-மேகலா இராமமூர்த்தி

தமிழ்ச் சிறுகதைகளின் போக்கை, அவற்றின் நடையை, கருத்துச் சொல்லும் உத்தியை மாற்றிய புரட்சி எழுத்தாளராக விளங்கிய பெருமைக்குரியவர் சொ. விருத்தாசலம் எனும் இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன். 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாளன்று கடலூருக்கு அருகிலுள்ள திருப்பாதிரிப்புலியூரில் வட்டாட்சியர் சொக்கலிங்கம் பிள்ளை – பர்வதத்தம்மாள் இணையரின் தலைமகனாய்ப் பிறந்த அவருக்கு தமிழ்நாட்டு வழக்கப்படி அவரது தந்தைவழிப் பாட்டனாரின் பெயரான விருத்தாசலம் என்பது சூட்டப்பட்டது. புதுமைப்பித்தன் எட்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதே அவருடைய அருமைத் தாயார் காலமானார்.

தந்தையார் சொக்கலிங்கம் பிள்ளை பணிமாற்றல் காரணமாகப் பல ஊர்களுக்குக் குடிபெயர்ந்ததால், புதுமைப்பித்தனின் தொடக்கக் கல்வியும் பல ஊர்களுக்கு மாறி மாறி ஓர் ஒழுங்கின்றித் தொடர்ந்தது. அவருக்கும் பள்ளிக் கல்வியில் இளமை முதலே அவ்வளவாக விருப்பமிருக்கவில்லை. ”செஞ்சி மலைக்கோட்டையில் சுற்றி வருவதில்தான் எனக்குப் பிரியம்; பள்ளிக்கூடம் எனக்குக் கசந்தது” என்று புதுமைப்பித்தனே தம் ஆரம்பக் கல்வி குறித்து நண்பர்களிடம் குறிப்பிட்டிருக்கின்றார்.

தந்தையார் திருநெல்வேலிக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்ததும் புதுமைப்பித்தனின் பள்ளிப்படிப்பும் 1918ஆம் ஆண்டுக்குப் பின் ஒரே இடத்தில் நிலைத்தது.

பள்ளிப் பாடநூல்களைத்தாம் புதுமைப்பித்தன் வெறுத்தாரே தவிர இதர நூல்கள்பால் அவருக்கு வெறுப்பேதும் இருக்கவில்லை. பிறகு ஒருவாறு பள்ளிக்கல்வியில் தேறிக் கல்லூரிப் படிப்புக்குத் திருநெல்வேலியிலிருந்த இந்துக் கல்லூரிக்குச் சென்றார் அவர். அப்போதும் கல்விநூல்களில் ஈடுபாடு ஏற்படவில்லை அவருக்கு; நாவல்கள் படிப்பதிலேயே, குறிப்பாகத் துப்பறியும் நாவல்கள் படிப்பதில், மிகுந்த ஆர்வம் கொண்டு தினந்தவறாது நாவல்கள் படித்துவந்தார். தினமும் இரவு 1 மணி 2 மணிவரை புதுமைப்பித்தன் நாவல்கள் படித்துக்கொண்டிருக்க அவருடைய தந்தையார் சொக்கலிங்கம் பிள்ளையோ மகன் கல்லூரிப் பாடங்களைத்தாம் விடிய விடியக் கண்விழித்துப் படிக்கிறான் என்று நினைத்து மகிழ்ந்திருக்கின்றார்.

கல்லூரியில் படித்துவந்த காலத்திலேயே இலக்கியப் படைப்பில் புதுமைப்பித்தனுக்கு அதிக நாட்டமிருந்தது. அதனால் இலக்கிய நண்பர்களும் பலர் இருந்தார்கள். நண்பர்களோடு அரட்டை, நாவல் வாசிப்பு என்று காலம் கழித்து வந்ததால் புதுமைப்பித்தனின் கல்லூரிப் படிப்பும் கால தாமதமாகவே நிறைவுற்றது.1931ஆம் ஆண்டு அவர் பி.ஏ. பட்டத்தோடு தம் கல்லூரிப் படிப்புக்கு விடைகொடுத்தார்.

புதுமைப்பித்தனின் தந்தையார் எப்படியாவது தம் மகனையும் தம்மைப் போலவே ஓர் அரசாங்க வேலையில் சேர்த்துவிடவேண்டும் என்று எண்ணிச் செய்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை; காரணம் புதுமைப்பித்தன் பி.ஏ. தாண்டுவதற்கு முன்பே அவருடைய வயது 25ஐத் தாண்டியிருந்தது.

அரசாங்க வேலை கிடைக்காவிட்டால் போகிறது; எப்படியாவது மகனை ஒரு வழக்கறிஞராக்கிவிட வேண்டும் என்று விரும்பிய சொக்கலிங்கம் பிள்ளை, மகனைச் சட்டப்படிப்புப் படிக்கவைக்கிற சம்பந்தமாகத் தேடியலைந்து, அதற்குச் சம்மதித்த திருவனந்தபுரம் மராமத்துத் துறை மேற்பார்வையாளரான சுப்பிரமணியம் பிள்ளை என்பவரின் மகளான கமலாம்பாளை 1931 ஜூலையில் புதுமைப்பித்தனுக்கு மணமுடித்து வைத்தார்.

ஆனால் திருமணத்துக்குப் பின்பு தந்தையின் திட்டப்பட்டி சட்டப்படிப்பில் சேரவில்லை புதுமைப்பித்தன். கல்லூரிப் படிப்பே அவருக்கு வேப்பங்காயாய்க் கசந்தநிலையில் மீண்டும் பீனல்கோடை (Penal Code) கட்டிக்கொண்டு அழ அவருக்கு விரும்பவில்லை. எனவே வழக்கம்போலவே இலக்கிய அரட்டையில் நண்பர்களோடு ஈடுபட்டுப் பொழுதைப் போக்கி வந்தார்.

இதைக்கண்ட புதுமைப்பித்தனின் தந்தையார் அவரைக் கடுமையாகக் கடிந்துகொள்ளத் தொடங்கினார். அவரோடு சேர்ந்து புதுமைப்பித்தனின் மாற்றாந்தாயும் புதுமைப்பித்தனை வசைபாடவே தந்தை வீடு சுடுகாடு போலானது புதுமைப்பித்தனுக்கு!

ஒருநாள் மனைவி கமலாம்பாளோடு வீட்டைவிட்டு வெளியேறினார் அவர். சித்தப்பா வீட்டில் சிலநாள், மாமனார் வீட்டில் சிலநாள், வேறுசில உறவினர்கள் வீட்டில் சிலநாள் என்று மனைவியோடு தங்கலானார். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் வேலைவெட்டியில்லாத ஒருவன் உறவினர் வீடுகளில் மனைவியோடு தங்கியிருக்க முடியும்? எனவே மனைவியை மட்டும் அவருடைய பிறந்தகமான திருவனந்தபுரத்துக்கு அனுப்பிவிட்டுத் தாம் மட்டும் அங்குமிங்குமாகக் காலம் கழிக்கலானார். அவரைப் பற்றியிருந்த இலக்கிய தாகம் அப்போதும் அவரை விடவில்லை; மாறாக மேலும் உரம்பெற்று வளர்ந்தது!

அப்போது காந்தி பத்திரிகையில் ‘கண்டதும் காதல் – பொய்யா? மெய்யா?’ எனும் தலைப்பில் சுவையான விவாதம் ஒன்று ஆரம்பமாயிற்று; புதுமைப்பித்தன் இந்த விவாதத்தின் மூலமாக இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். ’குலோப்ஜான் காதல்’ என்ற தலைப்பில் கண்டதும் காதல் விவகாரத்தைக் கிண்டல் செய்து ஓர் அருமையான கட்டுரையை எழுதி அனுப்பினார். அக்கட்டுரை 1933இல் காந்தியில் வெளிவந்தது. காந்தி பத்திரிகையில் எழுதியதுபோலவே மணிக்கொடியிலும் கதைகள் எழுத ஆரம்பித்தார் புதுமைப்பித்தன்.

அவருடைய சர்ச்சைக்குரிய கதைகளான பொன்னகரம், கவந்தனும் காமனும், ஆண் சிங்கம் போன்றவையெல்லாம் மணிக்கொடியில் வெளிவந்த கதைகள்தாம். அவரது படைப்புக்களின் அசாதாரணத் தன்மை, தீயை நிகர்த்த வேகம், புதிய கோணம் முதலியவற்றைச் சிலர் பாராட்டினார்கள். வேறு சிலரோ அவரது படைப்புகளைக் கண்டு மிரண்டுபோனார்கள்!

தமக்குப் பத்திரிகைப் பணி ஒன்றைத் தேடி சென்னை வந்து சேர்ந்தார் புதுமைப்பித்தன். மணிக்கொடி, ஊழியன், தினமணி, தினசரி போன்ற பல பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தார்.

புதுமைப்பித்தன் என்ற பெயரில் மட்டுமல்லாது, சொ. விருத்தாசலம், சொ.வி, வேளூர் வெ. கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராசாரி எனும் பற்பல பெயர்களில் அவர் தம்முடைய இலக்கியத் திருவிளையாடல்களைப் புரிந்திருக்கின்றார். கதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனம், பாட்டு, அரசியல் கட்டுரைகள், ஓரிரு ஓரங்க நாடகங்கள் முதலியவற்றைப் படைத்திருக்கின்றார்.  நிறைவுபெறாத நெடுங்கதைகள் சிலவும் எழுதியிருக்கின்றார்.

பல புனைபெயர்களை அவர் சூடிக்கொண்டிருந்தாலும் அவருக்கு நின்றுநிலைத்துவிட்ட பெயர் புதுமைப்பித்தன் என்பதே. அதுபோல் எத்தனையோ விதமான இலக்கியப் படைப்புகளை அவர் தந்திருந்தாலும் அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தவை காலத்தை வென்று நிற்கும் அவருடைய சிறுகதைகளே. ஏனெனில் அவருடைய அறிவாற்றல், கற்பனை வளம், ஆழமும் அகலமும் கொண்ட சிந்தனை வீச்சு முதலியவற்றுக்கு உரைகல்லாக அவருடைய சிறுகதைகளே திகழ்கின்றன.

வேளூர் வெ. கந்தசாமிக் கவிராயராக 1944இல் அவதாரம் எடுத்த புதுமைப்பித்தன், படைப்பாளிகளை வாழும் காலத்தில் கௌரவிக்காமல், செத்த பிறகு கொண்டாடுவதைக் கிண்டல்செய்து ஒரு பாடல் எழுதினார். அதன் ஒரு பகுதி இது:

”ஐயா நான் செத்ததற்குப் பின்னால் நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்பு கட்டிக் கல்லில் வடித்து வையாதீர்!
வானத்து அமரன் வந்தான் காண்
வந்ததுபோல் போனான் காண் என்று புலம்பாதீர்!
அத்தனையும் வேண்டாம் அடியேனை விட்டுவிடும்!”

பத்திரிகைத் துறையில் எவ்வளவோ உழைத்தும் எண்ணற்ற கதைகள் படைத்தும் புதுமைப்பித்தனின் வாழ்வு பெரிதாக வளம்பெறவில்லை. எனவே ஒரு கட்டத்தில் பத்திரிகைத் தொழிலுக்கு முழுக்குப்போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

பிரபல எழுத்தாளராக மக்களிடம் பரிச்சயமாகியிருந்த அவருக்கு ஜெமினி ஸ்டுடியோ தயாரித்த ’அவ்வையார்’ படத்தில் வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படத்திற்கு புதுமைப்பித்தன் எழுதிய வசனங்களில் ஒன்று இது:

அதியமான் அவ்வைக்குச் சாகா வரமளிக்கும் நெல்லிக்கனியை அளிக்க முற்படுகின்றான். அப்போது அவ்வை அவனை பார்த்துக் கேட்கிறாள்: “மன்னா! உலகத்துக்குள் வர ஒருவழிதான் உண்டு; போவதற்கோ பல வழிகள் இருக்கின்றன. அத்தனை வழிகளையும் இந்த நெல்லிக்கனி அடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறாயா?”

பொருளாழமும் இலக்கியச் சுவையும் மிக்க இத்தகு வசனங்களை ’அவ்வையார்’ படத்துக்குப் புதுமைப்பித்தன் எழுதியிருந்தும், அவருடைய வசனங்களை ஜெமினி ஸ்டுடியோ யாது காரணத்தாலோ பயன்படுத்திக்கொள்ளவில்லை. அடுத்து, ’காமவல்லி’ எனும் படத்திற்கு அவர் வசனம் எழுதினார்.

படத்துறைக்கு வந்த ஓராண்டுக்குள் தம்முடைய தாயார் பர்வதத்தின் பெயரால் ’பர்வதகுமாரி புரொடக்‌ஷன்ஸ்’ என்ற திரைப்படக் கம்பெனி ஒன்றைத் தொடங்கிச் சொந்தப் படமெடுக்கும் முயற்சியில் இறங்கினார் புதுமைப்பித்தன். இத்தனைக்கும் அவருடைய கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பொருளாதார பலமும் அப்போது இல்லை. அவருடைய இந்த விபரீதமுயற்சியில் முழுத்தோல்வியே அடைந்தார்.

அப்போது எம்.கே. தியாகராஜ பாகவதர் தயாரித்து நடித்த ’ராஜமுக்தி’ படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றார் புதுமைப்பித்தன்.  ’புனே’வில் தங்கி அப்படத்திற்கு வசனம் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் காசநோயால் பீடிக்கப்பட்டுப் பெரிதும் அவதியுற்றார். 1948ஆம் ஆண்டு அவருடைய காசநோய் மிகவும் தீவிரமாகிவிட்ட நிலையில் மே மாதம் தம் மனைவியின் ஊரான திருவனந்தபுரத்துக்கு வந்துசேர்ந்தார். 1948ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதியன்று நள்ளிரவு இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார் அந்த அற்புத எழுத்தாளர்.

இன்று தமிழ்நாட்டாரால் ’சிறுகதை உலகின் மன்னன்’ என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் உயிரோடிருந்த காலத்தில் இலக்கிய உலகில் அவருக்கு நண்பர்களைவிடப் பகைவர்களே அதிகம். ஆனால் இந்தப் பகைமைக்குப் புதுமைப்பித்தனின் கதைகள் முக்கியக் காரணமன்று! அவர்சொல்லும் கருத்துக்கள், எழுதும் மதிப்புரைகள், விமர்சனங்கள் முதலியவற்றின் வெளிப்படைத் தன்மையே காரணம் எனலாம்.

கருத்துக் கூறுவதிலும் விமர்சனம் செய்வதிலும் புதுமைப்பித்தனிடம் இருந்த தீவிரத்தன்மை எப்படி அவருக்குப் பகைவர்களை உருவாக்கியதோ அவ்வாறே அவரது விமர்சனத்தை ஆவலோடு வரவேற்கும் நண்பர்களையும் உருவாக்கித் தந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இலக்கிய ரசிகரும் சிறந்த எழுத்தாளருமான கு. அழகிரிசாமி புதுமைப்பித்தனைப் பற்றிக் குறிப்பிடும்போது,

“இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் பாரதி; தமிழ் வசனத்துக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் புதுமைப்பித்தன். ஆனால் பாரதிக்குமுன் தமிழில் மிகச் சிறந்த கவிச் செல்வங்கள் இருந்தன; புதுமைப்பித்தனுக்குமுன் மிகச் சிறந்த வசனச் செல்வங்கள் இருந்தன என்று சொல்ல முடியாது. புதுமைப்பித்தன் தமிழ்நாட்டு வசன இலக்கியத்தின் சொத்து. அவர் வசன இலக்கியத்தின் மன்னர்” என்கிறார்.

ஷேக்ஸ்பியரையும் (Shakespeare) தாந்தேயையும் (Dante) பற்றி ஓர் ஆங்கில விமர்சகர் “ஷேக்ஸ்பியர் வாழ்க்கையின் அகலத்தை அளந்தான்; தாந்தே ஆழத்தை அளந்தான்” என்று குறிப்பிடுகின்றார். புதுமைப்பித்தனுக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும் இம்மாதிரியே நாம் சொல்லலாம். புதுமைப்பித்தன் வாழ்க்கையின் ஆழத்தை அளந்த ஆசிரியர்.

புதுமைப்பித்தன் கதைகளை விமர்சிப்போர், ”அவர் தம்முடைய கதைகளில், சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளாரே தவிர சிக்கல்களுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயலவே இல்லை” என்பார்கள்.

”இலக்கியம் என்பது எளிய மக்களின் வாழ்வைச் சொல்வது; ஏழைகளின் இன்னல்களை, துயரங்களை எழுத்தில் பதிவு செய்வதைப் பெருமையாகக் கருதுகின்றேன்; நடப்பதைச் சொல்வதுதான் என் வேலை; அதற்கு முடிவு தருவது என்னுடைய வேலை அன்று!” என்று இந்த விமர்சனத்துக்கான விடையையும் அப்போதே சொல்லிவிட்டார் புதுமைப்பித்தன்.

பதினைந்து ஆண்டுகளே படைப்புலகில் ஈடுபட்டிருந்தபோதிலும் புதிய இலக்கியவாதிகளை ஒளிகுன்றச் செய்யும் பல்கதிர்ச்செல்வனாய்ப் புதுமைப்பித்தன் ஒளிர்ந்தார். தமிழ் வசன நடைக்குப் புதுவேகமும் புதுப்பொலிவும் தந்தார்.

துன்பக்கேணி, நாசகார கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சிற்பியின் நரகம் முதலியவை இலக்கியத் தரம் வாய்ந்த, இறவாத புகழுடைய அவருடைய படைப்புக்கள். அகல்யை, சாபவிமோசனம் போன்றவை பழைய புராணக் கதைகளின் முடிவுகளை மாற்றிப் புதிய கோணத்தில் அவர் படைத்தளித்தவை.

புதுமைப்பித்தன், வலுவற்றுக் கிடந்த தமிழ்வசனத்துக்கு வாலிபம் தந்த சஞ்சீவி; உலக இலக்கியவாதிகளின் சங்கத்தில் தாமாகவே இடம் பிடித்துக்கொண்ட மேதை; சிறுகதை இலக்கியத்தின் ஆசிய ஜோதி, எதார்த்தவாதிகளின் முன்னோடி. குறுகிய காலமே வாழ்ந்து மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களைவிட்டு மறையாமல் சிறுகதை உலகின் முடிசூடா மன்னனாக இன்றும் திகழ்ந்துவரும் மணிக்கொடி எழுத்தாளர். 2002இல் அவருடைய படைப்புக்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. திருநெல்வேலியில் ஒரு தெருவுக்குப் புதுமைப்பித்தன் வீதி என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

பாரதி பரம்பரை என்று கவிதை உலகில் பாரதிக்குப்பின் ஒரு பரம்பரை உருவானதுபோலவே, புதுமைப்பித்தன் பரம்பரை என்று கூறுகின்ற வகையில் பல புதிய சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றுவதற்குக் காரணமாக விளங்கியவர் அவர். அவருடை கதைகளில் மிளிரும் வைரம் பாய்ந்த சொல்லாட்சி, வளமான வசன நடை, எதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் செயற்கைப் பூச்சுகளற்ற காட்சியமைப்புகள், கதைக்களத்திற்கேற்ப நடையை மாற்றும் அவருடைய அசாதாரணத் திறன், சமுதாயச் சிறுமைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக அவர் எழுப்பும் கலகக்குரல், கதையோடு இழைந்தோடும் அங்கதம் போன்றவை சிறந்த கதாசிரியர்களாகப் பரிமளிக்க விரும்புவோர் கற்றுக் கைக்கொள்ள வேண்டிய உத்திகளாகும்.

****

கட்டுரைக்கு உதவியவை:

https://ta.wikipedia.org/wiki/புதுமைப்பித்தன்

https://archive.org/details/PuthumaipithanVaralaru/mode/2up

https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2011/may/15/தமிழ்ச்-சிறுகதையின்-தந்தை-புதுமைப்பித்தன்-352536.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *