Month: August 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    –கிரேசி மோகன்

    kesav

    ‘’சூரி நாகம்மாள் ப்ளஸ் கிருஷ்ணா’’
    ————————————————

     

    சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி!
     வந்தேகிச் செல்லும் விளையாடிஉன்தேகம்
     பொய்யென்(று) உணர்ந்து புகலடை யாதவன்கால்
     மெய்யுணர் மானுட மாடு’’

     

     

    Share
  • ”குமார சம்பவம்’’

    –கிரேசி மோகன் 

    நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை
    தேகநீர் ராஜனுக்குத் தோழனும், – போகரெக்கை
    வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன்
    மேனாள் வயிற்று மகன்…(19)

    தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்த்
    துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) – அக்கினியில்
    முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள்
    அன்பு இமவான் அகம்….(20)

    உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும்
    நற்சாதி செல்வ நிகழ்வேபோல் – அச்சாக
    மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி
    சங்கரியாய் வந்தாள் சதி….(அல்லது)
    திங்களெனத் தோன்றினாள்ச தி….(21)

    தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய்
    ஒளிந்த அமரர் ஒலியாய் – மலர்ந்தபூ
    பார்மீது மாரியாய்ப் பல்லுயிர்க்கும் இன்பமாம்
    பார்வதி தோன்றிய போது…(22)

    அதிருமிடிச் சத்தம் விதூரமலை மொத்தம்
    எதிரொலிக்கப் பூமிவாய் ஏற்று – உதிரவிடும்
    ரத்தின ஜோதியாய்ப் பெத்தவளும் புத்திரியும்
    புத்தொளிகொண்(டு) உற்றார் பொலிவு…(23)

    சுக்கில பட்ச சசிகலைகள் போல்தினமும்
    இக்குலம் வந்த இமவான்பெண் – சொக்கவைக்கும்
    அங்கங் களடைந்து அக்கலைக்(கு) ஈடாக
    பொங்கும் அழகுற்றாள் பூத்து…(24)

    உற்றார் அவளை உவந்து அழைத்தனர்
    பெற்றோர் குலப்பெயர் பார்வதியாய் -மற்றோர்
    சமயத்தில் தாயார் சதியைத் தடுத்தாள்
    உமையே தவமேன் உரைத்து….(25)….

    உசந்தவகைப் பூக்கள் அசைந்தும்மாம் பூவை
    வசந்தருது வண்டு விரும்பும் -அசங்காது
    பார்வதியைய் பார்த்திமவான் பூரிப்பான், தம்மக்கள்
    யார்வதை உற்றுமிமை யான்….(26)….

    விளக்கழகு தீபவொளி, வானழகு கங்கா
    இலக்கணப் பேச்சழகு இன்சொல் -மலைக்கரசன்
    பெற்றமகள் பார்வதியால் பெற்றான் பரிசுத்தம்
    வற்றா வளமையுடன் வாக்கு….(27)….

    ஓயாது தோழியரோ(டு) ஓடி விளையாடி
    காயாத கங்கைக் கரைமணலில் -சேயாக
    மேடைகள் செய்தும் மலர்பந்து வீசியும்
    நாடகம் ஆடினாள் நன்கு….(or)
    வேடமிட்டாள் வையவாழ் வொத்து….(28)….

    போதுசரத்தில் கங்கையைப் போயடையும் அன்னம்போல்
    ஜோதிர் லதையொளிரும் ஜாமம்போல் -ஓதிய
    முற்பிறவி கற்றதெலாம் பார்வதியைப் பற்றியதாம்
    விற்பன்னன் காளிதாசன் வாக்கு….(29)….

    மாதவள் தோற்றம் மனதை மயக்கிய
    போதுமது அல்லவே புன்மது -காதலான்
    வாளிக்கும் மேலாய் வலிந்திடாது பார்வதி
    வாலிபத்தைக் கொண்டாள் வளர்ந்து….(30)….

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்- 40

    க. பாலசுப்பிரமணியன்

    சிந்தனையின் வழித்தடங்கள்

    education-1-1-1

    கற்றல்-புரிதலை ஒரு தனி மனிதனின் சூழ்நிலைகளும் முந்தய அறிவும் அனுபவங்களும் அதிகமாக பாதிக்கின்றன. ஆகவே ஒரு கற்றலுக்கான நிகழ்வு ஏற்படும் பொழுது அது அந்தத் தனி மாணவனின் உணர்வுகளை பெரிதும் மாற்றக்கூடும். கற்றல் ஒரு உணர்வு சார்ந்த செயலாக இருப்பதாலும் முந்திய அனுபவங்களோடு இணைந்து செயல் படுவதாலும், படிப்பித்தலுக்கும் கற்றலுக்கு இடையே அதிகமான இடைவெளி இருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    உதாரணமாக, தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு மாணவனிடம் “காஞ்சீபுரம் ” என்ற வார்த்தையைச் சொல்லும்பொழுது அவனுக்கு “பட்டுப் புடவைகளை” பற்றியோ அல்லது அங்குள்ள “கோவில்களை ” பற்றிய எண்ணம் உடன் வர வாய்ப்புள்ளது. ஆனால் இதே வார்த்தையை வட மாநிலங்களில் உள்ள மாணவர்களிடம் உபயோகிக்கும் பொழுது அத்தகைய கருத்துக்கள் வர வாய்ப்பில்லை. அதே போல் மதுபானி என்ற சொல்லை உபயோகப்படுத்தும் பொழுது பீகாரில் உள்ள மாணவனுக்கு அதன் பொருள் தெரிய அதிகம் வாய்ப்பிருக்கின்றது.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை இராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியில் உள்ள மாணவர்களைவிடம் “மழையில் ஒரு நாள் ” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் அவர்களால் கேரளத்து மாணவர்களைப் போல் தெளிவாகச் சிறப்பாக எழுத முடியாது. ஏனெனில், அனுபவங்கள் வேறு மாதிரி !!

    கற்றலில் கருத்துக்களை (Perceptions) உருவாக்குவதில் கீழ்கண்டவைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன.

    1. முந்தைய அனுபவங்கள் /உணர்வுகள். (Previous experiences/feelings)
    2. பூகோளச் சூழ்நிலைகள் (geographical context)
    3. பண்பாட்டுச் சூழ்நிலைகள் (cultural context)
    4. சமூகச் சூழ்நிலைகள் (social context)
    5. தனிமனிதனின் ஆர்வங்கள்/ ஈடுபாடுகள். ( individual’s aptitude/ interests)

    இவற்றின் தாக்கத்தால் எந்த விஷயத்தைப் பற்றி கற்கவேண்டும், எந்த அளவு கற்க வேண்டும், கற்றலின் திறன் எவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் மூளை அறிந்து அதற்க்கேற்ப முடிவுகளை எடுக்கின்றது. ஆகவே ஒரு கூட்டத்தில் ஒரே கருத்தைப் பற்றி அனைவரும் ஒரே மாதிரியாக சிந்திக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது, முடிவதும் இல்லை.

    ஒரு பொருளைப் பற்றி எத்தனை வகையாக நம் மூளை சிந்திக்க முடியும் என்று டோனி பர்சான் (Tony Burzon ) என்ற ஒரு நிபுணர் ஆராய்ச்சியின் மூலம் தோராயாமாக கணக்கெடுத்தபொழுது அது நம்முடைய கற்பனைக்கும் கணக்குத்திறனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. “மூளையின் சிந்தனை வழிகள் ( neural pathways ) – ஒன்றுக்குப் பிறகு 10.5 மில்லியன் கிலோ மீட்டருக்கு பூஜ்யங்கள் எழுதப்பட்டால் – அந்த அளவுக்கு சிந்தனை வழிகள் இருக்கின்றன.”
    இந்த நிலையில் ஒரு வகுப்பில் கற்றலில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களின் சிந்தனை எந்த வழியில் இருக்கும் என்பது நினைக்கவே ஆச்சரியமாக இருக்கின்றது !

    ஆகவே கற்றலும் புரிதலும் மேம்பட கற்கும் கருத்துக்கள் அவர்களுடைய அனுபவங்களுக்கும் வாழும் சூழல்களுக்கும் நேரடியாகத் தொடர்புடையனவாக இருத்தல் அவசியம். இந்தக் கருத்தை வலியுறுத்தும் அறிஞர் அரபிந்தோ “LEARNING ALWAYS HAPPENS FROM NEAR TO FAR ” – கற்றல் எப்பொழுதும் அருகிலிருந்து வெளிநோக்கிச் செல்லுகின்றது. என்று அழகாக எடுத்துரைத்துள்ளார். உதாரணமாக மதுரையில் கற்பவனுக்கு வைகையும் தஞ்சையில் கற்பவனுக்கு காவேரியும் முன்னுதாரணமாக இருக்கலாமேயன்றி கங்கையும் நர்மதையும் நல்லுதாரணமாக அமைய வாய்ப்புக்கள் மிகக் குறைவு.

    மூளையைப் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் பொதுவாகக் கூறும் கருத்து “மூளை கற்றலுக்கு எப்பொழுதும் புதியதையும் சவால்களையும் தேடுகின்றது. சாதாரணமாக இருக்கும் பொருள்களும் கருத்துக்களும் அதற்க்கு அதிக ஆர்வத்தைத் தருவதில்லை. ஆகவே கற்கும் நேரத்தில் அதன் தேடல் புதிய சவால்களை நோக்கியே செல்கின்றது. ஆனால், பெற்றோர்களும், ஆசிரியர்களும் அந்த மாதிரி கருத்துக்களை மாணவர்களால் கற்றுக்கொள்ள முடியுமோ என்ற தன்னச்சத்தில் திறன்களைத் தவறாக மதிப்பீடு செய்கின்றனர். வல்லுனர்களின் ஆராய்ச்சிப் படி மூளை எவ்வளவுக்கெவ்வளவு சவால்களை சந்திக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு கூர்மையாகவும் திறனுள்ளதாகவும் வளர்கின்றது. . எனவே, இளம் வயதிலும் கற்கும் காலங்களும் மாணவர்களுக்கு புதிய நோக்கங்களையும் புதிய வழிகளில் சிந்தனையைத்தூண்டும் வகையிலும் வினாக்களை எழுப்புதலும், திறன்களை சோதித்தலும் அவசியம்.

    (தொடரும்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    keshav

    ‘’சூரி நாகம்மாள் ப்ளஸ் கிருஷ்ணா’’….
    ——————————————————————

    ”சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி!
    வந்தேகிச் செல்லும் விளையாடி -உன்தேகம்
    பொய்யென்(று) உணர்ந்து புகலடை யாதவன்கால்
    மெய்யுணர் மானுட மாடு’’….கிரேசி மோகன்….

    Share
  • ”குமார சம்பவம்’’

    கிரேசி மோகன்

     

    ”குமார சம்பவம்’’
    —————————————–

    நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை
    தேகநீர் ராஜனுக்குத் தோழனும், -போகரெக்கை
    வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன்
    மேனாள் வயிற்று மகன்….(19)

    தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்
    துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) -அக்கினியில்
    முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள்
    அன்பு இமவான் அகம்….(20)

    உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும்
    நற்சாதி செல்வ நிகழ்வேபோல் -அச்சாக
    மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி
    சங்கரியாய் வந்தாள் சதி….(OR)
    திங்களெனத் தோன்றினாள்ச தி….(21)

    தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய்
    ஒளிந்த அமரர் ஒலியாய் -மலர்ந்தபூ
    பார்மீது மாரியாய் பல்லுயிர்க்கும் இன்பமாம்
    பார்வதி தோன்றிய போது….(22)

    அதிருமிடிச் சத்தம் விதூரமலை மொத்தம்
    எதிரொலிக்க பூமிவாய் ஏற்று -உதிரவிடும்
    ரத்தின ஜோதியாய் பெத்தவளும் புத்திரியும்
    புத்தொளிகொண்(டு) உற்றார் பொலிவு….(23)

    சுக்கில பட்ச சசிகலைகள் போல்தினமும்
    இக்குலம் வந்த இமவான்பெண் -சொக்கவைக்கும்
    அங்கங் களடைந்து அக்கலைக்(கு) ஈடாக
    பொங்கும் அழகுற்றாள் பூத்து….(24)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    -கிரேசி மோகன்

     

    kesav

     

    ’’குட்டிப் பசுங்கன்றுக் குட்டியிடம், கோகுலக்
     குட்டனவன்  ராதையைக் காண்கிறான்: -சுட்டிப்
     பயலவர்க்கு  எல்லாமே,  பைங்கிளி  ராதா:
     வயலிவர்   ராதைநீர்  வீச்சு’.’

     

     

    Share
  • சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    independence_day1

    அனுபவம் தவிர வேறு சிறந்த கல்வியேதுமில்லை – சத்திய சோதனை 1948

    பல்கலைப் பட்டங்களுக்கு மயங்கிவிடும் போக்கு காந்தியின் காலத்திலும் இருந்திருக்கிறது. பட்டங்களுக்கு மதிப்பு இருப்பது உண்மைதான் என்றாலும் அனுபவக்கல்வியைக் காட்டிலும் உன்னதமான ஆசிரியர் எவரும் இருக்க முடியாது . அறிவார்ந்த செயலாற்றலே தனிநபர் திறமையை வளர்க்கும். அந்த வகையில் வாழ்க்கை அனுபவமே பாடமாக வேண்டும் என்கிறார் மகாத்மா காந்தி. அதாவது ஏட்டுக் கல்விக்கு காந்தி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வழக்குகளை உருவாக்கி அதனை வளர்த்து, அதன் மூலம் வாழ்பவர்களே வழக்கறிஞர்கள். இவை தவிர நீதியையும், சமரசத்தையும் வளர்ப்பது அவர்களின் குறிக்கோள் அல்ல என்பதை அவர் தம் வழக்கறிஞர் பணி மூலம் அறிந்திருந்தார். காரணம் வழக்கறிஞர் தொழிலின் பலம் மற்றும் பலவீனங்களை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். வன்முறையற்ற அகிம்சை வழியில் அரசின் தவறான சட்ட திட்டங்களை எதிர்த்து நிற்கும் துணிவை மக்களுக்கு ஊட்டுவது மூலமாக அரசையும், சமூகத்தையும் மாற்றிவிட முடியும் என்றே நம்பினார் மகாத்மா. கல்வி எனும் எல்லைகளைக் கடந்த அனுபவம் மட்டுமே எப்படிப்பட்ட பிரச்சனையாக இருப்பினும் அதை எதிர்கொள்ளும் வல்லமையைத் தருகிறது என்கிறார். கல்வித் திறன் மட்டும் கொண்டு ஒருவர் நிர்வாக வெற்றியைப் பெறுவது சாத்தியமன்று. ஆம், அந்தந்த சூழலுக்கு ஏற்ப காரியங்களை திட்டமிடவும், செயல்படுத்தவும் அனுபவம் தரும் ஆற்றலைத் தவிர வேறு எந்த பாடத்திட்டமும் தந்துவிடப்போவதில்லை. இதையுணர்ந்து அதன் போக்கில் செயலாற்றுபவரே நிர்வாகத்தில் வெற்றி காண்கிறார். சிறந்த முடிவுகள் என்பது தகுதி வாய்ந்த அனுபவத்தாலேயே எடுக்கப்படுகிறது. அப்படி மகாத்மா காந்தியடிகள் எடுத்த சில முடிவுகளால்தான் நம் நாடு சுதந்திரம் பெற முடிந்தது. இல்லாவிட்டால் நாம் இன்றும் அடிமைத்தளையில் சிக்குண்டுக் கிடந்திருப்போம்.

    images (14)
    இன்றைய இளந்தலைமுறையினரின் எத்தனை விழுக்காடு இளைஞர்கள் இன்று நாம் இருக்கும் இந்த சுதந்திர நிலையை அடைய எத்தனை நல்லான்மாக்கள் தம் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள், அவர்கள் எத்துணை இன்னல்களை எதிர்கொண்டார்கள் என்பதெல்லாம் அறிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. நம் இந்தியத் திருநாட்டின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட அந்த உன்னத தியாகச்செம்மல்களின் போராட்டங்கள் குறித்தும், நம்முடைய மேன்மையான பாரம்பரியம் குறித்தும் அவர்கள் அறிந்திருக்கவேண்டியதும் அவசியம். ஆண்கள் மட்டுமன்றி பல பெண்களுகளும் இந்த சுதந்திர வேள்வியில் ஆகுதியாக தம் இன்னுயிரை ஈந்துள்ளனர். நம்மில் பலர் அவர்களைப்பற்றி அறியாமலே இருக்கிறோம். அதில் ஒருவர் பிரேமா காண்டக் என்பவர். இவருடைய காலம் 1905 – 1985.

    1930 – 32 இல் தண்டி உப்பு சத்தியாகிரகம் நடந்த காலகட்டம். பிரேமா இதில் தீவிரமாக ஈடுபட்டு இரு முறை சிறை பிடிக்கப்பட்டார். விடுதலையான பின்பு அகமதாபாத்திலிருந்து பூனாவிற்குக் குடிபெயர்ந்து அங்கு மகாத்மா காந்தியுடன் இணைந்து அவர்தம் ஆக்கப்பூர்வமான பணிகளில் தம்மையும் ஈடுபடுத்திக்கொண்டார்.

    mk_ghandhi_20140203பிரேமா காண்டக் தேசபக்தி மிக்க, சுதந்திரப்போராட்ட தியாகியும், பேரறிஞரும் ஆவார். 1905 ஆம் ஆண்டில் கன்வார் எனும் இடத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். 1928 ஆம் ஆண்டில் மும்பை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டப்படிப்பை படித்து முடித்தார். மாணவர் இயக்கத்தில் சேர்ந்து சைமன் கமிசனுக்கு எதிராக பொது ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றார். மும்பை பிரசிடென்சி இளைஞர் அணியின் உயர்மட்டக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்களில் போராளி இந்து மதமும், கம்யூனிசம் ஆகிய இரண்டு சித்தாந்தங்களும் மாணவர்களைக் கவரக்கூடியவைகளாக இருந்தன. இவரை கம்யூனிசத்தில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, பிரேமா கம்யூனிச இலக்கியமும் கற்றார். ஆனாலும் மகாத்மா காந்தியடிகளின் சித்தாந்தங்கள் மீது ஈடுபாடு ஏற்பட அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்தார். காந்தியடிகள் அவரை சபர்மதி ஆசிரம பொறுப்பாளராக நியமிக்க, அவரும் 1929 முதல் 1933 வரை அப்பணியைச் சிறப்பாக நிறைவேற்றினார்.

    அவருடைய முக்கியமான செயல்பாடுகள், சுதேசி இயக்கம், காதி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் பெண் விடுதலையும், பெண்கள் முன்னேற்றம் குறித்ததாகவும் இருந்தது. காந்தியடிகளின் சத்தியாகிரக போராட்டத்தின் ஒரு முக்கியமான பங்கேற்பாளராக இருந்தார் பிரேமா. நான்கு முறை கைது செய்யப்பட்டு, ஒவ்வொரு முறையும் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில காலம் இந்திய தேசிய காங்கிரசில் குறிப்பாக காங்கிரசு சேவா தளத்தில் இணைந்திருந்தார்.

    1942 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றதால் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்தபோது இளம் பெண்கள் அமைதியான முறையில் போராடுவதைவிட இராணுவ முறையில் போரிடுவதையே அதிகம் விரும்பியதை அறிந்தார். இந்த விசயம் அவரை மிகவும் சிந்திக்கச் செய்தது. விடுதலையான பின்பு சாசுவதியில் சங்கர்ராவ் தியோவின் ஆசிரமத்தில் சேர்ந்துகொண்டார். 1942 இல் காங்கிரசு கட்சி தடை செய்யப்பட்டது. பெண்கள் பங்கேற்கும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் திறக்கப்பட்டன. 1952 வரை இந்த கூட்டமைப்பில் ஈடுபட்டிருந்தார்.

    ஆனாலும் இந்த செயல்பாடுகள் அவர் மன அமைதிக்கு பங்கம் விளைவித்ததால், தனக்கு ஏற்பட்ட மாற்றங்களுக்காக வருத்தியதோடு, அதிலிருந்து விடுபட்டு மன அமைதிக்காக இமாலய மலையில் தனிமையில் சில காலம் கழித்தார். அதன்பின் அவர் பூனாவிற்குத் திரும்பிவந்து அங்கு சசுவாத்தில் கஸ்தூரிபா ஆசிரமத்தின் பொறுப்பேற்றுக் கொண்டார். மது ஒழிப்பு இயக்கம் ஆரம்பித்து, வருடத்தில் நான்கு மாதங்கள் வறண்ட மாதங்கள் என்று மது இல்லாத மாதங்களாக அறிவிப்பதிலும் வெற்றி கண்டார்.

    பின் தங்கிய கிராமங்களில் உள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் தங்கள் சுய கால்களில் நிற்பதற்கான அத்துணை முயற்சிகளும் செய்து அதில் வெற்றியும் கண்டார். மகாராஷ்டிர மாநிலத்தின் குறிப்பிட்ட ஒரு சில இலக்கியவாதிகளில் ஒருவராகவும் இருந்தார் பிரேமா. காந்தியச் சிந்தனைகள் மற்றும் நம் வேத வசனங்கள் குறித்த பல நூல்களும் இயற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

    வாழ்க பாரத மணித்திருநாடு!

    வந்தே மாதரம்!

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (13)

    இசைக்கவி ரமணன்

    முடிவுரை

    kural-4-1-1

    ப்படி, மனதால் நினைத்தல், வாயாற் புகழ்தல், உடம்பால் வணங்குதல் மூன்றையும் சேர்த்துக் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வைத்தார். இறைவன், இறை, தெய்வம் என்னும் சொற்களைப் பயன்படுத்தும் வள்ளுவரின் குறளில் கடவுள் என்னும் சொல் இல்லை. மன்னனும் இறை, இறைவன் போன்ற சொற்களால் குறிக்கப்படுகிறான். (உ-ம் இறைமாட்சி) `விஷ்ணுவின் அம்சம் உடையவனே மன்னன், ரிஷியின் அம்சம் உடையவனே கவிஞன்,` என்பது நமது பண்டைய கூற்று. அரசன் என்பவன், இறைவனின் பிரதிநிதியாகவே பிற நாடுகளிலும் கருதப்பட்டான். ஆனால், இங்கே, முதல் அதிகாரத்தில் அவர் மன்னனைக் குறிக்கவில்லை, கடவுளைத்தான் சொல்கிறார். எனவேதானோ, இது, கடவுள் வாழ்த்து என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் போன்ற நூல்களிலும் நூலுக்கு முகமனாகக் கடவுள் வாழ்த்து உண்டு. இங்கே. நூலின் ஓர் அங்கமாகக் கடவுள் வாழ்த்து அமைந்திருக்கிறது. இதைப் பனுவலாகக் கொள்ளலாம். ஏனெனில், நூல் முழுதும் அவர் அறிவுறுத்த விழைவது கடவுளைப் பணிவதே.

    `கடவுள்` என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்பதால் அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், அல்லது, கடவுளைப் பற்றிச் சொல்லவில்லை எனலாகாது. `தமிழ்` என்ற சொல் குறளில் ஓரிடத்திலும் இல்லை. `தாய்` என்றார், `அம்மா` என்றார், `தந்தை` என்றவர் `அப்பா` என்று சொல்லவில்லை. இவற்றை வைத்து ஏதேனும் முடிவுக்கு வரவேண்டுமா என்ன?

    மேலும், நூலின் வேறுபல இடங்களிலும் அவர் கடவுளைக் குறிப்பிடுகிறார்:

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

    இறையென்று வைக்கப் படும் (39:இறைமாட்சி:388) என்னும்போது இறை என்ற சொல்லால் கடவுளைக் குறிக்கிறார்.

    தென்புலத்தார் தெய்வம்..(43) தெய்வம் தொழாஅள் (55) தெய்வத்தான் ஆகாதெனினும் (619) தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் (1023) என்ற குறள்களில் கடவுளை தெய்வம் என்கிறார். பல இடங்களில், தெய்வம் என்பது விதி என்னும் பொருளிலும் வருகிறது. தென்புலத்தார் (43) என்று தொடங்கும் குறள், தீயினாற் சுட்டபுண்.. குறளைப் போல மஹாபாரத வாசகத்தின் மொழிபெயர்ப்பு போலவே தெரிகிறது. யக்‌ஷ ப்ரச்னத்தில், யக்‌ஷன், `எவன் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும், உலகத்தால் துதிக்கப்பட்டாலும், வெறுமே சுவாசிக்கும் ஜீவனாகக் கருதப்படுகிறான்?` என்று கேட்கிறான். அதற்கு தருமர், `தேவ, அதிதி, ப்ருத்யானாம், பித்ருனாம், ஆத்மன: ச ய: ந நிர்வபதி,` என்கிறார். அதாவது, `எவன் தேவர்கள், விருந்தினர்கள், தன்னைச் சார்ந்தவர்கள், பித்ருக்கள், ஆன்மா இவற்றுக்குச் சேவை செய்யவில்லையோ, அவன் வெறுமே சுவாசிக்கும் ஜீவி,` என்று பதில் கூறுகிறார்.  மேலும்,

    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

    எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்

    என்று புறநானூற்றுப் பாடல் (9) பேசுகிறது.  தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுத்தல் என்பது தொன்மையான தமிழ் மரபே என்பது இதனாலும் உறுதியாகிறது.

    எனவே, தென்புலத்தார் என்பது பித்ருக்களைக் குறிக்கவில்லை என்ற வாதம் சரியில்லை.

    செம்பொருள் காண்ப தறிவு (358) மெய்ப்பொருள் காண்பதறிவு (356) தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் (249), கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டவர்தான் பிறவாத பெருநிலையை எய்துவர் என்று, பொருள், செம்பொருள், மெய்ப்பொருள் போன்ற சொற்களின் மூலமும் அவர் கடவுளையே சுட்டுகிறார்.

    உள்ளது (357) என்றும் கடவுளையே என்றும் உள்ளவன் என்கிறார். உள்ளது நாற்பது என்று ரமண மகரிஷி அருளியதை நினைவில் கொள்க. வேண்டுதல் வேண்டாமை இலானுக்கு விளக்கம்போல் அமைந்திருக்கும் பற்றற்றான் (350) என்னும் சொல்லாலும் கடவுளையே சுட்டுகின்றார். சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் (359) என்னும் குறளில் எவ்வுயிர்க்கும் நிலையான சால்பு என்று கடவுளைத்தான் சொல்கிறார். வகுத்தான் (377) என்னுங்கால் இன்ப துன்பங்களை வகுத்த கடவுளைத்தான் பேசுகிறார். ஒருபடி மேலே சென்று, மற்றவர் வறுமையைத் தாங்க மாட்டாது பரந்து கெடுக உலகியற்றியான் (1062) என்றும் கடவுளைச் சாடுகிறார். பாரதியின், `தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்,` என்னும் கர்ஜனை இந்தக் குறளின் எதிரொலியே.

    மேலும், அப்படிப்பட்ட கடவுளைப் பணிவதால் நமக்கு என்ன கிடைக்கும் என்று பொருள்சார்ந்த பட்டியலிடாமல், நாம் என்ன ஆவோம் என்பதையே சொல்லத் தலைப்படுகிறார். இறைவனைப் பணிவது, பிறவித் துன்பத்திலிருந்து நீங்குவதற்காகவே என்பதை வலியுறுத்துகிறார்:

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (10) மற்றீண்டு வாரா நெறி (356) பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (357) பிறப்பென்னும் பேதைமை நீங்க (358) என்கிறார். பிறப்பு, அதனால் இறப்பு இவற்றுக்குக் காரணமான பற்று அறுபடுவது அவனைப் பற்றினால் மட்டுமே (350) என்பார்.

    இவ்விதம், பல்வேறு இடங்களில் அவர், கடவுளையும், அவனைப் பணிய வேண்டிய அவசியத்தையும், அந்தப் பணிதலால் நேரும் அறுதி விளைவையும் எடுத்துச் சொல்கிறார் – தாயனைய கருணையுடன், தந்தையின் கண்டிப்புடன், தோழனின் வாஞ்சையுடன்.

    இது மட்டுமல்லாமல் இந்திரன் போன்ற தேவர்களைக் குறிப்பிடுகிறார் : இந்திரனே சாலும் கரி (25) வேந்தனும் வேந்து கெடும் (899) என்பார். `வேந்தன் மேய தீம்புனல் உலகமும்..` என்னும் தொல்காப்பியம் (அகத்திணை, 5) வேந்தன் என்னும் சொல்லால் இந்திரனைக் குறிக்கும். (சாலும் கரி என்றால், போதுமான பிரத்யக்ஷமான சாட்சி)

    பெண்ணின் மெல்லிய தோள்களில் தூங்கும் இனிமைக்கு, திருமால் வாழும் வைகுண்டமும் நிகரோ என்று தாமரைக் கண்ணான் உலகு (1103) என்கிறார்.

    அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிந்து ஆங்கே திரு (179) வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு (519) இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு (920) என்னும் இடங்களில் இலக்குமியைத்தான் சொல்கிறார். அவளையேதான், அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்தோம்புவான் இல் (84) அவ்வித்து அழுக்காறு உடையவனைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும் (169) என்னும் இடங்களில் பேசுகிறார். அவளையேதான் மடியிலான் தாளுளாள் தாமரையினாள் (617) என்பார். அவளுக்கு நேர்மாறான மூத்தவளான மூதேவியைத்தான் தவ்வையைக் காட்டிவிடும் (169) மடியுளாள் மாமுகடி (617) அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும் முகடியால் மூடப்பட்டார் (936) என்று காட்டுகிறார். அதுபோல, நிலமென்னும் நல்லாள் (1040) என்று பூமி தேவியைச் சொல்கிறார்.

    காமத்துப் பாலைப் பாடியவர் மன்மதனைச் சொல்லாமல் விடுவாரா? பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகுவான் (1197) என்று அங்கே மன்மதனைச் சொல்கிறார்.

    குறளின் குறிக்கோளே அறத்தை வலியுறுத்துதல்தான். அறம்தான் இந்த நூலின் கதாநாயகன். அறம் என்பது நல்வினை, புண்ணியம். மறம் என்பது, அறமல்லாதது, தீவினை, பாவம், பொருளல்லாதது. எனவே, எல்லோரையும் ஒரேவிதமாக நோக்கி, விருப்பு வெறுப்பின்றி, செயல்களுக்கான விளைவுகளை இம்மியும் பிசகாமல் வழங்கும் அறத்தைக் கடவுளாகக் காட்டுகிறார். வடமொழியில், இந்த அறம் என்னும் சக்தி, மூன்று விதமாகச் செயல்படுவதைக் குறிப்பார்கள்:

    1. ம்ருத்யு : உயிரை உடலிலிருந்து எடுத்துச் செல்லும் சக்தி. இதைக் கூற்றுவன் எனலாம். ஏனெனில், உடலிலிருந்து உயிரைக் கூறு செய்பவன் கூற்றுவன் என்பது விளக்கம். கூறு என்றால் பங்கு, பிரிவு, பாதி, அம்சம், வகை, கூறிட்ட பொருள் என்றெல்லாம் பொருள்படும்
    2. காலன் : உடம்பில் உயிர் நிலவும் காலத்தை, அதாவது ஆயுளை நிர்வகிக்கும் சக்தி
    3. எமன் : இவனே தர்மராஜன் எனப்படுகிறான். இவனே இருவினைப் பயனை, உயிர்களுக்கு, உரிய விதத்தில், உரிய காலத்தில் சேர்ப்பிப்பவன்

    இந்த விளக்கத்தை மனத்தில் கொண்டு, திருவள்ளுவர் அறக்கடவுளைப் பற்றியும், கூற்றுவனைப் பற்றிச் சொல்வதையும் கூர்ந்து நோக்குவது சுவாரசியமானது.

    ன்பிலதனை வெயில்போலக் காயுமே

    அன்பிலதனை அறம் (77)

    கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (130)

    மனத்தில் சினம் உண்டாகாமல் தடுத்துக் கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கம் உடையவனாக இருப்பவனிடம், அறக்கடவுள் சென்றடையும் சமயத்தை எதிர் பார்த்திருக்கும்.

    மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின்

    அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (204)

    இவற்றில், அறக்கடவுளின் கடுமையை, சமாதானமற்ற கூர்ந்த பார்வையை, பிழைசெய்வோரை தண்டிக்கும் கண்டிப்பைச் சொல்கிறார்.

    கூற்றம் குதித்தலும் கைகூடும் (269) கொல்லாமை மேற்கொண்டொழுகுவான் வாழ்நாள் மீது செல்லாது உயிருண்ணுங் கூற்று (326) கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை (765) கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் (894) உப்பிற்கும் காடிக்கும் கூற்று (1050) என்கிறார். சுருங்கச் சொன்னால்,

    1. தவவலிமையால் கூற்றுவனை வெல்லக் கூடும்
    2. கொல்லாமை விரதம் பூண்டவன் அற்ப ஆயுளில் இறப்பதில்லை, துர்மரணம் அவனுக்கில்லை
    3. படைவீரம் என்பது கூற்றுவனே எதிர்நின்றாலும் தீரத்துடன் போரிடுவது
    4. ஆற்றலுள்ள நல்லோருக்குத் தீங்கிழைத்தல், கூற்றுவனைக் கைதட்டிக் கூப்பிடுவதற்கு நிகர்
    5. பொருளே இல்லாத போதும் மனதில் துறவு மனப்பான்மை வரவில்லையென்றால், அவன் அண்டை வீடுகளிலுள்ள பொருட்களுக்குக் கூற்றுவனாவான்

    என்று பலவிதமாகக் கூற்றுவனைக் குறிப்பிடுகிறார்.

    கூற்றுவனின் கொடுமையை அவர் காமத்துப் பாலிலும் காட்டுவது அற்புதமான உத்தி:

    பண்டறியேன் கூற்றென்பதனை; இனியறிந்தேன்

    பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)

    கூற்றமோ? கண்ணோ? பிணையோ? மடவரல்

    நோக்கமிம் மூன்றும் உடைத்து (1085)

    என்று பெண்ணின் கண்ணுக்குக் கூற்றுவனை இணையாகப் பேசுகிறார். கூறு என்றால் பிரிவு, பங்கு, அம்சம், பாதி, வகை என்றெல்லாம் பொருள்படும்.

    சரி. பிறப்பு, இருவினை, அறம், கூற்றுவன், இறப்பு என்றெல்லாம் பேசுபவர், இறந்து போன முன்னோர்களாகிய பித்ருக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரா என்றால், அவர்களைத் தென்புலத்தார் (43) என்கிறார். ஞானியர், யோகியர், பேரடியார் இவர்களெல்லாம் வடபுலம் ஏகியவர்கள். மற்றை மானிடர்கள், தென்புலத்தார். அவர்கள், பூமியில் வாழும் மனிதர்களின் சடங்குகளின் மீது ஆதாரப்பட்டிருக்கிறார்கள்.

    மனிதர்களில் கயவர்கள், பதடிகளைப் பற்றிச் சொன்னவர், மனிதரல்லாத அமானுஷ்ய ஜீவிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்:

    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ? கனங்குழை

    மாதர்கொல்? மாலும் என் நெஞ்சு (1081)

    நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

    தானைக்கொண் டன்ன துடைத்து (1081)

    அணங்கைப் பெண் எனலாம்; பேயெனலாம்; பெண் தெய்வம் எனலாம். தாக்கணங்கை மோகினி எனலாம்! இவை போதாதென்றோ,

    அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

    பேஎய்கண் டன்ன துடைத்து (565)

    உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து

    அலகையா வைக்கப் படும் (850)

    என்று, பேயைக் கொண்டு வருகிறார்.

    உடனே, வள்ளுவருக்குப் பேய்களில் நம்பிக்கை உண்டா என்று வினாவெழுப்ப வேண்டா! `என்னடா பேயறைந்தாற்போல் இருக்கிறாய்?` என்றால் கேட்டவர் அதற்கு முன்பு தன்னையோ பிறரையோ பேயறைந்து பார்த்திருக்கிறார் என்று பொருளல்ல! அது ஒரு manner of expression.

    ஆனால், அவர் தேவர்களைப் பற்றிச் சொல்வது, பேய்களைப் பற்றிச் சொன்னதுபோல் ஒரு பேச்சுக்காக இல்லை.

    சிறப்பொடு பூசனை செல்லாது, வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (18)

    அகல்விசும்புளோர் கோமான் இந்திரன் (25)

    வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (50)

    நல்விருந்து வானத்தவர்க்கு (86)

    புத்தேளுலகத்தும் (213)

    புலவரைப் போற்றாது புத்தேளுலகு (234)

    கள்ளார்க்குத் தள்ளாது புத்தேளுலகு (290)

    அவியுணவின் ஆன்றார் (413)

    தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

    தேவர் அனையர் (1073)

    புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ (1323)

    இவைபோன்ற குறள்களைப் பார்க்கும்போது, தேவர்கள், வானுலகம் இவை, வள்ளுவரின் வெறும் நம்பிக்கையாக இல்லாமல் அவர் அறிந்த நிதர்சனமாக இருந்தனவோ என்று தோன்றுகிறது.

    தேவர்களைக் குறிப்பிட்டால் அமிழ்தத்தைக் குறிப்பிடாமல் இருப்பாரோ?

    தான் அமிழ்தம் (11)

    சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று (82)

    அமிழ்தினும் ஆற்ற இனிதே (64)

    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் (720)

    மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை (968)

    அமிழ்தின் இயன்றன தோள் (1106)

    தேவர்கள், அவர்கள் உறையும் சுவர்க்கம், அமிழ்தம் இவற்றைச் சொன்னவர், நரகத்தையும் குறிப்பிடத் தவறவில்லை:

    அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் (121)

    ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

    ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

    தான்புக் கழுத்தும் அளறு (835)

    புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு (919) என்றெல்லாம் சொல்லி, அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்:சேர்ந்த இன்னா உலகம் புகல் (243) என்பார்.

    இம்மையை மாயையென்று கொண்டவரில்லை வள்ளுவர். அங்ஙனம் கொண்டிருந்தால், வாழ்வின் எல்லாத் தளங்களுக்கும் பொருத்தமான அறங்களை ஏன் சொல்வார்? தேவர்கள், அவர்கள் வதியும் இடம் என்பவற்றைப் பற்றியும் பேசுவாராதலின், அவர் மறுமையை நம்பியவர் என்றே உறுதியாய்ச் சொல்லலாம். இங்கு வாழ்ந்து உயிர் நீத்தபின் எய்தும் நிலையும் அதன்பிறகு நேரும் பிறப்புமே மறுமை.

    மனநலத்தின் ஆகும் மறுமை (459)

    மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் (904)

    மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)

    என்ற குறள்களில் மறுமையைச் சுட்டுபவர், இம்மை, மறுமை இரண்டையும் சேர்த்தே இரண்டு இடங்களில் கையாள்கிறார்:

    சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

    இம்மையும் இன்பந் தரும் (98)

    இன்மை எனவொரு பாவி மறுமையும்

    இன்மையும் இன்றி வரும் (1042)

    இம்மையும் மறுமையும் சொன்னவர், மனித வாழ்வின் நோக்கமான வீடு பேற்றையும் அவருக்கே உரிய முறையில் கச்சிதமாகச் சொல்கிறார்.

    அதை,

    வானென்னும் வைப்பு (24)

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247)

    புக்கில் (340)

    வானோர்க்கு உயர்ந்த உலகம் (346)

    வையத்தின் வானம் நணிய துடைத்து (353)

    என்றெல்லாம் வீட்டை விவரித்து மற்றீண்டு வாரா நெறியே (356) மனிதன் கடைபிடிக்க வேண்டியது என்று அறிவுறுத்துவார்.

    ஆக, உறங்குவதும் விழிப்பதும் போலத்தான் இறப்பும் பிறப்பும் (339) என்றும், பிறவி என்பது பெருங்கடல் (10) என்றும், அதில் நாம் உழல்வதற்குக் காரணம் பிறப்பென்னும் பேதைமை (358) (அறியாமை) அதற்குக் காரணம் அவா என்னும் வித்து (361) என்றும், அதற்குக் காரணம் பற்று (347) என்றும், பற்றுக்குக் காரணம் யான் எனது என்னும் செருக்கு என்றும், (346) காமம், வெகுளி, மயக்கம் (360) உள்ளமட்டும் பிறவி என்பது தொடரும் என்றும், ஒரு பிறவியில் செய்த வினையின் விளைவு ஏழு பிறவிகளில் தொடரும் என்றும், (107, 126, 398, 538) வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை (360) என்றும் சொல்லி, பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் (349) என்றும் படிப்படியாக விவரித்துச் சொல்கிறார்.

    பற்று நீங்கினால், இந்த உலகத்தில் இந்த உடலில் இருக்கும்போதே விடுதலை எய்தி வீடு பேற்றை அடையலாம் என்பதை,

    இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்

    துன்பத்துள் துன்பம் கெடின் (369)

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நினைவே

    பேரா இயற்கை தரும் (370)

    என்னும் குறள்களில் உறுதிமொழி தருவதுபோல் விளக்குகிறார்.

    திருவள்ளுவர் காட்டும் நெறியில் நின்றால், யாண்டும் இடும்பை இல என்பதே உறுதி.

    Share
  • குறளின் கதிர்களாய்…(133)

    செண்பக ஜெகதீசன்

    விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின். (திருக்குறள்-162: அழுக்காறாமை) 

    புதுக் கவிதையில்…

    பிறரிடம்
    பொறாமை கொள்ளாதவனுக்கு,
    அதைவிடப்
    பேறெதுவும் பெரிதாகயில்லை…! 

    குறும்பாவில்…

    அடுத்தவரிடம் அழுக்காறில்லாத பண்பு
    ஒருவனுக்கு,
    பேறுகளிலெல்லாம் பெரும்பேறு…! 

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மனித வாழ்வினிலே
    மற்றவர் மீது பொறாமையின்றிக்
    கண்ணிய மாக வாழ்வோர்கள்
    காணற் குரிய பேறுகளில்,
    புண்ணிய மான வாழ்விதுபோல்
    போற்றுதற் கேற்ற பேறதுவாய்
    எண்ணித் தேடினும் பெரிதாக
    எதுவு மில்லை அறிவீரே…! 

    லிமரைக்கூ…

    அழுக்காறில்லா வாழ்வுபெரும் பேறு,
    அடுத்தவர்மீது பொறாமைகொள்ளா வாழ்விதற்கும்
    பெரிதாய்ப் பேறேயில்லை வேறு…! 

    கிராமிய பாணியில்…

    கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
    அடுத்தவர்மேல பொறாமகொள்ளாத… 

    பொறாயில்லாதவன் வாழ்க்கதான்
    ஒலகத்தில பெரிய பாக்கியம்,
    எங்க தேடுனாலும் எப்புடித்தேடுனாலும்
    இதவிடப் பெரிய பாக்கியமில்ல,
    இதுக்கு ஒசந்த பாக்கியமுமில்ல… 

    அதால,
    கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
    அடுத்தவர்மேல பொறாமகொள்ளாத…!

     

     

    Share
  • அசோகச் சக்கரம்

    இன்னம்பூரான்
    16 08 2016

     

    innamburan

    எல்லாரும் ஓரினம் என்றாலும் ராணுவ வீரர்களுக்கு ஒரு தனி முத்திரை இருக்கத்தான் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு உயிர் வெல்லமல்ல. சற்று மாற்றி எழுதவேண்டும். அவர்களுக்கு உயிர் வெல்லம் தான், மற்றவர்களின் உயிர்! இந்தியாவின் பெரிய ராணுவப்பள்ளியின் தாரகமந்திரமே, “உனது நாடு முதலில்; அடுத்து முக்கியமானது உனது படை வீரர்கள்; உனது இடம் கடைசியில்; என்றுமே.’ அன்றொரு நாள் தொகுப்பில் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத்ரபால் பற்றி எழுதியிருந்தேன். இன்று அசோகச் சக்கரம் விருது அளிக்கப்பட்ட அமரர் ஹவில்தார் ஹங்பன் தாதா; இவர் அஸ்ஸாம் ராணுவப்படையை சேர்ந்தவர். மே 26 அன்று இமாலயத்தின் 13 ஆயிரம் அடி உயரமான பனிக்கட்டி பிராந்தியத்தில் நான்கு பயங்கரவாதிகளைக் கொன்று குவித்த அவர், ஒளிந்திருந்த பயங்கரவாதி சுட்டதால், அவனைப் படுகாயப்படுத்தின பின்னர், வீரமரணம் அடைந்தார்.

    அவரை பற்றிச் சில சுவையான செய்திகள்: மாதாகோவிலில் முன்னின்று சம்பிரதாயங்களை நடத்தும் அவர், போர் புரிவதிலும் தலைமை ஏற்கத் தயக்கம் காட்டியவர் இல்லை. எப்போதும் சிரித்த முகம். அவருடைய ஜன்மதினம் காந்திஜியின் ஜன்மதினம்: 1979. கிராமத்தான். துணிச்சல் பிரமாதம். நியாயத்துக்கு அவர் அடிமை. சமர் புரிவதிலும் எல்லாரும் சமானமானவர்கள் கிடையாது. அபாயம் அதிகரித்த காலகட்டங்களில் தனித்துச் சென்று வேவு பார்த்துவரும் தன்மை உடையவர், மற்றவர்களின் உயிர் வெல்லமல்லவா! மாதாகோவிலில் இவருடைய பிரசங்கங்களை யாரும் மறக்கவில்லை. இறைநம்பிக்கை மிகுந்தவர். மனிதநேயத்தின் மறு உருவாக, அவர் செய்த பணிகள் அவரை உணர்த்துகின்றன.

    அவருடைய ஆத்மா சாந்தியடைக; அவரைக் கெளரவித்த அரசு தனக்குக் கெளரவம் பெற்றது!

    ***

    சித்திரத்துக்கு நன்றி:http://images.newsworldindia.in/2016/08/Havildar-Hangpang-Dada-750×500.jpg

    படித்தது:

    http://indianexpress.com/article/india/india-news-india/havildar-hangpan-dada-awarded-ashok-chakra-posthumously-2975209/

    ***

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (17)

    நிர்மலா ராகவன்

    அக்கரைப்பச்சை

    நலம்-1-2

    யாத்தி (YATI) என்ற இந்தோனீசிய பணிப்பெண் வாரத்திற்கு ஒருமுறை எங்கள் வீட்டைச் சுத்தப்படுத்த வருவாள். கண்ணாடி ஜன்னல்களை ஈரத்துணியால் துடைத்து, அதன்பின் தினசரித் தாளைக் கசக்கி மீண்டும் அழுந்தத் துடைத்துப் பளபளப்பாக்கி.. இப்படி உயிரை விட்டுக்கொண்டு வேலை செய்வாள். அப்போது அவளுக்கு முப்பது வயதிருக்கும்.

    “உனக்கு நாங்கள் கொடுக்கும் பணத்தை என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன்.

    “அப்படியே என் கணவரிடம் கொடுத்துவிடுவேன்!”

    யாத்தியை பதின்மூன்று வயதிலேயே கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள். அதனால் கணவனைத் தவிர வேறு உலகம் கிடையாது என்ற நினைப்பு. கல்வியறிவு அறவே இல்லாததால், சுயமாகச் சிந்திக்கும் திறனும் கிடையாது.

    அவளே தொடர்ந்து, பெருமையுடன் கூறினாள்: “அவர் வாராவாரம் முப்பது வெள்ளிக்கு (அன்றைக்கு சுமார் 500 இந்திய ரூபாய்) லாட்டரிச் சீட்டு வாங்குகிறார்!”

    ஒரு வெள்ளி (மலேசிய ரிங்கிட்) சீட்டு வாங்கினாலே அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்குமே என்ற எண்ணத்துடன், “எதற்கு இப்படிக் காசை வீணாக்குகிறீர்கள்?” என்றேன்.

    நிறையக் காசு கொடுத்து வாங்கினால், ஒன்றாவது வெற்றி பெறும் என்று கணவன் சொல்லி வைத்திருக்கிறான்!

    கணவர் செய்வதை இன்னொருவர் குறை சொல்வதாவது!

    “உங்களுக்குப் புரியாது. நீங்கள் பணக்காரர்கள்!” என்றாள், உதட்டைச் சுழித்தபடி.

    ஆனால், அவளிடம் சொன்னபடி, கணவன் எந்தச் சீட்டும் வாங்கவில்லை, மனைவி உடலயரச் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தைக்கொண்டு இன்னொரு பெண்ணை பரிசுப்பொருட்களுடன் மயக்கி, அவளையே மணமும் புரிந்துகொண்டுவிட்டான் என்று அறிந்ததும் யாத்தியின் மனநிலை மாறிப்போயிற்று. ஆத்திரமும் அழுகையுமாக ஆனாள்.

    அவளுக்குப் பிறகு, கமாரியா (KAMARIA) என்ற நாற்பத்தைந்து வயதுப் பெண்மணி வேலைக்கு வந்தாள். நிறைய தங்க நகை போட்டுக்கொண்டு, வாயெல்லாம் சிரிப்பாக, பல வருடங்கள் வேலை பார்த்தாள்.

    அவளுடைய கணவர், பிற இந்தோனீசிய ஆண்களைப்போல, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவளுடைய தளதளப்பான உடலுக்கு எதிரான சோனியான உருவம்.
    “நான் மற்றவர்களைப்போல குடி, சூதாட்டம் என்றெல்லாம் பொழுதைக் கழிப்பதில்லை. என்னுடைய ஒரே பொழுதுபோக்கு கமாரியாதான்!” என்று எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது சொல்ல, கமாரியா பெரிதாகச் சிரித்தபடி தன் கைவேலையை அப்படியே போட்டுவிட்டு வந்தாள். முகத்தில் அப்படி ஒரு பெருமை!
    அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை.

    “மேம்! என் வீட்டுக்காரர் வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன,” என்று கவலை தோய்ந்த முகத்துடன் அவள் தெரிவிக்க, “வேலை பார்த்த இடத்தில் விபத்தோ?” என்று சந்தேகம் தெரிவித்தேன். அவள் கணவர் சற்று தூரத்தில் வேலை பார்த்ததால், அங்கேயே தங்கிவிட்டிருந்தார்.

    சில நாட்கள் பொறுத்து, அந்த மனிதன் இன்னொரு பெண்ணை மணந்துகொண்டதாக அவளுக்குத் தகவல் கிடைக்க, இடிந்துபோனாள். அறையைச் சுத்தம் செய்தபடி இருக்க, வாய்விட்டு அழுவாள்.

    சில மாதங்கள் கழித்து எங்கள் வீட்டுக்கு வந்தவனை (மரியாதையைக் குறைத்துவிட்டேன்!) என் கணவர், “கமாரியா எவ்வளவு நல்லவள்! அவளை விட்டு, எதற்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டாய்?” என்று கேட்க, “எங்கள் மதத்தில் இது சரிதான் என்று சொல்லி இருக்கிறதே!” என்றான், என்னமோ பெரிய ஆன்மிகவாதிபோல்!

    “இனி அவனுக்குப் பணம் கொடுக்காதே!” என்று நான் அவளை எச்சரித்து வைத்தேன். கேட்டும் கொடுக்கவில்லை என்று அவன் கோபித்துக்கொண்டு போய்விட்டதாகச் சொன்னாள்.

    சில மாதங்களிலேயே, அவள் உடல்நிலை சீர்கெட்டது. தன்னை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவன் இளமையான மற்றொரு பெண்ணை நாடிப் போய்விட்டானே!

    `நீ இந்தோனீசியாவுக்கே போய்ச்சேர்! அங்காவது உற்றவர்கள் இருப்பார்கள்!’ என்று அனுப்பிவைத்தோம்.

    அவள் வந்த புதிதில், ஒவ்வொரு குழந்தையும் என்ன விஷமம் செய்தது, எப்படியெல்லாம் சண்டை போட்டது என்றெல்லாம் லயித்தபடி கூறிவிட்டு, எங்களைப் பிரிய மனமில்லாமல் போனாள் கமாரியா.

    அடுத்து வந்த ஆரிஸிடம் (40 வயது) நான் முதலிலேயே கண்டித்துக் கூறினேன்: “நீ சம்பாதிப்பதை உன் புருஷனுக்குக் கொடுக்காதே! உன்னை அந்தரத்தில் விட்டுவிட்டு, இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொள்வான்!”

    அவள் சலிப்புடன், “எல்லா இந்தோன்களும் அப்படித்தான்!” என்றாள். ஆனால், புத்திசாலித்தனமாக நடந்துகொண்டாள்.

    தன் கிராமத்தில் நிலம் வாங்கிப்போட்டு, நான்கு அறைகள் கொண்ட தனி வீட்டை எழுப்பியிருக்கிறாள். பெருமையுடன் அந்த புகைப்படத்தை என்னிடம் காட்டினாள். “என் வீட்டுக்காரரும், அவருடைய அண்ணன் தம்பிகளும் சேர்ந்து கட்டினார்கள்!”

    அவளுக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அவள் அனுப்பிய பணத்தை பள்ளிக்கூடத்திற்காகச் செலவழிக்காது, தகுந்த கண்காணிப்பின்றி ஊர்சுற்றும் ஊதாரியாகிவிட்டான் பதின்ம வயதான மூத்த மகன்.

    பரிதாபமாக இருந்தது எனக்கு. “நீ எப்படி பிறர் வீட்டு கழிப்பறையைச் சுத்தம் செய்து, ஒவ்வொரு நாளும் மூன்று வீடுகளில் இடுப்பொடிய, கால் வீங்க, வேலை செய்து சம்பாதிக்கிறாய் என்று அவனிடம் சொல்லு!”

    “அவனுக்குத் தெரியும்!”

    “இருந்தாலும், தினமும் சொல்லு. உங்கள் நாட்டில் படிப்பிற்கோ, உழைப்பிற்கோ ஏற்ற ஊதியம் கிடையாது என்கிறாயே! அவனாவது உன்னைப்போல் கஷ்டப்படாது, படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக நீயும், அவனுடைய அப்பாவும் வேறு நாட்டில் கஷ்டப்படுவதை எடுத்துச்சொல். அவன் திருந்தும்வரை சொல்லிக்கொண்டே இரு!”

    ஒரு தமிழர் மலேசியாவுக்கு வந்து தான் சம்பாதித்ததை அவ்வப்போது தன் தாய்க்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அப்பணத்தில் வீடு வாங்கும்படி முதலிலேயே சொல்லிவிட்டு வந்திருந்தாராம்.

    நாடு திரும்பியபோது, வீடு என்னவோ வாங்கப்பட்டிருந்தது. ஆனால், தம்பியின் பெயரில்! அவன் அவருக்கு அதைக் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், தன் உழைப்பெல்லாம் விரயமாகிவிட்டது என்றும் என்னிடம் சொல்லி மிகவும் வருந்தினார்.
    தாய்நாட்டை விட்டு வெளியேறி, இன்னொரு நாட்டில் கடுமையாக உழைத்து, கைநிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசைக்கனவுடன் வருகிறவர்களுக்கு, அதனால் வேறு பல இடர்கள் தொடரும் என்பது புரியும்போது, காலம் கடந்து விடுகிறது.
    போதாத குறைக்கு, திரைப்படங்கள் வேறு நனவாக முடியாத கனவுகளைக் காட்டிவிடுகிறது.

    ஒரு சாப்பாட்டுக்கடையில் வேலை பார்ப்பவர், `நான் நாடு திரும்பியதும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று திறக்கப்போகிறேன்!’ என்று கூறுவதைத் தொலைகாட்சியில் பார்த்தபோது, அவருடைய அறியாமையைக் கண்டு பரிதாபப்படத்தான் என்னால் முடிந்தது.

    தொடருவோம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    –கிரேசி மோகன்


    crazymohan

    ’’பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமெனக்
    கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய்உள்ளமே
    கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
    வள்ளல் பெரும்பசுவாய் வாழ்வு’’

    ’’ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
    ராதை கழுத்தென்னும் சங்கைபோதை
    தலைக்கேறக் கண்ணனவன் தோளைத் தழுவி
    வளைக்கரத்தால் போரென்றாள் மாது

     (அல்லது)

    ——————————————— – போதை
    இதம்தர கண்ணந்திண் மார்பைத்  தழுவி
    சுதந்திர  வாழ்த்துரைத்தாள் சாது!’’

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 219

    மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை

    மலர் சபா

    அரசோடு மதுரையையும் அழிப்பேன் என்று கூறிக் கண்ணகி மதுரையை விட்டு நீங்குதல்

    “அப்படிப்பட்ட ஊரில் பிறந்த நானும்

    ஒரு கற்புடைய பெண் என்றால்

    மதுரை நகரை மட்டுமன்றி

    மன்னனையும் அழிக்காமல் விடமாட்டேன்;

    இதை நீ நிச்சயம் காண்பாய்” எனக் கூறிக்

    கோவிலை விட்டு நீங்கினாள்.

     

    கண்ணகி தன் இடமுலையைத் திருகி எடுத்து மதுரையின் மேல் எறிதல்

    “நான்மாடக் கூடலான மதுரை நகரின்

    ஆண்களும் பெண்களும்

    தேவர்களும் தவத்தோரும்

    நான் சொல்வதைக் கேளுங்கள்.

     

    நான் விரும்பிய

    என் காதலனைக் கொலை செய்த

    மன்னன் நகரத்தின் மீது

    கோபம் கொண்டேன்;

    என் மீது எந்தக் குற்றமும்

    இல்லாதவள் நான்”

    எனக்கூறித்

     

    தன் இடது முலையை

    வலது கையால் திருகி

    மதுரை நகரத்தினை

    மூன்று முறை வலம் வந்து,

    மயங்கியவளாய்

    அணிகளை உடையவளாய்த்

    தன் அழகிய முலையின் மீது சூளுரைத்து,

    வண்டுகள் தேன் பருக வரும்

    மதுரைத்தெருவில் நின்று,

    கோபத்துடன் விட்டெறிந்தாள்.

    Share
  • வாழ்வதற்கு வழிசமைப்போம்!

    –எம். ஜெயராமசர்மாமெல்பேண், அவுஸ்திரேலியா

     

    jayarama sarma 

    காந்திமகான் எனும்பெயரில் வந்துநின்ற பெருவெளிச்சம்
    கருமைநிறை அடிமைத்தனம் கழன்றோடச் செய்ததுவே
    வெள்ளையரை விரட்டிவிட்டு விடிவுவந்த பாரதத்தில்
    கொள்ளையரை விரட்டிவிட வருவாரா காந்திமகான்?

    உண்ணாத நோன்பிருந்து உயிருடனே வதைப்பட்டும்
    கண்ணான சுதந்திரத்தைக் கண்டுவிடப் பாடுபட்டார்
    மண்மீது மனிதர்க்கு மானமுடன் சுதந்திரமும்
    என்றுமே தேவையென எண்ணிநின்றார் காந்திமகான்!

    காந்தியது சாத்வீகம் கண்டுநின்ற வெற்றியினால்
    கணக்கற்றோர் காந்திய வழிநடக்கப் புறப்பட்டார்
    தேசமதைச் சிந்தைவைத்துச் சிறைசென்றார் பலபேரும்
    தேசப்பிதா காந்திமகான் தெய்வமென உயர்ந்துநின்றார்!

    காந்திமகான் எழுச்சியினால் கதிகலங்கி நின்றார்கள்
    சாந்தி சமாதானம்பற்றிச் சற்றுமவர் சிந்தித்தார்
    அன்னியமாய் இருந்தாலும் அவர்சற்று யோசித்தார்
    ஆதலால் காந்திவழி அவர்மனதை மாற்றியதே !

    வெள்ளையனை வெளியேற்றி வெற்றிக்கொடி பறக்கவிட்டு
    விரும்பிநின்ற சுதந்திரத்தை விருப்புடனே மனமேந்தி
    நல்லதொரு பாரதத்தை நாம்வளர்ப்போம் எனவெழுந்து
    நாளுமே பாரதத்தின் நலங்கெடுத்தல் முறையாமோ?

    பாரதத்தில் பலரிஷிகள் பலசமயப் பெரியோர்கள்
    வேறிடத்தில் இல்லாத அளவினிலே வெளிப்பட்டார்
    ஆனாலும் பாரதத்தில் அரக்ககுணம் மிகுந்தோரால்
    நாளாந்தம் சுதந்திரத்தை நாமிழத்தல் நடக்கிறதே !

    விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் மேலோங்கி வளர்கிறது
    அஞ்ஞானம் மிக்கோரும் அதைத்தாண்டி வருகின்றார்
    அருமைமிகு சுதந்திரத்தை அநுபவிக்க வாய்ப்பின்றி
    அமைந்துவரும் சூழலினை ஆர்வந்து தடுத்திடுவார்?

    ஊழலும் மதுவும்சேர்ந்து உழைப்பவர் நிலையை மாற்றி
    நாளுமே நொடிந்துவாழ நாட்டிலே நிலமையாச்சு
    ஆழமாய் எண்ணிப்பார்க்கின் அனைவரும் இணைந்தேநின்று
    ஊழலும் மதுவும்போக உழைத்திடுவோமே வாரீர்!

    பஞ்சமொடு பசியும் பலநோயும் ஒழியவேண்டும்
    அஞ்சிகின்ற மனநிலையை அகற்றியே விடவேண்டும்
    நஞ்சுநிலை நினைப்பையெலாம் நார்நாராய்க் கிழித்தெறியின்
    நல்லதொரு சுதந்திரத்தை நாமென்றும் சுவாசிப்போம்!

    அணிவகுப்பு, கொடியேற்றம் அதுவல்ல சுதந்திரமாம்
    அறம்சார்ந்த அத்தனையும் நிலம்காணல் சுதந்திரமே
    வளம்காண வேண்டுமெனின் வணங்கிடுவோம் சுதந்திரத்தை
    வாழ்வினிலே சுதந்திரமாய் வாழ்வதற்கு வழி சமைப்போம்!

     

     

    Share
  •  சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!

    ரா. பார்த்தசாரதி

    எழுபது  ஆண்டுகள் சுதந்திரக்  காற்றைச் சுவாசித்தோமா?
    இன்றைய நாட்டின் நிலைமை அறிந்து  செயல்படுகின்றோமா?
    எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா?
    சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா?!

    ஒரு பக்கம் மனித மேம்பாடு, தொழில் மற்றும் விஞ்ஞான  வளர்ச்சி
    மறுபக்கம்  காட்டையும்,  விளை நிலங்களையும் அழிக்கும் முயற்சி
    நிலங்களைக் கூறு போட்டு விற்கும் அவலத்தைத் தடுப்பாருண்டோ?
    அரசாங்கமே  இதற்குத் துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ? 

    நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மைச் சுதந்திரம்
    பட்டப் பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிகக் கடினம்
    கொலையும், கொள்ளையும் பட்டப் பகலிலே நடக்கின்றதே
    சுதந்திரத்தின் பெயரில் நாடகம் நடத்தப்படுகின்றதே!

    பல தியாகிகளின் உயிர்  அர்ப்பணிப்பில்  சுதந்திரம் பெற்றோம்
    அந்தமான்மற்ற சிறைகளில் தியாகிகள்  பட்ட துன்பத்தை அறியோம்
    இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும்
    சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும்!

    சுதந்திரம் என்பது தந்திரமாகச் செயல்படுவது அல்ல
    பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல
    நாட்டின் உரிமைச் சாசனம் எழுதிவிட்டால் பெருமை அல்ல
    தனிமனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் அது!

    வேற்றுமையில் ஒற்றுமை மாநிலங்களிலே நிலவுகிறதா?
    ஜாதி, இனம் காட்டிச்  சலுகைகளைப்  பெற நினைப்பதா?
    நாட்டின் பொருளாதாரமும், நாணயத்தின் மதிப்பும் உயர்ந்ததா?
    நாட்டில் நதிநீர்ப் பிரச்சனையும், குடிநீர்ப் பிரச்சனையும் தீர்ந்ததா

    இளைஞர்களே!  உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி
    கொடுமைகளையும், அநீதிகளையும் கண்டு  எழுகின்ற எழுச்சி
    தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூருங்கள்!
    நாட்டினை நல்வழிப்பாதையில்  அழைத்துச் செல்லுங்கள்!

     

     

    Share