பென்சில்லையா
பாஸ்கர் சேஷாத்ரி
“இங்க பென்சில்லையா வீடு எது?”
“வீடா? அந்த முக்குல ஒரு குடிசை. அதான் வூடு, நீ யாரு?”
“சுகு”
“என்னவோ?”
அங்கு தள்ளி நின்று குரல் கொடுத்தேன்.
“யாரு?”
வெளியே வந்தவர் என்னை பார்த்து வணக்கம் சொன்னார்.
“என்னப்பா? இரண்டு பேரை அனுப்பினேன்.”
பதில் இல்லை.
“ரொம்ப சோர்வா இருக்கு சார்”
“கொஞ்சம் வந்துட்டு போ. வீட்ல உக்கார முடியல. பக்கத்துல ஒரே சண்டை. குழந்தை வேற இருக்கு.”
“புரியுது சார். கொஞ்ச நாளா மனசு சரியில்லை. இருபது வருஷமா உள்ளே இறங்கி மலத்தை வெள்ள கொட்டறேன். அப்பெல்லாம் தெரியல. இப்ப முடியல”
“உண்மை தாம்பா, ஒத்துக்கிறேன், உன் வேலையை யாரும் செய்ய முடியாது. என் நிலையை கொஞ்சம் புரிஞ்சுக்கோ ப்ளீஸ்.”
“ஈசியா சொல்ட்ட. காலைல சட்டையை அவுத்துட்டு உள்ளே போனா நரகம். என் துணிய வண்ணான் கூட வாங்க மாட்றாங்க. இருட்டுல இறங்கி உள்ளே போய் வேலை செஞ்சா சோறு இறங்க மாட்டேங்குது.”
“கோச்சிக்காதே பா. கொஞ்சம் வந்துட்டு போப்பா.”
“இவ்வளவு வருஷம் தெர்ல சார். நீ சட்டை போட்டுகினு வேலைக்கு போவ. நான் அவுத்துட்டு போனும்.”
“என்ன சொல்ற?”
“பொண்டாட்டி சொன்ன கேக்கும்.”
“ஆனாலும் சண்டை வரும்.”
“தொழிலை மாத்திக்க முடியல? படிக்கல.”
“ஆந்திராலேந்து வந்து முப்பது வருஷம் ஆச்சு”
“எல்லாம் சரிதாம்பா. நீ என்ன பணம் கேட்டாலும் கொடுக்கிறேன். அரை மணி வந்துட்டு போ. ஆட்டோ காசு தாரேன்.”
“பாத்தியா. நீயே உன் வண்டில உக்கார உடமாட்ற.”
“அது இல்லப்ப.”
“பரவால்லை சார். எல்லாம் பழகி போச்சு.”
“எப்பவும் மலத்தண்ணீர்ல மூழ்கி உடம்பெல்லாம் அரிப்பு. டாக்டர் என்ன வேலை செய்யறேன் கேட்டா பதில் சொல்ல முடியல.”
“கஷ்டம் தான். நான் என்ன செய்யணும், சொல்லு.”
“இது பரவால்லே சார். காசு கொடுப்பே. நான் செய்வேன்.”
“ஆனா வீட்டுக்கு வந்து பெத்த குழந்தையை கொஞ்ச முடியல. ஓடிப்போவுது.”
“சொல்லு சார். உடம்புல நாத்த மருந்து போட்டா குழந்தை கொஞ்சுவா இல்ல?”
“அவன் கையை பிடித்து கொண்டேன். என்னை மன்னிச்சுடுப்பா.”
“விடு கையை. நீ ஏன் சார். கிளம்பு சார். தோ வரேன்”
“இல்லப்பா. எனக்கு குத்துது பா.”
“வுடு சார். கொஞ்சம் ஊத்திண்டு வரேன். பணம் கூட வேணாம் சார். அந்த மருந்து கொடு சார்.”
இவன் தேடும் தெய்வங்களுக்கு சமமானவன். ஒரு நாளில் காலில் விழ வேண்டும்.