கற்றல் ஒரு ஆற்றல்- 40
க. பாலசுப்பிரமணியன்
சிந்தனையின் வழித்தடங்கள்
கற்றல்-புரிதலை ஒரு தனி மனிதனின் சூழ்நிலைகளும் முந்தய அறிவும் அனுபவங்களும் அதிகமாக பாதிக்கின்றன. ஆகவே ஒரு கற்றலுக்கான நிகழ்வு ஏற்படும் பொழுது அது அந்தத் தனி மாணவனின் உணர்வுகளை பெரிதும் மாற்றக்கூடும். கற்றல் ஒரு உணர்வு சார்ந்த செயலாக இருப்பதாலும் முந்திய அனுபவங்களோடு இணைந்து செயல் படுவதாலும், படிப்பித்தலுக்கும் கற்றலுக்கு இடையே அதிகமான இடைவெளி இருக்க வாய்ப்புக்கள் உண்டு.
உதாரணமாக, தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு மாணவனிடம் “காஞ்சீபுரம் ” என்ற வார்த்தையைச் சொல்லும்பொழுது அவனுக்கு “பட்டுப் புடவைகளை” பற்றியோ அல்லது அங்குள்ள “கோவில்களை ” பற்றிய எண்ணம் உடன் வர வாய்ப்புள்ளது. ஆனால் இதே வார்த்தையை வட மாநிலங்களில் உள்ள மாணவர்களிடம் உபயோகிக்கும் பொழுது அத்தகைய கருத்துக்கள் வர வாய்ப்பில்லை. அதே போல் மதுபானி என்ற சொல்லை உபயோகப்படுத்தும் பொழுது பீகாரில் உள்ள மாணவனுக்கு அதன் பொருள் தெரிய அதிகம் வாய்ப்பிருக்கின்றது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை இராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியில் உள்ள மாணவர்களைவிடம் “மழையில் ஒரு நாள் ” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் அவர்களால் கேரளத்து மாணவர்களைப் போல் தெளிவாகச் சிறப்பாக எழுத முடியாது. ஏனெனில், அனுபவங்கள் வேறு மாதிரி !!
கற்றலில் கருத்துக்களை (Perceptions) உருவாக்குவதில் கீழ்கண்டவைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன.
1. முந்தைய அனுபவங்கள் /உணர்வுகள். (Previous experiences/feelings)
2. பூகோளச் சூழ்நிலைகள் (geographical context)
3. பண்பாட்டுச் சூழ்நிலைகள் (cultural context)
4. சமூகச் சூழ்நிலைகள் (social context)
5. தனிமனிதனின் ஆர்வங்கள்/ ஈடுபாடுகள். ( individual’s aptitude/ interests)
இவற்றின் தாக்கத்தால் எந்த விஷயத்தைப் பற்றி கற்கவேண்டும், எந்த அளவு கற்க வேண்டும், கற்றலின் திறன் எவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் மூளை அறிந்து அதற்க்கேற்ப முடிவுகளை எடுக்கின்றது. ஆகவே ஒரு கூட்டத்தில் ஒரே கருத்தைப் பற்றி அனைவரும் ஒரே மாதிரியாக சிந்திக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது, முடிவதும் இல்லை.
ஒரு பொருளைப் பற்றி எத்தனை வகையாக நம் மூளை சிந்திக்க முடியும் என்று டோனி பர்சான் (Tony Burzon ) என்ற ஒரு நிபுணர் ஆராய்ச்சியின் மூலம் தோராயாமாக கணக்கெடுத்தபொழுது அது நம்முடைய கற்பனைக்கும் கணக்குத்திறனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. “மூளையின் சிந்தனை வழிகள் ( neural pathways ) – ஒன்றுக்குப் பிறகு 10.5 மில்லியன் கிலோ மீட்டருக்கு பூஜ்யங்கள் எழுதப்பட்டால் – அந்த அளவுக்கு சிந்தனை வழிகள் இருக்கின்றன.”
இந்த நிலையில் ஒரு வகுப்பில் கற்றலில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களின் சிந்தனை எந்த வழியில் இருக்கும் என்பது நினைக்கவே ஆச்சரியமாக இருக்கின்றது !
ஆகவே கற்றலும் புரிதலும் மேம்பட கற்கும் கருத்துக்கள் அவர்களுடைய அனுபவங்களுக்கும் வாழும் சூழல்களுக்கும் நேரடியாகத் தொடர்புடையனவாக இருத்தல் அவசியம். இந்தக் கருத்தை வலியுறுத்தும் அறிஞர் அரபிந்தோ “LEARNING ALWAYS HAPPENS FROM NEAR TO FAR ” – கற்றல் எப்பொழுதும் அருகிலிருந்து வெளிநோக்கிச் செல்லுகின்றது. என்று அழகாக எடுத்துரைத்துள்ளார். உதாரணமாக மதுரையில் கற்பவனுக்கு வைகையும் தஞ்சையில் கற்பவனுக்கு காவேரியும் முன்னுதாரணமாக இருக்கலாமேயன்றி கங்கையும் நர்மதையும் நல்லுதாரணமாக அமைய வாய்ப்புக்கள் மிகக் குறைவு.
மூளையைப் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் பொதுவாகக் கூறும் கருத்து “மூளை கற்றலுக்கு எப்பொழுதும் புதியதையும் சவால்களையும் தேடுகின்றது. சாதாரணமாக இருக்கும் பொருள்களும் கருத்துக்களும் அதற்க்கு அதிக ஆர்வத்தைத் தருவதில்லை. ஆகவே கற்கும் நேரத்தில் அதன் தேடல் புதிய சவால்களை நோக்கியே செல்கின்றது. ஆனால், பெற்றோர்களும், ஆசிரியர்களும் அந்த மாதிரி கருத்துக்களை மாணவர்களால் கற்றுக்கொள்ள முடியுமோ என்ற தன்னச்சத்தில் திறன்களைத் தவறாக மதிப்பீடு செய்கின்றனர். வல்லுனர்களின் ஆராய்ச்சிப் படி மூளை எவ்வளவுக்கெவ்வளவு சவால்களை சந்திக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு கூர்மையாகவும் திறனுள்ளதாகவும் வளர்கின்றது. . எனவே, இளம் வயதிலும் கற்கும் காலங்களும் மாணவர்களுக்கு புதிய நோக்கங்களையும் புதிய வழிகளில் சிந்தனையைத்தூண்டும் வகையிலும் வினாக்களை எழுப்புதலும், திறன்களை சோதித்தலும் அவசியம்.
(தொடரும்)