படக்கவிதைப் போட்டி 254-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி
திரு. பிரேம்நாத் திருமலைச்சாமியின் கலைவண்ணத்தில் உருவான இந்த நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 254க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. நிழற்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்!
”புன்னகையால் அன்னையை மட்டுமல்லாது
அகிலத்தையே மயக்கிடும் ஆற்றல்பெற்றது கனிமழலை!
என்றென்றும் நிலைக்கட்டும் இந்த அழகின் சிரிப்பு!” என்று வாழ்த்திவிட்டு, இப்படத்திற்குக் கவிஞர்கள் வடித்துத் தந்திருக்கும் கற்கண்டுக் கவிதைகளைச் சுவைத்துவரப் புறப்படுவோம்!
*****
”அன்னையைப்போல் அல்லாமல் நீ படிப்பில் சிறக்க வேண்டும்; உயர்ந்த நிலையும் கண்டிட வேண்டும்” என்று மழலையிடம் மனந்திறக்கும் அன்னையைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.
உயர் நிலை…
அன்னை யென்றே ஆக்கியேதான்
அடுத்த நிலைக்கே உயர்த்திவிட்டாய்,
என்னைப் போலப் படிப்பறிவில்
எளிய நிலையிலே விட்டிடாமல்
உன்னை நானும் படிக்கவைத்தே
உயர்ந்த நிலையில் வைத்திடுவேன்,
தன்னை யறிந்திடத் தங்கமேயுனைத்
தகுந்த முறையில் வளர்ப்பேனே…!
*****
அச்சமற்ற பெண்ணாய், மங்காத பொன்னாய், தாழ்வகற்றும் தண்ணிழலாய், மடமையிருள் போக்கும் மாவிளக்காய்த் தன் பிள்ளைக்கனி திகழவேண்டும் என விரும்பும் அன்புத் தாயை நம் கண்முன் நிறுத்துகின்றார் திருமிகு. ச. கண்மணி கணேசன்.
பிள்ளைக்கனி
செல்லம்மா – நீ சாதித்துப் பேர்வாங்கப் பிறந்தவள்; உன்சாதனை
நாலுபேருக்கு வழிகாட்டி ஒளியூட்டுவதாய் இருக்கட்டும்!
முத்தம்மா – நீ முன்னேறி மின்னப் பிறந்தவள்; உன்பாதை
தடைக்கற்களைப் படிக்கட்டுகளாக்கும் வித்தையைச் சொல்லட்டும்!
சின்னம்மா – நீ பதினாறும் பெறப் பிறந்தவள்; உன்இல்லறம்
ஆலாய்த்தழைத்து அறுகாய்வேரோடி நல்லறம் ஆகட்டும்!
அன்னம்மா – நீ நிமிர்ந்து நிற்கப் பிறந்தவள்; உன்ஆளுமை
நாண்அச்சமின்றி மானிடம் மணக்க மிளிரட்டும்!
தங்கம்மா – நீ என்றுமென் பேர்சொல்லப் பிறந்தவள்; உன்வாழ்வு
மங்காத பொன்னாய்ப் புடம்போட்டு ஒளிரட்டும்!
தாயம்மா – நீ தாழ்வகற்றத் தண்ணிழலாய் உதித்தவள்; உன்பிறவி
சேயாகித் தரணியெங்கும் தமிழ்ப்புகழ் கூட்டட்டும்!
நல்லம்மா – நீ எதையும் எதிர்கொள்ளப் பிறந்தவள்; உன்மேனி
வெல்லும் அழகொடு திடம்பெற்றுப் பொலியட்டும்!
பொன்னம்மா – நீ இலக்குநோக்கிப் பாயப் பிறந்தவள்; உன்மனம்
மன்னும்விளக்காய் ஆயிரமாயிரம் அகலொளி ஊட்டட்டும்!
கண்ணம்மா – நீ கற்றுக் கரைசேரப் பிறந்தவள்; உன்கல்வி
மண்ணின் இருள்போக்கும் மாவிளக்காய்த் திகழட்டும்!
அமிர்தம்மா – நீ சமைத்துப் பசியாற்றவும் பிறந்தவள்; இப்போது
என்னிடம் வாநாம் ‘பப்பு கடஞ்சி’ விளையாடுவோம்!
*****
”பாசப் பந்தே! பரிமளமே! பூடணம் வேண்டா ஆடகப் பொன்னே! சாதிக்கப் பிறந்தவள் நீ! உலக சரித்திரம் படைத்துவிடு!” என்று மங்கல மொழிகளால் மழலையை வாழ்த்துகின்றார் திருமிகு. சுதா மாதவன்.
பாசப்பந்து நீதானே
பரிமளமாய் இருப்பவளே
முளைப்பற்கள் வருமுன்னே
முகம் சாய்த்துச் சிரிப்பவளே
தத்தி நடக்கும் கால்களோடு
தாவிப் பிடிக்கும் கைகளும்
தாயும் பாசப்பரிவோடு உனை
தாங்கித் தான் பிடிக்கிறாளோ?
தங்கம் வெள்ளி உனக்கெதற்கு?
சர்வ பூஷணம் நீதானே!
கவலைகள் நூறிருப்பினும் உனைக்
கொஞ்சி மகிழும் தாயவள்!
அவள் கனவு என்னவென்று
கேட்டு நீயும் வளர்ந்திடு
சாதிக்கப் பிறந்தவள் நீ
சரித்திரம் படைத்திடு
உலக மகா சரித்திரம் படைத்திடு!
*****
”அன்னை மடி மெத்தையிலே ஆடிடும் தத்தை எனக்கு அன்னையின் அன்பே உயிர்காப்பு!” என்று தாயின் உயர்வைப் போற்றிடும் சேயைக் காட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
அன்பின் அரிச்சுவடி
அன்னைமடி மெத்தையிலே
ஆடுமொரு தத்தை நான்!
இத்தரையில் பிறந்தவரில்
ஈடுஇணை அற்றவள் நான்!
உத்தமராய் இவருமெனை
ஊட்டி தினம் வளர்த்திடவே
எத்தனையோ பிறவிக்கடன்
ஏட்டினிலும் எழுதவொண்ணா
ஐயிரு திங்கள் வைத்தீன்று
ஒப்புரவுடனே வாழ்வதற்கு
ஓயாமல் காத்து நிற்கும்
ஒளடதமாம் இவர் அன்பெனும்
ஆயுதமேயென் உயிர் காப்பு!
*****
தாய் சேய் உறவை அற்புதமாய்த் தம் பாக்களில் நெய்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
உன்னுதட்டில் தெறிப்பதெல்லாம்
என்னுயிரின் சிரிப்பு!
உன்னுருவம் தானடி
என் விழியின் சிலிர்ப்பு!
குயிலும் குருவியும்
சிரிக்கிறது மேலே
உந்தன் மொழியோ
புரிந்தது போலே!
ஆழி அருவியின்
ஆலாபம் சங்கீதம்
அத்தனையும் அடங்கியதே
அழகியுன் ரீங்காரம்!
மகளே நீயே
மாயக் கண்ணாடி!
எந்தன் மறுவுருவைக்
காட்டிவிட்டாய் முன்னாடி!
அம்மாவென நானலற – நீ
ஒருமுறை பிறந்தாயடி!
அம்மாவென நீயழைக்க – நான்
ஒவ்வொருமுறையும் பிறக்கிறேனடி!
”மகளே! நீயே என் உயிரின் சிரிப்பு, விழியின் சிலிர்ப்பு! மாயக் கண்ணாடியான உன்னில் என்னைக் காண்கிறேன்! நான் அம்மாவென்று அலற நீ பிறந்தாய்! நீ அம்மாவென்று அழைக்கும் ஒவ்வொரு முறையும் நான் பிறக்கிறேன்!” என்று மகளுக்கும் அன்னைக்குமிடையே பின்னிப் பிணைந்திருக்கும் உன்னத உறவை உணர்வுபூர்வமாய் விவரித்திருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.