–கிரேசி மோகன் 

நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை
தேகநீர் ராஜனுக்குத் தோழனும், – போகரெக்கை
வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன்
மேனாள் வயிற்று மகன்…(19)

தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்த்
துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) – அக்கினியில்
முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள்
அன்பு இமவான் அகம்….(20)

உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும்
நற்சாதி செல்வ நிகழ்வேபோல் – அச்சாக
மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி
சங்கரியாய் வந்தாள் சதி….(அல்லது)
திங்களெனத் தோன்றினாள்ச தி….(21)

தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய்
ஒளிந்த அமரர் ஒலியாய் – மலர்ந்தபூ
பார்மீது மாரியாய்ப் பல்லுயிர்க்கும் இன்பமாம்
பார்வதி தோன்றிய போது…(22)

அதிருமிடிச் சத்தம் விதூரமலை மொத்தம்
எதிரொலிக்கப் பூமிவாய் ஏற்று – உதிரவிடும்
ரத்தின ஜோதியாய்ப் பெத்தவளும் புத்திரியும்
புத்தொளிகொண்(டு) உற்றார் பொலிவு…(23)

சுக்கில பட்ச சசிகலைகள் போல்தினமும்
இக்குலம் வந்த இமவான்பெண் – சொக்கவைக்கும்
அங்கங் களடைந்து அக்கலைக்(கு) ஈடாக
பொங்கும் அழகுற்றாள் பூத்து…(24)

உற்றார் அவளை உவந்து அழைத்தனர்
பெற்றோர் குலப்பெயர் பார்வதியாய் -மற்றோர்
சமயத்தில் தாயார் சதியைத் தடுத்தாள்
உமையே தவமேன் உரைத்து….(25)….

உசந்தவகைப் பூக்கள் அசைந்தும்மாம் பூவை
வசந்தருது வண்டு விரும்பும் -அசங்காது
பார்வதியைய் பார்த்திமவான் பூரிப்பான், தம்மக்கள்
யார்வதை உற்றுமிமை யான்….(26)….

விளக்கழகு தீபவொளி, வானழகு கங்கா
இலக்கணப் பேச்சழகு இன்சொல் -மலைக்கரசன்
பெற்றமகள் பார்வதியால் பெற்றான் பரிசுத்தம்
வற்றா வளமையுடன் வாக்கு….(27)….

ஓயாது தோழியரோ(டு) ஓடி விளையாடி
காயாத கங்கைக் கரைமணலில் -சேயாக
மேடைகள் செய்தும் மலர்பந்து வீசியும்
நாடகம் ஆடினாள் நன்கு….(or)
வேடமிட்டாள் வையவாழ் வொத்து….(28)….

போதுசரத்தில் கங்கையைப் போயடையும் அன்னம்போல்
ஜோதிர் லதையொளிரும் ஜாமம்போல் -ஓதிய
முற்பிறவி கற்றதெலாம் பார்வதியைப் பற்றியதாம்
விற்பன்னன் காளிதாசன் வாக்கு….(29)….

மாதவள் தோற்றம் மனதை மயக்கிய
போதுமது அல்லவே புன்மது -காதலான்
வாளிக்கும் மேலாய் வலிந்திடாது பார்வதி
வாலிபத்தைக் கொண்டாள் வளர்ந்து….(30)….

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *