கதை வடிவில் பழமொழி நானூறு – 23
நாங்குநேரி வாசஸ்ரீ
பாடல் 47
பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
‘இருதலைக் கொள்ளியென் பார்’.
பழமொழி – இருதலைக் கொள்ளியென் பார்
இன்னிக்கு இண்டர்வியூவுக்கு வந்த வந்தவங்கள்ல எனக்கு ரேஷம் குமார ரொம்பப் பிடிச்சிருந்தது. நீங்க என்ன சொல்றீங்க என்னிடம் கேட்கிறார் மும்பையிலிருந்து வந்திருக்கும் என் மேலதிகாரி.
தனியார் விமான நிறுவனத்தில் மானேஜர் பதவியில் இருக்கும் நான்யோசிக்கத் தொடங்கினேன். அன்றைக்கு வந்த ஐந்து பேரும் எப்படி கேள்விகளுக்குப் பதில் அளித்தார்கள் என்று. படிப்புத் தகுதியை வைத்துப் பார்த்தால் அனைவருக்கும் சமமே. அனுபவத்தை வைத்துதான் மதிப்பிட வேண்டும். முதலாமவர் பன்னாட்டு விமானசேவையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அதுவும் தில்லி விமான நிலையத்தில். அடுத்த இரண்டுபேருக்கும் எந்த அனுபவமும் இல்லை. நான்காமவர் டிராவல்சில் விமான டிக்கெட் கொடுக்கும் பணியில் இருந்தவர். ஐந்தாமவர்தான் ரேஷம்குமார் உள்நாட்டு விமானசேவையில் அனுபவம் உள்ளவர். அவருக்கு எல்லாவித தகுதியும் பயிற்சியும் அனுபவமும் இருப்பதாகத் தோன்றினாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்தியது.
வந்திருக்கும் அதிகாரியோ முதலாமவரையும் ஐந்தாமவரையும் பரிந்துரைக்கிறேன். இருவரில் உங்களுக்கு ஏற்ற ஒருவரை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள் என்றுவிட்டார்.
எங்களது விமான நிறுவனம் இப்போது தான் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. திருச்சியிலிருந்து மும்பைக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான குறைந்த பட்ச ஆட்கள் எடுக்கும் நிகழ்வுதான் தற்போது நடைபெறுகிறது. இப்போதைக்கு என்னைத் தவிர ஒருவரை மட்டும் நியமிக்க வேண்டும். அதற்குத்தான் இத்தனை யோசனை. அவர்கள் இருவரையும் இரண்டாம் முறை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்த முடிவு எடுத்தேன்.
இம்முறை கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லும் விதத்தைக் கவனிக்க வேண்டும். தீர்மானத்துடன் அமர்ந்தேன். பன்னாட்டு விமான சேவையில் அனுபவம் மிக்க விஷால் தன் அனுபவங்களைச் சுருக்கமாகப் பகிரத் தொடங்கினார். முதல் நேர்முகத்தேர்வில் சொன்ன அதே தகவல்களைத் தான் மீண்டும் சொல்கிறார். கடைசியில் அவர் முடிக்கும்போது எந்தவித நெருக்கடியையும் என்னால் சமாளிக்க முடியும் என்றார். ஆனால் ரேஷம் குமாரோ சந்தர்ப்பவாதிபோல் பேசுவதாகப் படுகிறது. எங்களது எதிரி விமான நிறுவனத்தில்தான் அவர் ஆறு வருடங்கள் வேலை பார்த்து இருக்கிறார். தொழில் முறையில் எதிரி என்றாலும் தேவையான பயிற்சியும், வேலையும் ஒரேமாதிரிதானே. முந்தைய நிறுவனத்தை விட்டு ஏன் வந்தீர்கள் என்ற என் வினாவிற்கு விஷால் புதிய அனுபவத்தைத் தேடிஎன சமயோசிதமாய் பதிலளித்தார். ஆனால் குமாரோ பழைய கம்பெனியில் பலவித தவறுகள் நடப்பதாகவும் அதில் கூட வேலை செய்பவர்கள் திறமையற்றவர்கள் எனவும் அதனால் தன்னால் முன்னேற முடியவில்லை என்றும் கூறுகிறார். இந்தப் பதில்தான் முன்பும் எனக்கு உறுத்தியது.
தெளிவுபடுத்துவதற்காக எந்த மாதிரி தவறுகள் நடந்தன எனக் கேட்கிறேன். பயணிகளுக்கு போர்டிங் பாஸ் குடுப்பதற்காக ஒவ்வொரு கார்டிலும் இருக்கையின் எண் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டுவது வழக்கம். இது தினமும் நடக்கும் வாடிக்கையான நிகழ்வுதான். விமானத்தின் இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப கார்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தேதி பொறிக்கப்பட்ட சீல் குத்தப்பட்டு கவுண்டரில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும். ஒருவேளை பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பின் விமானம் வெளிக்கிளம்பியவுடன் கவுண்டரில் மீதமிருக்கும் கார்டுகளைக் கிழித்து எறிந்து விட வேண்டும். அப்படிச்செய்யாது விட்டதால் அடுத்த நாள் புது கார்டுகளுடன் அவை கலந்து இருநபர்கள் ஒரே இருக்கை எண்ணைப் பெற நேரிட்ட சம்பவங்கள் நிறைய நிகழ்ந்துள்ளன. அத்தகைய நாளில் விமான இருக்கைகள் ஏதேனும் காலியாக இருந்தால் பயணியை அங்கு அமரச்செய்து தப்பித்துக் கொண்டிருக்கிறோம். இருக்கை காலியாக இல்லாத நாட்களில் நிறுவனத்திற்கு பெரும் நட்டமும் பிரச்சினைகளும் ஏற்பட்டதுண்டு.
மேலும் விமானம் வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் பயணிகளின் கார்டுகளின் பின்புறம் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரின் எண்ணும் அவருடைய உடைமையில் போடப்பட்டிருக்கும் பட்டியின் எண்ணும் ஒத்து உள்ளதா எனச் சரியாகப் பரிசோதித்து அனுப்பாததால் பல நாட்கள் பயணிகள் அவசரத்தில் ஒரே நிறம் கொண்ட வேறு ஒருவரின் பையை எடுத்துச்சென்று விடுவர். இப்படி கவனக்குறைவினால் ஏற்படும் தவறுகள் அந்த நிறுவனத்தில் மிக அதிகம்.
அவர் பேசப்பேச நான் யோசித்தேன். எங்களை மகிழ்விக்கும் விதத்தில் தொழில்எதிரியின் திறமைக்குறைவை இவர் சுட்டிக்காட்டுகிறார். ஒருவேளை எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தபின் மீண்டும் பழைய நிறுவனத்தில் பெறும் பதவி தறுவதாக ஆசை காட்டினால் அங்கு அமர்ந்துகொண்டு நம்மைப் பற்றிப் பேச இவர் தயங்கமாட்டார் என மனதில் தோன்றியது.
ஏனோ மனதில் ‘இருதலைக் கொள்ளி என்பார்’ எனும் பழமொழி நினைவுக்குவருகிறது. பகையுள்ள இருவரிடத்தும் நண்பர் போல் பழகி ஒருவருடனும் மனம் ஒருமைப்பட்டு விளங்காதவர் மிகவும் கெட்டவர்கள் என தீர்மானத்துடன் எழுந்தேன் விஷாலை நியமிப்பது எனும் முடிவுடன்..
பாடல் 48
இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும்
அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் – அஞ்சி
இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்
‘இருளின் இருந்தும் வெளி’.
பழமொழி – ‘இருளின் இருந்தும் வெளி‘
என்ன ஆகிவிட்டது பிரியான்ஷி ஆண்ட்டிக்கும் கரிமா ஆண்டிக்கும். ஒருத்தருக்கொருத்தர் நாலு நாளா முறைச்சிட்டிருக்காங்க. என்னையப் பொறுத்தவரை ரெண்டுபேரும் நல்லவங்கதான். என்னை அவர்களின் பெண் மாதிரிதான் நடத்துவாங்க. தப்பு ஒண்ணுமில்ல. நேரம் பாத்து கேட்டுடணும்.
டிசம்பர் மாதத்தில் குளிர்காய்வதற்காக வெயிலில் அமர்ந்த போது ரெண்டுபேரும்தான் வற்புறுத்தி எனக்கு ஸ்வெட்டர் பின்ன சொல்லிக்கொடுத்தாங்க. அப்போ எவ்ளொ நல்லா இருந்துச்சு. காலை பதினொரு மணிக்கே வேலையெல்லாம் முடிச்சிட்டு சொசைட்டி பார்க் புல்வெளியில உட்கார்ந்து கரிமா ஆண்டி கொண்டு வரும் வேர்க்கடலையத் தொலி உரிச்சு சாப்பிட்டுக்கிட்டே ஸ்வெட்டர் பின்னுவோம். சிலநாள் பச்சைப் பட்டாணி கொண்டு வந்து உரிச்சு எடுத்துட்டுப் போவாங்க.சில நாள் வெந்தயக் கீரை இலைகளைப் பிரிக்கும் பணி. இப்டி தினமும் பீகாரைச் சேர்ந்த கரிமா ஆண்டியும் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரியான்ஷி ஆண்டியும் இவ்ளோ வருசம் ஒற்றுமையாத்தான் இருந்தாங்க. இப்போ சமீபத்துல மே மாசத்திலேந்துனு நினைக்கறேன் என்ன ஆச்சோ. எதப் பேசினாலும் ரெண்டுபேரும் எதிரும்புதிரும் தான்,
என்னவா இருக்கும் யோசித்துக்கொண்டே டில்லியில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் கீழே உலாத்திக்கொண்டு இருக்கிறேன். எதிரில் என் வயதொத்த மராட்டியப் பெண் நித்திகா வருகிறாள்.
பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் அவளே ஆரம்பித்தாள் நக்கலாக . ஆமாம் உன் ரெண்டு வளர்ப்புத்தாய்களுக்கும் இடையில பிரச்சினை போல. சொசையிட்டியே பேசிக்குது. போனவாரம் எ பிளாக்ல நடந்த சத்திய நாராயண பூசையிலும் ரெண்டு பேரும் தனித்தனியே உக்காந்திருந்தாங்களாம்.
இருக்கலாம் நான் போகல. இது என் பதில்.
இன்னிக்கு சாயங்காலம் என் வீட்ல சுந்தரகாண்ட் வச்சிருக்கேன். என் பையன் பிறந்த நாளுக்காக. அவசியம் நீ கலந்துக்கோ. அதச் சொல்லத்தான் வந்தேன். அவங்க ரெண்டுபேரையும் சேத்து கூட்டிட்டு வா. உன்னால மட்டுந்தான் முடியும். அவங்களுக்கு நான் தனித்தனியா போன்ல சொல்லிட்டேன். மறந்துராத மூணு பேரும் சேந்து வரணும். அவங்க ரெண்டு பேரும் சேந்துதான் ஆரத்தி பாட்டு பாடணும். உன் பொறுப்பு புரிஞ்சுதா. அவள் போய்விட்டாள்.
நல்ல சந்தர்ப்பம் என நினைத்து கீழ்த்தளத்தில் இருக்கும் கரீமா ஆண்டி வீட்டுக்குப் போனேன். முன்ன மாதிரியில்ல அவங்க முகம். ஏதோ குழப்ப ரேகை. ஆமா சுசீலா நீ போட்டிருக்கிற சிவப்பு வளையல் ராஜஸ்தானி குடுத்ததுதானே.
என்ன ஆச்சரியம். கரிமா ஆண்ட்டிக்கு. பெயரைச் சொல்லாமல் ராஜஸ்தானி என்கிறாள். அந்த வளையல்களை என் கையிலிருந்து கழற்றி வெளியிலிருந்த வாழை மரத்தடியில் வைத்து விட்டாள். அப்பறம்தான் அவளுக்கு நிம்மதி.
இந்த பாரு சுசீலா உங்க தமிழ்நாட்ல எப்படியோ தெரியாது ராஜஸ்தான்காரங்க ரொம்ப வசியம் பண்ணுவாங்க. அவங்க குடுக்கற குங்குமம், வளையல் எதையும் இனிமே வாங்காத புரிஞ்சுதா. வீட்ல ஏதும் வாங்கி வச்சிருந்தன்னா வாழ மரத்தடியில வச்சிடு. தானம் குடுக்கறேன்னு அவங்க பாவத்தயெல்லாம் மத்தவங்கமேல ஏத்தி உட்டுருவாங்களாம்.
நான் ஏன் பிரியான்ஷிகிட்ட பேசலைனு உனக்குத் தெரியாது. இப்போ சீதளா மாதாக்கு பண்டிகை வந்திச்சுல்ல அப்போ அந்த அம்மனுக்கு சாதம் படைச்சு அத அக்கம்பக்கத்து கன்னிப்பெண்களுக்கு சாப்பிடக்குடுத்தாங்க. இது எல்லா வருசமும் அந்த அம்மா செய்யறதுதான்.. ஆனா இந்த வருசம்தான் எனக்கு இந்த உண்ம தெரிஞ்சது. அவங்கவீட்டு வாசல் சுவத்துல குங்குமத்தால ஸ்வஸ்திக் வரைஞ்சு வச்சி பிரசாதத்த மத்த பிள்ளைகளுக்குக் கொடுத்துட்டா அவங்க வீட்ல யாருக்கும் அம்மை நோய் வராதாம். அத அந்த அம்மாவே பேச்சு வாக்ல சொல்லிச்சு. அப்பறம் தான் நான் நம்ம டாலி கிட்ட விசாரிச்சேன். அவதான் ராஜஸ்தான் மக்களப் பத்தி நிறையகதை சொன்னா.
இவ்ளோ நாள் நான் அந்த அம்மாவ நம்பி நிறைய வாங்கி சாப்பிட்டிருக்கேன். எனக்கு என்னவெல்லாம் வசியம் வச்சுச்சோ. இப்பயெல்லாம் என்னால பத்து சப்பாத்தி தொடர்ந்து இட முடியல தெரியுமா. மாவு பிசிஞ்சா விரல் எல்லாம் மடங்கி நிக்குது. முன்ன மாதிரி சக்தியேயில்ல.
ஓ இவ்வளவுதானா. டாலி ஊர்வம்புக்காரினு கேள்விப்பட்டிருக்கேன். இவங்கசண்டையில அந்தஅம்மா டைம்பாஸ் பண்ணுது போல.
நான் ஆரம்பித்தேன். ஆண்ட்டி எங்க ஊர்ல ‘இருளின் இருந்தும் வெளி னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. பயம் உள்ளவங்க நெசமான ராத்திரி நேரத்து இருட்டுல கோட்டைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு இருந்தாலும் பாதுகாப்பா இருக்கோம்னு நம்பாம எதிரி நம்மள அழிச்சிருவானோனு பயப்படுவாங்களாம்.
உங்களுக்குதான் டாலி ஆண்ட்டி பத்தி தெரியுமில்ல. அப்பறம் எதுக்கு அவங்க பேச்ச நம்பறீங்க. இப்ப நீங்க ராஜஸ்தானப் பத்தி சொன்னதெல்லாம் அவங்களோட நம்பிக்கை. அதுமாதிரி வேற யாரோ உங்க பீஹார்காரங்களப் பத்தியோ அல்லது எங்க தமிழ் நாட்டுக்காரங்களப் பத்தியோ தப்பா சொல்லிக்கிட்டு அலையலாம். அதுக்கெல்லாம் பயந்தா எப்படி. ஒவ்வொரு இடத்திலயும் ஒவ்வொரு வழிபாடு. அதுமாதிரி அவங்களுக்கு சீதளாதேவி வழிபாடு. உங்களுக்கு வயசானதால ரொட்டிமாவு பிசிய முடியல கை வலிக்குது. எல்லாத்தையும் ஒண்ணா யோசிச்சு குழப்பிக்கிறீங்க. இன்னிக்கு சாயங்காலம் நித்திகா வீட்டு கீர்த்தன்ல ரெண்டுபேரும் ஒண்ணா உக்காந்து ஜய் ஜகதீசஹரே னு ஆரத்தி பாட்டு பாடுங்க. நான் டோலக் அடிக்கறேன். எல்லாம் சரியாயிடும். சொல்லிவிட்டு நடந்தேன்.