கிரேசி மோகன்

 

”குமார சம்பவம்’’
—————————————–

நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை
தேகநீர் ராஜனுக்குத் தோழனும், -போகரெக்கை
வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன்
மேனாள் வயிற்று மகன்….(19)

தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்
துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) -அக்கினியில்
முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள்
அன்பு இமவான் அகம்….(20)

உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும்
நற்சாதி செல்வ நிகழ்வேபோல் -அச்சாக
மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி
சங்கரியாய் வந்தாள் சதி….(OR)
திங்களெனத் தோன்றினாள்ச தி….(21)

தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய்
ஒளிந்த அமரர் ஒலியாய் -மலர்ந்தபூ
பார்மீது மாரியாய் பல்லுயிர்க்கும் இன்பமாம்
பார்வதி தோன்றிய போது….(22)

அதிருமிடிச் சத்தம் விதூரமலை மொத்தம்
எதிரொலிக்க பூமிவாய் ஏற்று -உதிரவிடும்
ரத்தின ஜோதியாய் பெத்தவளும் புத்திரியும்
புத்தொளிகொண்(டு) உற்றார் பொலிவு….(23)

சுக்கில பட்ச சசிகலைகள் போல்தினமும்
இக்குலம் வந்த இமவான்பெண் -சொக்கவைக்கும்
அங்கங் களடைந்து அக்கலைக்(கு) ஈடாக
பொங்கும் அழகுற்றாள் பூத்து….(24)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “”குமார சம்பவம்’’

  1.   ஐயா  நான்  இந்த புத்தகத்தை சில வருடமாக தேடிவருகிறேன் தகவல் தெரிவிக்கவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *