படக்கவிதைப் போட்டி – 251

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
அமுதா ஹரிஹரன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (29.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
கண்ணாமூச்சி
__________
கைக்கெட்டாக் கனிகளின்
சுவைக்கு அலைந்து,
கருத்தைக் கடந்தவற்றையும்
கைப்பற்ற முயன்று,
மூடியிருந்த கண்களுடன்
மூளையும் சேர்ந்தே முடங்கி,
கீறப்பட்ட ரணங்களால் சுருண்டு,
அஞ்ஞானமெனும் இருளில்
அடைபட்டிருந்தேன்…
*
கட்டுகளை அவிழ்க்கும் அறிவற்று
தளைகளை தகர்க்கும் திறமிழந்து
தெருவெலாம் திரிந்தழிந்தேன்..
*
இகவாழ்வே கண்கட்டு வித்தையென
சுகவாழ்வின் நிலையேக நினைந்து
இமைமூடிய இடுக்குகளில் வழிந்த
உள்ளொளிக் கீற்றின் நுனிபற்றி
ஞானமெனும் வானத்தையும்
எட்டிப் பிடிக்கும் தருணம்
கண்ணாமூச்சி முற்றுபெறும்.
–
சக்திப்ரபா
#படக்கவிதை போட்டி–251
கண்டுபிடி….கண்டு பிடி…
–––––––––––––––––––
இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும்
இடையில் ஓரிழைதூரமே!
நம்பிக்கையின் விளிம்பு
தட்டுத்தடுமாறும் கைகளில்
வசப்படும் எனும் வானளாவிய புரிதலில்…
வாழ்வெனும் மாய கண்கட்டு விளையாட்டில்
கண்களில் தெரிவதும் தவறாய் போகலாம்….
இதோவென கைக்கெட்டும்
இடைவெளி முடிவில் கானல்நீர் ஏமாற்றலாம்…
காரிருள் தனிலும் கலக்கம் வேண்டாம்
மறுபடியும் வெளிச்சக்கீற்று வந்தேதான் தீரும்…
முயற்சியென்றும் முடிவில்லா வெற்றியே!
கைதவறிப் போனதெல்லாம்
கரம்சேரும் தருணம் நீயும்
இருளுக்குள் விழித்து இறுகப்
பற்றிவிட்டால் எல்லா நாளும்
இன்ப ஒளியே!..
இயல்பாய் வானமும் வசப்படும் அந்நாளிலே!….
#நித்யா சுந்தரம்.
காலம் மாறியது…
கண்ணைக் கட்டிக் களிப்புடனே
காடு மேடெலாம் விளையாடிய
எண்ண மெல்லாம் வருகிறதே
எல்லாம் மாறிப் போனதுவே,
அண்மையில் சென்றால் ஒட்டுமென
அகன்றே விலகிச் செல்வதுடன்
மண்ணில் மாந்தர் முகம்மறைக்கும்
மாய நோயதும் வந்ததுவே…!
செண்பக ஜெகதீசன்…
கண்ணைக்கட்டிக் காட்டில்விட்ட
கதையாய் ஆனதடா – யாவும்
கனவாய்ப் போனதடா.
எண்ணிக்கூடப் பார்க்க முடியா(து)
எல்லாம் மாறுதடா இனிமேல்
எதுவும் இல்லையடா
நாலுபேர்கள் தூக்கிப்போக நமக்கு ஆளில்லை –
நம்மைச் சூழவிருந்த சுற்றம் நமக்குத் துணையில்லை
கொல்லும் கொரனா நமதுவாழ்வைக்
கொள்ளை கொண்டதடா
கூடிவாழ்ந்த எமதுவாழ்வு குலைந்து போனதடா
கொரனா வென்னும் மரணப் பொறியில்
கூட்டாய் வீழ்ந்தோமே – நாம்
கொத்துக்கொத்தாய் வீழப்போகும் குழியைப் பறித்தோமே
அரனே அல்லா உடனே வந்தெம் நிலையைப் பாராயோ
ஆற்றலிழந்தோம் எம்கண்கட்டை அவிழ்த்து விடுவாயோ
சொந்தம் சுற்றம் தூர விலகும்
துயரைப் பொறுப்போமோ- நாம்
தூய்மை தேடி வாழ்வின் இனிய
சுகங்கள் மறப்போமோ
இந்தக் கொடுமை என்றுதீரும் இறைவா வழிகாட்டு
எமது வாழ்வை மீட்டு இந்த இன்னல்தனை நீக்கு
தொற்றும் கால்கள்? வெற்றுக் கால்கள்? தோற்றம்
தோற்றினும் அவையே வைரக் கால்கள்!
சுற்றிக் கட்டியக் கண்களை எத்திடும் கால்கள்
எற்றிடங் காட்டியே வைரசை லகுவாய் ஓட்டிடும்
ஏற்றினார் கட்டில் அவர் கட்புலன் சோருமேல்
முற்றுமோ தேடல் தொடர்வறியாமல்?
அற்றைப் பதங்கள் நகர்த்திய வளியும்
சொற்றைத் துறந்த மூச்சும் இறக்குமோ?
மாற்றிய பாதையில் மற்றவர் போவதால்
பற்றிய பாதையை மாற்றவு மெண்ணுமோ?
நேற்றிய தாவரமருங்கிலாடும் ஞானப் பிள்ளைகாள்!
ஏற்ற முகனில், மறைகீறிட்ட நோக்கில், தாவரந்தர
ஊற்றிடும் ஒளி, அருள் புரிதலைக் கண்டமின்!
ஒற்றச் சோரனாய் வந்திட்டப் பார்ப்பிணி இன்று
செற்றம் காட்டாது ஓடிடச் செய்யுமின்! “சித்தமருந்தில்
ஒற்றம் வாரா! பிணியண்டாதகலும்!” எனவே பகர்மின்!
“முற்றும் கண்டிலராதலால் முழுதாயறியுமின்!” என்றே
“உற்றிடம் இருந்து மற்றவர் எழுக! ஆய்க!” என்னுமின்!
“தொற்றுக் கொரோனா எம்மவர் முறையால் ஒழிந்துறும்
தொற்றா நிலையினை அறியுமின்!!” என்றே அறிவியுமின்!!
“கற்றிடும் வித்தை கண்க(கா)ட்டி வித்தைதான்!” உங்கள்
சுற்றமும் நட்பும் கூடிப் பகர்மின்!! ஆழப்பகர்மின்!
ஒற்றை வாழ்க்கைத் தாளாது மனிதம்! இனியென்றும் அது
ஒற்றிப் பற்றியே வாழந்திட வாழ்வியல் செய்யுமின்!!
அவ்வைமகள்
படக்கவிதை எண் 251
கொரோனா
நாசியைத் தான் கட்டச் சொன்னோம்
நீ கண்களைக் கட்டியதேன்?
ஒருவருக்கொருவர் இடைவெளி என்றோம்
அவனை எம்பியெம்பி பிடிப்பதேன்
கைகளைக் கழுவு என்றோம்
நீயோ களியாட்டம் போடக் கண்டோம்
ஊரடங்கு உத்தரவென்றோம்
நீங்கள் வீதிகளில் ஆடக் கண்டோம்
சமுதாயக் கூட்டம் கூடாதென்றோம்
உங்கள் சடுதியாட்டம் காணக் கண்டோம்
உன் புன்னகை அருமைதான்
இல்லையென்று சொல்லவில்லை
சிறிது காலம் உன்பங்கும் அவசியம்தான்
கொரோனாவை ஒழிப்பதற்கு
விழித்திரு
விலகியிரு
வீட்டிலிரு கண்ணே
குடும்பத்தோடிரு
குதூகலமாயிரு
ஒத்திவைப்பாய் விளையாட்டை
ஒரு சில நாட்கள்தானே
உலகமே ஒளிமயமாக
ஒன்றுபடுவோம் அதை ஒழிப்பதற்கே
சுதா மாதவன்
படக்கவிதை எண் 251
அண்ணனோ நண்பனோ
அருகிலிருப்பதாய் உன் உணர்வு
கரம் பிடிக்கத் துடிதுடிப்பு
வெண்பற்கள் புன்சிரிப்பு
கறுப்பு வைரமாய் உன் கைகள்
மண் தரையில் பதிந்திட்ட கோல் கால்கள்
பின்னொருவன் பார்த்திருக்க
முன் நின்றனைப் பாய்வதேன்!!
புல் தரையை விட்டுவிட்டு
மண்தரையை ஏன் கண்டாய்
மிருதுவான கால்களில்
தூசிகள் படுவதற்கா?
நெருக்கத்தில் இருக்கின்றான்
நெருங்கி வந்துப் பிடித்து விடு
அவன் சட்டெனவே ஓடுகின்றான்
உன் சந்தோசம் குறைந்து விடும்
விரைந்தோடிப் பிடித்து விடு
துள்ளி துள்ளி நகைத்து விடு
கண் கட்டை அவிழ்த்திட்டோம்
நீ காணும் பொருட்கள் சுழன்றிட்டோ!!
சுதா மாதவன்
கண்ணாம்பூச்சி
மழைத்தரும் நீர்த்துளியை
புழைசெய்துத் தேக்கிவைக்க
வழியேதும் செய்யாமல்
காலமதைக் கழித்திருந்தேன்
சுற்றுப்புறம் மாசு செய்யும்
குற்றங்களை நிறுத்திடாமல்
வெற்றுச் செயல்களையே
கொற்றம் செய்ய விட்டுவிட்டேன்
புயல் வருமோர் காலந்தன்னில்
சுயமுயற்சி ஏதுமின்றி
இயலாமைக் காப்புபூட்டி
முயலாமல் நின்றிருந்தேன்
பட்டுபோன பழமைகளை
மனதினிலே தேக்கிவைத்து
புதுமைகளைத் துரத்திவிட்டு
புரட்சிக்காகக் காத்திருந்தேன்
அறியாமைக் காரிருளில்
புரியாமல் நின்றிருந்தது
விதியாடும் கண்ணாம்பூச்சியென
வீணனாக உழலுகின்றேன்
ஆட்டம்
பாட்டம்
கொண்டாட்டம்
தொடரட்டும்
ஆனந்தம்
பொங்கட்டும்
அன்பு பெருகட்டும்
கண்ணுக்கு தெரியாத
கிருமியுடன்
கண்ணாம்பூச்சி ஆடுகிறோம்
உறவுகளுடன்
கை கோர்த்து
பலம் சேர்த்து
உயிருக்கு பயந்து
வீட்டில் இருந்தே
போராடுகிறோம்
உடன் பிறவா
சகோதர சகோதரிகள்
உயிர் வாழ்க எண்ணியே
வீட்டுக்குள்ளே
சிறை பிடிக்கப்பட்ட
கைதிகள் இல்லை நாம்
தியாகிகள்