கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவில்லம்

2
அண்ணாகண்ணன்
 
கணித மேதை சீனிவாச ராமானுஜனின் கும்பகோணம் வீட்டை, சாஸ்திரா பல்கலைக்கழகம், நினைவில்லமாகப் பரமாரித்து வருகிறது. கும்பகோணம் சென்று வந்த பலரும் கூட, இந்த வீட்டை நாங்கள் பார்க்கவில்லையே என்று வருந்தினார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் வீடு பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்க்க ஆவலிருந்தும் முடியாமல் போய்விட்டது என்று நண்பர் முத்துக்குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். ரேழியும் முற்றமும் கொல்லையும் கொண்ட இந்த வீட்டுக்குள் சென்று வருவது, அந்தக் காலத்திற்கே பயணிக்கும் உணர்வைத் தருகிறது.
 
29.12.2019 அன்று இந்த இல்லத்தைப் பார்த்து, அங்கிருந்த குறிப்பேட்டில், உடனுக்குடன் நான் எழுதிய வெண்பா இது.
 
கனவில் உதித்த கணிதப் புதிர்கள்
மனத்தில் விழித்த மனிதன் – தனித்துவ
ராமா னுஜனின் ரகசியப் புள்ளிகள்
சாமான்யன் வாழும் சபை.
 
இராமானுஜனுக்குக் கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரித் தாயார் விடை தந்துள்ளார். கடினமான கணக்குகளுக்குக் கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின் வழிமுறைகளை எழுதுவது கணித மேதை ராமானுஜத்தின் வழக்கம். அவர் பயன்படுத்திய கட்டிலையும் கட்டிலிலிருந்து மேலே பார்க்கும்போது காட்சி தரும் உத்திரத்தையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.
 
 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவில்லம்

  1. இன்று கணித மேதை இராமானுஜனின் நினைவு நாள். 1920ஆம் ஆண்டு, இதே நாளில் அவர் தனது 32 வயதில் மறைந்தது, நமது தவக் குறைவு.

  2. https://jayabarathan.wordpress.com/2009/04/19/ramanujan/

    கணித மேதை ராமானுஜன்
    Posted on April 19, 2009
    cover-image-ramanujan.jpg

    கணித மேதை ராமானுஜன்
    (1887-1920)

    சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada

    https://www.youtube.com/watch?v=Haym-VKuvgohttps://www.youtube.com/watch?v=YykgE_z4-38

    https://www.youtube.com/watch?v=Vn1UjvytVJI

    https://www.youtube.com/watch?v=YykgE_z4-38

    சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.

    1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்!

    fig-3-ramanujans-home

    ராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்! அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம்! “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.

    பன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney’s Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.

    பதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது. அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *