புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.                                                         
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

‘சொல்லும் பொருளும், உணர்த்தும் பொருளும்’

முன்னுரை

எழுத்தால் அமைவது சொல். அது பொருளையுணர்த்துவதைத் தனது பணியாகக் கொள்ளும். பொருளுணர்த்துவதும் நேரடியாக உணர்த்துவது,  குறிப்பாக உணர்த்துவது என இருவகைப்படும். அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் சொற்கள் வேறுபட்ட நிலையில் பொருளுணர்த்தும் பாங்கினைத் தொல்காப்பியப் பொருளியல் ஆராய்கிறது. ‘பொருளியல்’ என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் தந்த ஆசிரியர் நச்சினார்க்கினியர், “இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையின் பொருளியலென்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஓத்துக்களும் பொருளிலக்கணமன்றே உணர்த்தின. ‘இதற்கிது பெயராயவாறு என்னை?’யெனின், சொல்லதிகாரத்தில் கூறிய சொற்களை மரபியலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிபில் சொல்லென்பராதலின் அவை ஈண்டு தம் பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாம் எனவும், இப்பொருளாதிகாரத்து முன்னர்க் கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச் சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழி உணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலின் பொருளியல் என்றார்.” என்னும் கருத்து இங்கே சிந்திக்கத்தக்கது. ‘வேறுபட்டிசைப்பினும் பொருளாம்” என்பதுபோலத் திருக்குறளில் சொற்கள் கருத்து விளக்கத்திற்காக வெளிப்படையாகப் பொருளுணர்த்துவதன்றிக் குறிப்பாகப் பொருளுணர்த்தும் பாங்கினைப் பரிமேலழகர் உரைவழி நின்று இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

சொற்கள் பொருளுணர்த்தும் முறை

எழுத்துக்களால் ஆகியிருந்தாலும் சொற்கள் பொருளுணர்த்துங்கால் பல நிலைகளைக் காண முடிகிறது. ‘ஆ’ என்பது எழுத்திலும் ஓரெழுத்து ஒரு மொழியிலும் ஆகாரமே. அது அகரத்தின் நீட்சியாகி நெடிலாக அமைந்தாலும் ‘ஆ’ என்பது பெயர்ப் பொருளைச் சுட்டியும் வியப்பிடைச் சொல்லாக உணர்த்தியும் பொருளுணர்த்தி நிற்பதை அறிய முடியும். எனவே எழுத்துக்கள் எழுத்துக்களாகவே இருக்கலாம். ஆனால் சொல் ஒரே முறையில் ஒரு பொருளைத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை.

  • ‘மாணடி சேர்ந்தார்’ (3) என்பது ஒரு திருக்குறள் தொடர். இதற்கு ‘இறைவனுடைய திருவடியைச் சேர்தல்’ என்று பொருள் கொண்டால் பாட்டின் மையக்கருத்துக்கு அது முரணாகும். பரிமேலழகர் தன் புலமையாற்றலால் ‘சேர்தல் – ‘இடைவிடாது நினைத்தல்’ என உரையெழுதுகிறார்.
  • ‘ஓஒ இனிதே’ (1176) என்று, தலைமகள் அழுகின்ற தன் கண்களைத் தனக்குக் காதல் நோயைக் கொடுத்த பாவத்திற்காக ‘நன்றாக அழு’ எனச் சபிப்பதாகத் திருவள்ளுவர் கற்பனை செய்கிறார். ஓகாரம் தம்முள் இணைந்து தேமாவாக நின்றாலும் பரிமேலழகர் ’ஓ’ என்பது மிகுதி பொருட்கண் வந்த குறிப்புச்சொல்’ என்னும் உரையெழுதி அதன் பொருளுணர்த்தும் ஆற்றலை வெளிப்படுத்துவதைக் காணலாம்

‘சொல்’ என்றால் நிகழ்த்துதல்

‘புதல்வரைப் பெறுதல்’ என்னும் அதிகாரத்தில் ஒரு குறட்பா. அவையத்து முந்தி இருப்பச் செய்கிறான் தந்தை. அத்தந்தைக்கு மகன் என்ன கைம்மாறு செய்ய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் சுட்டுகிறார். அந்த மகனைப் பார்க்கிறவர்கள் ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ?’ என்று சொல்ல வேண்டுமாம்!.

“மகன்தந்தைக் காற்றும் உதவி ‘இவன்தந்தை
என்னோற்றான் கொல்? எனும் சொல்” (70)

கல்வியுடையன் ஆக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது, தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார், இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான்கொல்லோ? என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல். இதுதான் பாட்டின் பொருள். ஆனால் இந்தப் பொருளைத் தருகிற அளவில் பாட்டில் சொற்கள் அமைந்திருக்கிறதா என்றால் உறுதியாக இல்லை. ‘என்ன தவம் செய்தானோ என்ற சொல்” என்ற அளவிலேயே குறட்பா நிறைவுற்றிருப்பதைக் காணலாம்.

பரிமேலழகர் உரைத்திறன்

குறட்பாவில் ‘தந்தைக்கு’ என வாளா இருக்க, பரிமேலழகரோ ‘கல்வியுடையவனாக்கிய தந்தை’ என எழுதுகிறார். ‘கல்வியைத் தந்த’ என்று கூட அவர் எழுதவில்லை. காரணம் கல்வி பிறிதின் கிழமையாகிய பொருளன்று அன்று. உயிருக்கு உடம்புபோன்ற தற்கிழமை. அழியாத உடைமை. அதனால்தான் வெகு நுட்பமாகக் ‘கல்வியுடையவனாக்கிய’ என்று எழுதுகிறார். எழுதிச் ‘சொல்’ என்று வள்ளுவர் கூறுகிறாரே, சொல் தானாக வருமா? சொன்னால்தானே சொல்வரும்? சரி. தானாகச் சொல்வார்களா? அரசியல் வாதியா காசுகொடுத்துச் சொல்லச் சொல்லுதற்கு? சொல் காரியம். எது காரணம்? சொல் வருமாறு ஒழுகுதல் காரணம். காரணமின்றிக் காரியம் இல்லை. குறட்பாவில் காரியம் மட்டுமே உள்ளது. பரிமேலழகர் காரணத்தைக் கண்டறிந்து கூறுகிறார். எப்படி?

‘சொல்’ நிகழ்த்துதலாகிய தன் (சொல்லுக்கான) காரணம் தோன்ற நின்றது. நிகழ்த்துதல் – அங்ஙனம் தோன்ற ஒழுகல்”

என்று எழுதிக் காட்டுகிறார். பொழிப்புரையில் ‘தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார்’ என விளக்கமாக எழுதித், தந்தையளித்த கல்வியின் பயன் அவ்விரண்டுமே என்பதனை நுட்பமாகக் காட்டுகிறார். இந்த விளக்கவுரையில் ‘சொல்’ என்பது சான்றோர் புகழும் சொல்லாக இருந்தாலும் அச்சொல்லுக்குப் பின்னாலே உள்ள மகனின் நடத்தையாகிய காரணத்தைத் தோற்றுவிக்கிறது என்பது பரிமேலழகர் கருத்து. எனவே ‘சொல்’ என்பது சான்றோர் சொல்வது. ஒழுகுதலாகிய காரணம் என்பது சொல் உணர்த்துவது!

கொள்ளுவது நன்றா? கொடுப்பது தீதா?

‘ஏற்பது இகழ்ச்சி’ என்பது ஆத்திசூடி. ‘இலன் என்னும் எவ்வம்’ என்பது திருக்குறள். ஆனால் இவற்றுக்கு முரண்படுவதுபோல் திருக்குறள் ஒன்று அமைந்திருக்கிறது.

“நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று”  (222)

என்னும் குறட்பா “ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது ஈந்தார்க்கு அவ்வுலகம் இல்லையென்பார் உளராயினும் ஈதலே நன்று” என்னும் பொருள்பட அமைந்திருக்கிறது. அதிகாரம் ‘ஈகை’ யாதலின் அதற்கு மறுதலையான இரத்தலாகிய கொளலைப் பொய்யாக உயர்த்திச் சொல்லவேண்டிய நிலை ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பரிமேலழகர் புரிந்து கொள்கிறார். கொண்டு, ஏற்பது வீட்டு நெறிக்கு வழிகாட்டும் என்பாரும் இலர். ஈதல் வீடுபேற்றிற்குத் தடையாகும் என்பாரும் இலர் என்னும் தெளிவை முன்னிறுத்த விழைகிறார். ஆனால் குறட்பா அமைப்பு அவ்வாறு பொருள் கொள்ளுமாறு இல்லையே என எண்ணுகிறார். எண்ணி, ‘எனினும்’ என இருவழியும் வந்த சொல்லை உற்று நோக்கி அந்த உம்மையை எதிர்மறையாக்கி விளக்கமளிக்கிறார். எப்படி? இப்படி!

“எனினும் என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது”

இந்த விளக்கத்தில் ‘எனினும்’ என்னும் சொல் ‘இல்லையென்று சொன்னாலும்’ என்னும் சொற்பொருளைக் கொண்டிருந்தாலும் ‘இன்மை’ என்னும் பொருளையே உணர்த்துகிறது என்பதைப் பரிமேலழகர் உரையால் புரிந்து கொள்ள இயலும்.

‘சினம்’ என்னும் நெருப்பு

‘ஆறுவது சினம்’ என்பது முதுமொழி!. ‘கோபத்தை அடக்கா வேந்தன்’ என்பது விவேக சிந்தாமணி! இத்தகைய மொழிகள் சினம் மனிதன் கைக்கொள்ள வேண்டாத பொருள் என்பதை உணர்த்துகின்றன. திருவள்ளுவர் வெகுள்தல் என்னும் இந்தப் பண்பை எதிர்மறையால் ‘வெகுளாமை’ என அதிகாரப் பகுப்புச் செய்வார். இந்த எதிர்மறையே அப்பண்பு கூடாத பண்பு என்பதைக் குறிப்பாய்ப் புலப்படுத்தும். இந்த அதிகாரத்தில் உள்ளதொரு குறட்பா,

“சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்” (306)

என்னுமாறு அமைந்திருக்கிறது. இந்தக் குறட்பாவிற்குச் சினம் என்னும் நெருப்பு தனக்கு இடமானவரையேயன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையைச் சுடும்’ எனப் பொழிப்புரை கண்ட பரிமேலழகர்,

‘சினமென்னும் நெருப்பு’ என்ற விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே! இந்நெருப்பு தான் சேராத இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது”

என்று விளக்கவுரையில் எழுதுகிறார். இயல்பான நெருப்புக்கும் சினமாகிய நெருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால் பற்றுகிற இடத்தினை மட்டும் எரிப்பது இயல்பான நெருப்பு! தன்னைக் கொண்டவனை மட்டுமன்றி அவனுக்கு நல்வழி காட்டுகின்ற இனமாகிய நண்பர்களையும் எரித்தழிப்பது சினம் என்னும் நெருப்பு.  ‘சினநெருப்பு’ என்னாமல் ‘சினம் என்னும் நெருப்பு’ என்னும் விரியுருவகத்தால் (முகத்தாமரை – உருவகம். ‘முகம் என்னும் தாமரை’ – விரியுருவகம்) கூறியது விதப்பு. இந்த விதப்பினைப் பயன்படுத்திப் பரிமேலழகர் தனது உரையாற்றலைக் காட்டுகிறார். சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பது சொற்பொருள்  இயல்பான நெருப்புக்கும் சினமென்னும் நெருப்புக்கும் உள்ள வேறுபாட்டை உணரச்செய்வது சொல் உணர்த்தும் பொருள்!.

அறிவுச் செல்வமும் அறியாமை வறட்சியும்

செல்வம் பலவகைப்படினும் பெரும்பாலும் பொருட் செல்வத்தையே அது குறிப்பதாகக் கொள்வது ஒரு நடப்பியல் உண்மை. ‘அவன் செல்வன்’ என்றால் அவன் வாங்கிய பட்டங்கள் யாருடைய நினைவுக்கும் வராது. அதுபோல அவன் ‘வறியன்’ என்றால் அவனுடைய வயிறும் பசியுமே நினைவுக்கு வருமேயன்றி அவனுடைய அறியாமையோ அதனால் பெற்ற அவமானமோ நினைவுக்கு வராது. ஆனால் பரிமேலழகருக்கு வரும்!

“இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்” (270)

என்னும் குறட்பா ‘தவம்’ என்னும் அதிகாரத்து இறுதியாக அமைந்திருப்பது. இந்தக் குறட்பா இவ்வுலகில் செல்வம் உடையார் சிலராகவும் வறுமையால் துன்புறுவோர் பலராகவும் இருப்பதற்குக் காரணம் தவம் செய்வார் சிலராகவும் அது செய்யாதார் பலராகவும் இருப்பதே காரணம் என்ற கருத்தினை முன்னெடுக்கிறது.  இதனை,

“உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், தவம் செய்வார் சிலராக அது செய்யார் பலராதல்”

என்னும் பரிமேலழகர் பொழிப்புரையாலும் புரிந்து கொள்ள இயலும். ‘இலர்’ ‘உளர்’ என்பவற்றிற்கான செயப்படுபொருட்கள் குறட்பாவில் இல்லை. பரிமேலழகர் அவற்றைச் ‘செல்வம்’ எனக் கருத்தாகக் கொண்டு உரையெழுதுகிறார். அடுத்துச் ‘சிலர் நோற்பார்’ என்பதைக் கொண்டு அதற்கியைய (குறட்பாவில் குறிக்கப்படாத) செல்வர் சிலராகவும் என உரையெழுதுகிறார். தொடர்ந்து செல்வத்தை அறிவோடு பொருத்தி ‘நுண்ணுணர்வு உடைமையே செல்வம் நுண்ணுணர்வு இல்லாமை வறுமை’ என்னும் கூடுதல் விளக்கத்தையும் தருகிறார். இந்த விளக்கத்தில் அவர் வளத்தையும் வறுமையையும் பொருட்செல்வத்தோடு மட்டும் பொருத்திப் பார்க்காமல் அறிவின் உண்மை இன்மைகளோடு பொருத்திப் பார்க்கிறார். இவ்வாறு அவர் பார்ப்பதற்குத் துணை நின்றது அவருடைய பன்னூல் புலமை.

“செல்வம் நல்குரவு என்பன அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன. என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்  (நாலடியார் 251)”

பரிமேலழகர் உரையால் ‘வளப்பம்’ என்பது பொருளை மட்டும் குறிக்காது. அறிவுடைமையையும் குறிக்கும் ‘வறுமை’ என்பது பொருளில்லாமையை மட்டும் குறிக்காது. அறிவின்மையையும் குறிக்கும் என்பது புலனாகிறதல்லவா? செல்வம் பொருளைக் குறிப்பது சொற்பொருள். அது அறிவுடைமையும் குறிப்பது உணர்த்தும் பொருள். ‘வறுமை’ பொருளின்மையைக் குறிப்பது சொற்பொருள். அது அறிவின்மையைக் குறிப்பது உணர்த்தும் பொருள். இவ்விருவகைப் பொருளையும் கண்டறிந்து கூறும் பரிமேலழகரின் தொடர் “செல்வம் நல்குரவு என்பன அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன” என்பதாகும்!.

உண்மை பிறத்தல்! இன்மை இறத்தல்!

“நேற்றிருந்தவர்கள் இன்றில்லை” என்பது வழக்கு. இந்த வழக்கில் நிலைமையாகிய உணர்வு வெளிப்படுவது என்பது உண்மையே. ஆனால் என்றோ தோன்றியது நேற்றுவரை இருந்திருக்கிறதே என்ற உண்மையும் இருக்கிறது என்பதைப் பலரும் அறியார். நிலையாமை என்பது தோன்றிய கணமே மறைவது. அதாவது ‘தோன்றுதல் – மறைதல்’ என்பதே நிலையாமையேயன்றித் தோன்றுதல்; இருத்தல் – மறைதல் என்பது நிலையாமை ஆகாது. ‘கணந்தோறும் பிறந்திறப்பது’ என்பதும் அது. பிறந்த நொடியே இறப்பது. எனவே நேற்று (வரை) இருந்தவர்கள் இன்றில்லை என்பது நிலையாமையின் முழுப்பொருண்மையாகாது. அதனால்,

“நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு” (336)

என்னும் குறட்பாவிற்கு உரையெழுதிய பரிமேலழகர் அவ்வழக்கினையும் உட்கொண்டு,

“ஒருவன் நெருநல் உளனாயினான் அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து இவ்வுலகு”

என்று பொழிப்புரை எழுதுகிறார். இதில் ‘நேற்று’ என்பதை வழக்கிலிருந்து எடுத்துக் கொள்கிறார். ‘இருந்தான்’ என்பதை மாற்றி ‘உளன் ஆயினான்’ அதாவது ‘தோன்றினான்’ என்னும் தன் கருத்தினை இணைத்துக் கொண்டு உரையெழுதுவதைக் காணலாம். உலகியல் வழக்கு ‘நேற்றுவரை இருந்தான்’ என இருக்க, பரிமேலழகர் ‘நேற்று தோன்றியவன்’ என விளக்கமளிக்கிறார் ‘உளன்’ என்பதற்கு ‘உண்மை’ (உளதாம் தன்மை) என்றும், ‘இலன்’ என்பதற்கு ‘இல்லை’ (இலதாம் தன்மை) என்றும் உரை காண்கிறார். கண்டு “உளன் ஆயினான் இலனாயினான்” என நூலாசிரியரின் நுண்ணியம் கண்டு உரையெழுதுகிறார்.

“ஈண்டு உண்மை பிறத்தலையும் இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன”

பரிமேலழகர் உரையால் நேற்று பிறந்தவன் (உளன் ஆயினான்) இன்று இல்லையாயினான் (இலனாயினான்) என்னும் நிலையாமையின் ஆழம் புரிகிறது. பாட்டில் இதற்கான சொல் இல்லையாயினும், ‘உளன்’ ‘இலன்’ என்னும் இரண்டு சொற்களோடு ஆக்கச் சொல்லை வருவித்துக் கொண்டு ‘பிறத்தல் மற்றும் இறத்தல்’ என உணர்த்துகிறார். உண்மை என்பது ‘உளது’ என்னும் பொருளைத் தருவது. அது சொற்பொருள். அது ‘பிறப்பு’ என்னும் பொருளைத் தருவது உணர்த்தும் பொருள். இன்மை என்பது ‘இலது’ என்னும் பொருளைத் தருவது. அது இறத்தல் என்னும் பொருளைத் தருவது உணர்த்தும் பொருள்!

பிரிவதற்காகவே பிறந்த உறவு

‘சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும்’ என்னும் திரைப்பட உரையாடல் பலருக்கும் நினைவிருக்கலாம். சில அரசியல் கட்சியினர் கலைவதற்காகவே கூடுவதையும் அறிந்திருக்கலாம். ‘பிரிவதற்காகவே வந்த உறவு’ பற்றித் திருவள்ளுவர் சிந்தித்திருக்கிறார். உயிர்வழி நீங்கிய வழிக் கிடக்கும் உடம்பு பற்றிப் ( பரிமேலழகர் உரை – 340) பேசுகிறார். வழக்கில் பயன்படுத்தப்படும் பல தொடர்கள் எதிர்மறைப் பொருளைத் தருவதைப் பலரும் உணர்வதில்லை. சான்றாக அன்பால் பிணைந்தவர்களை வாழ்த்துங்கால் ‘உடம்பும் உயிரும் போல’, ‘மலரும் மணமும் போல’, ‘நகமும் சதையும் போல’ என்றெல்லாம் சொல்வார்கள்.  இவர்கள் உடம்போடு சேர்ந்து பிறக்கும் உயிர் இறுதிவரை உடம்பினைவிட்டுப் பிரியாது என்னும் மயக்கத்தில் கூறுவதை ஓர்ந்திலர். இந்த மயக்கம் குறள் கண்ட தலைமக்களுக்கும் இருந்திருக்கிறது.

“உடம்பொடு உயிரிடை என்ன? மற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு” (1122)

என்னும் தலைவன் மொழிகேட்டு நம்பிய தலைவியைத் திருக்குறள் காட்டுகிறது. உண்மையில் இது பொருந்துமா என்பதைக்,

“குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு” (338)

என்னும் குறட்பாவில் திருவள்ளுவர் ஆராய்கிறார். அக்குறட்பாவை ஆராய்ந்த பரிமேலழகர்,

“முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்து புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு”

என்னும் பொழிப்புரையைத் தருகிறார். இந்தப் பொழிப்புரையில் உடம்பை முட்டையாகவும் உயிரைப் பறவையாகவும் உருவகம் செய்த திருக்குறளின் திறனைப் பாராட்டுகிறார். ‘ஒரு குறிப்பிட்ட காலம் வரை முட்டையும் பறவையும் ஒன்றாக இருந்ததைச் சுட்டிப் புள்ளுப் பருவம் வந்துழித் தனித்தறியாத முட்டையைத் தனித்துவிட்டுப் புள் பறந்துவிடும் என்னும் நுண்ணியம் காட்டுகிறார். ‘உடம்போடு உயிர்’ என்பதைப் ‘பிரியாத நிலை’ என்று கருதுவார்க்கு (உவமம் கொண்டு) அதன் ‘பிரிநிலையை’ விளக்குகிறார் பரிமேலழகர். ‘நட்பு’ என உடம்புக்கும் உயிருக்குமான உறவைச் சுட்டும் திருவள்ளுவர் அதற்குக் காட்டிய உவமம் முட்டையும் புள்ளுமாகும் என்பதை நோக்கி உரையெழுதுகிறார். பிரிந்து போகக் கூடியதை உவமமாகக் காட்டியதால் ‘நட்பு’ என்பதும் பிரிந்து போகக் கூடியதே என்பதைக் குறிப்பாகக் காட்டியது என்று விளக்கமளிக்கிறார்.

“‘நட்பு’ என்றது குறிப்பு மொழியால் ஈண்டு நட்பின்றிப் போதல் உணர்த்தி நின்றது”

இங்கே குறிப்பு மொழி என்றால் என்ன? ‘நட்புத்தான்! அது எது போல என்றால் முட்டையும் புள்ளையும் போல’ என்றாம்!. “பழகுதற்கு இனியவர், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தணியாத நட்பை என்மீது காட்டியவர், கருத்து வேறுபாடுகள் நட்பு முரிவதற்கான காரணங்கள் ஆகா” என்னும் இன்றைய நடப்பியல் சமுதாயத்துப் பசப்பு மொழிகளையெல்லாம் இந்தப் பாட்டிற்குப் பரிமேலழகர் தரும் அரிய விளக்கவுரை தவிடுபொடியாக்கிவிடுகிறது. அவர் எழுதுகிறார்.

“சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தால் கூடியதல்லது நட்பில என்பது அறிக”

எனச் செவியில் அறைவதைக் காணலாம். உயிருணர்ச்சியாகிய நட்பு உள்ளங்களின் இடப்பெயர்ச்சியால் தோன்றுவது என்பது இதனால் புலனாம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பிரியாதது போலவும் உண்மையில் பிரியக்கூடியதே என்பதையும் ‘நட்பு’ என்னும் சொல் சுட்டுகிறதாம். ‘நட்பு’ என்பது உணர்ச்சியால் பிரியாத உறவு என்பது சொற்பொருள். அது பிரியக்கூடிய உறவே என்பது சொல் உணர்த்தும் பொருள்!.

நிறைவுரை

மூலநூலாசிரியனின் உள்ளங் காண முயல்வதும் தாம் கண்டவற்றைச் சான்றுகளோடு முன்மொழிவதுமே உரையாசிரியர் கடன். அந்த வகையில் திருக்குறள் உரையாசிரியர்களில் முன்னிற்பவர் பரிமேலழகர். நூலைப்  பன்முறை நோக்கி ஆசிரியரின் உள்ளமறிந்து அதற்கேற்ப உரைகாண்பதற்குச் சொற்களையும் அவை பொருளுணர்த்தும் முறைகளையும் நன்கு உள்வாங்கி உரையெழுதுகிறார். சொல்லுக்குரிய நேரடிப் பொருளால் குறட்பொருள் சிறக்காது என்னும் நிலையில் அதனின்றும் விலகிச், சொல் உணர்த்தும் பொருளைக் கண்டறிந்து காட்டும் அவர் உரைத்திறன் புலப்படக் கூடும்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *