சேக்கிழார் பாடல் நயம் – 67 (வருமுறை)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க
தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார்
திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார்
இப்பாடலில் தில்லைவாழ் அந்தணர்களின் சிறப்பியல்பு கூறப்பெறுகின்றது.
விதிமுறைப்படி அமைக்கின்ற மூவகை அக்கினிகளாகிய ஆகவனீயம், தக்கிணாக்கினி, காருகாபத்தியம் என்னும் யாக நெருப்புகளை வழுவாமல் காப்பர். அறத்தையே குறிக்கோளாகக் கொண்ட தத்துவ நெறிகளில் வளரும் அரிய நால்வகை வேதங்களையும், ஆறுவகை வேதாங்கங்களையும் இடைவிடாமல் பயிலவர். அவற்றில் முழுத்திறமையும் பெற்றவராய், இனிய நடம் புரியும் தில்லை நடராஜருக்கு அடிமைத்திறம் புரிவர். அத்தகைய அருட்செல்வம் பெற்றவர்களாகத் தில்லைவாழ் அந்தணர் விளங்கினர்.
வேதங்களாகிய உண்மை நூல்களில் விதித்த முறைகளினின்றும் வழுவாமல் மூவகை எரிகளை அவர்கள் ஓம்புவர் என்பதை ‘வருமுறை எரி மூன்று ஓம்பி‘ என்ற தொடர் கூறுகிறது. அம்மூவகை எரிகளுள் ஆகவனீயம் என்பது, யாக சாலையில் தேவர்களுக்காக வேதிகையின் வடகிழக்கில் நாற்கோணக் குண்டத்தில் வளர்க்கப் பெறுவதாகும். தக்கிணாக்கினி என்பது வேதிகையின் தெற்கில் அரைச்சந்திர வடிவில் குண்டம் அமைத்து வளர்க்கப் பெறுவதாகும்.
இதுதென்புலத்தாருக்குஉரியதாகும். ஆகவனீயத்தை அடுத்து வட்டவடிவில் குண்டம் அமைத்து வளர்க்கப் பெற்று, இல்வாழ்வோரால் இல்வாழ்வோரால் ஓம்பப் பெறுவது காருகாபத்தியம். ‘வைதிகாக்கினி, சைவாக்கினி, வைந்தவாக்கினி’என்ற மூவகை எரிகளியும் எரிமூன்று என்பர். இறக்கும் வரை காத்து, இறந்தபின்னும் அக்கிரியைக்கும் உதவுமாறு வளர்ப்பதை ‘ஓம்பி’ என்ற சொல் குறிக்கும்.
சிவமாகிய பரதத்துவத்தை அடையும் நெறியே தத்துவ நெறியாகும். இவ்வாறு அக்கினியை ஓம்புதல் மன்னுயிர்கள் அருளை மேற்கொள்வ தற்காக என்பர். இதனை ஞான சம்பந்தர்,
“கற்றாங்கு எரி ஓம்பிக் கலியை வாராமே செற்றார்” என்பார்.
பதி, பசு, பாசம் ஆகிய மூன்றனுள் பதியைப்போலவே பசுவும் பாசமும் அநாதியானவை என்பது திருமந்திரம். அதனைக் கருதியே ‘’மன்னுயிர்‘’ என்றார். வேதத்தின் அங்கங்கள் ஆறு. அவை சிக்ஷை , கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தோபிசிதி, ஜோதிஷம் ஆகியவை. இவற்றைக் கற்றுக் கொண்ட பின்னரே, வேதப்பொருள்களை ஆராய வேண்டும் என்பது விதி! கசடறக் கற்றல் என்ற நெறிப்படிப் பயின்றவற்றைக் கடைப்பிடிப்பதில் மிகுந்த உறுதி கொள்ளுதலையே, “பயின்று வல்லார்” என்ற தொடர் குறிக்கிறது. இங்கே தருமம் என்பது பூர்வ மீமாம்சையில் கண்ட யாகம் முதலான கிரியைகள்; தத்துவ நெறி என்பது உத்திர மீமாம்சையில் கண்ட பிரேம உபாசனைகள். அடிமைத்திறத்தால் அடையும் திருவருளை ‘ஆளாகும் திரு’ என்கிறார். ஆள் ஆம் திருவினால் சிறந்த சீரைப் பெற்றவரே தில்லைவாழ் அந்தணர் ஆவார்!
ஆகவே தில்லைவாழ் அந்தணர்கள் மூவகை அக்கினிகளையும் வளர்த்துக் காத்தலால் இறைவன் அடியார்களுள் முதன்மை பெற்றனர்; நால்வேதங்க ளையும், ஆறு அங்கங்களையும் அறத்தையே குறிக்கோளாகக் கொண்டு பயின்றமையால் அடியார்களுள் முதன்மை பெற்றனர்; இறைவனுக்கு அடிமைத்திறம் பூண்டு ஆளாகும் அருட்செல்வத்தைப் பெற்றுத் தொண்டு புரிதலால் திருத்தொண்டர்களுள் முதலிடம் பெற்றனர். இறைவனை நோக்கியே புரிந்த பூசைகளால் இறைவனையே ஆளாகக் கொள்ளும் திறமும் பெற்றனர்! அதனாலேயே இறைவன் ‘’தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்!’’ என்று தம்மையே கூறிக் கொண்டாரோ? என்று கருதும் வகையில் இறைவனும் பின்னர் பல முறை அடியார்க்குத் தொண்டு புரிந்த எளிமைத் திறத்தை இத்தொடர் உணர்த்துகிறது!
அந்தணர் ஓதும் ஓங்காரத்தினுள் இறைவனே ஒடுங்குவார் என்பதைத் திருமூலர்,
நூலும் சிகையும் உணரார் நின்மூடர்கள்
நூல் அது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர்
ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே !
என்கிறார். அப்பர் பெருமானோ,
“அரியானை அந்தணர்தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை“ என்று பாடுகின்றார்! தில்லைவாழ் அந்தணர் திறம் அத்தகையது! இதனைச் சேக்கிழார் பெருந்தகையே,
இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ
தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட
அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால்?
என்று பாடுவதை அறிந்து நாமும் மகிழ்கிறோம்!