மரங்கள் உருவாக்கினது யார்? (மொழிபெயர்ப்புச் சிறுகதை)
மூலநூலாசிரியர்: சி. வி. பாலகிருஷ்ணன்
மொழி :மலையாளம்
தமிழில்: முனைவர் நா. தீபாசரவணன்
உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணாமகளிர்கலைஅறிவியல்கல்லூரி, கோவை.
என்னுடைய மகன் பச்சுவுக்கும், எங்களுடைய வயல்தோப்பில் உள்ள வீட்டிற்கு விருந்து வந்த குர்யாச்சனின் மகன் ரோபினுக்கும் இடையே ஒரு சின்ன விவாதம். மரங்களை உருவாக்கினது யார்? அதுதான் விவாதப் பொருள்.
அவர்கள் கொஞ்ச நேரமாக மரங்களுக்கிடையில்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நானும் குர்யாச்சனும் ஆளில்லாத வயல் வெளியில் உள்ள கூரையின் கீழிருந்து சிறிது மது அருந்திக் கொண்டிருந்தோம்.
குர்யாச்சன் பள்ளிக்கூடம் படிக்கும் போதிலிருந்தே எனது நண்பன். நாங்கள் இப்போது பல கடமைக் கதவுகளைக் கடந்து நடுத்தரவயதை அடைந்திருக்கிறோம். குர்யாச்சன் இரண்டு நாட்கள் நிம்மதியாக என்னுடன் செலவழிக்கலாம் என நினைத்துதான் சோஃபியாவையும் மக்களையும் அழைத்து வந்திருந்தார். வயல் வெளிக் கூரைக்கு அப்புறமுள்ள பலா மரத்தின் கீழ் அவர்கள் பயணித்து வந்த மாருதி சென் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் தள்ளி வெட்டவெளியில் கொஞ்சம் கூட அவமான எண்ணம் தோன்றாத என்னுடைய பழைய ஜீப். மாருதி ஸென்னை விட இந்த கிராமப்பகுதிக்கு நல்லது என்னுடைய ஜீப்தான். சந்தேகமே இல்லை. குர்யாச்சன் வந்த உடனே கூறிவிட்டார்.
தாமதிக்காமல் நான் கொழுகொழுத்த ரெண்டு கோழிகளைப் பிடித்தேன். பத்மஜாவும், சோஃபியாவும் சேர்ந்து அதை சரிசெய்துகொண்டிருந்தனர். மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஸ்மால் குடித்துவிட்டு நானும் குர்யாச்சனும் வயற் கூரையில் அமர்ந்திருந்தோம். எங்களுக்கு அசைபோட நிறைய ஞாபகங்கள்.
குர்யாச்சனின் மக்கள் ரோபினும், பெற்றியும் பிறந்ததும் வளர்வதும் எல்லாம் நகரத்தில் அவர்களுக்கு பச்சுவையும் குட்டனையும் விளையாடக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நான்கு பேரும் வயல்வரப்புகளில் உல்லாசமாய் காணப்பட்டனர்.
“நாமும் ஒரு காலத்தில் அவங்கள போலவே சின்னப் புள்ளகளா இருந்தது தானே?” குர்யாச்சன் நினைவுகளுடன் கூறினான்.
“ஆமா பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு நான் அவனின் நினைவுகளைப் பகிர்ந்தேன்.
“அன்று பறவகளைப்போல இருந்தோம் ஒரு வானம் முழுவதும் நமக்கு சொந்தம்”
“வித்தியாசமானக் கனவுகள்”
“ஓராண்டு சொன்னாலும் அவை தீராது”
“மரணம்னா என்னன்னு அப்போ தெரியாது”
”மனசில ஒரு கெட்ட நெனப்பும் இருக்கல”
“யோசிச்சுப்பாத்தா ஒரு சொர்கமே நஷ்டம். இல்லையா?”
”அதேதா……………”
குர்யாச்சன் கவலை மறப்பதற்காகக் டம்ளரைக் கையில் எடுத்தான். நானும்.
அப்போதுதான் பச்சுவும் ரோபினும் ஓடிவந்தனர். அவர்களுக்குப் பின்னால் பெற்றியும் குட்டனும் இருந்தனர்.
“என்னடா? வெளையாடி போதும்னு ஆயிடுச்சா?”
குர்யாச்சன் அன்போடு மகனிடம் கேட்டான். அவன் மூச்சு வாங்கிகொண்டு அவனுக்கருகில் நின்றான்.
“டாடீ, மரங்கள உருவாக்கினது யார்? நம்மோட ஏசு இல்லையா? பச்சு என்னுடையத் தோளைப் பிடித்தான்.
“நம்மளோட சிவன் தானே அப்பா மரங்களை உருவாக்கினது”
”இல்ல எங்களோட ஏசு தான்”
ரோபின் பச்சுவின் நேராகத் திரும்பிக் கூறினான்.
“இல்ல எங்களோட சிவன் தா” பச்சு வேகமாக எதிர்த்தான்.
“மரங்களை யாரும் உருவாக்கல. அது தானாக மண்ணிலிருந்து முளைத்து வருது”. நானொரு நடுநிலமையானவன் என்ற முறையில் அப்படியொரு முடிவைக் கூறினேன். ஆனால் அதை குர்யாச்சனின் மகனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“தானா முளச்சு வந்ததொண்ணுமில்ல. எங்களோட தேவன் உருவாக்கனதுதா……….”
அவன் தன்னுடைய முடிவிற்கு அப்பாவின் துணை தேடினான். குர்யாச்சன் மிகவும் குழப்பத்திலாழ்ந்தார்.
“இல்ல சிவன் உருவாக்கனது தான். இல்லையாப்பா பச்சு கேட்டான். நானும் கவலைக்குள்ளானேன். குர்யாச்சன் என்னைப் பார்த்தார். எனக்கொரு யுக்தித் தோன்றியது.
“நிறைய மரங்களை தேவன் படைத்தார். பிறகு நிறைய மரங்களை சிவனும்” நான் கூறினேன்.
“முதலில் யாரு?” என்னோட முடிவில் பதறிய ரோபின் ஆராய்ந்தான்.
“சிவன். இதிலென்ன சந்தேகம்? ”பச்சு உடனே கூறினான்
“இல்ல…………….. ஏசு தான்” ரோபின் கத்தினான்.
“யாராவது இருக்கட்டும். மரங்களை உருவாச்சில்ல அது போதும்”
குர்யாச்சன் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதம் கூறினார். மக்களுக்கு முழு திருப்தி ஆகவில்லை. இருந்தாலும் அவர்கள் எங்களை எங்கப் போக்கிற்கு விட்டுவிட்டு மறுபடியும் விளையாட செல்லத் தயாராயினர்.
செல்லும் வழியில் இடதுபுறமுள்ள மூன்றாண்டுகள் வளர்ந்த மாமரத்தைச் சுட்டிக்காண்பித்து பச்சு கூறினான்.
“அது சிவன்”
மாருதி ஸென்னிற்கு மேல் நிழல் படர்த்தி நிற்கும் பலாமரத்திற்கு நேராக விரல் காண்பித்து ரோபின் கூறினான்.
“அது ஏசு”
பிறகு பெற்றியினுடையவும், குட்டனுடையவும் சுற்று. நான் நினைத்து நினைத்து சிரித்தேன். குர்யாச்சன் கையில் டம்ளருடன் கொஞ்சம் முன்னால் நகர்ந்து உட்கார்ந்தார்.
“இல்ல தெரியாமத்தா கேட்கறே உண்மைல மரங்கள உருவாக்கனது யார்?”