செண்பக ஜெகதீசன்c-index

காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு

மன்னநீ ரார்க்கே யுள.

-திருக்குறள்- 527 (சுற்றந்தழால்)

 

புதுக் கவிதையில்…

 

கவளம் சோறு கிடைத்தாலும்,

கரவாதே

கரைந்தழைத்துக் கூட்டமாய்க்

கலந்து உண்ணும் காக்கைபோல்,

சுற்றம்சூழப் பகிர்ந்துண்ணும்

இனியவர்களுக்கு

இன்னும் சேரும்,

என்றும் நிலைக்கும் செல்வமே…!

 

குறும்பாவில்…

 

கூட்டத்தோடு சேர்ந்துண்ணும் காக்கையாய்ச்

சுற்றம் பேணுவார்க்குச்

சேருமே செல்வம் எல்லாம்…!

 

 மரபுக் கவிதையில்…

 

கொஞ்சமாய் உணவு கிடைத்தாலும்

கூட்டம் சேர்த்தே இனத்துடனே

கொஞ்சமாய்ப் பகிர்ந்துதான் உண்டிடுமக்

காக்கை போலச் சுற்றமுடன்

நெஞ்சம் நிறைந்திடும் அன்புடனே

நமக்குக் கிடைப்பதைப் பகிர்ந்துண்டால்,

பஞ்ச மேது மில்லாமல்

பற்பல செல்வம் சேர்ந்திடுமே…!

 

லிமரைக்கூ…

 

சுற்றம் அழைத்துச் சேர்ந்துண்ணும் காக்கை,

பெற்றதை மகிழ்வொடு பகிர்ந்துண்ணக்

கற்றவர் பெறுவரே திருமகள்தன் நோக்கை…!

 

கிராமியப் பாணியில்…

 

கத்துக்கோ கத்துக்கோ

காக்கா கிட்ட கத்துககோ,

கூட்டங் கூடி எரதிங்கத

காக்கா கிட்ட கத்துக்கோ..

 

கொஞ்சொம் எரதான் கெடச்சாலும்

கொலத்த யெல்லாங் கூப்புட்டு

கூடச் சேந்து சாப்புடுதே..

 

கத்துக்கோ கத்துக்கோ

காக்கா கிட்ட கத்துககோ,

கெடச்ச பொருள மறைக்காம

குடும்பத் தோட அனுபவிச்சா

கூட வருமே செல்வமெல்லாம்

கூடி வருமே செல்வமெல்லாம்..

 

இத

கத்துக்கோ கத்துக்கோ

காக்கா கிட்ட கத்துக்கோ…!

 

   http://www.talking-naturally.co.uk/house-crow-coming-port/  

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *