Category: போட்டிகளின் வெற்றியாளர்கள்

போட்டிகளின் வெற்றியாளர்கள்

  • படக்கவிதைப் போட்டி 255-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 255-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கருமுகில்களுக்குப் பின்னே காய்கதிர்ச் செல்வன் தன் ஒளிமுகத்தை ஒருசிறிதே காட்டுவதைத் தம் புகைப்படக் கருவிக்குள் பத்திரப்படுத்தி வந்திருப்பவர் திரு. பார்கவ் கேசவன். இந்தப் படத்தை படக்கவிதைப் போட்டி 255க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

    இந்தப் படத்தைக் காணும்போது எனக்குக் கபிலர் பெருமான் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கதிரவனோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதனினும் விஞ்சுபுகழ் கொண்டவன் வாழியாதன் என்று அவனை விதந்தோதுவது நினைவுக்கு வருகின்றது.

    ”……ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
    கடந்தடு தானைச் சேரலாதனை
    யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்
    பொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி
    மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி

    அகல்இரு விசும்பி னானும்
    பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.”
    (புறம் – 8)

    இனி இப்படம் குறித்து நம் இனிய கவிஞர்களின் கற்பனைத் திறத்தினைக் கண்டு வருவோம்!

    *****

    மூன்று முத்தான கவிதைகளை வடித்திருக்கும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய முதற் கவிதையில் அக்னி குண்டமாய்த் தழல்வீசும் வானில் எட்டிப்பார்க்கும் நிலவைத் தம்மோடு கைகோத்து இல்லம்வர அழைக்கின்றார்.

    இரண்டாவது கவிதையில் வானில் தெரிவது சந்திரனா சூரியனா என்று ஐயவினாவெழுப்பி இவையிரண்டும் மந்திரமும் தந்திரமுமாக வாழ்வை இயக்குபவை என்று முடிக்கின்றார்.

    மூன்றாவது கவிதையில் ”நிலவே நீ முழுதாய் முகம் காட்டு! அந்தி இருள் ஓட்டு!” என்று நிலவை வாஞ்சையாய் அழைக்கின்றார்.

    செந்தழல்
    புடத்திலிட்ட தங்கம்
    அக்னிக் குண்டம்
    செங்கதிர்
    இவைகளின் வர்ணம்
    இவ்வழகிய புகைப்படத்தில்

    இதனூடே எட்டிப் பார்க்கிற சந்திரன்
    உலகின் இரவு நேர ஒளிக்குத் தயாராகி
    அதிகாலை வரை வானில் தவழ்ந்து
    இளம் மாலை வரை ஓய்வெடுத்து
    இரவுக்கு தயாராவான் தினமும்

    அழகிய நிலவே
    என் கைகளைக் கோத்துக் கொள்
    என்னுடனே வா என் இல்லம் செல்ல
    ஏகபோக உரிமை எனதாக்கிக் கொள்ள!

    *****

    காலைநேரக் கதிரவனா?
    மாலைநேரச் சந்திரனா?
    தகதகக்கும் நிறம் இரண்டும்
    மினுமினுக்கும் ஒளி இரண்டும்
    கதகதக்கும் குளிர் இரண்டும்
    கொதிகொதிக்கும் தணல் இரண்டும்
    இடைவிடாது உலகை இயக்கும் இவர்களே
    மனித வாழ்வில் மாற்றங்களைத் தரும் கோள்களே
    ஆம் கதிரவன் சந்திரன்
    வாழ்வின் மந்திரம் தந்திரம்!

    *****

    தங்க நிலா வெள்ளி நிலா
    வட்ட நிலா வடிவழகு நிலா
    மாய நிலா மவுசு நிலா
    ஒளிரும் நிலா எண்ணத் துளிரும் நிலா

    நிலா நிலா நீ இலா இலா
    நாள் இலா இலா வா அருகில் நிலா நிலா
    செவ்வான மேகங்களோடே
    கடலலையினூடே
    முகத்தை மட்டும் காட்டிடாமல்
    முழுவதுமாய் வா
    மாலை நேரம் மறைந்து
    இரவு வரக் காத்திருக்கு
    இருளை அகற்று ஒளியை ஏற்று!

    *****

    படத்திலிருப்பது கதிரா மதியா என்ற ஐயத்தோடு புகைப்படத்தை அணுகும் திரு. கருணானந்தராஜா, ”நீ கதிராயின் சீறியெழுந்து கொரோனா கிருமியைக் கொன்று உன் திறமையைக் காட்டிடுவாய்!” என்று ஆதவனுக்கு அறைகூவல் விடுக்கின்றார்.

    கதிரே உதவு!

    எல்லையிலாத இவ்வான விளிம்பில்
    இருந்தொளிர் வெண்சுடரே – நீ
    அல்லை (இரவு) முடிக்கப் பிறந்த கதிரோ
    அல்லது வெண்மதியோ
    மெல்ல மறைந்திடப் போகுதியோ இல்லை
    மீண்டெழப்போகுதியோ – என்ன
    சொல்வது என்று புரிகிலன் நானுமுன்
    தோற்றம் புரிந்திலனே.

    ஆதவனாயின் விழித்தெழு -இந்த
    அகிலம் தனை அழிக்க
    பூதமென வந்த பூஞ்சையிலும் சிறு
    பொல்லாக் கொரோனாவெனும்
    பாதி உயிரின் பரவல் தடுத்து இப்
    பாரைச் சுகப்படுத்தும்
    வேதியற் சூழலை ஆக்கிடு நீ இந்தத்
    தீதினைப் போக்கிடற்கே.

    தீச்சுடர் வீசி இவ் வானப்பரப்பினுள்
    சீறி எழுந்திடுவாய் – அலை
    பாய்ச்சி உலகை இயக்கிச் சுகம்பெறப்
    பாதையமைத் திடுவாய்
    மூச்சினில் காற்றில் முகவழியெங்கிலும்
    மூர்க்கமுடன் பரவி – பெரும்
    தீச்செயல் செய்யும் கிருமியைக் கொன்றுன்
    திறமையைக் காட்டிடுவாய்.

    *****

    ”அந்திக் கருக்கும் வானத்திலே சந்திரனை வரவேற்க இயற்கை விரித்த செந்நிறக் கம்பளம் அல்லவோ இது!” என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மந்திரக் கோலம்

    அந்திக் கருக்கும் வானத்திலே
    சிந்தை மயங்கும் வேளையிலே
    சந்திரன் தன்னை வரவேற்க –
    இயற்கை செந்நிறக் கம்பளம் இட்டிருக்கும்

    விந்தைகள் ஆயிரம் செய்து தினம்
    இரவின் வாசலில் செந்நீர் தெளிக்கும்
    முந்தைய தினத்தைப் போல அன்றி – புதுச்
    சிந்தைகள் தோன்றிட வழிவகுக்கும்

    எந்திர வாழ்க்கை மறந்திடுவே
    மந்திர ஜாலங்கள் செய்து தினம்
    சுந்தர நிகழ்வைச் செய்திருக்கும்
    தந்திரன் யார் நீ சொல்லிடுவாய்!

    *****

    ”அந்திவானில் ஆதவனுக்கு மேகங்கள் முகக்கவசம் ஆகி அவனைக் காத்திட, நந்தவனத் தேராய் நிலா வானில் உலாவரும்! பாரினில் நாளும் அரங்கேறும் நாடகமிது!” என்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்க
    உன் கடமை ஆற்றிட
    ஓயாமல் உதித்தெழுந்து
    கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
    தினந்தோறும் ஓடிட
    மெல்ல நகரும் மேகம்
    முகக்கவசமாய் மாறி
    கதிரவன் உன்னைக் காத்திட
    கதிர்வீசும் கரங்களை மடக்கி
    அந்தி சாய்ந்திடும் நேரம்
    நீல வானும் இங்கே
    நிறம் மாறும்
    நந்தவனத் தேராய் வரும்
    நிலவே உன்னழகு மட்டும் மிளிரவே
    இருள் சூழ்ந்து இரவாகும்
    நாளும் இதே நாடகம்
    பாரெல்லாம் அரங்கேறும்
    பகல் இரவாய்
    காலை முதல் மாலை வரை
    வேலை ஏதும் இன்றியே
    இரவு நேரப் பணியாய்
    நிலவு வந்து போகும்
    இயற்கை எனும் நிறுவனத்தில்!

    *****

    செக்கர்வானில் தெரியும் ஒளிப்பிழம்பைக் கதிராகவும் மதியாகவும் வைத்து அழகிய கற்பனைகளைக் குழைத்துக் கவிபுனைந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    இன்ப நாடகம்

    அந்தி வானை
    அழகாக்குகிறது
    அடையும் சூரியன்!

    வந்தவேலை முடித்த
    பகலவனுக்கு
    வாழ்த்துச் சொல்லும்
    பணி நிறைவுப்
    பாராட்டு விழாவுக்கு
    வானமெங்கும்
    வண்ணத் தோரணங்கள்!

    வந்துவிட்டான் தலைவனென
    வானமகளின் வதனத்தில்
    வெட்கச் சிவப்பு!

    இது
    இன்றல்ல நேற்றல்ல,
    காலம் காலமாய்த் தொடரும்
    இயற்கையின்
    இன்ப நாடகம்-
    கண்டு களிப்போமே!

    ”வந்தவேலை முடிந்ததெனப் புறப்படும் கதிரவனுக்கு வானில் தோரணங்களோடு பணிநிறைவுப் பாராட்டுவிழா நடக்கின்றது; தலைவனின் வருகை கண்டு வானமகள் நாணிச் சிவக்கின்றாள்” எனும் அழகிய கற்பனையைக் கவிதையில் செருகியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 254-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 254-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பிரேம்நாத் திருமலைச்சாமியின் கலைவண்ணத்தில் உருவான இந்த நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 254க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. நிழற்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்!

    ”புன்னகையால் அன்னையை மட்டுமல்லாது
    அகிலத்தையே மயக்கிடும் ஆற்றல்பெற்றது கனிமழலை!
    என்றென்றும் நிலைக்கட்டும் இந்த அழகின் சிரிப்பு!” என்று வாழ்த்திவிட்டு, இப்படத்திற்குக் கவிஞர்கள் வடித்துத் தந்திருக்கும் கற்கண்டுக் கவிதைகளைச் சுவைத்துவரப் புறப்படுவோம்!

    *****

    ”அன்னையைப்போல் அல்லாமல் நீ படிப்பில் சிறக்க வேண்டும்; உயர்ந்த நிலையும் கண்டிட வேண்டும்” என்று மழலையிடம் மனந்திறக்கும் அன்னையைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

    உயர் நிலை…

    அன்னை யென்றே ஆக்கியேதான்
    அடுத்த நிலைக்கே உயர்த்திவிட்டாய்,
    என்னைப் போலப் படிப்பறிவில்
    எளிய நிலையிலே விட்டிடாமல்
    உன்னை நானும் படிக்கவைத்தே
    உயர்ந்த நிலையில் வைத்திடுவேன்,
    தன்னை யறிந்திடத் தங்கமேயுனைத்
    தகுந்த முறையில் வளர்ப்பேனே…!

    *****

    அச்சமற்ற பெண்ணாய், மங்காத பொன்னாய், தாழ்வகற்றும் தண்ணிழலாய், மடமையிருள் போக்கும் மாவிளக்காய்த் தன் பிள்ளைக்கனி திகழவேண்டும் என விரும்பும் அன்புத் தாயை நம் கண்முன் நிறுத்துகின்றார் திருமிகு. ச. கண்மணி கணேசன்.

    பிள்ளைக்கனி

    செல்லம்மா – நீ சாதித்துப் பேர்வாங்கப் பிறந்தவள்; உன்சாதனை
    நாலுபேருக்கு வழிகாட்டி ஒளியூட்டுவதாய் இருக்கட்டும்!

    முத்தம்மா – நீ முன்னேறி மின்னப் பிறந்தவள்; உன்பாதை
    தடைக்கற்களைப் படிக்கட்டுகளாக்கும் வித்தையைச் சொல்லட்டும்!

    சின்னம்மா – நீ பதினாறும் பெறப் பிறந்தவள்; உன்இல்லறம்
    ஆலாய்த்தழைத்து அறுகாய்வேரோடி நல்லறம் ஆகட்டும்!

    அன்னம்மா – நீ நிமிர்ந்து நிற்கப் பிறந்தவள்; உன்ஆளுமை
    நாண்அச்சமின்றி மானிடம் மணக்க மிளிரட்டும்!

    தங்கம்மா – நீ என்றுமென் பேர்சொல்லப் பிறந்தவள்; உன்வாழ்வு
    மங்காத பொன்னாய்ப் புடம்போட்டு ஒளிரட்டும்!

    தாயம்மா – நீ தாழ்வகற்றத் தண்ணிழலாய் உதித்தவள்; உன்பிறவி
    சேயாகித் தரணியெங்கும் தமிழ்ப்புகழ் கூட்டட்டும்!

    நல்லம்மா – நீ எதையும் எதிர்கொள்ளப் பிறந்தவள்; உன்மேனி
    வெல்லும் அழகொடு திடம்பெற்றுப் பொலியட்டும்!

    பொன்னம்மா – நீ இலக்குநோக்கிப் பாயப் பிறந்தவள்; உன்மனம்
    மன்னும்விளக்காய் ஆயிரமாயிரம் அகலொளி ஊட்டட்டும்!

    கண்ணம்மா – நீ கற்றுக் கரைசேரப் பிறந்தவள்; உன்கல்வி
    மண்ணின் இருள்போக்கும் மாவிளக்காய்த் திகழட்டும்!

    அமிர்தம்மா – நீ சமைத்துப் பசியாற்றவும் பிறந்தவள்; இப்போது
    என்னிடம் வாநாம் ‘பப்பு கடஞ்சி’ விளையாடுவோம்!

    *****

    ”பாசப் பந்தே! பரிமளமே! பூடணம் வேண்டா ஆடகப் பொன்னே! சாதிக்கப் பிறந்தவள் நீ! உலக சரித்திரம் படைத்துவிடு!” என்று மங்கல மொழிகளால் மழலையை வாழ்த்துகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    பாசப்பந்து நீதானே
    பரிமளமாய் இருப்பவளே
    முளைப்பற்கள் வருமுன்னே
    முகம் சாய்த்துச் சிரிப்பவளே

    தத்தி நடக்கும் கால்களோடு
    தாவிப் பிடிக்கும் கைகளும்
    தாயும் பாசப்பரிவோடு உனை
    தாங்கித் தான் பிடிக்கிறாளோ?

    தங்கம் வெள்ளி உனக்கெதற்கு?
    சர்வ பூஷணம் நீதானே!
    கவலைகள் நூறிருப்பினும் உனைக்
    கொஞ்சி மகிழும் தாயவள்!

    அவள் கனவு என்னவென்று
    கேட்டு நீயும் வளர்ந்திடு
    சாதிக்கப் பிறந்தவள் நீ
    சரித்திரம் படைத்திடு
    உலக மகா சரித்திரம் படைத்திடு!

    *****

    ”அன்னை மடி மெத்தையிலே ஆடிடும் தத்தை எனக்கு அன்னையின் அன்பே உயிர்காப்பு!” என்று தாயின் உயர்வைப் போற்றிடும் சேயைக் காட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    அன்பின் அரிச்சுவடி

    அன்னைமடி மெத்தையிலே
    ஆடுமொரு தத்தை நான்!
    இத்தரையில் பிறந்தவரில்
    ஈடுஇணை அற்றவள் நான்!
    உத்தமராய் இவருமெனை
    ஊட்டி தினம் வளர்த்திடவே
    எத்தனையோ பிறவிக்கடன்
    ஏட்டினிலும் எழுதவொண்ணா
    ஐயிரு திங்கள் வைத்தீன்று
    ஒப்புரவுடனே வாழ்வதற்கு
    ஓயாமல் காத்து நிற்கும்
    ஒளடதமாம் இவர் அன்பெனும்
    ஆயுதமேயென் உயிர் காப்பு!

    *****

    தாய் சேய் உறவை அற்புதமாய்த் தம் பாக்களில் நெய்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    உன்னுதட்டில் தெறிப்பதெல்லாம்
    என்னுயிரின் சிரிப்பு!
    உன்னுருவம் தானடி
    என் விழியின் சிலிர்ப்பு!

    குயிலும் குருவியும்
    சிரிக்கிறது மேலே
    உந்தன் மொழியோ
    புரிந்தது போலே!

    ஆழி அருவியின்
    ஆலாபம் சங்கீதம்
    அத்தனையும் அடங்கியதே
    அழகியுன் ரீங்காரம்!

    மகளே நீயே
    மாயக் கண்ணாடி!
    எந்தன் மறுவுருவைக்
    காட்டிவிட்டாய் முன்னாடி!

    அம்மாவென நானலற – நீ
    ஒருமுறை பிறந்தாயடி!
    அம்மாவென நீயழைக்க – நான்
    ஒவ்வொருமுறையும் பிறக்கிறேனடி!

    ”மகளே! நீயே என் உயிரின் சிரிப்பு, விழியின் சிலிர்ப்பு! மாயக் கண்ணாடியான உன்னில் என்னைக் காண்கிறேன்! நான் அம்மாவென்று அலற நீ பிறந்தாய்! நீ அம்மாவென்று அழைக்கும் ஒவ்வொரு முறையும் நான் பிறக்கிறேன்!” என்று மகளுக்கும் அன்னைக்குமிடையே பின்னிப் பிணைந்திருக்கும் உன்னத உறவை உணர்வுபூர்வமாய் விவரித்திருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 253-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 253-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஆழியும் ஓடங்களும் அவற்றின் அருகிருக்கும் மனிதர்களுமாக ‘ஆழிசூழ் உலகை’க் கறுப்பு வெள்ளை நிழற்படமாக்கி நம் பார்வைக்குத் தந்திருக்கின்றார் திரு. முகம்மது ரபி. இப்படத்தை படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமிகு ராமலக்ஷ்மி. படமெடுத்தவர், அதனைத் தேர்ந்தெடுத்தவர் இருவருக்கும் என் நன்றி!

    ”வாழ்க்கையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
    ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே”
    எனும் பழைய திரைப்படப் பாடல் நினைவலைகளில் மோதுகின்றது.

    கூடவே…” நீர்வழிப் படூஉம் புணைபோல்
    ஆருயிர் முறைவழிப் படூஉம்
    ” எனும் கணியன் பூங்குன்றனின் மணிமொழியும் நெஞ்சில் ஒலிக்கின்றது.

    கற்பனைக்கு நல்விருந்தாய் விளங்கும் இக்காட்சிக்குப் பொற்பான கவியெழுதிக் காத்திருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களை வரவேற்று அவர்களின் கவியமுதைப் பருகிவருவோம்!

    *****

    ”பயந்தனை விரட்டு! விதைநெல்லாய்த் தனித்திரு! வியந்திட வாழலாம் மீண்டெழுந்து!” என்று நம்பிக்கையை அள்ளித் தெளித்திருக்கின்றார் கவிதையில் திரு. செண்பக ஜெகதீசன்.

    தனித்திரு விழித்திரு…

    பயண மெல்லாம் பாதியிலே
    பறவை விலங்கினம் வீதியிலே,
    துயரில் வீழ்ந்ததே மனிதயினம்
    தூய்மை தானே தேவையினி,
    பயந்தே யிருந்தால் பலனில்லை
    படகை ஓட்டு தனிமையிலே,
    வியந்திட வாழலாம் மீண்டெழுந்தே
    விதைநெல் லாயிரு தனித்திருந்தே…!

    *****

    ”கருப்பு மனமும் கருப்புப் பணமும் வேண்டாம்; வெள்ளை மனமும் வெள்ளைப் பணமும் கொள்வோம்! வாழ்வினில் வெல்வோம்!” என்று நன்மொழி நவில்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    கடல்நீரும் வானும்
    கரையோரப் படகுகளும்
    கரைத்திட்டு மணலும்
    அக்காட்சி காணும் மனிதர்களும்
    கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்
    நிறம் மாறித்தான் போயினவோ?
    அதன் உரிய வண்ணம் தெரிவதற்கு
    ஒருபோதும் வாய்ப்பில்லை!

    கருப்பு நிறம் பணத்தளவில்
    கருப்புநிறம் மனத்தளவில்
    என்றொரு எண்ணம் வேண்டாம்
    வெண்மை நிறம் பணத்தளவில்
    வெண்மை நிறம் மனத்தளவில்
    என்றே நாளும் வாழ்ந்திடலாம்
    இனிதே நாளும் உயர்ந்திடலாம்

    *****

    ”பொறாமைத் தீயில் பொசுங்கினாலும் அழுக்காறில்லா ஆன்றோனாய்க் காட்டிக்கொண்டேன்; கயமை உள்ளே களிநடனம் புரிந்தாலும் உத்தமனாய் விடியல்நோக்கிக் காத்திருந்தேன்!” என்று மானுட மனத்தின் முரண்பாடுகளை அருமையாய் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    முரண்பாடு

    மனக்கடலில் ஆசையலைப்
    பேரிரைச்சல் போட்டு ஆட
    முகந்தனிலே அமைதி காட்டி
    மௌனத்தாழ்ப் போட்டிருந்தேன்!

    கயமையது உள்ளிருந்து
    களிநடனம் புரிகையிலே
    விடியல் நோக்கிக் காத்திருக்கும்
    வேடமதைத் தாங்கி நின்றேன்!

    பொறாமைத் தீயில் நாளும்
    பொசுங்கி வெந்து போனாலும்
    அழுக்காறு ஏதுமில்லா
    ஆன்றோனாய்க் காட்டிவைத்தேன்

    பெருவெள்ளம் தாண்டி நின்றும்
    கரைசேர மனமில்லாப் படகாக
    ஆசை நீரில் தத்தளிக்கும்
    தக்கையென உழலுகின்றேன்!

    முரண்பாட்டின் மொத்த உரு
    அசுரனாய் உள் வளர்ந்து நிற்க
    முற்றும் துறந்த முனிவனென
    முகங்காட்டி நிற்கின்றேன்!

    *****

    ”சிலசமயம் பாசம் படிந்து, சிலசமயம் உடைந்து, எக்கருவி எந்தச் சூத்திரம் கொண்டும் ஆசாரியர்கள் என்ன பண்படுத்தினாலும் அலைகளும் அசைவுகளும் மட்டும் ஓய்வதில்லை” என்று மனித மனத்தின் சலனத்தைக் கவிதையில் அழகாய்க் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. கார்கில் ஜெய்.

    கட்டுமனம், பாய்மனம், உல்லாச மனம் எனப் பலமனம்
    நினைவலைகளில் ஆடிக்கொண்டே இருப்பதனால்  
    எந்த மனமும் ஆழ்வதில்லை; ஆழ்ந்தது மீள்வதில்லை 
    பரந்த வானமும், பரந்த நீலமும் வழிந்து விழுந்தது போலிருக்கும்
    பரந்த கடலில் சிறகை விரித்துப் பறந்த பறவைகள் போல் 
    தேடிச்சென்றது எதுவோ கிடைத்தது எதுவோ
    சூரியன் தூங்கியதும் கரை திரும்பும் மனங்கள்
    சிலசமயம் பாசம் படிந்து, சிலசமயம் உடைந்து 
    அல்லது கசியும் ஓட்டையோடு
    எக்கருவி எந்தச் சூத்திரம் கொண்டும் 
    ஆசாரியர்கள் என்ன பண்படுத்தினாலும் 
    அலைகளும் அசைவுகளும்  மட்டும் ஓய்வதில்லை
    அடுத்தநாள் இருக்கும்போதும்…
    கரையேறுதல் எப்போது?

    *****

    தம் எண்ண அலைகளின் உதவியால், படத்தில் காணப்படும், அசையாப் படகுகளையும் அழகாய் அசைத்துக் காட்டியிருக்கின்றார்கள் நம் திறன்மிகு கவிஞர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    விடயம்

    கட்டுத்தறிக் காளைகளாய்க் கரைநிற்கும் படகுகள்
    கொட்டியளக்கும் உழைப்பின் வியர்வைக்கடல் ஊர்திகள்
    மட்டுப்படா முனைப்புகளின் விளைவுதரும் மானிகள்
    கட்டுக்கடங்கா மகிழ்ச்சியைப் பரிசுதரும் கர்மயோகிகள்

    கேள்விக்குறியாய் முதுகுவளையும் செயன்மை
    அன்றாட வாழ்வின் ஆதாரம் தேடும் உயிர்மை
    பொன்னோடம் ஏறிப் பொழுதுபோக்கும் இளமை
    தன்னாவி இனிக்க ஏறத்துடிக்கும் குழுமை

    தாவிச்செல்லும் இளமை வேகம்
    தாங்கிநிற்கும் சுமையின் போகம்
    ஓடநினைக்கும் குழந்தைச் சொந்தம்
    மடுத்துக் காக்கும் தந்தை பந்தம்
    எல்லாம்;
    கண்ணாரக் காணும் காட்சி சொல்லும்
    எண்ணாரத் தொகுப்பாய் அமையும் விடயம்!

    ”கட்டுத்தறிக் காளைகளாய்க் கரைநிற்கும் படகுகள், கொட்டியளக்கும் உழைப்பின் வியர்வைக்கடல் ஊர்திகள்; கட்டுக்கடங்கா மகிழ்ச்சியைப் பரிசுதரும் கர்மயோகிகள்!” என்று படகுகளின் பண்பையும் பயனையும் நயமாய் உரைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர், திருமிகு. ச. கண்மணி கணேசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 252-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 252-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்த ஒளிஓவியத்துக்குச் சொந்தக்காரர் திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம். இதனைப் படக்கவிதைப் போட்டி 252க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மானுடக் குழந்தைகளும், ஆவின் குழவியும் அருகணைந்து நிற்கும் அழகிய காட்சி நெஞ்சில் இன்பத்தைப் பூக்கச்செய்கின்றது.

    இப்பூவுலகை இயற்கை படைத்தளித்தது அனைத்துயிர்களும் இன்பமாய் வாழ்வதற்கே. ஆனால் மானுடனோ உயிர்கள் அனைத்தையும் இரக்கவுணர்வின்றிக் கொன்றழிக்கின்றான் உணவுக்காக. அதன்விளைவாய்த் தீராத துன்பங்களையும் தேவையற்ற நோய்களையும் எதிர்கொண்டு கலங்குகின்றான்.

    எந்த ஒரு வினைக்கும் இணையான எதிர்வினை உண்டு என அறிவியலும் அறவியலும் உரைப்பது பொய்ப்பதில்லை!

    சிந்தனையைத் தூண்டும் இவ்வினிய படத்துக்குக் கவியெழுதித் தந்திருக்கின்றார்கள் வல்லமையின் வித்தகக் கவிஞர்கள்; அவற்றை ஒவ்வொன்றாய்ச் சுவைத்துவருவோம்! வாருங்கள்!

    *****

    ”பெரியோரினும் விஞ்சிய பாசத்தோடு இணைந்திருக்கும் பயமறியாக் கன்றுகள் இவை!” என்று வியக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கன்றிலே ஒன்றாய்…

    பயமதை அறியாக் கன்றுகளைப்
    பாசம் ஒன்றாய்ச் சேர்த்திடுமே,
    வயலில் மேய்ந்திடும் பசுமாடு
    வந்தே ஊட்டிடும் கன்றுக்கே,
    வெயிலில் ஆடிய பிள்ளைகளும்
    வந்து சேர்ந்தார் கன்றுடனே,
    செயலில் பெரியோர் செய்யாததைச்
    சின்னஞ் சிறிதுகள் செய்திடுமே…!

    *****

    ”இளங்கன்றை இறுக்கிப் பிடிக்கும் இன்முகச் சிறார்களே! கண்ணனாய் என் கண்ணுக்குக் காட்சிதரும் நீங்கள், தெய்வமாய் மக்கள்தொழும் பசுமாட்டின் கன்றினைக் கட்டி வைக்காதீர்கள்! தாயோடு அதனைச் சேர்த்துவிடுங்கள்!” என்று தம்முடைய இரண்டு கவிதைகளிலும் அன்பாய் வேண்டுகோள் விடுக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    இளங்கன்றை இறுக்கிப் பிடிக்கும்
    இளஞ்சிறார்கள் நீங்கள்தானோ
    வாய்நிறையப் புன்னகைக் குவியல்
    வாரியணைத்த மகிழ்ச்சியால்தானோ?

    உங்கள் புன்னகையில் கள்ளமில்லை
    அவைப் பூத்துக் குலுங்கும் பன்னீர்ப் பூக்கள்
    நீங்கள் வாரியணைத்த கன்றும் கூட
    வாகாய்த்தான் சிரிக்கிறதே!

    கோமாதா நம் குலமாதாவெனப்
    போற்றுகின்ற உலகமிது
    அதன் கோமியமும் சிறந்த மருந்தென்று
    சொன்னாரே முன்னோர் அன்று!

    பால் மட்டும் பொழிகின்ற
    பசுமாடாய் இல்லையவள்
    நம்மையெல்லாம் இரட்சிக்கின்ற
    காமதேனு தெய்வமவள்!

    பசுஞ்சாணத்தை உரமாக்கி
    எரிவாயுவும் அதிலுருவாக்கி
    எண்ணிலடங்கா வளம் நல்கும்
    கற்பக விருட்சமவள்!

    பாய்ந்தோடக் காத்திருக்கும்
    பசுங்கன்றை விடுங்கடா!
    பரிதவிக்கும் அதன் தாயோடு
    மனம் களிக்கப் புரளட்டும்!

    *****

    உங்கள் கைகளால் கட்டிப்போட்ட
    கன்றினை அவிழ்த்து விடலாமே!
    அது பாய்ந்தோடக் காத்திருக்கு!
    பாசத்தாயைக் காண்பதற்கு!

    ஆயர்பாடிக் கண்ணனாய் நீங்கள்!
    ஆழிமழைக் கண்ணனும் நீங்கள்!
    என் கண்களுக்குத் தெரிகிறீர்
    கன்றினை அணைத்தபடி
    நான் காணும் உங்கள் கோலம்

    தாய்ப்பசு எதிரில் வருகிறதா?
    தாவித்திரியக் கன்றும் முயல்கிறதா?
    அதன் சுதந்திரத்தைப் பறிக்காதீர்!
    கரம் கொட்டி அனுப்பி விடும்!
    உறவோடு சேர்த்து விடும்!
    தாயென்ற உறவோடு சேர்த்து விடும்!

    *****

    ”கள்ளமின்றித் திரிந்துவரும் கன்றும், பிள்ளைகளும் எங்கள் வாழ்வில் ஒன்றே!” எனக் கவிதையில் சமத்துவம் விதைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    வீட்டுக் கன்றுக்குட்டி

    வீடு முழுதும் துள்ளிச் செல்லும்
    காடு முழுதும் சுற்றித் திரியும்
    நாடியாரும் வரும் போதெல்லாம்
    ஓடிப் பதுங்கி ஒளிந்து அவரை
    ஓரக்கண்ணால் பார்த்திருக்கும்
    கள்ளங் கபடமின்றிக் கனிவாய் நின்றிருக்கும்
    எல்லைகள் ஏதுமின்றி எங்கும் திரிந்து வரும்
    தொல்லைகள் பல செய்தாலும்
    சுகமாய் அவைகள் தோன்றும்
    பிள்ளையும் கன்றும் ஒன்றாய் எங்கள்
    வாழ்க்கையில் கலந்தே இருக்கும்!

    கன்றுக்குட்டிமீது நீங்கள் பாடியிருக்கும் கவிதைகள் நன்று கவிஞர்களே! பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    எங்க வீட்டுக் கன்னுக்குட்டி இனிமையான செல்லக்குட்டி
    திங்கப் புல்லைக் குடுத்திட்டாலும் தேடித்தாயை ஓடும்குட்டி
    முட்டி முட்டிப் பால்குடிக்க மோதி மோதித் தாய்மடியை
    எட்டிக் எட்டிக் கவ்வும் குட்டி எம்பி எம்பிக் குதிக்கும் குட்டி

    எங்க வீட்டுப் பாப்பாவுக்கும் என்றுபாலை மிச்சம் வச்சி
    பங்கு போட்டுக் குடிக்கும் குட்டி பாசமுள்ள ஆசைக்குட்டி
    அங்க இங்க எண்ணு சொல்லி அடிக்கொருக்கா பாயுங்குட்டி
    தங்கமான குணம்படைச்ச தாவி வந்து அணையும் குட்டி

    கிட்டப்போயி அணைச்சிட்டாலும் எட்டித் திமிறி ஓடிடாது
    கட்டிப் புடிச்சிக் கொஞ்சினாலும் காலையுதறி எகிறிடாது
    பட்டுப்போல உடம்பும் நல்ல பாசங்கொட்டும் முகமும் கொண்ட
    கெட்ட குணம் எதுவுமில்லாக் கீழ்ப்படியும் தங்கக் கட்டி

    தாயை மேய அனுப்பினாலும் தானுமட்டும் தொழுவத்தில
    காயக்காய நிக்கும் குட்டி கண்டு விட்டா எங்கமீது
    பாயநின்னு தவிக்கும் குட்டி பாலை மறந்து மகிழும் குட்டி
    தூய நெஞ்சில் அன்புகாட்டி துயர்மறந்து துள்ளும் குட்டி

    மாலை நேரம் அம்மாவர மகிழ்ந்து கொஞ்சி செல்லங்காட்டி
    பாலைக் குடித்துப் பசியைப்போக்கி பாப்பாவுக்கும் வைக்கும் குட்டி
    வாலைத்தூக்கி நிமிர்த்திக்கோண்டு வாளி பாஞ்சி ஓடும்குட்டி
    சோலையெல்லாம் துள்ளித்துள்ளி சோர்வில்லாமல் திரியும் குட்டி

    பட்டுப்போல் உடம்புகொண்ட கன்னுக்குட்டியின் பாசத்தை, பசுவின் பாலைத் தான்மட்டும் குடிக்கவேண்டும் எனும் தன்னலமில்லாமல் பாப்பாவுக்கும் மிச்சம் வைக்கும் நேசத்தை, அதன் சேட்டைகளை அழகானதொரு ‘குழந்தைப் பாடலாக’ வடித்துத் தந்திருக்கும் திரு. கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. அமுதா ஹரிஹரனின் இந்த ஒளிப்படத்தைப் படக்கவிதைப்போட்டி 251க்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்படக்கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    கண்ணாமூச்சி விளையாடும் இந்தப் பிள்ளைகள் போல் சில நேரங்களில் விதியும் மனிதர்களோடு கண்ணாமூச்சி விளையாட்டில் இறங்கிவிடுகின்றது. அதனை வெற்றிகொள்ள மனிதர்படும் பாடு சொல்லும் தரமன்று. எனினும் அறிவின் துணைகொண்டு மானுடம் ஊழையும் உப்பக்கம் காணும் எனும் நம்பிக்கையோடு வாழ்க்கைப் பயணத்தை வையத்தில் தொடர்வோம்!

    இந்தப் படத்துக்குக் கவிதையெழுத வாருங்கள்! உங்கள் கவின் கருத்துகளைத் தாருங்கள்! என்று கவிஞர்களைக் கனிவோடு அழைக்கின்றேன்!

    *****

    ”காரிருள் தனிலும் கலக்கம் வேண்டாம்; மறுபடியும் வெளிச்சக்கீற்று வந்தே தீரும்; முயற்சி முடிவில்(லா) வெற்றியே தரும்” என்று நம்பிக்கை தீபத்தைக் கவிதையில் ஏற்றுகிறார் திருமிகு. நித்யா சுந்தரம்.

    கண்டுபிடி….கண்டு பிடி…

    இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும்
    இடையில் ஓரிழை தூரமே!
    நம்பிக்கையின் விளிம்பு
    தட்டுத்தடுமாறும் கைகளில்
    வசப்படும் எனும் வானளாவிய புரிதலில்…
    வாழ்வெனும் மாயக் கண்கட்டு விளையாட்டில்
    கண்களில் தெரிவதும் தவறாய்ப் போகலாம்….
    இதோவெனக் கைக்கெட்டும்
    இடைவெளி முடிவில் கானல்நீர் ஏமாற்றலாம்…
    காரிருள் தனிலும் கலக்கம் வேண்டாம்
    மறுபடியும் வெளிச்சக்கீற்று வந்தேதான் தீரும்…
    முயற்சியென்றும் முடிவில்லா வெற்றியே!
    கைதவறிப் போனதெல்லாம்
    கரம்சேரும் தருணம் நீயும்
    இருளுக்குள் விழித்து இறுகப்
    பற்றிவிட்டால் எல்லா நாளும்
    இன்ப ஒளியே!..
    இயல்பாய் வானமும் வசப்படும் அந்நாளிலே!….

    *****

    ”அண்மையில் சென்றால் ஒட்டுமென்ற தொற்றுநோய் வந்ததும் கண்கட்டு விளையாட்டும் கானலாகிப் போனதே!” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    காலம் மாறியது…

    கண்ணைக் கட்டிக் களிப்புடனே
    காடு மேடெலாம் விளையாடிய
    எண்ண மெல்லாம் வருகிறதே
    எல்லாம் மாறிப் போனதுவே,
    அண்மையில் சென்றால் ஒட்டுமென
    அகன்றே விலகிச் செல்வதுடன்
    மண்ணில் மாந்தர் முகம்மறைக்கும்
    மாய நோயதும் வந்ததுவே…!

    *****

    ”கொல்லும் கொரனா மனித வாழ்வைக் கொள்ளை கொண்டதனால் கூடிவாழ்ந்த நமதுவாழ்வு குலைந்து போனதடா! இந்தக் கொடுமைதீர இறைவா நீ வழிகாட்டு!” என்று இறையிடம் முறையிடுகின்றார் திரு. கருணானந்தராஜா.

    கண்ணைக்கட்டிக் காட்டில்விட்ட
    கதையாய் ஆனதடா – யாவும்
    கனவாய்ப் போனதடா.
    எண்ணிக்கூடப் பார்க்க முடியா(து)
    எல்லாம் மாறுதடா இனிமேல்
    எதுவும் இல்லையடா
    நாலுபேர்கள் தூக்கிப்போக நமக்கு ஆளில்லை –
    நம்மைச் சூழவிருந்த சுற்றம் நமக்குத் துணையில்லை
    கொல்லும் கொரனா நமதுவாழ்வைக்
    கொள்ளை கொண்டதடா!
    கூடிவாழ்ந்த எமதுவாழ்வு குலைந்து போனதடா!
    கொரனா வென்னும் மரணப் பொறியில்
    கூட்டாய் வீழ்ந்தோமே – நாம்
    கொத்துக்கொத்தாய் வீழப்போகும் குழியைப் பறித்தோமே!
    அரனே அல்லா உடனே வந்தெம் நிலையைப் பாராயோ
    ஆற்றலிழந்தோம் எம்கண்கட்டை அவிழ்த்து விடுவாயோ
    சொந்தம் சுற்றம் தூர விலகும்
    துயரைப் பொறுப்போமோ- நாம்
    தூய்மை தேடி வாழ்வின் இனிய
    சுகங்கள் மறப்போமோ
    இந்தக் கொடுமை என்றுதீரும் இறைவா வழிகாட்டு
    எமது வாழ்வை மீட்டு இந்த இன்னல்தனை நீக்கு!

    *****

    ”ஒற்றச் சோரனாய் வந்திட்டப் பார்ப்பிணி நம்மை அண்டாதகல, சித்தமருந்தைச் சித்தத்தில் வைத்துப் போற்றுமின்! அதன்மூலம் தொற்று நோயைத் தொற்றா நோயாக்க முயல்மின்!” என்று தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தைச் செப்புகின்றார் திருமிகு. அவ்வைமகள்.  

    தொற்றும் கால்கள்? வெற்றுக் கால்கள்? தோற்றம்
    தோற்றினும் அவையே வைரக் கால்கள்!
    சுற்றிக் கட்டியக் கண்களை எத்திடும் கால்கள்
    எற்றிடங் காட்டியே வைரசை லகுவாய் ஓட்டிடும்
    ஏற்றினார் கட்டில் அவர் கட்புலன் சோருமேல்
    முற்றுமோ தேடல் தொடர்வறியாமல்?
    அற்றைப் பதங்கள் நகர்த்திய வளியும்
    சொற்றைத் துறந்த மூச்சும் இறக்குமோ?
    மாற்றிய பாதையில் மற்றவர் போவதால்
    பற்றிய பாதையை மாற்றவு மெண்ணுமோ?
    நேற்றிய தாவரமருங்கிலாடும் ஞானப் பிள்ளைகாள்!
    ஏற்ற முகனில், மறைகீறிட்ட நோக்கில், தாவரந்தர
    ஊற்றிடும் ஒளி, அருள் புரிதலைக் கண்டமின்!
    ஒற்றச் சோரனாய் வந்திட்டப் பார்ப்பிணி இன்று
    செற்றம் காட்டாது ஓடிடச் செய்யுமின்! “சித்தமருந்தில்
    ஒற்றம் வாரா! பிணியண்டாதகலும்!” எனவே பகர்மின்!
    “முற்றும் கண்டிலராதலால் முழுதாயறியுமின்!” என்றே
    “உற்றிடம் இருந்து மற்றவர் எழுக! ஆய்க!” என்னுமின்!
    “தொற்றுக் கொரோனா எம்மவர் முறையால் ஒழிந்துறும்
    தொற்றா நிலையினை அறியுமின்!!” என்றே அறிவியுமின்!!
    “கற்றிடும் வித்தை கண்க(கா)ட்டி வித்தைதான்!” உங்கள்
    சுற்றமும் நட்பும் கூடிப் பகர்மின்!! ஆழப்பகர்மின்!
    ஒற்றை வாழ்க்கைத் தாளாது மனிதம்! இனியென்றும் அது
    ஒற்றிப் பற்றியே வாழந்திட வாழ்வியல் செய்யுமின்!!

    *****

    நாசியைக் கட்டச்சொன்னால் கண்ணைக் கட்டிவிளையாடும் பிள்ளாய்! கொரோனாவை ஒழிப்பதற்கு விழித்திரு! விலகியிரு! வீட்டிலிரு! என்று விழிப்புணர்வூட்டும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய மற்றொரு கவிதையில், ”நெருக்கத்தில் இருப்பவனை நெருங்கிவந்து பிடித்து விடு!
    அவன் சட்டெனவே ஓடுகின்றான்; விரைந்தோடிப் பிடித்து விடு!” என்று கண்கட்டிய பிள்ளைக்குக் கருத்தாய் வழிகாட்டவும் செய்கின்றார். 

    கொரோனா!

    நாசியைத் தான் கட்டச் சொன்னோம்
    நீ கண்களைக் கட்டியதேன்?
    ஒருவருக்கொருவர் இடைவெளி என்றோம்
    அவனை எம்பியெம்பி பிடிப்பதேன்
    கைகளைக் கழுவு என்றோம்
    நீயோ களியாட்டம் போடக் கண்டோம்
    ஊரடங்கு உத்தரவென்றோம்
    நீங்கள் வீதிகளில் ஆடக் கண்டோம்
    சமுதாயக் கூட்டம் கூடாதென்றோம்
    உங்கள் சடுதியாட்டம் காணக் கண்டோம்
    உன் புன்னகை அருமைதான்
    இல்லையென்று சொல்லவில்லை
    சிறிது காலம் உன்பங்கும் அவசியம்தான்
    கொரோனாவை ஒழிப்பதற்கு
    விழித்திரு
    விலகியிரு
    வீட்டிலிரு கண்ணே
    குடும்பத்தோடிரு
    குதூகலமாயிரு
    ஒத்திவைப்பாய் விளையாட்டை
    ஒரு சில நாட்கள்தானே?
    உலகமே ஒளிமயமாக
    ஒன்றுபடுவோம் அதை ஒழிப்பதற்கே!

    *****

    அண்ணனோ நண்பனோ
    அருகிலிருப்பதாய் உன் உணர்வு
    கரம் பிடிக்கத் துடிதுடிப்பு
    வெண்பற்கள் புன்சிரிப்பு
    கறுப்பு வைரமாய் உன் கைகள்
    மண் தரையில் பதிந்திட்ட கோல் கால்கள்
    பின்னொருவன் பார்த்திருக்க
    முன் நின்ற(வ)னைப் பாய்வதேன்!!
    புல் தரையை விட்டுவிட்டு
    மண்தரையை ஏன் கண்டாய்
    மிருதுவான கால்களில்
    தூசிகள் படுவதற்கா?
    நெருக்கத்தில் இருக்கின்றான்
    நெருங்கி வந்து பிடித்து விடு!
    அவன் சட்டெனவே ஓடுகின்றான்
    உன் சந்தோசம் குறைந்து விடும்
    விரைந்தோடிப் பிடித்து விடு
    துள்ளித் துள்ளி நகைத்து விடு!
    கண் கட்டை அவிழ்த்திட்டோம்
    நீ காணும் பொருட்கள் சுழன்றனவோ?!

    *****

    ”மழைதரும் நீர்த்துளியை புழைசெய்து தேக்காமல், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் குற்றங்களை நிறுத்தாமல், அறியாமைக் காரிருளில் புரியாமல் நின்றுவிட்டு விதியாடும் கண்ணாமூச்சியென வீணாக உழலுகின்றேன்” என மானுடனின் பொறுப்பற்ற வாழ்வைப் பாட்டில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    கண்ணாமூச்சி

    மழைதரும் நீர்த்துளியை
    புழைசெய்துத் தேக்கிவைக்க
    வழியேதும் செய்யாமல்
    காலமதைக் கழித்திருந்தேன்!

    சுற்றுப்புறம் மாசு செய்யும்
    குற்றங்களை நிறுத்திடாமல்
    வெற்றுச் செயல்களையே
    கொற்றம் செய்ய விட்டுவிட்டேன்!

    புயல் வருமோர் காலந்தன்னில்
    சுயமுயற்சி ஏதுமின்றி
    இயலாமைக் காப்புப்பூட்டி
    முயலாமல் நின்றிருந்தேன்!

    பட்டுபோன பழமைகளை
    மனதினிலே தேக்கிவைத்துப்
    புதுமைகளைத் துரத்திவிட்டு
    புரட்சிக்காகக் காத்திருந்தேன்!

    அறியாமைக் காரிருளில்
    புரியாமல் நின்றிருந்தது
    விதியாடும் கண்ணாம்பூச்சியென
    வீணனாக உழலுகின்றேன்!

    *****

    ”நாமும் நம் உடன்பிறவாச் சொந்தங்களும் சுகவாழ்வு பெற்றிடவே இல்லுக்குள் அடைந்திருக்கும் நாம் கைதிகள் அல்லர்! தியாகிகள்!” என்று நல்விளக்கம் தருகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    ஆட்டம்
    பாட்டம்
    கொண்டாட்டம்
    தொடரட்டும்
    ஆனந்தம்
    பொங்கட்டும்
    அன்பு பெருகட்டும்
    கண்ணுக்குத் தெரியாத
    கிருமியுடன்
    கண்ணாம்பூச்சி ஆடுகிறோம்
    உறவுகளுடன்
    கை கோத்துப்
    பலம் சேர்த்து
    உயிருக்கு பயந்து
    வீட்டில் இருந்தே
    போராடுகிறோம்
    உடன் பிறவா
    சகோதர சகோதரிகள்
    உயிர் வாழ்க எண்ணியே
    வீட்டுக்குள்ளே
    சிறைப் பிடிக்கப்பட்ட
    கைதிகள் இல்லை நாம்
    தியாகிகள்

    நற்கருத்துகளைத் தம் கவிதைகளில் அற்புதமாய்த் தந்திருக்கும் படைப்பாளிகளைப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    கண்ணாமூச்சி!

    கைக்கெட்டாக் கனிகளின்
    சுவைக்கு அலைந்து,
    கருத்தைக் கடந்தவற்றையும்
    கைப்பற்ற முயன்று,
    மூடியிருந்த கண்களுடன்
    மூளையும் சேர்ந்தே முடங்கி,
    கீறப்பட்ட ரணங்களால் சுருண்டு,
    அஞ்ஞானமெனும் இருளில்
    அடைபட்டிருந்தேன்!

    கட்டுகளை அவிழ்க்கும் அறிவற்றுத்
    தளைகளைத் தகர்க்கும் திறமிழந்து
    தெருவெலாம் திரிந்தழிந்தேன்!

    இகவாழ்வே கண்கட்டு வித்தையெனச்
    சுகவாழ்வின் நிலையேக நினைந்து
    இமைமூடிய இடுக்குகளில் வழிந்த
    உள்ளொளிக் கீற்றின் நுனிபற்றி
    ஞானமெனும் வானத்தையும்
    எட்டிப் பிடிக்கும் தருணம்
    கண்ணாமூச்சி முற்றுப்பெறும்!

    ”இகவாழ்வே ஒரு கண்கட்டு வித்தைதான்! இமைமூடிய இடுக்குகளில் வழிந்த உள்ளொளிக் கீற்றின் நுனிபற்றி ஞான வானை எட்டிப்பிடிக்கும் தருணம் கண்ணாமூச்சி முற்றுப்பெறும்!” எனும் வாழ்வியல் தத்துவத்தைத் தேர்ந்த சொற்களில் வெளிப்படுத்தியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு சக்திப்ரபா இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வுபெறுகின்றார்; அவருக்கு என் பாராட்டுகள்!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கடலும் வானும் கைகோத்து நிற்கும் கவின்மிகு காட்சிக்கு மேலும் பொலிவூட்டுகின்றது அவற்றை நோக்கிநிற்கும் நங்கையின் நளினத் தோற்றம்! பல்வண்ணக் கலவையாய் நம் கண்களுக்கு நல்விருந்தூட்டும் இவ்வரிய காட்சியைப் படமாக்கியிருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இதனைப் படக்கவிதைப் போட்டி 250க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் சென்று சேரட்டும்!

    ”கடல்நோக்கித் தவமிருக்கும் காரிகையோ?
    காதலன் வரவிற்காய்க் காத்திருக்கும் கன்னிகையோ?
    இயற்கையினைக் காதலிக்கும் இனியவளோ?”
    என்று இந்தப் பெண்ணரசி பற்றி எண்ணங்கள் சூழ்கின்றன என்னுள்!
    விடைசொல்ல வாருங்கள் என்று கவிஞர்களைக் கனிவோடு அழைக்கிறேன்!

    *****

    கடல்நோக்கி நிற்கும் காரணமென்ன? படகுகள் வருமென்ற எதிர்பார்ப்பா? கடலலை காணும் குதூகலிப்பா? என்று வினாக்களை அடுக்கி வனிதையிடம் விடை கேட்கின்றார் திருமிகு சுதா மாதவன்.

    கடலினை நோக்கிக்
    காண்பதென்ன காரிகையே!
    நீலவானும் கடல் நீரும்
    ஓர் வண்ணம் என்றோராய்வா?
    படகுகள் ஒன்றும் காணோம்
    மிதந்து வருமென எதிர்பார்ப்பா?
    கப்பல்களும் ஆடி வரும்
    காட்சி காணக் கண்விரிப்பா?
    கரை மீது அடிக்கும் அலை
    காணக் காணக் குதூகலிப்பா?
    ஆதவனும் சந்திரனும்
    எங்கேயெனப் பரிதவிப்பா?
    அவர்களும் தம் கடமை செய்ய
    சென்று விட்ட புன்சிரிப்பா?
    மனதில் எழும் எண்ணங்களை
    மடை திறந்து கொட்டிவிடு!
    திறம்படவே பதிலைச் சொல்
    திரும்பி நில் தேவதையே!!!

    *****

    ”காலமெலாம் அறியாமைக் காரிருளுள் வைத்தாலும் ஞானஒளிக் கதிரவனாய் புதுவிடியல் காட்டிடுவாய்!” என்று நங்கைக்கு நல்லறிவு கொளுத்துகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    திடங்கொண்டு போராடு!

    ஆர்ப்பரிக்கும் அலைபோலே
    பேரிரைச்சல் போட்டாலும்
    ஆழ்கடலின் அமைதியினை
    அடிமனதில் தேக்கிவைப்பாய்!

    கார்குழலி என்றுனையே
    காதற்சிறை வைத்தாலும்
    பார்புகழும் சாதனைகள்
    பலநூறு படைத்திடுவாய்!

    காலமெலாம் அறியாமைக்
    காரிருளுள் வைத்தாலும்
    ஞானஒளிக் கதிரவனாய்
    புதுவிடியல் காட்டிடுவாய்!

    மென்மையான மலரென்று
    மங்கையுன்னைச் சொன்னாலும்
    திண்மையான உள்ளத்திலே
    திடங்கொண்டு போராடிடுவாய்!

    *****

    நல்ல சிந்தனைகளையும் நயமிகு கற்பனைகளையும் கவிதைகளில் ஊற்றி எழிலேற்றியிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    காத்திருக்கிறாள்…

    கண்கள் காட்டிய பாதையிலே
    கருத்து மிணைந்த காதலிலே
    அண்மையில் வந்த மணநாளும்
    அப்புறம் தள்ளிப் போனதுவே,
    எண்ணம் பெரிதாய்ப் பணிக்காக
    எங்கோ சென்றவன் வரவில்லை,
    கண்ணில் நீருடன் காத்திருக்கிறாள்
    கடலலை தன்னைத் தூதனுப்பியே…!

    ”பணிதேடிச் சென்ற காதலன் கரம்பற்ற வாராததால் மணநாள் தள்ளிப் போக, கண்ணீரோடு அவனுக்குக் கடலலையைத் தூதுவிட்டுக் காத்திருக்கின்றாள் இந்த மாது!” என்று கவிதையில் ஒரு சோக நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 249-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 249-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. முகம்மது ரபியின் இந்த ஒளிப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்தவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ”கள்ளமில்லா மழலையின் பார்வைநம்
    உள்ளம் கொள்ளை கொண்டாலும்
    இன்மைத் துன்பம் இல்லா நிலையை
    என்று அடைந்திடும் இவர் வாழ்க்கை?” என்றொரு வினா முள்ளாய்த் தைக்கின்றது நம் மனத்தை!

    நெஞ்சைத் தொடும் இப்படத்திற்குப் பொருத்தமாய் வரைந்த கவிதைகளோடு காத்திருக்கும் கவிஞர்களை வரவேற்போம் வாழ்த்துக்களோடு!  

    ”பெற்ற தாயினும் உற்ற துணை பிள்ளைக்கு வேறில்லை” என்று தாயின் பெருமையைப் புகல்(ழ்)கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உயர் துணை…

    பிள்ளை யதற்குப் பாதுகாப்புப்
    பெற்ற தாய்போல் வேறில்லை,
    அள்ளிக் கொடுக்க இலாதபோதும்
    அன்பது உண்டே அளவிலாதே,
    கள்ளம் கபடம் தாய்மையிலிலை
    காட்டு வழியிலும் பயமில்லை,
    உள்ளம் நிறைந்த அன்போடே
    உயர்ந்த துணையே தாய்தானே…!

    *****

    ”பிற்காலத்தை எண்ணிக் கலங்காதே குழவியே! பொற்காலம் உனதென்று பொங்கி நகை!” என்று மழலைக்கு நம்பிக்கையூட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    முழங்கையில் தளிர் மழலை
    முன்னேற்றப் பாதைக் காணும்
    வண்ண முக்காடிட்ட முகத்தழகி

    பின்னோக்கிக் காணும் அவள் குழவி
    எவரேனும் தொடர்கிறாரோ
    என்றொரு பார்வையா?
    பிற்காலம் எப்படியோ
    என்கின்ற பிரமிப்பா?

    பொற்காலம் உனதுதான்
    பொங்கிநகைப் புதுப் பொலிவே!
    கிஞ்சித்தும் தளராதே
    எழும்பி நில் கடலலையே!!

    *****

    ”நோய் வந்தபோதும் சேயைத் தீண்டத் தயங்காது அன்புபாராட்டி உயிர்காக்கும் உறவுக்குப் பெயர்தான் தாய்” என்று தாய்மையின் தன்னலமற்ற சிறப்பைக் கவிதையில் உணர்த்துகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    கொஞ்சிப் பேசி
    அள்ளி அணைத்த
    கரங்கள் யாவும்
    தீயாய்ப் பரவி வரும்
    தொற்று நோய் வந்ததென்று
    என்னைத் தீண்ட மறுத்ததே!
    வயிற்றில் சுமந்து
    உயிர் தந்தவள்
    அல்லும் பகலும் போராடி
    நோய்கொண்டு போக முயன்ற
    எனதுயிரை மீட்டுத் தந்தவள்
    தாய் என்னும் வரம் தந்த
    தெய்வக் குழந்தை நான்என்று
    என்னைச் சுமக்கத் தயங்கவில்லையே!
    வேண்டிப் பெற்ற உறவு இது
    இல்லை என்றாலும்
    உயிர் உள்ளவரை என்றும் நம்மை
    தொடர்ந்து வரும் உறவு இது!
    முகத்தை மூடியே நீ வந்து நின்றாலும்
    கண்களை மூடி ஊரே சொல்லும்
    முத்தாய் மூன்றெழுத்தில்
    நீ “அம்மா” என்று!

    *****

    தாயின் தகைமையைப் பொருள்பொதிந்த கவிதை வரிகளில் உணர்த்தியிருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!  

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    நேர்கொண்ட பார்வை!

    அன்னையர்குலப் பெண் தெய்வமென
    ஆலயந்தனிலே வைப்பதாய்ச் சொல்லிப்
    புழக்கடைத் தனிலே பூட்டிடுவார் – பெண்ணைக்
    கிணற்றுத் தவளை ஆக்கிடுவார்!

    முரட்டு உலகி(னி)ன்று காப்பதாய்ச் சொல்லி
    இருட்டு வாழ்க்கை தந்திடுவார் – மூடர்
    குருட்டுத்தனம் பல செய்திடுவார் – அவற்றைப்
    புனிதம் என்றே காட்டிடுவார்!

    கைவளை அழகென்று சொல்லிப் – பெண்ணுக்குக்
    கைவிலங் கிட்டே முடக்கிடுவார்!
    கொடியவர் பார்வைப் பழுதென்று கூறி
    முக்காட்டிட்டு அவர்திறம் மூடிடுவார்!

    தாயினத்தைத் துரத்தும் கயமைகளை – உன்
    பார்வைத் தீயால் பொசுக்கிவிட
    முண்டாசுக் கவிஞனின் வாரிசென
    நேர்கொண்ட பார்வைக் காட்டிடுவாய்!

    ”முரட்டு உலகினின்று பெண்ணைக் காப்பதாய்ச் சொல்லி, இருட்டு வாழ்க்கையில் அவளைத் தள்ளிடும் குருட்டு உலகினின்று அவளை மீட்டிட, முண்டாசுக் கவிஞனின் வாரிசாய் நேர்கொண்ட பார்வை காட்டிடு!” என்று கனிமழலைக்கு நன்மொழி நவின்றிடும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 248-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 248-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பரிதியால் சிவந்த செக்கர் வானத்தின் சீரிய கோலத்தைப் படம்பிடித்து வந்திருப்பவர் திருமிகு நித்தி ஆனந்த். இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு இராமலக்ஷ்மி. மங்கையர் இருவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!

    முகிலூடே எட்டிப்பார்த்துப் பரிதியார் புன்னகை பூத்திருக்க, ஓடங்கள் மௌனமாய்ப் பார்த்திருக்க, காதலியாள் கரம்பற்ற வரம் கேட்கிறானோ இந்த வாலிபன்? கவிஞர்களிடம் கேட்டுத் தெளிவுபெறுவோம் வாருங்கள்!

    *****

    ”கடமை முடித்துக் கதிரவன் விடைபெற, பேச்சிலே காதலர்கள் தமைமறந்து மூழ்கிட என்றும் தொடரும் பயணமிது” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தொடரும் பயணங்கள்…

    இன்றைய கடமை முடிந்ததென
    இனிமேல் ஓய்வெனக் கதிரவனும்
    சென்று கொண்டே வான்வீதியில்
    செம்மை காட்டினான் வனப்பாக,
    என்றுமாய்ப் பேச்சிலே காதலர்கள்
    ஏக்கமாய்ப் படகுகள் கரையினிலே,
    என்றும் தொடரும் பயணமிவை
    என்பதை மனதில் கொள்வாயே…!

    *****

    ”வறுமையே சீதனமாய்க் கொண்டு, நாடோடியாய்த் திரிந்தலையும் இல்லாதோரின் வாழ்வில் காரிருள் நீக்கிப் புது உதயம் தோன்றச் செய்வோம்” என்றுரைக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    புது உதயம்

    காடுவெட்டிக் கழனியாக்கி
    கதிர்நெல்லை விளைவித்தார்!
    பட்டினியே உணவென்று வாழ்கின்றார்…

    பள்ளம் மேடு சீராக்கி
    வீடுகட்டி வாழவைத்தார்!
    நாடோடியாக நாளும் திரிந்தலைந்து நிற்கின்றார்…

    பாடுபட்டு,
    நாளுமிங்கே கரஞ்சிவந்து வேலை செய்தும்
    வறுமையதே சீதனமாய் வாழுகின்றார்…

    நிலையான வாழ்வு
    நிரந்தரமாய் ஊதியம் என்றவரின்
    வாழ்வினிலே காரிருளை நீக்கிக்
    கரம் பற்றி மேலுயர்த்தி வாழவைக்கும்
    புது உதயம் கண்டிடுவோம்!
    புதியதோர் உலகம் செய்வோம்…

    *****
    ”கடல்தேடி ஓடும் நதியாய் இவன் மனம்தேடி வந்த இந்த வஞ்சி, வாழ்க்கையெனும் பாதையில் தொடர்ந்திட அவன் நீட்டிய உதவிக்கரம் பற்றிட முனைந்தாளோ?” என்று வினா எழுப்புகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    அலை கடல்
    ஓடித் திரிந்த களைப்பில்
    கரை ஒதுங்கிய கட்டுமரம்
    கிழக்கில் இருந்து பகலெங்கும்
    பயணம் செய்த அலுப்பில்
    அந்தி சாய்ந்ததோ மேற்கில்
    நிலவு உதிக்க நிழலும் மறைய
    பகலை மெல்ல இரவு விழுங்கிட
    நிறம் மாறியதே நீல வானம்
    மாலை சுடும் முன்னே
    மனதை புரிந்துகொள்ள
    மாலை வரை பேசி நின்ற காதலர்கள்
    கடற்கரையில்

    கூடு தேடித் திரும்பும் பறவைகளாய்
    பிறந்த வீடு சென்று சேர்ந்திட
    துவங்கியதே இவர்கள் பயணம்
    அவன் பாதையைப் பின்தொடர்ந்த
    அவள் கால்கள் இடறிட
    உன்னைத் தாங்கி வழிநடத்திட
    உதவிக்கரம் நீட்டினானோ?
    துணையாய் நீ வருவாயா என
    விழியாலே வினா எழுப்பி
    உதவிக்கரம் நீட்டினானோ?

    மழை பொழிந்து வழிந்தோடும் நதி
    கடல் தன்னைத் தேடியே
    காதல் பொங்கி வழிந்தோட
    கடல் தேடி ஓடும் நதியாய்
    அவன் மனம் தேடி வந்த வஞ்சி இவள்
    இரவு பகல் பாராமல்
    வாழ்க்கை எனும் பாதையில்
    என்றும் தொடர்ந்திட
    உதவிக்கரம் நீட்டிய
    கரங்களைப் பற்றிட முனைந்தாளோ?

    *****

    இனிய இயற்கைக் காட்சியின் பின்னணியில், கரம்கோத்திட விழையும் இளம் உள்ளங்களை அழகாய்ப் பாட்டில் படம் பிடித்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டுகின்றேன்.

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    செந்தழலாய்ப் பகலவன்
    தங்கநிறச் சந்திரன்
    பாய்ந்தோடும் பரிகளாய்
    வானத்து மேகங்கள்

    நெடுந்தூரக் கருங்கரை
    அதைத் தாங்கும் மணல்தரை
    ஓய்வெடுக்கும் தோணிகள்
    இரவைத் தொடும் வானிலை

    இவையெல்லாம் சாட்சி
    என்னுடனே வா
    என்கின்றானோ காதலன்?

    உயிரே உனக்குத்தான்
    உன்னுடனே வருகின்றேன்
    உலகாளும் உன்னதக் காவியம்
    ஒருங்கிணைந்து படைத்திட
    புகைப்படமே நீயும் சொல்
    காட்சி புனைந்தது நீதானே?

    பகலவனும், முகிலினமும், அம்புலியும் சாட்சிகளாய்க் காட்சிதர என்னோடு வா என்றழைக்கும் காதலனையும், அவனோடு பயணிக்கப் புறப்படும் வஞ்சியையும் வாகாய்க் கண்முன் நிறுத்தியிருக்கும் புகைப்படமிது என்று பாராட்டும் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்து மகிழ்கின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 247-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 247-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பச்சைக் கிளிகள் மெல்லிய கிளைகளில் ஊசலாடும் அழகை இச்சையோடு படமெடுத்துத் தந்திருப்பது PicturesQueLFS. கண்ணைக் கவரும் இந்த வண்ணப் படத்தைப் படக்கவிதைப்போட்டி 247க்குப் பரிந்துரைத்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.

    ”மக்கள்தாமே ஆறறி வுயிரே;
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.” (தொல்: பொருள் – 577) என்ற நூற்பாவில் மக்கள் ஆறறிவுடைய உயிர்கள். அவர்களைப் போலவே பிற உயிர்களிலும் ஆறறிவு படைத்தவை உள என்கிறார் தொல்காப்பியர். இதற்கு உரைவரைந்த இளம்பூரண அடிகள் மக்களல்லாத குரங்கு யானை கிளி முதலிய உயிர்களும் ஆறறிவு படைத்தவையே என்று விரித்துரைத்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றார்.

    எனவே கிளிகள் அறிவிற் சிறந்தவை என்பதில் ஐயமில்லை. அதனால்தான், அவை மனிதர்கள் ‘கிளப்பதை’ (சொல்லுவதை) அப்படியே திருப்பிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவ்வாறு கிளத்தல் பற்றியே அவை ’கிளி’ எனப் பெயர்பெற்றன என்ற கருத்துமுண்டு.

    கிளியின் சிறகைப் போலிருக்கும் பொன்னின் ஒருவகைக்குக் ’கிளிச்சிறை’ என்று பெயரிட்டு மகிழ்ந்திருக்கின்றனர் நம் பண்டைத் தமிழர். கிளிகளைப் பற்றிக் கிளப்பதற்குச் செய்திகள் பலவுண்டு. எனினும், இக் கிள்ளைகள் பற்றிய கவிதைகளோடு கவிஞர்கள் பலர் காத்திருப்பதால் அவர்களை வரவேற்று அமைகின்றேன்.

    *****

    ”கிளிகளிரண்டும் அரங்கனின் நாமத்தை உச்சரித்து, மென்சிறகை மெல்லத் தோய்த்ததால் சிவந்தெழுந்தது பூந்தளிர்” என்று கவி ஓவியம் தீட்டியுள்ளார், திருமிகு. சக்திப்ரபா.

    அரங்கன் நாமத்தை
    அனுதினமும் அரங்கேற்றும்
    கிளிகளிரண்டும் – வறண்ட
    கிளைகளில்
    பையக் காலூன்றி
    ரங்கா ரங்கா என்றே
    ராகமிசைத்து
    மென்சிறகின் வர்ணத்தை
    மெல்லத் தோய்த்ததில்,
    உலர்மேனி சிவந்து
    கிளர்ந்தெழுந்த பூந்துளிர்!

     *****

    ”சருகான மரத்திலும் நீ; சாய்ந்தாடும் கொடியிலும் நீ; பசுமைநிறச் செடியிலும் நீ; பாய்ந்தோடும் நதிக்கரையிலும் நீ என எங்கெங்கும் உன் வண்ணம்; அதில் உருவாகுது ஆயிரம் எண்ணம்; எமைவிட்டுப் பறந்துவிடாதே பைங்கிளியே!” எனக் கிள்ளையிடம் கொஞ்சுமொழி பேசுகின்றார் திருமிகு. எம். சுதா.

    கிளி

    பச்சைநிறக் கிளியே உனைக்
    கண்டால் பரவச நிலையே!
    சொன்னதைச் சொல்லும் கிளியே
    நீ சுந்தர வதன எழிலே!

    பழங்களைத் தின்னும் கிளியே உனைப்
    பார்ப்பவர் மனதில் மகிழ்வலையே!
    காதல் சிந்தனை தூண்டும் கிளியே
    நீ சிறகடித்துப் பறப்பது பைம்பொழிலே!

    சருகான மரத்திலும் நீ
    சாய்ந்தாடும் கொடியிலும் நீ
    பசுமைநிறச் செடியிலும் நீ
    பாய்ந்தோடும் நதிக்கரையிலும் நீ

    எங்கெங்கு காணினும் உன்றன் வண்ணம்
    மனமகிழ்ச்சியை அளிக்கும் அதுவே திண்ணம்
    அதில் உருவாகும் ஆயிரம் எண்ணம்
    அத்தனையும் புதுப்புது ஜாலவர்ணம்

    மதுரை மீனாட்சி கையில் நீ
    மார்கழி நாயகி கோதை கையிலும் நீ
    நல்ல சேதிகள் நாளும் சொல்ல
    நாங்களும் இருக்கிறோம் அவ்வழகைக் காண
    கிளியே கிளியே நீ பறந்து போகாதே!

    *****

    ”அடுத்தவர்க்குக் கொடுக்க மனமில்லா மாந்தர்களே! ஈத்துவக்கும் இன்பத்தைக் கிள்ளைகளிடம் கற்பீரே!” என்று இயம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கிளிகள் பாடம்…

    அடுத்த வேளை உணவிற்கே
    ஆலாய்ப் பறந்திடும் ஏழையர்முன்,
    கிடைத்த உணவு போதாதெனக்
    கூடுதல் வாங்கிப் பாழ்படுத்தி
    அடுத்த வர்க்கும் கொடுக்காத
    அன்பே யில்லா மாந்தர்களே,
    கொடுத்துக் கூட்டமாயச் சேர்ந்துண்ணும்
    கிளிகள் பாடம் கற்பீரே…!

    *****

    ”வேற்றுமொழி ஓதி தினம் வாடி வதங்கும் பள்ளிச்சிறார் போலன்றிப் புனந்தோறும் சுற்றித் தினையுண்ண வா கிள்ளாய்!” என்று கிள்ளைகளை அழைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    அன்னையுடன் ஆடிப்பழகும்
    அற்புத வாய்ப்புமின்றிச்
    சுற்றி வட்டமிட்டுச்
    கற்றிடுமோர் சூழலற்றுக்
    கூண்டில் அடைபட்டு
    வேற்றுமொழி ஓதி தினம்
    வாடி வதங்கிடும்
    பள்ளிச் சிறார் போலன்றி
    புனம்தோறும் சுற்றி நாளும்
    புதுக் காற்றைச் சுவாசித்து
    தினைவளத்தைத் தான் புசித்து
    திளைத்திட வா! என் கிள்ளாய்!

    *****

    கொஞ்சுமொழியால் என் நெஞ்சம் கவர்ந்த கிள்ளைகாள்! உமைக் காண்கையில் நான் கவிஞன் ஆகிறேன்! செடியைவிட்டு என் தோளில் ஏறுங்கள்; நாம் நட்புக் கொள்வோம்! என்று கிளிகளைப் பாசத்தோடு அழைக்கிறார் திருமிகு. பா.மஞ்சு பார்கவி.

    கூண்டுக்குள் இருந்து சுதந்திரம் கிடைத்துப்
    பறந்துவந்த பச்சைவண்ணக் கிளிகளே!
    உங்கள் பரபர ஓசைகேட்டு ஓடி வந்தேன்
    அங்கே றெக்கை விரித்து அமர்ந்திருந்த
    ஒரு கிளியைப் பிடித்தது!

    அதைப் பார்க்க அருகில் சென்றபோது
    என் ஓசையைக் கேட்டு எங்கோ ஒளிந்துகொண்டது!
    ஆனால் பழுத்த மிளகாய்போல் உன்மூக்குக்
    காட்டிவிட்டது கிளியே நீ அங்கே என்று!

    கொஞ்சுகின்ற கிளியே! என் மனதைக்
    கொள்ளை அடித்ததைச் சொல்வாயோ!?
    உன் வசியம் செய்யும் விழி
    என்னை மயக்கிடச் செய்யுதே!

    உன் கொஞ்சும் பேச்சு என்னைக் கவர்ந்திடுதே!
    சொன்னதைச் சொல்லும் வித்தை எங்குக் கற்றாய்?
    கிளியே உன்னைப் பார்க்கும்போது
    கவிதை என்னும் கண்மணியைக்
    கரம்பிடித்து நான் கவிஞன் ஆகிறேன்!

    செடியில் அமர்ந்து என்ன செய்கிறாய்?
    பறந்து வந்து என் தோளின்மேல்
    அமர்ந்துவிடு நாம் நட்புக்கொள்வோம்!

    *****

    ”ஆபரணங்களில் பதிக்கப்படும் மரகதக் கல்லைப்போல் மரத்தை அலங்கரிக்கும் கிளிகளே! உம் எச்சில்கூடப் புவியைப் பசுமையூட்டப் பயன்படுகின்றது!” என்று கிளிகளுக்குப் புகழாரம் சூட்டி மகிழ்கின்றார் திருமிகு. அபிநயா சம்பத்.

    வறண்டு நிற்கும் குச்சிகளை
    அலங்கரிங்க அதில் அமர்ந்திருக்கும் கிளிகளே….!

    பெண்களின் கழுத்தை அலங்கரிக்கும்
    ஆபரணங்களை, மேலும் அழகூட்ட அதில்,
    பதிக்கப்படும் பச்சை மரகத மணிகளைப் போன்று
    அத் தாவரங்களை அலங்கரிக்கின்றீர்….!

    நீங்கள் அமர்ந்ததால் என்னவோ,
    அச்செடியில் மாத்திரம் பச்சை இலைகளின் சங்கமம்….!

    மனிதர்களின் கொடிய செயலால் இப்படி
    வறண்டு கிடக்கின்றது இப்புவி!
    ஆனால் உங்களின் எச்சில் கூட
    இப்புவியைப் பசுமையாக்குகின்றது….!
    உங்கள் எச்சில் கூட இப்புவியை
    பசுமையாக்குகின்றது பச்சை கிளிகளே…!

    சாய்ந்து வறண்டு விழப்போகும்
    அந்தச் செடிகளைப் பிடித்து இப்புவியில்
    பசுமையை நிலைநாட்டுகிறீர்….!
    இந்த மனிதர் கூட்டம் உங்களிடம்
    பாடம் கற்க வேண்டும்!

    *****

    ”கிளியே! சுதந்தரமாய்ப் பறந்துதிரிந்த உன்னைக் கூண்டிலடைத்துச் சீட்டெடுக்கப் பழக்கியதேன் மானுடன்? சிறகைவிரித்து மெல்ல விண்ணைநோக்கிப் பறந்திடு! வெற்றிக்கனி உண்டு மகிழ்ந்திடு!” என்று கிள்ளைக்கு நல்லுரை நவில்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    கூண்டுக்குள் கிளியே
    உன்னைக் கண்டு கண்டு
    சுதந்திரமாய்ப் பறந்து திரிவதைக் கண்டதும்
    சொர்க்கம் என்று நினைத்தேன்

    பறந்து திரிந்து காய் கனிகளை
    உண்டு மகிழ்ந்த உன்னைச்
    சிறகொடித்துக் கூண்டிலடைத்துச்
    சிறு உணவிற்குச்
    சீட்டெடுத்துக் கொடுக்க பழக்கியதேன்?

    எடுத்துக் கொடுக்கும் சீட்டை வைத்து
    எதிர்காலம் சொல்லி முடிக்க
    எல்லாம் அவன் செயல் என்று அறிந்தும்
    எதிர்காலம் அறிந்து நீ என்ன செய்வாய்?

    எதிர்வரும் நிகழ்வுகளை
    எதிர்பார்த்துக் காத்திருக்கக்
    கவலை உன்றன் நெஞ்சில்
    மெல்லக் குடிபுகுமே!

    ஜோதிடத்தில் வைத்த நம்பிக்கையை
    உன்மீது வைத்துத் தன்னம்பிக்கையோடு முயன்றிடு!
    சிறகை விரித்து மெல்ல விண்ணை நோக்கிப் பறந்திடு!
    வெற்றிக்கனியை உண்டு மகிழ்ந்திடு!

    மானிடரின் ஜாதகத்தைச்
    சொல்லி முடிக்க நீ உதவிட
    உன்னைப் பற்றி இங்குச் சொல்லி
    ஜோதிடனாய் நான் மாறினேனோ?

    *****

    அழகிய பாமாலைகள் புனைந்து பசுங்கிளிகளுக்குச் சூட்டிமகிழ்ந்த கவிஞர் பெருமக்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்.

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    என் நிற மரங்களெல்லாம் இன்று
    செந்நிறமாய் மாறி நிற்பதறிந்து
    குடும்பத்துடன் ஓடிவந்து பார்த்தேன்…

    திரும்பிய திசையெங்கும் பச்சை கண்டு
    திக்கெட்டும் மானுடர் இச்சை கொண்டுத்
    திகைப்புடன் நம் தேசம் புகுந்ததொரு காலம்!

    வளங்கள் அனைத்தும் அழித்து
    வானுயரக் கட்டிடங்கள் செழித்து
    உயிரினங்கள் மாற்றுதேசம் தேடுது இக்காலம்!

    தாய் மண்ணைப் பிரிந்து
    தாயிழந்த பிள்ளையாய் வறிந்து
    தவித்துத்தான் நிற்கிறோம் அந்நிய தேசத்தில்!

    வாயற்ற ஜீவனென்று விட்டுவிட்டாய்
    வாழ்க்கை என்பதைத் தொலைத்துவிட்டாய்
    என் கதி விரைவில் உனக்கென்பதை மறந்துவிட்டாய்!

    நான் தொலைந்துபோனது போல்
    நீ தொலைந்து போகுமுன்னே நிதானமாய் யோசி!

    கண்ணை அழித்து ஓவியம் வாங்கி
    மண்ணை அழித்துச் சொத்துக்கள் சேர்த்து – உன்
    மக்களை செவ்வாய் கிரகம் அனுப்பும் எண்ணமோ?

    பசுமைதனை அழிக்குமுன்னே பலமுறை யோசி – உன்
    தலைமுறை வாழ வழிவிட யோசி!

    ”கண்ணை அழித்துச் சித்திரம் வாங்குதல்போல், மண்ணை அழித்துச் சொத்துக்கள் சேர்க்கும் மானுடா! இத்தேசத்தை அழித்துச் செவ்வாய்க் கோள்புக உத்தேசமா?” என்று மானுடனால் புவிக்கு நேரும் கெடுதியை நச்சென்று கவிதையில் பதிவுசெய்திருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்து மகிழ்கின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    திரு. முகம்மது ரபியின் இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 246க்கு வழங்கியிருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். படக்கலை நிபுணர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    அலையெனவே அலைந்தாடும் மனித மனங்கள் அவா அறுக்கும் கலையறிந்து அடக்கத்தோடு வாழ்ந்தால் வாழ்வில் இன்பம் கோபுரமாய் உயர்ந்துநிற்கும் எனத் தோன்றுகின்றது இப்படக் காட்சியைக் காண்கையில். ஆயினும் அவ் உயர்நிலை வாய்க்கக் கடும் பயிற்சியும் விடா முயற்சியும் தேவை.

    இப்படக்காட்சியைக் காணும் கவிஞர்களின் உள்ளத்தில் கவிதை வெள்ளம் பொங்கிப் பெருகும் என நினைக்கிறேன். அவ்வெள்ளத்தில் நீந்தி மகிழும் நல்வாய்ப்பை எமக்களிக்க வாரீர் எனக் கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்!

    *****

    அசைந்தாடும் நதிநீரை, அந்நீரின் பளபளப்பை, ஓரம்நின்று இரசிக்கும் படகுகளை, கட்டடங்களின் பின்னே மறைந்து நின்று சிரிக்கும் மரங்களை எனப் படத்தில் தெரிகின்ற அனைத்தையும் தன் கவிதைக்குள் கவினார் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    அசைந்தாடும் நதிநீரை
    அணைத்தபடி கட்டடங்கள்
    அழகழகாய்த் தெரிகிறதே
    அதில் நம் மனமும் லயிக்கிறதே

    இடைவிடாது ஓடுகின்ற
    இந்நதி நீரின் பளபளப்பு
    இறைவன் தந்த பரிசளிப்பு
    நம்மிரு கண்ணில் ஜொலிஜொலிப்பு

    மரங்களும் தான் தெரிகிறதே
    மறைக்கும் கட்டடங்கள் பின்புறத்தில்
    சில்லென்று காற்றடிக்கச்
    சீறியெழச் சிரிக்கிறதே!

    கதிரவனின் ஒளிவீச்சால்
    தங்கக்குவியலாய் இந்நதிநீரோ
    அதனுடே நீலநிறம்
    அதற்குத்தான் முத்தாய்ப்போ?!

    படகுகளும் ஓரம் நின்று
    நதியைத்தான் ரசிக்கிறதோ
    ஆலயங்கள் கரைமீது
    அமைதியைத்தான் தருகிறதோ!

    அழகென்று எதைச் சொல்ல…?
    அற்புதப் படப்பதிவில்
    அருமையான காட்சியே என்று
    அறுதியிட்டுக் கூறுகின்றேன்!

    *****

    ”அலைகடலே அடங்கிக் கிடப்பாய்! அடங்காது ஆடும் அறிவற்ற மனிதனுக்கு, நேற்றிருந்தோர் இன்று இல்லை எனும் நிலையாமையை நீ உரைப்பாய்!” என்று கடலை வேண்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனிதனுக்குப் பாடம்…

    ஆற்றல் மிகுந்த அலைகடலே
    அடங்கிக் கிடப்பாய் நிலையாக,
    ஏற்றம் வந்தால் மனிதனவன்
    ஏதும் தெரியா தாடுகின்றான்,
    கூற்றின் வரவு தெரியாதே
    குற்றம் பலவும் செய்கின்றான்,
    நேற்றுச் செய்தோர் இன்றில்லை
    நெறியாம் பாடம் சொல்வாயே…!

    *****

    ”யாத்திரை என்றதும் நினைவில் வரும் திருத்தலம் காசி; முதுமைவந்து முத்தமிட, அமைதி தேடும் மனங்களுக்குப் புகலிடமும் இந்தக் காசியே” என்று காசினி போற்றும் காசியின் புகழ்பாடுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    பஞ்சபூதங்களில்
    நிலமும் நீரும்
    வீசும் காற்றும் வானும்
    வந்து நின்று போஸ் கொடுக்க
    தீமை விலகி நன்மை பெருகத்
    தீ மட்டும் விலகிச் சென்றதோ?

    நித்திரையில் கூட
    யாத்திரை என்றதும்
    நினைவில் வரும்…. காசி
    கங்கையில் தினம்
    கறைகள் நீராட
    புனிதமாய் மாறி
    புண்ணிய ஸ்தலமானதோ?

    குற்றங்கள் பெருகிப் பாவங்கள் நிறைந்திட
    புனித நீராடி
    பாவங்களைத் துறந்து பரிசுத்தம் ஆகும்
    நம்பிக்கையைப்
    பலர் நெஞ்சில் விதைத்தவன்
    தன்னம்பிக்கை விதைக்க மறந்ததென்ன?

    எதிர்காலம் பற்றிச்
    சிந்தையேதும் இன்றியே
    பொருள் தேடி ஓடியே
    இளமை முழுதும் கழியுமே
    வந்து போக மனமின்றி
    தங்கிவிட்டச் சக்தி யாவும்
    ஒன்று சேர்ந்து உருவான ஊரு இது!

    முதுமை வந்து முத்தமிட
    அமைதி தேடி அலைந்திடும்
    மனங்கள் அனைத்திற்கும்
    புகலிடமாய் அமைந்திடும்
    காசி எனும் இத்தலமே!

    *****

    ”புலன்களால் ஏறிய புழுதியைப் படித்துறையில் துலக்கி, பக்திக்கடலில் மூழ்கி, முக்தியெனும் முத்தெடுக்கக் காத்திருக்கும் கட்டங்கள் இவை” என்கிறார் திருமிகு. சக்திப்ரபா.

    புலன்களால் புழுதியேறி
    அடர்ந்திருந்த அழுக்காற்றுக் கறையைப்
    படித்துறையிலே துலக்கி,
    சினம் தொலைத்து, மோகம் களைந்து,
    பக்தியெனும் கடலில் மூழ்கி,
    முக்தியெனும் நல்முத்தெடுக்க,
    தமது முறைக்காக
    வரிசையில் காத்திருக்கும்
    கட்டடங்கள்.

    *****

    ”வானோங்கி நிற்கும் இக் கட்டடங்கள் நிலைத்திருக்க, கடலது கரை தாண்டாமல் கண்ணியம் காக்கவேண்டும்” என்ற உண்மையை விண்டுரைக்கின்றார் திருமிகு. சத்தியா இரத்தினசாமி.

    வல்லென மனிதன் வனைந்த கட்டடங்கள் வானம் தொட.
    முனைந்து நிற்கும் இவ்வகையைப் பார்க்கையிலே….
    உள்ளூர ஓர் உணர்வெழுகின்றது.
    இக் கட்டடக் காட்சியெல்லாம் கரையிலே நிலைத்திருத்தல்,
    கண்ணியம் காக்கும் கடல் கரை தாண்டா வரையிலேயே…

    *****

    நீரையும் நீரைச் சார்ந்துநிற்கும் ஏனைய பொருள்களையும் அழகாய்த் தம் கவிதைகளுக்குள் அடக்கி, வாழ்வியல் உண்மைகளை அவற்றோடு தொடர்புபடுத்தி வழங்கியிருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என் அகங்கனிந்த பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது…

    ஜீவநதி!

    காட்சிகள் மாறினாலும்
    காலங்கள் மாறினாலும்
    மாட்சிமை(யை) நிலத்து நிற்க
    மன அழுக்கை அடித்து ஓட்டு!

    சலசலத்துப்
    பொங்கியோடி
    வையகத்தின் வளம் சேர்க்கத்
    தினம் தினம் புதிப்பித்துக் கொள்!

    ஓரிடத்தில் ஒடுங்கி
    பழமை சேர்ந்து
    பாசி படிந்து
    குட்டையாய்த் தேங்கிடாமல்
    ஜீவநதியாய் ஓடிக்கொண்டே இரு!

    ”மனிதா! மாட்சியோடு என்றும் நிலத்தில் நிலைத்துநிற்க, உன்னை நித்தமும் புதுப்பித்துக்கொள்! குட்டையாய்த் தேங்கிடாமல் ஜீவநதியாய் ஓடிக்கொண்டே இரு!” என வாழ்வின் வெற்றி இரகசியத்தை எளிமையாய் உரைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பூக்களுக்கு இடையே காதல் பாக்கள் இசைத்தபடி அமர்ந்திருக்கும் காதல் புறாக்களைத் தம் ஒளிப்படப் பெட்டியில் களிப்போடு கொண்டுவந்திருப்பவர் திரு. பார்கவ் கேசவன். காதலர் தினத்தை ஒட்டிய வாரத்துக்குப் பொருத்தமான படமிது என்று இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இல்லறத்தில் புதிதாய் இணைந்திருக்கும் இணையரின் திருமணம் குன்றாத நறுமணத்தோடும் குறையாத இன்பத்தோடும் என்றும் இருந்திட, ஒருவர் உணர்வை மற்றொருவர் புரிந்துகொள்வதும், எடுத்ததற்கெல்லாம் முட்டிக்கொண்டிராமல் சிறிது விட்டுக் கொடுத்துச் செல்வதும், அடுத்தவரின் தனிப்பட்ட ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் இருவருமே மதிப்பளிப்பதும் அவசியம். அத்தகு இல்லறம் அன்பும் அறனும் உடைய நல்லறமாய் என்றும் திகழ்ந்திடும் என்பதில் ஐயமில்லை.

    இனி, மோதலில்லாக் காதல் வாழ்வுக்கு நம் கவிஞர்கள் கூறும் ஆலோசனைகள் என்னென்ன என்பதையும் அறிந்துவருவோம் வாருங்கள்!

    *****

    ”புதிதாய் வாழ்வில் இருவர் இணைந்திடத் தொடங்கிய இந்த இல்லறம் இறுதி வரை இன்பத்தோடு நிலைக்கட்டும்” என்று மணமக்களை அகமகிழ்ந்து வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இன்பம் நிலைக்கட்டும்…

    புதிதாய் வாழ்வில் இணைந்தவர்கள்
    புவியைச் சுற்றும் கணமிதுவே,
    எதிலும் குறைகள் வைக்காமல்
    எல்லாம் துய்த்திடும் வேளையிது,
    இதயமும் ஒன்றாய்க் கலந்ததாலே
    இறக்கை கட்டிப் பறக்கின்றார்,
    முதுமை வரைக்கும் நிலைக்கட்டும்
    முறையாய் இல்லற வாழ்விதுவே…!

    திருமண வைபவத்தில் போடப்படும் மூன்று முடிச்சுக்குப் பொருள்பொதிந்த விளக்கங்களை அழகுறக் கவிதையில் அடுக்குகின்றார் திரு. ராவணா சுந்தர்.

    திருமணம்

    என் வாழ்வியலை
    அழகாக உயிராக்கும்
    என் மறைமதியே
    உன்னைப் பிறைமதியாகப்
    பிரதிபலிக்கும் வைபவத்தை
    நோக்கிப் பிரார்த்திக்கிறேன்!

    மணமாலை நாம்
    மாற்றிடவே நீ
    மறுமுறை மலர்ந்திட வேண்டும்!

    மங்கள இசை மனமுருக
    அட்சதையில் மாங்கல்யம் பவனிவர,
    புரோகிதர் பொன்மொழியில்
    இறையோர்களை அழைத்திட,
    கெட்டிமேளம் ஓங்கிட,
    சொந்தமும் நட்பும்
    வாழ்த்துகளை வார்த்தைகளற்று
    அரிசி மழையாகப் பொழிந்திட,
    வேண்டிய கனவுகளை
    கைகளில் ஏந்தி,
    உன் பொன்முறுவலை எனதாக்கி,
    நான் இடும் முதல் முடிச்சினில்
    உன் தனிமையைத் தகர்த்திட வேண்டும்.
    இரண்டாம் முடிச்சினில்
    நம்பிக்கையை விதைத்திட வேண்டும்.
    மூன்றாம் முடிச்சினில்
    அழியும் மெய்யிலும்
    அழிவில்லாக் காதலை
    வரமாக்கிட வேண்டும்.

    உன் நெற்றியில் கறைபடியவே
    என் கைவிரல்கள் ஏங்கிட வேண்டும்!

    உன் பாதம்
    ஏந்திய தருணம்
    என் கைகள் மோட்சம்
    அடைந்திடுமே -அதை
    மெட்டி ஒலியால் நான்
    உணர்த்திட வேண்டும்!

    நமது ஆடைகளின்
    முடிவினில் இடும் முடிச்சினில்
    வாழ்க்கை தொடங்கிட வேண்டும்!

    சுற்றத்தார் கண்களும்
    நாம் சுற்றிவரும் அக்னியில்
    கரைந்திட வேண்டும்!

    நல்வரவின் நோக்கம்
    பலித்திடவே நாம்
    சுற்றத்தை வணங்கிட வேண்டும்!

    *****

    உறவென்ற கயிறு உணர்வென்ற அச்சில் சுழல, பருவம் கடந்தபின்னும் பரிவோடு தொடரவிருக்கும் இனிய இல்லறத்திற்கான தொடக்க ஆட்டமிது என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    பொன்னூஞ்சல்

    உறவென்ற கயிறு கட்டி
    உணர்வென்ற அச்சில் சுழல
    மனமென்னும் காற்று ஆட
    மணமக்கள் ஆடும் ஆட்டம்!

    சொந்தங்கள் வாழ்த்துரைக்க
    சீதையுடன் இராமனென
    சந்ததிகள் தொடர்ந்துவாழ – இன்பச்
    சன்னிதியில் ஆடும் ஆட்டம்!

    சோர்வுற்ற நேரமெல்லம் சொந்தமெனத் தாகம்தீர்த்து
    பருவம் கடந்த பின்னும் பரிவுடன் நீர்த்திருந்து
    மேடுபள்ளம் தாண்டி ஜீவநதியாய் ஓட
    இல்லறத்தின் இன்பம் காணும் துவக்க ஆட்டம்!

    *****

    இல்வாழ்வில் புதிதாய் இணைந்திருக்கும் இணையருக்கு மண்ணில் நல்லவண்ணம் வாழ வழிசொல்லியிருக்கும் கவிஞர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    காதல் திருமணம்!

    கல் தோன்றி மண் தோன்றிய
    காலம் முன்னே தோன்றிய காதல்
    கண் முன்னே நீ தோன்ற
    என் நெஞ்சில் தோன்றியதே
    இதயத் துடிப்பில் தோன்றி
    ஊமை விழிகள் பேசும் மௌனமொழி
    உணர்வாய் மாறி
    நெஞ்சில் தோன்றிடும் காதலாய்த்
    தரையில் கால் படாமலே
    விண்ணில் பறந்திடும்
    உன்னை நினைக்கையிலே
    றெக்கை கட்டி மனசு!

    விழியில் தோன்றி இதயம் நுழைந்து
    உணர்வாய்த் தோன்றி உள்ளம் கவர்ந்து
    சொல்லத் துடித்த மனதை அறிந்து
    என்னை ஏற்க
    நெஞ்சம் துணிந்து கரங்கள் பற்றிட
    இருமனம் இணைந்த திருமணம்!

    தேக்கி வைத்த அணை நீராய்ச்
    சேர்த்து வைத்த ஆசைகள்
    மடை திறந்த வெள்ளமாய்த்
    தடை ஏதும் இன்றியே
    பொங்கி வழியும் காதல்
    என் அருகில் நீ இருக்க
    உலகை மறந்து
    உயரப் பறந்திடும் மனம்
    இடைவெளி இல்லாமல்
    ஒருவரை ஒருவர்
    புரிந்துகொள்ள அறிந்துகொள்ள
    இடையூறு ஏதும் இன்றியே
    காதல் பாடம் கற்றுப் பயிலத்
    திருமணமெனும் பள்ளிக்கூட
    அறிவிப்புப் பலகை ஊருக்கு அறிவித்ததே
    புது மண தம்பதியர் இவர்கள் என்று!

    ”அணைபோட்ட ஆசைகள் மடைதிறந்த வெள்ளமாய்ப் பாய்ந்திட, இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத் திருமணப் பள்ளியில் இணைந்துவிட்ட புதுமணத் தம்பதியர் இவர்கள் என்பதை அறிவிக்கும் பலகை இது!” என்று அந்தரத்தில் ஊஞ்சலாடும் இணையருக்குச் சுந்தரத் தமிழில் அறிமுகம் தந்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 244-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 244-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    குஞ்சுக் குருவியொன்று வாய்பிளந்தபடி தன் தாயைப் பரிதாபமாகக் பார்த்துநிற்கும் அரிய காட்சியைத் தன் புகைப்படக் கருவியில் பதிவுசெய்து வந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. அடடா…படக்கவிதைப் போட்டி 244க்கு ஏற்ற படம் இதுவன்றோ என்றிதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றிகள்!

    அலைபேசிகளின் மின்காந்த அலைகளின் தாக்கத்தால் சிட்டுக் குருவிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகின்றது என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகின்றது அறிவியல்.

    ”காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றார் மகாகவி பாரதி. நாமோ நம் மகிழ்ச்சிக்காவும் சௌகரியங்களுக்காகவும் பிற உயிர்களின் இருப்பிடத்தையும் பெருக்கத்தையுமே அழிக்கத் தொடங்கிவிட்டோம் அருளின்றி!

    ”குருவியும் மகிழ்வாய் வாழ்ந்திட நினைக்கும்
    பெருமனம் பெற்றால் மானுடம் சிறக்கும்!”

    இனி கவிஞர்களின் முறை! கற்பனை வானில் நீங்களும் சிட்டுக்குருவியைப் போல் சிறகடித்துப் பறந்து, கருத்து மணிகளை அள்ளித் தாருங்கள் என்று உங்களை அன்பொடு அழைக்கிறேன்!

    *****

    காட்டுமரங்களை வெட்டிய மனிதனின் அருளற்ற செயலால் கூடிழந்த குருவிகள் இப்போது வாடி நிற்கின்றன என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனிதனால்…

    குஞ்சுக் குருவிக் குணவில்லை
    கூட்டிச் செல்லவும் வழியில்லை,
    அஞ்சிட வேண்டும் மனிதனுக்கு
    அவனால் வந்ததே இந்நிலைமை,
    கொஞ்சமும் இரக்கம் ஏதுமின்றிக்
    காட்டு மரங்களை வெட்டிவிட்டான்,
    தஞ்ச மடைய இடமில்லை
    தாயே இயற்கை காப்பாயே…!

    *****

    வாழ்வின் நிலையாமை கண்டு கலங்காமல் முயற்சியோடு சிறுகிளையில் கூடுகட்டும் பறவைகளின் பண்பதனை நாமும் கற்றிடுவோம் என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    திட்டமிடு!

    நிலையாமை நித்தியமென்று
    நித்தமும்தான் சோகங்கொண்டு
    சித்தமது கலங்கி நாளும்
    சோம்பற்கொண்டு சுருங்கிடாமல்
    சிறுகிளையில் இடங்கண்டு
    சுயமுயற்சி தான்கொண்டு
    தனக்கென்று கூடு கட்டும்
    திறமதனைக் கற்றிடுவோம்…

    சிட்டதனின் வாழ்க்கையிங்கு சிலநாட்கள் என்றாலும்
    கிட்டிய வாழ்நாளைச் சோம்பலின்றி
    கட்டமைத்துக் கடமையாற்றும் பண்பு கற்று
    திட்டமிட்டுச் சீரமைத்து வாழ்ந்திடுவோம்…

    *****

    எம் சிறகை உடைத்துச் சிறையில் அடைக்கும் மனிதா! அனைவரும் ஒருநாள் இறக்கத்தானே போகிறோம்? எம்மையும் கொஞ்சம் வாழவிடேன்! என்று சிட்டு சொல்லும் சத்தான செய்தியைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    சிட்டுக்குருவி சொல்லும் செய்தி

    அழிந்து போகும் இனங்களின்
    பட்டியலில் இன்று நான்
    இயற்கை கூட எமக்கெதிராய்த் திரும்பிட
    யாமிருக்கும் இடம் யாவும்
    தீக்கு இரையாய் மாறியதே!

    அடைக்கலம் தந்த வானம் எங்கும்
    ஆனந்தமாய்ப் பறந்து திரிய
    சிலர் வாழ்க்கை இங்கு
    வலியவருக்கு இரையாய் மாறியது!

    இயற்கை அழகை ரசிக்க நினைத்து
    சிறகை உடைத்துச் சிறை பிடித்து
    சுயநலமாய் எமது சுதந்திரத்தைப் பறித்து
    கூண்டில் அடைத்து ரசிக்கும் ஒரு கூட்டம்!

    விருப்பம் அதை அறியாமல்
    தன் விருப்பத்தைத் திணிப்பது போல்
    எம் (பறவை) மனமதை அறியாமல்
    வளர்ப்பதாய்ச் சொல்லி மகிழும்!

    வளர்க்க வில்லை என்றாலும்
    எதையும் அழிக்காமல்
    இயல்பாய் இருக்க விட்டாலே
    அழிவைத் தானே தள்ளிப்போடுமே

    பிறப்பென்று துவங்கிய யாவும்
    இறப்பென்று ஒரு நாள் அழியும்
    உணர்ந்து நடந்திடு
    இன்று நான்…. நாளை நீ……..

    *****

    சிட்டுக்குருவிகளை மையமாக வைத்து நல்ல கருத்துக்களைத் தம் கவிதைமாலையில் கட்டித் தந்திருக்கும் கவிஞர் குழாத்துக்கு என் நன்றியும் பாராட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    தாபத்திலே தாய்ப்பறவை!

    நாங்கள் செய்த காடு
    அழித்துக் கொண்டிருக்கிறாய் ஆணவத்தோடு!
    நாங்கள் கட்டிய கூடு
    அதை பார்த்து தான் வந்தது நீயிருக்கும் வீடு!

    அத்தி அரசு ஆலமென விதைத்தோம் எச்சத்தோடு
    எங்கள் அழிவைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் அலட்சியத்தோடு!
    பார்த்துப் பார்த்து நீ பேணிக் காப்பதெல்லாம் இரக்கத்தோடு
    பிராய்லர் கோழிகளைத் தானே கூண்டோடு!

    வாய்திறந்து பார்க்கிறது என் குஞ்சு பசியோடு
    தீவனத்திற்குத் திரிந்தால் எல்லாமே கட்டிட வீடு!
    கொத்திக் கொடுக்க செங்கல்தான் இருக்கிறது சிமெண்டோடு
    தாபத்தில் தரையில் நிற்கிறோம் வெறும் வயிற்றோடு!
    எங்களுக்கு நீ செய்வது நன்றி கேட்ட கேடு!

    ”வீடு கட்டுவதற்காக வனத்தை அழித்த மானுடரால் தீவனத்துக்குத் தவிக்கின்றோம் நாங்கள்! கொத்தித் தின்ன செங்கல் தானே இருக்கின்றது சிமெண்டோடு; மனிதா நீ எமக்குச் செய்வதோ பெருங்கேடு” என்ற தாய்ப்பறவையின் அவலக்குரலைத் தன் கவிதையில் உணர்வுபூர்வமாய்ப் பதிவுசெய்திருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 243-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 243-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பிரேம்நாத் திருமலைச்சாமியின் நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 243க்குப் பரிந்துரைத்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

    சிறுசெடிப் பெருமரமாகிக் கனியும் களைப்பு நீக்கும் நிழலும் தருவதுபோல் மனிதனும் தன் சிறிய உள்ளத்தை அன்பாலும் நற்பண்பாலும் உயர்த்தினால் குமுகாயத்துக்குப் பயனுடையானாய் – நயனுடையானாய்த் திகழ்வான்.  

    படத்தில் முகங்காட்டும் சிறுசெடி கண்டு எழும் தம் அகத்துணர்வுகளைக் கவிதையாய் வடித்துத்தரக் காத்திருக்கும் பாவலர்களை அன்புபாராட்டி அழைக்கிறேன்.

    *****

    ”மரத்தை அழித்து மாடிகட்டும் மனிதா! வாழ்ந்து மறையப்போகும் சொற்ப காலத்துக்குள் இயற்கையை அழிக்கும் அற்பகுணத்தை விட்டொழிப்பாய்!” என்று இன்னுரை இயம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மரம் நடுவாய்…

    மரங்களை வெட்டி யழித்துவிட்டு
    மாடிகள் கட்டும் மனிதாகேள்,
    இருப்பது சிலநாள் இவ்வுலகில்
    இதற்குள் இயற்கையை அழிப்பதேனோ,
    மரங்களால் தானே மழைவந்தே
    மன்னுயி ரெல்லாம் பிழைத்திருக்கும்,
    கருத்தினி லிதனைக் கொண்டேதான்
    காசினி வாழவை மரம்நட்டே…!

    *****

    ”சிறுதுளி பெருவெள்ளமாய் ஆவதுபோல், வீரியம் கொண்ட விதை விருட்சமாய் விண்ணைத் தொடுவதுபோல் நாமும் தடைகள் உடைத்துச் சென்றிடுவோம்; வாழ்வில் வென்றிடுவோம்” என்று ஊக்கமூட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    விளையும் பயிர்

    சிறுகடுகு என்றாலும் அதன் காரம் குறைவதில்லை
    சிறுமனிதன் என்று எண்ணித் துவளுவதில் ஞாயமில்லை
    தீச்சுடரைக் கானகத்தில் இட்ட கதை அறிவோம்
    தத்தரிகிட நாதம் நமது நெஞ்சினிலே வைப்போம்!

    சின்னத் துளிகள் என்று எண்ணி
    துடைத்தழிக்க நினைப்போர் இருந்தாலும்
    மடைகள் உடைக்கும் வெள்ளமாய் மாறித்
    தடைகள் தாண்டிச் சென்றிடுவோம்!

    காரியம் யாவும் செய்திடும் வகையில்
    வீரியம் கொண்ட விதையாய் ஆகி
    விண்ணைத் தொடும் விருட்சமாய்ப் படர
    மண்ணைப் பிளந்து முளைத்திடுவோம்!

    *****

    சின்னஞ்சிறு செடியை வைத்துச் சீரிய சிந்தனைகளைக் கூரிய வார்த்தைகளில் கவிதைகளாய் வடித்துத் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    விதையாய் விழுந்தாலும்
    விண்ணை நோக்கி
    மண்ணைப் பிளந்து
    முயன்றால் தான்
    முளைத்திட முடியும்!
    முயலாமையால்
    பயனேதும் இல்லை!
    வானளாவ உயர்ந்திட
    முயற்சி ஒன்று போதுமே!
    விதையாய் நெஞ்சில்
    விழுந்த யாவும்
    திருவினையாய் மாறிடுமே!

    விதையாய் விழுந்தாலும்
    பழுதாகிப் போகாமல்
    மண்ணைப் பிளந்து
    முளைத்தெழ
    மண்ணில் ஈரம் வேண்டும்!
    எழும் எண்ணமும்
    கண்ட கனவும்
    மெய்ப்படுமே
    நெஞ்சில் வீரமும்
    ஈரமும் சேர்ந்திருந்தாலே!

    விதையாய் விழுந்து
    முளைத்துச் செடியாய்
    மரமாய் வளர்ந்திட
    நீர் வேண்டும்
    அன்பெனும் விதையை
    நெஞ்சில் விதைத்து
    நீர்விட்டு
    மனிதநேயமேனும்
    மரத்தை வளர்த்திடுவோம்!

    நிழல் தரும் மேகமாய்
    இதயங்கள் கொண்டாடும் வானமாய்
    எதிரியையும் அரவணைத்து
    எல்லைகள் கடந்து வாழ்ந்திருப்போம்!
    என்றென்றும் புன்னகையுடன்
    ஒன்றே குலமென்று
    இவ்வுலகுக்கு உணர்த்தி நிற்போம்!
    வளமுடன் வாழ்ந்திடவே
    நெஞ்சில் விதையாய்
    அன்பை மட்டும் விதைத்திடவே!

    ”விதையாய் விழுந்தாலும் அது பழுதாகாது பக்குவமாய் முளைத்திட ஈரம் வேண்டும்; அதுபோல் மாந்தர்களும் நெஞ்சில் அன்பை விதைத்து வீரமும் ஈரமும் தமதிரு குணங்களாய்க் கொண்டு முயன்றால் வானம் வசப்படும்; கனவு மெய்ப்படும்!” என்று மானுட வெற்றியின் இரகசியத்தைக் கூறிடும் இக்கவிதையின் படைப்பாளி திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்து மகிழ்கின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 242-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 242-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. அய்மான் பின் முபாரக்கின் புகைப்படக்கருவி எழிலாய்ப் பதிவுசெய்திருக்கும் இந்தப் படத்தைப் படக்கவிதைப் போட்டி 242க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    ”அன்பின் வழியது உயிர்நிலை” என்று பேராசான் வள்ளுவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் அன்பில் பி(இ)ணைந்திருக்கும்  கவிக்குலங்கள் நம்மை நெகிழவைக்கின்றன!

    கவிஞர்களே! இந்தக் கவிக்குலத் தோழர்களைப் பாடுக பாட்டே என்று சொல்லி உங்களை அன்போடு அழைக்கின்றேன்!

    *****

    ”கடுவனே! வெட்கங்கொண்ட மந்தியினை நீ வேட்கையுடன் சேர்ந்து குறிஞ்சிக் காவியம் தளிர்க்கச் செய்திடுவாய்” என்று குறிஞ்சிப்பண்ணில் கவிதை பாடுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    குறிஞ்சிப் பண்

    வண்டு சுழன்றிடும் சோலைமிடைக் காதல்
    கண்டு உயிர்வாழ்ந்து பரிணமிப்பாய்
    வெட்கங் கொண்ட கொடிச்சியினை – கடுவனே
    வேட்கையுடனே சேர்ந்திருப்பாய்!

    கொட்டும் சாரல் வெக்கைத் தவிர்க்கக்
    கானவன் தோள்களில் சாய்ந்திடுவாய் – அது
    வானவர் உலகையே காட்டுமென்ற
    வள்ளுவன் வாக்கை மெய்ப்பிப்பாய்!

    நேற்று இன்று நாளையின்றி
    நித்தமும் நிலைக்க வைத்திடுவாய்
    காற்றிடை நுழையாக் காதல் கொண்டு – குறிஞ்சிக்
    காவியம் தளிர்க்கச் செய்திடுவாய்

    *****

    நல்ல கவிதையை யாத்தளித்த தோழருக்கு நன்றி!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    மனிதன் மட்டும்…

    குரங்கி லிருந்து பிறந்தவன்தான்
    குணமதில் மனிதன் மாறிவிட்டான்,
    மரத்தை உறைவிடம் ஆக்கியேதான்
    மனம்போல் வாழ்ந்திடும் குரங்கினமே,
    மரத்தின் கிளையி லிருந்தாலும்
    மரத்தை யழிக்க நினைப்பதில்லை,
    தரத்தி லுயர்வாம் மனிதனவன்
    தாழ்கிறான் மரங்கள் தனையழித்தே…!

    தம் மனம்போல் வாழ்ந்திடும் குரங்கினங்கள் மரத்தினை அழிப்பதில்லை. ஆனால் பகுத்தறிவு பெற்றதால் குரங்கினும் தரமுயர்ந்துவிட்ட மனிதனோ மரங்களை அழித்தொழிக்கின்றான் என்று மனிதனின் மடமையைச் சுட்டிக்காட்டும் கடமையைச் சரியாய்ச் செய்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சிறு குழந்தைகள் மணல்வீடு கட்டி விளையாடுவதைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. வெங்கட் சிவா. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 241க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றன.

    மணல் மாளிகையிலேயே மனநிறைவு கொள்ளும் மழலையருக்கும், எத்தனை வசதி வாய்ப்புகள் வந்தாலும் நிறைவின்றி அத்தனைக்கும் ஆசைப்படும் பெரியோருக்கும் இடையில்தான் எத்துணை வேறுபாடு?!

    ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” எனும் குமரகுருபரப் பெருமானின் வார்த்தையை மந்திரச் சொல்லாய்க் கொண்டால் இன்றைய எந்திர வாழ்விலும் நிலைத்த இன்பத்தைக் காணலாம்!

    இனி, இப்படத்துக்கு ஏற்றதாய்க் கவிதைகள் வடித்துத்தர வாருங்கள் என்று கவிஞர்களைக் கனிவோடு அழைக்கின்றேன்!

    *****

    ”புதிய உலகுக்குப் பிள்ளைகளைத் தயார்ப்படுத்துவது பதின்மப் பருவம். அதில் பதியம் போடும் பண்புவிதைகள் நற்பலன்களை நல்கும்” என்கிறார் திரு. கே. மகேந்திரன்.

    பதின்மம்
    =========
    பதின்ம வயதினிலே
    புதுமைக் கிளர்ந்து எழும்
    மதிக்கு ஒப்புகின்ற
    பதிலைத் தேடி எழும்

    புதிய உலகமொன்று
    உதயம் ஆவததே
    பதியம் போடும் விதை
    பண்பு விதை களெனில்

    மகிழ்வைக் கெடுக்காதே
    மாண்பைப் பயிற்றிடலாம்
    மனம் நல்நிலமாமே
    குணத்தை வளர்த்திடலாம்

    இதிலே கோட்டை விட்டால்
    இனியும் வாய்ப்பு இல்லை
    இகத்தை மாற்றுதற்கு
    இவரே அடித்தளமாம்

    *****

    ”கணினி விளையாடல் நிறுத்திக் களத்திலே ஆட வேண்டும்; ஏட்டுப்படிப்பு மட்டுமன்றி எல்லாந்தெரிய வேண்டும். கூடிவாழ்ந்து கோடிநன்மை பெற்றிடவும் வேண்டும்” என்று சிறுபிள்ளைகளுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்கியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மனிதம் பழக்கு!

    அலை வீசும் கடற்கரையின் அழகை ரசிக்க வேண்டும்
    அலைபேசிச் சத்தம் இன்றி அமைதி கொள்ள வேண்டும்
    கணினியிலே விளையாடல் நிறுத்தி வைக்க வேண்டும்
    களத்தினிலே ஆட வைத்துக் களித்திருக்க வேண்டும்

    மணல்வீடு கட்டி மழலை மகிழ்ந்திருக்க வேண்டும்
    புனல்தோறும் ஆடி நாளும் பொலிந்திருக்க வேண்டும்
    சோர்வளிக்கும் தனிமையினைத் தூரந்தள்ள வேண்டும்
    கூடிவாழ்ந்து கோடிநன்மை பெற்றுவாழ வேண்டும்

    வீட்டினிலே அடைந்திடாமல் வெளியில் பார்க்க வேண்டும்
    ஏட்டுப் படிப்பு மட்டுமன்றி எல்லாந் தெரிய வேண்டும்
    கிணற்றுத் தவளையல்ல உலகஅறிவு கைக்கொள்ள வேண்டும்
    சுற்றத்தோடு வாழவைத்து மனிதம் பழக்க வேண்டும்!

    *****

    மணல்வீடு கட்டும் பிள்ளைகளை வைத்து மனங் கொள்ளத்தக்க நல்லுரைகளை நவின்றிருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    அடித்தளமாய்…

    மணலில் வீடு கட்டியேதான்
    மனம்போ லாடிய காலமெல்லாம்
    மணல்போல் மறைந்தே போயினவே
    மனதில் நினைவை விட்டுவிட்டே,
    கணமிதில் பிள்ளைகள் ஆடட்டும்
    களிப்பை நெஞ்சில் சேர்க்கட்டும்,
    பிணக்குடன் அவரைத் தடுக்காதே
    பிறகவர் உயர்வுக் கடித்தளமே…!

    மணல்வீடு கட்டிப் பிள்ளைகள் மனம்போல விளையாடிய காலமெல்லாம் மெல்ல மறைந்து வருகின்றன. (படத்தில் காணும்) இப்பிள்ளைகளேனும் அவ்வின்பத்தை அனுபவிக்கட்டும்! தடுக்காதீர்! என்று பெரியவர்களுக்குப் பொருளுரை புகலும் இக்கவிதையினை இயற்றியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share