பழகத் தெரிய வேணும் – 35
நிர்மலா ராகவன்
மகிழ்ச்சி எங்கே?
`சிலபேருக்குதான் வாழ்க்கை நன்றாக அமைகிறது!’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறவர்கள் பலர்.
வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது.
பிறரால்தான் மகிழ்ச்சியா?
`உனக்கு எப்போது குழப்பமோ, வருத்தமோ ஏற்படும்?’ என்று என் சக ஆசிரியை ஃபாத்திமாவிடம் கேட்டேன்.
“தெரிந்தவர்கள் யாராவது என்னைப் பார்த்துவிட்டு, சிரிக்காமல் போனால் வருத்தமாக இருக்கும்,” என்றாள்.
நம்மைக் கடந்து செல்பவர்கள் ஆழ்ந்த சிந்தனையிலோ, ஏதாவது குழப்பத்திலோ இருக்கலாம். இது புரியாது, அவர்களுக்கு நாம் ஒரு பொருட்டாகப் படவில்லையே என்ற வருத்தம் எழுவது எதற்கு?
நம் மகிழ்ச்சிக்குப் பிறரை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் எழும்.
செல்வத்தால் மகிழ்ச்சி?
பெரும் செல்வந்தர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், சிலருக்கு அது ஒரு பொழுதுபோக்கு, வெறும் விளையாட்டு என்றே தோன்றுகிறது. பிறரை வெல்லவேண்டும் என்ற ஓயாத துடிப்பு வேறு.
எத்தனை கோடிச் செல்வம் இருந்தாலும் பேராசை அடங்குவதில்லையே, பொருளீட்டுவதால் மகிழ்ச்சி எப்படிக் கிட்டும்?
இலக்கு
வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமானால் ஓர் இலக்கு அவசியம். அது பெரிதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. `நாளை என்ன செய்யலாம்?’ என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிக்கொண்டு, உபயோகமான காரியம் எதையாவது யோசித்துவைத்தாலே போதும்.
நமக்குப் பிடித்த காரியத்தைச் செய்யாது, பிறருக்காக விட்டுக்கொடுத்தால், நம் மகிழ்ச்சி பறிபோய்விடும்.
பெண் எழுத்தாளர்களின் சங்கடம்
பெண்கள் எழுத்துத்துறையில் ஈடுபட்டு, `எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு,’ என்பதுபோல் எழுதினால், ஆண்களின் கண்டனத்துக்கு ஆளாகிறார்கள்.
“நீங்க எழுதறமாதிரி, ஆண்களைக் குறை சொல்லலாமோ, கூடாதோன்னு பயந்துக்கிட்டிருந்தேன்,” என்று ஒரு பெண்மணி தயங்கியபடி என்னிடம் தெரிவித்தாள்.
“தப்பு செய்யறதிலே ஆண் என்ன, பெண் என்ன? நான் ரெண்டு பேரைப்பத்தியும் எழுதறேனே!” என்றேன்.
உண்மையாக நடந்த ஆண்களின் உரையாடல் (ஆங்கிலத்தில்):
“நிர்மலா ராகவன்னு ஒரு காரக்டர். உங்களுக்குத் தெரியுமா?”
“கேள்விப்பட்டதேயில்லை!” பதில் கூறியது என் கணவர்.
“அவங்க எழுத்தைப் படிக்கும்போது கோபம் வருது. ஆனா, அதிலே உண்மை இருக்கு. அதனாலதான் எரிச்சலா இருக்கு”.
இப்படியெல்லாம் விமரிசனத்துக்கு ஆளாகப் பயந்தே பல பெண்கள் தம் ஒவ்வொரு எழுத்தையும் தாமே தணிக்கை செய்துகொள்கிறார்கள். நிறைவு எப்படிக் கிட்டும்?
“நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்காதே. எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்று புரிந்துகொள்,” என்று எழுத்தின்மூலம் என்னைக் கண்டித்தாள் விரிவுரையாளர், கொடீஜா (KODIJAH), ஒரு மேற்பயிற்சியின்போது.
கற்பனைத்திறன் வளர, நம்மைச் சுற்றி நடப்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். `ஏன்?’ `எப்படி?’ என்ற கேள்விகளைக் கேட்டாகவேண்டும். அவளுக்கு அது தெரியவில்லை.
அத்துடன், பிறர் எப்படி நடக்கவேண்டும் என்று குறை கூறிக்கொண்டிருப்பது வீண். நமக்கு நேரம் அதிகமில்லையே! நம் வாழ்க்கையை ஒழுங்காக வாழ்ந்தால் போதாதா?
கதை
என் ஒரே மகனைச் சிறுவயதிலேயே பறிகொடுத்த துக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். ஈராண்டுகள் கழிந்தபின்னரும் துக்கம் குறையவில்லை.
எப்போதும்போல் ஏதாவது புதினத்தைப் படிக்கலாம் என்றால், அதில் `மரணம்’ என்று ஒரு வார்த்தை கண்ணில் பட்டால் போதும், கண்ணில் நீர் வழியும்.
துக்கம் தொண்டையை அடைக்க, பாடவும் முடியவில்லை. வெறி பிடித்தவள்போல், காலால் தரையில் அழுந்தத் தட்ட, ஓரளவு சமாதானம் ஆகியது.
என் பெற்றோரைப் பார்க்க மலேசியாவிலிருந்து இந்தியா சென்றபோது, முதலிலேயே நிச்சயித்துக்கொண்டேன், மீண்டும் நாட்டியம் பயிலவேண்டும் என்று.
சிறு வயதிலேயே மூன்று ஆண்டுகள் முறையாகக் கற்றிருந்தாலும், வெளியில் ஆட என் தந்தை அனுமதிக்கவில்லை. (அந்தக் காலத்தில், ஆடத் தெரிந்தவர்களை சினிமாவில் நடிக்க அழைப்பார்கள். குடும்ப கௌரவம் என்ன ஆவது?).
சாயந்திர வேளைகளில், என் பெற்றோர் காய்கறி வாங்க வெளியில் போவது வழக்கம். அப்போது, திருட்டுத்தனமாக ஆடி மகிழ்வேன்.
மூச்சிறைக்க வந்து, நான் கதவைத் திறக்கும்போது, அம்மா சந்தேகத்துடன் பார்ப்பாள். “ஆடிண்டு இருந்தியா?”
சிறு குழந்தைபோல், “இல்லியே!” என்று பொய் சொல்ல வேண்டியிருக்கும். ஆனாலும், என் முகமலர்ச்சி காட்டிக்கொடுத்துவிடும்.
பள்ளியில் ஆண்டுவிழாவில் ஆட என்னைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்பாவுக்குத் தெரியாமல் ஒத்திகைக்குப் போனால், பிரச்னை வராது என்று நினைத்தோம்.
விழா முடிந்து, வீடு திரும்பியபோது, “இன்னிக்கு என்ன, லிப் ஸ்டிக்?” என்று அப்பா கேட்டபோது, “சொல்லமாட்டேன், போ!” என்று சிரித்தேன். அப்பாவும் சிரித்தார். அவருக்கும் தெரிந்திருக்கிறது!
ஆனால், 41 வயதில், `மீண்டும் ஆடக் கற்கப்போகிறேன்,’ என்று நான் அறிவித்தபோது, யாரும் தடை சொல்லவில்லை.
பிடித்த காரியத்தில் மீண்டும் ஈடுபட்டதால், இழந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் திரும்பின.
மணவாழ்க்கையால் கட்டுப்பாடு
திருமணமானபின் கணவனும் புக்ககத்தினரும் எப்படி நடத்துவார்களோ, மகளின் மகிழ்ச்சி பறிபோய்விடுமோ என்று அஞ்சியே பல பெற்றோர் பெண்களைச் செல்லமாக வளர்ப்பார்கள்.
கதை
என்னுடன் கல்லூரியில் படித்த ரோகிணியின் திருமணத்திற்குப் போயிருந்தேன்.
“ரோகிணியின் சிநேகிதி,” என்று அவள் தாய் மாமியாரிடம் அறிமுகப்படுத்தினாள்.
அந்த அம்மாளோ, உதட்டைச் சுழித்தபடி, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
வீடு திரும்பியதும், “ஏம்மா அப்படிப் பண்ணினா?” என்று என் தாயிடம் கேட்டேன்.
மருமகள் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும், `சிநேகிதி’ என்று யாராவது அவளுடன் சேர்ந்துவிட்டால், அவள் பலம் பெற்றுவிடுவாளோ என்ற பயமாம்!
அப்படிப்பட்ட சூழ்நிலையில், ரோகிணி பிறர் சொற்படிதான் நடக்கவேண்டியிருக்கும்.
ஆக்ககரமான எண்ணங்கள் புத்துணர்ச்சி ஊட்டவல்லவை. ஆனால், அவைகளை நனவாக்க தகுந்த சூழ்நிலையும் அவசியம் அல்லவா?
புத்திசாலியான ரோகிணியின் கண்களில் ஒளி மங்கிப்போக, `வாழ்க்கை ஏதோ நடக்கிறது,’ என்று சலித்தபடி இனி நாட்களை ஓட்ட வேண்டியிருக்குமோ என்ற பரிதாபம் எழுந்தது.
பிறருடைய அறிவுரையை எப்போதும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் தனியாக மூளை எதற்கு?
நன்மை பிறருக்கு, மகிழ்ச்சி நமக்கு
நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அதற்காக நம்மால் இயன்றதைச் செய்ய முயல்வோம். அதனால் நம் மகிழ்ச்சி இன்னும் கூடுகிறது.
இறந்தபின், எனது உடலின் ஆறு பாகங்களைத் தானம் செய்வதாக எழுதிக் கொடுத்ததும், `இவை பிறருக்குச் சேர வேண்டியவை,’ என்ற பிரக்ஞை எழுந்தது. `இந்த உடலைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும்,’ என்ற உறுதியும் ஏற்பட்டது.
வாழ்க்கையில் இன்பத்தை மட்டுமே எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். துயரத்திலிருந்தும் கற்கலாமே!