-மேகலா இராமமூர்த்தி

குஞ்சுக் குருவியொன்று வாய்பிளந்தபடி தன் தாயைப் பரிதாபமாகக் பார்த்துநிற்கும் அரிய காட்சியைத் தன் புகைப்படக் கருவியில் பதிவுசெய்து வந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. அடடா…படக்கவிதைப் போட்டி 244க்கு ஏற்ற படம் இதுவன்றோ என்றிதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றிகள்!

அலைபேசிகளின் மின்காந்த அலைகளின் தாக்கத்தால் சிட்டுக் குருவிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகின்றது என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகின்றது அறிவியல்.

காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றார் மகாகவி பாரதி. நாமோ நம் மகிழ்ச்சிக்காவும் சௌகரியங்களுக்காகவும் பிற உயிர்களின் இருப்பிடத்தையும் பெருக்கத்தையுமே அழிக்கத் தொடங்கிவிட்டோம் அருளின்றி!

”குருவியும் மகிழ்வாய் வாழ்ந்திட நினைக்கும்
பெருமனம் பெற்றால் மானுடம் சிறக்கும்!”

இனி கவிஞர்களின் முறை! கற்பனை வானில் நீங்களும் சிட்டுக்குருவியைப் போல் சிறகடித்துப் பறந்து, கருத்து மணிகளை அள்ளித் தாருங்கள் என்று உங்களை அன்பொடு அழைக்கிறேன்!

*****

காட்டுமரங்களை வெட்டிய மனிதனின் அருளற்ற செயலால் கூடிழந்த குருவிகள் இப்போது வாடி நிற்கின்றன என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

மனிதனால்…

குஞ்சுக் குருவிக் குணவில்லை
கூட்டிச் செல்லவும் வழியில்லை,
அஞ்சிட வேண்டும் மனிதனுக்கு
அவனால் வந்ததே இந்நிலைமை,
கொஞ்சமும் இரக்கம் ஏதுமின்றிக்
காட்டு மரங்களை வெட்டிவிட்டான்,
தஞ்ச மடைய இடமில்லை
தாயே இயற்கை காப்பாயே…!

*****

வாழ்வின் நிலையாமை கண்டு கலங்காமல் முயற்சியோடு சிறுகிளையில் கூடுகட்டும் பறவைகளின் பண்பதனை நாமும் கற்றிடுவோம் என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

திட்டமிடு!

நிலையாமை நித்தியமென்று
நித்தமும்தான் சோகங்கொண்டு
சித்தமது கலங்கி நாளும்
சோம்பற்கொண்டு சுருங்கிடாமல்
சிறுகிளையில் இடங்கண்டு
சுயமுயற்சி தான்கொண்டு
தனக்கென்று கூடு கட்டும்
திறமதனைக் கற்றிடுவோம்…

சிட்டதனின் வாழ்க்கையிங்கு சிலநாட்கள் என்றாலும்
கிட்டிய வாழ்நாளைச் சோம்பலின்றி
கட்டமைத்துக் கடமையாற்றும் பண்பு கற்று
திட்டமிட்டுச் சீரமைத்து வாழ்ந்திடுவோம்…

*****

எம் சிறகை உடைத்துச் சிறையில் அடைக்கும் மனிதா! அனைவரும் ஒருநாள் இறக்கத்தானே போகிறோம்? எம்மையும் கொஞ்சம் வாழவிடேன்! என்று சிட்டு சொல்லும் சத்தான செய்தியைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

சிட்டுக்குருவி சொல்லும் செய்தி

அழிந்து போகும் இனங்களின்
பட்டியலில் இன்று நான்
இயற்கை கூட எமக்கெதிராய்த் திரும்பிட
யாமிருக்கும் இடம் யாவும்
தீக்கு இரையாய் மாறியதே!

அடைக்கலம் தந்த வானம் எங்கும்
ஆனந்தமாய்ப் பறந்து திரிய
சிலர் வாழ்க்கை இங்கு
வலியவருக்கு இரையாய் மாறியது!

இயற்கை அழகை ரசிக்க நினைத்து
சிறகை உடைத்துச் சிறை பிடித்து
சுயநலமாய் எமது சுதந்திரத்தைப் பறித்து
கூண்டில் அடைத்து ரசிக்கும் ஒரு கூட்டம்!

விருப்பம் அதை அறியாமல்
தன் விருப்பத்தைத் திணிப்பது போல்
எம் (பறவை) மனமதை அறியாமல்
வளர்ப்பதாய்ச் சொல்லி மகிழும்!

வளர்க்க வில்லை என்றாலும்
எதையும் அழிக்காமல்
இயல்பாய் இருக்க விட்டாலே
அழிவைத் தானே தள்ளிப்போடுமே

பிறப்பென்று துவங்கிய யாவும்
இறப்பென்று ஒரு நாள் அழியும்
உணர்ந்து நடந்திடு
இன்று நான்…. நாளை நீ……..

*****

சிட்டுக்குருவிகளை மையமாக வைத்து நல்ல கருத்துக்களைத் தம் கவிதைமாலையில் கட்டித் தந்திருக்கும் கவிஞர் குழாத்துக்கு என் நன்றியும் பாராட்டும்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

தாபத்திலே தாய்ப்பறவை!

நாங்கள் செய்த காடு
அழித்துக் கொண்டிருக்கிறாய் ஆணவத்தோடு!
நாங்கள் கட்டிய கூடு
அதை பார்த்து தான் வந்தது நீயிருக்கும் வீடு!

அத்தி அரசு ஆலமென விதைத்தோம் எச்சத்தோடு
எங்கள் அழிவைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் அலட்சியத்தோடு!
பார்த்துப் பார்த்து நீ பேணிக் காப்பதெல்லாம் இரக்கத்தோடு
பிராய்லர் கோழிகளைத் தானே கூண்டோடு!

வாய்திறந்து பார்க்கிறது என் குஞ்சு பசியோடு
தீவனத்திற்குத் திரிந்தால் எல்லாமே கட்டிட வீடு!
கொத்திக் கொடுக்க செங்கல்தான் இருக்கிறது சிமெண்டோடு
தாபத்தில் தரையில் நிற்கிறோம் வெறும் வயிற்றோடு!
எங்களுக்கு நீ செய்வது நன்றி கேட்ட கேடு!

”வீடு கட்டுவதற்காக வனத்தை அழித்த மானுடரால் தீவனத்துக்குத் தவிக்கின்றோம் நாங்கள்! கொத்தித் தின்ன செங்கல் தானே இருக்கின்றது சிமெண்டோடு; மனிதா நீ எமக்குச் செய்வதோ பெருங்கேடு” என்ற தாய்ப்பறவையின் அவலக்குரலைத் தன் கவிதையில் உணர்வுபூர்வமாய்ப் பதிவுசெய்திருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *