படக்கவிதைப் போட்டி – 244
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
மனிதனால்…
குஞ்சுக் குருவிக் குணவில்லை
கூட்டிச் செல்லவும் வழியில்லை,
அஞ்சிட வேண்டும் மனிதனுக்கு
அவனால் வந்ததே இந்நிலைமை,
கொஞ்சமும் இரக்கம் ஏதுமின்றிக்
காட்டு மரங்களை வெட்டிவிட்டான்,
தஞ்ச மடைய இடமில்லை
தாயே இயற்கை காப்பாயே…!
செண்பக ஜெகதீசன்…
தாபத்திலே தாய்ப்பறவை..
நாங்கள் செய்த காடு
அழித்துக் கொண்டிருக்கிறாய் ஆணவத்தோடு
நாங்கள் கட்டிய கூடு
அதை பார்த்து தான் வந்தது நீயிருக்கும் வீடு ..
அத்தி அரசு ஆலமென விதைத்தோம் எச்சத்தோடு
எங்கள் அழிவை பார்த்துக்கொண்டிருக்கிறாய் அலட்சியத்தோடு
பார்த்து பார்த்து நீ பேணி காப்பதெல்லாம் இரக்கத்தோடு
பிராய்லர் கோழிகளை தானே கூண்டோடு ..
வாய்திறந்து பார்க்கிறது என் குஞ்சு பசியோடு
தீவனத்திற்கு திரிந்தால் எல்லாமே கட்டிட வீடு
கொத்திக் கொடுக்க செங்கல் தான் இருக்கிறது சிமெண்டோடு
தாபத்தில் தரையில் நிற்கிறோம் வெறும் வயிற்றோடு ..
எங்களுக்கு நீ செய்வது நன்றி கேட்ட கேடு..
– புவிதா அய்யாதுரை
திட்டமிடு
நிலையாமை நித்தியமென்று
நித்தமும்தான் சோகங்கொண்டு
சித்தமது கலங்கி நாளும்
சோம்பற்கொண்டு சுருங்கிடாமல்
சிறுகிளையில் இடங்கண்டு
சுயமுயற்சி தான்கொண்டு
தனக்கென்று கூடு கட்டும்
திறமதனைக் கற்றிடுவோம்…
சிட்டதனின் வாழ்க்கையிங்கு சிலநாட்கள் என்றாலும்
கிட்டிய வாழ்நாளைச் சோம்பலின்றி
கட்டமைத்துக் கடமையாற்றும் பண்பு கற்று
திட்டமிட்டுச் சீரமைத்து வாழ்ந்திடுவோம்…
சிட்டுக்குருவி சொல்லும் செய்தி
—————————————————-
அழிந்து போகும் இனங்களின்
பட்டியலில் இன்று நான்
இயற்கை கூட எமக்கெதிராய் திரும்பிட
யாமிருக்கும் இடம் யாவும்
தீயுக்கு இரையாய் மாறியதே
அடைக்கலம் தந்த வானம் எங்கும்
ஆனந்தமாய் பறந்து திரிய
சிலர் வாழ்க்கை இங்கு
வலியவருக்கு இரையாய் மாறியது
இயற்கை அழகை ரசிக்க நினைத்து
சிறகை உடைத்து சிறை பிடித்து
சுயநலமாய் எமது சுதந்திரத்தை பறித்து
கூண்டில் அடைத்து ரசிக்கும் ஒரு கூட்டம்
விருப்பம் அதை அறியாமல்
தன் விருப்பத்தை திணிப்பது போல்
எம் (பறவை) மனமதை அறியாமல்
வளர்ப்பதாய் சொல்லி மகிழும்
வளர்க்க வில்லை என்றாலும்
எதையும் அழிக்காமல்
இயல்பாய் இருக்க விட்டாலே
அழிவை தானே தள்ளிப்போடுமே
பிறப்பென்று துவங்கிய யாவும்
இறப்பென்று ஒரு நாள் அழியும்
உணர்ந்து நடந்திடு
இன்று நான்…. நாளை நீ……..