படக்கவிதைப் போட்டி – 245
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (16.02.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
இன்பம் நிலைக்கட்டும்…
புதிதாய் வாழ்வில் இணைந்தவர்கள்
புவியைச் சுற்றும் கணமிதுவே,
எதிலும் குறைகள் வைக்காமல்
எல்லாம் துய்த்திடும் வேளையிது,
இதயமும் ஒன்றாய்க் கலந்ததாலே
இறக்கை கட்டிப் பறக்கின்றார்,
முதுமை வரைக்கும் நிலைக்கட்டும்
முறையாய் இல்லற வாழ்விதுவே…!
செண்பக ஜெகதீசன்…
திருமணம்
என் வாழ்வியலை
அழகாக உயிராக்கும்
என் மறைமதியே
உன்னை பிறைமதியாக
பிரதிபலிக்கும் வைபவத்தை
நோக்கி பிராத்திக்கிறேன்
மணமாலை நாம்
மாற்றிடவே நீ
மறுமுறை மலர்ந்திட வேண்டும்
மங்கள இசை மனமுருக
அட்சதையில் மாங்கல்யம் பவனிவர,
புரோகிதர் பொன்மொழியில்
இறையோன்களை அழைத்திட,
கெட்டிமேளம் ஓங்கிட,
சொந்தமும் நட்பும்
வாழ்த்துக்களை வார்த்தைகளற்று
அரிசி மழையாக பொழிந்திட,
வேண்டிய கனவுகளை
கைகளில் ஏந்தி,
உன் பொன்முறுவலை எனதாக்கி,
நான் இடும் முதல் முடிச்சினில்
உன் தனிமையை தகர்த்திட வேண்டும்.
இரண்டாம் முடிச்சினில்
நம்பிக்கையை விதைத்திட வேண்டும்.
மூன்றாம் முடிச்சினில்
அழியும் மெய்யிலும்
அழிவில்லா காதலை
வரமாக்கிட வேண்டும்.
உன் நெற்றியில் கரைபடியவே
என் கைவிரல்கள் ஏங்கிட வேண்டும்.
உன் பாதம்
ஏந்திய தருணம்
என் கைகள் மோட்சம்
அடைந்திடுமே-அதை
மெட்டி ஒலியால் நான்
உணர்த்திட வேண்டும்.
நமது ஆடைகளின்
முடிவினில் இடும் முடிச்சினில்
வாழ்க்கை தொடங்கிட வேண்டும்.
சுற்றத்தார் கண்களும்
நாம் சுற்றிவரும் அக்னியில்
கரைந்திட வேண்டும்.
நல்வரவின் நோக்கம்
பலித்திடவே நாம்
சுற்றத்தை வணங்கிட வேண்டும்.
ராவணா சுந்தர்.
பொன்னூஞ்சல்
உறவென்றக் கயிறு கட்டி
உணர்வென்ற அச்சில் சுழல
மனமென்னும் காற்று ஆட
மணமக்கள் ஆடும் ஆட்டம்!
சொந்தங்கள் வாழ்த்துரைக்க
சீதையுடன் இராமனென
சந்ததிகள் தொடர்ந்துவாழ – இன்பச்
சன்னிதியில் ஆடும் ஆட்டம்!
சோர்வுற்ற நேரமெல்லம் சொந்தமெனத் தாகம்தீர்த்து
பருவம் கடந்த பின்னும் பரிவுடன் நீர்த்திருந்து
மேடுபள்ளம் தாண்டி ஜீவநதியாய் ஓட
இல்லறத்தின் இன்பம் காணும் துவக்க ஆட்டம்!
காதல் திருமணம்
—————————
கல் தோன்றி மண் தோன்றிய
காலம் முன்னே தோன்றிய காதல்
கண் முன்னே நீ தோன்ற
என் நெஞ்சில் தோன்றியதே
இதய துடிப்பில் தோன்றி
ஊமை விழிகள் பேசும் மௌனமொழி
உணர்வாய் மாறி
நெஞ்சில் தோன்றிடும் காதலாய்
தரையில் கால் படாமலே
விண்ணில் பறந்திடும்
உன்னை நினைக்கையிலே
ரெக்கை கட்டி மனசு
விழியில் தோன்றி இதயம் நுழைந்து
உணர்வாய் தோன்றி உள்ளம் கவர்ந்து
சொல்ல துடித்த மனதை அறிந்து
என்னை ஏற்க
நெஞ்சம் துணிந்து கரங்கள் பற்றிட
இருமனம் இணைந்த திருமணம்
தேக்கி வைத்த அணை நீராய்
சேர்த்து வைத்த ஆசைகள்
மடை திறந்த வெள்ளமாய்
தடை ஏதும் இன்றியே
பொங்கி வழியும் காதல்
என் அருகில் நீ இருக்க
உலகை மறந்து
உயர பறந்திடும் மனம்
இடைவெளி இல்லாமல்
ஒருவரை ஒருவர்
புரிந்துகொள்ள அறிந்துகொள்ள
இடையூறு ஏதும் இன்றியே
காதல் பாடம் கற்று பயில
திருமணமெனும் பள்ளிக்கூட
அறிவிப்பு பலகை ஊருக்கு அறிவித்ததே
புது மண தம்பதியர் இவர்கள் என்று