குறளின் கதிர்களாய்…(312)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(312)
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.
-திருக்குறள் – 633 (அமைச்சு)
புதுக் கவிதையில்...
பகைவருடன் சேர்ந்து
உறவு கொண்டோரை
அங்கிருந்து பிரிப்பதும்,
தம்முடன் இருப்பவரைப்
பேணிக் காப்பதும்,
முன்பு தம்மிடமிருந்து பிரிந்து
சென்றவரை மீண்டும்
சேர்த்துக் கொளவதுமாகிய
செயல்களில் வல்லவனே
நல்ல அமைச்சனாவான்…!
குறும்பாவில்...
பகைவருடன் சேர்ந்தோரைப் பிரித்து
உடனிருப்போரைப் பாதுகாத்து முன்பு பிரிந்தோரைச்
சேர்த்துக்கொள்ளும் ஆற்றலுள்ளவனே அமைச்சன்…!
மரபுக் கவிதையில்...
பகைவர் தம்முடன் சேர்ந்தோரைப்
பாதகம் செயுமுன் பிரித்தெடுத்தும்,
வகையாய் உதவி செய்தேதான்
வந்து தம்முடன் உள்ளோரை
மிகையாய்ப் பேணிப் பாதுகாத்தும்,
மெத்தனப் புத்தியால் முன்பிரிந்தே
பகைவரை நாடியோர் சேர்த்தலுமாம்
பணிகளில் வல்லவன் நல்லமைச்சே…!
லிமரைக்கூ…
பகைவர் தம்முடன் சேர்ந்தோர்
தமைப்பிரித்தே உடனுளோர் பேணி முன்பிரிந்தோரைச்
சேர்ப்போரே அமைச்சுப்பணி தேர்ந்தோர்…!
கிராமிய பாணியில்...
மந்திரி மந்திரி
மதிநெறஞ்ச மந்திரி,
மதிப்புமிக்க மந்திரி..
எதிராளிக்கிட்டப் போய்ச்சேந்தவன
எப்புடியாவது பிரிச்செடுத்து,
கூட இருக்கவங்களப்
பேணிப் பாதுகாத்து,
முன்னால பிரிஞ்சி போனவன
மன்னிச்சித்
திரும்பச் சேக்கத் தெரிஞ்சவந்தான்
தெறமயான மந்திரி..
அவருதான்
மந்திரி மந்திரி
மதிநெறஞ்ச மந்திரி,
மதிப்புமிக்க மந்திரி…!