வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-10

0

தி. இரா. மீனா  

உக்கடிசுவ கப்பிதேவய்யா

“கூடல சங்கம தேவரல்லி பசவண்ண சாட்சியாகி” இவரது முத்திரையாகும். பசவேசரின் மகாமனைக்குக் காவல்காரனாகப் பணி செய்தவர். காயகத்தின் மேன்மை, பசவனிடம் பக்தி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

1.“ஞானத்தை வரவேற்று மாயையைத் திருப்பியனுப்புகிறேன்
அறிவை வரவேற்று அறியாமையை விரட்டுகிறேன்
அருவத்தை வரவேற்று உருவத்தைத் திருப்பியனுப்புகிறேன்.
உலகியலை வரவேற்றுஉலகியலற்றதைத் திருப்பியனுப்புகிறேன்
கூடலசங்கம தேவரில் பசவரை அறிந்தோருடன் சேர்ந்து
அறியாதவரை அகற்றுகிறேன்”

2.“எண்ணங்களில் மருட்சியுடையவர் வரவேண்டியதில்லை.
அறிவற்றவர்கள் விரைவாகச் சென்று விடுங்கள்.
மூன்றுவகை மலத்துடன் போரிடுபவர்கள் விலகிவிடுங்கள்.
தன்னை அறிந்தவர்களே வாருங்கள்,
பரப்பிரும்ம வடிவம் கொண்டவர்களே வாருங்கள்
மனவுறுதி கொண்டவரே வாருங்கள்
நற்செயல்களைச் செய்பவர்களே வாருங்கள்
கூடலசங்கமதேவனின் பசவன் எனக்களித்த காயகம் இதுவே”

உப்பரகுடிய சோமிதேவய்யா

இவரின் முத்திரை “காருடேஸ்வரலிங்கா’என்பதாகும். ஆத்மா-உடல் தொடர்பு, அறிவு—செயல் சமன்பாடு, பிரசாத உயர்வு ஆகியவை குறித்து இவர் வசனங்கள் அமைகின்றன.

1. “கடவுளான பின்னர் வழிபாடு  பெறுவதற்கென வருவதெதற்கு?
முழுமை நிர்வாணத்தைச் சாதித்து விட்டாரெனில்.
ஆடிப் பாடிப் போற்றி திரிவோருடன் கலப்பெதற்கு?
பிறர் வீட்டுவாசலில் நின்று நில் வா போவெனச்சொல்வதெதற்கு?
உயர் ஆத்மாவிற்கு இங்கு அங்கு எனும் வேறுபாடில்லை
எங்கிருப்பினும் எது செய்யினும் பேரானந்தமே
காருடேஸ்வரலிங்கத்தை அறிந்த சரணருக்கு மாயையில்லை.”

2.”பாம்பிடம் நஞ்சிருக்குமெனில் அதன் முழு அங்கத்திலும்
பரவியிருக்குமா? நஞ்சிருக்க வேண்டியது ஓரிடத்தில்.
பூமியில் புதையலிருக்குமெனில் அது எங்கும் புதைந்திருக்குமா?
எல்லாச் சமயங்களிலும்  கடவுள் உண்டென்று சொன்னால்
நாத்திகரிடமும் நிறைந்திருப்பானோ?
பரமபக்தர்களிடம் மட்டும் நிறைந்திருப்பான்.
புதையலைக் கண்டு தோண்டியெடுப்பதை அறியவேண்டும்.
நச்சுப் பாம்பின் விடமிருக்குமிடம் அறிந்து பிடிக்கவேண்டும்.
கடவுள் இருக்குமிடமறிந்து தொழவேண்டும்.
ஆசைகளுக்கு ஆட்படுகின்ற கூட்டத்திற்கு மும்மலங்களுண்டு.
காருடேஸ்வரலிங்கமறிந்தவன் இரண்டழித்து பேரானந்தமடைவான்”

உரிலிங்கதேவா

நாயகன்—நாயகி பாவனையில் கடவுளைப் போற்றியவன். ”உரிலிங்க தேவா” என்பது இவரது முத்திரையாகும். இலிங்காயத்தைப் பின்பற்ற விரும்புபவர்களுக்கு இவர் “இஷ்டலிங்க தீட்சை தருவார். திருடன் ஒருவனை பக்தனாக மாற்றியவர் என்று இவரைப் பற்றிய கதையொன்றுண்டு. இஷ்டலிங்க தீட்சை  வழிபாடு செய்வதற்காக சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருகிறா. அவற்றைத் திருடிப் போக பெட்டண்ணா என்ற திருடன் வருகிறார். இஷ்டலிங்க தீட்சை வழிபாட்டைக் கண்ட திருடன் அதில் தன்னை இழந்து திருட வந்த தன் வேலையை மறந்து விடுகிறான். மாறாக உரிலிங்க தேவாவிடம் தனக்கு இஷ்டலிங்கம் தரும்படி கெஞ்சுகிறான். ஆனால் உரிலிங்கா அவனுக்குச் சிறிய கல்  ஒன்றைக் கொடுத்து அதை வழிபடுமாறு சொல்கிறார். பெட்டண்ணா  அவ்வாறே செய்ய அந்தக் கல் இஷ்டலிங்கமாக மாறியது. இவர் வசனங்கள் எளிய நடையும், மென்மையான பாவனைகளும் கொண்டவை.

1.“அகத்தில் நிறைந்து புறத்தில் காட்சி தருவாய்
கடைக்கண்ணில் வடிவெடுத்து மனதில் நிற்பாய்
எனக்குள் தோன்றும் சோதி நீ உரிலிங்க தேவனே”

2.“யாரையும் போலில்லை என் காதலன்
உலகெலாம் அவன் மனைவியர்; பிறர் வியக்கும் கணவன்
அவரவர் தன்மையறிந்து இணைவான்
அவரவர் மனமறிந்து மகிழ்விப்பான்
யாரையும் வஞ்சியான், என்னைப் பிரியாதவன்
நீ விரும்பினால் உயர்மந்திரம் ஓது  தோழி, உன்னை
விட்டகலான், உன் ஆணை, உரிலிங்கதேவன் தன் மீதாணை.”

3.“என் நெஞ்சில் அவன் புகழ் உள்ளது
சகோதரர்களே என்னிடம் வந்ததேன்?
உங்களை அணைக்க இடமில்லை
நீங்கள் அணைக்க வரின் என் காதலன் குறுக்கிடுவான்
உரிலிங்க தேவன் அணைத்து, சக்தியற்றுப்போய்
சக்கையாகவுள்ள என்னிடம் வந்ததேன்?”

4.“சுவையான முத்தம்,அமுத உணவெனக்கு
அணைப்பே ஆபரணம், தொடுதலே ஆடை
பார்வையே சம்போகம், உடனிருப்பதே உயர் உறவெனக்கு
உரிதேவனோடு இணைவதே பராபர சொற்கூட்டத்தின் சுகம் “

5. “காமனே!, இருவர் மீதும் ஓரம்பு விடுவாய்
நீ சாதாரண அம்பாளியில்லை
கணை தொடுத்தால் இருவரும் ஒன்றாவர்
அம்பு தொடுக்கும் வகை அதிசயமானது.
வில்லாளனே, நாங்கள் இருவரும் ஒன்றிணைய
என்மீதும் உரிலிங்கதேவர் மீதும் ஓரம்பு விடுவாய்”

6.“உடலுக்கு உடலாகி மனத்திற்குள் மனமாகி இணைந்தான்
இணைந்தவனின் ஊடலும் கூடலும் யாதெனச் சொல்வேன்?
அவன் கண்கள் என்னுள் கலந்ததை எப்படி விளக்குவேன்?
நான் தானென விவரிக்க இயலாமல்
இணைந்தான் பாராய் உரிலிங்க தேவன்.”

7. “பொதுவானவர் போல வருவதில்லை
பொதுவானவர் போல இருப்பதில்லை
பொதுவானவர் போலப் போவதில்லை
புண்ணியனாக வருவார்
அறிவாளியாக இருப்பார்
முக்தியடைந்தவராய்ப் போவார் பார்ப்பீர்! உரிலிங்க
தேவனே உன்னடியார்கள்  உவமைக்கப்பாற்பட்டவர்கள்”

8.“பாடுவேன் என் காதலனை,வேண்டுவேன் அவனை
கூடுவேன் என் காதலனை, நாளும்
அவனே நண்பனெனக்கு
அவனே என்னுயிர் கேளாய் தோழி
உரிலிங்க தேவனே என்னோடிருப்பான் நாளும்”

உளியுமேஸ்வர சிக்கண்ணா

ராய்ச்சூர் மாவட்டம் தேவரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர். உளியு மேஸ்வரா அல்லது மல்லிகார்ச்சுனன் இவரது முத்திரையாகும். “குடும்பப் பற்றை விடுதல், சரணரைப் போற்றுதல், சேவை மனப்பான்மை,  பரந்த மனப்பான்மை ஆகியவை பற்றி இவரது வசனங்கள் பேசுகின்றன.

“ஆற்று நீரெடுத்து வந்து
பறித்த இலையைத் தின்று
இலிங்கத்தை இருப்பிடமாக்கிக் கொள்ள வேண்டும்
அறிவெனும் ஆடையணிந்து
இலிங்கத்தை இருப்பிடமாக்கிக் கொள்ள வேண்டும்.
அறிவனைத்தையும் மூடி மறைத்து
பிறருக்கு ஆசையைக் காட்டி
குத்திகுத்தியெனைச் சுட்டெரிப்பாரோ ?
உளியுமேஸ்வரனே”

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *