Featuredஇலக்கியம்கட்டுரைகள்

அப்பா,அம்மாவுக்கு!…

விசாலம்

அப்பா, அம்மாவுக்கு”

குழந்தைகள் பிறக்கும் போது கள்ளங் கபடமில்லாமல்தான் பிறக்கின்றன, ஒரு சூதுவாதும் தெரிவதில்லை அதன்”கலகல வென்ற” சிரிப்பில் தெய்வத்தையே காண்கிறோம். அது வளர வளர பல விதமான புதுச் சொற்கள், கற்றுக்கொள்கிறது. தாயின் ஸ்பர்சத்தை அது உணர்கிறது, தன் தந்தையைப் புரிந்து கொள்கிறது. இந்தச் சமயத்திலிருந்தே அந்த மழலைக்கு ஐம்புலன்களுக்கும் தகுந்த ஆரோக்கியமான விருந்து அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும், சிலர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சுவதற்குக்கூட சில வேண்டாத அமங்கலச் சொற்களை உபயோகிப்பார்கள். எனக்குத்தெரிந்த ஒரு பாட்டி தன் பேத்தியிடம் முறுக்கைக்காட்டுவாள்.அந்தப்பச்சை குழந்தை. ஏதோ வட்டமாகத்தெரிகிறதே என்று தாவி அதைப்பிடிக்கும்.அப்போது பாட்டி”யமகிராதகிடி நீ என்பாள்.எப்போதாவது பசி தாங்காமல் குழந்தை அழ”சரியான பிசாசு.அதன் அம்மா மாதிரி என்று தன் மாட்டுப்பெண்ணையும் சேர்த்துக்கொள்வாள்..இதே போல பல தாயார்களும் தங்கள் இயலாமையினாலும் பணவசதி இல்லாததினாலும் கணவரது தொந்தரவினாலும் தங்கள் குழந்தைகளை வசைமாரிப்பொழிவாள்.இவைகளெல்லாமே எதிர்மறை அலைகளை உண்டாக்கி அந்தச்சூழ்நிலையை மாசுப்படுத்துகிறது குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.தாய்மார்கள் குழந்தைப்பிறந்தவுடனேயே அதைக்கொஞ்ச மங்கலமான சொற்களையும் மரியாதையுடன் கூடிய சொற்றொடர்களையும் உபயோகிக்க, குழந்தையும் அதைக் கற்றுக்கொள்கிறது. குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை கிரஹிக்கும் சக்தி மிக அதிகம் எனக் குழந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பலர் குழந்தை முன்,”சனியனே, ஏன் இப்படி அழுது தொலைக்கிறே? என்றும்”எதற்கு இந்த ஒப்பாரி?” என்றும்,”மூதேவி, ஏன் இப்படி அழுது என் உயிரை வாங்கறே? என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். இதே போல், மடையா, முட்டாள், அடிப்பாவி போன்ற சொற்கள் பலமுறை கேட்க, குழந்தையின் செவியில் இவை நன்கு ஏற, அவை மனதிலும் படிந்து விடுகின்றன. நாம் பல முறைகள் நம் தவறை உண்ராமல் குழந்தையின் மேல் தவறைத் திணிக்கிறோம். குழந்தைகள் தவறு செய்வதற்க்கு நாம் தான் பொறுப்பு என்று தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அவற்றின் ஐம்புலன்களைத் தொட்டு அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். கண்ணிற்குப் பல வண்ணங்கள், வண்ணப்படங்கள், இயற்கைக் காட்சிகள் கடவுளின் படங்கள், தேசத்தலைவர்களின் படங்கள் போன்றவைகளை அடிக்கடிக் காட்ட, அவற்றிற்கு நல்ல அஸ்திவாரம் கிடைக்கிறது.சாதாரணமாக படங்களைக்காட்ட குழந்தைகள் அவ்வளவு ஆர்வம் காடடமாட்டார்கள். அதைக்காட்டி ஒரு கதையும் சேர்த்து அதை விளக்க நிச்சியம் மனதில் பதிந்துபோகும்

உம்”கண்ணா இங்கே பார் என் கையில என்ன இருக்கு தெரிமா? கரெக்ட்டா சொல்லு பார்ப்போம்” “தெரியலையே நீங்க சொல்லுங்க”

“இது ஒரு படம். நம் எல்லோருக்கும் இவர் தாத்தா ஆவார்.வட நாட்ல இவரை பாப்பூ என்பார்கள். தெரிஞ்சுதா?” “ஓ தெரிஞ்சுடுத்து காந்தித்தாத்தா சரியா அம்மா ‘

“ரொம்ப கரெக்ட். இவரப்போல் நீ வரைஞ்சு காட்டு.நீதான் நன்னா டிராயிங் வரயறயே வரைஞ்சு அப்பறம் அவரைப்பற்றி ஒரு நாலு வரிகள் எழுதி காட்டு.உனக்கு ஒரு பந்து பரிசாக கிடைக்கும்”

இது போல் பல ஆன்மீக தலைவர்களையும் விளையாட்டு வீரர்களையும் மிக எளிதாக மனதில் பதிய வைக்கலாம் ஒன்று மட்டும் தெரிய வேண்டும் நம் குழந்தைக்கு எதில் அதிக நாட்டம் இருக்கிறது என்பதைக் கண்டுப்பிடிக்க வேண்டும்.அதற்குத்தகுந்தாவாறு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

காதுகளுக்கு நல்ல கருத்து செரிந்த பாடல்கள், தெய்வபக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள், தாலாட்டு போன்ற பாடலகள் ஆகியவற்றை அடிக்கடி கேட்கும் வாய்ப்புத்தர, குழந்தைகளும் அவற்றைச் சொல்லப் பழக்கப்பட்டுவிடுகின்றன.

அடுத்தது தொடு உணர்ச்சி. இதில் தாய் எல்லா உறவினர்களிடமும் தன் குழந்தையைக் கொடுத்துப் பழக்கப்படுத்தி, குடும்பத்திற்குள் ஒரு பாசப் பிணைப்பு உண்டாக்க முயல வேண்டும். சில தாய் தன் குழந்தையை தன்மாமியாரிடம் கூட தர மாட்டாள். அதற்கு பாலோ கிளாக்ஸோவோ கொடுக்க தானே பால் புட்டியை கொதிக்கும் நீரில் போட்டு கழுவி பின் அதைக்கொடுப்பாள்.என்றாவது ஒரு நாள் தன் மாமியாரிடம் குழந்தையை விட்டுப்போகும் நிலைமை வந்தால் பால் எப்படி கொடுக்க வேண்டும் என்று லெக்சரும் அடிப்பாள் பாவம் அந்த அத்தை.தான் அந்தக்காலத்தில் ஆறு குழந்தைகள் பெற்று மணி மணியாக வளர்த்த விதத்தை எண்ணுவார்.சாதுவான அத்தையானல் வீட்டுச்சூழ்நிலை கெடாது.இதுவே மாறி இருந்தால் அவ்வளவு தான்.பிள்ளையின் பாடு திண்டாட்டம்தான்.சாண்ட விச்சாகி நசுங்கிபோவான்.எல்லாவற்றையும் பச்சைக்குழந்தையும் கவனித்துப்பார்க்கும். .உறவினர்களின் நல்ல குணத்தைப் பல தடவை சொல்லி, அவர்கள் மீது அந்தக் குழந்தைக்கு அன்பைப் பெருக்க வேண்டும். இனிமையான சொற்கள் பழக்க வேண்டும். காலையில் கடவுள் வணக்கம் குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கப்படுத்தி விட்டால் கடைசி வரை அந்த நல்ல பழக்கம் இருக்கும். ஒரு தடவை நல்ல வித்து ஊன்றி விட்டால் கடைசி வரை நல்ல விளைச்சல்தான். சில வீடுகளில் தாயின் காரணமாக வீட்டின் நிம்மதி போகும். பாட்டி அன்புடன் தன் பேத்தியைக் கூப்பிட, பேத்தி,”தத்தித் தத்தி” நடந்து வர, பாட்டி அவளை ஆசையுடன் அணைத்து மடியில் அமர்த்த, ஒரு குரல் வருகிறது,”வாடி, எனக்கு ஆபீசுக்கு நாழி ஆச்சு, உன்னைக் க்ரெச்சில் விட்டு நான் போக வேண்டும், இப்போத்தான் ரொம்பக் கரிசனமாய் உன்னக் கொஞ்சக் கூப்பிடறா உன் பாட்டி. போதாதற்க்கு ‘கொல் கொல்’லுன்னு இருமல் வேறு” மருமகள் போட்ட போடலில் பாட்டி முகம் வாட, சூழ்நிலைக் கம்பீரமாக வாக்குவாதம் கிளம்ப மனஸ்தாபத்தில் முடிகிறது அன்றைய நாள்.

குழந்தைகளுக்கு அன்பு செலுத்தக் கற்றுக்கொடுங்கள்,” அத்தையிடம் போ, கண்ணா, நல்ல அத்தை, உனக்குத் தலை எல்லாம் வாரிவிடுவாள்” என்று சொல்ல அவள் அத்தையிடம் தாவிச் செல்வாள், இதேபோல் மாமா, தாத்தா என்ற உறவுகளைப் புனிதமாக்கி நன்கு பாசப் பிணைப்பை உண்டாக்குவது ஒரு தாயின் கையில் தான் இருக்கிறது. அன்பு செலுத்துவது என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு மகளை அல்லது மகனை வளர்த்து ஆளாக்கி, பல தியாகங்கள் செய்து கடைசியில் அந்த வயதானவர்கள் எதிர்ப்பார்ப்பது அன்பு ஒன்றுதான், அதுவும் பேரக் குழந்தைகளின் பந்தம், அதன் சிறப்பே தனிதான்.

குழந்தைகள் வளர்ப்புக்குப் பெற்றோர் பல தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு எம்.டி. படித்த டாக்டர் பெண்மணி தன் குழந்தை பிறந்தவுடன் தன் கிளினிக்கை வேறு ஒரு நண்பருக்கு ஒரு ஐந்து வருடங்கள் கொடுத்துவிட்டு தான் அந்தக் குழந்தையை நன்கு வளர்த்தாள், குழந்தைக்குத் தாயின் அணைப்பு மிகவும் தேவை. பிறந்ததிலிருந்தே அது தாயின் புடவைத் தலைப்பு, அல்லது தாலிக்கொடி, சங்கிலி என்று ஏதாவது அம்மாவிடம் பிடித்துக் கொள்ளும், அப்போது தாய் சொல்லே வேதவாக்காக எடுத்துக்கொள்ளும். இந்த நல்ல சமயத்தில் உண்மை பேசுதல், பணிவுடன் பேசுதல், பிறர் சொற்களைக் கேட்டல் எதிர்த்துப் பேசாதிருத்தல் என்பது போல் கற்றுக்கொடுக்க வேண்டும் சிலர் வீட்டிலிருந்தபடியே வெளியில் யாராவது வேண்டாதவர் வந்தால்”அப்பா வீட்டில் இல்லைன்னு சொல்லுடா” என்று தன் மகனுக்குப்பொய் பேச கற்றுக்கொடுப்பார்கள் சில சமயம் பள்ளிக்கு போக நாழியாக ஹோம் வொர்க் செய்யாமல் இருக்கும் செல்ல மகன் அல்லது மகளுக்கு” செல்லமே ஏண்டா நேத்திக்கே இதை செய்யலே!சரி சரி அழாதே நான் கணக்கு போட்டுத்தரேன்”என்று குழந்தை எழுத்துப்போலவே காப்பி அடித்து ஹோம் வொர்கை முடிப்பார்கள்.நான் ஆசிரியையாக இருக்கும் போது இது போல் கையும் களவுமாக பல அம்மா அப்பாக்களைப்பிடித்திருகிறேன்

அடுத்தது காமம். குழந்தைகளுக்கு வயது வர, முன்பு அவர்களுக்குக்குளிப்பாட்டி உடை அணிய உதவும் பெற்றோர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைத் தானே தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.தவிர அம்மா அப்பாவும் தங்கள் அந்தரங்க காதலை குழந்தைகள் முன் செய்ய ஒரு தடவைக்கு நாலுதடவையாக யோசிக்க வேண்டும் எனக்குத்தெரிந்த தம்பதிகள் தங்கள் குழந்தைகள் முன்பே ஒருவர்க்கொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொள்வார்கள். குழந்தைகளும் அந்தக்காட்சியைப் பார்க்கலாமா வேண்டாமா என்று திண்டாடும். இது தில்லியில் ஒரு பிறந்த நாள் பார்ட்டியில் பார்த்தேன். அதுவும் இந்தக்கால குழந்தைகள் எல்லாவற்றிலுமே ரொம்ப வேகம்.சில அந்தரங்க விஷயங்கள் இலை மறைவு காய் மறைவாகத்த்தான் இருக்க வேண்டும்.தம்பதிகளுக்கு தனியாக படுக்கை அறை என்று இருப்பதே இதற்காகத்தான்.

அதில் படுத்தபடி விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பதோ. தட்டில் சாப்பாடோ அல்லது கொரிக்க பட்சணமோ வைத்துக்கொள்ள படுக்கை அறை இல்லை.

பெற்றோர்கள் இப்படிச்செய்ய குழந்தைகளும் தங்கள் அறைகளை சாப்பாடு,கணினி. படிப்பு. விளையாட்டு என்று எல்லாவற்றுக்கும் உபயோகப்படுத்துக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் அல்லது உறவினர்களுடன் பேசி அளவளாக நேரம் கிடைப்பதில்லை.. தவிர பெற்றோர்களும் இரவு சாப்பிடும் நேரமும் லீவு நாட்களில் காலை மாலை சாப்பிடும் நேரமும் ஒரு குறிப்பிட்ட நேரமாக்கி அதில் அப்போது குழந்தைகளுக்கு சாப்பிடும் முன் அந்த அன்னத்தை நமக்கு வழங்கும் இறைவனை ஒரு நிமிடம் எண்ணி நன்றியைத்தெரிவித்து உண்ண கற்றுக்கொடுக்க வேண்டும்.இதைக்கிருஸ்துவர்கள் செய்வதைக் கண்டிருக்கிறேன். குடும்ப நபர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மிகவும் அனுபவித்து சாப்பிடவேண்டும்.

இதைப்போல் பல சொல்லிக்கொடுக்க குழந்தைகளுக்கு, பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்து விடும். உதரணமாக வீர சிவாஜியின் தாயை எடுத்துக்கொள்ளாலாம்.

அன்பு என்ற தோணியில் குழந்தைகளை வைத்து, தியாகம், பொறுப்புணர்ச்சி ஆகியவற்றுடனான துடுப்பால் ஒட்ட சூறாவளி வந்தாலும் தாண்டி நம் வாழ்க்கையில் அமைதியை அடையலாம், குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்..

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  குழந்தை வளர்ப்பு பற்றிய ஒரு அருமையான ஆராய்ச்சிக்கட்டுரை –
  திருமதி விசாலம் அவர்கள் இதை ” Thesis for a doctrate” போல 
  ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள் – எல்லா பெற்றோர்களும் 
  அவசியம் படிக்க வேண்டியவை !
  திருமதி விசாலம் அவர்களுக்கும் , ‘வல்லமை’ இதழுக்கும் நன்றி !

 2. Avatar

  குழந்தைகளை வளர்க்கும்போது பெற்றோர் முக்கியமாய் கவனிக்கவேண்டியவற்றையும் கற்றுத்தரவேண்டியவற்றையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். முக்கியமாய்  அன்பு. குழந்தைகள் எல்லோரிடத்திலும் அன்பு பாராட்ட வீட்டிலிருந்தே பழகவேண்டும். நல்லதொரு ஆய்வுக்கட்டுரை. பாராட்டுகள் மேடம். 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க