கதை வடிவில் பழமொழி நானூறுதொடர்கள்

கதை வடிவில் பழமொழி நானூறு – 10

நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 21

இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்;
உணர்பவர் அஃதே உணர்ப; – உணர்வார்க்கு
அணிமலை நாட! அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்‘.

அளறாடிக் கண்ணும் மணிமணியாகி விடும்

சங்கீதவக் கல்லூரி விடுதி வரை கொண்டு விட்டாச்சு. இன்னிக்கு சாயங்காலம் ரயிலில கிளம்பிற வேண்டியதுதான். நாமக்கல்லிலிருந்து பேசும் அப்பாவின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுகொண்டிருந்தேன். அவர் விட்டபாடில்லை.

சாப்பாடு எல்லாம் சரியா இருக்கா இல்ல வெளியில ஏதாவதுநல்ல சாப்பாடு கிடைக்குதா இதையெல்லாம் பாத்து ரெண்டு நாள் தங்கி மெதுவா வரதுதானே என்ன அவசரம்? தொடர்ந்து கொண்டிருந்தார்.

ஆமாம் இவருக்கென்ன? இவர் பாட்டன் வீட்டு நிறுவனத்திலயா நான் வேலை பாக்கறேன். ஏற்கனவே நாலு நாள் லீவு எடுத்தாச்சு. இனிமேஎடுத்தா சீட்டு கிழிஞ்சுரும். இதையெல்லாம் சொன்னா அவருக்குப் புரியப் போறதில்லை.

கவலைப்படாதீங்கப்பா. காசியில எல்லாரும் நல்லாத்தான் பழகுறாங்க. ஹாஸ்டல் சாப்பாடு ஒத்து வரலைன்னா பக்கத்துல ஒரு அம்மா எடுப்பு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கறாங்க. உடனே மெனு கேக்க ஆரம்பிச்சிடாதீங்க. எனக்கு நேரம் ஆகுது. எல்லாம் சங்கீதா பாத்துப்பா அப்புறம் சென்னைக்கு வந்தப்புறம் விவரமா போன்ல சொல்றேன். எனக்கு நன்றாகத் தெரியும் அவருக்கு மனம் ஒப்பாது என்று.

அவரின் செல்லப் பேத்தியில்லயா. அம்மாவும் அப்பாவும் இவளின் அட்மிஷனுக்கு வருவதாகத்தான் இருந்தார்கள். சங்கீதாதான் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். உங்க காசி யாத்திரையெல்லாம் அப்புறம் வச்சிக்கோங்க. நான் முதல்ல விஸ்வஹிந்து பல்கலைக் கழகத்துல சேந்து படிக்க ஆரம்பிக்கறேன். மெதுமெதுவா ஒவ்வொருத்தரா வந்துபாக்கலாம். இப்போ அப்பா மட்டும் வந்தாப் போதும். அவளே முடித்துவிட்டாள்.

அவசரமாகச் சாமான்களை எடுத்து வைத்துக்கொண்டு சங்கீதாவிடம் விடைபெற்று சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்தேன். அப்பப்பா எவ்வளவு லாவகமாக ஓட்டுகிறான். இருக்கிற எல்லா சந்துபொந்துகளிலும் நுழைந்துவெளியே வந்து ஒருவழியா ரயில்வே ஸ்டேஷனை அடைந்தாச்சு. எங்க பாத்தாலும்கூட்டம். மக்களுக்கு கடவுள் பக்தி இவ்வளவு முத்திப்போச்சா. அல்லது வாழ்க்கையில் பயம் அதிகரித்ததால் இறையைத் தேடி ஓடுகிறார்களா தெரியவில்லை.

எப்படியோ காசியிலிருந்து வந்து ஒருவாரம் ஓடிவிட்டது. நேரம் கிடைக்காததால் அப்பாவிடம் பேசவில்லை. சேர்த்து வைத்து சங்கீதா அனுப்பின அத்தனை போட்டோவையும் வாட்ஸப்பில் பகிர்ந்து பேசிவிடவேண்டும் தீர்மானித்துக்கொண்டே படுத்திருந்தேன். கைபேசி மணி ஒலிக்கிறது. சங்கீதா கூப்பிடுகிறாளோ.

என்ன அதிசயம். அப்பாதான் கூப்பிடுகிறார். ராத்திரி ஒன்பது மணிக்கு ஏன் கூப்பிடுகிறார். மனசில் ஒரு பதட்டம்.

என்னடா அதுக்குள்ள தூங்கிட்டயா. எவ்வளவு ரிங் அடிச்சேன். சரி விசயத்துக்கு வரேன். சங்கீதா சொன்னாளா என் நண்பனைப் பத்தி.

இல்லையே. என்ன சொல்ல வரீங்கனு புரியல. நான் முடிப்பதற்குள் சங்கீதா ஒரு போட்டோ அனுப்பினாளே. ஒரு தமிழ் ஆண்ட்டி கிட்ட ராத்திரி சாப்பாடு வாங்கிச் சாப்பிடறேன்னு.  அவங்க வீட்டு சோபால அந்தம்மா கூட உக்காந்த மாதிரி.  அத நல்லாப் பாரு. அவங்க பின்னால சுவத்துல ஒரு போட்டோ மாட்டிருக்குல்ல. அவருதான் நம்ம தியாகு. என்கூட சுதந்திரப்போராட்டத்துல கலந்துக்கிட்டவரு. அப்ப நாங்க சின்னப் பசங்களா இருந்தாலும் இளைஞர் அணியில இருந்தோம். ஒண்ணா சிறைச்சாலையும் போனோம். சுதந்திரத்துக்குப் பிறகும்நாங்க பல வருசங்கள் தொடர்புலயே இருந்தோம்.  என் கல்யாணத்துக்குக் கூட அவன் வந்தான். அப்புறம் பிழைப்புக்காக வடக்க போனான்.

இப்பதான் தெரிஞ்சது உலகத்த விட்டே போயிட்டான்னு. அப்பாவை இடை மறித்து அப்பா நீங்கபாட்டு ஒரு முடிவுக்கு வராதீங்க. வாட்ஸப் போட்டோவ நானும் பாத்தேன். அவ்ளோ கிளியரா இல்லயே.

திடீர்னு இந்தமாதிரி விசயத்தயெல்லாம் கேக்கக் கூடாது. ஒருமாசம் போகட்டும் நான் சங்கீதாவ உட்டு அவங்க யாருனு கேட்டுச் சொல்லச் சொல்றேன்.

அட போடா. நான் நேரா சங்கீதாவுக்கு போனப்போட்டு பேசியாச்சு. அவளும் அந்தம்மா வீட்டுக்குத் திரும்பப் போயி நேத்திக்கு என்கிட்ட பேசவச்சா. நான் நினைச்சது சரிதான். இப்போ தியாகி பென்சன் வச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்களாம். குழந்தைகுட்டி இல்லைபோல. நம்ம சங்கீதாவப் பத்தி கவலைப்படாதீங்கனு சொன்னாங்க. அடுத்தமுறை சங்கீதா வரும்போது அவங்களக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்.

அப்பா பேசப்பேச என் மனம் வெட்கியது. அளறாடிக் கண்ணும் மணிமணி யாகி விடும்‘. அப்டிங்கற பழமொழி ஞாபகத்துக்கு வருது. சேத்துல கிடந்தாலும் மணியோட தன்மை தெரிஞ்சவங்க அத மணியாத்தான் பாப்பாங்களாம். அதுபோலத்தான் உயர்ந்தவர்களோட கண்ணுக்குத்தான் உயர்ந்தவங்க தெரியுவாங்க.

அப்பா ஒரு சுதந்திரப் போராட்டத்தியாகி. அதனால தான் அவரால இன்னொரு தியாகிய அடையாளம் காண முடிஞ்சது. என்னய மாதிரி பஞ்சப் பொழப்பு பொழைக்கிறவங்க கண்ணுக்கு அவங்க சாப்பாடு குடுக்கற ஒரு சாதாரண அம்மாவாத்தான் தெரிஞ்சாங்க.

பழமொழி -22

வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ,
அள்ளில்லத்(து) உண்ட தனிசு‘.

அள்ளில்லத்(து) உண்ட தனிசு

ரொம்பநாள் கழிச்சு இன்னிக்குதான் ரெண்டுபேரும் வாக்கிங் போரோம். அப்டி என்ன மலையப்பொரட்டற யோசன என் பத்து வருடத் தோழி பவானி கேட்கிறாள்.

இல்ல. இப்போ கொஞ்ச நேரம் முன்ன என்னோட ஓரகத்திகிட்டேருந்து போன் வந்தது. அவ எப்போதும்போலத்தான் பேசினா. அதத்தான் யோசிச்சுக்கிட்டே வரேன்.

என்ன ஏதாச்சும் பிரச்சினையா? இது பவானி.

அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவ ஒருத்திதான் என்கிட்ட பேசிக்கிட்டிருக்கா. அப்பப்ப நடக்கற விசேசம் தொடங்கி எல்லாம் அவ சொல்லிதான் நான் தெரிஞ்சுக்குறேன்.

அப்டி இப்ப அவ என்னதான் சொன்னா. கொஞ்சம் சொல்லேன். நானும் தெரிஞ்சுக்கறேன். ஆர்வம் காட்டினாள் பவானி.

போன வாரம் எங்க மாமியாரோட ஒண்ணுவிட்ட நாத்தனார் பொண்ணுக்குக் கல்யாணமாம். எல்லாரும் ஒண்ணா கும்பகோணம் போயிட்டுவந்தாங்களாம். போற வர வழி முழுக்க என்னயப் பத்திதான் என் நாத்தனாருங்க பேசிக்கிட்டே வந்தாங்களாம். உன்னயப் பத்தி எப்பவுமே அவுங்களுக்கு தப்பு அபிப்பிராயம்தான். உனக்கு சமைக்கவே தெரியல. ருசியா சாப்பாடு போடாததால அவங்க தம்பி கஷ்டப்படறானாமா. அடிக்கடி அக்காக்களுக்கு போன் போட்டு என்ன செய்ய? என் தலையெழுத்துனு நொந்துக்கறாராமா.

அப்படியா ஆச்சரியமா இருக்கே. நீ பாம்பே குடி வந்தே பத்து வருசம் ஆச்சே. ஒருதடவ கூடவா உன் புருசன் உன்கிட்ட நேர்ல குறை சொல்லல.

இல்லயே. ஒருதடவ கூட சொன்னதில்ல. என் ஓரகத்தியும் ஒவ்வொரு போன் கால்லயும் என் சாப்பாட்டப் பத்தி மாமியார் குறை சொன்னதாவும், நாத்தனார்கிட்ட சொன்னதாவும் சொல்லறா. நான் அத விசாரிக்கப் போனா இவர் தேவையில்ல உங்க டைம்பாஸ் வம்புல எல்லாம் என்னய மாட்டி உடாதனு ஒத்தவரியில பதில் சொல்லிடுவாரு.

நானும் முயற்சியெடுத்து ஒருதடவை நாத்தனாருக்கு போன் போட்டு பேச ட்ரை பண்ணினேன். அவங்க என் தம்பி இருக்கும்போது பேசு. நீ மாத்தி மாத்தி பேசற ஆளு. எங்க குடும்பத்து மேல உனக்கு எந்த அக்கரையும் இல்ல. உன்கிட்ட பேசறதுக்கு ஒண்ணுமில்லனு சொல்லிட்டாங்க. அதான் ஆச்சரியமா இருக்கு. இதுவரை என்னோட மாமியார்வீட்ல யார்கிட்டயும் நான் ரெண்டு நிமிசத்துக்கு மேல பேசினது கிடையாது. யாரும் எங்க வீட்டுக்கு வந்து தங்கி இருந்ததும் கிடையாது. அவங்க யாரும் அதிகமா பேச மாட்டாங்க அதனால எனக்கும் பேச டாபிக் இல்லனு நான் விட்டது இப்ப எப்படி இவ்வளவு வெறுப்பா ஆச்சு.

ஓ. இதுதான் விசயமா. உன்கிட்ட அடிக்கடி போன்ல பேசுதே ஓரகத்தி. அதோட டைப் எப்படி?

அதுவும் எனக்குத் தெரியாது. நல்லா பேசும். அட்லீஸ்ட் பேச ஒரு ஆளாவது இருக்கேனு நானும் எல்லா விசயத்தையும் சொல்லிக்கிட்டிருக்கேன்.

அதான் தப்பு. அந்த அம்மா உன்கிட்டேந்து எல்லா விசயத்தையும் கறந்து உன்னயப்பத்தி எல்லா சொந்தக்காரங்ககிட்டயும் தப்பான அபிப்பிராயத்த உண்டுபண்ணிருச்சு.

அவுங்களும் அவ அடிக்கடி உன்கிட்ட பேசறதால உன்னயப்பத்தி அவளுக்கு நல்லாத் தெரியும்னு நெனச்சிருப்பாங்க.

மொதல்ல அந்தம்மாட்ட பேசறத நிறுத்து. உன் ஹஸ்பெண்ட் சொல்றமாரி அது நல்லா டைம் பாஸ் பண்ணிக்கிட்டிருக்கு. எனக்கென்னவோ உன் ஓரகத்தி மேலதான் மொத்த சந்தேகமும். எல்லாரையும் தனித்தனியா நம்ப வச்சு குடும்பத்துக்குள்ள சண்டமூட்டி உடுது. இதத்தான் அள்ளில்லத்து உண்ட தனிசுனு பழமொழி நானூறு சொல்லுது. இதோட அர்த்தம் இந்த மாதிரி போலித்தனமான ஆட்களோட நட்பு ஒருவீட்டுக்குள்ளயே கடன்பட்டது போல பெரிய வேதனையைக் குடுக்கும்ங்கறதுதான்.

பவானி முடித்தவுடன் நான் யோசிக்க ஆரம்பித்தேன். அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க