வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-20

0
1

தி. இரா. மீனா

தோண்ட்ட சித்தலிங்க சிவயோகி 

கன்னட உலகில் இலிங்காயத்துக்களின் வரலாற்றில் மிகச் சிறந்தவராகப் போற்றப்படுபவர். அல்லமா பிரபுவின் வழியிலான சூன்யபீடம் பசவேசர் உருவாக்கிய ஸட்ஸ்தல சித்தாந்தத்தை விளக்கமாகச் சொல்லி அனுபவ மண்டபத்தின் வழிமுறைகளைச் சீரமைத்து உயர்த்தியவர். இவரது சாதனைகள் கல்வெட்டுக்களில் வெளிப்படுகின்றன. மடங்கள், கோயில்கள் ஆகியவற்றிலும் இவர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அரதனஹள்ளி இவரது ஊராகும். தோட்டத்தில் எவ்விதப் பணியும் செய்யாமலிருந்ததால் “தோண்ட்ட சித்தலிங்கா“ என்றழைக்கப்பட்டார். பசவேசரின் வசனங்களை தேடிக்கண்டு பிடித்து தொகுத்து வசன இலக்கியப் பரம்பரையை முன்னடத்திச் சென்ற பெருமை இவருக்குண்டு. ”மகாலிங்க குரு சித்தேஸ்வர பிரபுவே” இவரது முத்திரையாகும்.

1.“ஆட்டுவிக்காமல் ஆடுவதுண்டோ? எரியாமல் சுடுமோ ?
சமைத்ததை மீண்டும் சமைக்கலாமோ?
சுட்ட சட்டி மீண்டும் மண்ணோடு இணையுமா?
நெருப்பு கற்பூரத்தை சார்ந்த பின்பு கரியுண்டோ?
நதியும் நதியும் சேர்வது போல அடியான் இலிங்கமோடிணைந்து
இலிங்கம் அடியானோடிணைய வேண்டும் ஐயனே!
அஞ்ஞானிகளைக் காட்டாதிருப்பாய்
மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

2.“ஈசலை உண்ட நரி தன் செயலுக்கு ஊளையிடுவது போல
பேச்சின் கர்வத்திற்கு ஆகமம் அறிவோம் எனச் சொல்வர்
ஆகமம் அதிமர்மமானது, அது அறிவீரோ மாந்தரே?
ஆன்ம அனுபவத்தின் ஆகமமூர்த்தி அறிவான்
உன் சரணர் அறிவர்
மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

3.“பெருவிரலில் நாகம் தீண்டினால்
உடல் முழுவதும் நஞ்சாகும்
சரணன் உடலில் இலிங்கம் தீண்ட
அவனுடல் முழுவதும் இலிங்கமாகிவிடும்
அழிவிலாத சரணனுக்கு காமத்தின் உறவுண்டோ?
மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

4. “வலமில்லை இடமில்லை முன்னுமில்லை பின்னுமில்லைகாரணம்
அடியற்ற முடியற்ற உடலற்ற
பிடிக்க, விட, காண, பேச,சேர முடியாத இணையற்றவன் நீ
வடிவம் , நினைவற்று மகிமையானவனாதலால்
அருவமில்லா இலிங்கம் நீ
மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

5. “மாயையை வெற்றி கொள்ளாத வரையில்
உடல்  நிர்வாணமாகியென்ன?
உலகியலை விடாத வரையில்
மொட்டையடித்தென்ன? எத்தகைய முக்தியிது?
புறத்தோற்றத்தின் அற்பர்களைச் சரணர் விரும்புவதில்லை.
மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

 6. “அகப்பை சுவையறியுமா?
சமைத்த சட்டி சாப்பிட இயலுமா?
வெட்டவெளியைக் கட்டுப்படுத்த இயலுமா?
அன்பு இல்லாதவரின் இலிங்கம் நியமத்திற்குள் அடங்குமா?
மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

 7. “படிகக் குடத்தின் விளக்கு
உள்ளும் புறமும் ஒரேயளவில்  பிரகாசிப்பது போல
என்னுள்ளும் புறமுமிருக்கும் இறைவன்
ஆதியந்தம் காண வந்தான்
அப்பரத் தத்துவ அடியான் ஒருவனே பாரீர்
மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

 8. “பெண்ணை, மண்ணை, பொன்னை விட்டேனென
உலகின் கண்களைக் கட்டுபவர்களே கேளுங்கள்!
பேச்சை விட்டீரோ? மனதை விட்டீரோ? சொல்வீர்
இலிங்க நினைவு ஆளுமைக்குள் வந்தால் விட்டனரென்பேன்
பேச்சை விட்டுவிட்டு மனத்துள் கொண்டால்
பிறப்பு இறப்புக்களில் நிறுத்தி
காலணியைக் கடிக்கும் நாய்போல விடாது பாரய்யா!
பிடித்து சம்சாரிகளாகி, விட்டு துறவியாகி
இரண்டுமன்றி துன்பப் படுபவரை என்னென்பேன்?
மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

தட்சகண சிங்கிதேவய்யா

“நாச்சய்யா பிரியமல்லிநாதய்யா“ இவரது முத்திரையாகும். குருபக்தியைக் காட்டுவதாக வசனங்கள் அமைகின்றன.

1. “மனைவி மக்கள் பெற்றோர்க்கெனப் பெற்றால்
உன்மீ்தாணை ஐயனே,
மக்களுக்குச் சேவையாற்றினால் உன்மீதாணை
உன்னையன்றிப் பிறரை வணங்கினால் உன்மீதாணை
என் மனைவியன்றிப் பிறன்மனை விரும்பின் உன்மீதாணை
உடல் உள்ளம் செல்வம் வஞ்சனையானால்
உன்மீதாணை நாச்சய்யாப் பிரிய மல்லிநாதனே“

2. “மனைவி மக்கள் பணியாளர் வஞ்சகர் பகைவரென்று
நினைப்பது என் பிழை ஐயனே
விழிப்பு கனவு உறக்கம் என பிழை எனதய்யனே
மற்றவரில் நீங்களிருக்க அதையறியாத பிழை எனதய்யனே
நாச்சய்யாப் பிரிய மல்லிநாதனே“

தசரய்யா 

இராமகொண்டே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தினமும் தோட்டத்திற்குச் சென்று பூக்களைக் கொய்து வந்து வழிபாடு  செய்வது இவரின் காயகம். ஒரு முறை பூக்கொய்த  போது “ஐயோ நொந்தேன் “என்றொரு ஒலி கேட்க அன்றிலிருந்து  பூக்களைக் கொய்வதை விட்டுவிட்டுக் கிழே கிடக்கும் பூக்களை  எடுத்து வந்து வழிபாடு செய்ததாக ஒரு செய்தியுண்டு. ”தசரேஸ்வரலிங்கா” என்பது இவரது முத்திரையாகும்.

“உலகின் கூறு உடல்
சூரியனின் கூறு சுக்கில சுரோணிதம்
சிவனின் கூறு பசி
காற்றின் கூறு ஜீவாத்மா
வானத்தின் கூறு நெற்றி நடு சூட்சுமம் என
இவை ஐந்துமுள்ள வரையில் வெற்றி தோல்வியுண்டு.
அங்கங்கே இவற்றைத் தடுத்து விடுவிப்பாய்
உனக்கு என்னிடம் அற்பத்தனம் வேண்டாம்
அது என் பிழையன்று,உன் பிழையே
தசரேஸ்வரலிங்கமே“

தசரய்யாவின் புண்ணிய ஸ்த்ரி வீரம்மா

இவர் தசரய்யாவின் மனைவி. சரணர் மனைவி புண்ணியஸ்திரீ என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நிலையைச் சில இடங்களில் காணமுடிகிறது.” குருசாந்தேஸ்வரன் “இவரது முத்திரையாகும்

“சேவல் நேரமறியும்
சரணன் விரத ஈனனை அறிவான்
அறிந்தும் சேர்ந்தால் நரகமே
குருசாந்தேஸ்வரனே “

                              [தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.