண்டும் இருக்கும்போது கூட அதற்கேற்றாற்போல சமாதானமும் அதே மனதுள் கிடைக்கும். சென்ற வருட நிகழ்வை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்ல. இவரிடமும் கூட.

    நாளைய பயணத்தையும் இவரிடமும் சொல்லவில்லை. தேவையில்லை என்று மனம் உறுதியாகக் கூறியதால் நான் வீட்டில் கூட யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. தேவி அவள் பார்த்துக் கொள்வாள். என் மனதில் இருந்து ஆட்டுவிக்கும் குரு பார்த்துக் கொள்வார்.

    இத்தனைக்கும் சென்றவருடம் இந்த ஊர் கோஷ்டியோடு நான் ஜாகேஷ்வரம் செல்லும்போது எல்லோருக்கும்  சொல்லிவிட்டுத்தானே சென்றேன். காரில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இவர் வந்து வழி அனுப்பி வைத்தாரே. நான் திரும்பி வரும்போது கூட காத்திருந்து அழைத்து வந்தாரே.. ஒருவேளை நான் எப்போது திரும்புவேன் என்று இப்போது இவர் கேட்டால் என்ன சொல்வது?

    ஆனால் கணவர் என் சிந்தனைகளை சீண்டவில்லை. “நான் உன்னிடம் வீட்டில் சரியாகப் பேசக்கூட முடிவதில்லை. உனக்குதான் தெரியுமே.. என் வேலையே தனி.. நான் உண்டு, என் வேலையுண்டு என்றுதானே இருப்பேன். இரண்டு நாள் முன்புதான் சேதி தெரிந்தது.. நேத்திக்கே உன்னிடம் பேசணும்னு நினைச்சேன். ஆனால் நேத்துக் காலைலேயே எழுந்து வழக்கம்போல கோயில் கிளம்பிப் போயிட்டே.. நீ வரும்போது நான் இல்லே. நேத்துப் பார்த்து ஒரே நண்பர்கள் தகராறு. அதுலேயே டைம் பாஸ் பண்ணிட்டேன். ராத்திரி படுக்கவரச்சே லேட்டாயிடுச்சு. சரி, கார்த்தாலே கோயிலுக்கு நானும்தான் உன்னோடு போகலாமேன்னு ஒருநாள் ஷட்டில்காக் விளையாட்டை விட்டுட்டு இதோ உன்கூட உட்கார்ந்திருக்கேன்.. சரி சொல்லு.. ஏன் இப்படி செய்தே.. பொண்ணு அழுதுண்டே உருகிப்போய் சொல்லறச்சே என் மனசு கூட கஷ்டமா இருக்கு.!’”

    ஓ.. இவ்வளவுதானா.. அதாவது என்னிடம் இருந்த நாற்பது லட்சம் ரூபாய் வைப்பு நிதியை அவளுக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன். அவள் புருஷன் ஏதோ பிஸினெஸ் பண்ண ஆசைப்பட்டான் என்றாலும் இது அதிகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பணத்தையெல்லாம் நான் இனி என்ன செய்யப் போகிறேன். சந்தர்ப்பம் சரியாக அமைந்தது. தேவையும் சரியெனப் பட்டது. இருந்த பணத்தையெல்லாம் கொடுத்துவிட்டேன். அவ்வளவுதான். இதை எப்படி சொல்வது.. இவரிடம். மகளே சொல்லியிருப்பாளே..

    அவரும் அதைத்தான் சொன்னார். ”மங்களா.. அவங்க பிஸினஸுக்குத் தேவை என்றால் ஒரு பத்து லட்சம் கொடுத்திருக்கலாம். இல்லை நான் இருக்கிறேனே. என்னிடம் கேட்டால் ஏதாவது செய்வேனே.. எனக்கு அறுபத்தெட்டு வயசாகிறது. உனக்கும் அறுபத்து நாலு வரப் போகுது. எட்டு வருடம் முன்பு உன் எதிர்கால வாழ்வில் ஒரு வேளை நான் முன்னாடி போய்ச் சேர்ந்துவிட்டால் உனக்கென்று பணம் இருக்கணும், அது உன்னை வைத்துக் காப்பாத்தும் என்கிற நம்பிக்கையினால்தான் அந்த நாற்பது லட்சம் டிபாசிட் செய்தேன். இன்று அதன் மதிப்பு எண்பது லட்சமாக்கும், அப்படியே உன் பொண்ணுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டாயே.. சரி போகட்டும் நாளை உன் பேரில் இருபது லட்சம் டிபாசிட் செய்கிறேன். அது உன்னுடைய தனிப்பட்ட எதிர்காலத்துக்காகத்தான். நான் இருக்கும் வரை உனக்கு எந்தக் கவலையுமில்லை. இதோ பார்.. ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள். பணம் மட்டுமே உன்னைக் காப்பாத்தும். இந்த மகன் மகள் உறவு எல்லாம் உன் கடைசி காலத்தில் உதவமாட்டார்கள். என்ன.. சொல்லறது புரிஞ்சுதா?”

    நான் சிரித்தேன். ”எனக்காக எதையும் செய்யவேண்டாம்.. செஞ்சதெல்லாம் மனநிறைவோடு நீங்கள் செய்தீர்கள். நானும் அதே மனநிறைவோடுதான் கொடுத்தேன்..”

    திடீரென என் கழுத்தைப் பார்த்தார், சற்று அதிர்ச்சியானார். “உன் தாலிச் செயின் எங்கே.. செக்யூரிட்டின்னு உள்ளே கழட்டி வைத்துவிட்டாயா? ஐய்யோ இந்த மஞ்சள் கயிறு எல்லா நல்லாவே இல்லே.. தாலிச்செயின் பத்து சவரனாக்கும். .அது வேணாம்னா  ரெண்டு சவரன்லயாவது சின்ன சங்கிலி போட்டிருக்கலாம்.. உன் மோதிரம் வளையல்லாம் எங்கே?.. உடம்புல பொட்டு தங்கம் இல்லாம உன்னை இப்படிப் பாக்கறது என்னால தாங்க முடியலே.. யாராவது தெரிஞ்சவங்க உன்னையும் என்னையும் சேர்த்துப் பார்த்தா அவ்வளவுதான்.. என் மானமே போயிடும்.. ஏன் இப்படி பண்றே?”

    ”இப்போ எதுக்குங்க அதெல்லாம் கேட்கறீங்க? எல்லாம் ஜாக்கிரதையாதான் இருக்கு.!” நான் மருமகளிடம் கொடுத்து அவள் பீரோவில் ஜாக்கிரதையாக என் நகைகளை வைக்கும்படி சொன்னதைச் சொல்லவில்லை.

    அவர் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார். ‘எங்கே அதையும் உன் மகளுக்குக் கொடுத்திட்டியோன்னு நினைச்சேன். வெளிலே நடந்து போகறச்சே நகை போட்டா பாதுகாப்பில்லேதான். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் நகையைப் போட்டுக்கறது பெண்பிள்ளைகளுக்கு நல்லதுதான். ஏதோ சொல்லிட்டேன்.. நாளைலேர்ந்து கழுத்துல காதுல நகையைப் போட்டுண்டு என் காரை எடுத்துண்டு கோயிலுக்கு வா.. இப்போ நமக்குக் கிடைத்த மரியாதையை பார்த்தியா.. நீ பொதுபக்தர்களோட வரதுன்னாலே அவருக்கு அடையாளம் தெரியலே.. நாம் கொஞ்சம் பகட்டா காண்பிச்சாதான் இந்த உலகத்துல மதிப்பு. பத்துரூபாயெல்லாம் போடாதே.. குறைஞ்சது நூறு ரூபாயாவது போடு. சிறப்பு டிக்கெட் எடுத்துக்கோ.. இதெல்லாம் இனிமே என் பணத்துலேயே செலவு செஞ்சுக்கோ.. தெரியறதா.. சொல்லிட்டேன்.”

    சொன்னவர் ஏதோ கணக்குப் போட்டார். ”என்ன செலவாயிடப்போகுது? மிஞ்சிப் போனா தினம் ஐந்நூறு ரூபாய் ஆகும்.. மாசத்துக்கு பதினஞ்சாயிரம் ஆகும்.. ஆகட்டுமே!” குரலில் சுரத்து அவ்வளவாக இல்லைதான்.

    சிரித்தேன் அவரைப் பார்த்து. “ஒரு வருஷமா தினம் கோயிலுக்கு நாள் தவறாம வர்ரேன். நீங்க சொல்லறபடி கார்ல வந்து சிறப்பு டிக்கெட் வாங்கி கிட்டக்கப் போய் தர்சனம் பண்ணி, தட்டுலயும் நூறு ரூபாய் போட்டேன்னா இப்ப வரைக்குமே என்னாலே கிட்டதட்ட ரெண்டு லட்சம் ரூபாய் செலவு ஆகியிருக்குமே.. கவலை வேண்டாமே.. நான் வழக்கப்படிப் போய்க்கறேன்”

    ஒரு முறை ஏளனமாக என்னை ஒரு ஓரப்பார்வை பார்த்தார். ஆனால் அவர் குரலில் ஒரு நிம்மதி இப்போது தெரிந்தது. “சரி மங்களா.. ஏதோ உன் நல்லதுக்கு சொன்னேன், உன் இஷ்டம். நான் என்னிக்காவது உன் வேலையிலே தலையிட்டிருக்கிறேனோ.. நீயும் அப்படித்தான்.. எனக்குத் தெரியும். இருந்தாலும் புருஷன் தன் கடமையை ஒழுங்காகச் செய்யணும். அதுவும் பண விஷயத்தில் சரியாச் செய்யணும். நாளைக்கு பணம் ஒண்ணே காப்பாத்தும்.. ஞாபகம் வெச்சுக்கோ”.

    எழுந்துகொண்டார். அப்போதுதான் ஒன்று கவனித்தேன். நான் நிதமும் இந்தக் கோயில் வரும்போது தலைவாசலில் இருந்து என் வாய் அவள் நாமத்தையே முணுமுணுத்துகொண்டே இருக்கும். திரும்பும்போதும் அதே தலைவாசலில் அந்த நாமத்தினை முடித்துவிட்டு அவளுக்கு ஒரு நமஸ்காரமும் செய்துவிட்டு மனம் நிம்மதியோடு வெளியே வந்து நடை போட ஆரம்பிப்பேன். ஆனால் இன்று பார்த்து இப்போது வரை ஒரு முறை கூட என் வாயில் அவள் பெயரே வரவில்லை. எத்தனை அருகிலிருந்து அவளைத் தரிசித்தேன். ஊம்ஹூம்.. இல்லை. அவளை நான் கூப்பிடவே இல்லை. தேவி அப்படி என்னைக் கூப்பிட வைக்கவில்லை.. தாயே இது என்ன கொடுமை.. உடனடியாக நாவில் அவள் நாமம் சொல்லிக்கொண்டே தலைவாசல் வரை சென்று அவளுக்கு நமஸ்கரித்துவிட்டு வெளியே அவருடன் வந்தேன். காரில் வீடு சென்றோம். ஏதோ அவரின் தலையாய கடமை ஒன்று முடித்து விட்ட திருப்தியில் அவர் வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார்.

    அடுத்த நாள் காலைப் பயணம். ஒரு பூஜைப் பையில் என்னுடைய ஜீன்ஸ் பேண்ட் ஒன்றும் ஒரு முழுக்கை காக்கிச் சட்டையும் வைத்துக்கொண்டேன். இந்த டிரஸ் மூன்றாம் வருடம் லண்டனில் இருக்கும் மகனைப் பார்க்கப்போன போது விமானப் பயணத்துக்கு சுலபமானது என்று வாங்கித் தந்தான்.. இங்கிருந்து ஆட்டோவுக்கு முந்நூறு ரூபாய் தேவைப்படும். ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொண்டேன். என் பீரோவில் மீதி இருந்த ரொக்கத்தையெல்லாம் மருமகளிடம் கொடுத்து வழக்கப்படி அவள் பீரோவில் வைக்கச் சொன்னேன். ஆச்சரியமாகப் பார்த்தாள்.. ஆனாலும் சொன்னபடி செய்தாள். சாப்பிட்டேன். இரவு தேவியை நினைத்து வழக்கப்படி செய்யும் சாதனாவை செய்துவிட்டுத் தூங்கினேன். காலை குளித்துவிட்டு வழக்கம்போல் அந்த பூஜைப் பையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

    பேரன் எதிரே வந்தான். ‘என்ன பாட்டி! ஜாலியா கையை வீசிண்டே கோயிலுக்கு தினம் வாக்கிங் போவே.. இன்னிக்கு என்ன புதுசா கையிலே பை?. தேங்காய்ப் பழமா?’ என்று கேட்டான். அத்தோடு இல்லாமல் புதிதாக கையில் ஒரு சாக்லேட் கொடுத்தான். ’ரோடுல போகறச்சே சாப்பிடு. திடீர்னு சுகர் ஏறினா குறையும்’னு சொல்லி சிரித்தான். வாங்கிக்கொண்டேன். இந்தக் காலத்தில் சின்னப்பசங்களுக்கெல்லாம் அறிவு ஜாஸ்திதான்.

    ”எனக்கு சாக்லேட் கொடுத்தே இல்லே.. பதிலுக்கு இந்த என்னோட மொபைல் போன் எடுத்து வெச்சுக்கோ.”

    ”ஐய்யோ பாட்டி! வேணவே வேணாம்’. என்று மறுத்துக்கொண்டே அவன் நீட்டிய கையில் அந்த கைபேசியை கெட்டியாக அழுத்திக் கொடுத்தேன்.

    ”பாட்டி, எனக்கே எனக்கா?” சந்தேகத்தோடு கேட்டான். சிரித்தேன் நான். ”ஆமாம்.. நீயே வெச்சுக்கோ!” அவனுக்குப் பரம சந்தோஷம். எனக்கும்தான். என் கடைசித் தொடர்பையும் துண்டித்தாயிற்று. “ஆஹா.. ஒரே ஒரு சாக்லெட்டுக்கு ஆப்பிள் போன் கொடுத்திருக்கே.. நீ ரொம்ப கிரேட் பாட்டி..”

    ”ஆனா இது மூணு வருஷம் முந்தைய ஆப்பிள் மாடல்!”

    ”பாட்டி.. மரத்துல ஆப்பிள் எப்போ காய்ச்சினா என்ன?.. நம்ம கையிலே வரச்சே அது பளபளன்னு அழகா பழமா ருசியா இருந்தா போதும்.. ரொம்ப தேங்க்ஸ்.” சொல்லிவிட்டு அதை நோண்ட ஆரம்பித்துவிட்டான். பத்து வயசுப் பையன் சர்வ சாதாரணமாக ஒரு யதார்த்தத்தை அழகாகச் சொல்லியவன் எனக்கு கையைக் காட்டி வழி அனுப்பினான். ”கோயிலுக்கு போயிட்டு வந்தவுடன் திருப்பிக் கேட்கமாட்டே இல்லே?”

    ”இது உனக்கே உனக்குதான்”. நிதானமாக சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். சாலையில் சென்ற ஆட்டோவைப் பிடித்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்த ஜாகேஷ்வர் பக்திக் கும்பலோடு சேர்ந்துகொண்டேன். ஏற்கனவே ரயில் பயணம் மற்ற ஏற்பாடுகளுக்கெல்லாம் பணம் கட்டிவிட்டதால் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள்.

    ஜாகேஷ்வர் வந்தவுடன் சூசகமாக என்னுடன் வந்த தெரிந்த இருவரிடம் நான் திரும்ப அவர்களுடன் வரப் போவதில்லை என்பதையும் அவர்கள் ஊர் திரும்பியதும் என் வீட்டாரிடம் சொல்லிவிடலாம் என்றும் சொன்னேன். அவர்கள் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்கள். ஏதேனும் குடும்பப் பிரச்னையா என்று ஒருவர் மெல்லக் கேட்டார். ’அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஜாகேஷ்வரில் ஒரு சில மாதம் இருப்பேன். அதன் பிறகு எதுவும் சொல்வதற்கில்லை’ என்று மட்டும் சொன்னேன். ஆனால் அவர் அவசரக்குடுக்கை போலும். தன் கைபேசியின் மூலம் உடனடியாக என் வீட்டுக்குப் பேசிவிட்டார். அவர்களும் பதட்டப்பட்டார்கள் என்பது அவர் பேசிய முகபாவத்திலிருந்தே தெரிந்தது. ’உங்களிடம் ஒருமுறை பேசவேண்டும் நீங்கள் வீடு திரும்பவில்லை என்றதும் எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.. நீங்கள் ஜாகேஷ்வர் பயணத்தையே சொல்லவில்லையா’ என்று கேட்டார். கொஞ்சம் உங்கள் மகனிடம் பேசுங்கள்’ என்றார். நான் பேச மறுத்து விட்டேன். மேலும் யாரும் இங்கே என்னைத் தேடி வரத் தேவையில்லை என்றும் ஜாகேஷ்வரில் கூட நான் தங்கப்போவதில்லை என்பதையும் சொல்லிவிட்டேன். ஆச்சரியமாக அவருக்குப் பதில் செய்தி கிடைத்தது. அம்மாவின் மனது புரிகின்றது, அம்மாவின் நலம்தான் முக்கியம் என்றும் அம்மாவை சில நாட்களோ அல்லது ஒரு மாதமோ தங்கவைப்பதில் ஆட்சேபணை இல்லை என்றும் அம்மா திரும்பி வரும்போது ஒரு தகவல் மட்டும் சொன்னால் போதும், தாங்களே அங்கே வந்து அழைத்துச் செல்வதாகவும் சொல்லிவிட்டார்கள். அவர்கள் என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அம்மாவின் ஆன்மீக ஆசைக்குக் குறுக்கே நிற்கவும் மாட்டார்கள். அதே சமயம் என்னைப் பிரியவும் சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள், இந்தக் குழுவினர் இனி இதைப் பற்றிப் பேசமாட்டார்கள்.

    இங்கேதான் அமைதியான இந்த அழகிய பெண் வர்ஷினியைப் பார்த்தேன். இவளுடன் எப்படி பரிச்சயம் ஆரம்பம் என்பது நினைவில்லை என்ற அளவுக்கு பூர்வஜன்ம பழக்கம் போல எங்கள் பரிச்சயம் அமைந்தது. அங்கு இருந்தவரை என்னுடன் ஒட்டிக்கொண்டு என்னோடு ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள். ஏனைய நேரம் என்னைப் போலவே சாதனா செய்ய ஆரம்பித்துவிடுவாள். அதிசயமான பெண். ஒருவாரம் இருந்து அவர்களிடம் பிரிந்து எங்கே போவது என்று முழித்தது வாஸ்தவம்தான். ஆனால் சரியாக எல்லோரும் போன இரண்டாம் நாளே என் வழிகாட்டியை என் தேவி அனுப்பி வைத்துவிட்டாள். அவருக்கும் பரம சந்தோஷம். ‘பழம் ஒன்று பழுத்து தானே அதைப் பரமானந்தமாய் ருசிக்க வந்துவிட்டது’ என்றார். அன்று முதல் அவரோடும் அவர் இல்லாமலும் இந்த மலைப் பகுதியில் நானே என் தேடல் முடிந்த திருப்தியோடு இங்கு திரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இந்த நிம்மதிக்கு ஒரு அளவே இல்லை.

    ”என்ன வர்ஷினி.. போதுமா என் பூர்வ கதை.. இன்னும் என் கல்யாணத்திலிருந்து ஆரம்பிக்கட்டுமா?”

    அவள் தீர்க்காலோசனையில் ஆழ்ந்துவிட்டாள் போலும். திடீரென விழித்துக்கொண்டவள் கண்களில் கண்ணீர் வந்தது.

    நான் பதறிவிட்டேன். ”ஏனம்மா.. ஏன் அழுகிறாய்? என் கதை அழுகைக் கதையா என்ன.. ஜாலியாக கேட்க வேண்டிய கதை.. என்னால் யாருக்கும் கஷ்டமோ நஷ்டமோ இல்லை பார்த்தாயா.. இன்னொன்றும் தோணுகிறது. என் வீட்டவர்கள் ஏன் என்னைத் தேடி வரவில்லை என்றால் நீ சொன்ன கரோனாவும் காரணம் இருக்கலாம் இல்லையா. நான் எங்கோ ஜாலியாக இந்தப் பயமே இல்லாமல் இருப்பது நல்லது என்று அவர்கள் நினைத்திருக்க வாய்ப்புண்டு”.

    வர்ஷா கண்களைத் துடைத்துக்கொண்டே சொன்னாள். ‘மங்களா.. உங்க தேடல் இங்கே முடிஞ்சா மாதிரி என் தேடலும் இங்கேதான் முடியணும் நு எனக்கு ஆசி கொடுங்க..”

    ’அதுக்கு என்னம்மா.. என்னோட பரிபூரண ஆசி எப்போதும் உனக்கு இருக்கும். அதுக்கு எதுக்கும்மா அழுகை..?”

    அவள் சற்று நிதானித்தாள். நடை கொஞ்சம் தளர்ந்தது போல பட்டது. ”உன் தேடலுக்கு என் உதவி தேவைன்னா என்னால என்ன முடியுமோ அதைச் செய்யறேன் வர்ஷினி.. உன்னை நான் எப்பவுமே சிரிச்ச முகத்தோடதான் பார்க்கணும். உன் தேடல்னா அது என்ன வகையானது சொல்லேன்’

    அவள் என்னோடு கை கோர்த்துக் கொண்டாள். அந்தப் பிடிப்பில் ஏதோ ஆறுதல் தேடுவது போல எனக்குப் பட்டது. நிதானமாகப் பேசினாள்.

    ”நான் எனக்கு அம்மா இல்லேன்னு சொன்னேன் இல்லையா.. ஆனா அம்மா உயிரோட எங்கேயோ இருக்காங்க.. என் முகம் அவங்க பார்க்கலே.. அவங்க முகம் நான் பார்க்கலே.. எங்கப்பாவோட கொடுமை தாங்கமுடியாம நான் பிறந்தவுடனே அப்படியே கட்டில்ல என்னைத் தனியே விட்டுட்டு அவங்க போயிட்டாங்க.. நான் பெரிசா வளர்ந்து படிக்கறச்சேதான் எனக்கு விஷயம் எல்லாம் தெரிய வந்தது.”

    மறுபடியும் அவள் கண்களில் வழிய ஆரம்பித்துவிட்டது. துடைத்துக்கொண்டே பேசினாள்.. ”எங்கப்பா ரொம்பக் கொடியவர். அந்தக் காலத்துலேயே ஏரியா ரவுடியா பேர் வாங்கின அரசியல்வாதி.. எங்கம்மாவை பெண் கேட்டிருக்கார். அவங்கம்மா அப்பா பயந்துபோய் வேற யாருக்கோ பேசி கல்யாணம் வரைக்கும் வரச்சே கல்யாண மேடையிலே கத்தியால அந்த மாப்பிள்ளையை வெட்டிப் போட்டுட்டு எங்கம்மாவை இவர் தாலி கட்டியிருக்கார். அம்மாவோட வாழ்வே இவரோட ஒரு வருடம்தான்.. ரொம்ப கொடுமை பண்ணுவார்னு நான் நிறைய கேள்விப்பட்டுருக்கேன். என்னை வயத்துல சுமந்துகொண்டே குடிகாரரான இவர்  கொடுக்கற அடிகளையும் உதைகளையும் எப்படித்தான் அம்மா தாங்கினாளோ? ஐய்யோ.. நினைச்சுப் பார்த்துப் பார்த்து அழுவேன்.. அத்தோட மட்டுமா விட்டுருக்கார்? அது எலெக்‌ஷன் டைம். பரிதாப அலை தன் மேல அதிகம் விழணும்னு நான் பிறந்தவுடனே எங்கம்மாவை கொலை செய்ய பிளான் பண்ணிருக்கார். பொண்டாட்டி பிரசவத்துல போயிட்டாள்னா பரிதாபத்துல ஓட்டு வந்து விழுமாம். விஷம் கொடுக்கவேண்டிய அந்த நர்ஸம்மா மனசு வராம விஷயத்தை எங்கம்மாகிட்டே சொல்லி எங்கேயாச்சும் ஓடிப்போயிடுன்னு தப்பிக்க வெச்சுருக்காங்க. இவ்வளோ கொடுமையையும் எங்கம்மா எங்கப்பாகிட்ட அனுபவிச்சுருக்காங்கன்னா அவங்க தப்பிச்சது நல்லதுக்குதானே.. எங்கேயோ போயிட்டாங்க.. ஆனா எங்கன்னு எங்கம்மாவைத் தேடுவேன்.. தெரிந்த இடத்துல அவங்க உறவுக்காரங்ககிட்டே எல்லா இடத்துலயும் தேடியாச்சு. வேஸ்ட். எங்கப்பாகிட்டே அடிக்கடி கேட்பேன்.. அவர் கட்சிக்காரங்ககிட்டே சொல்றாமாதிரியே எங்கிட்டயும் சொல்வார். ‘உங்கம்மா வருவாம்மா.. எங்க போயிருப்பா.. நானும் எல்லா இடத்துலயும் ஆட்கள்கிட்ட சொல்லி வெச்சுருக்கேன்.. பார்ப்போம்” இப்படி சொல்லிச் சொல்லியே இந்த இருபத்து நாலு வருஷமா என்னை வளர்த்துண்டு வர்ரார். நடுவுல ஒருநாள் என்னை விட பத்து வயசு ஜாஸ்தியான பெண்ணைக் கூப்பிட்டுண்டு வந்தார். ’இவதான் உன் சித்தி’ அப்படின்னார். ஆனா அந்த சித்தி என் கூட இருந்து என்னை வளர்க்க விரும்பலே. அவளுக்குன்னு தனியா அவ ஊர்லயே பெரிய பங்களா கட்டிக்கொடுத்தார். இவர்தான் அடிக்கடி அங்க போயி தங்குவார். நடுவுல ஒரே ஒரு தடவை என்னையும் அழைச்சுண்டு போய்க் காண்பிச்சார். ஏதோ விருந்தாளி மாதிரி இருந்தாலும் என்னால அங்க தங்கமுடியலே. ‘அப்பா.. எங்கம்மா விஷயம் ஏதாவது முயற்சி பண்றீங்களான்னு கேட்டேன். முயற்சி பண்ணிண்டே இருக்கேன்மா.. அப்படின்னு வழக்கப்படி சொல்லிவிட்டு திரும்ப அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.”

    ’வர்ஷினி” என்று ஆதரவாக அணைத்துக்கொள்ளத்தான் முடிந்தது என்னால்.

    ”கொஞ்சம் மாசம் முன்னாடி எங்கப்பா எனக்கு இன்னொரு கொடுமையை செய்ய முன்வந்தார். அவர் கல்யாணம் பண்ணிண்ட பொண்ணுக்கு ஒரு தம்பி இருக்கானாம். அந்த தம்பிக்கு என்னைக் கல்யாணம் பண்ணப்போறாராம். சொத்தெல்லாம் ஒரே இடத்துல இருக்கும்னு அந்த பொண்ணு ஏதோ திட்டம் போட இவர் என்னைக் கேட்டுருக்கார். நான் முடியாதுப்பா’ன்னு சொன்னேன். ’சரிம்மா.. படிப்பு முதல்ல முடியட்டும், கல்யாணத்தை அப்புறம் வெச்சுப்போம்’னு சமாதானம் சொல்லி இருக்கார்,”.

    தேவி.. இது என்ன சோதனை.. எனக்கு இனிமையான வாழ்வைக் கொடுத்த நீ ஏன் இந்தக் குழந்தை வாழ்வை இப்படிச் செய்கிறாய். ஓ.. சினிமாக் கதை போல இருக்கு. ஆனா சினிமாக் கதை எல்லாம் ஹீரோ தான் ஜெயிப்பார். வில்லன் தோத்துப்போவான். இங்கே வில்லனுக்கு வெற்றி மேல் வெற்றி.. அவளிடம் ஆதுரமாகக் கேட்டேன், ”ஏன்மா.. உங்கம்மாவோட தம்பி தங்கைகள்னு யாருமே உனக்கு உதவலியா?”

    வெறுப்புடன் சிரித்தாள். ”அவர்களுக்கு என் மீது நல்ல அன்பு உண்டு. ஆனால் அப்பாவிடம் பயம். அவரை மீறிக்கொண்டு அவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. மேலும் எங்கப்பாவோட பொஸிஷன் ஏற ஏற அவங்க ரொம்ப பயந்துட்டாங்க. அவர்களுக்கு அம்மா இருக்குமிடம் தெரியும் என்கிற சந்தேகம் எப்போதும் என்னிடம் உண்டு. ஆனால் அவள் திரும்பிவந்தால் இவர்களுக்கும் கஷ்டம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. அதனால் அம்மாவின் விஷயத்தில் அவர்கள் கூட கண்டுகொள்ளாமல் எதுவும் பேசுவதில்லை.  விட்டுவிட்டார்கள். இவர்களும் சப்போர்ட் செய்யமுடியாத நிலையில் எங்கே என் அம்மா போயிருப்பாள்? தற்கொலை செய்திருப்பாளோ என்று கூட நினைத்துக் கொள்வேன். பிறகுதான் எனக்கு அந்தச் செய்தி கிடைத்தது. ஒரு ஐந்து ஆண்டுகளாக ஜாகேஷ்வரம் பகுதியில்தான் எங்கோ இருக்கிறாள் என்ற நம்பத் தகுந்த செய்தியை என் பெரிய மாமா, என் அம்மாவுக்கு மூத்த அண்ணன், மிக ரகசியமாக ஆனால் இன்னொருவர் மூலமாகச் சொன்னார். அதனால்தான் ஐந்து ஆண்டுகளாகவே ஒரு முகம் தெரியாத அம்மாவைத் தேடி அடிக்கடி இங்கு வருகிறேன்!”,.

    ’ஆனால் மங்களா.. இப்போது தேவி என் விஷயத்தில் கருணை காட்டத் தொடங்கிவிட்டாள் என்றுதான் நினைக்கிறேன். படிப்பு முடிந்தவுடன் கல்யாணம் என்று சொன்னார் அல்லவா.. கரோனா வந்து உதவி செய்தது. இப்போதைக்குப் பரிட்சை இல்லை. இந்த கரோனா இன்னொரு உதவியும் செய்திருக்கிறது. இந்த உதவி மட்டும் முழுமையடைந்தால் எனக்கு இந்தக் கொடுமைகளிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும். என்ன பார்க்கிறீர்கள். கொரோனாவினால் உதவியா என்றா கேட்க வருகிறீர்களா மங்களா? ஆமாம். ஒரே வீட்டில் இருந்ததால் அப்பாவுக்கு, அவர் இரண்டாம் மனைவிக்கு அந்த மனைவியின் தம்பிக்கு, அவர்கள் வீட்டு சமையல்காரனுக்கு, டிரைவருக்கு என எல்லோருக்கும் கரோனா வந்து இப்போது அத்தனை பேரும் ஆஸ்பத்திரிவாசம். அங்கே என் அப்பா தப்பிப்பாரா என்பது சந்தேகம்தான் அந்த தம்பியும்தான்.. அப்படித்தான் சொல்லறாங்க. கோடி கோடியாக கள்ளத்தனமா சொத்து சேர்த்தவங்க இலவசமா ஆயிரத்தெட்டு நோய் கூட வாங்கி வைத்திருக்கிறார்கள். குடிகாரக் கும்பல்கள்..”

    சோகமா வந்ததா இல்லை சந்தோஷமாகச் சொன்னாளா என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த கரோனாவைப் பற்றிப் பேசும்போது நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பேதம் இந்த தொத்து வியாதிக்குக் கிடையாது என்று முதலிலேயே சொன்னவள்தான்..

    ”’எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை அவர்களை மன்னிக்கவேண்டும் வர்ஷினி. உன்னை இத்தனை வருடம் வளர்த்திருக்கிறார் இல்லையா?’ அன்போடுதான் சொன்னேன்.

    ”இல்லை மங்களா! அவர் என்னை வளர்த்த காரணம் எல்லாம் பணம் சொத்து மேல் உள்ள பிடிப்புதான். என் பெயரில் உள்ள சொத்துகள் ஏராளம். எல்லாம் அவருடையதுதான். என் மேல் உள்ள அன்புக்கு அதுதான் காரணம். மகள் பாசம் எல்லாம் வெளிவேஷம். அவர் ஒரு கொடியவர் என்று நான் சொன்னதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டாம். கொண்ட பெண்டாட்டியைக் கொலை செய்யத் தயங்காதவர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும். இவர் அரசியல் கொடுமையைக் கேட்டு இன்னமும் ஜனங்கள் நடுங்குவார்கள்.  நான் அவரைப் பற்றியெல்லாம் சிந்தித்து என் மன அமைதியைக் கெடுத்துக் கொள்வதில்லை. ஏன் எப்போது அம்மா இவரிடம் அனுபவித்த கொடுமை விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வந்ததோ அன்றிலிருந்தே அவர் எனக்கு உறவில்லாதவர், யாரோ வேறு ஒரு கொடியவர்.. அவர் வெறுக்கத்தக்கவர் என்ற முடிவுக்கு நான் வந்தாயிற்று. அவர் உயிரோடு வந்தாலும், வராவிட்டாலும் எனக்கு அந்த குடும்பத்தைப் பற்றியோ அவரைப் பற்றியோ எவ்விதக் கவலையுமில்லை. அவரால் எனக்கு எந்தவித கஷ்டமும் தரமுடியாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் தேவியை வேண்டிக்கொள்கிறேன். அவள் உதவுவாள். அம்மா விஷயத்திலும் என்றாவது ஒருநாள் உதவாமலா போய்விடுவாள்?”.

    ”வர்ஷினி! என் அனுபவக் கதைக்கு முற்றிலும் மாறுபட்ட மிகக் கொடிய வாழ்வை இந்த சின்ன வயதில் அனுபவித்திருக்கிறாய். எனக்கு இந்த ஆறு மாத காலத்தில் நிறைய சாதுக்கள் பரிச்சயம் ஆனார்கள். பல சாதுக்கள் எதிர்காலத்தையும் போன பிறவிகளையும் அறிந்த பெரியவர்கள். ஆனால் நாம் கேட்காமல் அவர்களே சொல்லவேண்டும். கேட்டால் அதைப் பற்றிப் பேசமாட்டார்கள். விசித்திரமானவர்கள். ஒருமாதம் முன்பு ஒரு சாது என்னைப் பார்த்து தான் எங்கேயோ பார்த்தவளாய் தெரிகிறாய்’ என்றார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அவரை இதுவரைப் பார்த்ததில்லை என்று அழுத்திச் சொன்னேன். அதற்கு அவர் ‘அதற்கென்னம்மா.. இந்த ஜென்மத்தில் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் போன ஜென்மத்தில் பார்த்திருக்கிறாய்.. ஜென்ம ஜென்மப் பலன் மட்டுமே உன்னை இங்கே இழுக்கும்” என்றார். நான் கொஞ்சம் அதிசயப்பட்டேன். ஆனால் அதுதான் உண்மை என்பதையும் உணர்ந்தேன். தேவியின் மகிமையே வேறு. அவள் உனக்கு நிச்சயம் அருள்புரிவாள். என்னை நம்பு.. இன்றோடு உன் கஷ்டமெல்லாம் விலகட்டும்.’ என்று அவள் தலையில் கை வைத்துச் சொன்னேன். ஏனோ அப்படிச் சொல்லத் தோன்றியது.

    மலை இறக்கத்தில் கிழக்குப் பக்கமாக கீழே இறங்கமுற்பட்டோம். வர்ஷினி என் வார்த்தையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும். தான் ஒவ்வொருமுறை எப்படி அப்பாவை ஏமாற்றி ஜாகேஷ்வரம் ஓடி வருவதையெல்லாம் சிரித்துக் கொண்டே சொன்னாள். இவள் பெயரில் ஏராளமாக கள்ளப்பணங்கள் சேர்த்துப் போட்டிருப்பதையும் அவர் ஆடிட்டர் மூலம் தனக்கு ஒரு வங்கி அட்டை இருப்பதையும் சொன்னாள். ஆனால் தான் தேவைப்பட்டாலொழிய அந்த அட்டையை பயன்படுத்துவதில்லை என்றும் சொன்னாள்.

    ”வெளிநாடு சென்று படிக்க விருப்பம். அதற்கு வேண்டுமானால் இனி அதைச் செலவு செய்யலாம் என்றிருக்கிறேன். இந்தமுறை ஏதோ பிடிவாதம்.. என் தேடலுக்கு ஒரு முடிவு தெரியாமல் திரும்பக்கூடாது என்று எனக்குள் சொல்லிக்கொண்டுதான் புறப்பட்டேன். இல்லாவிட்டால் இங்கேயே மலைமேலாக ஏறிக்கொண்டே இருக்கவேண்டும். கீழே இறங்காமல் தேவியை எங்கேயோ மேலே உயரத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஏணிப்படியில் ஏறுவது போல அவளை நினைத்துக்கொண்டே ஏறிக்கொண்டே இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில் அம்மா கிடைக்கவேண்டும். அதன் பிறகுதான் இந்த எதிர்கால திட்டங்கள் எல்லாம்.”

    ”அதுவரை பணத்துக்கு என்ன செய்வாய்?

    ‘நீங்கள் என்ன செய்வீர்களோ அதையேதான் நானும் செய்வேன் மங்களா.. எனக்குத் தெரியும் இங்கே பணத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்பது.. என்னிடம் பாருங்கள்.. ஒரு பைசா இல்லை.. நகை இல்லை.. மொபைல் இல்லை.  எல்லாமே உங்களைப் போலத்தான். கிடைத்தால் சாப்பிடுவது.. இல்லையேல் பட்டினி கிடப்பது.. ஆனாலும் இங்கே என் வாழ்க்கை இனிமையாகத்தானே போகிறது.. நீங்கள் அருள் புரியுங்கள் ஆசீர்வாதம் செய்யுங்கள்.. ஒன்று அம்மா கிடைக்கவேண்டும், இல்லையேல் பரிபூர்ணமாக என் மனது இங்கேயே குடியேற விரும்பவேண்டும் என்று ஆசி கூறுங்கள்.’ என்று சட்டென குனிந்து என் காலைத் தொட்டாள்.

    நான் ஏதும் சொல்லாமல் மனதில் தேவியை நினைத்துக்கொண்டு அவளைத் தொட்டு ஆசிர்வதித்தேன்.. எனக்கென்ன தெரியும்? என் குருநாதருக்குத் தெரியும்.. அவரிடமே கேட்கலாமோ.. வேண்டாம் நான் அவரிடம் என்னைப் பற்றி ஏதும் கேட்காமலே அல்லவா அழைத்துக் கொண்டார்?

    மாலை மங்கும் சமயத்தில்தான் அந்த கிராமத்துள் நுழைந்தோம்.. இருட்ட ஆரம்பித்துவிட்டது.. மலையின் கிழக்குப் பக்கங்கள் சீக்கிரம் இருட்டிவிடும். மலையின் மேற்குப் பகுதியில் இந்நேரம் பளிச்சென்று இருக்கும். இயற்கையின் அழகை ரசிக்கவேண்டும். எங்கள் இருவரைக் கண்டதும் யாரோ ஒரு ஆதிவாசி சிரித்துக்கொண்டே நாங்கள் போகவேண்டிய இடத்தைச் சுட்டிக் காட்டினார். அவருக்கு எப்படித் தெரியும் நாங்கள் வருவது என்பது போல வர்ஷினி என்னைப் பார்த்தாள். இங்கு எதுவுமே அதிசயமில்லை என்பதாக நான் அவளைப் பார்த்தேன்.

    தூரத்தில் சங்கு ஊதும் சப்தம் கேட்து. இரண்டு நிமிஷம் மேலாக அந்த சங்கு ஊதிக்கொண்டே இருந்ததைக் கேட்டோம். அந்த சங்கூதல் வர்ஷினியை சமாதானப்படுத்தியதோ என்னவோ.. மிகவும் சந்தோஷப்பட்டாள்.

    ’மங்களா.. அந்த சங்கூதலைக் கேட்டீங்களா.. சாதாரணமா ஒரு நிமிஷம் தொடர்ச்சியா ஊதினாலே மூச்சிரைக்கும். நானும் முயற்சி பண்ணியிருக்கேன். ஒரு நிமிஷம் மேலே முடியலே.. யாரோ சாது இன்னும் ஊதிண்டே இருக்கார் பார்த்தீங்களா.. நல்ல சாதனா போல…. தினம் நான் ரெண்டு மணி நேரம் பண்றேன்.. இன்னும் நிறைய நேரம் பண்ணினா நானும் ஒருநாள் ரெண்டு மூணு நிமிஷத்துக்கு இந்த சங்கை ஊதுவேன்..”

    ”ஆமாம்மா! என் குருநாதர்தான் சங்கு ஊதுவார். நீ சொல்லறது சரி.. நான் இதுவரை அதெல்லாம் பண்ணியதில்லே. ஆனா சாதனா மாத்திரம் தினம் முடிஞ்ச அளவுக்குப் பண்ணனும்… இன்னிக்கு அந்த கிராமத்துல என்னோடு தங்குவே இல்லையா, நானும் நீயும் சேர்ந்து பண்ணலாம்”.

    நான் வர்ஷினியைப் பக்கத்தில் வைத்து அணைத்துக்கொண்டேன். சங்கு ஊதல் நின்றது. இன்னும் நடந்து கொஞ்ச தூரம் சென்றதும் அங்கே சிலர் கூடி உட்கார்ந்து நெருப்பு வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். தூரத்திலேயே நின்றோம். குருநாதர் கூப்பிடுவார்.. அப்போது போகலாம் என்று வர்ஷினியிடம் சொன்னேன்.

    வர்ஷினியின் கூரிய கண்களுக்கு அங்கே மூன்று சாதுக்கள் தென்பட்டதைத் தெரிவித்தாள். அதில் ஒருவர் பெண் சாது,  மற்ற இருவரும் ஆண் சாதுக்கள்’ என்றாள்.. ஆண் என்றும் பெண் என்றும் ஆன்மீகத்தில் அதுவும் இங்குள்ள சாதுக்களில் வேற்றுமை ஏது என்று பதிலுக்கு நான் சொன்னேன். என் காதில் வந்து மெல்ல வர்ஷினி ஓதினாள்.

    “அந்த இருவரில் யார் உங்கள் குருநாதர்?”

    நானும் மெல்லச் சொன்னேன். ’அவர்கள் இருவருமில்லை. மாதாஜிதான் என் குருநாதர், எனக்கு மட்டுமல்ல, மற்ற இருவருக்கும் கூட குரு”

    ”ஓ.. அப்போ சங்கு ஊதியது மாதாஜியா.. அவங்ககிட்ட இந்தப் பயிற்சியைக் கத்துக்கணுமே..” .

    இருளும் வெளிச்சமும் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று வெல்லும் அந்தத் தருணத்தில் இருளே வென்றாலும் மெதுவாக ஏற்றப்பட்ட நெருப்பு கொஞ்சம் வளர்ந்து எங்கள் நால்வரையும் மங்கலாகத்தான் முகம் பார்க்க வைத்தது. மாதாஜி எங்களை அருகில் அழைத்தார். முதலில் சென்றவள் மாதாஜிக்கும் மற்ற இருவருக்கும் நமஸ்காரம் செய்தேன். வர்ஷினியும் அந்த மூவரையும் என்னையும் சேர்த்து வணங்கிவிட்டு எழுந்தாள்.

    நான் அவர்களிடம் வர்ஷினியை அறிமுகம் செய்தேன். அன்னையைத் தேடிய அபலை இவளுக்கு அந்த மூவரின் ஆசிகளையும் அள்ளித் தரவேண்டுமென பணிவாக மெதுவான குரலில் கேட்டுக்கொண்டேன். சாதுக்கள் ஏதும் பேசவில்லை. அவளையும் சேர்ந்து அவர்களுடன் உட்காரச்சொன்னார்கள்.

    மாதாஜி சற்றே முறுவலித்தது எனக்குத் தெரிந்தது. அவர் வர்ஷினியைத் தன் பக்கத்தில் அழைத்துக்கொண்டார். வர்ஷினி ஆவலுடன் அவரிடம் ஒட்டிக்கொண்டாள். எனக்கு எப்படியாவது மாதாஜி வர்ஷினியின் மனவருத்தத்தைப், போக்க வழி செய்யவேண்டும் என்று மனதுள் என் தேவியை வேண்டிக்கொண்டேன். நான் தேடாமலே என்னைத் தேடி வந்து என் குருவாக அமைந்து என்னை ஆட்கொண்டவர்.. என்னையே நான் யார் என எனக்கு அறிமுகம் செய்தவர்.. என் தேடலுக்கும் முடிவு கட்டியவர் ஆயிற்றே.. இந்தச் சின்னப் பெண்ணின் தேடலுக்கும் ஒரு தீர்வு சொல்லவேண்டும். இதையெல்லாம் என் மனதுக்குள்தான் வேண்டிக்கொண்டேன். என் மனதில் இருப்பவர் இல்லையா.. அவருக்குத் தெரியும்..

    மாதாஜியின் கண்கள் அந்தப் பெண்ணிடமே நிலைகொண்டன. என்னை எப்படி முதல்முறை பார்த்தாரோ அதே காந்தப் பார்வை இப்போதும் அவரிடம் இருந்தது.

    என்னவோ தெரியவில்லை. நான் பிறந்தது முதல் எந்தக் கஷ்டமும் படாமல் வளர்ந்து எவ்வித பெரிய துன்பமும் இல்லாமல் திருமண வாழ்க்கையில் புகுந்து அதே போல எவ்வித துன்பமும் இல்லாமல் இதோ இங்கே வந்தாயிற்று. ஒருவேளை விதி தடம் மாறி  இந்த வர்ஷினி போன்ற நிலையில் நான் இருந்தாலும் சரி, அல்லது அவள் தாய் இருந்த நிலையில் நான் தள்ளப்பட்டிருந்தாலும் சரி, நான் எப்போதோ தற்கொலை செய்து உயிர் விட்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம் என மனதில் பட்டது. வர்ஷினியும் சரி, வர்ஷினியின் தாயும் சரி… எத்தனை உறுதி படைத்தவர்கள்.. தனக்கு தேவி அப்பேர்ப்பட்ட தண்டனையை வழங்கவில்லை.. ஆனால் இனியும் வர்ஷினிக்கு எந்தக் குறையும் வரவிடக்கூடாது. அதற்கு மாதாஜியின் அருள் அவளுக்குப் பரிபூரணமாக அமையவேண்டும்.

    என்ன இது, நாற்பது வருடங்களுக்கு மேல் தாம்பத்யத்தோடு வாழ்ந்த கணவர் மீதோ, பெற்றெடுத்த பிள்ளைகள் மீதோ வராத பரிவு இந்தப் பெண்ணிடம் தனக்கு ஏன் வரவேண்டும்?.. பற்று என்பதை மிகச் சுலபமாக தேவியின் அருளோடு அறுத்தெறிந்துவிட்டுத்தானே இங்கு வந்தேன். ஆனால் இந்தப் பெண்ணின் மேல் ஏன் பிடிப்பு அதிகமாகவேண்டும்.. இல்லை..இல்லை.. இவள் அனுபவித்த வேதனைகள் பரிதாபமாக மாறுகின்றன.. அது பந்தமாக மாற வழியில்லை என்று என் மனதுள் கூறிக்கொண்டேன்.

    மாதாஜி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டே என்னைப் பார்த்துப் பேசினார். ”இன்னும் சற்று நேரத்தில் பிரசாதம் வந்துவிடும். உண்டு விட்டு உன் சாதனாவை நீ ஆரம்பித்து விடு மங்களா.. உனக்கு தனியாக ஒரு குடிசை கொடுக்கச் சொல்கிறேன். இந்தப் பெண் இந்த இரவு என்னோடு இருக்கட்டும். என் வழக்கமான தியானம் முடிந்தவுடன் நான் என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்.. நீ கவலையே படாதே..!”

    ஆஹா,, குருநாதருக்குத் தெரியாதா என் மனத்தின் நினைவுகள். என் மனதுள் என்றும் இருந்து ஆட்டுவிக்கும் சக்தி மாதாஜி அல்லவா.. அவர் பாதம் தொட்டு வணங்கி நான் எழுந்து கொண்டேன். மற்ற இரு சீடர்களுக்கும் மாதாஜி விடை கொடுத்தார்,

    அடுத்த நாள் காலை எழுந்ததும் என் சாதனா முடிந்தநிலையில் மாதாஜியைக் காண அவர் குடிசைக்குள் நுழைந்தேன். அங்கு ஆச்சரியமான ஒரு நிலை. மாதாஜியின் மடியில் தலை வைத்து வர்ஷினி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

    மாதாஜி உறங்கவில்லை போல. ஆனால் இது அவருக்கு சகஜநிலைதான். மாதாஜியால் நாட்க்கணக்கில் கூட உறங்காமல் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். தேவியின் சாட்சாத் மனித உருவம் அவர். இரவு முழுதும் தூங்கவில்லையென்றாலும் அவர் முகம் மிகப் பிரகாசமாக அந்தக் காலை வேளையில் இருந்ததால் ஒரு பரவசத்தோடு அவர் முன் நமஸ்கரித்தேன். அவர் என்னைத் தன் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டார். மிக மெல்லமாகப் பேசினார்.

    ”வர்ஷினியை, அவள் எழுந்ததும் நீ ஜாகேஷ்வர் வரை அழைத்துச் சென்று விட்டு வா. செல்லும் வழியில் அவளோடு பேசு. இனி இவள் உன் சிஷ்யை என்று ஏற்றுக்கொள். அவள் உள்ளத்தில் இனி நீ எப்போதும் இருந்து அவளைக் கரையேற்ற நான் தேவியை வேண்டிக்கொள்கிறேன்”

    சந்தோஷமாகக் கேட்டேன்.  ”ஓ.. இனி வர்ஷினி இங்கேயே எங்காவது இருக்க வேண்டுமா.. அவள் அதைத்தான் என்னிடம் நேற்று கேட்டாள்.” மெதுவான குரலில்தான் கேட்டேன்.

    ‘இல்லை மங்களா! இவளுக்கு அந்தக் காலம் இன்னும் வரவில்லை. ஆனால் உனக்கு ஒரே ஒரு ரகசியம் சொல்கிறேன். இவளிடம் கூட சொல்லாதே.. இனி இவள் வாழ்க்கையில் கவலை என்பதே இருக்காது. உனக்கு எப்படி எல்லாம் சீராக உன் வாழ்க்கை இதுவரை சென்றதோ அதே நிலை இவளுக்கும் தொடரும். இவளும் வருவாள். இப்போதல்ல.. உன்னைப்போலவே தன் கடமைகளை முடித்துவிட்டு வருவாள். ஆனால் அடிக்கடி உன்னைப் பார்க்க ஜாகேஷ்வர் வருவாள். தவறாமல் பார்த்து இவளுக்கு சந்தோஷத்தைக் கொடு. போகும் வரை போகட்டும்.. அடுத்து நடப்பது அனைத்தும் தேவியின் கையில் இருக்கும்போது நமக்கேன் கவலை. நாமெல்லாருமே அவள் குழந்தைகள். நம் எல்லோருக்குமே அவள்தான் தாய்.”

    நான் கையெடுத்துக் கும்பிட்டேன். மாதாஜியின் கை தன் மடி மீது தலைவைத்து நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த வர்ஷினியின் முடிக்கற்றைகளை வருடியது.

    ’ஜீ! இவள் உங்கள் மடி மீது..” தயக்கமாய்தான் குருநாதரிடம் கேட்டேன். அவர் சிரித்தார்.

    ”இரவு முழுதும் பேசிக்கொண்டிருந்தோமா.. அவள் இனி என்ன செய்ய வேண்டும் என்று விவரமாக சொல்லி இருக்கிறேன். அழுதழுது ஓய்ந்திருந்தாள். அவளுக்கு சற்று நேரம் முன்புதான் உறக்கம் வந்தது போலும். என்னைக்  கேட்டாள். ’அம்மா ஒருமுறை உன் மடியில் தலைவைத்துப் படுக்கும் உரிமையைக் கொடு’ என்றாள். இதைக் கூட ஒரு பெற்ற தாய் செய்யாவிட்டால் எப்படி?.. வாம்மா.. வந்து படுத்துக் கொள்!’ என்றேன்.. ஆனந்தமாகப் படுத்தாள். உடனே உறங்கி விட்டாள். பார் அவள் கை என் கையை எப்படி இறுகப் பற்றியிருக்கிறது..”

    என் ஆச்சரியம் எல்லை கடந்தது.

    ”மாதாஜி! அப்படியானால் அந்த உத்தமத் தாய் நீங்களா? தேவி.. தாயே. உன் மகிமையை என்ன சொல்வது?”.

    மாதாஜியின் மலர்ச்சியான முகம் மேலும் ஒளி வீச வாயில் ஒரே ஒரு சிறு புன்னகை மட்டும் எனக்கு பதிலாய் வந்தது..

    Share
  • தோல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    தோல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    எப்போதும் போலவே சாம்பல் நிற சூட்கேஸை எடுத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கி அவசரமாக படுக்கையறைக்குச் சென்று மிகவும் இரகசியமாகப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பணத்தை சுவரில் ஒரு இரகசியமான இடத்தில் வைத்த பிறகே விஜய ராகவன் உடைமாற்றினான்.

    இனி அடுத்தது ஒரு குளியல்.

    வாட்டர் ஹீட்டர் ஆன்செய்து குளியலறையின் கண்ணாடியில் தெளிந்த பிம்பத்தைப் பார்த்து திருப்தியுடன் நிற்கும்போது சே………..’ இடது முதுகில் ஒரு சொரிச்சல். வலது கை நீட்டி அங்கே தொட்டுப் பார்த்தபோது சொரிய வேண்டும் போலிருந்தது.

    சொரிந்தான்.

    அதை அவ்வளவு பெரிதாக எடுக்கவில்லை.

    அடுத்தநாள் அதே நேரம் வலது முதுகில் சொரிச்சல் அனுபவப்பட்டு சொரியவேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. இடது பக்கத்தில் சொரிந்த இடமும் தீவிரமாக அரிக்க ஆரம்பித்தது. ரெண்டு இடங்களிலும் நகங்களால் சொரிய விஜயராகவன் கட்டாயப்படுத்தப்பட்டான். இருந்தாலும் அவன் அதை பெரிதுப்படுத்தவோ, மனைவியிடம் தெரியப்படுத்தவோ இல்லை. பிறகு தொடைகளிலும், மணிக்கட்டுகளிலும் சொரிச்சல் ஆரம்பித்தது.

    தினமும் பயன்படுத்தப்படும் சோப் அலர்ஜியாக இருக்கும் என்ற நினைப்பில் சூப்பர் மார்க்கெட் சென்று வேறுவகை சோப் வாங்கி உபயோகித்தான்.

    ஆனால் சொரிச்சல் குறையவில்லை.

    மனைவியிடமிருந்து அதை மறைப்பது கஷ்டமாக இருந்தது.

    “இதேதோ ஸ்கின் டிசீஸ்தான்………..” மஞ்சுளா கூறினாள்.

    ‘வாய்ப்பே இல்லை’. விஜயராகவனின் உடனே உள்ள மறுபடி இப்படிதானிருந்தது. உடல் தூய்மையில் அவனுக்கு அந்த அளவு கவனம் இருந்தது. ஹெல்த் க்ளப்பின் நிரந்தர வாடிக்கையாளன். ஆண்டுதோறும் தவறாமல் முழு ஹெல்த் செக்-அப செய்பவன். ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அக்கரை அதிகம். அப்படி ஒருவனுக்குத் தோல் வியாதி!. என்ன ஒரு எதிரான கணிப்பு.

    அவன் மனைவியைப் பழித்தான். அவளுக்கும் மருத்துவத்துக்கும் பெரிய உறவொன்றுமில்லை.

    மருத்துவர் ஆகவேண்டும்னு ஆசப்பட்டது உண்மைதான் ஆனால் பிளஸ்டு பாஸானால்தானே?.

    அடுத்த நாள் காலையிலும் அவன் ஹெல்த் க்ளப் போனான்.

    ஆபீஸீக்குப் போனான்.

    வேலை செய்யும் சைட்டுக்குப் போனான்.

    அதற்கிடையிலும் உடல் அரித்துக்கொண்டே இருந்தது. மற்றுள்ளவர்களின் கவனத்தில் படாமல் அரிப்பை அடக்க வேண்டியிருந்தது. அதனால் அவனுக்கு மிகவும் துக்கப்படவேண்டி வந்தது. தோல் நோய் நிபுணரைக் காணவேண்டும் என்று முடிவெடுத்தான்.

    சாதாரண ஒரு தோல் நோய் சிறப்பு மருத்துவர் மட்டுமல்ல கோசி வர்கீஸ் தோல் நோய் சம்பந்தப்பட்ட சில நூல்களின் ஆசிரியரும் கூட. பல தொலைக்காட்சிப் சேனல்களிலும் தோல் நோய் பற்றி விளக்குவது. போன்-இன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நோயாளிகளுடன் கலந்துரையாடுவது, சமகால வெளியீடுகளில் எழுதுவது எனப்பல நிலையிலும் சிறப்பாக விளங்குபவர்.

    தனியாக உள்ள தனது க்ளீனிக்கிலிருந்து டாக்டர் கோசி வர்கீஸ் விஜயராகவனை தீவிரப்பரிசோதனை செய்தார். நோயின் நிலைக்கேற்ப சிகிச்சைமுறை தீர்மானிக்கப்பட்டது. இரண்டு வாரத்திற்குப் பிறகு மீண்டும் பரிசோதனை.

    வீட்டிற்குத் திரும்பி வரும்போது விஜயராகவனின் கையில் மருந்துகளின் ஒரு பொட்டலம் இருந்தது. மஞ்சுளாவின் கேள்விக்கு, “டாக்டரைப் பார்த்தேன்” என்று சும்மா மூண்டுவிட்டு அவன் சூட்கேசுமாக படுக்கையறைக்குள் சென்றான். உடல் நன்றாகச் சொரிந்து கொண்டிருந்தது.

    இரண்டு வாரங்கள் முடிந்தது.

    விஜயராகவன் மீண்டும் ஒருமுறை கோசிவர்கீஸிற்கு முன்னால் வந்தான். மருந்துகள் முறையாகச் சாப்பிட்டபோதும் நோய்க்குக் கொஞ்சம் கூட மாற்றமில்லை. கொஞ்சம் கூடுதலாகிவிட்டதோ என்ற ஐயமும் உண்டு.

    “பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல” பரிசோதனைக்குப்பிறகு டாக்டர் கூறினார். தோல் வியாதிகள் பலதும், சில உதாரணங்கள் வழி டாக்டர் விளக்கினார்.

    பணச்செலவைப் பற்றி டாக்டர் குறிப்பாக உணர்த்தியபோது, “பணம் தனக்கு ஒரு பிரச்சனையே இல்லை” என்று விஜயராகவன் வெளிப்படையாகக் கூறினான். வங்கி சேமிப்புக்கணக்கு இருக்கு. வாடகை வரக்கூடிய ஃபளாட்டுகள் இருக்கு தென்னந்தோப்பிருக்கு, ஏலக்கா வயலும் இருக்கு.

    நமக்கு எதுக்கு இவ்வளவு பணம்னு கேட்கற மனைவியும் இருக்காள். அவன் அவ்வளவையும் மனதில் வைத்துக்கொண்டு தனது சொரிச்சலுடன் மருத்துவரை நேர்கொண்டான்.

    மருத்துவர் அவனுக்கு உதவ முழுத்தயாராக இருந்தார். ஆனால் அவன் பொறுமையிழக்கக்கூடாது. சரி அவன் தலை ஆட்டினான். டாக்டர் மருந்துகளின் சீட்டை தயார் செய்தார். அவன் சொரிச்சலுடன் விடைபெற்றான். பரிசோதனைத் தொடர்ந்தது.

    தனக்குக்கீழே வேலைசெய்பவன் அதற்குள் அவனுடைய மாற்றங்களைக் குறித்து அறிந்திருந்தான். அவர்களுக்குத் தெரியாமல் இருக்க அவன் முடிந்தவரை முயற்சித்தான். செயற்கையானப் பணிவுடன் அவனிடம் நல்லபேர் வாங்க அவனைப் பார்க்க வருபவர்கள் அனேகம் பேர். அவர்களிடமிருந்து தனது நோயின் தன்மையை மறைக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. நோய் ஒரு உறவுப்பகை போல அவனுடைய தோலுக்குக் கீழேப் பதுங்கியிருந்து

    அவனை முடிந்தவரை வேதனைப்படுத்தவும் அதில் சுயமகிழ்ச்சி அடையவும் செய்தது. சகிக்கமுடியாமல் அவன் சொரியும்போதுதான், அவை நாகரிகம் தெரியாத சிலர் வருவர். பிறகு அவர்கள் போகும்வரை சொரிவதை அடக்கிப்பிடிக்கும் அவஸ்தை! உச்சிமுதல் பாதம் வரை எரிச்சல்! புகைச்சல்!

    இதற்கிடையில் ஒருநாள் மஞ்சுளாவைப் பார்க்க அவளுடைய அப்பா வந்தார். அவள் குழந்தையுமெடுத்து அப்பாவுடன் சென்றுவிட்டாள். ஷிட்.

    அவன் தனியாக ஆனான். பால்கனியில் ஊஞ்சலிலிருந்து அவன் சொரிய ஆசைப்பட்டான். அங்கு உட்கார்ந்தால் அது வழியாகச் செல்பவர்களைப் பார்க்கலாம். மீன்வியாபாரி, தபால்காரர், கொரியர் சர்வீஸ் பையன். பால்காரன், செய்தித்தாள் போடுபவன், பள்ளிக்குழந்தைகள், வேசிகள், பிச்சைக்காரர்கள் எனப்பலரும் கடந்து போகின்றனர். அவர்கள் யாரும் தோல் வியாதிக்கு இரையாகவில்லை. ஏதோ ஒரு புராண கதாபாத்திரத்தைப்போல தன்னுடைய வியாதியை அவர்களில் யாருக்காவதுக் கொடுத்துவிட்டு இதிலிருந்து முற்றிலும் விடுபடுவதற்கான சித்தி (வரம்) கிடைத்திருந்தால் என்று விஜயராகவன் சொரிந்து கொண்டே சிந்தித்தான்.

    கூர்மையான நகங்கள் தோல்வழியாக அங்கும் இங்கும் சலிக்கும்போது உருவாகின்ற கடுமையான வேதனை கலந்த சுகம் உணர்வுகளில் எரிச்சலுடன் ஆழ்ந்திறங்கியது.

    Share
  • வொர்க் ப்ரம் ஹோம்

    வொர்க் ப்ரம் ஹோம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    “மே ஐ கம் இன்?”

    “வாங்க சம்பத், உட்காருங்க”

    “இட்ஸ் ஒகே. நான் நிக்கறேன் சார்:

    “பீல் அட் ஹோம்.”

    “நீங்க சொல்லும்போது, என் காதுல பீ அட் ஹோம்னு கேக்குது சார்”

    “புரியறது சம்பத்.”

    “சார், பதினெட்டு வருஷ செர்வீஸ் சார்”

    “பாக்காத செக்போஸ்ட் இல்லை. எவ்வளவு கேஸ்.”

    “…”

    “எவ்வளவு வக்காலத்து, எவ்வளவு பஞ்சாயத்து.”

    “…”

    “எதுக்கும் இப்ப அர்த்தம் இல்லை. யு ஹாவ் சென்ட் மீ அவுட்.”

    “என் கையில எதுவும் இல்லை சம்பத். அது நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவு. உங்களுக்குத் தெரியாதா? மூணு கிளைகளை மூடியாச்சு. ஒய்வு வயதைக் குறைச்சாச்சு. இருபது சதவீதம் சம்பளம் கட். எல் டி ஏ நிறுத்தியாச்சு. சிக்ஸ் டேஸ் எ வீக் இப்ப.”

    “சார். அத மாதிரி எனக்கும் குறைச்சு இருக்கலாமே சார்”

    “…”

    “ஒய் திஸ் பிங்க் ஸ்லிப்?”

    “அது என்னோட முடிவு இல்லப்பா?”

    “எதைக் கேட்டாலும் நீங்க பொறுப்பை ஏத்துக்க மாட்டீங்க சார். எனக்கு நீங்க தான் சார் பாஸ். பாக்கி நேரத்துல நீங்க ஹையரார்க்கினு சொல்வீங்க. இப்ப நீங்க தான் பதில் சொல்லணும்.”

    “சாரி சம்பத். என்கிட்ட பதில் இல்லை”

    “சார் யு ஆர் எஸ்கேப்பிங்?”

    “நோ நெவெர் . என்கிட்டே பதில் இல்லை.”

    “…”

    “எனி வே ஆல் தி பெஸ்ட்.”

    ஜி எம் கை கொடுத்த போது. அதில் சம்பத்துக்கு வலுவில்லை. பொத்தென கையை உருவிக்கொண்டார்.

    “நான் வரேன் சார்.” சர்ரெனக் கிளம்பிய சம்பத்தைக் கூப்பிட்ட ஜி எம், “என்னை நீ விஷ் பண்ணலயே?”

    “சார் வாட் டூ யு மீன்?”

    “நாளைக்கு என்னை ரிலீவ் பண்றாங்க.”

    Share
  • கோபால் பல்பொடி

    கோபால் பல்பொடி

    பாஸ்கர் சேஷாத்ரி

    “என்னம்மா கேஸ் இது?”

    “சின்ன பையன் சார். பல்பொடி எடுத்து தின்ன மேலே ஏறினவன் கீழே விழுந்துட்டான். பக்கத்துல்ல கை பம்ப் ஆணி வேற . கன்னத்தில குத்தி ஒரே ரத்தம்.”

    “எப்படா விழுந்தே?”

    “கார்த்தாலே சார்”

    “ஸ்கூலுக்கு போலயா?”

    “ஹால்ப் யியர்லி சார்.”

    “டாக்டர்னு சொல்லு” – சிஸ்டர்

    “ஏன்டா பத்து மணிக்கா பல் தேய்ப்பே?:

    “டாக்டர். அவன் கோபால் பல்பொடி திங்க மேல ஏறினான்”

    “என்ன க்ரூப் சிஸ்டர்?”

    “ஏ பாசிடிவ்”

    “பேரு என்ன? கோபாலா?”

    சிரிக்க முடியவில்லை. “பாஸ்கர் சார்.”

    “பேசவே முடியலே”

    “ரொம்ப வலிக்குதா?”

    “ஆமா டாக்டர்?”

    “சரி” என்று முதுகை தட்டினார்.

    “ஸ்டிச்சுங்குக்கு சொல்லு. லோக்கல் தான். டோஸ் பாத்துக்கோ.:

    “சரிங்க டாக்டர்”

    டாக்டர் எழுந்து போகும் போது தலையை கோதி விட்டு “குட் பாய்” என்றார்.

    “இதென்ன பெட் பூரா ஒரே உடச்சகடலை?”

    “அதெல்லாம் பையன் டிராயர் பாக்கெட்லேந்து கொட்டித்து டாக்டர்.”

    “ப்ரைட் பாய்.”

    “டாக்டர் இனிமே சாப்பிட முடியாதா?”

    “சாப்பிடலாம். பல்பொடி இல்லை.”

    உன் வயசுல எனக்கும் கோபால் பல்பொடி பிடிக்கும் என்றார் .

    சிரித்தேன். வலித்தது. ஆனாலும் சிரித்தேன்.

    Share
  • பீ. எஸ். ராமச்சந்திரன் சார்

    பீ. எஸ். ராமச்சந்திரன் சார்

    பாஸ்கர் சேஷாத்ரி

    இது நடந்து சுமார் நாற்பது வருஷங்கள் இருக்கும்.

    அவர் பீ. எஸ். ராமசந்திர அய்யர். எனக்கு பள்ளியில் ஆங்கில வாத்யார். அச்சு போல கையெழுத்து. நடுத்தரமான உசரம். வெள்ளை கதர் ஜிப்பா. வேட்டி– அதனை துவைத்தால் காய்வதற்கே ரெண்டு நாளாகும். கொஞ்ச நாள் தாச்சி அருணசாலம் தெருவில் இருந்தார். ரொட்டிக்காரன் தெரு என்றால் பழைய மயிலாப்பூர் வாசிகளுக்கு தெரியும்.

    சமயத்தில் வகுப்புக்கு பிரம்பு குச்சி கொண்டு வருவார். அவ்வப்போது மாறும் என்றால் எத்தனை கையை பதம் பார்த்திருக்கும். அவரை பார்த்தால் கொஞ்சம் பயம் வரும். அந்த அடிக்காகா அல்ல. அவர் கண்கள். கொஞ்சம் பெரிசு. அதை பார்த்தால் தப்பு செய்யாதவன் கூட மன்னிப்பு கேட்பான். கொஞ்சம் அவ்வபோது கண்களில் நீர் கசியும்.

    மகா கோபக்காரர் – என்னை போல மக்கு எல்லாம் நாலாவது வரிசை.. என் நேரம். அந்த வரிசைக்கு தான் அவர் கண்கள் போகும். சரியாக சிக்குவேன்.

    நோட்டில் எழுதாமல் எதோ வரைந்ததை பார்த்து என் காதை பிடித்து அடிக்கடி திருகுவது விசேஷம். எனக்கு தொன்னை காது. எந்த குட்டி கைக்கும் என் காது லாவகம், அதுவும் அவர் திருகும்போது நானே பிள்ளையார் மாதிரி சுற்றுவேன். அந்த சுற்று சுற்றினால் தான் வலி கொஞ்சம் குறையும். ஆனால் அப்போது அந்த திருகு புரியாது. மூன்று மணி நேரம் கழித்து வலிக்கும்.

    அவர் வீட்டை கண்டு பிடித்து விட்டேன். எனக்கு தெரிந்த தாடி கண்ணனை பிடித்து விலாசம் வாங்கி இதோ அவர் முன்னே ….

    “சார் … நான் உங்க பழைய மாணவன்..” அவர் காதில் விழவில்லை.

    மெல்ல அவர் பக்கம் உரக்க சொன்னேன் “…..ஐ அம் யுவர் ஓல்ட் ஸ்டுடென்ட் ..”

    கட்டிலில் அமர்ந்திருந்தார். கொஞ்சம் தெம்பு இருந்தால் வகுப்பு எடுக்க தயாராகி விடுவார். கொஞ்சம் சிரித்தார். அவர் கைகளை ஆதரவாய் பற்றினேன். மொத்த எலும்புகளும் நரம்புகளும் தெறித்து கொண்டு வெளி வர துடிக்கும் கனிந்த வாழ்க்கை.

    “யு டுக் இங்கிலீஷ்…” என் ஆங்கிலம் சரியா.. கொஞ்சம் பயமாக இருந்தது. திரும்பவும் காதை பிடித்து கிள்ளுவாரோ?

    “யு வேர் மை இங்கிலீஷ் டீச்சர் டூ … சாரி … அய் வாஸ் யுவர் இங்கிலீஷ் ஸ்டுடென்ட் …..”

    மெல்ல அவர் பாதங்களை பிடித்து அமுக்கி விட்டேன் . எப்படியா உலகில் அன்பை சொல்லுவது?

    அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவருக்கும் என்னை போல நெகிழ்ச்சி இருந்திருக்குமோ என தெரியவில்லை .

    எத்தனை காது திருகல்கள். எவ்வளவு பிரம்படி இந்த கரங்களால் …

    எத்தனை சாக்பீஸ் எழுத்துக்கள் இந்த கருப்பு திரையில்?

    கொஞ்சம் இறுக்கமான அந்த வீடு திடீரென மங்களமாய் ஆனது.

    “நான் உங்களையெல்லாம் கொஞ்சம் ஸ்ரமபடுதிட்டேன்..” என் மன்னிப்பு.

    “அதெல்லாம் ஒன்னுமில்லை …….”

    “தாத்தாவை பார்க்க வந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்…..”

    “ரெண்டு மாசத்தில் அவர் திருநக்ஷதரம் வரது. அவசியம் சொல்றேன். நீங்க வாங்கோ.”

    “சாருக்கு இப்ப என்ன வயசு?”

    “நவம்பர் தாண்டினா நூத்தி மூணு …….”

    நான் பள்ளியில் படிக்காது போனது, கிளாஸ் கட் செய்தது, மக்காய் இருந்த நாட்கள் எல்லாம் அவரை பார்த்த பின் தப்பாக படவில்லை.

    அவர் எனக்கு மந்தவெளி பாபநாசம்.

    (கடந்த வருட ஆரம்பத்தில் அவர் காலமானார்)

    Share
  • வனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    வனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    மாலை வேளை

    டௌனில் உள்ள மிகவும் நல்ல பேக்கரியிலிருந்து தனியாக செய்யச்சொல்லிச் தயாரிக்கப்பட்ட பெரிய கேக் நாலு மெழுகுவர்த்திகளுடன் மேசை மேல் இருந்தது.

    மின்னுகின்ற ரிப்பன்களும், பல வண்ணங்களிலும் வடிவங்களிலுமுள்ள பலூன்களும் ஆங்காங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.

    நாங்க எங்க பொண்ணோட பிறந்த நாளக்கொண்டாடறோம்.

    விருந்தினர் யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் முன்கதவு சாத்தவில்லை. அறையின் பலூன்களையும், ரிப்பன்களையும் அசைத்துக்கொண்டு  இளம்காற்று மட்டும் அடிக்கடி வீசியது.

    வீடு சிறியதுதான். ஆனால் எங்க நாலுபேருக்கு வசிக்க இதைவிடப் பெரியவீடு தேவையில்ல. அலீனா வாழ்க்கையில் திருப்தியடைந்தாள். கிறிஸ்ஸேக்ரட், ஃபார்ட் ஸ்கூலில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறான். ஸ்வீட்டி அதற்குப் பக்கத்தில் உள்ள கிண்டர்கார்டனில் படிக்கிறாள். அவர்களுடைய படிப்பை கவனித்துக்கொள்வது அலீனாதான். என்னோட வேலயெல்லாம் அவங்களக் கூட்டிட்டு டௌனுக்குப் போவதோ, பீச்சில் போய் உட்காருவதோ, சினிமாவுக்குக் கூட்டீட்டுப் போவதோதான். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் எனக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கும். அன்றைக்கு நான் சீசன் டிக்கெட்டையும் எடுத்திட்டு இரயில் நிலையத்துக்குப் போகவேண்டிய அவசியம் இல்லை. அதற்காக வெயிலின் சூடு வரும்வரை படுத்து உறங்கவும் மாட்டேன். நாங்கள் குர்பானாவுக்காக பத்ராசனப் பள்ளிக்குப் போவோம். அது முடிந்தால் இறைச்சியோ மீனோ வாங்க டௌனுக்கு நான் மட்டும் போவேன். சாப்பாட்டுக்கப்பறம் நான் கொஞ்சநேரம் தூங்குவதும் ஞாயிற்றுக்கிழமைதான். ஞாயிற்றுக்கிழமையை நானும், அலீனாவும் மக்களும் ஒரே போல் விரும்புவோம். அன்று கடவுள் இக்குடும்பத்தை ஆசீர்வதிக்கவும் தூய்மைப்படுத்தவும் செய்வார்.

    இந்த வருடம் ஸ்வீட்டியின் பிறந்ததாள் ஞாயிற்றுக்கிழமையில் வந்தது ஒரு அதிர்ஷ்டம்தான். குர்பான முடிந்து நான் போய் ஒரு சேவல்வாத்தை வாங்கிவந்தேன். சைக்கிளில் மீன்கொண்டு வருகின்ற டொமினிக்கிடமிருந்து திருத மீனும் நெத்தலியும் வாங்கினோம். மீன்வறுவல் போலவே கூர்க்கையின் (கேரளாவில் சமைக்கப் பயன்படுத்தப்படும் கிழங்கு வகை) வறுவலும் எங்க அனைவருக்கும் பிடிக்கும். கூர்க்கையை தோல் களைந்து பாகப்படுத்தியது நானும் மக்களும்தான். அலீனா வாத்தையும், மீனையும் எங்களைத் தொடவிடவில்லை.

    உணவிற்கு முன்பாக அலீனா வைன் க்ளாஸ்களில் சிவப்பு திராட்சை ரசம் தந்தாள். வைன் டம்ளர்களை உயர்த்தி நாங்கள் இருவரும் பாணீய உபசாரம் செய்துகொண்டோம்.

    சாப்பிட்டு முடிச்சு நா கொஞ்சம் தல சாய்ச்சே. மக்கள் விளையாடீட்டிருந்தாங்க. அவங்ககிட்ட அலீனா வெளில எங்கயும் போகக்கூடாது என்றாள். பிறகு அவளும் மதிய தூக்க மயக்கத்திலாண்டாள். மயக்கத்திற்கிடையிலும் ஏதோ சில சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது.

    உறக்க மயக்கம் தீர்வதற்கு முன்பு பேக்கரி வேலைக்காரன் ஒருவன் பிறந்தநாள் கேக்கும் எடுத்துக்கொண்டு வந்தான்.

    மாலையானது.

    குழந்தைகள் மாலைப்பொழுதிற்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.

    அவர்கள் புதிய ஆடை அணிந்தனர். அவர்களுடைய விளையாட்டும் சிரிப்பும் வீட்டை முழுவதும் உற்சாகப்படுத்தியது. பலூனும் வண்ண நாடாவும் வைத்து அவர்களே அறையை அலங்கரித்தனர். நானும் அலீனாவும் அவங்களோட ஒவ்வொரு சலனங்களையும் ஒவ்வொரு விளையாட்டுகளையும் பார்த்து சந்தோஷப்பட்டோம்.

    மெழுகுவர்த்தி ஊதி அணைப்பதற்கும் ஸ்வீட்டிக்குப் பிறந்ததாள் வாழ்த்துகள் கேட்டு கேக் வெட்டுவதற்கான நேரம் நெருங்கியது. பிள்ளைகள் அதற்காகத் தயாராயினர். அலீனா மெழுகுவர்த்தி பத்த வைத்தாள். ஸ்வீட்டி அதற்கு நேராகக்குனிந்தாள்.

    என்னோட தொண்ட வரளுது, நெஞ்சு வலிக்குது. அதொரு கெட்டக்கனவாக இருக்கட்டுமென்று நிம்மதியடையலாம் என்று ஆசைப்பட்டு சுற்றும் முற்றும் பார்க்கும்போது காண்பது சிதறிக்கிடக்கின்ற கேக் துண்டுகள், உடைந்த பலூன்கள், விழுந்து கிடக்கின்ற  ரிப்பனுகள்… பிறகு ஏதோ துவம்ச மிருகத்தினுடையது போன்ற மணம்.

    வீட்டுக்குள்ள அவன் விரிச்சுப்புடிச்ச கத்தியை கையிலேந்தி பாய்ந்து வந்தான். கடுமையான ஒரு அலறல் முழங்கியது. என்ன பண்றதுன்னு தெரியாம நான் முழிச்சே அலீனா பயந்து நடுங்கிய மக்களைச் கட்டிப் பிடித்திருந்தாள்.

    “யா… ர… து?” ………………நான் விக்கி விக்கிக்கேட்டேன்.

    அவன் கத்தியை என் கழுத்தில் வைத்து அதன் நுனியை தொண்டைக்குழியில் ஆழ்த்தி நசுக்கினான். ரத்தமே வந்திருக்கும்.

    “பேசாம போய் இருக்கறப் பணத்த எடுத்திட்டு வா!”. அவன் மிரட்டினான். நான் உதவுவோரற்று பின்னால் நகர்ந்தேன். அவன் கத்தியை அலீனாவுக்கு நேராகப் பிடித்தான்.

    “செயினயும் கம்மலும் கழட்டு. இந்தக் கொழந்தையோடதயும்…”

    ஸ்வீட்டி காற்றில் ஆடும்  இலைபோல நடுங்கிக்கொண்டிருந்தாள்.

    “ம்ம்… சீக்கிரம்…”

    அவன் அவசரப்படுத்தினான்

    “மறுபடியும் வருவே………..”

    சுட்டெரிக்கின்ற ஒரு பார்வையை அலீனா மீது பதித்துவிட்ட அவன் சொன்னான். அவள் பயந்து வெளிறினாள். ஏதோ வதை செய்யும் விலங்கின் வாசத்தைப் போன்ற கடுமையான வாசத்தை அறையில் விட்டுவிட்டு அவன் வேகமாக வெளியில் நடந்தான்.

    Share
  • கருப்பு வெள்ளை (சிறுகதை)

    கருப்பு வெள்ளை (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு பின்னர் அந்தப் புகைப்பட நிலையத்திற்குள் நுழைந்தேன். அன்று இருந்த அதே வாசனை. உள்ளே பெரியவரின் படம், கருப்பு வெள்ளையில். பார்த்துக்கொண்டே நின்ற போது அவர் மகன் “வாங்கோ” என்றார். பெரியவரே உள்ளே சென்று சின்னவராகத் திரும்பியது போல ஒரு தோற்றம்.

    “ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கிறோம். இந்த ஊர்தானா?” எனக் கேட்டார்

    “ஆமாம்” என்றேன்.

    “அன்னிக்கு பார்த்த மாதிரியே இருக்கு ஸ்டுடியோ” என்றேன்.

    “இது எங்க சொத்து. அவர் விட்டுச் சென்ற எதிலும் நாங்க கை வைக்கவில்லை. இந்த ஸ்டாப்ளர், போன் எல்லாம் அப்பிடியே இருக்கு. புது போன் ஐந்நூறு ரூபாய். ஆனா நான் பழசை ரிப்பேர் பண்ணி இன்னிக்கும் வச்சிருக்கேன். சில பேர் கிண்டல் பண்றாங்க. நான் அதைக் கண்டுக்கிறதில்ல. கிட்டத்தட்ட இந்த சின்ன ரூமுக்கு எங்க வயசு.”

    “ஆமாம். டைம் மிஷின்ல பின்னாடி போற மாதிரி இருக்கு. இங்க தான் அப்பாகிட்ட பாஸ்போர்ட் எடுத்துண்டு  கல்லூரியில் சேர்ந்தேன். ரெண்டு நாள் கழிச்சு பஸ் பாஸுக்கும் வந்தேன். அன்னிக்கு இருந்த அதே வாசனை. இன்னிக்கும் இருக்கு. எப்படி இதைப் பராமரிக்கிறீங்க?”

    “நாங்க ஒன்னும் செய்யாம இருந்தால் அதுவே நல்ல விஷயம். எந்த ஒரு மாற்றமும் பழசைக் குலைச்சுப் போட்டுடும்.”

    “நீங்க நவீனத்துவத்துக்கு எதிரானவரா?”

    “இல்லை சார். ஆனா அது இங்க வேணாம்.”

    “ஏன் சார்?”

    “எங்க அப்பா. அவர் நினைவை போற்ற எங்களால் முடிந்த அளவு சேவை – எல்லாமே இங்க எங்க அப்பா தான்.”

    “இங்க பாருங்க” என்றார் .

    சின்ன கண்ணாடிப் பெட்டியில் அவர் போட்ட மூக்கு கண்ணாடி, கட்டிய வேஷ்டி, பொடி டப்பா, ரிஸ்ட் வாட்ச்.

    “எப்படி சார் இந்த அர்ப்பணிப்பு. எனக்கு எங்க அப்பா திவச தேதியே நினைவில்லை.”

    “ரொம்ப பெரிய விஷயமில்லை சார். எனக்குப் பணம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். இது எல்லாமே இயல்பாக வந்துவிட்டது.”

    “ஆனாலும் இது பெரிய விஷயம்தான்” என்றேன் .

    “இந்தப் பாராட்டு கூட எங்க அப்பாவுக்குத்தான் போய்ச் சேரணும். அவர் ரொம்ப எளிமை. கடைசி வரைக்கும் சைக்கிளிள்தான் போவார் – வருவார்.”

    கை கொடுத்தேன். அப்பாவைப் போல இவருக்கும் அதே தொளதொள பேண்ட். ஒரு வேளை இது அவர் அப்பா உடுத்தியிருந்ததாகக் கூட இருக்கலாம்.

    வெளியே வந்த பிறகும் அந்த பவுடர்  வாசனை போகவில்லை.

    Share
  • இறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    இறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல ஆசிரியர்: ஸ்டான்லி
    மூல மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

    மரணத்தின் ஈரம் முகத்தில். நான் மீண்டும் மீண்டும் உமிழ்ந்து ஈரத்தை அதிகப்படுத்தினேன். இரண்டு விபத்துகளில் மரணத்தைத் தோற்கடித்த ஆஜானுபாகுவாக நின்ற எனக்குப் பொன்னாடையும் பொருளும் பரிசாகத் தர முகமில்லாத கடவுள் கடந்து வந்தார்.

    மருத்துவமனை படுக்கை அறையில் ஒருமுறை நான் இறந்து கிடந்தேன். ஓ மன்னிச்சிருங்க. மரத்துக் கிடந்தேன். நினைவுகளைப் புதிதாகப் படைத்துக் கொண்டிருந்தேன்.

    கடவுள் விருந்தாளியாகக் கட்டிலுக்கருகில் வந்தபோது நான் ஆச்சர்யப்படவும், ஆதரவாக அவரைப் பார்த்து அருகிலுள்ள இருக்கையில் உட்காரவும் வைத்தேன். நான் அவரைப் படுக்கையில் அமர்த்தவில்லை. அது என் மனைவிக்கு மட்டும் உரிமையானது.

    பொன்னாடையும் பொருளும் எனக்குக் கொடுத்துவிட்டு துக்கத்துடன் அவர் செல்லுகையில் கட்டிலுக்கடியில் அவர் மறைத்து வைத்த பழையதும் உடைந்ததுமான முகக் கவசத்தை அவர் குனிந்தெடுத்தார். நான் நன்றியை வெளிப்படுத்தக் கையெடுத்து வணங்கியதும் அவர் என் இடுப்புக்குக் கீழே போர்த்தியிருந்த சிவப்புப் போர்வையைத் தூக்கிப் பார்த்தார். வலது காலின் தொடை எலும்பிற்கு கீழ் ஒன்றுமே இல்லாதிருப்பதைக் கண்டதும் முகக் கவசததின் இரண்டு துவாரங்கள்  வழி கொஞ்சம் நீர் சொரிந்தது.

    கையிலும் நெற்றியிலும் காய்ந்து கொண்டிருக்கும் காயங்களுடன் மனைவி கட்டிலுக்கருகில் வந்து நின்று அழுதாள். மருந்தின் வாசம் நிறைந்த சூழலில் கணவரின் ஆயுளுக்காகத் தாலியைக் கையில் பிடித்துக்கொண்டு ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். ஒரு சுபமுகூர்த்தத்தில் தர்ப்பைப் புற்கள் தூவி என் மனைவியாக உறுதிப்படுத்தப்பட்டது இந்த உறவு. பிறகு ஏன் இப்படியாயிற்று?

    துக்கம் விசாரிக்க வந்த, மனைவியைத் தேடி வந்த பெண்குழுக்கள், கட்டிலுக்கருகில் வரிசையாய் வந்து நின்றனர். குழுவில் குட்டையான ஒருத்தி முண்டியடித்துக்கொண்டு என் மனைவியின் கண் பார்வையில் படுமாறு வந்து நின்றாள். திரும்பச் செல்லும் போதும் பஸ் பயணச் செலவை மனைவியே ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை என்று வேண்டிக்கொண்டாள். மனைவி  மூக்கைச் சீந்தியதும் அனைவரும் அதேபோல செய்தனர். நான்காவதாக நின்றவள் வலதுகையால் மூக்கைச் சீந்தியதும், மூன்றாவதாக நின்றவளின் பார்வை பட்டதும் இடது கைவிரலால் மூக்கைத் துடைத்தாள். அவள் அமைதியானாள். இந்தத் துக்கங்களைப் பார்க்க முடியாமல் நான் கசடில்லாத தூய வானத்தைப் பார்த்துச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். வானத்தில் தூய அழகு மட்டும் நிலைத்தது.

    என் கவனத்தைத் திருப்பவும் மனைவியை மகிழ்விக்கவும் மீண்டும் உரையாடல் தொடங்கியது.

    ஸ்கூட்டர்ல போனதனாலதா இப்படியொரு விபத்து ஏற்பட்டுச்சு.  சைக்கிள்ல  போயிருந்தா இப்படி நடந்திருக்காது. ஒரு வேளை தலை மட்டும் இழந்திருக்கலாம். அது இதைவிட பரவால்லையே. மாதக் கணக்கில் மருத்துவமனைல படுக்க வேண்டியிருந்திருக்காது. சாலையில இவ்வளவு ஆழத்தில குழி தோண்டக்கூடாதுதா. பைப்பு போடணும்னா வானம் வழியா போட்டிருக்கலாமில்ல. கான்ட்ராக்ட் எடுத்தவனுக்கும் உதவணும். கார்ப்பரேஷனோட ஊழல நிறுத்தணும். மனைவிக்கு நெற்றியிலும் கையிலும் அடிபட்டதிலும் வருத்தமிருந்தது. அவளுடைய தொடைக்குக்கீழே கால் இருந்ததிலும் போராட்டக்காரர்களின் தொண்டை இடறியிருக்கணும். இறுதி யாத்திரையைக் கொண்டாட முடியாமல் போனதில் வருந்தி, போராட்டக்காரர்கள் சென்றனர்.

    அவரவருடைய இறுதி யாத்திரைக்கான தாகத்தோடு சிந்தித்துக்கொண்டு கிடந்தேன்.

    “திடீர்னு இது கைக்கடியில வெச்சு நடக்க கஷ்டமாதா இருக்கும். நல்லாப் பழகணும்”

    பச்சை அறையில் ரசிகர்களின் கூட்டம். பாராட்டு மலைக்கு நடுவில் மனசாட்சிகளின் நுனிகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அடர்த்தியான பௌடரை கலைக்கப் பூசப்பட்ட தேங்காய் எண்ணெய், உலர்ந்த துணியால் அழுத்தித் துடைத்தபோது முகம் வலித்தது. தொலைவிலிருந்து வந்த ரசிகர்களுக்குப் பணம் கொடுத்துச் சரியான நேரத்தில் அவர்களைத் திரும்ப அனுப்பிவைக்க வேண்டுமென்ற அறிவிப்பு மீண்டும் மீண்டும் குழுவினரால் ஒலிபரப்பப்பட்டது. வேகமாகக் கிளம்பியபோது நண்பர்கள் எப்போதுமுள்ள பார்ட்டியின் விஷயத்தைக் கூறித் தடுத்தனர். மனைவி என்ற கம்பார்ட்மென்ட் உடன் இருப்பதைக் கூறினர். மனைவியின் முகம் எதிர்பார்த்த அளவிற்குப் பொலிவுடையதாகத் தெரியவில்லை.

    ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபோதும். கொஞ்ச தூரம் சென்ற போதும் மனைவி ஒன்றும் பேசவில்லை. தேவையில்லாமல் வேணும்னே போட்ட பிரேக்கில பின்னால தள்ளி உட்கார்ந்திருந்த மனைவி நெருங்கி வந்தாள். அப்போ மெல்ல கேட்டேன்.

    ”இன்றைய நடிப்பு எப்படி இருந்துச்சு.?”

    மனைவியின் திடமான மௌனம்

    “ஓ இப்படியொண்ணும் இனிமே நடிக்க வேண்டாம். கண்ணும் காலும் இல்லாம. காலில்லாம தடி  ஊன்றி ஸ்டேஜ்ல வந்ததும் பதறிப் போச்சு…….

    என்னுள் ஏதோ உணர்வு வெளிப்பட்டது.

    “ஒரு காலு போனா என்ன, நடிப்பு நல்லா இருந்துச்சில்ல. முதல் பரிசும் கிடச்சிதில்ல”

    ஒரு சரக்கு லாரியின் தீக்கண்கள் என் கண்களை இருட்டாக்கியது. முன்னால் ஒரு பெரிய குழி இருந்ததோ……..

    ஒன்றுமே நினைவில்லை…………….

    கண்கள் திறந்தபோது மருத்துவமனை கட்டிலில் கருநாக்கால ஒண்ணும் சொல்லாதீங்க மூஸண்ணா நீலிக்கே அறிவுரை கூறுவது போல.


    ஆசிரியர் குறிப்பு

    கொச்சியில் பிறந்த மலையாளியான ஸ்டான்லி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நடிகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல துறைகளில் கால்தடம் பதித்தவர். பதினான்கு மொழிபெயர்ப்பு நூல்கள் உட்பட இருபது புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார். கோவை மலையாள சமாஜத்தின் குட்டன் நாயர் நாடக விருதை ஏழு முறை பெற்ற இவர், நல்லி திசைஎட்டும் விருது, நாராயணகுரு விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    Share