Month: March 2014

  • கனவுகளே.. ஆயிரம் கனவுகளே..

    கவிஞர் காவிரி மைந்தன்

     

    கனவுகளே.. ஆயிரம்கனவுகளே..- கவிஞர் நா. காமராசன் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா

     

    · கவிஞர்நா. காமராசன்

    · கனவுகளே.. ஆயிரம்கனவுகளே..·

    நினைவுகளும் கனவுகளும் ஒன்றுக்குள் ஒன்று ஒன்றானவை. நிழல்களும் நிஜங்களும் போல! நினைவுப் பிரதேசங்களின் நீட்சியாக சில நேரம் கனவுப் பிரதேங்கள் அமைவதுண்டு! எண்ணக்கனவுகளில் வண்ணங்களிருந்தால் எழுகின்ற கனவுகள் ஆயிரமோ?

    · வரிவரியாய்வாரிவழங்கும்கவிவள்ளல்பரம்பரையில்.. தன் சிந்தனைச் செம்மையால் தலைநிமிர்ந்த புதுக்கவிதைப் பிதாமகன் நா.காமராசன் ஆவார். இவரெழுதித் திரையில் மிதந்த கானங்கள் ஒருசிலதான்! அவற்றுள் ஒன்று இது எனலாம்!

    · கற்பனை கொடிகட்டிப் பறக்க காதலின் ராஜ்ஜியம் நடக்கிறது பாருங்கள்! கவித்துவபாணியில் மலர்ந்த கற்பகத்தருவா இந்தப் பாடல்!

    · மக்கள்திலகத்துடன் கதாநாயகி லதா இணைய நீதிக்குத்தலைவணங்கு திரைப்படத்தில் டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் மற்றுமொரு மகோன்னதப் படைப்பை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வார்த்திருக்கிறார்.

    · மானுடவாழ்வின் ஜீவநதி காதல் என்பதால் அன்பின் சங்கமம்நடைபெறும்! என்னுயிர் நீயென உன்னுயிர் நானென உறவின் தத்துவங்கள் பிறக்கும்!

    · வழக்கமான பாணியில் எம்.ஜி.ஆர் பாடல்களில் கனவுக் காட்சிகளுண்டு! வண்ண வண்ண ஆடைமாற்றங்கள் உண்டு! எழுதித்தாருங்களேன் ஒரு கனவுப்பாடலாக ஒரு காதல் பாடலை என்று கேட்டமாத்திரத்தில்..

    · பொங்கிவந்த தமிழமுதை பூப்போன்ற வார்த்தைகளால் அங்குலம் அங்குலமாய் அழகியல் ஆராய்ச்சி நடத்தி என்றென்றும் நம் இதயத்தில் நிறைந்த இனியபாடல் பிறந்ததோ?

    · கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என்

    கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள் கொஞ்சம் வரச் சொல்லுங்கள்

    கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என் காதலனை

    இங்கு வரவிடுங்கள் கொஞ்சம் வர விடுங்கள் (கனவுகளே)

     

    · நகக்குறி வரைகின்ற சித்திரமோ அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ

    · முகம் என்று அதற்கொரு தலைநகரோ விழிகள் மூடிய கோட்டைக் கதவுகளோ இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே கைவளைவிலங்குகள் நொறுங்கட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே (கனவுகளே)

    · உடை என்ற திரைமட்டும் விலகட்டுமே இன்ப உடல் எங்கும் நாடகம் நடக்கட்டுமே உறவென்ற தேர் இங்கு ஓடட்டுமே அதில் ஊடலின் கொடி ஒன்று அசையட்டுமே நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே அதில் நித்திரை இரவுகள் எரியாட்டுமே காதலில் கவிதைகள் வளரட்டுமே ஒருகாவியம் தொட்டிலில் தவழட்டுமே ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே…

     

    · காமதேவனின் கோட்டைவரை.. படையெடுப்பு நடத்திய கவிஞரும் ஒரு காம ராசனே!

    http://www.youtube.com/watch?v=78RAATdmyIw

    Share
  • காலத்தின் கோலம் !

    கலைமகள் ஹிதாயா ரிஸ்விo-images

    பிறப்பு -இறப்பு

    ஒருமுறை

    ஓராயிரம் போராட்டங்கள்…!

    காலத்திடம்
    வயதினை ஒப்படைத்துக்
    பழுத்துச் செல்கின்றன முடிகள் ..!

    ஒவ்வொரு வெள்ளை முடிகளுக்குள்ளும் நகர்கின்றது
    நிகழ் காலத்தின் ஆயுள்

    சொந்தமாக்கிக்  கொண்டோம்

    வாழ்வு

    மின்னலாய் மறைகின்றது ..1

    காலத்தின் கோலம் !

    அவரவர் வயசு அடிப்படையில்
    அவரவர் வாழ்வின் மறைவு ..!

    http://flickrhivemind.net/Tags/kolkata,travel/Interesting

    Share
  • அப்பா,அம்மாவுக்கு!…

    விசாலம்

    அப்பா, அம்மாவுக்கு”

    குழந்தைகள் பிறக்கும் போது கள்ளங் கபடமில்லாமல்தான் பிறக்கின்றன, ஒரு சூதுவாதும் தெரிவதில்லை அதன்”கலகல வென்ற” சிரிப்பில் தெய்வத்தையே காண்கிறோம். அது வளர வளர பல விதமான புதுச் சொற்கள், கற்றுக்கொள்கிறது. தாயின் ஸ்பர்சத்தை அது உணர்கிறது, தன் தந்தையைப் புரிந்து கொள்கிறது. இந்தச் சமயத்திலிருந்தே அந்த மழலைக்கு ஐம்புலன்களுக்கும் தகுந்த ஆரோக்கியமான விருந்து அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும், சிலர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சுவதற்குக்கூட சில வேண்டாத அமங்கலச் சொற்களை உபயோகிப்பார்கள். எனக்குத்தெரிந்த ஒரு பாட்டி தன் பேத்தியிடம் முறுக்கைக்காட்டுவாள்.அந்தப்பச்சை குழந்தை. ஏதோ வட்டமாகத்தெரிகிறதே என்று தாவி அதைப்பிடிக்கும்.அப்போது பாட்டி”யமகிராதகிடி நீ என்பாள்.எப்போதாவது பசி தாங்காமல் குழந்தை அழ”சரியான பிசாசு.அதன் அம்மா மாதிரி என்று தன் மாட்டுப்பெண்ணையும் சேர்த்துக்கொள்வாள்..இதே போல பல தாயார்களும் தங்கள் இயலாமையினாலும் பணவசதி இல்லாததினாலும் கணவரது தொந்தரவினாலும் தங்கள் குழந்தைகளை வசைமாரிப்பொழிவாள்.இவைகளெல்லாமே எதிர்மறை அலைகளை உண்டாக்கி அந்தச்சூழ்நிலையை மாசுப்படுத்துகிறது குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.தாய்மார்கள் குழந்தைப்பிறந்தவுடனேயே அதைக்கொஞ்ச மங்கலமான சொற்களையும் மரியாதையுடன் கூடிய சொற்றொடர்களையும் உபயோகிக்க, குழந்தையும் அதைக் கற்றுக்கொள்கிறது. குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை கிரஹிக்கும் சக்தி மிக அதிகம் எனக் குழந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பலர் குழந்தை முன்,”சனியனே, ஏன் இப்படி அழுது தொலைக்கிறே? என்றும்”எதற்கு இந்த ஒப்பாரி?” என்றும்,”மூதேவி, ஏன் இப்படி அழுது என் உயிரை வாங்கறே? என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். இதே போல், மடையா, முட்டாள், அடிப்பாவி போன்ற சொற்கள் பலமுறை கேட்க, குழந்தையின் செவியில் இவை நன்கு ஏற, அவை மனதிலும் படிந்து விடுகின்றன. நாம் பல முறைகள் நம் தவறை உண்ராமல் குழந்தையின் மேல் தவறைத் திணிக்கிறோம். குழந்தைகள் தவறு செய்வதற்க்கு நாம் தான் பொறுப்பு என்று தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அவற்றின் ஐம்புலன்களைத் தொட்டு அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். கண்ணிற்குப் பல வண்ணங்கள், வண்ணப்படங்கள், இயற்கைக் காட்சிகள் கடவுளின் படங்கள், தேசத்தலைவர்களின் படங்கள் போன்றவைகளை அடிக்கடிக் காட்ட, அவற்றிற்கு நல்ல அஸ்திவாரம் கிடைக்கிறது.சாதாரணமாக படங்களைக்காட்ட குழந்தைகள் அவ்வளவு ஆர்வம் காடடமாட்டார்கள். அதைக்காட்டி ஒரு கதையும் சேர்த்து அதை விளக்க நிச்சியம் மனதில் பதிந்துபோகும்

    உம்”கண்ணா இங்கே பார் என் கையில என்ன இருக்கு தெரிமா? கரெக்ட்டா சொல்லு பார்ப்போம்” “தெரியலையே நீங்க சொல்லுங்க”

    “இது ஒரு படம். நம் எல்லோருக்கும் இவர் தாத்தா ஆவார்.வட நாட்ல இவரை பாப்பூ என்பார்கள். தெரிஞ்சுதா?” “ஓ தெரிஞ்சுடுத்து காந்தித்தாத்தா சரியா அம்மா ‘

    “ரொம்ப கரெக்ட். இவரப்போல் நீ வரைஞ்சு காட்டு.நீதான் நன்னா டிராயிங் வரயறயே வரைஞ்சு அப்பறம் அவரைப்பற்றி ஒரு நாலு வரிகள் எழுதி காட்டு.உனக்கு ஒரு பந்து பரிசாக கிடைக்கும்”

    இது போல் பல ஆன்மீக தலைவர்களையும் விளையாட்டு வீரர்களையும் மிக எளிதாக மனதில் பதிய வைக்கலாம் ஒன்று மட்டும் தெரிய வேண்டும் நம் குழந்தைக்கு எதில் அதிக நாட்டம் இருக்கிறது என்பதைக் கண்டுப்பிடிக்க வேண்டும்.அதற்குத்தகுந்தாவாறு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

    காதுகளுக்கு நல்ல கருத்து செரிந்த பாடல்கள், தெய்வபக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள், தாலாட்டு போன்ற பாடலகள் ஆகியவற்றை அடிக்கடி கேட்கும் வாய்ப்புத்தர, குழந்தைகளும் அவற்றைச் சொல்லப் பழக்கப்பட்டுவிடுகின்றன.

    அடுத்தது தொடு உணர்ச்சி. இதில் தாய் எல்லா உறவினர்களிடமும் தன் குழந்தையைக் கொடுத்துப் பழக்கப்படுத்தி, குடும்பத்திற்குள் ஒரு பாசப் பிணைப்பு உண்டாக்க முயல வேண்டும். சில தாய் தன் குழந்தையை தன்மாமியாரிடம் கூட தர மாட்டாள். அதற்கு பாலோ கிளாக்ஸோவோ கொடுக்க தானே பால் புட்டியை கொதிக்கும் நீரில் போட்டு கழுவி பின் அதைக்கொடுப்பாள்.என்றாவது ஒரு நாள் தன் மாமியாரிடம் குழந்தையை விட்டுப்போகும் நிலைமை வந்தால் பால் எப்படி கொடுக்க வேண்டும் என்று லெக்சரும் அடிப்பாள் பாவம் அந்த அத்தை.தான் அந்தக்காலத்தில் ஆறு குழந்தைகள் பெற்று மணி மணியாக வளர்த்த விதத்தை எண்ணுவார்.சாதுவான அத்தையானல் வீட்டுச்சூழ்நிலை கெடாது.இதுவே மாறி இருந்தால் அவ்வளவு தான்.பிள்ளையின் பாடு திண்டாட்டம்தான்.சாண்ட விச்சாகி நசுங்கிபோவான்.எல்லாவற்றையும் பச்சைக்குழந்தையும் கவனித்துப்பார்க்கும். .உறவினர்களின் நல்ல குணத்தைப் பல தடவை சொல்லி, அவர்கள் மீது அந்தக் குழந்தைக்கு அன்பைப் பெருக்க வேண்டும். இனிமையான சொற்கள் பழக்க வேண்டும். காலையில் கடவுள் வணக்கம் குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கப்படுத்தி விட்டால் கடைசி வரை அந்த நல்ல பழக்கம் இருக்கும். ஒரு தடவை நல்ல வித்து ஊன்றி விட்டால் கடைசி வரை நல்ல விளைச்சல்தான். சில வீடுகளில் தாயின் காரணமாக வீட்டின் நிம்மதி போகும். பாட்டி அன்புடன் தன் பேத்தியைக் கூப்பிட, பேத்தி,”தத்தித் தத்தி” நடந்து வர, பாட்டி அவளை ஆசையுடன் அணைத்து மடியில் அமர்த்த, ஒரு குரல் வருகிறது,”வாடி, எனக்கு ஆபீசுக்கு நாழி ஆச்சு, உன்னைக் க்ரெச்சில் விட்டு நான் போக வேண்டும், இப்போத்தான் ரொம்பக் கரிசனமாய் உன்னக் கொஞ்சக் கூப்பிடறா உன் பாட்டி. போதாதற்க்கு ‘கொல் கொல்’லுன்னு இருமல் வேறு” மருமகள் போட்ட போடலில் பாட்டி முகம் வாட, சூழ்நிலைக் கம்பீரமாக வாக்குவாதம் கிளம்ப மனஸ்தாபத்தில் முடிகிறது அன்றைய நாள்.

    குழந்தைகளுக்கு அன்பு செலுத்தக் கற்றுக்கொடுங்கள்,” அத்தையிடம் போ, கண்ணா, நல்ல அத்தை, உனக்குத் தலை எல்லாம் வாரிவிடுவாள்” என்று சொல்ல அவள் அத்தையிடம் தாவிச் செல்வாள், இதேபோல் மாமா, தாத்தா என்ற உறவுகளைப் புனிதமாக்கி நன்கு பாசப் பிணைப்பை உண்டாக்குவது ஒரு தாயின் கையில் தான் இருக்கிறது. அன்பு செலுத்துவது என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு மகளை அல்லது மகனை வளர்த்து ஆளாக்கி, பல தியாகங்கள் செய்து கடைசியில் அந்த வயதானவர்கள் எதிர்ப்பார்ப்பது அன்பு ஒன்றுதான், அதுவும் பேரக் குழந்தைகளின் பந்தம், அதன் சிறப்பே தனிதான்.

    குழந்தைகள் வளர்ப்புக்குப் பெற்றோர் பல தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு எம்.டி. படித்த டாக்டர் பெண்மணி தன் குழந்தை பிறந்தவுடன் தன் கிளினிக்கை வேறு ஒரு நண்பருக்கு ஒரு ஐந்து வருடங்கள் கொடுத்துவிட்டு தான் அந்தக் குழந்தையை நன்கு வளர்த்தாள், குழந்தைக்குத் தாயின் அணைப்பு மிகவும் தேவை. பிறந்ததிலிருந்தே அது தாயின் புடவைத் தலைப்பு, அல்லது தாலிக்கொடி, சங்கிலி என்று ஏதாவது அம்மாவிடம் பிடித்துக் கொள்ளும், அப்போது தாய் சொல்லே வேதவாக்காக எடுத்துக்கொள்ளும். இந்த நல்ல சமயத்தில் உண்மை பேசுதல், பணிவுடன் பேசுதல், பிறர் சொற்களைக் கேட்டல் எதிர்த்துப் பேசாதிருத்தல் என்பது போல் கற்றுக்கொடுக்க வேண்டும் சிலர் வீட்டிலிருந்தபடியே வெளியில் யாராவது வேண்டாதவர் வந்தால்”அப்பா வீட்டில் இல்லைன்னு சொல்லுடா” என்று தன் மகனுக்குப்பொய் பேச கற்றுக்கொடுப்பார்கள் சில சமயம் பள்ளிக்கு போக நாழியாக ஹோம் வொர்க் செய்யாமல் இருக்கும் செல்ல மகன் அல்லது மகளுக்கு” செல்லமே ஏண்டா நேத்திக்கே இதை செய்யலே!சரி சரி அழாதே நான் கணக்கு போட்டுத்தரேன்”என்று குழந்தை எழுத்துப்போலவே காப்பி அடித்து ஹோம் வொர்கை முடிப்பார்கள்.நான் ஆசிரியையாக இருக்கும் போது இது போல் கையும் களவுமாக பல அம்மா அப்பாக்களைப்பிடித்திருகிறேன்

    அடுத்தது காமம். குழந்தைகளுக்கு வயது வர, முன்பு அவர்களுக்குக்குளிப்பாட்டி உடை அணிய உதவும் பெற்றோர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைத் தானே தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.தவிர அம்மா அப்பாவும் தங்கள் அந்தரங்க காதலை குழந்தைகள் முன் செய்ய ஒரு தடவைக்கு நாலுதடவையாக யோசிக்க வேண்டும் எனக்குத்தெரிந்த தம்பதிகள் தங்கள் குழந்தைகள் முன்பே ஒருவர்க்கொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொள்வார்கள். குழந்தைகளும் அந்தக்காட்சியைப் பார்க்கலாமா வேண்டாமா என்று திண்டாடும். இது தில்லியில் ஒரு பிறந்த நாள் பார்ட்டியில் பார்த்தேன். அதுவும் இந்தக்கால குழந்தைகள் எல்லாவற்றிலுமே ரொம்ப வேகம்.சில அந்தரங்க விஷயங்கள் இலை மறைவு காய் மறைவாகத்த்தான் இருக்க வேண்டும்.தம்பதிகளுக்கு தனியாக படுக்கை அறை என்று இருப்பதே இதற்காகத்தான்.

    அதில் படுத்தபடி விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பதோ. தட்டில் சாப்பாடோ அல்லது கொரிக்க பட்சணமோ வைத்துக்கொள்ள படுக்கை அறை இல்லை.

    பெற்றோர்கள் இப்படிச்செய்ய குழந்தைகளும் தங்கள் அறைகளை சாப்பாடு,கணினி. படிப்பு. விளையாட்டு என்று எல்லாவற்றுக்கும் உபயோகப்படுத்துக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் அல்லது உறவினர்களுடன் பேசி அளவளாக நேரம் கிடைப்பதில்லை.. தவிர பெற்றோர்களும் இரவு சாப்பிடும் நேரமும் லீவு நாட்களில் காலை மாலை சாப்பிடும் நேரமும் ஒரு குறிப்பிட்ட நேரமாக்கி அதில் அப்போது குழந்தைகளுக்கு சாப்பிடும் முன் அந்த அன்னத்தை நமக்கு வழங்கும் இறைவனை ஒரு நிமிடம் எண்ணி நன்றியைத்தெரிவித்து உண்ண கற்றுக்கொடுக்க வேண்டும்.இதைக்கிருஸ்துவர்கள் செய்வதைக் கண்டிருக்கிறேன். குடும்ப நபர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மிகவும் அனுபவித்து சாப்பிடவேண்டும்.

    இதைப்போல் பல சொல்லிக்கொடுக்க குழந்தைகளுக்கு, பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்து விடும். உதரணமாக வீர சிவாஜியின் தாயை எடுத்துக்கொள்ளாலாம்.

    அன்பு என்ற தோணியில் குழந்தைகளை வைத்து, தியாகம், பொறுப்புணர்ச்சி ஆகியவற்றுடனான துடுப்பால் ஒட்ட சூறாவளி வந்தாலும் தாண்டி நம் வாழ்க்கையில் அமைதியை அடையலாம், குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்..

    Share
  • குறளின் கதிர்களாய்… (23)

    செண்பக ஜெகதீசன்c-index

    காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு

    மன்னநீ ரார்க்கே யுள.

    -திருக்குறள்- 527 (சுற்றந்தழால்)

     

    புதுக் கவிதையில்…

     

    கவளம் சோறு கிடைத்தாலும்,

    கரவாதே

    கரைந்தழைத்துக் கூட்டமாய்க்

    கலந்து உண்ணும் காக்கைபோல்,

    சுற்றம்சூழப் பகிர்ந்துண்ணும்

    இனியவர்களுக்கு

    இன்னும் சேரும்,

    என்றும் நிலைக்கும் செல்வமே…!

     

    குறும்பாவில்…

     

    கூட்டத்தோடு சேர்ந்துண்ணும் காக்கையாய்ச்

    சுற்றம் பேணுவார்க்குச்

    சேருமே செல்வம் எல்லாம்…!

     

     மரபுக் கவிதையில்…

     

    கொஞ்சமாய் உணவு கிடைத்தாலும்

    கூட்டம் சேர்த்தே இனத்துடனே

    கொஞ்சமாய்ப் பகிர்ந்துதான் உண்டிடுமக்

    காக்கை போலச் சுற்றமுடன்

    நெஞ்சம் நிறைந்திடும் அன்புடனே

    நமக்குக் கிடைப்பதைப் பகிர்ந்துண்டால்,

    பஞ்ச மேது மில்லாமல்

    பற்பல செல்வம் சேர்ந்திடுமே…!

     

    லிமரைக்கூ…

     

    சுற்றம் அழைத்துச் சேர்ந்துண்ணும் காக்கை,

    பெற்றதை மகிழ்வொடு பகிர்ந்துண்ணக்

    கற்றவர் பெறுவரே திருமகள்தன் நோக்கை…!

     

    கிராமியப் பாணியில்…

     

    கத்துக்கோ கத்துக்கோ

    காக்கா கிட்ட கத்துககோ,

    கூட்டங் கூடி எரதிங்கத

    காக்கா கிட்ட கத்துக்கோ..

     

    கொஞ்சொம் எரதான் கெடச்சாலும்

    கொலத்த யெல்லாங் கூப்புட்டு

    கூடச் சேந்து சாப்புடுதே..

     

    கத்துக்கோ கத்துக்கோ

    காக்கா கிட்ட கத்துககோ,

    கெடச்ச பொருள மறைக்காம

    குடும்பத் தோட அனுபவிச்சா

    கூட வருமே செல்வமெல்லாம்

    கூடி வருமே செல்வமெல்லாம்..

     

    இத

    கத்துக்கோ கத்துக்கோ

    காக்கா கிட்ட கத்துக்கோ…!

     

       http://www.talking-naturally.co.uk/house-crow-coming-port/  

    Share
  • திருமால் திருப்புகழ் (31)

     
    கிரேசி மோகன்

    397507_598982730190325_1701836071_n

    தனன தனதான தனன தனதான
    தனன தனதான தனன தனதான -தனதான….
    —————————————————————————————-images

    வயதில் உருவாகும் வளையும் முதுகேறி
    விசனம் பிணிரோகம், வளரும் புவிமோகம் -அதுபோக
    உழலும் விவகாரம் உணர அவகாசம்
    குருவின் உருவாகி பிறகு உபதேசம் -தரநீயும்
    தயவு புரிவாச துளசி அணிமார்ப
    வனஜ மனையோடு வினதை மகனேறி-வரவேணும்
    கயவன் துரியோத னனுடன் குலம்சாய
    குதிரை கடிவாளம் கொளும்வி ஜயன்தேரின் -பெருமாளே
    ———————————————————————————————————————

     

    Share
  • கடைசி தலைமுறை குருவிகளுக்காக…..

     
    எஸ் வி வேணுகோபாலன்

    images (7)
    தினம் பார்த்துக் கொண்டிருந்த images (5)
    பறவைகளுக்காக
    ஒரு தினம் கொண்டாடுகிறது சமூகம்

    வாழும்போது புறக்கணிப்பவர்களை
    மறைந்தபிறகு கும்பிடுவதுபோல

    கேட்கத் தவறிய சங்கீதத்தை
    எழுத்தில் வாசித்து ஏங்குவது போல

    வறண்டு போன ஆற்றின் மணலில்
    நதியின் பெயரை எழுதுவது போல

    ஆனால், பாவம்
    கடைசி தலைமுறை குருவிகள்
    அவை அறியாது
    இவை எதையும்
    இவற்றுக்குப் பின் வருவதையும் !

    Share
  • சேவா பூஷன் விருது

    நம்முடைய வல்லமை இதழின் ஆசிரியர் குழும உறுப்பினர்  திரு. தூரிகை சின்னராஜ் அவர்கள் சங்கரதாஸ் ஸ்வாமிகள் இயல், இசை, நாடகசபா வழங்கும் “சேவா பூஷன்” விருது பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . திரு சின்னராஜ் அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    unnamed (1)

    “என் படைப்புகள், மற்றும் குழந்தைகளுக்கான எதிர்காலச் சேவைகளை சமுதாய வளர்ச்சிக்காகப் பயன்படும் வகையில் நகர்த்தவேண்டும் எனும் பொறுப்பும் எனக்கு அதிகரித்து இருப்பதையும் நான் உணர்கிறேன்” என்கிறார் இவர்.

    விருது வழங்குவோர்: நடன இயக்குனர். புலியூர் சரோஜா, இயக்குனர் இமயம் எஸ்.பி.முத்துராமன், முனைவர்.கோ.ராதா.

    unnamed (2)

    தூரிகை சின்னராஜ் .

    T.CHINNARAJ
    MA.,MA.,M.L.I.Sc., TTC(Art).,
    Librarian & Creative Head.
    Learning Resource Centre,
    SATCHIDANANDA JOTHI NIKETHAN INTERNATIONAL SCHOOL,
    Ooty Main Road, Mettupalayam-641 305.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • சடுதியில் உருப்படியாக முடிச்சவிழ்க்க…[1]

    இன்னம்பூரான்

    unnamed

    ஆளுமையில் இருப்பவர்கள், அரசு/தனியார்/கூட்டு யாதாயினும் சரி, அவிழ்க்குமுன் இறுக்கமாகவே முடிச்சுப் போட்டு விட்டு, தீர்வு காணப்போவதாக பாவ்லா காட்டும் காட்சிகள் கூடி வருகின்றன. பங்குச்சந்தை சகுனிகளுக்கு தீனி போடுவது நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த அற்பாசை பாமரர்கள். தரகு பிடிப்பது அரசு/தனியார்/கூட்டு ‘பெருந்தகைகள்’. சில மந்திர சொற்களை முதலில் புரிந்து கொள்வோம்.

    CBI ~புலனாய்வுத்துறை [1]

    SEBI ~பங்குச்சந்தை கண்ட்ரோலர் [2]

    MCX-SX ~ ஆரூட பங்குச்சந்தை [3]

    FTIL -ஜிக்னேஷ் ஷா நிறுவிய Financial Technologies India Ltd [4]

    முடிச்சு 1: [2]வின் மாஜி தலைவர் சி.பி.பவே/ மாஜி அங்கத்தினர் கே.எம். அப்ரஹாம் மீதும், [1] குற்ற விசாரணை துவக்கியுள்ளது. குற்றம்: [3] க்கு 2008, 2009, 2010 ஆகிய வருடங்களில் ஆரூடாட்டம் ஆட அனுமதி அளித்தது. ஆரூடாட்டம் என்பது அன்றாட பங்குச்சந்தை வரத்துப்போக்கை விட மாபெரும் பகடையாட்டம். தங்கம், வெள்ளி, உளுந்து, கடுகு, புண்ணாக்கு, அன்னிய நாட்டு துட்டு எல்லாவற்றையும் பற்றி வருங்கால விலையை பற்றி ஆடும் ஆடு புலியாட்டம். எல்லா நாடுகளிலும் இது இருக்கிறது. நாணயமற்ற அரசு/தனியார்/கூட்டு ‘பெருந்தகைகள்’ உம்மையும் எம்மையும் நிர்க்கதியாக்க துணிவார்கள். ஆகவே, இந்த விசாரணையின் பயங்கர பின்னணியை நாம் அறிந்துகொள்வது நலன் பயக்கலாம். முதலில் இந்த விசாரணை மீதே குற்றம் சாட்டுபவர்கள் யார்? ~ திருவாளர்கள் வினோத் ராய்: தணிக்கை புகழ் சீஏஜி, என்.விட்டல்: கண்காணிப்பு புகழ் மாஜி தலைமை விஜிலன்ஸ் கமிஷனர். ஈ.ஏ.எஸ். சர்மா & ஜி.சுந்தரம்: வாய்மை புகழ் மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். அவர்கள் நால்வரும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்ணியத்துக்கு நற்சான்று அளிக்கிறார்கள். சச்சரவுக்கு உள்ளானாது [1] என்ரும், அதன் வாய்மை கேள்விக்குறி ஆகிவிட்டது என்கிறார், என்.விட்டல். குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலைப்பாடுகள் யோக்கியமானதாக இருந்திருந்திருந்தால், அவர்களுக்குக் கவசம் தேவை என்கிறார், சர்மா. ஓய்வு பெறும் வரையில் காத்திருந்து, இறுதி நாளன்று அம்பு வீசுவதை கண்டித்தார், திரு. சுந்தரம்.

    இது இவ்வாறு இருக்க, சில பின்னணிகள்:

    மாசிலாமணி என்று கருதப்பட்ட திரு. அப்ரஹாம் 2011ல் அரசு/தனியார்/கூட்டு ‘பெருந்தகைகள்’ ஆடிய பேயாட்டம் பற்றி, குறிப்பாக நிதி அமைச்சரகத்திலிருந்து, பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். [2]யை அவர்கள் பலவீனம் செய்ததை கூறினார். அது ‘யதாஸ்தானம்பிரதிஷ்டயாமி’ என்று நிதி அமைச்சரகத்தை சரணடைந்து தகனம் செய்யப்பட்டது. அக்காலத்து நிதி அமைச்சர் தற்காலம் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஜனாதிபதி. அந்த அதிகாரிகள் ராஷ்ட்ரபதி பவனில் பணி புரிவதால், அவர்களுக்குக் கவசம்.

    சஹாராதிபதியின் ஊழலை கண்டித்து, அடக்கி வைத்து, அவரை தற்காலத்து இற்செறிப்புக்கு வழி வகுத்தவர் தான் திரு.அப்ரஹாம்.

    நில்லா நிலக்கரி இலாக்கா காரியதரிசி திரு. பி.சொ.பரேக் அவர்களுக்கும் அதே அதோகதி, நிரூபணம் இல்லாமல். உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் தற்கால தலைமை கண்காணிப்பு கமிஷனர் பேசாமடந்தை என்று கேலி செய்தது. சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், வலிக்கறதே.

    இந்தியா? உன் முடிச்சுகளின் நாமாவளி பகரவா? இல்லை, வாசகாதிபதிகள் மவுனம் சாதிப்பார்களா?

    Image credit: http://img.designswan.com/2010/01/knot/10.jpg

    [தொடரும்]

     இன்னம்பூரான்

    Share
  • திருமால் திருப்புகழ் (30)

    கிரேசி மோகன்

    Tamil-Daily-News-Paper_17914545537

     

    தனன தனதான தனன தனதான
    தனன தனதான தனன தனதான -தனதான….

     
    “சகட னொடுவானின் முகடு வரையேகி httpwww.chanadanadharmam.blogspot.com 2
    தவிடு பொடியாகி தரையில் அவன்வீழ -மெதுவாக
    படிகள் தவழ்ந்தேறி கபடு அறியாத
    சவலை சிசுவாக கடையும் நவநீத -ருசிகாண
    விகட முகமோடு வெகுளி இடைமாது
    புடவை முடிபோட புகும வனின்லீலை -புரியாத
    அகட முறைமாமன் அழிய ,வசுதேவர்
    அபலை தனைமீட்க அவனி அவதார -பெருமாளே”
    ———————————————————————————————————

    படத்திற்கு நன்றி:

    http://news-amanushyam.blogspot.in/2013/01/blog-post_3612.html

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    நேசமித்ரன்

    அன்புள்ள மணிமொழிக்கு

    நலம் ! விழைவதும் அதுவே ….

    தாமரைத்தண்டில் மூச்சு விட்டபடி நண்டூரும் சேற்றில் அளைந்த நம் விரல்கள் இன்று இரு வேறு உலகங்களின் வெவ்வேறு வேர்கள். நித்தியமும் பிரார்த்தனைக்குப் பின் ஒரு கவளம் எடுத்து வைத்து விட்டு உண்ணும் வழக்கம் இன்னும் உனக்கு மாறி இருக்காது. கடல் பார்ப்பது மாதிரி எனக்கு உன் கண்கள் சலிப்பதே இல்லை என்ற உன் வரியை சமீபமாய் பழநி யானைப்பாதையில் இறங்க முடியாமல் மண்டியிட்ட யானை அருகே அமர்ந்து அழுத பாகனின் கேவலில் கேட்டேன். வதுவை என்ற வார்த்தை மீது உனக்கு அவ்வளவு ப்ரேமை. பாரதி எவ்வளவு அழகா பயன்படுத்தி இருக்கான் பாரேன் என்பாய்.

    கடைசியாய் முதல் முத்தம் பகிர்ந்த ட்யூஷன் எடுத்த பழநிச்சாமி வாத்தியார் வீட்டுக்கு போகப் பார்த்தேன். அவர் அந்த வீட்டை விற்று விட்டாராம். வெள்ளை அடித்து அந்த எண்ணெய்க் கறைகளில் செதுக்கிய பெயர்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் இன்னும் சிட்டுக்குருவிகள் நெல் பொறுக்க வருகின்றன பென்னிட்டா.

    பனங்காய் சக்கரங்களில் இன்னும் யாரோ ஒருவன் இழுத்துச் செல்ல எவளோ சிறுமி ஓட்டைப் பல் தெரிய செல்லக் கூச்சல் இட்டபடி சரளைப் பாவாத சாலையில் அலைகிறாள். சரண்யாவுக்கு இரண்டாம் குழந்தை பிறந்திருக்கிறது. ரவி ரேடியோக்கடையில் இன்னும் தூங்காதே தம்பி தூங்காதே பாட்டோ தேவனின் கோவில் மூடிய நேரம் பாட்டோ கேட்டுக் கொண்டிருக்கிறது.

    பெரியாற்றில் நீ குளித்து விட்டு வந்தபோது பூ கொடுத்து செபாஸ்டியனை அறைந்த அதே புங்க மர நிழலில் யாரோ கலவிக் கிடந்தார்கள் ஒருமுறை. பென்னி, செபாஸ்டியனை நீ மன்னித்திருக்கலாம். பிறகொரு நாள் முருகன் தியேட்டருக்கு பின்புறம் கஞ்சா அடித்து விழி செருகி கடந்தவனை போலீஸ்காரர்கள் இழுத்துப் போனதற்கு பிறகு யாரும் அவனை பார்க்கவில்லை என்கிறார்கள் .

    நம் செல்வி மிஸ்ஸுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. சொல்ல மறந்து விடப் போகிறேன். நீ இன்னுமொருமுறை வந்தால் ஜெனிபரின் கல்லறைக்கு ஒருமுறை விளக்கேற்று. ஆம் யாருக்காக உன் காதலைத் தியாகம் செய்து விட்டு பிரிந்து போனாயோ அந்த ஜென்னிதான் இறந்து போனாள் நாம் நினைப்பது மாதிரியா எல்லாம் நடக்கிறது.

    என்றென்றைக்குமான  காதலின் நேயத்துடன்

    நேசமித்ரன்

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    சங்கர் சுப்ரமணியன்

    அன்புள்ள மணிமொழிக்கு

    அன்பு மகளே எப்படியிருக்கிறாய் . இங்கு அனைவரும் நலம். எப்பொழுதும் எங்கள் ஞாபகங்களில் நீதான் நிறைந்து கொள்கிறாய். நீ என்னோடு பேசும் பொழுதெல்லாம் ஞாபகப்படுத்துகிறாய். என்னை பார்க்க வேண்டும், அல்லது அவசரமாக தகவல் அனுப்ப வேண்டும் என்றால் என் பேஸ்புக் பக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று. என் கடிதம் உன்னுடைய நண்பர்கள் மத்தியில் இலேசான வெட்கத்தை ஏற்படுத்துவதாக கூறியிருந்தாய். ஆனால் மணிமொழி இப்படியாககடிதம் எழுதும் பொழுதுதான் என்னுடைய முழுமையான உணர்வுகள் வார்தைகளில் வெளிப்படுவதாகவும், மற்ற எந்தவிதமான தொடர்புகளும் முழுமையில்லாமல், இன்னமும் கொஞ்சம் அழகாக தெரியப்படுத்தி இருக்கலாமோஎன்ற ஆதங்கத்தில் முடிவதாகவே எனக்கு தோன்றுகிறது.

    நேற்று நம் வீட்டுக்கு பொதுமக்கள்  மனதில்  நிறைந்து  இருக்கும் அண்ணன் கோபால்சாமி வந்திருந்தார். யாருக்கும் உதவுவதற்கு எந்த சமயத்திலும் தயாராக காத்திருப்பவர் அவர். என்னுடைய அப்பாவின் நெருங்கிய நண்பர் . நான்தான் என்னுடைய வாழ்க்கை தேடலில் கொஞ்சமாக தள்ளியிருந்துவிட்டேன் அவரிடமிருந்து. நம் வீடு தேடி மறுபடியுமாக அவர் வந்தது எனக்கு பெருமைதான். அவர் ஏதோ உடம்பு முடியாமல் நீ படிக்கும் ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்ததும், அங்கு உன் அனுகுமுறையும் , சேவையும் கண்டு வியந்து போய் உன்னை விசாரித்து, நீ என் அப்பாவின் பேத்தி என தெரிந்ததும் இங்கே மறுபடியுமாக வந்திருந்தார். “ துளி கூட கலப்படமில்லாத அன்பினில் நிறைந்த அந்த மனம், வாழ்க்கையையும் சேவையையும் இருவேறாக பிரிக்காத அந்த பக்குவம். எவருடைய மனத்தையும் எப்பவுமே கஷ்டப்படுத்தாமல் வெளிவரும் வார்த்தை . உன் அப்பாவின் மாற்றமில்லாத பிரதியாகத்தான் அவளைப் பார்த்தேன். அத்தோடு அவளோடு ஒட்டிக்கோண்ட அறிவும், அவள் ஈடுபாடும்…” என  இன்னமும் பலவாறாக உன்னை நம் சொந்தங்களின் முன்னே பெருமையுடன் பேசிவிட்டு, படிப்பு முடிந்ததும் கண்டிப்பாக தெரியப்படுத்து . இனியாவது எங்களிடமிருந்து ஒதுங்காமல் வீட்டிற்கு வா … என்று கூறி, மறுக்காமல் மதிய உணவையும் நம் வீட்டிலேயே முடித்து விட்டு சென்றார். என் மனத்திற்குள் பிடிபடாத பெருமை இன்னமும் நிறைந்து வழிகிறது. என் தந்தையையும் உன்னையும் பற்றி நான் பெருமையாக கேட்கும் பொழுதெல்லாம் இப்படித்தான் வார்த்தைகளற்று என் மனம் சந்தோசத்தில் நிறைகிறது.

    தாராள  மனமும்,  சமுதாய  அக்கறையும் கம்பீரமும் கொண்டவர் என் பணக்கார தந்தை. எங்கள் வீட்டு கதவு அதிக நேரம் உதவிகள் கேட்டே தட்டப்படும்.  மற்றவர்களுக்கு உதவி செய்வது தர்மம் அல்ல கடமை என்றே என்  தந்தை கூறுவார்.  எங்கள் கார் எங்கள் குடும்பத்தை சுமந்ததை விட, இக்கட்டமான தருணங்களில் சுற்றியருக்கும் கிராமமக்களை சுமந்து சென்றதே அதிகம். மருத்துவமனை இல்லாத சுற்றியுள்ள கிராமங்களின் மருத்துவ சேவைக்காக என்னை மருத்துவனாக்குவது என்பதில் உறுதியாக  இருந்தார். ஆனால்  தடுமாறிய காலசக்கரத்தில், எதிர்பாராத ஒரு அதிகாலை வேளையில், அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு ஒடிச்சென்று பார்த்தால், சிரித்தமுகத்துடன் என் தந்தை  இறந்து கிடந்தார் அவர் அறையில். அழுகுரல், கதறல் எல்லாம் எங்கோ தொலைதூரத்தில் கேட்கும் சத்தம் போல் இந்த உலகமே வெகுவேகமாக சுற்ற நான் மயங்கி விழுந்தேன். என்னால் தாங்கவே முடியாத தந்தையின் இழப்பை என்  மனமே முழுமையாக உணர்வதற்குள் சுயநலமிக்க மனிதர்களால் பணம் சொத்து என எல்லாம் நான் இழக்க… மிஞ்சியது இந்த வீடும் எனை சுற்றி பயமுறுத்தும் அழுகுரலும்தான். நான் வாழ்க்கையின் புரியாத தத்துவத்தில் செய்வதறியாது திகைத்து போனேன். என் அன்பு தந்தை, எனக்கு எல்லாமுமானவர் அன்று என்னோடு இல்லை என்று தெரிந்த தனிமையில், முட்டி கொண்டு  வந்தது பேரழுகை.

    மனத்தை ஒருமுகப்படுத்தி, தந்தையின் ஆசியுடன், உத்வேகம், உறுதி என்ற இரு வார்த்தைகளில் என் மனதை இருத்தி உழைத்தேன். பெரும் வெற்றிகள் என் வசப்படவில்லை எனினும் நான் நம் ஊரில் மதிக்கதக்க வகையில் முன்னேறி வந்ததை விட நான்  மிகவும் மகிழ்ந்தது. என்னுடைய வற்புறுத்தல்கள் எதுவுமின்றி, நீ படிப்பில் எல்லாருக்கும் முன்நின்று என் தந்தையின் கனவை மறுபடியுமாக உறுதிப்படுத்தியதும்தான். நீதான் முதல் மார்க் என்று எனக்கு தெரிந்ததும், சந்தோசத்தில் மிதக்கும் என் மனம். இன்னமுமாக உன்னை சந்தோசப்படுத்தி பார்ப்பதெற்கென்றே,  “அந்த மீனா ரொம்ப மினுக்குவாளே, அவா ஒருத்திக்குதான் கணக்கு வருமுன்னு, அவளையும் விடவா… நீ கணக்கில் கூட வாங்கியிருக்கிறாய்…” என்று நான் கேட்டதும். “ஆமாம் அப்பா எனக்கே தெரியலை, நான் எப்படி அவளை முந்தினேன்னு … மேக்ஸ் மிஸ் ரொம்ப பாரட்டினாங்க தெரியுமா …” என்றபடி உன்முகம் சந்தோசத்தில் மிளிர… என் மனம் சந்தோசத்தின் எல்லை தொட்டு… கீழிறங்காமல் உயரே… உயரே.. பறப்பதாக தோன்றிய உணரச்சிகளில் மிதந்தபடியே நண்பர்கள், சொந்தங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி பெருமை கொள்வேன்.

    அப்படியாக பள்ளிப்படிப்பை முடித்து மாவட்டங்களில் முதலாவதாக நீ வந்து, உனக்கு மருத்துவப்படிப்புக்கு அழைப்பு வந்த அந்த தருணம் . எப்பொழுதும் நாம் கும்பிடும் அந்த ஆத்தா வண்டிமலைச்சியே, வானத்திலிருந்து இறங்கி வீடு வந்தது போல், மறுபடியுமாக என் தந்தை இவ்வுலகம் வந்து சிறுபிள்ளையான என்னை கைப்பிடித்து ரோட்டுக்கடைக்கு அழைத்து செல்வது போல், வசப்படாத சநதோசத்தில் மனம் துள்ளி குதித்தது. தெரிந்த அத்தனை ஜோசியரையும் பார்த்து நல்ல நாள் குறித்து நம் குலதெய்வத்திக்கு பூஜை வைத்து நாம் கிளம்பி போய், நீ கல்லூரியில் சேர்ந்ததும். மனமுழுவதும் நிரம்பிய சந்தோசத்தில் கண்களில் நிறைந்த கண்ணீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டே இருந்தேன் அன்று  மட்டுமல்ல, அதை நான் எப்பொழுது  நினைத்தாலும்.

    வாழ்க்கையில் அதேபோல் எப்பொழுதுமே என்னால் மறக்கமுடியாத  தருணங்கள்.  அந்த  கஷ்ட காலத்தில்  வியாபாரத்திற்காக  நான்  சுற்றியுள்ள கிராமத்திற்கு சென்றால்,  கிராமமே திரண்டு வந்து  என் முன்னால்  நின்று “ஐயா.. உங்க  அப்பா  எங்க  குலசாமி அய்யனாராகவே  வாழ்ந்துட்டு  போய்ட்டாக. அவுகளோட குடும்பமே கஷ்டப்படயில, நமக்கு கஞ்சி ஒரு கேடான்னுட்டு.. நாங்க இப்பல்லாம்  இராத்திரிக்கு  கஞ்சி  குடிக்காமலேயே  படுத்துருவோம். எங்க அய்யனார் சாமிகிட்ட போய் நீ மட்டும் இருக்கிறது நெசம்ன்னா..எங்க ஐயாவோட குடும்பம் நல்லாயிருக்கனும்னு. எல்லாருமே ஒருதரமாவது வேண்டாம வேலைக்கு போகமாட்டோம். உங்களுக்கு பணக்கஷ்டம் ஏதாவது இருந்தா சொல்லுக, தலைக்கு வரி போட்டு பிரிச்சு கொடுக்கிறோம்.  உங்கள அப்பா தனியா விட்டு போய்ட்டத நினைக்காதீக. நாங்கெல்லாம் உசுரோடதான் இருக்கோம்” அவர்கள்  என்னுடனே  வந்து  பணிவாக  கேட்பார்கள். இப்பொழுது வரை  எவ்வளவு பெரிய  மணிதர்கள் அவர்களின்  கிராமத்திற்கு  வந்தாலும்  எனக்கு  பிறகே  அவர்களுக்கு  மரியாதை  அளிப்பார்கள். அப்பொழுதெல்லாம்  என்  தந்தை  என்னில்  உயர்ந்து  என்  இதயம்  நிறைத்து  கொள்வார்.  அவர்கள்  குலசாமி  அய்யனாரோ, என் தந்தை  குலசாமியாக வந்தோதான், யாரிடமும் கைநீட்டி உதவி பெறாமலே என் வாழ்க்கை உயர்ந்தது என்பதாகவே  எனக்கு  எப்பொழுதும் தோன்றும்.

    மணிமொழி… சமீபகாலமாகத்தான்  நான்  உன்னில்  தடுமாற்றங்களை  பார்க்கிறேன்.  அதுவும்  உன்னை  நான்  பார்க்க  வந்த சமயம்,  உன்  நண்பன்  என்று ஸ்டீபனை  அறிமுகப்படுத்திய பிறகு தான்.  ஸ்டீபன்  என்னிடமே  பேசினான். அவன்  பேச்சு முழுவதும், அளப்பில்லாத  உன்  திறமையை  அவன்  நாடு எப்படியாக கொண்டாடும்  என்பதாகவே  இருந்தது. எப்படியாவது  உன்னை  அவன்  நாட்டிற்கு  அழைத்து  செல்லும்  நோக்கிலே  அவன்  இருப்பதாகவே எனக்குபட்டது.  இப்பொழுதெல்லாம்  நான் சுற்றியுள்ள  எந்த  கிராமத்திற்கு  சென்றாலும்  அவர்கள் “ஐயா.. அம்மா அப்படியே உங்க அப்பா சாடை… அவுகளைப்  பார்த்தால்  எங்க அய்யனாரையே மறுபடியுமாக  நேர்ல பார்க்கிற  மாதிரியே  இருக்கு.  அம்மா  எப்போ  படிப்பு  முடிச்சு  வருவாக……” என்று என்னிடம்  கேட்கும் பொழுதெலலாம்  என்  நெஞ்சம்  நெகிழ்ந்து  என் தந்தையின்  நினைவுகளில்  என் இதயம்  நனைகிறது.   எனக்கென்று  என் தந்தை பதித்து  போன  கனவு   ஒன்றே ஒன்றுதான்,  இன்னமும்  இப்படியாக  அப்பழுக்கில்லாத  அன்பினில்  வாழும்  இந்த  மனிதர்களுக்கு  காவல் தெய்வம் அய்யனாராக  ஒரு சில மனிதர்கள்  வருவார்கள் என்பதுதான். நானும்  இந்த  ஐனங்களுடன்  சேர்ந்து  அப்படியான  காவல்  தெய்வமாகத்தான்  உன்னை பார்க்கிறோம், என் தந்தை மாதிரி…….!    ஆகவே  மணிமொழி…  உன்  தடுமாற்றங்களை  தள்ளி விட்டு  என்  அப்பாவைப்போல்  காவல்  தெய்வம் அய்யனாராக அவர்களுக்கு நீ  வரவே….. என் மனம்  ஆத்தா  வண்டிமலைச்சியை  வேண்டி  நிற்கும்.

    Share
  • மன்னர்களும் இசையும்!….

    விசாலம்

    காலம் காலமாக இசையில் மன்னர்களும் ஈடுபட்டு இசையை ஆதரித்து வந்தனர்முகலாயமன்னர் சக்கர்வத்தி அக்பர் ஹிந்துஸ்தானி இசையை ஆதரித்து தன் அவையில் அடிக்கடி இசை தர்பார் நடத்தினார்.அதில் முக்கிய பங்கு வகித்த தான்சன் மஹராஜை மறக்கமுடியாது. அவர் இசையில் பெரிய ஐஸ் பாறையும் உருகிவிடும். குப்தர்கள் வம்சத்தில் பலர் இசையில் வல்லுனராக இருந்தனர் சக்கரவர்த்தி சமுத்திரகுப்தா வீணை மிக அழகாக வாசிப்பாராம் அவர் ஆண்ட போது அவர் யாழ் வாசிக்கும் உருவத்தில் காசுகள்அடிக்கப்பட்டன. மேவார் நாட்டு மன்னர் மீராபாயின் கணவர் ராணாவும் இசையில் தேர்ச்சி பெற்றவர்.நடனக்கலையும் அறிந்தவர்.”சங்கீத மிமாம்சா “என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.

    தஞ்சாவூரை ஆண்ட பல அரசர்கள் இசையில் தேர்ச்சிப்பெற்று பல புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர்.சரபோஜி மன்னரும் நன்கு பாடுவாராம் ரகுநாத நாயக் என்ற மன்னர் “சங்கீத சுதா’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.மிதிலையின் மன்னர் நன்யபூபாலா “சரஸ்வதி ஹிருதயலங்காரா’ என்னும் பெரிய புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஷாஜி மஹராஜா “பல்லகி சேவா பிரபந்தம் “என்னும் நூலை எழுதியிருக்கிறார்.

    தென் இந்தியாவில் மஹாராஜா திரு ஸ்வாதி திருநாள் அவர்களின் கிருதிகள் அபூர்வமானவை. திருவாங்கூரை ஆண்ட அரசர்கள் பலர் பல பாடல்களை இயற்றினர்.அதில் திரு ஸ்வாதிதிருநாள் ஆண்ட காலத்தில் இசை சிகரத்தைத் தொட்டது.

    மன்னர் ஸ்வாதித்திருநாளுக்கு பல பெயர்கள் உண்டு.பத்மநாபதாசர் ஸ்ரீராமாவர்மா குலசேகர பெருமாள்.வாஞ்சிபலர் , ஆகியவை…..இவர் பிறந்த நட்சத்திரம் சுவாதி ஆனதால் இவர் சுவாதிதிருநாள்: என்று அழைக்கப்பட்டார்.இவர் பிறந்த் இரண்டாண்டுகளிலேயே இவரது அன்னை லட்சுமி பாய் இயற்கை எய்தினார்.தந்தை திருராஜராஜவர்மா தனித்துவிடப்பட்டார்.

    மன்னர் சுவாதித்திருநாளுக்கு பல மொழிகள் தெரியும் முக்கியமாகசம்ஸ்கிருதம் பார்சீயமொழி.கன்னடம் மராத்தி உருது ஆங்கிலம் ,மலையாளம், தெலுகு ,நன்கு பேச எழுத முடிந்தது இந்தமொழிகளில் அவர் பாடல்களும் இயற்றியிருக்கிறார். இவருடைய இசையினாலேயே திருவாங்கூர் இசையில் முதன்மை இடத்தைப்பிடித்தது.

    இவரது ராகமாலிகை ‘பன்னகேந்தரசயனா “எட்டு ராகங்கள் கொண்டது கேட்க மிகவும் ரஞ்சகமாக இருக்கும் இவருடைய வர்ணங்க்ளில் அடதாள வர்ணங்கள் “விரிபோணி பைரவி ராகம் வனஜாட்சி கல்யாணி ராகம். ‘கனகாங்கி’ தோடி ராகம் பல கச்சேரிகளில் ஆரம்பமாக இருக்கும். அதன் அழகையும் நடையையும் ஸ்வரபிரஸ்தாரங்களையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    இப்பவும் திருவனந்தப்புரத்தில் அவர் பெயரில் ஸ்வாதித்திருநாள் விழா நடத்தப்பட்டு அதில் பல பிரதான வித்துவான்கள் அவருடைய பாடல்களைப்படி கௌரவிக்கின்றனர்.குழந்தைகளே இசையில் நாட்டம் கொள்ளுங்கள்.குரல் வளமும் ஆர்வமும் இருந்தால் போதும்.ஒரு நல்ல குரு மூலம் சிரத்தையாகக் கற்றுக்கொள்ளுங்கள்/ மனதுக்கு அமைதியும் ஆனந்தமும் கொடுப்பது இந்த இசைதான்.. பலர் இசையினால் தனக்குப்பிடித்த இறைவனை தரிசித்திருக்கின்ற்னர.உம் மீராபாய். ஸ்ரீ தியாகராஜர். ஸ்ரீ முத்துசுவாமி தீட்சதர். ஸ்ரீ சியாம சாஸ்த்திரி.ஸ்ரீ புரந்தரதாசர்.ஸ் அன்னம்மாசார்யா. என்று அடுக்கிக்கொண்டே போகலாம் சும்மா டிவியில் சீரியல் மட்டும் பார்க்காமல் நிறைய இசை சம்பந்தப்பட்ட படைப்பையும் பாருங்கள்…

    Share
  • நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள விபூஷிகா எனும் சகோதரி

    கஸுன் மகேந்திர ஹீனடிகல63341_10203341156391284_866522752_n1912068_479616398833526_454922784_n
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

    ஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்டப்பகலில் கிராமத்தவர் முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டாள்.

    கவிதைக்கான குறிப்பு : எப்பொழுதும் தனது சகோதரனைக் கேட்டு அழுது ஓலமிட்ட அத் தமிழ் சகோதரி இப்பொழுது கடத்தப்பட்டிருக்கிறாள். காவல்துறைத் தலைமையகம் அறிவித்திருப்பதைப் போல அதனை மனிதாபிமானக் கடத்தலா எனத் தீர்மானிப்பது உங்கள் கையிலிருக்கிறது.

    விமானத்தைக் காணவில்லை
    உலக வரைபடமே இங்கே பார்
    யோசனைகளோடு விம்மியழுது
    உதித்த சூரிய மகள் எங்கேயெனச் சொல்

    அண்ணன்மார் மூவருக்கு இளையவள்
    அன்னையின் விழிகளோ அன்பின் உறைவிடம்
    அதுதான் ஐயாக்களே தமிழனின் பாசம்
    அதுவன்றி வாழ்க்கையே போராட்டம் தங்கையே

    கொடிய கனவொன்றைப் போல
    மூத்தவர்கள் இருவர் மரித்திட
    முப்பொழுதும் பார்த்திருந்த
    இளைய அண்ணனும் கடத்தப்பட
    பனையழகு எல்லாம் அழிந்த பூமியில்
    ஸ்வரம் இழந்த பாடலானாள்
    இரட்சகனைத் தேடியதால் – நரகத்துக்கு
    கொண்டு செல்லப்பட்டுள்ள சகோதரியொருத்தி

    கற்றறிந்த சிலுவைக் குறிகளுக்கு
    சத்தியத்தில் இடமில்லை
    குரலெழுப்பிப் பூத்த மலரொன்று
    சிதைகிறது இரகசியமாக

    அவளுமொரு சிறுமி
    இருந்திருக்கக் கூடும்  கனவுகள் ஆயிரம்
    இன்னும் கண்டிருக்கக் கூடும்
    எப்பொழுதாவது ஒரு புன்னகைத் துளியை

    உலகம் ஒரு சிறைக்கூடம்
    நலிந்தவர்கள் மட்டும் சிக்கிக் கொள்ளும் சதி பீடம்
    இன்றும் வலி தந்திருக்கக் கூடும்
    ஒரு கொடியவனின் பார்வை

    வேண்டுமென்றே கடத்தப்பட்டாள் கறுப்புத் திலகமிட்டவள்
    உருவழித்து தீப்பற்றியெரிகிறது எனது இருதயம்
    உருகவில்லையா செவிமடுக்கையில் உம் மனங்கள்

    நரக நதியினின்றும் மீண்டிட
    நீந்திடு விபூஷிகா!

    Share
  • ஐயப்பன் திருப்புகழ்

    சு. ரவி 

     

    god-ayyappa-wallpapers-3

    1-b

    படத்திற்கு நன்றி:

    http://www.penmai.com/forums/temples-gods-goddess/49621-a.html

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    சங்கர் சுப்ரமணியன்

    அன்புள்ள மணிமொழிக்கு

    எப்படி இருக்கிறாய்..! என்று என் இதயத்திலிருந்து எழும் மெல்லியதொரு கேள்வி குரல், என் மெளனம் கலைக்காமல் வெளிவந்து காற்றோடு உனை தேடி பயணிக்கிறது. கண்கள் இலேசான கண்ணீரில் திரையட்டு கொள்ள, என் நினைவுகள் எனைக் கேளாமல் நம்முடைய நினைவுப்புத்தகத்தின் பக்கங்களை திறக்கிறது.

    நம் முதல் சந்திப்பில் நான் எப்படியாக உன்னை உணர்ந்தேன் என்பதுதான், என்னை நானே பலமுறையாக கேட்டுக் கொள்ளும் கேள்வி… அந்த இளந்தென்றல் வீசிய மாலைப்பொழுதில், ஒரு துாரத்து சொந்தத்தின் திருமணவிழாவில், நீ எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டாய், இலேசான கேலியுடன், புத்தக புழு..! என்று . ஆச்சரியங்களுடன் நான் உன்னை பார்க்க, அடக்கமான புன்னகையுடன் ஏற்றுக்கெண்டாய். ஏதாவது பேசலாம் என்று வார்த்தைகள் தேட, மறுப்பு இல்லா புன்னகையுடன் நீ இடம் மாறிக்கொண்டாய் . யாரிடமும் பெரியதொரு வார்த்தை பரிமாற்றம் இல்லாமல், பெரும்பாலும் மெளனமாகவே…. திருமணம் முழுவதும், ஆனால் ஏதாவது காரியங்கள், யாராலோ கட்டளையிடப்பட, அதை நீயும் மாறாத புன்னகையுடன் நிறைவேற்றி கொண்டிருக்க, என் பார்வை உன்னை என்னில் முழுமையாக பதிக்க முயற்சித்து கொண்டே இருந்தது, அந்த நாள் முழுவதும்.

    இயல்பாகவும் நானாகவும் ஏற்படுத்திக் கொண்ட அடுத்தடுத்த சந்திப்புகள் நம் எண்ண அலைகளை நேர் வரிசையில் கொண்டு செல்ல, என் எண்ணங்களில் நீ பவனி வருவது அதிகமாகிக் கொண்டே போக, உன்னில் தடுமாற்றங்களை தாண்டி என்னுடைய நினைவுகள் பதிந்ததை நீ அழுத்தமாக எனக்கு வெளிப்படுத்தியதும், நான் நானற்றுப்போய் என்னுள் நீ முழுமையாக வியாபித்துக்கெண்டாய். உன் முகம், உன் நினைவு, உன் கனவு என என்னுடைய தினங்களின் அத்தனை கணங்களிலும் நீயே நிறைந்து, எப்பொழுதும் குதுாகலிக்கும் மனம், எல்லாவற்றையும் ஆழமான இரசிப்புடன் பார்க்கும் பார்வை என என்னையறியாமலே நான் முழுமையாக மாறிப்போக…!, இப்பவும் என் மனம் அந்த காலகட்டத்தின் எப்பக்கம் திறப்பினும் இதயபக்கமெல்லாம் நிறைந்து வழியும் உன் நினைவுகள்…

    மயக்கம், மயக்கமின்மை என இரண்டும் கலந்து போன நிலையில், இரவுகள் நீண்டு கொண்டே போகும் உன் நினைவுகளுடன் நித்திரையில்லாமல் படுக்கையில். இருளும் வெளுப்புமில்லாத அந்த அதிகாலை வேளையில் , உன் எண்ணங்களோடு நான் நடந்து போக, எனை கடக்கும் அத்தனை பேரையும் அடையாளங்களற்ற உருவங்களாகத் தான் என் மனம் உணரந்தது. கண்டு கொண்ட சந்தோசத்தில், ஆர்ப்பரித்து வேகத்துடன் தொடவரும் அலைகளின் கரையோரம் அமர்ந்திருந்த, என் அருகாமையில் நெருக்கமாக அமர்ந்து , தோள் சாய்ந்து நீ விடும் மூச்சு காற்றில் கலந்து வரும் உன் உயிர் , தென்றலாக இதயம் தடவி என் உயிர் தீண்டியதும். சத்தமில்லாத மௌனத்தில் இந்த உலகமே இயங்க மறந்து நின்று போக, எனைக் கேளாமல் என்னிலிருந்து பிரிந்த என்னுயிர் உன்னில் கரைந்து கானாமல் போனது. அப்படியாக….. இப்பொழுது நினைத்தாலும் என்னால் மீளமுடியாத சந்தோசத்தில் என் இதயத்தை நிறைத்து கொள்ளும், பல…! மறக்க முடியாத தருணங்கள்.

    எண்ணமும், வாழ்க்கையின் நிஜங்களும் எப்பொழுதுமே ஒரே நேர் கோட்டில் பயணிப்பதில்லை. வாழ்க்கை விளையாட்டு என்ற விதி சாஸ்திரம், எதிர்பதங்களை வைத்து சோதிக்கவே விரும்புவதாக எனக்கு எப்போழுதுமே தோன்றும். அப்படியான அந்த காலகட்டத்தில், என்னை நிலைப்படுத்தி கொள்ள நான் எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் தோல்வி முடிவு எழுதி, எனைப்பார்த்து விதி நகைத்த அதேவேளை, மன அகங்காரங்கள் என்ற மாய வலையில் வீழ்ந்த உன் குடும்பம் , உன்னை சுற்றி எழுப்பிய தடைகளை நீ எதிர்க்க முடியாமல், எதிர்த்து கூட்டி செல்வேன் என்று எதிர்பார்த்த என்னாலும் எதுவும் முடியாமல், திணறிப் போராடிய உனக்கும்… மிஞ்சியது உடல் வலிகளும் மனவலிகளும்தான்.

    வார்த்தைகள், விவாதங்கள், போராட்டங்கள், சோர்வுகள் என மாறிமாறி, நம்மை கலங்கடித்த, அத்தனை சந்தர்ப்பங்களும்  நமக்கு எதிர் நின்று, கட்டுப்பாடில்லா ஆழங்களுக்கு நம்மை தள்ளிப்போனது. மீளமுடியாமல் இருவரும் கண்ணீரும்,  அழுகையும், கடவுள்  நம்பிக்கையும் என பிடிமானத்திற்கு சிறு கொடி தேடி, தவித்து , கலைத்து போனோம். இன்னமும் அழிக்க முடியாத சாட்சியாக நினைவில் நிலைத்திருக்கிறது, அந்த கடைசி நேர சந்திப்பு…

    எப்பொழுதும் மடைதிறந்த வெள்ளம் போல் பாயும் உன் வார்த்தைகளை, என் மௌனத்தின் வாயிலாகவே இரசித்து, என் மெளனப்புன்னகையே உன் வார்த்தைகளுக்கு அர்த்தமான பதிலாக வெளிப்படுத்தும் நான், அன்று பதில்களற்ற மெளனத்தில் கரைய, நீயோ வார்த்தைகளற்ற மெளனத்தி்ல் அமர்ந்திருந்தாய் என் பக்கத்தில். கலையாத அந்த நிசப்தம் நம் உள் மனதை அசைத்து திருப்ப, கண்ணீரில் நிறைந்தன  நம் இருவருடைய கண்களும்

    வார்த்தைகள் தேடித்தேடி கலைத்தது நம் இருவரது மனமும், தாங்கமுடியாத ஒரு கணத்தில் என் கையை எடுத்து உன் கைகளுக்குள் வைத்து இறுகப்பற்றி கொள்ள, பிரபஞ்சம் தாண்டிய உலகத்தில் நாம் இருவர் மட்டும் காற்றில் பறப்பதாகத் தான் எனக்கு தோன்றியது.  விட்டு வெளிவர முடியாமல் கணங்கள் நீண்டுகொண்டே போக, நம்முடைய உலக இருத்தல் இந்த கணமோடு மடிந்து விடாதா.. என்ற ஏக்கங்கள் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது. கடினப்பட்ட மனதுடன், தளும்பிய கண்ணீருடன் வருகிறேன்.. என்று, உன் கைகளை சடெக்கென்று விடுவி்த்து, திரும்பி பார்க்கவும், தைரியமின்றி நீ ஓடிச்சென்றாய்…..

    அந்த வானம் மொத்தமாக நழுவி என் தலையில் விழுந்த மாதிரியான , தாங்கமுடியாத கனத்துடன் என் இதயம் நொறுங்கி போனது. நானும் இந்த உலகமும் வேறுவேறாக பிரிந்து, பிடித்தரமற்ற உயரத்திலிருந்து, தலைகீழாக நேர்பாதையில், வேகத்துடன் கீழ் நோக்கி பயணிப்பதாகத்தான் தோன்றியது. எப்படியாவது என்னிலிருந்து என் உயிர் நழுவாமல் தக்க வைத்து கொள்ள போராடித் தவித்த அந்த கணங்கள், என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாத, இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்து கண்களில் கண்ணீர் திரையிட்டு நான் எனை மறந்து போகும் கணங்கள்.

    ஒவ்வொறு முறையும் உன் ஞாபகங்களில் என்னைத் தேடும் பொழுதெல்லாம், என்னுள் நிகழும் மாயாஜாலங்களில் எழும் அத்தனை உணர்வுகளையும் வார்த்தைகளுக்குள் அடக்கி, அழகாக அந்த வார்த்தைகளை கோர்த்து, உன்னிடம் மடலாக சமர்ப்பிக்கவே விரும்புகிறேன். ஆனால் மணிமொழி இருவேறு துருவங்களாக மாறிப்போன நம் வாழ்க்கை பாதையில்,  நீயோ எங்கோ ஒரு தூர தேசத்தில், தேடிவரமுடியாத தொலைதூரத்தில் உயிர் வாழ, என்னால் எப்பவுமே சமர்ப்பிக்க முடியாத இந்த மடல்கள்தான், என் உயிர் வாழ்க்கையின் ஆதாரமாக, என் இதய பக்கங்களில் நிறைந்து  கிடக்கிறது.

    Share