நாங்குநேரி வாசஸ்ரீ

111. புணர்ச்சி மகிழ்தல்

குறள் 1101

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள

கண்ணால பாத்து, காதால கேட்டு, மோந்து, உண்டு தொட்டு பாத்து அனுவிக்க சந்தோசம் முழுக்க மினுங்குத வளையல் அணிஞ்சிருக்க இந்த அழகானபிள்ள கிட்ட நெறைஞ்சு இருக்கு.

குறள் 1102

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து

நோய் தீக்க வெவ்வேற மருந்து இருக்கு. நகநட்டு அணிஞ்சிருக்க இவ தந்த காதல் நோய்க்கு இவளேதான் மருந்து.

குறள் 1103

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

தாமரைக் கண்ணனோட ஒலகம் ங்கது தான் விரும்புத காதலியோட தோள அணைச்சுக்கிட்டு ஒறங்குதது கணக்கா சந்தோசத்த குடுக்கக்கூடியதோ.

குறள் 1104

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

விட்டுப் பிரிஞ்சு எட்ட நின்னா சுட்டுப் பொசுக்குது  கிட்டத்துல நின்னா குளுகுளுன்னு இருக்க இந்த புது தினுசு கங்க (நெருப்ப) இவ எங்கேந்து வேங்கினாளோ.

குறள் 1105

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்

பூ சூட்டியிருக்க இவ தோளத் தழுவுதது, நாம ஆசப்படுத பொருள் நெனச்ச பொழுதெனைக்கும் வந்து சந்தோசத்த குடுக்குதது கணக்கா சந்தோசத்தத் தருது.

குறள் 1106

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்

இவளத் தழுவுத நேரமெல்லாம் என் உசிரு புத்துணச்சி பெறுததால இவ தோள அமுதத்தால(அமிழ்தம்) செஞ்சிருப்பாங்கனு நெனைக்கேன்.

குறள் 1107

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

அழகா மா நிறமா இருக்க இவளத் தழுவும்போது கெடைக்க சுகம் சொந்த வீட்ல ஒக்காந்து சுயமா சம்பாரிச்ச பொருள பங்குபோட்டு குடுத்து சாப்பிடுத நேரம் கெடைக்க சந்தோசத்துக்கு சமானம்.

குறள் 1108

வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

காத்துகூட ஊடேயில பூந்துகிட முடியாத அளவு இறுகக் கட்டிப்பிடிக்கது காதலிக்கவங்களுக்கு சந்தோசத்தக் கொடுக்கும்.

குறள் 1109

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்

சிறுசா கோவப்படுததும், உணந்து சமாதானமாகுததும் அதுக்குப் பொறவு கூடி சந்தோசமா இருக்கதும்தான் கலியாணம் முடிச்சு வாழுதவங்க பெறுத பயன்கள்.

குறள் 1110

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

புத்தகங்களப் படிக்கையில ஒவ்வொருக்கையும் இப்பம்வரைக்கும் தெரியாதத புதுசா கத்துக்கிடுதமாரி இருக்கது கணக்கா நகநட்டு பூட்டியிருக்க இவளச் சேருத நேரமெல்லாம் புது சந்தோசம் தோணுது.

Leave a Reply

Your email address will not be published.