அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (26.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “படக்கவிதைப் போட்டி – 255

  1. இன்ப நாடகம்…

    அந்தி வானை
    அழகாக்குகிறது
    அடையும் சூரியன்..

    வந்தவேலை முடித்த
    பகலவனுக்கு
    வாழ்த்துச் சொல்லும்
    பணி நிறைவுப்
    பாராட்டு விழாவுக்கு
    வானமெங்கும்
    வண்ணத் தோரணங்கள்..

    வந்துவிட்டான் தலைவனென
    வானமகளின் வதனத்தில்
    வெட்கச் சிவப்பு..

    இது
    இன்றல்ல நேற்றல்ல,
    காலம் காலமாய்த் தொடரும்
    இயற்கையின்
    இன்ப நாடகம்-
    கண்டு களிப்போமே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. படக்கவிதை போட்டி எண் 255

    செந்தழல்
    புடத்திலிட்டத் தங்கம்
    அக்னிக் குண்டம்
    செங்கதிர்
    இவைகளின் வர்ணம்
    இவ்வழகிய புகைப்படத்தில்

    இதனூடே எட்டிப் பார்க்கிற சந்திரன்
    உலகின் இரவு நேர ஒளிக்குத் தயாராகி
    அதிகாலை வரை வானில் தவழ்ந்து
    இளம் மாலை வரை ஒய்வெடுத்து
    இரவுக்கு தயாராவான் தினமும்

    அழகிய நிலவே
    என் கைகளைக் கோர்த்துக் கொள்
    என்னுடனே வா என் இல்லம் செல்ல
    ஏகபோக உரிமை எனதாக்கிக் கொள்ள

    சுதா மாதவன்

    *************************

  3. கவிதை 2

    காலைநேரக் கதிரவனா
    மாலைநேர சந்திரனா
    தகதகக்கும் நிறம் இரண்டும்
    மினுமினுக்கும் ஒளி இரண்டும்
    கதகதக்கும் குளிர் இரண்டும்
    கொதிகொதிக்கும் தணல் இரண்டும்
    இடைவிடாது உலகை இயக்கும் இவர்களே
    மனித வாழ்வில் மாற்றங்களை தரும் கோள்களே
    ஆம் கதிரவன் சந்திரன்
    வாழ்வின் மந்திரம் தந்திரம்

    சுதா மாதவன்
    ***************

  4. கவிதை 3

    தங்க நிலா வெள்ளி நிலா
    வட்ட நிலா வடிவழகு நிலா
    மாய நிலா மவுசு நிலா
    ஒளிரும் நிலா எண்ணத் துளிரும் நிலா

    நிலா நிலா நீ இலா இலா
    நாள் இலா இலா வா அருகில் நிலா நிலா
    செவ்வான மேகங்களோடே
    கடலலையினூடே
    முகத்தைக் மட்டும் காட்டிடாமல்
    முழுவதுமாய் வா
    மாலை நேரம் மறைந்து
    இரவு வரக் காத்திருக்கு
    இருளை அகற்று ஒளியை ஏற்று

    சுதா மாதவன்

    ****************

  5. கதிரே உதவு.

    எல்லையிலாத இவ்வான விளிம்பில்
    இருந்தொளிர் வெண்சுடரே – நீ
    அல்லை (இரவு) முடிக்கப் பிறந்த கதிரோ
    அல்லது வெண்மதியோ
    மெல்ல மறைந்திடப் போகுதியோ இல்லை
    மீண்டெழப்போகுதியோ – என்ன
    சொல்வது என்று புரிகிலன் நானுமுன்
    தோற்றம் புரிந்திலனே.

    ஆதவனாயின் விழித்தெழு -இந்த
    அகிலம் தனை அழிக்க
    பூதமென வந்த பூஞ்சையிலும் சிறு
    பொல்லாக் கொரோனாவெனும்
    பாதி உயிரின் பரவல் தடுத்து இப்
    பாரைச் சுகப்படுத்தும்
    வேதியற் சூழலை ஆக்கிடு நீ இந்தத்
    தீதினைப் போக்கிடற்கே.

    தீச்சுடர் வீசி இவ் வானப்பரப்பினுள்
    சீறி எழுந்திடுவாய் – அலை
    பாய்ச்சி உலகை இயக்கிச் சுகம்பெறப்
    பாதையமைத் திடுவாய்
    மூச்சினில் காற்றில் முகவழியெங்கிலும்
    மூர்க்கமுடன் பரவி – பெரும்
    தீச்செயல் செய்யும் கிருமியைக் கொன்றுன்
    திறமையைக் காட்டிடுவாய்.

  6. மந்திரக் கோலம்

    அந்தி கருக்கும் வானத்திலே
    சிந்தை மயங்கும் வேளையிலே
    சந்திரனின் தன்னை வரவேற்க – இயற்கை செந்நிறக் கம்பளம் இட்டிருக்கும்

    விந்தைகள் ஆயிரம் செய்து தினம்
    இரவின் வாசலில் செந்நீர் தெளிக்கும்
    முந்தைய தினத்தைப் போல அன்றி – புதுச்
    சிந்தைகள் தோன்றிட வழிவகுக்கும்

    எந்திர வாழ்க்கை மறந்திடுவே
    மந்திர ஜாலங்கள் செய்து தினம்
    சுந்தர நிகழ்வைச் செய்திருக்கும்
    தந்திரன் யார் நீ சொல்லிடுவாய்…

  7. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்க
    உன் கடமை ஆற்றிட
    ஓயாமல் உதித்தெழுந்து
    கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
    தினந்தோறும் ஓடிட
    மெல்ல நகரும் மேகம்
    முகக்கவசமாய் மாறி
    கதிரவன் உன்னை காத்திட
    கதிர்வீசும் கரங்களை மடக்கி
    அந்தி சாய்ந்திடும் நேரம்
    நீல வானும் இங்கே
    நிறம் மாறும்
    நந்தவன தேராய் வரும்
    நிலவே உன்னழகு மட்டும் மிளிரவே
    இருள் சூழ்ந்து இரவாகும்
    நாளும் இதே நாடகம்
    பாரெல்லாம் அரங்கேறும்
    பகல் இரவாய்
    காலை முதல் மாலை வரை
    வேலை ஏதும் இன்றியே
    இரவு நேர பணியாய்
    நிலவு வந்து போகும்
    இயற்கை எனும் நிறுவனத்தில்

  8. இந்தப் போட்டிக்கான முடிவுகள் வெளியாகிவிட்டன. அடுத்த போட்டிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம். அதில் உங்கள் கவிதைகளைப் பதிவிடுங்கள். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பதிவிடுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *