படக்கவிதைப் போட்டி 243-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. பிரேம்நாத் திருமலைச்சாமியின் நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 243க்குப் பரிந்துரைத்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
சிறுசெடிப் பெருமரமாகிக் கனியும் களைப்பு நீக்கும் நிழலும் தருவதுபோல் மனிதனும் தன் சிறிய உள்ளத்தை அன்பாலும் நற்பண்பாலும் உயர்த்தினால் குமுகாயத்துக்குப் பயனுடையானாய் – நயனுடையானாய்த் திகழ்வான்.
படத்தில் முகங்காட்டும் சிறுசெடி கண்டு எழும் தம் அகத்துணர்வுகளைக் கவிதையாய் வடித்துத்தரக் காத்திருக்கும் பாவலர்களை அன்புபாராட்டி அழைக்கிறேன்.
*****
”மரத்தை அழித்து மாடிகட்டும் மனிதா! வாழ்ந்து மறையப்போகும் சொற்ப காலத்துக்குள் இயற்கையை அழிக்கும் அற்பகுணத்தை விட்டொழிப்பாய்!” என்று இன்னுரை இயம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
மரம் நடுவாய்…
மரங்களை வெட்டி யழித்துவிட்டு
மாடிகள் கட்டும் மனிதாகேள்,
இருப்பது சிலநாள் இவ்வுலகில்
இதற்குள் இயற்கையை அழிப்பதேனோ,
மரங்களால் தானே மழைவந்தே
மன்னுயி ரெல்லாம் பிழைத்திருக்கும்,
கருத்தினி லிதனைக் கொண்டேதான்
காசினி வாழவை மரம்நட்டே…!
*****
”சிறுதுளி பெருவெள்ளமாய் ஆவதுபோல், வீரியம் கொண்ட விதை விருட்சமாய் விண்ணைத் தொடுவதுபோல் நாமும் தடைகள் உடைத்துச் சென்றிடுவோம்; வாழ்வில் வென்றிடுவோம்” என்று ஊக்கமூட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
விளையும் பயிர்
சிறுகடுகு என்றாலும் அதன் காரம் குறைவதில்லை
சிறுமனிதன் என்று எண்ணித் துவளுவதில் ஞாயமில்லை
தீச்சுடரைக் கானகத்தில் இட்ட கதை அறிவோம்
தத்தரிகிட நாதம் நமது நெஞ்சினிலே வைப்போம்!
சின்னத் துளிகள் என்று எண்ணி
துடைத்தழிக்க நினைப்போர் இருந்தாலும்
மடைகள் உடைக்கும் வெள்ளமாய் மாறித்
தடைகள் தாண்டிச் சென்றிடுவோம்!
காரியம் யாவும் செய்திடும் வகையில்
வீரியம் கொண்ட விதையாய் ஆகி
விண்ணைத் தொடும் விருட்சமாய்ப் படர
மண்ணைப் பிளந்து முளைத்திடுவோம்!
*****
சின்னஞ்சிறு செடியை வைத்துச் சீரிய சிந்தனைகளைக் கூரிய வார்த்தைகளில் கவிதைகளாய் வடித்துத் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!
அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதை…
விதையாய் விழுந்தாலும்
விண்ணை நோக்கி
மண்ணைப் பிளந்து
முயன்றால் தான்
முளைத்திட முடியும்!
முயலாமையால்
பயனேதும் இல்லை!
வானளாவ உயர்ந்திட
முயற்சி ஒன்று போதுமே!
விதையாய் நெஞ்சில்
விழுந்த யாவும்
திருவினையாய் மாறிடுமே!
விதையாய் விழுந்தாலும்
பழுதாகிப் போகாமல்
மண்ணைப் பிளந்து
முளைத்தெழ
மண்ணில் ஈரம் வேண்டும்!
எழும் எண்ணமும்
கண்ட கனவும்
மெய்ப்படுமே
நெஞ்சில் வீரமும்
ஈரமும் சேர்ந்திருந்தாலே!
விதையாய் விழுந்து
முளைத்துச் செடியாய்
மரமாய் வளர்ந்திட
நீர் வேண்டும்
அன்பெனும் விதையை
நெஞ்சில் விதைத்து
நீர்விட்டு
மனிதநேயமேனும்
மரத்தை வளர்த்திடுவோம்!
நிழல் தரும் மேகமாய்
இதயங்கள் கொண்டாடும் வானமாய்
எதிரியையும் அரவணைத்து
எல்லைகள் கடந்து வாழ்ந்திருப்போம்!
என்றென்றும் புன்னகையுடன்
ஒன்றே குலமென்று
இவ்வுலகுக்கு உணர்த்தி நிற்போம்!
வளமுடன் வாழ்ந்திடவே
நெஞ்சில் விதையாய்
அன்பை மட்டும் விதைத்திடவே!
”விதையாய் விழுந்தாலும் அது பழுதாகாது பக்குவமாய் முளைத்திட ஈரம் வேண்டும்; அதுபோல் மாந்தர்களும் நெஞ்சில் அன்பை விதைத்து வீரமும் ஈரமும் தமதிரு குணங்களாய்க் கொண்டு முயன்றால் வானம் வசப்படும்; கனவு மெய்ப்படும்!” என்று மானுட வெற்றியின் இரகசியத்தைக் கூறிடும் இக்கவிதையின் படைப்பாளி திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்து மகிழ்கின்றேன்.