திருச்சி புலவர் இராமமூர்த்தி

பாடல் :

‘’பேறெனக்கு  இதன்மே  லுண்டோ? பிரானருள்   செய்த இந்த
மாறில்ஆ   கமத்தை   வாசித்  தருள்செய   வேண்டும் ‘’  என்ன
‘’நாறுபூங்   கோதை   மாது   தவிரவே   நானும்  நீயும் 
வேறிடத்து   இருக்க  வேண்டும் ‘’  என்றவன்  விளம்ப   வேந்தன் ,

பொருள் :

“எனக்கு இதனின் மேலாம் பேறு வேறுண்டோ? இறைவன் அருளிச்செய்த இந்த மாறில்லாத ஆகமத்தை வாசித்து அருளிச் செய்யவேண்டும்“ என்று அரசர் சொல்ல,“வாசனையுடைய பூமாலை யணிந்த தேவியாரும் இவ்விடத்தி  னின்றும்  நீங்கவே, நானும் நீயும் தனியாகிய இடத்தில் இருத்தல்வேண்டும்“ என்று அவன் சொல்ல, அரசர்,

விளக்கம் :

‘’பேறு எனக்கு இதன்மேல் உண்டோ? ‘’  என்றதொடர், ஆகம ஞான உபதேசத்தின் மிக்க பேறு இல்லை, எல்லா நலன்களிலும் மிக்கதாகிய வீடுபேற்றைத் தருதலான் எனப்  பொருள்தரும். இங்கு இவன் செய்யும் செயல் பாதகமேயாயினும், அது நாயனார் கொண்ட அன்பின் திறத்தாலே அப்பயனையே விளைத்து,

“அருட்கழல்  ந ழல்சேரக் கொண்டவாறு   இடையறாமற் கும்பிடுங் கொள்கை“

யையே பயந்ததும் காண்க.

‘’மாறில் ஆகமம்’’  என்ற  தொடர்,   எதிரும் இணையும் இல்லாத ஆகமம் என்ற  பொருளைக்காட்டும்  தமக்குள் ஒன்றற் கொன்று  மாறுபடாத வேதங்கள் தாமும் இறைவனருளியனவே, ஆயினும் அவை உயிர்களின் பக்குவபேத நோக்கிப் பல தெய்வங்களையும் பேசும். அவை வெளித்தோற்றத்தில் மாறுபடுபவனவாகக் காணப்படினும் ஞானாசாரியார்களால் ஒப்புக் காணத்தக்கன. ஆயின் ஆகமங்களோ அவ்வாறன்றி எவ்வாற்றானும் தமக்குள் மாறுபடாதனவும், முழுமையும் உண்மையேயாகி உண்மை  நிலையிற்  சிறிதும் மாறுபடாதனவுமாம்.

இதனைக் கம்பர்  தம்  இராமாயணத்தில்

கல்லிடைப்  பிறந்து   போந்து   கடலிடைக்   கலந்த   நீத்தம்
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன
தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி
பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே

நன்கு விளக்குகிறார்.

“வாசித்து அருள் செயவேண்டும்”  என்ற தொடர்,  முன்னர் அவன் இயம்பக் கொடுவந்தேன் என்றமையால் அவ்வாறே வாசித்துப் பொருள் கூறி உபதேசித்தருள்புரிக என்றார்.

‘’நாறுபூங் கோதை மாது தவிரவே‘’ என்றதொடர் மாது இங்கு நின்று நீங்கவே. என்றும் பொருள்தந்தது!  மேலும் ‘‘இம்மாது இனி நாறு பூங்கோதை அணித்தலைத் தவிர்க்கவே’’  என்ற  அபசகுனப் பொருளையும்  தந்தது!

‘’நானும்நீயும் வேறிடத்து இருக்கவேண்டும்’’ என்ற  தொடர்,  நான் தூயஉலகிலும் ,  நீ  தீயஉலகிலும்   வெவ்வேறு   உலகில்  இருக்க வேண்டும் என்ற பொருளைத் தந்தது.

‘’பேறெனக் கிதன்மே லுண்டோ’’ என்றதொடர்   இப்போது நீ எண்ணிய வஞ்சனையை முடித்துவிடப் போகின்றாயாதலின், இது வரை நாயன்மாரை வழிபட்டு வந்தபேறு எனக்கு இனிமேல் உளதாகுமோ? இல்லை!  எனவும்; நாறுபூங் கோதை மாது தவிர – மாது கோதை தவிர – அதாவது நாயனார் அருட்கழனீழல் சேரப்போகின்றமையால் இவ்வுலக நிலையிலே பூமாலை சூடும் தன்மை (சுமங்கலித்துவம்) தேவி தவிர்வாராக எனவும்; நானும் நீயும் வேறிடத்திருக்க வேண்டும் – இச்செயலின் பின், நான்(முத்தநாதன்) சிவனடியார்பால் அபசாரப்பட்ட பெரும் பாவத்திற்காக எரிவாய் நரகத்திற் புகவும், நீ இறைவ னருட்கழ னீழலாகிய பேரின்பத்திற் புகவும் ஆக, இங்கு ஓரிடத்திலிருந்த நாமிருவேமும் இனி வெவ்வேறான இடங்களில் இருக்க வேண்டும் எனவும், இப்பாட்டு முழுமையும் முற்குறிப்பு எனும் தொனிப்பொருள்  தருகிறது  உணரத்தக்கது. வேறிடம் – வெவ்வேறிடம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க