பீ. எஸ். ராமச்சந்திரன் சார்
பாஸ்கர் சேஷாத்ரி
இது நடந்து சுமார் நாற்பது வருஷங்கள் இருக்கும்.
அவர் பீ. எஸ். ராமசந்திர அய்யர். எனக்கு பள்ளியில் ஆங்கில வாத்யார். அச்சு போல கையெழுத்து. நடுத்தரமான உசரம். வெள்ளை கதர் ஜிப்பா. வேட்டி– அதனை துவைத்தால் காய்வதற்கே ரெண்டு நாளாகும். கொஞ்ச நாள் தாச்சி அருணசாலம் தெருவில் இருந்தார். ரொட்டிக்காரன் தெரு என்றால் பழைய மயிலாப்பூர் வாசிகளுக்கு தெரியும்.
சமயத்தில் வகுப்புக்கு பிரம்பு குச்சி கொண்டு வருவார். அவ்வப்போது மாறும் என்றால் எத்தனை கையை பதம் பார்த்திருக்கும். அவரை பார்த்தால் கொஞ்சம் பயம் வரும். அந்த அடிக்காகா அல்ல. அவர் கண்கள். கொஞ்சம் பெரிசு. அதை பார்த்தால் தப்பு செய்யாதவன் கூட மன்னிப்பு கேட்பான். கொஞ்சம் அவ்வபோது கண்களில் நீர் கசியும்.
மகா கோபக்காரர் – என்னை போல மக்கு எல்லாம் நாலாவது வரிசை.. என் நேரம். அந்த வரிசைக்கு தான் அவர் கண்கள் போகும். சரியாக சிக்குவேன்.
நோட்டில் எழுதாமல் எதோ வரைந்ததை பார்த்து என் காதை பிடித்து அடிக்கடி திருகுவது விசேஷம். எனக்கு தொன்னை காது. எந்த குட்டி கைக்கும் என் காது லாவகம், அதுவும் அவர் திருகும்போது நானே பிள்ளையார் மாதிரி சுற்றுவேன். அந்த சுற்று சுற்றினால் தான் வலி கொஞ்சம் குறையும். ஆனால் அப்போது அந்த திருகு புரியாது. மூன்று மணி நேரம் கழித்து வலிக்கும்.
அவர் வீட்டை கண்டு பிடித்து விட்டேன். எனக்கு தெரிந்த தாடி கண்ணனை பிடித்து விலாசம் வாங்கி இதோ அவர் முன்னே ….
“சார் … நான் உங்க பழைய மாணவன்..” அவர் காதில் விழவில்லை.
மெல்ல அவர் பக்கம் உரக்க சொன்னேன் “…..ஐ அம் யுவர் ஓல்ட் ஸ்டுடென்ட் ..”
கட்டிலில் அமர்ந்திருந்தார். கொஞ்சம் தெம்பு இருந்தால் வகுப்பு எடுக்க தயாராகி விடுவார். கொஞ்சம் சிரித்தார். அவர் கைகளை ஆதரவாய் பற்றினேன். மொத்த எலும்புகளும் நரம்புகளும் தெறித்து கொண்டு வெளி வர துடிக்கும் கனிந்த வாழ்க்கை.
“யு டுக் இங்கிலீஷ்…” என் ஆங்கிலம் சரியா.. கொஞ்சம் பயமாக இருந்தது. திரும்பவும் காதை பிடித்து கிள்ளுவாரோ?
“யு வேர் மை இங்கிலீஷ் டீச்சர் டூ … சாரி … அய் வாஸ் யுவர் இங்கிலீஷ் ஸ்டுடென்ட் …..”
மெல்ல அவர் பாதங்களை பிடித்து அமுக்கி விட்டேன் . எப்படியா உலகில் அன்பை சொல்லுவது?
அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவருக்கும் என்னை போல நெகிழ்ச்சி இருந்திருக்குமோ என தெரியவில்லை .
எத்தனை காது திருகல்கள். எவ்வளவு பிரம்படி இந்த கரங்களால் …
எத்தனை சாக்பீஸ் எழுத்துக்கள் இந்த கருப்பு திரையில்?
கொஞ்சம் இறுக்கமான அந்த வீடு திடீரென மங்களமாய் ஆனது.
“நான் உங்களையெல்லாம் கொஞ்சம் ஸ்ரமபடுதிட்டேன்..” என் மன்னிப்பு.
“அதெல்லாம் ஒன்னுமில்லை …….”
“தாத்தாவை பார்க்க வந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்…..”
“ரெண்டு மாசத்தில் அவர் திருநக்ஷதரம் வரது. அவசியம் சொல்றேன். நீங்க வாங்கோ.”
“சாருக்கு இப்ப என்ன வயசு?”
“நவம்பர் தாண்டினா நூத்தி மூணு …….”
நான் பள்ளியில் படிக்காது போனது, கிளாஸ் கட் செய்தது, மக்காய் இருந்த நாட்கள் எல்லாம் அவரை பார்த்த பின் தப்பாக படவில்லை.
அவர் எனக்கு மந்தவெளி பாபநாசம்.
(கடந்த வருட ஆரம்பத்தில் அவர் காலமானார்)