பூலோக சொர்க்கம் மொரீசியஸ் – தெ.ஈசுவரன் உரை
அண்ணாகண்ணன்
இலங்கைத் தொழிலதிபர், அமரர் தெ.ஈசுவரன், இலங்கைக்கான மொரீசியஸ் நாட்டின் கௌரவத் தூதராக இருந்தவர். இயல்பிலேயே அமைதியும் நிதானமும் பொறுமையும் கொண்ட அவரது பேச்சும் தெளிந்த நீரோடை போல் இருக்கும். ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை ஏற்றுமதி நிறுவனம், மொரீசியஸ் தூதரகப் பணி, கம்பன் கழகத் தலைவர், பிள்ளையார் கோவில் அறங்காவலர், ஆஞ்சநேயர் கோவில் கட்டுமானப் பணி, இலங்கையின் மிக உயரமான புத்தர் சிலை எழுப்புதல், சாயிபாபா அறக்கட்டளை, பல்வேறு பொது நிகழ்ச்சிகள்… எனப் பற்பல பணிகளுக்கு இடையில், உட்கார்ந்து எழுதுவதற்கு அவருக்கு நேரமில்லாமல் இருந்தது.
2010 காலக்கட்டத்தில், அவருடைய அர்த்தமுள்ள அனுபவங்கள் நூலை அவர் சொல்லச் சொல்ல, நான் எழுதினேன். அதன் பதிப்பாசிரியராகவும் பணியாற்றினேன். இதற்காகக் கொழும்பு மாநகரில் இரு மாதங்கள், அவருடன் இணைந்திருந்தேன். சென்னைக்குத் திரும்பிய பிறகு, நேரில் சந்திக்க இயலாதபோது என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, அப்படியே பேசி, ஒலிக்கோப்பாக அனுப்பிவிடுங்கள். நான் தட்டச்சு செய்து அனுப்புகிறேன் என்று கூறினேன். அந்தக் காலத்தில் இன்றுபோல், ஒலியை எழுத்தாக்கும் மென்பொருள் கருவிகள், தமிழில் நடைமுறைக்கு வரவில்லை.
அப்படி ஒரு முறை 2011இல் மொரீசியஸ் நாட்டைப் பற்றிய இந்தக் கட்டுரையை அவருடைய குரலில் பதிந்து அனுப்பியிருந்தார். பேச்சையே மென்மையாக, ஒரு தியானம் போல அவர் நிகழ்த்தியுள்ளதை இந்த உரையில் நீங்கள் கேட்கலாம்.