அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 16 (ஐயர்)

0

ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

சிறுபாத்திர வரிசையில் தந்தையை அடுத்து நிற்பவர் ‘ஐயர்’. இத்தொகைப் பாத்திரம் எந்தப்  பாடல் காட்சியிலும் நேரடியாக  இடம் பெறவுமில்லை; எங்கும் பேசவுமில்லை; பேசியதாகக் கூறப்படவுமில்லை. ஆனால் தலைவன், தலைவி, தோழி,  மூவரின் பேச்சிலும் ஐயரைப் பற்றிய குறிப்புகள்  உள்ளன.

‘ஐயர்’- பொருள் பரப்பும் விரிவும்

ஐயர் எனும் சொல் இன்று தமிழகத்தில் ஒரு  சமூகத்தைக் குறிக்கும் சொல் ஆகும். செவ்விலக்கியக் காலத்தில் அண்ணன்களுக்கு உரிய உறவுமுறைப் பெயராக இருந்து; பின்னர் அண்ணன்மாரோடு கிளையையும் சேர்த்துச் சுட்டுவதாக விரிந்து; தொடர்ந்து தலைமைத்தன்மை உடையோர்க்குப் பொருந்துவதானது. இப்படிச் சில படிநிலைகளைத் தாண்டித் தந்தையைக் குறிக்கவும் எடுத்தாளப்பட்டுள்ளது. இன்றும் தந்தையைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகச் சில சமூகங்களில் ஐயா என்னும் விளிமுறை வழங்கி வருகிறது.

தம் + ஐயன் = தமையன்

தமையன் என்பவன் அண்ணன் ஆகையால்;  ஐயன் அண்ணன் ஆவான்.  பன்மைப்பொருள் பெறும்  போது இச்சொல் ஐயர் ஆகும். இச்சொற்பிரிப்பு முறையை ஒத்துக் கொள்ள ஏதுவாக; நச்சினார்க்கினியரும் அவரை ஏற்றுத் தொடர்ந்த இளவழகனாரும்;

“என் ஐயர்க்கு உய்த்துரைத்தாள் யாய்” (கலி.- 39)

என்ற பாடலடியில் இடம்பெறும் ‘ஐயர்’ அண்ணன்மார் என்கின்றனர்.

அகநானூற்றுக்கு இணைந்து உரையெழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ரா. வேஙகடாசலம் பிள்ளையும்;

“மால் இருள் நடுநாள் போகித் தன் ஐயர்
காலை தந்த கணைகோட்டு வாளைக்கு” (அகம்.- 126)

என்ற அடிகள் இடம்பெறும் பாடலுக்குக்  ‘காவிரியின் மடுவில் நிலை கொள்ளாத நீரிடத்து இரவில் சென்று காலையில் தமையன்மார் கொண்டுவரும் கோடுகளை உடைய வாளைமீனுக்குப் பண்டமாற்றாகப் பாண்மகள் நெல்லை வாங்க மறுத்து; முத்துக்கள் பதித்த அணிகலனை வாங்கினாள்’ என்று பொருள் கூறியுள்ளனர். பின்புலமாக  ஐயரின் செயல் இடம்பெறும் இப்பாடல் பாணர் குலப்பெண்ணின் இயல்பான ஆசையை அழகாகக் கூறியுள்ளது.

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த வேளாண்மைச் சமுதாயத்தில் இச்சொல்லின் பொருள் விரிந்து  மாற்றமடைந்தது. உடன்பிறந்த அண்ணன்மார் மட்டுமின்றி ஒன்றுவிட்ட அண்ணன்கள், தந்தையின் உடன்பிறந்தோர் அனைவரையும் குறிக்கும் பொதுச்சொல்  ஆகியது. தந்தையின் பெருமை தன் பங்காளிகளாகிய கிளையைத் தாங்கும் வாழ்க்கை முறையில் உள்ளதாகவே அகப்பாடல்கள் சுட்டுவதை முன்னர்க் கண்டோம். (அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 கிளை). கிளையையும் ஐயரையும் வேறுபடுத்தும் கூறு எது என்று சிந்திக்கும் போது; ஆண் முதன்மைச் சமுதாயத்தில் சொத்தைப் பங்கீடு செய்யும் உரிமையுள்ள பங்காளிகளை மட்டுமே கிளை என்னும் உறவைமுறை குறிக்க; ஐயர் தலைவியின் உடன்பிறந்த சகோதரர்களையும்  சேர்த்துச் சுட்டப் பயன்படும் பெயராக உள்ளது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைகளில் எத்திணையாயினும் பங்காளிகளோடு சேர்ந்து தொழில் செய்தமையைக் கிளை என்னும் சிறுபாத்திரம் மூலம் அறிகிறோம். புன்செயில் தினை விதைக்கும் நடைமுறையைச் சொல்லும்;

“இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத” (நற்.- 122)

என்ற கூற்று; வேளாண்மையில் கூடிப்  பாடுபட்டவர் உடன்பிறந்தோரும் கிளையும் சேர்ந்த தொகுதி என்று எண்ண இடமளிக்கிறது. கடலில் மீன்பிடிக்கும் வேட்டையைப் புனையும் போதும்;

“பன்மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே” (குறுந்.- 123);

என்ற பரதவப்பெண்ணின் கூற்றில் அதே உறவுத் தொகுதியைப் பொருத்தி வைத்து எண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை. குறமகளை எண்ணி மாந்தளிரிடம் பேசும் தலைவன்;

“கணமா தொலைச்சித் தன் ஐயர் தந்த” (ஐங்.- 365)

‘நிணவூனை உணக்குகிறாள்’ என்று சொல்லும் தலைவியின் செய்கையோடு தொடர்புறுபவர்  அவளது தமையரும் கிளையும் ஆவர் என்றே எண்ண வைக்கிறது.

வெற்றிகரமாக அறத்தொடு நின்று காரியம் சாதித்த தோழி பொதுவனாகிய ஆயர் குலத்தலைவனுக்கு மணமுடிக்க அடை சூழ்ந்தார் யார்யாரென்று தலைவிக்கு எடுத்துக்கூறும் போது; தந்தையும்;

“ஐயன்மார் எல்லாம் ஒருங்கு” (கலி.- 107)

என்கிறாள். இங்கு தமையரோடு தந்தையும் கிளையும் சேர்ந்து பாக்கு வெற்றிலை மாற்றிக் கொண்ட சுபநிகழ்ச்சியே வருணிக்கப்படுகிறது.

தலைமைத் தன்மைக்கு உரிய பெயர்ச்சொல் ஆதலால்; அறிவுடையோரைக்  குறிப்பதற்கும் ஐயர் என்ற சொல்  பயன்பட்டமை;

“ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை” (குறிஞ்சி.- அடி- 17)

என்ற தோழி கூற்றால் தெரிகிறது. அணிகலன் கெட்டால் திருத்தி விடலாம்; சால்பு முதலிய மக்கட்பண்புகள் கெட்டால் அதை நீக்கிப் புகழை நிறுவுதல் குற்றமில்லாத அறிவுடையோர்க்கும் அரிது என்பது அவள் வலியுறுத்தும் கருத்து ஆகும். இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் உடன்போக்கைத் தவிர வழியே இல்லை என்ற சூழல் உருவாகும் போது;

“………… …………. …….நின் ஐயர்

புலிமருள் செம்மல் நோக்கி” (அகம்.- 259)

நீ அஞ்சிப் பின்வாங்காதே; துணிந்து தலைவனோடு சென்று வா எனத் தூண்டும் தோழி; ஐயரின் ‘செம்மல்’ என்று செறிவாகக் கூறுவது; புலியை ஒத்த அச்சம் தரும் தலைமைப் பண்பைக் குறிக்கிறது.

தான் பிடித்து வந்த பல மீன் தொகுதிகளைத் தந்தை தமையர்க்குக் காட்டுவர் என்ற நிகழ்வுப் புனைவில்;

”பல்மீன் கூட்டம் என் ஐயர்க் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே” (அகம்.- 240)

என்று இரவுக்குறியின் ஏதத்தைச் சொல்லும் போது; ஐயரும் தந்தையும் வேறுபிரித்துக் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் தந்தை களிற்றின் முகத்தைப் பிளந்த அம்போடு கொலைத்தொழில் தவிர வேறேதும் தெரியாத ஏவலருடன் விலங்கின் பின் சென்று விட்டதைத்  தோழி கூறும் போது “ஐயும்” (நற்.- 389) என்னும் உறவு தந்தையைக் குறிக்கிறது.

காலப்போக்கில் ஏற்பட்ட பொருள் மாற்றம்

முருகனைச் சுட்ட ஐயன் என்ற சொல்லைத் தோழி எடுத்தாள்கிறாள்.

“ஐயனை ஏத்துவாம் போல” (கலி.- 43)

வள்ளைப் பாட்டில் தலைவனைப் பாடித் தலைவியின் ஆற்றாமையைப் போக்கியது பற்றித் தோழி சிறைப்புறமாக இருந்த தலைவனுக்கு உணர்த்தும் போது ‘ஐயன்’ முருகன் ஆகிறான். ஏழாம் நூற்றாண்டளவில் துறவிகளைக் குறிப்பதற்கு ஐயர் என்ற பெயர்ச்சொல் வழங்கியது. முருகப்பெருமானின் பன்னிரு கைகளில் ஒன்று;

“விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது”  ( அடி- 107- திரு.).

திருமுருகாற்றுப்படை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது; அதனால் தான் அதைப் பாடியவர் நக்கீர தேவ நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இங்கு முருகனின் ஒரு கை துறவிகளுக்கு அருள் பாலித்தது என்றே பொருள் கிடைக்கிறது. தீமுறை வழிபாடு செய்யும் இருடிகளை;

“ஐயர் அவிர் அழல் எடுப்பரோ”  (கலி.- 130)

என்று பாடியிருப்பதால் ‘ஐயர்’ வேதியரைக் குறிக்கத் தொடங்கியமையும் காண இயல்கிறது. வையை வெள்ளத்தில் நறவு கலந்ததால்;

“ஐயர் வாய் பூசுறார் ஆறு” (பரி.- 24)

என அந்நீரை வைத்து வாயைத் தூய்மைப்படுத்த இயலாத பார்ப்பனர் பற்றிப் பேசுவதையும் காண்கிறோம். கலித்தொகையும்  பரிபாடலும்  பிற தொகை நூல்களைக் காட்டிலும்  காலத்தால் பிற்பட்டவை  என்பதற்கு இந்தப் பொருள் மாற்றம் தக்க சான்றாகிறது.

தலைவன் கூற்றில் ஐயர்

கடக்கவியலாக் காமநோயால் தலைவியை மீண்டும் ஒருமுறை துய்க்க விரும்பும் தலைவனிடம் பாங்கன்; அதனால் ஏற்படும் இன்னல் என்ன என்பதைக் கூறி மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறான். தலைவனுக்கும் அவளது ஐயர் பற்றி நன்கு தெரியும். அவர்கள் வில்லேந்திச் சீழ்க்கை ஒலியுடன் வேட்டையாடும் போது; தன் இனத்தைப் பிரிந்த பெண்மானுக்கு எதிரிலேயே அதன் இணையாகிய கலைமானை அம்பால் வீழ்த்துவர். அத்தகைய ஈரமில்லாத வாழ்க்கை முறையுடைய வேட்டுவர் இனத்தைச் சேர்ந்தவள் தலைவி. ஆனாலும் அவளது கண்ணழகு அவளை மறக்கவொட்டாமல் தடுக்கிறது. அந்தக் கண்களின் செவ்வரிகள்; அவளது ஐயர் தாம் கொன்ற கலைமானின் உடலினின்று  அம்பைப் பிடுங்கி எடுக்கும்போது; அதில் படர்ந்திருக்கும் குருதிச் சிவப்பினை ஒத்தவை; தலைவனின் மனக்கண்ணை விட்டு அகலாதவை.

“புன்கண் மடமான் நேர்படத் தன் ஐயர்
சிலைமான் கடுவிசைக் கலைநிறத்து அழுத்தி” (குறு.- 272)

என்று தோழனிடம் தன் காதலின் வேதனையைக் கூறும் தலைவன் ‘ஐயர்’ என்று சுட்டுவது தலைவியின் தமையன்மாரையும் கிளையையும் உளப்படுத்தும் கூட்டத்தை  ஆகும்.

தலைவனின் கூற்றை ஆழ்ந்து நோக்கும் போது இன்றைய செய்தித் தாள்கள் சித்தரிக்கும் கௌரவக் கொலைகள் நம் மனக்கண்ணில் தோன்றித் திடுக்கிட வைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. இனத்தைப் பிரிந்த பெண்மானுக்கு எதிரிலேயே ஆண்மானைக் கொல்வது; தலைவி தன் சுற்றத்தை விட்டுத் தலைவனுடன் சென்றால்; அவனும் அந்த ஆண்மானைப் போல் அவர்களது அம்புக்கு இரையாக வேண்டியிருக்கும் என்ற மறைபொருளைச் சொல்லாமல் சொல்கிறது. அதுமட்டுமன்று; பாய்ந்த அம்பைப் பிடுங்கும் கொடுமையில்; தலைவியின் கண் முன்னர் தலைவன் சித்ரவதைப்பட்டு உயிரை விட வேண்டிய சூழலும் ஏற்படும் என்ற உறுதியான எதிர்பார்ப்பை உள்ளுறையாகக்  கொண்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டு காலமாகத் தமிழ்ச் சமூகத்தில் நடக்கும் காதல் திருமணம் தொடர்பான நடப்புகள் சற்றும் மாறுபடவில்லை என்ற உண்மை இப்பாடலில் பொதிந்துள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகள்  ஆனாலும் பண்பாட்டு வரையறைகளும் வாழ்க்கை முறையும் எளிதில் மாறுவதில்லை. அவ்வளவு சீக்கிரம்  மாறுபாட்டுக்கு  மனிதமனம் ஒப்புவதும்  இல்லை.

தலைவி கூற்றில் ஐயர்

குறமகள் மலைப்புறத்தில் விதைத்த தினை முற்றியமை பற்றிப் பேசும் போது;

“இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத” (அகம்.- 302)

என்று உழவுத்தொழிலை இணைந்து செய்யும் உறவுக் கூட்டத்தைக் குறிப்பிடுகிறாள்.

தோழி கூற்றில் ஐயர்

மணவாழ்வில் கணவனின் புறத்தொழுக்கத்தால் நொந்து மன அழுத்தத்திற்கு ஆளான பரதவப்பெண் தன் மனஇறுக்கம் தளரத் திருமணத்திற்கு முன்னர் தான் வைத்து விளையாடிய பாவையை எடுத்துக் கொண்டு  தோழியைக் கழிக்கரைச் சோலைக்கு அழைக்கிறாள். அவளது ஐயரோ மீன் வேட்டையும் சுறாக்களைக் கொல்லுதலும் தவிர வேறேதும் அறியாத சினமிகுந்தவர் ஆவர்.

“கல்லாக் கதவர் தம் ஐயர் ஆகவும்” (நற்.- 127)

எனத்; தலைவியின் தமையன்மார்க்கு விபரம் தெரிந்தால் நேரவிருக்கும் முட்டல் மோதல் இங்கு பட்டும்படாமல் எடுத்துரைக்கப்படுகிறது. தலைவன் தவறே செய்யாதவன் போல வாயில் வேண்டி நிற்கிறான். தோழி கழியில் ஆர்ந்த நாரை இறகை உலர்த்தும் போது; சிதறித் தெறிக்கும் நீர்த்துளி நடுக்கத்தை ஏற்படுத்தும் நெய்தல் பின்புலத்தைச் சொல்லி; அவனது பொய்யால் மனம் நடுக்குறுவதை உள்ளுறைத்து உரைக்கிறாள். ஐயர் சினம் பற்றிய பேச்சு தலைவனை மெல்ல மிரட்டும் தொனியில் அமைந்துள்ளமை இப்பாடலின் சிறப்பம்சமாக உள்ளது.

கொழுநன் தொழலும் ஐயர் வளமும்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தலைவி தலைவனுக்குக் கற்புக்கடம் பூண்ட வரலாறு தோழிக்குத் தெரியும். சிறுகுடி மக்கள் அலருக்குக் காரணம் உள்ளது. அதைத் தலைவியின் ஐயர்க்குப் பூடகமாகச் சொல்ல முனையும் தோழி அறத்தொடு நிற்கிறாள்.

“தாம் பிழையார் கேள்வர் தொழுது எழால் தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்”   (கலி.- 39)

என்று சாமர்த்தியமாகக் காய் நகர்த்துகிறாள்.  குறமகளிர் தம் தலைவரைத் தப்பாமல் தொழுது வணங்க; அவரது அண்ணன்மார் குறி வைத்து எய்யும் அம்பு தப்பாது என்கிறாள். அவளது நோக்கம்; தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்பதே. தலைவியைப் பெண்கேட்டு வருகிறான் கானகல் நாடன் மகனாகிய தலைவன். தான் காப்பாற்றிய குறமகளுடன் இயற்கைப் புணர்ச்சி நடந்தேற; அறிவன், பெற்றோர், சுற்றம், ஊர்ப்பெரியோர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வரும் அவனிடம் மறுக்காமல் மகட்கொடை நேர வேண்டும் தலைவியின் ஐயர்.  அதைச் சாதிக்க; ஒரு சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் உத்தியாகத்; தலைவி அவனைக் கணவனாக வாய்க்கப் பெற்றுத் தொழுதால் சிறுகுடியில் மழை பொழிய வைக்கும் திறனுடையவள் ஆவாள் என்கிறாள் தோழி.  இக் கூற்றும் கொள்கையும் தோழியின்  சொல்வன்மை என்று விளக்கப்பட்டது அந்தக் காலம். இதைப் பெண்மொழி என்று பெயர் சூட்டி ஆராய்வது இந்தக் காலம்.

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது  எழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை”

என்று திருவள்ளுவர் பாடிய பொருளின் வேர் தொகை இலக்கியத்தில் தான் இருக்கிறது. அதுவும் ஆணாதிக்கவாதிகளின் கொள்கையாக இல்லை. பெண்மை தன் காரியத்தைச் சாதிக்கக் கையாண்ட உத்தியாகக் காணப்படுகிறது. எந்த அளவுக்குப் பெண்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி உள்ளனர் என்பது; திருவள்ளுவர் போன்றோர் அதை நம்பிக்கையோடு பாடியுள்ளனர் என்பதிலிருந்து தெரிகிறது.

முடிவுரை

ஐயர் எனும் சொல் செவ்விலக்கியக் காலத்தில் அண்ணன்களுக்கு உரிய உறவுமுறைப் பெயராக இருந்து; பின்னர் அண்ணன்மாரோடு கிளையையும் சேர்த்துச் சுட்டுவதாக விரிந்து; தொடர்ந்து தலைமைத்தன்மை உடையோர்க்குப் பொருந்துவதாகித் தந்தையைக் குறிக்கவும் எடுத்தாளப்பட்டுள்ளது. முருகனையும், துறவிகளையும், வேதியரையும் ஐயர் என்று அழைப்பதைத் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களில் காண இயல்வதால் அவை காலத்தால் பிற்பட்டவை என்று துணியலாம்.  ஆண் முதன்மைச் சமுதாயத்தில் கிளை என்பது தந்தையுடன் சொத்தைப் பங்கீடு செய்யும் உரிமையுள்ள பங்காளிகளை மட்டுமே குறிக்கும் உறவுமுறையாக இருக்க; ஐயர் தலைவியின் உடன்பிறந்த சகோதரர்களையும் சேர்த்துச் சுட்டப் பயன்படும் பெயராக உள்ளது. தலைவி, தோழி, மூவரின் பேச்சிலும் ஐயரைப் பற்றிய குறிப்புகள்  உள்ளன.  ‘தலைவி தலைவனைத் தொழுதால் தான் அவளது ஐயர் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி பெறுவர்’ என்பது போன்ற சாதுர்யமான பேச்சு செவ்விலக்கியக் காலத்தில்  பெண்களாலேயே தம் வசதிக்காக உருவாக்கப்பட்டது என்பதற்குத் தொகை இலக்கியம் சான்றாகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.