நிர்மலா ராகவன்

அக்கரைப்பச்சை

நலம்-1-2

யாத்தி (YATI) என்ற இந்தோனீசிய பணிப்பெண் வாரத்திற்கு ஒருமுறை எங்கள் வீட்டைச் சுத்தப்படுத்த வருவாள். கண்ணாடி ஜன்னல்களை ஈரத்துணியால் துடைத்து, அதன்பின் தினசரித் தாளைக் கசக்கி மீண்டும் அழுந்தத் துடைத்துப் பளபளப்பாக்கி.. இப்படி உயிரை விட்டுக்கொண்டு வேலை செய்வாள். அப்போது அவளுக்கு முப்பது வயதிருக்கும்.

“உனக்கு நாங்கள் கொடுக்கும் பணத்தை என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன்.

“அப்படியே என் கணவரிடம் கொடுத்துவிடுவேன்!”

யாத்தியை பதின்மூன்று வயதிலேயே கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள். அதனால் கணவனைத் தவிர வேறு உலகம் கிடையாது என்ற நினைப்பு. கல்வியறிவு அறவே இல்லாததால், சுயமாகச் சிந்திக்கும் திறனும் கிடையாது.

அவளே தொடர்ந்து, பெருமையுடன் கூறினாள்: “அவர் வாராவாரம் முப்பது வெள்ளிக்கு (அன்றைக்கு சுமார் 500 இந்திய ரூபாய்) லாட்டரிச் சீட்டு வாங்குகிறார்!”

ஒரு வெள்ளி (மலேசிய ரிங்கிட்) சீட்டு வாங்கினாலே அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்குமே என்ற எண்ணத்துடன், “எதற்கு இப்படிக் காசை வீணாக்குகிறீர்கள்?” என்றேன்.

நிறையக் காசு கொடுத்து வாங்கினால், ஒன்றாவது வெற்றி பெறும் என்று கணவன் சொல்லி வைத்திருக்கிறான்!

கணவர் செய்வதை இன்னொருவர் குறை சொல்வதாவது!

“உங்களுக்குப் புரியாது. நீங்கள் பணக்காரர்கள்!” என்றாள், உதட்டைச் சுழித்தபடி.

ஆனால், அவளிடம் சொன்னபடி, கணவன் எந்தச் சீட்டும் வாங்கவில்லை, மனைவி உடலயரச் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தைக்கொண்டு இன்னொரு பெண்ணை பரிசுப்பொருட்களுடன் மயக்கி, அவளையே மணமும் புரிந்துகொண்டுவிட்டான் என்று அறிந்ததும் யாத்தியின் மனநிலை மாறிப்போயிற்று. ஆத்திரமும் அழுகையுமாக ஆனாள்.

அவளுக்குப் பிறகு, கமாரியா (KAMARIA) என்ற நாற்பத்தைந்து வயதுப் பெண்மணி வேலைக்கு வந்தாள். நிறைய தங்க நகை போட்டுக்கொண்டு, வாயெல்லாம் சிரிப்பாக, பல வருடங்கள் வேலை பார்த்தாள்.

அவளுடைய கணவர், பிற இந்தோனீசிய ஆண்களைப்போல, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவளுடைய தளதளப்பான உடலுக்கு எதிரான சோனியான உருவம்.
“நான் மற்றவர்களைப்போல குடி, சூதாட்டம் என்றெல்லாம் பொழுதைக் கழிப்பதில்லை. என்னுடைய ஒரே பொழுதுபோக்கு கமாரியாதான்!” என்று எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது சொல்ல, கமாரியா பெரிதாகச் சிரித்தபடி தன் கைவேலையை அப்படியே போட்டுவிட்டு வந்தாள். முகத்தில் அப்படி ஒரு பெருமை!
அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை.

“மேம்! என் வீட்டுக்காரர் வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன,” என்று கவலை தோய்ந்த முகத்துடன் அவள் தெரிவிக்க, “வேலை பார்த்த இடத்தில் விபத்தோ?” என்று சந்தேகம் தெரிவித்தேன். அவள் கணவர் சற்று தூரத்தில் வேலை பார்த்ததால், அங்கேயே தங்கிவிட்டிருந்தார்.

சில நாட்கள் பொறுத்து, அந்த மனிதன் இன்னொரு பெண்ணை மணந்துகொண்டதாக அவளுக்குத் தகவல் கிடைக்க, இடிந்துபோனாள். அறையைச் சுத்தம் செய்தபடி இருக்க, வாய்விட்டு அழுவாள்.

சில மாதங்கள் கழித்து எங்கள் வீட்டுக்கு வந்தவனை (மரியாதையைக் குறைத்துவிட்டேன்!) என் கணவர், “கமாரியா எவ்வளவு நல்லவள்! அவளை விட்டு, எதற்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டாய்?” என்று கேட்க, “எங்கள் மதத்தில் இது சரிதான் என்று சொல்லி இருக்கிறதே!” என்றான், என்னமோ பெரிய ஆன்மிகவாதிபோல்!

“இனி அவனுக்குப் பணம் கொடுக்காதே!” என்று நான் அவளை எச்சரித்து வைத்தேன். கேட்டும் கொடுக்கவில்லை என்று அவன் கோபித்துக்கொண்டு போய்விட்டதாகச் சொன்னாள்.

சில மாதங்களிலேயே, அவள் உடல்நிலை சீர்கெட்டது. தன்னை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவன் இளமையான மற்றொரு பெண்ணை நாடிப் போய்விட்டானே!

`நீ இந்தோனீசியாவுக்கே போய்ச்சேர்! அங்காவது உற்றவர்கள் இருப்பார்கள்!’ என்று அனுப்பிவைத்தோம்.

அவள் வந்த புதிதில், ஒவ்வொரு குழந்தையும் என்ன விஷமம் செய்தது, எப்படியெல்லாம் சண்டை போட்டது என்றெல்லாம் லயித்தபடி கூறிவிட்டு, எங்களைப் பிரிய மனமில்லாமல் போனாள் கமாரியா.

அடுத்து வந்த ஆரிஸிடம் (40 வயது) நான் முதலிலேயே கண்டித்துக் கூறினேன்: “நீ சம்பாதிப்பதை உன் புருஷனுக்குக் கொடுக்காதே! உன்னை அந்தரத்தில் விட்டுவிட்டு, இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொள்வான்!”

அவள் சலிப்புடன், “எல்லா இந்தோன்களும் அப்படித்தான்!” என்றாள். ஆனால், புத்திசாலித்தனமாக நடந்துகொண்டாள்.

தன் கிராமத்தில் நிலம் வாங்கிப்போட்டு, நான்கு அறைகள் கொண்ட தனி வீட்டை எழுப்பியிருக்கிறாள். பெருமையுடன் அந்த புகைப்படத்தை என்னிடம் காட்டினாள். “என் வீட்டுக்காரரும், அவருடைய அண்ணன் தம்பிகளும் சேர்ந்து கட்டினார்கள்!”

அவளுக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அவள் அனுப்பிய பணத்தை பள்ளிக்கூடத்திற்காகச் செலவழிக்காது, தகுந்த கண்காணிப்பின்றி ஊர்சுற்றும் ஊதாரியாகிவிட்டான் பதின்ம வயதான மூத்த மகன்.

பரிதாபமாக இருந்தது எனக்கு. “நீ எப்படி பிறர் வீட்டு கழிப்பறையைச் சுத்தம் செய்து, ஒவ்வொரு நாளும் மூன்று வீடுகளில் இடுப்பொடிய, கால் வீங்க, வேலை செய்து சம்பாதிக்கிறாய் என்று அவனிடம் சொல்லு!”

“அவனுக்குத் தெரியும்!”

“இருந்தாலும், தினமும் சொல்லு. உங்கள் நாட்டில் படிப்பிற்கோ, உழைப்பிற்கோ ஏற்ற ஊதியம் கிடையாது என்கிறாயே! அவனாவது உன்னைப்போல் கஷ்டப்படாது, படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக நீயும், அவனுடைய அப்பாவும் வேறு நாட்டில் கஷ்டப்படுவதை எடுத்துச்சொல். அவன் திருந்தும்வரை சொல்லிக்கொண்டே இரு!”

ஒரு தமிழர் மலேசியாவுக்கு வந்து தான் சம்பாதித்ததை அவ்வப்போது தன் தாய்க்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அப்பணத்தில் வீடு வாங்கும்படி முதலிலேயே சொல்லிவிட்டு வந்திருந்தாராம்.

நாடு திரும்பியபோது, வீடு என்னவோ வாங்கப்பட்டிருந்தது. ஆனால், தம்பியின் பெயரில்! அவன் அவருக்கு அதைக் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், தன் உழைப்பெல்லாம் விரயமாகிவிட்டது என்றும் என்னிடம் சொல்லி மிகவும் வருந்தினார்.
தாய்நாட்டை விட்டு வெளியேறி, இன்னொரு நாட்டில் கடுமையாக உழைத்து, கைநிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசைக்கனவுடன் வருகிறவர்களுக்கு, அதனால் வேறு பல இடர்கள் தொடரும் என்பது புரியும்போது, காலம் கடந்து விடுகிறது.
போதாத குறைக்கு, திரைப்படங்கள் வேறு நனவாக முடியாத கனவுகளைக் காட்டிவிடுகிறது.

ஒரு சாப்பாட்டுக்கடையில் வேலை பார்ப்பவர், `நான் நாடு திரும்பியதும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று திறக்கப்போகிறேன்!’ என்று கூறுவதைத் தொலைகாட்சியில் பார்த்தபோது, அவருடைய அறியாமையைக் கண்டு பரிதாபப்படத்தான் என்னால் முடிந்தது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *