படக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி
கடலும் வானும் கைகோத்து நிற்கும் கவின்மிகு காட்சிக்கு மேலும் பொலிவூட்டுகின்றது அவற்றை நோக்கிநிற்கும் நங்கையின் நளினத் தோற்றம்! பல்வண்ணக் கலவையாய் நம் கண்களுக்கு நல்விருந்தூட்டும் இவ்வரிய காட்சியைப் படமாக்கியிருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இதனைப் படக்கவிதைப் போட்டி 250க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் சென்று சேரட்டும்!
”கடல்நோக்கித் தவமிருக்கும் காரிகையோ?
காதலன் வரவிற்காய்க் காத்திருக்கும் கன்னிகையோ?
இயற்கையினைக் காதலிக்கும் இனியவளோ?”
என்று இந்தப் பெண்ணரசி பற்றி எண்ணங்கள் சூழ்கின்றன என்னுள்!
விடைசொல்ல வாருங்கள் என்று கவிஞர்களைக் கனிவோடு அழைக்கிறேன்!
*****
கடல்நோக்கி நிற்கும் காரணமென்ன? படகுகள் வருமென்ற எதிர்பார்ப்பா? கடலலை காணும் குதூகலிப்பா? என்று வினாக்களை அடுக்கி வனிதையிடம் விடை கேட்கின்றார் திருமிகு சுதா மாதவன்.
கடலினை நோக்கிக்
காண்பதென்ன காரிகையே!
நீலவானும் கடல் நீரும்
ஓர் வண்ணம் என்றோராய்வா?
படகுகள் ஒன்றும் காணோம்
மிதந்து வருமென எதிர்பார்ப்பா?
கப்பல்களும் ஆடி வரும்
காட்சி காணக் கண்விரிப்பா?
கரை மீது அடிக்கும் அலை
காணக் காணக் குதூகலிப்பா?
ஆதவனும் சந்திரனும்
எங்கேயெனப் பரிதவிப்பா?
அவர்களும் தம் கடமை செய்ய
சென்று விட்ட புன்சிரிப்பா?
மனதில் எழும் எண்ணங்களை
மடை திறந்து கொட்டிவிடு!
திறம்படவே பதிலைச் சொல்
திரும்பி நில் தேவதையே!!!
*****
”காலமெலாம் அறியாமைக் காரிருளுள் வைத்தாலும் ஞானஒளிக் கதிரவனாய் புதுவிடியல் காட்டிடுவாய்!” என்று நங்கைக்கு நல்லறிவு கொளுத்துகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
திடங்கொண்டு போராடு!
ஆர்ப்பரிக்கும் அலைபோலே
பேரிரைச்சல் போட்டாலும்
ஆழ்கடலின் அமைதியினை
அடிமனதில் தேக்கிவைப்பாய்!
கார்குழலி என்றுனையே
காதற்சிறை வைத்தாலும்
பார்புகழும் சாதனைகள்
பலநூறு படைத்திடுவாய்!
காலமெலாம் அறியாமைக்
காரிருளுள் வைத்தாலும்
ஞானஒளிக் கதிரவனாய்
புதுவிடியல் காட்டிடுவாய்!
மென்மையான மலரென்று
மங்கையுன்னைச் சொன்னாலும்
திண்மையான உள்ளத்திலே
திடங்கொண்டு போராடிடுவாய்!
*****
நல்ல சிந்தனைகளையும் நயமிகு கற்பனைகளையும் கவிதைகளில் ஊற்றி எழிலேற்றியிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…
காத்திருக்கிறாள்…
கண்கள் காட்டிய பாதையிலே
கருத்து மிணைந்த காதலிலே
அண்மையில் வந்த மணநாளும்
அப்புறம் தள்ளிப் போனதுவே,
எண்ணம் பெரிதாய்ப் பணிக்காக
எங்கோ சென்றவன் வரவில்லை,
கண்ணில் நீருடன் காத்திருக்கிறாள்
கடலலை தன்னைத் தூதனுப்பியே…!
”பணிதேடிச் சென்ற காதலன் கரம்பற்ற வாராததால் மணநாள் தள்ளிப் போக, கண்ணீரோடு அவனுக்குக் கடலலையைத் தூதுவிட்டுக் காத்திருக்கின்றாள் இந்த மாது!” என்று கவிதையில் ஒரு சோக நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.